அத்தியாயம் –  46 2

‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான் காசியப்பன். அசையாமல், அசராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். என்ன நடக்கப் போகிறதோ என்ற அனைவரின் பதற்றத்தை காசியப்பனின் கைப்பேசியிலிருந்து படபடவென வந்த ஒலி உடைக்க, அதைக் காரணமாக வைத்து அங்கேயிருந்து வெளியேறிவிட முடிவு செய்து,”மெஸேஜ் வந்திட்டே இருக்கு..நான் போயே ஆகணும்.” என்று ஓர் அடி எடுத்து வைத்தவனின் பார்வை கைப்பேசியில் நிலைக்குத்தி நிற்க, அப்படியே ஓர் அடி பின்னால் வைத்து நாற்காலியில் அமர்ந்தான் காசி.

அவனைப் பற்றிய விவரம் தான் கைப்பேசியில் வந்திருக்கிறது என்று சரியாக யுகித்த ஷண்முகம் அது என்னயென்று தெரியும் என்பதால் படு அமைதியாக அமர்ந்திருந்தான். தில்லி போலீஸ் என்ற பாம்பைக் காட்டி ஷண்முகத்தைப் பயமுறித்தி கொண்டிருந்தவன் இப்போது பெட்டிப் பாம்பாய் அவன் முன்னால் அமர்ந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர் வீட்டினர். மெஸேஜ் வந்து சில நொடிகள் ஆன பின்னும் கைப்பேசித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த காசியப்பன் அவனது தலையை உயர்த்தி அவனெதிரே அமர்ந்திருந்த ஷண்முகத்தை பார்த்த போது அவன் கண்களில் யாரிவன்? என்ற கேள்வி இருந்தது. 

மாணிக்கத்தின் தேடலில் வடகிழக்கில் மிஸோரம் போலீஸ்ஸில் ஆரம்பித்து தெற்கில் கர்னாட்டக்கா போலீஸ் வரை ஷண்முகத்தின் அடையாள அட்டை அகப்பட்டது. அவன் தேடாத இடங்களில், பிஎஸ்ஃப் (BSF), ஐடிபிபி(ITBP), எஸ்பிஜி (SPG)யில் ஷண்முகத்தின் பெயர் ஹைலைட்டானவுடன் பயந்து போனவன் அந்தத் தேடலை கைவிட்டு, ‘நான் வெறும் தமிழ் நாடு சிறப்பு போலீஸ்..இவன் மிகச் சிறப்பான போலீஸ், கர்னாட்டக்கா, மிஸோர்ம்னு எல்லா போலீஸ்லேயும் இருக்கான் ண்ணே.’ என்று சொன்னவன், மற்றவைகளைப் பற்றி வாயைத் திறக்காமல்,’ஜாக்கிரதை’ என்று முடித்திருந்தான். மாணிக்கத்தின் குறுஞ்செய்திகளைப் பார்த்து காசியப்பனிற்கு கிலியானது. ஷண்முகத்தை மாட்டி விட நினைத்தவன் இப்போது அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படித் தப்பிப்பது என்று யோசித்து, அவனெதிரே அமர்ந்திருந்த ஷண்முகத்தைப் புறக்கணித்து, 

“அஞ்சுன்னு சொல்லி ஏழு வருஷமாகியும் வாங்கினதை கொடுக்காததிலே கொஞ்சம் கோவம் வந்திடுச்சு.. அதான் நிச்சயம் நடக்கற போது வீட்டுக்கு வந்து கண்டபடி பேசிட்டேன்.” என்று பொதுவாக செல்வத்தையும் விநாயகத்தையும் பார்த்துப் பேசினான்.

காசியப்பன்னின் கவனத்தை சொடக்கிட்டு அவன் புறம் திருப்பிய ஷண்முகம்,”இல்லை” என்ற வார்த்தையை உதிர்த்தான். அந்த ஒரு வார்த்தையில் கிலி உணர்வு மேலும் உயர, அந்த மாற்றத்தைப் புறம் தள்ள முயற்சி செய்தபடி, விநாயகத்திடம்,

“ஐயா, எனக்கும் பாண்டியனுக்கும் இடையே தான் டீல்..அவன் ஒரேடியா போனதாலே தான் கொடுத்த பணத்தை வாங்க அவனோட காரியத்தன்னைக்கு வீட்டுக்கு வந்தேன்..அதன் பிறகு  இத்தனை வருஷத்திலே ஒரு நாளாவது செல்வத்தோட வீட்டுக்குப் போய் பணத்தைக் கேட்டிருப்பேனா?..கொடுக்கற போது கொடுக்கட்டும்னு அமைதியா தான் இருந்தேன்.” என்று விளக்கம் கொடுத்தவன், அப்படியே செல்வத்தின் புறம் திரும்பி,”இல்லையா செல்வம்..உங்க வீட்டு வாசப்படி மிதிச்சிருப்பேனா?” என்று கேட்க,

“இல்லை” என்று செல்வம் சொன்ன அதே நொடி,”திருப்தியா இல்லை” என்றான் ஷண்முகம்.

எதைத் திருப்தியா இல்லை என்று சொல்கிறானென்று அங்கேயிருந்தவர்களுக்குப் புரியவில்லை. இந்தமுறை காசியப்பனுக்குப் புரியவில்லை. உண்மையாகவே செல்வத்தின் வீட்டிற்கு அவன் செல்லவில்லை. செல்வத்தின் மகளுடைய நிச்சயதார்த்திற்கு ஜோதி வந்திருப்பார் என்று நினைத்து தான் அங்கே சென்றான். அவர் வரவில்லை என்று தெரிந்தவுடன் சகோதரர்களை மிரட்டி விட்டு வந்திருந்தான்.

உடனே,“உண்மையை தான் சொல்றார்..இத்தனை வருஷமா எந்தப் பிரச்சனையும் கொடுக்கலை.” என்று காசியப்பனுக்கு நன்னடத்தை சர்டிஃபிகேட் கொடுத்தார் செல்வம்.

செல்வம், விநாயகம் உள்ளே நுழைந்தால் காசியப்பன் தப்பித்து விடுவானென்று உணர்ந்த ஷண்முகம்,“என் மாமனாருக்கும் உனக்கும் இடையே என்ன டீல்?” என்று காசியப்பனிடம் நேரடியாக கேட்டான்.

இத்தனை வருடங்கள் கழித்து அது போல் ஒரு கேள்வி வருமென்று காசியப்பன் எதிர்பார்க்கவில்லை. எதற்காக இப்போது டீலைப் பற்றி பேசினோமென்று நோந்து கொண்டவன் அவனது மூளையை எத்தனை தோண்டியும் அன்று சொன்ன எதுவும் காசியப்பனிற்கு நியாபகமிருக்கவில்லை. ஆனால் அவனால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பத்தினர்க்கு சிலது அவர்கள் நினைவில் இருந்தது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்ததை நினைவுப்படுத்தி சொல்லியிருந்ததால் காசியப்பன் ஜோடித்த கதையிலிருந்த ஓட்டைகளைக் கண்டுபிடித்திருந்தான் ஷண்முகம்.

“அதுதான் எல்லோர்க்கும் தெரியுமே..பத்து லட்சம் ரூபாய் கைமாத்தா வாங்கினது.” என்று ஒரே வரியில் முடித்தான் காசி.

“உன்கிட்டே பத்து வாங்கினார்..அதிலே ஏழு நிலத்துக்கு..மீதி மூணு அந்த நிலத்திலே கட்டப் போற கடைக்குன்னு நீ சொல்லியிருக்க.” என்றான் ஷண்முகம்.

“இப்போ எனக்கு சரியா நியாபகமில்லை..அப்படித் தான் பாண்டியன் சொல்லியிருக்கணும்.” என்றான் காசி.

“பத்திலே ஏழு அந்த இடத்தோட சொந்தக்காரருக்கு போயிருச்சு மீதி மூணு எங்கே போச்சு?” என்று கேட்டான் ஷண்முகம்.

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவர்க்கும்மே ‘எங்க போச்சு அந்த மீதி மூணு?’ என்ற கேள்வி வந்தது. 

காசியப்பனுக்கு திக்கென்றானது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல்,”பாண்டியனோட குடும்பத்துக்கிட்டே தான் கேட்கணும்..மீதியை அவன் என்ன செய்தான்னு அவங்களுக்குத் தான் தெரியும்.” என்றான்.

அதையெல்லாம் அவன் ஏற்கனவே விசாரித்து விட்டான். வங்கி கணக்கு, வீட்டுக் கணக்கு இரண்டிலுமே அந்த பெரிய தொகை வந்து போனதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அப்படி அந்தப் பணம் கையில் இருந்திருந்தால் எதற்காக சகோதரர்களிடம் இரண்டு லட்சம் கைம்மாத்து வாங்கப் போகிறார் ஜோதி? என்று அவனையே பலமுறை அந்தக் கேள்வியைக் கேட்டு பதிலைத் தேடியவனுக்கு விடை கிடைத்த போது திருட்டுப்பயால் காசியப்பனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்திருந்தான் போலீஸ்க்காரன். எனவே,

“அவங்களை விசாரிச்சேன் திருப்தியா இருந்திச்சு..நீ சொல்றது எனக்குத் திருப்தியா இல்லை.” என்று தெளிவாகச் சொன்னான்.

எந்தப் பக்கம் போனாலும் ஷண்முகம் வழியை மறித்து நின்று கொண்டிருக்க, ஒப்புக் கொள்ளும்படியான காரணம் சொல்லவில்லை என்றால் அவனிடம் அகப்பட்டுக் கொண்டு விடுவோம்..நம்ம கதை முடிஞ்சிடும் என்ற அச்சத்தில்,”கடைக்குன்னு தான் முதல்லே சொன்னான் அப்புறம் மொத்தம் நிலத்துக்குன்னு தான்னு சொன்னான்..மொத்தத்தையும் அதிலே தான் போட்டிருக்கணும்.” என்று பழைய பொய்யை மறைக்க புதிதாக பொய் சொன்னான் காசி.

“இந்தப் பக்கத்திலே பத்து லட்சத்திற்கு நிலமா?” என்று ஆச்சரியத்தில் விநாயகம் வாயைப் பிளக்க, அவன் செய்த பெரும் தவறு காசிக்குப் புரிய, அதைச் சரி செய்ய வழி தேட,

“மாமா, ஏழு வருஷத்திலே அதோட கிரயம் எவ்வளவு உயர்ந்திருக்கும்..ஏன் நாம யாரும் இந்தப் பாதைலே யோசிக்கலை? என்று செல்வம் வி நாயகத்திடம் அவரது ஆர்வத்தை வெளியிட, 

நிலத்தைப் பற்றிய விசாரணையை அவர்கள் ஆரம்பிக்கும் முன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ள முடிவு எடுத்த காசியப்பன் அதை செயல்படுத்த வாயைத் திறந்த போது,

“அந்த நிலம் யாரோடது? எங்கே இருக்குது?” என்று அவனை முந்திக் கொண்டு கேட்டார் செல்வம். 

‘வசமாக மாட்டிக் கொண்டு விட்டோம், எப்படிச் சமாளிப்பது?’ என்று காசியப்பன் தீவிரமாக யோசனை செய்ய,

”இத்தனை வருஷமா ஜோதிக்கு சொந்தமான நிலத்தை அனுபவிச்சிட்டு இருக்கற ஆள் யாருன்னு சொல்லாம நீ இங்கேயிருந்து போக முடியாது காசி.” கிடுக்கிப்பிடி போட்டார் விநாயகம்.

அப்படியொரு ஆள் இருந்தால் தானே சொல்ல முடியும்.  யார் பெயரையாவது சொல்லி இந்தப் பிரச்சனை இன்னும் பெரிய பிரச்சனையாக மாறி விட்டால் தன்னை யாருமே காப்பாற்ற முடியாதென்று புரிய,”அதைச் சொன்னா நம்ம ஆளுங்களுக்கும் அவங்களுக்குமிடையே கைகலப்பு ஆகி பெரிய கலவரமாகிடும் ஐயா.” என்று அந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் கொடுக்காமல் ஊர் பிரச்சனையாகி விடுமென்று அவர்களைத் திசை திருப்பி விட்டான் காசி.

“யாருன்னு சொல்லு காசி..உன்னோட பெயர் வராம நான் பார்த்துக்கறேன்.” என்று வாக்குறுதி அளித்தார் விநாயகம்.

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஷண்முகம் இனி முடியாதென்று முடிவு செய்து காசியப்பனின் அடியாட்கள் இருவரிடமும்,”நீங்க இரண்டு பேரும் வெளியே போங்க.” என்றான்.

அந்த ஆள்கள் இருவரும் காசியப்பனை நோக்க, இனி போலீஸ்காரன் இஷ்டப்படி தான் எல்லாம் என்று காசியப்பனுக்குப் புரிய, தலையசைவில் அவர்களுக்கு அனுமதி அளிக்க, என்ன நடக்கிறது? என்ற கேள்வியுடன் அவர்கள் இருவரும் வெளியே சென்றனர்.

“அந்த நிலம் யாரோடது..இப்போ யாருக்கு சொந்தம்னு எந்த விவரமும் எனக்கு வேணாம்..நீ அந்த ஆள்கிட்டேயிருந்து நிலமா எடுத்துக்குவேயோ இல்லை பணமா புடுங்கிக்குவேயோ அது எனக்கு தேவையில்லாதது..ஆனா அந்த நிலத்துக்காக என் மாமனார் கொடுத்தது எனக்கு வந்து சேரணும் இப்போவே.” என்றான் ஷண்முகம்.

‘நான் எதுக்கு உனக்குப் பணம் கொடுக்கணும்? பாண்டியன் எவனுக்கும் பணம் கொடுக்கலை..நிலமெல்லாம் வாங்கலை’ என்று மறுத்துப் பேசினால் அவன் செய்த ஏமாற்ற வேலையை ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடுமென்பதால் அவனது வாயைத் திறக்கவில்லை காசியப்பன். அதே சமயம் அவனிடமிருந்து பணத்தைப் பெறாமல் ஷண்முகவேல் அவனை விடப் போவதில்லை என்று புரிய, பணத்தைக் கொடுத்து விடுவது தான் புத்திசாலித்தனமென்று உணர்ந்த காசி,”சரி..நீங்க சொல்ற மாதிரி அந்த ஆள்கிட்டேயிருந்து எப்படி வாங்கிக்கணுமோ அப்படி நான் வாங்கிக்கறேன்..உங்களுக்கு சேர வேண்டியதை கொடுக்க அரைமணி நேரம் கொடுங்க.” என்று பெரிய உபகாரம் செய்வது போல் பேசினான்.

“ஒரு மணி நேரம் எடுத்துக்க..கரெக்ட்டா இருபது லட்சம் வரணும்.” என்றான் ஷண்முகம்.

“இருபதா? பத்து தானே..” என்று ஆரம்பித்த காசியப்பனிடம்,

“மறுபடியும் வாயைத் திறந்த இருபத்தி அஞ்சாகிடும்.” என்று ஷண்முகம் மிரட்ட, அச்சத்துடன் காசியப்பனின் எதிர்வினைக்காக வீட்டினர் அவனை நோக்க, அவனோ தலைகுனிந்தபடி அவனது கைப்பேசியில் பிஸியானான்.

அடுத்த வந்த நிமிடங்களில் சிலருக்கு கைப்பேசி அழைப்பு விடுத்து பணத்திற்கு ஏற்பாடு செய்து அந்தப்  பணத்தை எடுத்து வர அவனது ஆள்களை அனுப்பி வைத்து அது வந்து சேரும் வரை பணயமாக அங்கே அமர்ந்திருந்தான். அவர்களிடம் பணம் வாங்க வந்தவன் இப்போது அவர்களுக்கு இருபது லட்ச ரூபாய் கொடுக்கப் போவது எதற்காக என்று வீட்டில் இருந்தவர்களுக்குப் புரியவில்லை.

பணத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்த போது செல்வத்தின் வருங்கால சம்மந்தி, மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் தம்பியோடு வீடு வந்து சேர்ந்தார் செந்தில்.