அடுத்து வந்த நாள்கள் மிகவும் கடினமாக கழிந்தன அனைவர்க்கும். அவ்வப்போது மதனோடு கைப்பேசியில் ஒருவர் மாறி ஒருவர் உரையாடினாலும் ஷண்முகத்தைப் பற்றி எதையும் கசிய விடவில்லை மதன். அவனைப் பற்றிய உரையாடலை அறவே தவிர்த்தார். ஒருமுறை சினேகாவைப் பார்க்க அவர் போயிருந்த போது மனோகரும் அங்கே இருந்தான். சில நாள்களாக ஜோதி அவர்களோடு தங்கியிருந்ததால் தங்கை, அம்மா இருவரையும் சந்தித்து நலம் விசாரிக்க வந்திருந்தான். மற்றவர்கள் மனத்தில் இருந்த கவலை அவர்களின் முகத்தில் தெரிய, ஜோதி மட்டும் சாதாரணமாக இருந்தார்.
“வளைகாப்பு, சீமந்தம் எப்போ வைக்கறதுன்னு பேசிட்டு இருந்தோம்..ஒன்பது மாசம் வரை காத்திருக்கலாம்னு சினேகா சொல்றா.” என்று மதனிடம் ஜோதி சொல்ல,
“நீங்க என்ன சொல்றீங்க ஸர்..எப்போ வைச்சா சரியா இருக்கும்னு நினைக்கறீங்க?” என்று அவரிடம் கேட்டான் மனோகர். ஷண்முகம் பற்றி தான் மறைமுகமாக விசாரிக்கறான் என்று அனைவர்க்கும் புரிந்து போனது.
அவரது பதிலிற்காக அனைவரும் ஆவலோடு காத்திருக்க, ‘இந்த ஆள்கிட்டேயிருந்து வேற விதமா தான் விஷயத்தைக் கறக்கணும்’ என்று, ”நீங்க கண்டிப்பா வரணும்..உங்க வீட்லேர்ந்தும் யாராவது வந்தா நல்லா இருக்கும்..வருவாங்கா தானே.” என்று வேறு பாதையில் உரையாடலை எடுத்துச் சென்றார்ஜோதி.
“அம்மா, இன்னும் டேட் முடிவு பண்ணலை அதுக்குள்ளே நீங்க அழைக்கறீங்க.” என்று குரலை உயர்த்தினாள் சினேகா. இப்போதெல்லாம் அடிக்கடி கோவம் வருகிறது அவளிற்கு. சின்ன விஷயங்கள் அதாவது அவளுக்குப் பிரியமான உருளைக் கிழங்கை சதுரமாக வெட்டாமல் நீளவாக்கில் வெட்டி பொரியல் செய்தால்,’எனக்குப் பிடிக்கலை அண்ணி..வேணாம்.’ என்று முரண்டு செய்தாள். எப்படி இருந்தா என்ன உருளைக் கிழங்கு தானே என்று அவளுடன் வாதம் செய்ய விஜயா, வசந்தி இருவரும் விரும்பவில்லை. அவளுக்குப் பிடித்தார் போல் செய்து கொடுத்து விடுவாள் வசந்தி. ஆரம்பத்தில் இருந்த மனதைரியும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் கணவனைப் பற்றிய பயம் சினேகாவின் மனத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.அதை வெளிப்படுத்த கூடாதென்று அவள் நினைத்தாலும் அவளது சொல், செயல் இரண்டிலும் அது வெளிப்பட்டு விடுகிறது.
“மதன் ஸர் நம்ம எல்லோருக்கும் முக்கியமில்லே..அதான் முதல் ஆளா அவரை அழைச்சிட்டேன்.” என்றார் ஜோதி.
அதற்கு,”எந்த நாள்ன்னு தெரியாம வரோம்னு எப்படி அவராலே உறுதி கொடுக்க முடியும் ஜோதி.” என்றார் விஜயா.
“மனசு வைச்சா உறுதி கொடுக்கலாம்..மதன் ஸர் லோக்கல் தானே..காலைலே சொன்னா சாயங்கலாம் ஃபங்ஷனுக்கு வந்திடுவார்..அவங்க அண்ணன், அண்ணிக்கு ஒரு வாரம் முன்னே சொன்னா போதாது?” என்று பொதுவாக கேட்டார் ஜோதி.
அப்போது காப்பியோடு அங்கே வந்த வசந்தி அதை மதனிடம் கொடுத்து விட்டு,”பத்து நாள் தேவைப்படும் அவங்களுக்கு..இரண்டு பேரும் வரமுடியாது..ஓர் ஆள் தான் வருவாங்க..க்ளினிக்கைப் பார்த்துக்க ஆள் ஏற்பாடு செய்யணும்..அனிதா மேடம் இங்கே வந்திட்டா அங்கே சுதனைப் பார்த்துக்க ஓர் ஆள் வீட்லே இருக்கணும்.” என்றாள் வசந்தி.
“அவனை அழைச்சிட்டு வர முடியாதா?” என்று ஜோதி கேட்க அதன்பின் சுதனைப் பற்றிய உரையாடல் தொடர்ந்தது. அப்படியே வசந்தியின்அடுத்த சென்னை பயணத்தைப் பற்றி பேச்சு வர, மதனிடம்,”இவளுக்கு சாதகமா முடியுற மாதிரி இருக்குன்னு பிரகாஷ் சொல்றான் ப்பா.” என்றார் விஜயா.
ஷண்முகத்தின் இடத்திலிருந்து வசந்திக்கு சாதகமாக விஷயங்களை மாற்றி அமைத்திருந்தார் மதன். சீதாவின் மகன், மாப்பிள்ளை இருவரையும் வீட்டில் உட்கார்த்தி வைத்து விட்டார். ஆண்கள் இருவரும் வேலை தேடிக் கொண்டிருந்ததால் வீட்டில் சதா சண்டையும் சச்சரவும் தான். ‘உங்களாலே தான் என் புருஷனுக்கு வேலை போயிடுச்சு..இரண்டு பிள்ளைங்களை வைச்சிருக்கேன்..எப்படிச் சமாளிக்கப் போறேன்னு பயமா இருக்கு..தகுதி இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினாலே புது வேலை கிடைக்காமப் போகுது..நீங்க இங்கேயிருந்து கிளம்புங்க.’ என்று பெற்றோரையும் சகோதரனையும் அவளது வீட்டிலிருந்து விரட்டி அடித்து விட்டாள் ராதிகா.
தற்போது வசந்தியுடன் வாழ்ந்த ஃபிளாட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறான் வெங்கடேஷ். அரசல் புரசலாக அவர்கள் வீட்டு விஷயம் வெளியே தெரிய, அக்கம் பக்கத்தில் ஆரம்பித்து குடியிருப்பு முழுவதும் அவர்களை விரோதி போல் பாவித்தனர். ‘இந்த அம்மாவும் ஒரு பொம்பளை தானே..அவ மகளுக்கு இப்படிச் செய்தா சும்மா இருப்பாளா? பொண்ணுக்கு பொண்ணே தான் எதிரிங்கறது சரியா தான் இருக்கு.’ என்று சீதாவைத் திட்டித் தீர்த்தனர்.
சீதாவிற்குமே அவர் செய்தது மிகப் பெரிய தவறு என்று காலம் கடந்து புத்தி வந்திருந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் கணவனுக்கும் மகனுக்கும் செய்ய வேண்டிய கடமையை கட்டாயமாக செய்ய வேண்டியிருந்ததால் வந்த ஞானம் அது. வண்டியின் பாதையை மாற்றுவதாக நினைத்துப் பள்ளத்தில் இறக்கி விட்டது இப்போது தான் புரிந்தது. ‘அவளுக்கு உன்னை விட்டா வேற நாதி கிடையாது.. அவ அப்பா, அம்மாகிட்டே பேசறேன்..என்ன சொல்ற?’ என்று மகனிடம் கேட்க,’புது மாப்பிள்ளைன்னு என்னை புகழ்ந்திட்டு இப்போ பழசோட சேரச் சொல்றீங்க..என்னாலே முடியவே முடியாது..அவளைக் கதற விட்டிட்டு தான் விவாகரத்து கொடுப்பேன்..கல்யாணம் செய்திட்டு அவ கண்ணெதிரே போய் நிக்கப் போறேன்.’ என்று ஆவேசமாக வெங்கடேஷ் கத்த அவனைப் பார்த்து அவனுடைய பெற்றோர் பயந்து போயினர். ‘பணம், சொத்து இருந்தாலும் வேலை இல்லாதவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்..அதுவும் இரண்டாம் தாரமா.. கடவுளே, இவனுக்கு எப்படிப் புரிய வைக்க.’ என்று கவலைப்பட்டவர்களுக்குத் தெரியவில்லை அந்த பணம், சொத்து இரண்டிலும் வசந்திக்கு பெரும் பங்கு கிடைக்கப் போகிறது. அதன் பின் அவர்களின் நிலை மோசமாகப் போகிறதென்று.
வசந்தியின் விவாகரத்து சம்மந்தமான வேலைகளைப் பிரகாஷ் தான் பார்த்து வருகிறான். பெரிய அத்தை மகாலட்சுமியின் ஆட்சேபனையை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தம்பியின் வீட்டிற்கு வந்து சண்டை பிடித்தவரிடம்,’நீங்க உறவு வைச்சுக்கலைன்னா நாங்களும் வைச்சுக்கக் கூடாதா? வசந்தியும் விஜயா அத்தையும் உங்களுக்கு வேணாம்னா அது உங்களோட..அதை எங்க மேலே நீங்க திணிக்க முடியாது.” என்று வரிந்து கட்டிக் கொண்டு அவனும் சண்டை போட, ‘டேய், உன் மகன் என்னையே எதிர்த்து பேசறான் டா.’ என்று தம்பியிடம் அவர் முறையிட, அதற்கு,’அப்பாவே வேணாம்னு சொன்னாலும் நான் கேட்கப் போகிறதில்லை.’ என்று உறுதியோடு இருந்தான் பிரகாஷ்.
“அடுத்து எப்போ சென்னை போகணும் நீங்க?” என்று வசந்தியிடம் கேட்டார் மதன்.
“தெரியலை..சீக்கிரமா முடிஞ்சா நல்லா இருக்கும்..பிரசவ நேரத்திலே நான் இங்கே இருக்கணும்னு நினைக்கறேன்.” என்றாள் வசந்தி.
வீட்டு வேலைகள், வெளி வேலைகள், கடை வேலைகள் என்று சர்வமும் வசந்தி தான் என்றாலும்,“நீங்க கவலைப்படாம சென்னைக்கு போங்க..எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை..நாங்கெல்லாம் இருக்கோமே அண்ணி.” என்றான் மனோகர்.
“மாமன்காரன் நீ எந்த வாக்குறுதி கொடுத்தாலும் இந்த அத்தைக்காரி அதை ஏத்துக்க மாட்டா..சினேகாவையும் சேர்த்து இவ தான் சுமந்திட்டு இருக்கா…மாப்பிள்ளை வந்த பிறகு வசந்தியை ஜுஸ்ஸா பிழிஞ்சு குடிச்சிட்டு இருக்கற நம்ம எல்லோருக்கும் இருக்கு.” என்று சொல்லி ஜோதி சிரிக்க, மெல்லியப் புன்னகை மூலம் வசந்தி அதை ஆதரிக்க, மற்றவர்களின் முகத்தில் மருத்திற்கு கூட மகிழ்ச்சி இல்லை.
மகளின் இந்தமனநிலை அவளது உடல் நிலைக்கு நல்லதில்லை என்று முடிவு செய்த ஜோதி,“உன் அப்பாவைப் போல இல்லை மனோவைப் போல ஆபிஸ் வேலையா மாப்பிள்ளைக்கு? காலைலே கிளம்பிப் போயிட்டு சாயங்காலம் டான்னு வீட்டுக்கு வர..குற்றவாளியை மட்டும் போட்டு தள்ளிட்டுப் பொட்டியைத் தூக்கிட்டு வந்திட முடியுமா? அவர் கூட இருக்கற சாரையெல்லாத்தையும் வேட்டையாடி சாப்பிட்டு முடிச்சிட்டு தானே வரமுடியும்.” என்றார்.
அதைக் கேட்டு சினேகாவின் முகத்தில் புன்னகை தோன்றியது. வசந்தி, விஜயா, மனோகர் மூவரின் முகத்திலும் கேள்வி தோன்றியது.”சாரையா? என்ன ம்மா சொல்றீங்க?” என்று கேட்டான் மனோகர்.
காசியப்பனில் ஆரம்பித்து கட்டுவிரியனில் கதையை முடித்த ஜோதி, இறுதியில்,”திடீர்னு வரப் போறார் மாப்பிள்ளை..சினேகாவை இப்படிப் பார்த்து மயங்கி விழப் போறார்..அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? நு மதன் ஸர்க்கு மட்டும் தான் தெரியும்..அப்படித் தானே ஸர்.” என்று மதனின் வாயைத் திறக்க அவர் முயல,’அது போல மயங்கி எல்லாம் விழமாட்டான்…அவன்கிட்டே நான் விஷயத்தை ஏற்கனவே சொல்லிட்டேன்..சொல்லிடுவேன்.’ என்று மதன் வாயிலிருந்து ஏதாவது வருமென்று அனைவரும் அவரையே பார்த்திருக்க, சிறு குறிப்பு கூட கொடுக்காமல்,”நான் கிளம்பறேன்.” என்று புறப்பட்டுச் சென்றார் மதன்.