அத்தியாயம் – 53

ஒரு கணவனை இப்படியும் அவமானப்படுத்த முடியுமென்று அவனுடைய வீட்டில், அவனின் கண் முன்னால் நடந்ததைப் பார்த்த பின்னரும் ராதிகாவின் கணவனால் அதை நம்ப முடியவில்லை. அதுவும் தாலியை துச்சமாக கருதி வசந்தி அதை தூக்கி எறிந்ததை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சில மாதங்களில் விவாகரத்தில் முடிய இருந்த திருமணம் இப்படி கலவரமாக முடிந்து போகும் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. 

வசந்தியின் நிலையைப் பற்றி அறிந்திராத அவளின் தம்பியோ நடந்ததைப் பார்த்து இவர்களைப் போல் அதிர்ந்து போகாமல் இருந்தது ராதிகாவின் கணவனிடம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்தது. வசந்தியின் கோரிக்கையைக் கேட்டதும்’ செய்திடலாம்..கவலைப்படாதே’ என்று ஆமோதித்திருந்தால் கூட அதைச் சாதாரணமாக கடந்து போயிருப்பான். ஆனால்,’ஸுப்பர் க்கா’ என்று வசந்தியின் முடிவை சூழ்நிலைக்குப் பொருந்தாத வார்த்தையால் அவன் பாராட்டியது வெகுவாக உறுத்தியது. அத்தனை நேரம் அவனது மூளையை மறைத்துக் கொண்டிருந்த திரையை அது விலக்க, தம்பிக்காரன் போலீஸ்க்காரன் என்று உரைக்க, பேசிய பேச்சு அனைத்தும் மனத்தில் வந்து போக, பயத்தில் உறைந்து போய் நின்றான். 

“ஒரு நிமிஷம் க்கா’ என்று வசந்தியிடம் அனுமதி பெற்ற ஷண்முகம், உறைந்து போயிருந்தவனிடம்,”அக்கா ஃபோனை எடுத்திட்டு வா டா.” என்று கட்டளையிட்டான். அதைக் கேட்டு வெங்கடேஷிற்கு திக்கென்றானது. குழந்தைகளைச் சமாதானம் செய்து கொண்டிருந்த ராதிகா அவளுடைய அம்மாவை நோக்க, சீதாவோ வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அவரது நிலையை வாயால் சொல்ல முடியாத நிலைக்கு அவர் சென்று பல நிமிடங்களாகி இருந்தது.

நொடிக்கும் குறைவான நேரத்தில் உறை நிலையிலிருந்து உருகு நிலைக்குப் போய், விரைந்து உள்ளே சென்று திரும்பி, வசந்தியின் கைப்பேசியை ஷண்முகத்திடம் கொடுத்து,”ஸர், நான் எதுவும் பண்ணலை ஸர்..என் மேலே தப்பு இல்லை ஸர்.” என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தான்

“நீ எதுவுமே பண்ணாம இருந்தது தான் டா பெரிய தப்பு.” என்று பதில் கொடுத்து விட்டு, “வா க்கா” என்று வசந்தியோடு ஷண்முகவேல் வெளியேற அவர்களைப் பின் தொடர்ந்தாள் சினேகா.

வசந்தியின் கால்களுக்கு அவளைத் தாங்கிக் கொள்ள சக்தி இல்லாததால் தம்பியோடு ஒன்றிக் கொண்டாள். அவளை ஆதரவாக அணைத்தபடி மின்தூக்கியை நோக்கி சென்ற ஷண்முகம் அப்படியே அந்தக் காரிடாரில் இருந்த சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை, அவை பொருத்தியிருந்த இடங்களை மனத்தில் பதித்துக் கொண்டான்.. மின்தூக்கி வாயில் சிலர் நின்றிருந்ததைப் பார்த்த சினேகா, அவசர அவசரமாக அவளது கைப்பையைத் திறந்து சிகப்பு நிற ஸ்டோலை வெளியே எடுத்து,” ஒரு நிமிஷம்.” என்று சொல்லி, அக்கா, தம்பி இருவருக்கும் முன்னால் வந்து, பாதையை மறித்தபடி நின்றவள், துப்பட்டா போல் வசந்தியின் மீது அதைப் போட்டு விட்டாள். பொம்மை போல் நின்றிருந்த வசந்தியிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அதில் லேசாக கவலையடைந்த சினேகா, மின் தூக்கியின் அருகே நின்றிருந்தவர்களைக் காட்டி,

“வேல், அந்தக் கூட்டம் போகட்டும்.” என்றாள். 

“மெதுவா தான் அழைச்சிட்டுப் போறேன்.” என்று பதில் அளித்தவன் வசந்தியை முழுவதுமாகத் தாங்கிக் கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி மெல்ல மெல்ல மின்தூக்கியை நோக்கி நடந்தான். 

கணவனது முகத்தில் தெரிந்த யோசனையையும் மின்தூக்கி வரை வசந்தி அண்ணியை அழைத்துச் செல்ல அவன் செய்யும் பிரயத்தனத்தையும் பார்த்து,”என்ன செய்யப் போறீங்க? எங்கே அழைச்சிட்டுப் போகப் போறீங்க?” என்று கேட்டாள் சினேகா.

“அக்காவை எப்படியாவது வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடணும்.” என்றான்.

“இதே டாக்ஸிலே சென்னைக்கு அழைச்சிட்டுப் போக முடியுமா?” என்று அவள் கேட்க,

“அதெல்லாம் பிரச்சனை இல்லை..அங்கே போனா எங்கே தங்கறதுங்கறது தான் பிரச்சனை..பெரியம்மா, வீடு பூட்டிக் கிடக்குது.” என்றான்.

“உங்க மாமா வீட்லே தானே அத்தை இருக்காங்க..நாமளும் அங்கே தானே இன்னைக்கு நைட் தங்கக் போறோம்.” என்றாள்.

“ம்ம்..பிரகாஷ் டின்னர் பிளான் செய்திருக்கான்.” என்று யோசனையாக பதில் அளித்தவனின் மனத்தில் அக்காவின் மனநிலையைப் பற்றி பெரிய கேள்வி எழுந்திருந்தது. இத்தனை நாள்களாக இப்படியொரு அவல நிலையில் அவள் கிடந்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனை பலவீனமானவளாக வசந்தி அக்கா இருக்ககூடுமென்று அவன் நினைக்கவேயில்லை. உடல் பலீவனத்தை கூட போக்கி விடலாம் ஆனால் சுற்றுப்புறம், சுயஆரோக்கியம், சுத்தம் பற்றி பிரக்ஞை இல்லாமல் இருக்கும் அக்காவைப் பார்த்து அவனுக்கு அச்சமாக இருந்தது. விஷயம் இந்த அளவிற்கு போகும் முன் ஏன் அவர்கள் யாரும் அதை சரி செய்யவில்லை என்று அவனது குடும்பத்தினர் மீது  முக்கியமாக பெரியப்பா, பெரியம்மா, ஜெயந்தி அக்கா மீது கோபம் கோபமாக வந்தது. இனி அந்தக் கோபத்தினால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்று புரிந்தாலும் அக்காவைப் பார்க்கும் போதெல்லாம் அது மேலெழுந்தது. 

ஓர் அடி எடுத்து வைக்க முடியாத நிலையில் இருக்கும் அக்காவை நல்லமுறையில் மீட்டெடுக்க ஒவ்வொரு அடியாக தான் எடுத்து வைக்க முடியும், அந்த அடியை அக்கா தான் முதலில் எடுக்க வேண்டுமென்று புரிய, இப்போது அவளிருக்கும் நிலையில் அது சாத்தியமாகுமா என்று பெரும் சந்தேகம் வந்தது ஷண்முகத்திற்கு. இன்று ஒரு வேகத்தில் தாலியை விட்டேறிந்தவள் நாளை நிதானமாக அதற்காக வருந்தி, வெங்கடேஷ் மாமாவை மன்னித்து ஏற்றுக் கொண்டால், இன்றைய தினத்தில் நடந்ததை அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள தான் அக்காவின் செய்கையை ‘ஸுப்பர்’ என்று பாராட்டினான். பெரிய்யம்மா, பெரியப்பாவின் எண்ணமும் அதுவாக தான் இருக்கும் என்ற யுகம் இருந்ததால் தான் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பேன், நடத்தி வைப்பேன் என்று எந்த உறுதியும் அவன் கொடுக்கவில்லை. 

மின் தூக்கியை அடைந்த போது தான் அவர்களோடு சேர்ந்து நடந்து வந்த சினேகாவை உணர்ந்த வசந்தி,”இது யார் டா ஷண்முகம்?” என்று தம்பியிடம் கேட்டாள்.

வீட்டை விட்டு வந்ததிலிருந்து வாயைத் திறக்காத அக்கா இப்போது வாயைத் திறந்து சினேகாவைப் பற்றி விசாரித்தவுடன், அவளது சுற்றுபுறத்தை மொத்தமாக உணராத நிலையை அவள் இன்னும் அடையவில்லை என்று நிம்மதி அடைந்தவன், வசந்தியின் கேள்விக்குப் பதிலளிக்குமுன்,”நான் சினேகா அண்ணி..உங்க தம்பி வேலனோட வைஃப்.” என்று சுயஅறிமுகம் செய்து கொண்டாள். 

அதைக் கேட்டு வசந்தியின் முகத்தில் பயம், தவிப்பு என்று பலவிதமான உணர்வுகள் வந்து போக,”எனக்கு விஷயமே தெரியலையே டா..ஃபோன் கூட கொடுக்கலை டா.” என்று தம்பியிடம் கண்ணீர் விட்டாள்.

‘“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை அண்ணி..பேசி, பழக நம்மகிட்டே நிறைய டைம் இருக்குது அண்ணி.” என்று சகஜமாகப் பேசி சூழ்நிலையின் அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்தாள் சினேகா. 

‘சரி’ என்று தலையசைத்தாள் வசந்தி.

கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் பளீரென்று வெய்யில் முகத்தில் அடித்தவுடன், நிலை தடுமாறிய வசந்தி,”ஷண்முகம், எனக்கு ஒரு மாதிரி இருக்குது டா..கால், கை எல்லாம் நடுங்குது.” என்றாள்.

அதைக் கேட்டவுடன் ஒரு முடிவிற்கு வந்தவன், சினேகாவிடம்,”டாக்ஸியை இங்கே அழைச்சிட்டு வா.” என்றான்.

சற்று தொலையில் நின்றிருந்த டாக்ஸியை நோக்கி அவள் விரைந்து செல்ல, வலுவிழந்த வசந்தியின் தேகத்தை மொத்தமாக தாங்கிக் கொண்டவன்,”ரெஸ்ட் எடுக்க ஓர் இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன் க்கா..அங்கே நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறமா நம்ம வீட்டுக்குப் போகலாம்.” என்றான். 

கண்கள் சொருகி அவன் மீது சாய்ந்திருந்த வசந்தியிடமிருந்து எந்த எதிர்வினையை வரவில்லை. அக்காவின் நிலை தம்பியை அச்சுறுத்தியது. அவளின் இந்த நிலைக்கு அவனும் ஒரு காரணம் என்பதால் அவன் மீது அவனுக்கே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இனி வசந்தி அக்கா விஷயத்தில் அக்காவைத் தவிர வீட்டினரின் அபிப்பிராயம், ஆலோசனை, அறிவுரை எதையும் கேட்கப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான். 

டாக்ஸியில் வசந்தியை அவர்களின் நடுவே அமர்த்திக் கொண்டனர் கணவன், மனைவி இருவரும். டாக்ஸி டிரைவரின் பார்வை அவள் மீது ஆராய்ச்சியாய்ப் படிந்ததை உணரும் நிலையில் வசந்தி இல்லை. 

“ஏர்போர்ட் இல்லை வேற இடத்துக்குப் போகணும்..வெயிட் பண்ணுங்க எங்கே போகணும்னு சொல்றேன்.” என்று டிரைவருக்குக் கட்டளையிட்டான் ஷண்முகம்.

எங்கே போகப் போகிறோம்? இந்த நிலையில் வசந்தி அண்ணியை ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றால் தேவையில்லாத கேள்விகள், சங்கடங்கள் ஏற்படுமென்பதால் வேறு எங்கே அழைத்துச் செல்லலாமென்று சினேகா யோசனை செய்ய, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமென்று மனத்தில் தோன்ற, அதைக் கணவனிடம் தெரிவிக்க நினைத்த போது,

“எங்கேயிருந்து அழைச்சிட்டு வந்தீங்களோ அதே இடத்துக்கு அழைச்சிட்டுப் போங்க.” என்று டிரைவருக்குக் கட்டளையிட்டான் ஷண்முகம்.

அதைக் கேட்டு அதுவரை அவளைச் சூழ்ந்திருந்த கவலை மேகங்கள் சட்டென்று கலைந்து போக நிம்மதியாக உணர்ந்தாள் சினேகா.