அத்தியாயம் – 46-1

ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க,

சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.” என்று பதிலளித்தான்.

செல்வத்தின் கையை உதறி விட்டு,“டேய் என் ஃபோனை கொடு டா.” என்று அடியாளிடமிருந்து அவனது கைப்பேசியைப் பெற்றுக் கொண்டவன், அழைப்பு விடுக்க வேண்டிய நபரின் இலக்கைத் தேடியபடி,”என்னை என்னென்னு நினைச்ச..இந்தச் சுற்று வட்டாரத்திலே கல்யாணத்திலேர்ந்து கருமாதி வரை, பெயர் வைக்கற விழாலேர்ந்து பூபெய்தின விழா வரை எல்லாம் என்னோட ஆசிர்வாதத்தோட தான் நடக்கும்..துபாய், சிங்கப்பூர், மலேசியான்னு கிழக்கு, மேற்கு இரண்டு திசைலேயும்  எனக்கு ஆள் இருக்குடா..இதோ இங்கே இருக்கற தில்லிலேர்ந்து வந்து என்கிட்டேயே தில்லு காட்டறேயா..திஹாரே என்னோட ஆள் கீழே தான் டா இருக்கு..உன்னை நேரே இங்கேயிருந்து அங்கே அனுப்பி வைச்சு சென்னைக்காரனை தில்லிக்காரனா மாத்தறேன் பார்.” என்ற காசியப்பனின் மிரட்டலைக் கேட்டு விநாயகம், செல்வம் இருவரும் பதறிப் போயினர். 

லேசாக நெஞ்சைத் தடவியபடி அமர்ந்திருந்த் விநாயகத்தை பார்த்த ஷண்முகம்,”தாத்தா, என்ன செய்யுது? எதுக்கு நெஞ்சை தடவிட்டு இருக்கீங்க?” என்று விசாரிக்க, அதைக் கேட்டு அறையினுள்ளே இருந்த மதி, ஜோதி இருவரும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர்.

“ஒண்ணுமில்லை ப்பா, அங்கே ஒரு மாதிரி இருந்திச்சு..தண்ணீர் குடிச்ச சாரியாகிடும்” என்றார்.

“சித்தி, தாத்தாக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுங்க.” என்று கட்டளையிட்டவன் அப்படியே ஜோதியிடம்,”மாமி நம்ம வீட்டுக்கு முக்கியமான விருந்தாளி வரப் போறாங்க..சாய், பானிக்கு ஏற்பாடு செய்யுங்க.” என்றான்.

ப்ரேஷர் குக்கர் சூழ்நிலையில் கூலாக இருந்தவனை வியப்புடன் பார்த்தனர் வீட்டினர். இந்த நேரத்திலே முக்கியமான விருந்தாளியா? யார் அந்த விருந்தாளி? என்று அவனிடம் கேட்க யாருக்குமே தைரியம் வரவில்லை. வீட்டினர் மனத்தில் ஓடிக் கொண்டிருந்த கேள்வியை உணர்ந்தாலும் அந்த விருந்தினர் யாரென்று சொல்லாமல் அவனது கைப்பேசியில் மெஸேஜ் தட்டிக் கொண்டிருந்தான் ஷண்முகம்.

ஒரு காதை இங்கே இரவல் கொடுத்திருந்ததால் அந்தத் தகவலைக் கேட்டு காசியப்பனுக்கு இரத்தக் கொதிப்பு உண்டானது. ‘என்னை விட முக்கியமான விருந்தாளி யாரா இருக்குமென்று’ யோசித்தபடி, அவனது அழைப்பு ஏற்கப்பட்டவுடன் கைப்பேசிக்கு கடன் கொடுத்திருந்த செவியைத் தீட்டிக் கொண்டான். அந்தப் புறத்திலிருந்து பேசியது எதுவும் இங்கே இருந்தவர்களுக்கு கேட்கவில்லை. அதனால் செல்வமும் விநாயகமும் காசியப்பனையே அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சமையலறையிலிருந்து குடி நீரோடு திரும்பிய மதியை அச்சம் கவ்விக் கொண்டது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சினேகா.

நீர் அருந்திக் கொண்டிருந்த விநாயகத்திடம்,”வரட்டும்..எவன் வேணும்னாலும் வரட்டும்..வந்து வேடிக்கை பார்க்கட்டும்..இப்போ உங்களுக்கு நெஞ்சு வலிக்க ஆரம்பிச்சிருக்கு..அடுத்து வரிசையா எல்லோர்க்கும் ஆகப் போகுது..அயோவ் செல்வம் உன் பொண்ணு கல்யாணத்தை நீ கண்ணாலே பார்க்கப்  போகறதில்லை..ஏன்னா அது நடக்கப் போகறதில்லை..எழுதி வைச்சுக்கோ.” என்று கத்தியபடி அவனது கைப்பேசியைக் காதருகில் கொண்டு போய்,”சொல்லு மாணிக்கம்…கேட்டிட்டு இருக்கேன்.” என்றான். அதன் பின் காசியப்பன் ஒரு வார்த்தை பேசிவில்லை, கைப்பேசியில் சொன்னதைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.  

சில நொடிகள் கழித்து அவனது கைப்பேசியிலிருந்து தலையை உயர்த்திய ஷண்முகவேல் அவனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த காசியப்பனிடம்,”ஷண்முகவேல்..ஹோம் மினிஸ்ட்ரி.” என்று சத்தமாக, கைப்பேசியின் அந்தப் புறத்தில் இருப்பவனுக்கும் கேட்கும்படி சொல்ல, அந்தப் புறத்திலிருந்து வந்த எதிர்வினைக்கு,’ஆமாம்..ஆமாம்’ என்று பலமாகத் தலையசைத்து விட்டு அழைப்பைத் துண்டித்த காசி,”நீ எம் பிக்கு கூஜா தூக்கறவனா இருந்தாலும் சரி மத்திய அமைச்சரை மடிலே கட்டிட்டுக்கிட்டு திரியறவனா இருந்தாலும் சரி எவனும் உன்னைக் காப்பாத்த முடியாது..

உன் இடத்தை நிரப்ப உன்னைப் போல ஆயிரம் பேர் இருப்பானுங்க..யார் பின்னாடி ஒளிஞ்சுக்கலாம்னு நினைக்கறேயோ அவனுங்க தான் உன்னை போலீஸ்க்காரான்கிட்டே காட்டிக் கொடுக்கப் போறானுங்க..உன்னோட தலைவன் எவனா இருந்தாலும் அவனுக்கும் இருக்கு..இந்த நொடிலேர்ந்து போலீஸ்க்காரன் கண்காணிப்புலே வந்திட்டான்..இனி அவன் அவ்வளவு தான்.” என்று கத்திக் கொண்டிருந்த காசியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஷண்முகத்தின் மனத்தில் ஒரு நொடி மதன் ஸரின் முகம் வந்து போனது.

இந்தப் பாதையில் தான் இந்தப் பிரச்சனை பயணிக்கப் போகிறதென்று அவன் ஏற்கனவே யுகித்து வைத்திருந்ததால் அதை எப்படிக் கையாள வேண்டுமென்று திட்டமிட்டு அது போல் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அதில் ஒரு சின்ன மாற்றம் இப்போது தேவைப்பட்டது. லோக்கல் போலீஸோடு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருந்தவனை தில்லியில் இருக்கும் போலீஸ்காரனோடு காசியப்பன் கோத்து விட,‘நாம நினைச்சதை விட நல்லபடியா முடியப் போகுது’ என்று ஆசுவாசமடைந்து அந்தத் தகவலை மதனிடம் பகிர்ந்து கொண்டான். 

இப்போது மெடிக்கல் லீவில் மதன் சர் பெங்களூரில் இருக்கிறார். அவர் விடுமுறையில் இருந்தாலும் சரி நாட்டின் எந்த மூலையில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரி தற்போதைக்கு அவன் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் அவரிடம் தான் இருக்கிறது. இங்கே நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை சுருக்கமாக விளக்கி, அவனைப் பற்றிய தகவல் சேகரிப்பு திஹாரில் பணிபுரியும் தமிழ் நாடு போலீஸ் அதிகாரி ஒருவர் மூலம் நடந்து கொண்டிருப்பதையும் அவருக்கு அனுப்பி வைக்க, தொடர்பில் வந்த மதன்,’என்ன செய்யலாம்?’ அவனிடமே கேட்க,’சுத்த விடுங்க’ என்று இவன் பதில் அனுப்ப,’செய்திடலாம்..நீ கல்யாண இரவை என்ஜாய் பண்ணு..இங்கே வரும் போது இதைப் பற்றி பேசலாம்.’ என்று மெசேஜ் அனுப்பி விட்டு தொடர்பைத் துண்டித்திருந்தார் மதன். 

காசியப்பனின் மிரட்டலைக் கன்னத்தில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த ஷண்முகத்தையும் அவனை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவையும் தவிர கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு பீதி ஏற்பட்டது. கணவனின் இன்னொரு கன்னத்தில் முத்தமிட மனைவிக்கு பேராவல் உண்டாக,’பொறு..பொறு..எங்கே போகப் போகுது இந்தச் சாமி? எந்தச் சாமியா இருந்தாலும் இராத்திரி பள்ளியறைக்கு வந்து தானே ஆகணும்.’ என்று அவளது ஆவலை அடக்கிக் கொண்டு, அடக்கமாக கைகளைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள். 

“அன்னைக்கு உன் மகளோட நிச்சயத்தை நிறுத்தியிருந்தா இன்னைக்கு உனக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்குமா? இரு இவனை முடிச்சிட்டு உன்கிட்டே வரேன்..முதல்லே உன் சம்மந்திக்கு ஃபோன் போட்டு உன் மக கல்யாணத்தை நிறுத்தறேன்..இந்த மாப்பிள்ளை மட்டுமில்லை இந்த வட்டாரத்திலே எந்த மாப்பிள்ளையும் அவளைக் கட்டப் போகறதில்லை..கல்யாணம் ஆகாத மகளை நினைச்சு கவலைலே உன் காலத்துக்கு முன்னே நீ போய்ச் சேரப் போற..எங்கே உன் தம்பி? அவனை..” என்று காசியப்பன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்,

என்னவோ அவனைத் தான் கேள்வி கேட்டது போல், கன்னத்தில் இருந்த கையை அகற்றி, நிமிர்ந்து அமர்ந்து, சாவதானமாக,“செல்வம் சித்தப்பாவோட சம்மந்தியை அழைச்சிட்டு வர அவரை அனுப்பியிருக்கேன்..நீ கிளம்பறத்துக்குள்ளே வந்திடணும்..அன்னைக்கு நிச்சயத்திலே நடந்ததுக்கும் வனிதாக்கும் எந்தச் சம்மந்தமில்லைன்னாலும் அந்த வீட்டு பொண்ணு ஆனப் பிறகு அவளை யாரும் குறை சொல்லிடக் கூடாதுன்னு தான் சம்மந்தியைக் கூட்டிட்டு வரச் சொன்னேன்..

எங்க வீட்டு விஷயத்தை அவர் முன்னாடி கொண்டு போயிட்ட நீ, அவர் முன்னாடி நீ இதை முடிச்சு வைச்சா தான் எங்களுக்கு மரியாதையா இருக்கும்..எங்க வீட்டுப் பொண்ணும் புகுந்த வீட்லே தலை நிமிர்ந்து இருக்க முடியும்..இந்த வீட்டுச் சம்மந்தி ரொம்ப முக்கியமான விருந்தாளி அவரை நல்லா கவனிச்சு அனுப்பணுமில்லே அதான் டீ, காப்பிக்கு ரெடி பண்ண சொன்னேன்.” என்று ஷண்முகம் சொன்னதைக் கேட்டு, வனிதாவின் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைய அவன் எடுத்திருக்கும் முயற்சியைப் பார்த்து வீட்டினர் அனைவரும் உறைந்து போயினர். அவர்களுக்கு மாறாக கொதி நிலைக்குப் போன காசி,

“டேய்.” என்று ஷண்முகத்தை நோக்கி பாய, மைக்ரோ அசைவு கூட இல்லாமல் அதே இடத்தில் அய்யனார் சாமி போல் அமர்ந்திருந்தான் ஷண்முகம். 

காசியப்பனின் அடியாட்கள் இருவரும் இருப்புறத்திலிருந்து. அவனை இறுகப் பற்றியபடி,”விடுங்க அண்ணே…ஒரு கைப்பேசி அழைப்புலே அவன் சோலி முடியப் போகுது..எதுக்கு உங்க கையை அசிங்கப்படுத்திக்கிட்டு.” என்று அவனை அடக்கியவர்களுக்கு தெரியவில்லை அந்த ஒரு கைப்பேசி அழைப்பு அவர்களின் சோலியை முடிக்கப் போகிறதென்று.

“விடுங்க டா” என்று அவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்ட காசியப்பன் அந்த நொடியே மீண்டும் மாணிக்கத்திற்கு அழைப்பு விடுக்க, அழைப்பு துண்டிக்கப்பட, மீண்டும் அழைக்க, அந்த அழைப்பும் துண்டிக்கப்பட காசியப்பனின் முகம்  ஆத்திரத்தில் சிவக்க,”எதுக்கு அவசரப்படறீங்க? உங்களோட மாணிக்கத்துக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க..இப்போ அவர் கண்ணெதிர்லே இருக்கறதையெல்லாம் பார்த்து பெரிய குழப்பத்திலே இருப்பார்.” என்று தில்லியில் நடந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஷண்முகம் பதிலளிக்க, சச்சரவு ஆரம்பிக்கும் முன் மனத்தில் உணர்ந்த கலவரம் மீண்டும் காசியப்பனை ஆட்கொண்டது. இந்தமுறை அதை முழுமையாக உதற முடியாமல் அவனெதிரே அமர்ந்திருந்த ஷண்முகத்தை நோட்டமிட்டான்.

அவன் போலீஸாகக் இருக்கக்கூடுமென்று அவனைப் பார்க்கும் யாருக்கும் தோன்றாதபடி இருந்தது ஷண்முகத்தின் தோற்றம். உயரம், உடலமைப்பு ராணுவக்காரன் போல் கச்சிதமாக இருந்தாலும் இப்போது அவனது தோற்றம், பாணி இரண்டும் சராசரி இளைஞன் போல் இருந்ததால் பாண்டியனைப் போல் பாண்டியனின் மாப்பிள்ளையும் கிளார்க் தான் என்று தப்புக் கணக்குப் போட்டான் காசியப்பன். அப்படியே பெரிய பின்புலம் இருந்தாலும் அது அரசியல் பின்னணியாக தான் இருக்கக்கூடுமென்று தவறாக கணித்தித்தான். அவன் பார்த்த போலீஸ், அவனது பட்டியலில் இருக்கும் போலீஸ் அதாவது அதிகாரியிலிருந்து அடிமட்டம் வரை ஒருவர் கூட ஷண்முகத்தைப் போல் இருக்கவில்லை. எனவே ஷண்முகம் போலீஸாக இருக்கக்கூடுமென்ற சந்தேகம் எள்ளளவு கூட வரவில்லை. ஷண்முகத்தைப் பற்றி காசியப்பனின் கணிப்பு தவறாக இருக்க அதே சமயம் காசியப்பனைப் பற்றி அதாவது போலீஸை வைத்து தான் மிரட்டுவான் என்ற ஷண்முகத்தின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது.

அப்போது காசியப்பனின் கைப்பேசிக்கு,’நீ கையை விட்டிருக்கறது எறும்பு புற்று இல்லை பாம்பு புற்று.’ என்ற மெசேஜ் மாணிக்கத்திடமிருந்து வந்து விழுந்தது. அதைப் பார்த்து காசியப்பனுக்கு குலைநடுங்கியது. நொடிப் பொழுதில் அதை மறைத்த அந்த கைதேர்ந்த கேடி அந்தச் சூழ்நிலையிலிருந்து சேதாரமில்லாமல் தப்பிக்க, அவனது கைப்பேசியைப் பார்த்தபடி,”செல்வம், மீதி பணத்தைக் கொடுக்கறதா வேணாமான்னு உங்க வீட்டு மனுஷங்களோட பேசி நீ ஒரு முடிவுக்கு வர்றவரை என்னாலே இங்கே உட்கார்ந்திட்டு இருக்க முடியாது…அவசர வேலையா நான் போகணும்..இவன் கைலே கொடுத்து விடு..விடியறவரை கூட காத்திருப்பான்.” என்று அவனுடைய அடியாள் ஒருவனை கை காட்டி விட்டு அவனுள்ளே இருந்த அச்சத்தை வெளியிடாமல் கெத்தாக எழுந்து நின்றான் காசியப்பன்.

காசியப்பனின் மிரட்டலில் கதி கலங்கி போயிருந்த செல்வத்திற்கு அந்தத் தீர்வைக் கேட்டு அவரது உடல் முழுவதும் உயிர்மூச்சு பாய்ந்தது போல் இருந்தது. காசியப்பன் சென்றதும் எப்படியாவது ஷண்முகத்தைச் சரிகட்டி அந்தப் பணத்தை காசியின் ஆளிடம் கொடுத்து விடலாமென்று அவர் திட்டமிட, அவனது ஆள் காட்டி விரலை காசியப்பனை நோக்கி நீட்டி, மிக லேசாக மேலும் கீழுமாக ஆட்டி, ‘உட்கார்’ என்று சைகையில் ஆர்டர் செய்த ஷண்முகம்,”திருப்தியா இல்லை.” என்றான்.