அத்தியாயம் – 55-1

மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது போய் சேரவில்லை.

“நீ செய்து வைச்சிருக்கற வேலைக்கு உன்னை வேலைக்காரியா வைச்சுக்கிட்டாலே பெரிசு..எப்படியோ அவர் வீட்லே நீ இருந்தா எங்களுக்குப் போதும்.” என்றார் மகா.

“இத்தனை வருஷமா வேலைக்காரியா தானே இருந்தேன்..இனியும் அப்படி இருக்க எனக்கு விருப்பமில்லை.” என்றாள் வசந்தி.

“என்ன டீ உளறிட்டு இருக்க..உன் விருப்பத்துக்கு வாழக்கையை நடத்த உன்கிட்டே என்ன இருக்கு? பெரிய படிப்பு இருக்குதா? சம்பாதியத்துக்கு சின்ன வேலையாவது இருக்குதா? என்ன இருக்குதுன்னு விவாகரத்து வேணும்னு கேட்கற?” என்று மகா கத்த, வசந்தியின் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க தான் மூவரும் புறப்பட்டு வந்திருந்ததால் அவரைத் தடுக்க மற்ற இருவரும் முனையவில்லை. இப்போது அதைப் பற்றி பேசினாலும் சரி குளித்து தெளித்து உணவு அருந்திய பின் பேசினாலும் சரி முடிவு கிடைத்தால் நல்லது தான் என்ற எண்ணம் வந்திருந்ததால் அம்மா, மகள் நடுவே போகாமல் சபாபதி, ரங்கநாதன் இருவரும் வேடிக்கையாளராகினர்.

“பெரிய படிப்பு படிக்காததுக்கு நான் காரணமில்லை..படிக்க வைக்க முடியாதுன்னு சொன்ன நீங்க தான் காரணம்..வேலைக்குப் போக விருப்பமில்லை வியாபாரம் செய்ய தான் விருப்பம்னு சொன்ன போது அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு தடை சொன்னது நீங்க தான்..மனைவியா மரியாதையா வாழலை ஓர் அடிமையா தான் வாழ்ந்திட்டு இருக்கேன்னு உங்ககிட்டே வந்து அழுத போதெல்லாம் கல்யாண வாழ்க்கைன்னா அப்படித் தான் இருக்கும், பொறுத்திட்டு போ, போக போக எல்லாம் சரியாகிடும்னு ஆறுதல் சொல்றது போல ஒவ்வொரு முறையும் என்னைத் திரும்ப அவன்கிட்டே விரட்டி அடிச்ச நீங்க தான் என்னோட இந்த நிலைமைக்குக் காரணம்..அவனை ஒரு வார்த்தை தட்டிக் கேட்க விடாம, புருஷனுக்கு பிடிக்காததை பேசாத, செய்யாதன்னு சொல்லி சொல்லி என்னை அவனுக்கு ஏற்ற மாதிரி மாறிக்க வைச்சீங்க..அவனுக்காக நான் முழுசா என்னை மாத்திக்க, எனக்காக அவனைக் கொஞ்சம் கூட மாத்திக்காதவன் ஈஸியா இன்னொரு கல்யாணத்திற்கு தயாராகிட்டான்..என் கல்யாணத்தினாலே என்னையே இழந்திட்டு மீட்டெடுக்க முடியாம தடுமாறிட்டு இருக்கேன்..இனி யாருக்காகவும் நான் என்னை மாத்திக்கப் போகறதில்லை..என் இஷ்டப்படி தான் வாழப் போறேன்.” என்று பதிலுக்கு அவளுடைய அம்மாவைப் போலவே கத்தித் தீர்த்தாள் வசந்தி.

“எப்படி டீ எப்படி வாழப் போறா? எவன் உனக்கு கஞ்சி ஊத்துவான்?” என்று வசந்தியிடம் கேட்டவர் அப்படியே விஜயாவின் புறம் திரும்பி,”இவளை நம்பிட்டு தானே இங்கே வந்து உட்கார்ந்திருக்க..இவளே இவ்வளவு வருஷமா எங்களை அண்டிக்கிட்டு கிடந்தா..இவ” என்றவரிடம்,

“போதும் பெரியம்மா இதுக்கு மேலே நீங்க ஒரு வார்த்தை பேசாதீங்க..பணத்தாலே மட்டுமில்லை உடலாலும் உங்களுக்கு உதவி செய்திருக்காங்க என் அம்மா..அந்த நன்றியை மறந்து பேசினீங்க அவ்வளவு தான்.” என்று மகாவை எச்சரித்தான் ஷண்முகவேல்.

மனைவியின் போக்கினால் நிலைமை விபரீதமாகிவிட்டதென்பதை உணர்ந்த சபாபதி,”மகா, சமந்தமில்லாத விஷயத்தை பேசாதே..நாம எதுக்கு வந்தோமோ அதைத் தான் பேசணும்.” என்றார்.

“சம்மந்தத்தோட தான் பேசறாங்க..உங்க மூணு மகள்கள் கல்யாணத்தை நடத்தி வைச்ச எங்கம்மா தான் இப்போ நடக்கறத்துக்குக் காரணம்னு உங்க மனைவி சொல்றாங்க..அது மறுக்க முடியாத உண்மை தான்..எங்கம்மானாலே தானே அக்கா உயிரோட இருக்கா..உங்களைப் போல எங்கம்மாவும் அக்கறையில்லாம இருந்திருந்தா இன்னைக்கு ஆளே இருந்திருக்க மாட்டா இந்தப் பேச்சும் நடந்திருக்காது..நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்கண்ணு கடைசிவரை அம்மா நினைச்சிட்டு இருந்திருப்பாங்க..சொந்த மகளைத் தலைமுழுகற சுய நலவாதிகள்னு..” என்றவனின் பேச்சை,”சாமி” என்று அழைத்து விஜயா இடைமறிக்க,

“நான் பேசிட்டு இருக்கேனில்லே.” என்று அவர் மீது அவன் பாய, வேலின் தாக்குதலில் திடுக்கிட்டுப் போனவரின் உடல் அச்சத்தில் நடுங்க, அவரது தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்டனர் சினேகாவும் வசந்தியும்.

“கல்யாணம் செய்து கொடுத்ததோட கடமை முடிஞ்சதுன்னு நினைக்கறவங்க அதுக்கு பதிலா கருமாதி செய்து மொத்தமா பெத்த கடமையை முடிச்சிருக்கலாமே.” என்று அழுத்தமாக சொல்ல, மகனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது,

“சாமி, என்ன பேச்சு இது?” என்று விஜயா அவரது மகனை கண்டிக்க,

“அக்காவைப் பற்றி பெரியம்மா பேசின போது சும்மா தானே இருந்தீங்க..உங்களுக்குத் தெரியும் தானே பெங்களூர்லே அக்கா எந்த நிலைமைலே இருந்தாங்கண்ணு..அதையெல்லாம் விவரமா எல்லோருக்கும் சொன்னீங்க தானே..நம்ம பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பெத்தவங்க பதறியிருக்கணுமில்லே..அவங்க இரண்டு பேர்லே யாராவது ஒருத்தராவது உடனே புறப்பட்டு வந்திருக்கணுமில்லே..சரி அவங்க இரண்டு பேரும் ஓர் இக்கட்டான சூழ்நிலைலே வெளி நாட்லே மாட்டிக்கிட்டதாலே வர முடியலை.. இப்போ இவங்களோட மகன் ஸ்தானத்திலே வந்திருக்கறவர் ஏன் வசந்தி அக்காவை பார்க்க ஒருமுறை கூட வரலை..ஜெயந்தி அக்காக்கு விஷயம் தெரியுமில்லே ஏன் வசந்தி அக்காவை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலை?” என்று யாரும் பதில் கொடுக்க முடியாத கேள்விகளைக் கேட்டான் ஷண்முகம்.

சில நொடிகள் அமைதிக்குப் பின்,”ஷண்முகம், எல்லோருக்கும் சூழ்நிலைன்னு ஒண்ணு இருக்குயில்லே கண்ணுக்கு தெரியாது அதுதான் எங்களையெல்லாம் கட்டிப் போட்டிடுச்சு.” என்றார் சபாபதி.

“நீங்க சொல்ற இந்தக் காரணம் வசந்தி அக்காக்கும் பொருந்துமில்லே?” என்று கேட்க, சபாபதியிடம் அதற்குப் பதிலில்லை.

“அதுக்காக புருஷனை விட்டிட்டு இப்படி இங்கே வந்து உட்கார்ந்திருக்கணுமா?” என்று கேட்டார் மகா.

அதற்கு ஷண்முகம் பதில் அளிக்கும் முன்,”புருஷன் வேணாம்னு சொல்லிட்டு இங்கே வந்து நான் சும்மா உட்கார்ந்திருக்கலை..என் சொந்தக் கால்லே நிற்க, சுதந்திரமா, சுயமா வாழ வழி தேடிட்டு இருக்கேன்.” என்றாள் வசந்தி.

உடனே,“எங்ககிட்டே இருக்கறதை எல்லாம் ஜெயந்திக்கும் சிந்துவுக்கும் பிரிச்சுக் கொடுத்திடப் போறோம்..உனக்கு சேர வேண்டியதை விட அதிகமா உன் புருஷனுக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு..இனி நீ உன் வழியைப் பார்த்துக்க..நாங்க எங்களோட வழியைப் பார்த்துக்கறோம்..அம்மா, அப்பா, அக்கா, தங்கைன்னு உனக்கு இனி எந்த உறவும் கிடையாது..” என்று மகா சொன்னவுடன்,

“மகா, அவசரப்படாதே..வசந்தி உன்னோட மக..உதறித் தள்ளக் கூடிய உறவில்லை அது.” என்று விஜயா சொல்ல,

“அவளுக்கு சொன்னது உனக்கும் சேர்த்து தான்..இனி அக்கான்னு என் வீட்டு வாசப்படி நீ மிதிக்கக் கூடாது.” என்று மகா சொல்ல,

கண்களில் கண்ணீர் மல்க,“மகா” என்று விஜயா அவரது அதிர்ச்சியை வெளியிட,

வரம்பு மீறிப் பேசிய மனைவியை,“மகா, போதும்..இனி ஒரு வார்த்தை பேசாதே.” என்று சபாபதி அடக்கப் பார்க்க,

அதற்கு,“என்ன நடந்தாலும் என் அம்மா மட்டுமில்லை என்னோட மனைவியும் உங்களைத் தேடி வர மாட்டாங்க.. எனக்கு என்ன நடந்தாலும் கூட.” என்று உறுதியோடு சொன்ன ஷண்முகத்திற்குத் தெரியவில்லை அது போன்றொரு சூழ் நிலையில் சகோதரி ஸ்தானத்தில் வசந்தி தான் அவனது குடும்பத்தைத் தாங்கப் போகிறாளென்று.

”சாமி” என்று விஜயாவும், “அப்படிச் சொல்லவே சொல்லதா டா” என்று வசந்தியும் அவர்களின் வலியை வெளியிட, கண்களால் அவளது கண்டனத்தைக் கணவனுக்குத் தெரிவித்தாள் மனைவி.

“ஷண்முகம், உன் பெரியம்மாக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்கு..கண்ட கண்டதைப் பேசிட்டு இருக்கா..நீயும் அவளைப் போல பேசாதே..அவ சொன்ன எதையும் மனசுலே வைச்சுக்காதே.” என்று சபாபதி ஷண்முகத்தை சமாதானம் செய்ய முயல,

“மச்சான், என்னது சட்டுன்னு இப்படிப் பேசிட்டீங்க..பலிச்சிடப் போகுது..உன் வேலை வேற அப்படி.” என்று ரங்க நாதன் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்ற, 

“நீங்க எதுக்காக வந்திருக்கீங்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசுங்க.” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஷண்முகம்.

இதுவரை அவர்கள் பார்த்த ஷண்முகவேலிற்கும் இப்போது அவர்களெதிரே இருந்த ஷண்முகவேலிற்கும் பெரும் வித்தியாசம் இருந்ததை உணர்ந்த சபாபதிக்கு எப்படி அவனை அணுகுவது என்று  புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, பெறாத மகனை நிரந்தரமாக இழந்து விட்டாரென்று.

“உங்க மகள்களுக்குப் பங்கு பணத்தை பைசல் செய்யும் போது சிந்து கல்யாணத்திற்கு அம்மா கொடுத்த பணத்தையும் வசந்தி அக்காக்காக நான் கொடுத்த தொகையையும் அம்மாவோட அகௌண்ட்லே போட்டு நம்ம கணக்கை முடிச்சிடுங்க.” என்று அவரின் கணிப்பை உறுதி செய்தான் ஷண்முகவேல்.