“வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம்.
காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும். வனிதா நிச்சயத்தில் நடந்த தவறை இப்படித் தான் சரி செய்தால் தான் நமக்கு மரியாதை என்று ஷண்முகம் சொன்னது சரி என்று தோன்றியதால் தான் யாருக்கும் தகவல் சொல்லாமல் சென்று விட்டார். எதற்காக இங்கே வந்திருக்கிறோமென்ற காரணம் சம்மந்திக்கும் அவருடைய மகன்களுக்கும் தெரியவில்லை. ஏற்கனவே நிச்சயத்தில் நடந்திருந்த பிரச்சனையால அவர்கள் வீட்டினர் மனத்தில் குறிப்பாக பெண்கள் மனத்தில் வனிதாவின் மீது லேசான கசப்புணுர்வு வந்திருந்தது.
அவருடைய சம்மந்திக்கும் காசியப்பனுக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கல் இல்லையென்றாலும் அவருடைய மகளின் நிச்சயத்தில் அவன் பிரச்சனை செய்தது, அதை செல்வம் பொறுத்துக் கொண்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அன்றைக்கு ஏற்பட்ட உறுத்தல் செல்வமும் செந்திலும் எத்தனை முறை மன்னிப்பு கேட்டும், சமாதானம் செய்தும் வெளியேறுவதாக இல்லை. இப்போது என்ன நடக்கப் போகிறது? எதற்காக நம்மை கூட்டிட்டு வந்திருக்காங்க? என்ற கேள்வியோடு அவர் உள்ளே வர, எழுந்து கொண்ட ஷண்முகவேல், அவன திருமணத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதால்,
“நான் ஷண்முகவேல்.” என்று சுயஅறிமுகம் செய்து கொண்டு, பார்வையால் சினேகாவை அருகே அழைத்தான்.
அவள் அருகே வந்ததும்,“சினேகா, என்னோட மனைவி.” என்று அறிமுகம் செய்தவன் அப்படியே சமையலறை வாயிலில் நின்றிருந்த ஜோதியைக் காட்டி,”என்னோட மாமியார், வனிதாவோட அத்தை திருமதி பாண்டியன்..என்னோட பிரதர் இன் லா, சினேகாவோட அண்ணன் மனோகர் இப்போ இங்கே இல்லை..அவன் மனைவி, குழந்தையோடு செல்வம் சித்தப்பா வீட்டுக்குப் போயிருக்கான்.” என்று மனோகருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவனில்லாத போதும் கொடுத்தான்.
கடந்த இரண்டு நாள்களாக அவனைச் சுற்றி நடப்பதை அவனும் கவனித்துக் கொண்டு தானே இருந்தான். மனோகரை அவனுடைய மாமாக்கள் ஒதுக்கியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஷிக்கா, மந்தீப் இருவரும் செல்வத்தின் வீட்டில்அறையினுள்ளேயே அடைந்து கிடந்ததைப் பார்த்து விஜயாவிற்கே பொறுக்கவில்லை. கைதி போல் இருந்த ஷிக்காவை மந்தீப்பையும் அவருடன் அவர்கள் தங்கியிருந்த விநாயகத்தின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த நொடியிலிருந்து அவர்கள் இருவரும் மாப்பிள்ளை வீட்டினர் ஆகிவிட்டனர். நித்யாவோடு சேர்ந்து ஷண்முகத்திற்கு நலங்கு வைப்பதில் ஆரம்பித்து, ஜெயந்தியோடு சேர்ந்து தாலி முடியும் வரை மாப்பிள்ளை வீட்டினரோடு தான் இருந்தாள் ஷிக்கா. ஜோதியின் இடுப்பை விட விஜயாவின் இடுப்பில் தான் அதிக நேரம் சவாரி செய்தான் மாண்ட்டி. மனைவி, மகனை விஜயா ஆன்ட்டி அரவணைத்துக் கொண்டது மனோகருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
மாமாவின் குடும்பத்தினர் மனோகரிடம் முகத்தை திருப்பவில்லை என்றாலும் ஷிக்காவை முழுமையாக ஏற்கவுமில்லை. மனோகரும் ஜோதியும் கல்யாண வேலையில் பிஸியாக இருந்ததால் மாண்ட்டியைப் பார்த்துக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை. கல்யாணப் பெண்ணான சினேகாவைத் தொந்தரவு செய்யாமல் மகனைச் சமாளித்த ஷிக்காவிற்கு விஜயாவின் தலையைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு எழுந்தது. அவரின் உறவுகளுக்குச் சினேகாவை அறிமுகம் செய்து வைக்க செல்வத்தின் வீட்டிற்கு விஜயா சென்ற போது ஷிக்காவின் இடுப்பிலிருந்து புன்சிரிப்போடு அவரிடம் தாவிப் போனான் மாண்ட்டி. தில்லியில் இருந்தவரை அவனை ஒருமுறை கூட அவர் தூக்கியதில்லை. அவரை அவனுக்கு அடையாளம் தெரியுமென்று அப்போது தான் விஜயாவிற்குத் தெரிய வந்தது.
திருமணம் முடிந்தததும் அவருடைய உறவினர்களோடு விஜயா புறப்பட்ட போது அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதவனைப் பார்த்து ஷண்முகத்திற்கே ஆச்சரியமாகிப் போனது.
“நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதிலே இந்தத் தங்கத்துக்கு என் முகம் பழக்கமாகிடுச்சு சாமி..ஆனா அங்கே ஒருமுறை கூட தூக்கினதில்லே..இங்கே அறியாத முகங்கள் நடுவுலே என்னை பார்த்ததும் பிள்ளை என்கிட்டே ஒட்டிக்கிச்சு..இப்போ நான் விட்டிட்டுப் போகப் போறேன்னு புரிஞ்சதும் போகதேன்னு என் காலைப் பிடிச்சிட்டு அழறதைப் பார்.” என்ற மகனிற்கு விளக்கிய விஜயா, அப்படியே மந்தீபைத் தூக்கி ஷண்முகம் அருகில் நின்றிருந்த சினேகாவிடம் கொடுத்து விட்டு,”பாட்டி சென்னைக்குப் போறேன்..கொஞ்ச நாள் கழிச்சு உன் அத்தையோட தில்லிக்கு வருவேன்..நான் வந்ததும் நீ உன் அத்தை வீட்டுக்கு வந்திடு..ஜாலியா விளையாடிட்டு இருக்கலாம்..இப்போ அழாம பாட்டிக்கு டாடா சொல்லு.” என்றவுடன், இரண்டு நாள்களாக அவனுக்கு நேரம் ஒதுக்காத அத்தை இப்போது அவனை இடுப்பில் தூக்கி வைத்திருந்தால் சந்தோஷமாக கை அசைத்து டாடா சொன்னான் மந்தீப். அதைப் பார்த்து ஷிக்காவின் மனத்தில் விஜயாவின் மேல் மரியாதையும் அபிமானமும் ஏற்பட்டது.
திருமண நிகழ்வுகள் போது மனோகரை அவனுடைய உறவுகள் நடத்திய முறையில் ஷண்முகத்திற்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதில் தலையிட அவனுக்கு உரிமையும் இருக்கவில்லை. இப்போது அந்த வீட்டு மாப்பிள்ளையாக, சினேகாவின் கணவனாக அவனது நிலையை அதாவது மனோகரை யார் ஒதுக்கினாலும் அவன் ஒதுக்கப் போவதில்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தி விட்டான்.
அந்த நொடி சகோதரர்கள் இருவரும் இத்தனை வருடங்களாக மனோகரையும் அவன் மனைவியையும் ஒதுக்கி வைத்த செய்கையை நினைத்து வருந்தினர். சினேகாவின் திருமணத்திற்கு சம்மந்தி வீட்டினரை அழைக்காததற்குக் காரணம் மனோகர் தான். வீட்டுப் பெரியவர்கள், முக்கியமான உறவினர்கள் என்று திருமண வைபவத்தை கூட்டமில்லாமல் நடத்த முடிவு செய்திருந்ததால் அண்ணன் அவருடைய சம்மந்தி வீட்டினரை அழைக்காததை ஜோதியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது அவனின் குடும்பம் என்று மனோகரையும் ஷண்முகம் சேர்த்துக் கொண்ட போது அவரது கண்கள் கலங்கின. அவளால் செய்ய முடியாததை கணவனாவன் அவர்களின் திருமணத்தன்றே செய்து முடிக்க, அவனின் நாடியைப் பற்றி,’என் சாமி, தங்கசாமி’ என்று கணவனைச் செல்லங் கொஞ்ச தோன்றியது சினேகாவிற்கு.
“உட்காருங்க” என்று சம்மந்தியையும் அவருடைய மகன்கள் இருவரையும் உட்கார வைத்து விட்டு வி நாயகத்தின் பக்கவாட்டில் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டான் ஷண்முகம். ஜோதி காப்பி கொண்டு வந்து கொடுக்க அதைக் குடித்து முடிக்கும் வரை நிமிடங்கள் அமைதியாக கழிய, எதற்காக இங்கே அழைத்து வரப்பட்டோம் என்ற கேள்வி விருந்தினர்களின் முகத்தில் தொக்கி நின்றது.
அதன் பின் சில நிமிடங்களுக்கு காலையில் நடந்த திருமணத்தைப் பற்றியும் இனி நடக்கப் போகும் திருமணத்தைப் பற்றியும் பேச்சுக்கள் நடக்க, முள் மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தான் காசி.
“அன்னைக்கு உங்க மகனோட நிச்சயத்திலே நடந்த விஷயத்துக்கும் செல்வம் சித்தப்பாக்கும் எந்த சம்மந்தமுமில்லை..ரிடையரானதும் சொந்த ஊர்லே நிலம் வாங்க விருப்பப்பட்டிருக்கிறார் என்னோட மாமனார்.” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஷண்முகம்.
“ஆமாம் சம்மந்தி..என் தங்கச்சி புருஷன் தில்லிலே வேலைல இருந்தார்..சினேகாவோட பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் ஊரோட வந்திடலாம்னு முடிவு செய்திருந்தார்..மத்திய அரசுலேர்ந்து பென்ஷன் கிடைச்சாலும் சொந்தமா ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யணும்னு நினைச்சு தான் அந்த நிலத்தை வாங்கிப் போட்டிருக்கார்.” என்றார் செல்வம்.
”காசியப்பன்கிட்டேயிருந்து பணத்தை வாங்கி அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்கிட்டே கொடுத்திட்டு தில்லிக்குப் போனவன் போனவன் தான்..நிலத்துக்காக கடன் வாங்கினதைப் பற்றி சொல்றத்துக்கு முன்னாடி மாரடைப்புலே காலமாகிட்டான்.” என்றார் விநாயகம்.
“இத்தனை வருஷமா கடனைக் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டிருந்த என் மாமியாருக்கு நிலத்தைப் பற்றி விசாரிக்கணும்னு தோணலை..அவங்க மருமகளைப் போல மருமகனும் தில்லிப் பக்கமே அமைஞ்சிருந்தா அவங்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது..நான் எங்கே வேலை பார்த்தாலும் என்னைக்கும் சென்னைக்காரன் தான்.” என்று காசியப்பனை நேராகப் பார்த்து சொன்னான் சூரவேல்.
அதற்கு,“நாங்க கட்டுமானப் பொருள்கள் விற்பனைலே இருக்கோம்..இந்த சுற்று வட்டாரத்திலே எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க..ஆள் யாருன்னு சொன்னா நிலத்தைப் பற்றி நாங்க விசாரிச்சுப் பார்க்கறோம்.” என்று ஷண்முகத்திற்கு உதவிக்கரம் நீட்டியவர், செல்வத்திடம்,”இதுதான் விஷயம்னு நீங்க அன்னைக்கே சொல்லியிருக்கலாமே செல்வம்.” என்றார்.
“நாங்க யாருமே இப்போவரை நிலத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை..கடனைப் பற்றி தான் எல்லாம் யோசனையும்.” என்றார் செல்வம்.
“அவங்க மேலே தப்பு இல்லை..என் மாமனார் குணம் அந்த மாதிரி..யாரையும் கலந்து ஆலோசிக்கற டைப் கிடையாது..அவரோட வழி தனி வழி..ஆனா நேர்மையான வழி..அவரோட நேர்மைக்கு சான்றிதழ் கொடுக்க இப்போவும் தில்லிலே நிறைய பேர் இருக்காங்க.” என்றான் ஷண்முகம்.
பாண்டியனைப் பற்றி ஷண்முகம் சொன்னது முற்றிலும் உண்மை என்பதால்,”ஆமாம்..அதுயென்னவோ உண்மை தான்..அவரோட வழி தனி வழி தான்.” என்று ஆமோதித்தார் செந்தில்.
அப்போது இரண்டு பெரிய ஹோல்டால் பைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தனர் காசியப்பனின் ஆள்கள். அதை விநாயகத்தின் முன் வைக்கும்படி சைகை செய்தான் ஷண்முகம். வீட்டினர் அனைவரும் அந்தப் பைகளை கேள்வியோடு பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய உழைப்பு, திட்டமிடல் இப்படி எப்படி வீணாக முடியலாமென்று ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் காசியப்பன்.
”சித்தப்பா, உங்ககிட்டே ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிட்டு வரச் சொல்லணும்னு நினைச்சேன்..மறந்திட்டேன்.” என்று ஷண்முகம் சொல்ல, அனைவரின் கவனமும் அவன் புறம் திரும்பியது.
“எதுக்கு ப்பா?” என்று கேட்டார் விநாயகம்.
“நமக்கு சேர வேண்டியதை தான் கொடுக்கறார்ங்கறத்துக்கு ஆதாரம் இருக்கணுமில்லே..நாங்க பணத்தை வாங்கிட்டுப் போன பிறகு உங்களுக்கு மறுபடியும் பிரச்சனை வர கூடாதில்லே..அப்புறம் அந்த நிலத்துக்காக தான் இந்தப் பணம்னு தெளிவா எழுதி வாங்கிட்டா நிலத்தைச் சொந்தம் கொண்டாடிட்டு மாண்டியோ இல்லை என் பிள்ளைகளோ வந்தா இவருக்கும் சேஃப்டியா இருக்குமில்லே.” என்றான் கூத்தன்வேல்.
“அந்த மாதிரி பத்திரம் செய்ய நிலத்தைப் பற்றிய முழு விவரம் தேவைப்படும்.” என்றார் செல்வம்.
மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே விஷயம் வந்து சேர,”பாண்டியனைப் போலவே பாண்டியனோட வாரிசும் நேர்மையாதான் இருப்பாங்க..பத்திரமெல்லாம் வேணாம்..பத்து பத்துன்னு இரண்டு பைலே இருபது இருக்கு..இத்தனை வருஷமா இழுதிட்டு இருந்த விஷயம் நல்லபடியா முடிஞ்சதிலே ரொம்ப சந்தோஷம்..நான் கிளம்பறேன்.” என்று தோரணையாக காசியப்பன் விடைபெற்றுக் கொள்ள, வாயில் வரை சென்று அவனையும் அவனது ஆள்களையும் வழி அனுப்பி வைத்தனர் செல்வமும் செந்திலும். அவனை அடுத்து செல்வத்தின் சம்மந்தியும் அவரது மகன்களும் ஜோதியின் குடும்பத்தினருக்குதிருமணத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு விடைபெற்றனர்.
வீட்டு உறுப்பினர் அனைவரும் வரவேற்பறையில் இருந்த பைகளை அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இத்தனை பணம் வீட்டில இருக்கறதைப் பார்க்கவே பயமா இருக்கு.” என்றார் மதியழகி.
“ஏன் இருக்காது? பணத்தை மடிலே வைச்சிருக்கறவனுக்கு என்னைக்கு மரணப் பயம் தான்..இதே அந்த நிலத்தைப் பத்திரத்தைப் பார்த்த உனக்கு இப்படித் தோணாது..நிலம் வேணாம் பணம் தான் வேணும்னு யார் முடிவு செய்தாங்க?” என்று கேட்டார் செந்தில்.
“நான் தான்” என்றான் ஷண்முகம்.
“தப்பு பண்ணிட்டீங்க..நிலத்தோட மதிப்பு ஏறிட்டே போகும்..இந்தப் பணத்தை அந்த அளவுக்குப் பெருக்க கடுமையா உழைக்கணும்..அப்படி உழைச்சாலும் பெருகும்னு கியாரண்டி கிடையாது..நிலம் தான் வேணும்னு சொல்லியிருக்கணும்.” என்றார் செந்தில்.
“அப்படிச் சொல்லியிருந்தாலும் அவன் பணத்தைத் தான் கொடுத்திருப்பான்.” என்று ஷண்முகம் சொல்ல,
“ஏன்?” என்று அனைவரும் ஓரே போல் கேட்க,
“ஏன்னா அந்த மாதிரி ஒரு நிலம் இல்லவே இல்லை.” என்றான் ஷண்முகம்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்க,“என்ன ப்பா சொல்ற? பாண்டியன் நிலம் எதுவும் வாங்கலையா?” என்று கேட்டார் விநாயகம்.
“அவர் கைலே பணமில்லை அதனாலே நிலம் வாங்கலை.” என்றான் ஷண்முகவேல்.
“காசியப்பன்கிட்டே கடன் வாங்கினது நிலம் வாங்கத்தானே.” என்றார் விநாயகம்.
“இல்லை தாத்தா..அவர் கடன் வாங்கவே இல்லை.” என்றான் ஷண்முகம்.
அதுவரை அமைதியாக ஷண்முகத்தின் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சினேகா, ஜோதியின் புறம் திரும்பி,”நானும் மனோவும் எத்தனை முறை சொன்னோம்….அப்பாகிட்டே சில நல்ல குணமும் இருந்திச்சு ம்மா..நீங்க தான் அவரை நம்பவே இல்லை” என்று குற்றம் சாட்டினாள்.
“அப்போ இந்தப் பணமெல்லாம் யாரோடது?” என்று கேட்டார் செல்வம்.
“என் மாமியாரோடது..அவங்க கொடுத்ததை மூலதனமா வைச்சு ஏழு வருஷத்திலே எத்தனை சம்பாதிச்சிருப்பான்னு கணக்கு போட்டேன்..அதோட கொடுக்காத கடனைக் கொடுத்ததா சொல்லி போலீஸைன்னு அவங்களை பயமுறுத்தி டார்ச்சர் கொடுத்ததுக்கும் சேர்த்து பெனால்ட்டி போட்டு இருபது லட்சம் வாங்கிட்டேன.” என்று செல்வத்திற்குப் பதில் கொடுத்தவன் அப்படியே ஜோதியின் புறம் திரும்பி,
“எல்லார்க்கும் சேர வேண்டியதை கொடுத்த பிறகும் கொஞ்சம் மிஞ்சும்..அது உங்களோடது..இனி நீங்க கடனாளி கிடையாது.” என்றான்.
அதைக் கேட்டு ஜோதியின் கண்களிருந்து சரசரவென கண்ணீர் வழிய, அதைப் பார்த்து சகோதரர்கள் இருவரும் கண் கலங்க, சினேகாவிற்கும் அழுகை வரும் போல் இருக்க, அதை அடக்கிக் கொண்டு, பரபரவென்று பைகளைத் திறந்து,”அம்மா, தாத்தாக்கும் இரண்டு மாமாக்கும் கொடுத்த பிறகு ஒரு லட்சம் போல மிஞ்சனும்…அந்த மிச்சத்திலே கொஞ்சம் எனக்கு இல்லையா?” என்று கேட்டாள்.
மனைவியின் முயற்சியைப் புரிந்து கொண்டு,“உனக்கு எவ்வளவு வேணுமோ உன்னோட மாமியார்கிட்டே கேளு..என் மாமியார்கிட்டே கேட்கக் கூடாது.” என்று பதிலளித்தவனின் மனத்தில் அவனுடைய பெரியப்பாவின் பணப் பிரச்சனையைப் பற்றி அவரிடம் நேரடியாக பேச வேண்டுமென்று முடிவு செய்தான்.
ஷண்முகத்தின் பதிலை கேட்டு அனைவரும் புன்னகைக்க, விநாயகம் மட்டும் தீவிர யோசனையில் இருக்க,”என்ன தாத்தா?” என்று விசாரித்தான்.
“காசியப்பன் மோசமானவன்னு தெரியும்..இவ்வளவு மோசமானவன்னு நினைக்கலை..தில்லிலே நீ ஜாக்கிரதையா இருக்கணும் ப்பா..இவனுக்காக அவனோட போலீஸ் கூட்டாளி எதையும் செய்வான்.” என்றார்.
“அவனாலே என்னை ஒண்ணும் செய்ய முடியாது தாத்தா.” என்றான் ஷண்முகம்.
“உன்னோட விவரமெல்லாம் நீயே சொல்லிட்ட..அந்த ஆள் போலீஸ்க்காரன் ப்பா.” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
அதற்கு,”நானும் தான் தாத்தா.” என்றான் ஷண்முகவேல்.
அதைக் கேட்டு ஜோதி, சினேகாவைத் தவிர அனைவரும் அதிர்ச்சியாயினர்.
“அவனும் நானும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் எங்களுக்குள்ளே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு..அவன் சாரைப்பாம்பு, நான், அவனையே சாப்பிடற கட்டுவிரியன்.” என்றான் ஷண்முகவேல்.