இவளின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்து காத்திருந்தார் விஜயா. அவள் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியதும்,”இன்னும் வரலையான்னு இப்போ தான் ஜோதி ஃபோன் செய்து விசாரிச்சா?” என்றார்.
“டிராஃபிக் சித்தி.” என்று பதிலளித்தபடி செருப்பைக் கழட்டி அதன் இடத்தில் வைத்தாள்.
“எங்களுக்கு எப்படி அந்த விவரம் தெரிய வரும்..அவ ஏத்தி விட்டு அரைமணி நேரம் மேல ஆகிடுச்சு..நான் ஃபோன் செய்த போது நீ எதுவும் சொல்லலை..ஷிக்காவோட கடைலேர்ந்து மோட் (junction, intersection) க்கு வர பத்து நிமிஷம் ஆகும்..அங்கேயிருந்து இங்கே நடந்து வர கால் மணி நேரம்..அது ஆகி அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஆகிடுச்சுயில்லே..அதான் அவளுக்குக் கவலை..எனக்கும் தான்.” என்றார் விஜயா.
சோஃபாவில் அமர்ந்து அவரது கையைப் பற்றி,”முப்பத்தி நாலு வயசாகுது எனக்கு..கல்யாணமாகி புருஷன் கூட ஒரு யுகம் வாழ்ந்திருக்கேன்..என்னை எவன் கடத்திட்டுப் போகப் போறான்..நீங்களும் ஜோதி மாமியும் வீணாக் கவலைப்படறீங்க.” என்றாள்.
“சினேகா, ஷிக்கா போல உன்னையும் அவளோட சொந்தமா தான் நினைக்கறா..அதான் நீ நல்லபடியா வீடு வந்து சேர்ற வரை கவலைப்படறா.” என்றார் விஜயா.
அதென்னவோ முற்றிலும் உண்மை தான். இங்கே வந்த தினத்திலிருந்து இப்போது வரை சினேகாவின் குடும்பத்தினர் அனைவரும் அனைத்திலும் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். வீட்டிலேயே அடைந்து கிடந்தவளைக் கடைக்கு அழைத்து சென்று வெளி உலகத்தை பழக்கப்படுத்தியது சினேகாவும் ஜோதியும் தான். இனி என்ன செய்வது, எப்படி மீதியிருக்கும் நாள்களைக் கடத்துவது என்று அவள் கலங்கி இருந்த போது ஒரு நாள் விஜயாவிடம்,
“வீட்டுக்குள்ளே இருந்தா எல்லாம் பறிப் போன மாதிரி தான் தோணும்..வெளியே போயிட்டு வந்தா தான் நம்பிக்கை கிடைக்கும்..என்னோட கடைக்கு அழைச்சிட்டுப் போறேன்..என்ன சொல்றீங்க விஜயாம்மா?” என்றார் ஜோதி.
வீட்டோடு இருந்து அவரது வாழ்க்கை எப்படியோ கடந்து விட்டது. அவரைப் போல வசந்தியின் வாழ்க்கையும் கடந்து போக முடியாது என்ற புரிதல் இருந்ததால், எங்கேயாவது எதையாவது ஆரம்பித்தால் தான் எப்படியாவது போக வேண்டிய இடத்திற்கு வழி கிட்டிவிடுமென்ற எண்ணத்தில்,”அழைச்சிட்டுப் போங்க ஜோதி..அதுக்கு முன்னாடி உங்க மருமககிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.” என்றார்.
அதுவரை அவர்கள் உரையாடலில் தலையிடாமல் அமர்ந்திருந்த சினேகா,”அதெல்லாம் ஒண்ணும் கேட்க தேவையில்லை அத்தை..என்னோட பங்கும் அந்தக் கடைலே இருக்கு..என் சார்பா வசந்தி அண்ணி கடைக்கு வந்து போவாங்கண்ணு அவங்க மருமககிட்டே சொல்லிடுவாங்க.” என்றாள் சினேகா.
“ஏன் டீ..என் பங்கும் தானே அதிலே இருக்குது..இந்த முடிவை நான் தனியா எடுக்க முடியாதா? அவகிட்டே அனுமதி கேட்கணுமா?” என்று ஜோதி பொங்க,
“அதெல்லாம் உங்க வீட்டு அரசியல்..எங்க வீட்லே நான் சொல்றது தான் சட்டம்..அப்படித் தானே அத்தை.” என்று விஜயாவின் தோள் மீது கைப்போட்டுக் கொண்டு சொந்தம் கொண்டாடினாள் சினேகா.
“ஆமாம் கண்ணு..நம்ம வீட்லே நீ சொல்றது தான் சட்டம்..சாமி கூட அந்தச் சட்டத்தை மதிக்கறானே.” என்று ஓர் இடைசொருகலோடு விஜயா ஒப்புக் கொள்ள,
“இதுதானே வேணாங்கறது..உங்க சாமி நீங்க சொல்றதை தான் கேட்பார்..என் சாமி நான் சொல்றதை தான் கேட்பார்..நம்ம சாமி நாம எல்லோர் சொல்றதையும் கேட்பார்..அப்படித் தானே வசந்தி அண்ணி.” என்று அமைதியாக அமர்ந்திருந்த வசந்தியையும் உரையாடலின் உள்ளே இழுத்துக் கொண்டாள் சினேகா.
லேசாக புன்னகைத்தபடி,”சாமின்னா அப்படித் தானே இருக்கணும்..எல்லோர் சொல்றதையும் கேட்கணும் தானே.” என்றாள் வசந்தி.
வசந்தி விஷயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன், கடைசியில் அவன் மனத்தில் தோன்றியதை தான் செய்தான். ஏன்யென்ற கேள்விக்கு விடை கிடைக்காது. எதற்காக என்று காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது.அதுதான் கடவுள் செயல்.
வேலை விஷயமாக சில வாரங்களாக வெளியூரில் இருக்கிறான் ஷண்முகம். மூன்று நாள்களாக சினேகாவும் ஊரில் இல்லை. மும்பை சென்றிருக்கிறாள். மகளும் மருமகனும் ஊரில் இல்லாததால் தான் ஜோதிக்கு வசந்தி பற்றிய கவலை அதிகமாக இருந்தது.
“சினேகா எப்போ வர்றா சித்தி?” என்று விசாரித்தாள் வசந்தி.
“மதியம் ஃபோன் செய்திருந்தா..நடுராத்திரி ஆகிடும்..எட்டு மணிக்கு தான் விமானம் புறப்படும்னு சொன்னா.” என்றார்.
“அப்போ ராத்திரிக்கு நம்ம இரண்டு பேருக்கும் மட்டும் டிஃபன் செய்யறேன்.” என்றாள் வசந்தி.
“நாள் பூரா கடைலே வேலை செய்திருக்க..நீ ரெஸ்ட் எடுத்துக்க..நான் செய்யறேன்.” என்றார்.
“கொஞ்ச நேரம் இளைப்பாறிட்டு தான் வேலையை ஆரம்பிப்பேன்..முதல்லே குளிச்சிட்டு வந்திடறேன்.” என்று விஜயாவின் படுக்கையறைக்குள் சென்றாள் வசந்தி.
விஜயாவின் படுக்கையறையில் தங்கி இருக்கிறாள் வசந்தி. அது ஒரு வகையில் அவளுக்கு தைரியத்தையும் நிம்மதியையும் அளிக்கிறது. தனியாக படுப்பது கொஞ்சம் படப்படப்பை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி அனிதாவிடம் சொன்ன போது,”எல்லாம் உடனே பழைய மாதிரி இல்லை முன்னே மாதிரி மாறிடும்னு கிடையாது..சிலது கடைசி வரை மாறாமல் கூட போகலாம்..அதுக்கு வேற ஏதாவது வழி, தீர்வு தான் கண்டுபிடிக்கணும்.” என்று சொல்லியிருந்தார். அவருடனான சந்திப்பு வீடியோவில் தான் நடக்கிறது. இங்கே வேறு மருத்துவரை, மன நல மருத்துவரைப் பார்க்கலாம் என்ற ஷண்முகம் சொன்ன போது வேண்டாம் என்று மறுத்து விட்டாள். அன்றைய தினத்திலேயே அக்கா சிக்கிக் கொண்டிருப்பது தம்பிக்குப் புரிய, அவளாக தான் அதிலிருந்து விடுபட வேண்டுமென்பதால் அவளது முடிவில் தலையிடாமல் அவளுக்கு உதவி செய்யும் தூரத்தில் அவனை நிறுத்திக் கொண்டான்.
மதனின் உதவியோடு சில பல வேலைகளைச் செய்து வெங்கடேஷிற்கு எதிராக ஆதாரத்தை திரட்டியிருந்தான். வசந்தி அக்காவின் அலைப்பேசி வெங்கடேஷ் வசம் இருந்ததை இப்போது அவனால் நிரூபிக்க முடியும். வசந்தி அக்காவை அவனோடு அழைத்து வந்தது சிசிடிவி பதிவாகியிருக்க அந்தப் பதிவுகளை அன்றைக்கே ஆள்களை அனுப்பி சேகரித்து விட்டார் மதன். அக்கா விரும்பியபடி விவாகரத்து கிடைக்க, வெங்கடேஷ் என்னும் கடினமான காயைக் கட்டாயமாக கனிய வைக்க மறைமுகமாக பல வழிகளில் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறான். விவாகரத்திற்கு வசந்தி அக்கா விண்ணபிக்க வேண்டியது தான் பாக்கி. அது நடக்க விடாமல் தடையாக இருந்தனர் வசந்தியின் குடும்பத்தினர். அந்த விஷயத்தில் அவன் தலையிட முடியாது அக்காவின் முடிவு தான் இறுதி என்பதால் அவர்கள் மீது ஆத்திரம் வந்தாலும் அமைதியாக இருந்தான் ஷண்முகம்.
வசந்தியும் விஜயாவும் இரவு உணவை உண்ண அமர்ந்த போது அவனுடைய சாவியை உபயோகித்து வீட்டிற்குள் வந்தான் ஷண்முகம். இது வழக்கமாக நடப்பது என்பதால்,
“குளிச்சிட்டு வா டா..சாப்பிடலாம்.” என்றார் விஜயா.
சோஃபாவில் அமர்ந்து ஷுவைக் கழட்டியபடி,“சாப்பாடு வேணாம் ம்மா..இப்போ தான் மதன் ஸரோட சாப்டிட்டேன்.” என்றான்.
“மதன் வந்திடாரா டா? உடம்பு சரியாகிடுச்சா?” என்று விசாரித்தார்.
“சரியாகிடுச்சு ம்மா…இன்னைக்கு தான் வேலைலே சேர்ந்திருக்கார்.”
“ஒரு நாள் அவரை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வா டா..விருந்து சாப்பாடு செய்து போடணும்..மூணு கல்யாணப் பார்ட்டி கொடுத்த..எதிலேயும் அவராலே கலந்துக்க முடியலை.” என்றார்.
“விருந்தன்னைக்கு நானும் உன் மருமகளும் வீட்லே இருக்கணுமே.” என்றவுடன்,
“சினேகா இன்னைக்கு நைட் வர்ற டா..நடுராத்திரி ஆகிடும்னு சொன்னா.” என்று தகவல் கொடுத்தார் விஜயா.
அவனது கைப்பேசியில் மனைவிக்கு மெஸேஜ் எழுதியபடி அக்காவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் தம்பி. அவர்களின் உரையாடலில் தலையிடாமல் அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து வருத்தமடைந்தான். அவளது சுபாவத்தில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் நிரந்தரமானதாக இருக்கக்கூடாதென்று நிதமும் வேண்டிக் கொண்டிருந்தான். மெஸெஜ்ஜை அனுப்பி விட்டு,
“அக்கா, ஏர்போர்ட்டுக்குப் போய் சினேகாவை அழைச்சிட்டு வந்திடலாம்.” என்றான்.
“நான் எதுக்கு டா? நீ போய் அழைச்சிட்டு வா.” என்று அவசரமாக வசந்தி மறுக்க,
“தில்லி ஏர்போர்ட்டை நீ தெரிஞ்சுக்கணுமில்லே அதுக்கு தான்..லோக்கல் இடமெல்லாம் பக்காவா தெரிஞ்சுகிட்டாச்சே.” என்று புன்னகைத்தபடி பதிலளிக்க,
“நான் வரலை டா..நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்க.” என்றார் விஜயா.
அப்போது ஷண்முகத்தின் கைப்பேசி ஒலி எழுப்ப, அழைப்பை ஏற்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவனின் முகம் கடுமையாக இருந்தது. அழைப்பு அவருடைய அக்கா இல்லை மாமாவிடமிருந்து தானென்று சரியாக யுகித்த விஜயா,”சாமி, எடுத்து, என்ன ஏதுன்னு விசாரிங்க.” என்று கட்டளையிட்டார்.
அவனுடைய அம்மா சொன்னபடி செய்யாமல், ஹலோ கூட சொல்லாமல் அழைப்பை ஏற்று மௌனமாக இருந்த ஷண்முகம், சில நொடிகள் கழித்து இணைப்பைத் துண்டித்து விட்டு,”பெரியம்மா, பெரியப்பா, ரங்கநாதன் மாமாவோட தில்லிக்கு வந்திட்டு இருக்காங்களாம்..நாளைக்கு காலைலே பதினொரு மணி போல் டிரெயின் வந்து சேர்ந்திடுமாம்.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதற்கான அறிகுறி எதுவும் வசந்தியின் முகத்தில் தென்படவில்லை. அவளை அவர்களோடு அழைத்துப் போக தான் அவர்கள் வருகிறார்களென்று அவளுக்குத் தெரியும். அவளது முடிவை மாற்றி அவளை மீண்டும் வெங்கடேஷோடு வாழ வைப்பதில் முனைப்பாக இருந்தனர் பெரியம்மாவும் பெரியப்பாவும். அது வசந்தியின் முடிவாக தான் இருக்க வேண்டுமென்று அவனும் அம்மாவும் சொன்னதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ள வில்லை.
‘நான் தான் திரும்பி வந்திட்டேனே..இன்னும் எதுக்கு உன் வீட்லே வைச்சிட்டு இருக்க..அவளைக் கொண்டு வந்து விடு.” என்று தங்கைக்கு மகா கட்டளையிட,”நீ வசந்திகிட்டே பேசு..அவ சொல்லட்டும்..கொண்டு வந்து விடறேன்.” என்று திடமாக மறுப்பு சொல்லி விட்டார் விஜயா. தனது மகளின் வாழ்க்கை விஜயாவினால் தான் கெட்டுப் போகிறதென்ற எண்ணம் வந்து விட்டது மகாவிறகு. அதனால் தான் சென்னையை விட்டு புறப்படும் முன் அவர்களின் பயண விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் பாதிப் பயணத்தில் பகிர்ந்து கொண்டார். நேரில் வந்து,’கிளம்பு டீ’ என்று கட்டளையிட்டால் வசந்தி கிளம்பி விடுவாள் என்ற நினைப்பில் தான் அவர்கள் புறப்பட்டு வருகிறார்கள்.
வசந்தியின் முடிவு என்னயென்று இவர்களுக்குமே தெரியவில்லை.நாளை எப்படியும் தெரிந்தவிடப் போகிறது என்பதால் அந்தப் பேச்சை விஜயா தொடரவில்லை.
ஆனால்,”எப்போ கிளம்பலாம் டா ஏர்போர்ட்டுக்கு?” என்று கேட்டு தில்லிப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறாள், தில்லியில் அவர்களோடு தான் இருக்கப் போகிறாளென்ற அவளது முடிவை வெகு நேர்த்தியாக வெளியிட்டாள் வசந்தி.