அதைக் கேட்டு ஏமாற்றமடைந்தவள்,“இப்போ தான் போனேன்.” என்றாள்.
“ஏன் ட்ரிப்போட ஃபோட்டோஸ் ஷேர் செய்யலை?” என்று கேட்டான் விளையாடும்வேல்.
‘போலீஸ்காரன் குசும்பை பாரேன்…அப்படியே இவங்க செல்ஃபி அலைலே என்னை முழுகடிச்ச மாதிரி.’ என்று மனத்திற்குள் குமைந்தவள் அதை வெளிக்காட்டாமல்,”ப்ளஷர் ட்ரிப் இல்லை…வேலை விஷயமா போனேன்..பெங்களூர் சில்க் தயாரிப்பை நேர்லே பார்க்க போயிருந்தேன்.” என்று பணிவுடன் பதிலளித்தாள்.
அப்படியா என்று பேச்சை தொடர்வான் என்று சினேகா எதிர்பார்க்க அவளை ஏமாற்றத்தில் ஆழ்த்தினான் ஷண்முகம். கட்டிலின் எதிரே நின்றபடி அதன் மீது இறைந்து கிடந்த அவனது உடைகளை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கணவன். கட்டிலின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி. அன்றைய இரவு அப்போது வரை மனைவியின் கற்பனைக்கு எட்டாத வகையில் கழிந்து இருந்தது.
அன்று தில்லியில், அவனின் வீட்டில் நடந்ததை பலமுறை மனத்தில் ஓட்டிப் பார்த்திருந்தவள் மீண்டும் அதே போல் அவர்கள் இருவரும் உணர அவளாலான முயற்சியை எடுத்திருந்தாள். கடந்த சில நிமிடங்களாக கணவனின் நடவடிக்கையைப் பார்த்து ‘ஏன் இன்னும் நான் கட்டிட்டு இருக்கற புடவையோட போலீஸ்க்காரர் கனெக்ட் ஆகலை?’ என்ற கேள்வி வந்தது. அதே சமயம் ‘இவங்க கண்ணிலிருந்து எதுவும் தப்பாது..அப்புறம் எதுக்காக கண்டுக்காத மாதிரி நடக்கறாங்க..இப்படி நேரத்தை வீண்டிச்சிட்டு இந்த வெட்டி வேலை பார்த்திட்டு இருக்காங்க..அடுக்கி எடுத்திட்டு போற டைப்பா இவங்க..நாம அள்ளிப் போட்டிட்டு போற டைப்..எப்படி செட்டாக போகுது இவங்களோட?’ என்று சிந்தனைவயப்பட்டாள் சினேகா.
“உன்னோட பெட்டியை எடுத்திட்டு வா.” என்று சினேகாவின் சிந்தனையைக் கலைத்தான் ஷண்முகம்.
‘ஹாங்..பெட்டியைத் தூக்கிட்டு வரணும்னா சொன்னாங்க? அந்த அறைலேர்ந்து இந்த அறைக்கு வாத்து மாதிரி நடந்து வந்தது எனக்குத் தானே தெரியும்.” என்று மனத்தில் புலம்பியவள் அவள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு ஓர் அடி கூட அசையவில்லை. அதைப் பார்த்து, போதும் அவளது திண்டாட்டம் என்று முடிவெடுத்த ஷண்முகம்,”உனக்காக தான் உன் பெட்டியை எடுத்திட்டு வரச் சொல்றேன்.” என்றான்.
அவன் சொன்னது புரிந்தும் புரியாமலும் இருக்க, குழப்பத்துடன் அவனை அவள் நோக்க,”நிறை, குறை இரண்டும் அதோட இயல்புக்கு திரும்பறது தான் அழகு.” என்று அவன் சொல்ல, அதில் அவளது முகத்தில் மேலும் குழப்பம் ஏற்பட,”முன்னழகு, பின்னழகு” என்று சொல்லி கண்களை சிமிட்ட, பேடட் பிளவுஸ் (Padded blouse), சாரி ஷேப்பரைக் (Saree shaper) கண்டுபிடித்து விட்டானென்று புரிய கொஞ்சம் போல் நாணமும் அளவுக்கு அதிகமான ஆத்திரமும் வந்தது சினேகாவிற்கு.
போலீஸ்காரனின் விமர்சனம், விளக்கத்தில் வெகுண்டவள்,”அறைக்குள்ளே வந்தவுடனே சொல்ல வேண்டியது தானே..எல்லாம் உங்களாலே தான்..சரியா மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டிட்டு இருக்கேன்.” என்று அவன் மீது பழிப் போட்டாள்.
“இதோ வரேன்.” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றவன் சில நிமிடங்கள் கழித்து அவளுடைய பெட்டியோடு திரும்பினான்.
உடனே,”இதில்லை..சின்ன பெட்டிலே தான் கஷுயல் இருக்கு.” என்றாள்.
அவள் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவனுடைய பெட்டி அருகே அதை வைத்தவன்,”நம்பர் சொல்லு.” என்று கட்டளையிட்டான். பெட்டியைத் திறக்க நம்பரைச் சொன்னவுடன் பட்டென்று அதைத் திறந்தவன் ஒரு நொடி கூட யோசிக்காமல் அதனுள்ளே இருந்த பொருள்களை வெளியே எடுத்துப் போட,”என்ன பண்றீங்க?” என்று வேகத்துடன் எழுந்து நின்றாள் சினேகா.
அன்றைக்குப் போல் இன்றைக்கும் நீல நிறப் புடவை அழகாக தெரிந்தாள். அவன் கணித்தது போல் அவளை மேலும் அழகாகாக் காட்ட அதனோடு சில புதுமைகள் சேர்ந்திருந்தன. அவளை தலை முதல் பாதம் வரை பொறுமையாக அவன் ஆராய,”எதுக்கு என்னோடதை வெளியே எடுத்துப் போட்டிருக்கீங்க?” என்று அதிகாரமாக கேட்டு போலீஸ் அதிகாரியின் ஆராய்ச்சியைத் துண்டிக்கப் பார்த்தாள் சினேகா.
முழு ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு, வெளியே எடுத்துப் போட்ட உடைகளைக் காட்டி,”இதெல்லாம் வேணாம்.” என்றான் ஷண்முகம்.
“இதைக் கொண்டு வரலைன்னா பெங்களூர்லே புதுசா வாங்கித் தரப் போறீங்களா?” என்று சினேகா கேட்க,
“அவசியமில்லை.” என்று ஒரு வார்த்தையில் அவன் பதில் அளிக்க,
“ஏன்?” என்று கேட்ட நொடி கணவன், மனைவி இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர். கணவனின் தொடை மீது அமர்ந்திருந்தாள் மனைவி. அவளது கழுத்தில் அவனது முகம் புதைய, கைகள் அவளது மேல் உடலை சிறை செய்ய,அவன் கால்கள் இரண்டு அவள் கால்களோடு பின்னிப் பிணைய முயற்சிக்க,”அம்மா” என்று வலியில் லேசாக முணுங்கினாள் சினேகா.
அப்படியே அவளைத் தூக்கி அவனருகில் அமர்த்தியவன்,”எதுக்கு இப்போ இந்த வேண்டாத வேலையை செய்திருக்க?” என்று கேட்டான்.
அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்திருந்தாலும், புரியாதது போல்,”நீங்க தானே புடவை, நகை வாங்க பணம் கொடுத்தீங்க..அதான் இந்தப் புடவையைப் பாகல்பூர்லேர்ந்து வரவழைச்சேன்…இன்னும் நகை எதுவும் வாங்கிக்கலை..உங்களோட போய் வாங்கிக்கறேன்னு எங்கம்மாவை சமாளிச்சு வைச்சிருக்கேன்.” என்று சம்மந்தமில்லாமல் பதில் கொடுத்தாள்.
அதற்கு,“அதெல்லாம் எங்கம்மாவோட ஆசை.” என்றான்.
உடனே,”அப்போ உங்களுக்கு எந்த ஆசையும் இல்லை அப்படித் தானே..நான் தான் பைத்தியம் மாதிரி அதே கலர் புடவைன்னு.. ” என்றவளின் உதடுகளின் மீது விரலை வைத்து,”இருக்கு…நிறைய இருக்கு..அதுக்கு முன்னாடி முக்கியமா உன்கிட்டே பேசணும்.” என்றான்.
‘இந்த நேரத்திலே அப்படி என்ன முக்கியமானப் பேச்சு?’ என்ற கேள்வியோடு அவனை நோக்க, அவன் பேச நினைத்ததை ஒத்திப் போட்டு விட்டு,”புடவை அன்னைக்கு மாதிரியே இருந்தாலும் இன்னைக்கு உன்னை வேற மாதிரி காட்டுது.” என்றான்.
அதைக் கேட்டு அவள் சிவக்க, அதைப் பார்த்து அவன் நகைக்க, அவனது புஜத்தில் சரமாரியாக அடித்தவள்,”உட்கார, நிக்க, மூச்சு விட நான் கஷ்டப்பட்டிட்டு இருக்கறது உங்களுக்கு வேடிக்கையா இருக்குதா?” என்று கேட்டு அவன் மீது சாய்ந்து கொண்டாள்.கணவனின் வலிமையை மனைவியும் அவளின் மென்மையை கணவனும் மனத்தில் இருத்திக் கொள்ள முயற்சி செய்ய, அடுத்து வந்த நொடிகள் மௌனத்தில் கழிந்தன. அவளது கேசத்தில் சூடியியிருந்த மலரை வாசம் பிடித்தவன் அப்படியே அவளையும் வாசம் பிடிக்க, சுவாசம் கிட்டாமல் அவள் தத்தளிக்க, கிளர்ச்சியில் அவன் தடுமாற, அவளின் நிலையை உணர்ந்து அவனை நிதானப்படுத்திக் கொண்டு அவளிடமிருந்து விலகி அமர்ந்தவன்,”கூடக் குறைச்சல் யாரோட ஐடியா?” என்று விசாரித்தான்.
”என் அம்மான்னாலே கூட இந்த மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியலை.” என்ற அவள் சொன்னவுடன்,
“ஃபோட்டோலே பார்க்கறதை தூரத்திலிருந்தே சரியா அடையாளம் கண்டுபிடிக்கறவனுக்கு தொட்டுப் பார்த்ததை அடையாளம் தெரியாதா என்ன?” என்று கேட்க,
“உங்களை” என்று இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு அவனை அடிக்க பாய, அவனது கையால் அவளைத் தடுத்தவன்,”அடிக்க, உதைக்க, உரச, உருவ, வருட, கடிக்க, கிள்ளனும்னா எக்ஸ்ட் ராவை கழட்டணும்.” என்றான் வேள். (ஸ்கந்தன், குமரன்)
கணவனை முறைத்துப் பார்த்தவள் அப்படியே அந்தப் பார்வையைக் கட்டிலின் மீது திருப்பி,“என்னோட மாத்துத் துணி இந்தப் பெட்டிலே இல்லை..எடுத்திட்டு வரேன்.” என்று எழப் போனவளின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து,”நான் போய் எடுத்திட்டு வரேன்.” என்று வெளியே சென்றவன் சில நொடிகளில் அவளுடைய ஸ்ட்ராலியோடு திரும்பி வந்தான். அப்போது அவனது கைப்பேசி அழைத்தது. ‘இந்த நேரத்திலே யார் கூப்பிடறாங்க?’ என்ற கேள்வியோடு அவனை நோக்க, சட்டைப் பேக்கெட்டிலிருந்து கைப்பேசியை வெளியே எடுத்தவன்,”மதன் ஸர்..பேசிட்டு வரேன்..என்னோடதையும் உன் பெட்டிலே பேக் செய்திடு.” என்று சொல்லி விட்டு அறைக்கு வெளியே சென்றான் ஷண்முகம்.
அவன் திரும்பி வருவதற்குள் பயணத்திற்குத் தேவையான உடைகளை அவளது பெரிய பெட்டியில் மாற்றி வைத்தாள். இருவரின் உடைகளை அடுக்கிய பின்னும் அவளது பெட்டியில் நிறைய இடம் இருந்தது.’இந்தப் பெட்டி ரொம்ப பெரிசு போலவே..இதை இங்கேயே விட்டிட்டு அம்மாவை எடுத்திட்டு வரச் சொல்லலாமா?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது அறைக்குள் நுழைந்தான் ஷண்முகம்.
“இந்தப் பெட்டி ரொம்ப பெரிசா இருக்கு..மனோகரை எடுத்திட்டு வரச் சொல்றேன்..உங்களோட டிரஸை உங்க பெட்டிலேயே பேக் பண்ணுங்க..என்னோடதை என்னோட ஸ்ட்ராலிக்கு மாத்திடறேன்.” என்று மீண்டும் துணிகளை இடம் மாற்றும் வேலையில் இறங்கினாள்.
“உனக்கு எதுக்கு தனியா ஒரு பெட்டி?” என்று அவன் கேட்க,
“எத்தனை நாளைக்குப் பெங்களூர்?” என்று அவள் கேட்க,
“அரை நாள்.” என்று அவன் சொல்ல,
“அரை நாளா?” என்று அவள் ஆச்சரியப்பட,
“ம்ம்..அதுவும் திரும்பி வரும் போது தான்” என்று அவன் விளக்க,
“எங்கேயிருந்து?” என்று அவள் கேட்க,
அதற்கு பதில் சொல்லாமல் அவள் அடுக்கி வைத்திருந்த துணிகளில் பலவற்றை வெளியே எடுத்து அவன் போட,”எதுக்கு எல்லாத்தையும் வெளியே எடுத்துப் போடறீங்க? அங்கே போட்டுக்க எனக்கு துணி வேணாமா?” என்று அவள் குரலை உயர்த்த,
அவளைத் தலை முதல் பாதம் வரை நிதானமாக ஒரு பார்வை பார்த்தவன்,”யெஸ்..வேணும்..ஆனா இவ்வளவு வேணாம்..இப்போ நீ போட்டிருக்கற எதுவும் வேணாம்.” என்றான்.
“புடவையை எடுத்திட்டு வர்ற ஐடியா இல்லை..சுருக்கறது பெருக்கறது எல்லாம் ஷிக்கா செய்த வேலை..பெரிய பெட்டிலே போட்டு நாளைக்கே ஊருக்கு அனுப்பி விட்டிடறேன்.” என்றாள்.
உடனே,“கழுத்திலே இருக்கறதை என்ன செய்யப் போற?” என்று கேட்டான்.
அவளது கழுத்தை தொட்டுப் பார்த்தவள், மார்பில் மறைந்திருந்த தாலியையும் தங்கச் சங்கிலியையும் வெளியே எடுத்துப் போட்டு,”உங்க கூட தானே இருக்கப் போறேன்..யார் என் கழுத்திலே கை வைக்கப் போறாங்க?” என்று சிரிப்புடன் கேட்டாள்.
“சங்கிலி இல்லை காலைலே உன் கழுத்திலே கட்டின கயிறைப் பற்றி கேட்கறேன்..அதைக் கழுத்திலிருந்து எப்போ கழட்டப் போற?” என்று அவன் கேட்க,
அவன் கேட்டதை நம்பமுடியாமல் கண்களில் அதிர்ச்சியுடன் அவனை நோக்கியவள்,”மூணு மாசம் கழிச்சு இந்தச் சங்கிலிலேயே கோத்துக்கலாம்னு அத்தை சொன்னாங்க..அதுவரை இப்படித் தான் மஞ்சக் கயிற்லே இருக்கும்..கழட்டக் கூடாது.” என்றாள்.
“ஏன்?” என்று அழுத்தமான குரலில் அவன் கேட்க,
“கல்யாணம் செய்துக்க தானே தில்லிலேர்ந்து இங்கே வந்தோம்..சொந்தப் பந்தம் எல்லோரையும் கூப்பிட்டு கடவுள் சந்நிதானத்திலே இதை நீங்க என் கழுத்திலே கட்டினதாலே தான் கணவன், மனைவி ஆனோம்..இப்போ இந்த ரூம்லே தனியா இருக்கோம்.” என்றாள் சினேகலதா.
அதற்கு,“இன்னைக்கு காலைலே தான் கணவன், மனைவி ஆனோம்னா அப்போ தில்லிலே அந்த நைட்நீ என்னவா உணர்ந்த?” என்று கேட்டான் ஷண்முகவேல்.