அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான் ஷண்முகவேல். சினேகாவின் மாமாக்கள் இருவரும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். வரவேற்பறையை ஒட்டி இருந்த சின்ன அறையில் அவளுடைய அம்மா ஜோதி, சின்ன மாமி மதியழகியோடு அமர்ந்திருந்தாள் சினேகா. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்று விட்டார் பெரிய மாமி மீனாட்சி. அவர்களோடு செல்ல ஷிக்கா மறுக்க வேறு வழியில்லாமல் அவளோடு மனோகரும் சென்றிருந்தான். ஷண்முகவேலின் உறவினர்கள் அனைவரும் விஜயா உள்பட சற்றுமுன்னர் தான் சென்னைக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர். சினேகாவின் சித்தப்பா, அத்தை குடும்பத்தினர் முகூர்த்த சாப்பாடு முடிந்தவுடன் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அங்கேயிருந்த அப்படியே சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர்.
விநாயகம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஷண்முகம். எதேர்ச்சையாக தான் அவனிடம் இந்த விஷயம் வந்தது. சினேகாவின் கழுத்தில் அவன் தாலி கட்டியவுடன் கதறி அழுத ஜோதி,”இதுக்கு தான் இத்தனை நாளா காத்திட்டு இருந்தேன்..உங்க கைலே இவளைப் பிடிச்சுக் கொடுத்ததிலே பாதி நிம்மதி கிடைச்சிருக்கு..சாயங்காலம் தான் எனக்கு முழு நிம்மதி கிடைக்கும்.” என்று சொல்ல,’முழு நிம்மதி கிடைக்க சாயங்காலம் என்ன நடக்கப் போகுது?’ என்ற கேள்வி வந்தது அவனுள். அதற்கு விடையைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் விநாயகம் தாத்தாவே அவனை அவரருகில் அமர்த்தி விஷயத்தை சொல்லி விட்டு, இறுதியில்,”என்னை வைச்சு தான் முதல் தொகையை கொடுத்தாங்க கடைசி தொகையையும் என்னை வைச்சுக் கொடுத்திட்டா பிரச்சனை மொத்தமா முடிஞ்சிடும்.” என்றார்.
“கடன் அமௌண்ட் எத்தனை தாத்தா?” என்று விசாரித்தான் ஷண்முகம்.
“பத்து லட்சம்.” என்றார் விநாயகம்.
“வட்டி எவ்வளவு?” என்று கேட்க,
“அதெல்லாம் எதுவும் வாங்கலை..அசலைத் தான் திருப்பிக் கொடுக்கறோம்..அஞ்சு வருஷம்னு சொல்லி ஏழாகிடுச்சு.” என்றார்.
“கடன் பத்திரக் காப்பி யார்கிட்டே இருக்கு?” என்று கேட்க, விநாயகம் அவருக்கு தெரிந்த விவரத்தை சொல்ல, அது ஷண்முகத்திற்கு திருப்திகரமாக இல்லை. அடுத்து அவன் கேட்ட கேள்விகளுக்குப் ஆண்களிடம் பதில் இல்லாமல் போக, அவனது சந்தேகங்கள் அதிகமாக, அதைத் தீர்க்க அறையில் அமர்ந்திருந்த பெண்களும் வரவேற்பறைக்கு வந்தனர். அதன் பின் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயம் சொல்ல, இறுதியில்,”ஒரிஜனல் பத்திரத்தை யாரும் பார்க்கலை..பத்திரம் காப்பி கூட யார்கிட்டேயும் இல்லை..எதை வைச்சு சினேகாவோட அப்பா கடன் வாங்கியிருக்கார்னு சொல்றீங்க?” என்று ஜோதியின் உடன்பிறந்தவர்களைக் கேட்க, அவர்களிடம் பதிலில்லை.
சினேகாவுடன் திருமணம் என்று முடிவான பின் ஷர்மாவிடம் அதை அவன் பகிர்ந்து கொண்ட போது,”நல்ல சுபாவம் சர்..சின்ன பிள்ளையா பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு இருந்த போதே எங்களுக்கு சினேகாவைத் தெரியும்..அவங்க அப்பா குணம் ஒரு மாதிரி..ஆனால் நல்ல மனுஷன்..பொய், புரட்டுக் கிடையாது..நேர்மையானவர்.’ என்று பாண்டியனுக்கு சர்ட்டிஃபிகேட் அளித்திருந்தார். எனவே,
“மாமி, சினேகாவோட அப்பா பத்து லட்சம் கடன் வாங்கினார்னு உங்களுக்கு நிச்சயமாத் தெரியுமா?” என்று ஜோதியிடம் கேட்க,
அதற்கு,”அப்பாக்கு கடன் வாங்கறது பிடிக்காது..மனோவோட படிப்பு செலவுக்கு கூட கடன் வாங்கலை.. வேலையை ராஜினாமா செய்து அதிலே கிடைச்ச செட்டில்மெண்ட்லே தான் அவனைப் படிக்க வைச்சார்..அவருக்கு கிடைச்ச பணமெல்லாத்தையும் வைப்பு நிதிலே போட்டு வைச்சிருந்த போது எதுக்கு வெளி ஆள்கிட்டே கடன் வாங்கணும்? அவர் வாங்கியிருக்க மாட்டார்னு அப்போலேர்ந்து நான் சொல்றேன் அம்மா கேட்க மாட்டேங்கறாங்க.” என்று அவளது கருத்தை வெளியிட்டாள் சினேகா.
“என்னாலே நிச்சயாம சொல்ல முடியாது மாப்பிள்ளை..கடைக்காக வாங்கின மாதிரி தான் காசியண்ணன் சொன்னார்..வியாபாரம் செய்யற ஐடியா இருந்தது அவருக்கு..கடை பார்த்து வைச்சிருக்கறது பற்றி அவர் என்கிட்டே எதுவும் சொல்லலை..அவரோட குணம் ஒரு மாதிரி..கொஞ்சம் வீம்பு பிடிச்சவர்..மற்றவங்களோட அபிப்பிராயத்தை கேட்க மாட்டார்.” என்று ஜோதி சொன்னதைக் கேட்டு,
“கொஞ்சமில்லை நிறையவே வீம்பு பிடிச்சவர்..ரிடையரான பிறகு ஊரோட வர்றதா திட்டம் போட்டது நிஜம்..ரியல் எஸ்டெட் வியாபாரத்திலே இறங்கணும்னு முடிவு செய்தது உண்மை..எங்கே கடை போட நினைச்சார்? பத்து லட்சம் பெருமானம் உள்ள இடம் எதுங்கற விவரம் இதுவரை எங்க யாருக்கும் தெரியாது…நாங்க இங்கேயே வியாபாரம் செய்திட்டு இருக்கோம், பாண்டியனுக்கும் எங்களுக்கும் பொதுவா தெரிஞ்ச ஆளுங்களும் இருக்காங்க..ஒருத்தர் கூட இந்த மாதிரி கடை பார்த்திருக்கார்னு எங்களுக்குச் சொல்லலை..
பாண்டியனோட காரியம் முடிஞ்ச அன்னைக்கு மொத்த பணத்தையும் எண்ணி வைக்கணும்னு காசியண்ணன் எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்திட்டார்..அப்போ தான் கடன் பற்றி தெரிய எங்களுக்கு தெரிய வந்திச்சு..பணத்தைக் கொடுக்காம ஜோதி தில்லிக்குப் போக முடியாதுன்னு சொல்லிட்டார்..மனோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போயிடுவேன்னு மிரட்டினதும் எங்களுக்குப் பயமாகிடுச்சு..எப்படியோ இரண்டு லட்சம் ரூபாயைப் புரட்டி கொடுத்து மூணு பேரையும் ஊருக்கு அனுப்பி வைச்சோம்..அஞ்சு வருஷத்திலே மொத்தத்தையும் அடைச்சிடறதா தான் பேச்சு..ஜோதியாலே முடியலை..அவளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்..காசி அண்ணனும் ப்ரேஷர் போடலை அதனாலே நாங்களும் கடனைப் பற்றி அவகிட்டே பேசலை..சில மாசங்கள் முன்னாடி என் பொண்ணோட நிச்சயத்திலே வந்து கலாட்டா செய்து கடனை முழுசாக் கொடுக்கலைன்னா கல்யாணம் நடக்காதுன்னு மிரட்டினான்..அதை ஜோதிகிட்டே சொன்னோம்..ஏற்பாடு செய்யறேன்னு சொல்லியிருந்தா..திடீர்னு சினேகா கல்யாணம் கூடி வந்திடுச்சு..தனியா அவளாலே எவ்வளவு தான் சமாளிக்க முடியும்?அதான் கல்யாணத்தை நாங்க நடத்தி வைக்க, கடனை ஜோதி அடைக்கறா.” என்றார் செல்வம். அவரைத் தொடர்ந்து,
அதற்கு,”அப்போவே மொத்த பணத்தையும் நான் கொடுக்கறேன் கடனை அடைச்சிடலாம்னு சொன்னேன் ஜோதி ஒத்துக்கலை.” என்றார் விநாயகம்.
“அது எப்படி சரி ஆகும் மாமா? என் புருஷன் பட்ட கடனை நான் தானே அடைக்கணும்..அதே போல என் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க செலவு செய்ததையும் கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்திடுவேன்..என் மருமக இப்போ பெரிய கடை ஆரம்பிச்சிருக்கா..அதிலே நானும் சினேகாவும் பணம் போட்டிருக்கோம்..லாபத்திலே எனக்கும் பங்கு கிடைக்கும்..உங்க கடனை கண்டிப்பா அடைச்சிடுவேன்.” என்றார்.
“வேணாம்னு சொன்னா நீ கேட்கப் போகறதில்லை..அந்தப் பணத்தை உன்னோட இரண்டு மருமகன் பெயர்லே போட்டிடு..என்கிட்டே கொடுத்தாலும் என்னோடது எல்லாம் மதியழகிக்கும் அவளோட பிள்ளைங்களும் தானே.” என்றார் விநாயகம். அப்போது செல்வத்தின் கைப்பேசிக்கு அழைப்பு வர, வெளியே சென்று அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தவர்,
“பணத்தை வாங்கிட்டுப் போக காசியண்ணன் வரப் போறார்..பொண்ணு, மாப்பிள்ளையை எங்கே இருக்காங்கண்ணு விசாரிச்சார்..இங்கே தான் இருக்காங்கண்ணு சொன்னேன்.” என்றார்.
“எதுக்கு விசாரிக்கறார்?” என்று விசாரித்தார் ஜோதி.
“காலைலே தானே கல்யாணம் நடந்திச்சு..ஆசிர்வாதம் செய்ய இருக்கும்.” என்றார் செல்வம்.
“அந்த ஆளோட ஆசிர்வாதம் எனக்கு வேணாம்.” என்று சினேகா சொல்ல,
“எனக்கு வேணும்.” என்ற ஷண்முகத்தை அவள் விசித்திரமாகப் பார்க்க,
“இந்த சுற்று வட்டாரத்தோட பெரியபுள்ளியோட ஆசிர்வாதத்தை வேணாம்னு சொல்லக் கூடாது.’ என்று அவளுக்கு அடவைஸ் செய்தான்.
அடுத்து,”செந்தில் சித்தப்பா ஓர் உதவி வேணும்.” என்று அவரைத் தனியே அழைத்துச் சென்றான். சில நிமிடங்கள் கழித்து ஷண்முகம் மட்டும் வீட்டிற்குத் திரும்ப,”செந்தில் எங்கே ப்பா?” என்று கேட்டார் செல்வம்.
“ஒரு வேலையா வெளியே போயிருக்காங்க..அந்த ஆள் கிளம்பறத்துக்குள்ளே திரும்பி வந்திடுவாங்க.” என்றான்.
“அவன் வராம இருந்தா நல்லா இருக்கும்..தேவையில்லாமப் பேசி பிரச்சனையைப் பெரிசாக்கிடுவான்.” என்றார் செல்வம்.
அதைக் கேட்டு லேசாக புன்னகைத்து, செல்வத்தின் தோள் மீது கையைப் போட்டு,”வரட்டும் உங்க தம்பி..நீங்க சொன்னதை அப்படியே அவர்கிட்டே சொல்றேன்..அப்புறம் தெரியும் உங்களுக்கு.” என்று அவரை செல்லமாக மிரட்டினான்.
“என்ன ப்பா நீ இப்படி என்னைப் போட்டுக் கொடுக்கற? எப்போலேர்ந்து என் மேலே இத்தனை காண்டு.” என்று செல்வமும் செந்திலின் எதிர்வினைக்குப் பயந்தார் போல் நடிக்க,
அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மதியழகி,”பெரிய மாமா..அவங்க நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்று எச்சரிக்கை செய்ய,
“நாங்க இரண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் போல பேசிக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா? செந்தில் சித்தப்பாவும் எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான்..அதான் நான் சொன்னவுடனே உங்ககிட்டே கூட சொல்லிக்காம வெளியே கிளம்பிப் போயிட்டார் சித்தி.” என்று மதியிடம் வம்பு செய்ய, அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த மதி ஜோதியின் புறம் பார்வையைத் திருப்ப, ஜோதிக்கும் ஷண்முகத்தின் பேச்சு புதிராக இருந்ததால் மாப்பிள்ளையைக் கேள்விக்குறியோடு நோக்க,
“யெஸ் அண்ட் நோ..இங்கே உட்கார்ந்தா ரசிக்க முடியாது..நீங்க மூணு பேரும் உள்ளே இருங்க..நான் கூப்பிடும் போது வந்தா போதும்.” என்று சினேகாவை அறைக்கு அனுப்பி வைத்த விட்டு விநாயகத்தின் புறம் திரும்பி,”கல்யாணத்திற்கு எத்தனை செலவு செய்தீங்க?” என்று கேட்டான்.
“அந்த விவரமெல்லாம் எதுக்கு ப்பா?” என்று சங்கடப்பட,
“சொல்லுங்க தாத்தா.” என்றான் ஷண்முகம்
“நகை நட்டு, பட்டு உடுப்புன்னு பதினைந்து ஆகிடுச்சு..கல்யாணச் செலவு பெரிசா இல்லை..ஒரு லட்சம் போல ஆச்சு.” என்றார்.
அப்போது வாயிலில் ஆரவாரம் கேட்க,”வந்திட்டார் போல..ஜோதி பணத்தை எங்கே வைச்சிருக்க? என்று கேட்டார் செந்தில்.
“வந்து இறங்கினவுடனேயே என்கிட்டே கொடுத்திட்டா..சாமி அறைலே வைச்சிருக்கேன்.” என்றார் வி நாயகம்.
காசியப்பனை வரவேற்க வாசலுக்கு செல்வம் செல்ல, வாயிலை பார்த்தபடி இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான் ஷண்முகம்.
அடியாட்கள் இருவருடன் வீட்டிற்குள் வந்த காசியப்பனை மர சோஃபாவில் அமர்ந்திருந்த ஷண்முகம் லட்சியம் செய்யவில்லை. அவனது கைப்பேசியில் தீவிரமாக இருந்தான். செல்வம் தான் காசியப்பனை நாற்காலியில் அமர வைத்து,”என்ன சாப்டறீங்க?” என்று உபசரணை செய்தது.
அதற்குப் பதிலளிக்காமல்,“ஐயா எப்படி இருக்கீங்க? முன்னே போல உங்களை பார்க்க முடியறதில்லையே? மகளோட தான் இருக்கீங்கண்ணு நினைச்சேன்..இங்கேயா இருக்கீங்க?” என்று விநாயகத்தை விசாரித்தான் காசியப்பன்.
“சுகமா இருக்கேன்..மதியோட தான் இருக்கேன்..வயசாகிடுச்சுயில்லே வெளியே போகறது குறைஞ்சிடுச்சு..செல்வமும் செந்திலும் தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கறாங்க.” என்றார் விநாயகம்.
அந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்த காசியப்பன்,”இந்த வீடு யார் பொறுப்புலே இருக்குது?” என்று கேட்டான்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல பிடிக்கவில்லை என்றாலும்,”நாங்க தான் பார்த்துக்கறோம்..அதான் திடீர்னு கல்யாணம் முடிவானதும் ஹோட்டல். லாட்ஜுன்னு அலையாமமாப்பிள்ளை வீட்டு ஆளுங்களை இங்கேயே தங்க வைச்சிட்டோம்.” என்று பதிலளித்து விட்டு அப்படியே,”இவர் தான் ஜோதியோட மாப்பிள்ளை..ஷண்முகவேல்.” என்று ஷண்முகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
தலையை உயர்த்தி காசியப்பனை நேராக பார்த்த ஷண்முகவேல் மீண்டும் கைப்பேசியோடு ஒன்றி விட, காசியப்பனிற்கு கடுப்பானது.
“தம்பி எந்த ஊர்?” என்று விசாரித்தான்.
அதற்காகவே காத்திருந்தது போல் கைப்பேசியை சட்டை பேக்கெட்டில் பத்திரப்படுத்தி விட்டு,”சென்னை” என்றான் ஷண்முகம்.
“சென்னைலே எங்கே?” என்று கேட்டான் காசியப்பன்.
அதற்கு ஷண்முகம் பதிலளிக்கும் முன்,”தில்லிலே வேலை..அங்கே தான் இருக்கார்.” என்றார் செல்வம்.
‘அப்படியா’என்ற பார்வையோடு ஷண்முகத்திடமிருந்து பார்வையைத் திருப்பி செல்வத்தைக் கேள்வியாய்ப் பார்க்க,”இதோ’ என்று சில அடிகள் எடுத்து வைத்த செல்வத்திடம்,
“எங்கே போறீங்க சித்தப்பா? இப்படி வந்து உட்காருங்க.” என்று கொஞ்சம் நகர்ந்து அவர் உட்கார் இடம் அளித்தான் ஷண்முகம்.
தர்மசங்கடத்தில் செல்வம் அங்கேயே நின்று கொள்ள,”என்ன செல்வம், புது மாப்பிள்ளைக்கு நான் யாருன்னு சொல்லலையா? நம்ம விஷயம் தெரியாதா?” என்று கேட்டார்.
“சொன்னாங்க..அது எனக்குத் திருப்தியா இல்லை..இனி நீங்க தான் எனக்குத் திருப்தியா இருக்கற மாதிரி விஷயத்தை சொல்லணும்.” என்று நிதானமானக் குரலில் பதிலளித்தான்.
அதைக் கேட்டு வீட்டை பெரும் அமைதி சூழ்ந்து கொள்ள, அடுத்து என்ன நடக்குமோ என்று வீட்டினருக்கு பயம் வந்தது.
”கடன் பத்திரத்தைப் கண்ணாலே கூட பார்க்காம எப்படி லட்சக் கணக்குலே பணத்தைக் கொடுத்தீங்கண்ணு பேராண்டி என்னைக் கேள்வி கேட்கறான்.” என்றார் விநாயகம்.
உரையாடல் செல்லும் பாதையைப் பார்த்து அறைக்குள் இருந்த மூத்த பெண்மணிகள் இருவரின் அச்சம் அதிகரிக்க, சினேகாவிற்கு சுவாரஸியம் கூடியது.
“பணத்தைக் கொடுத்து பிரச்சனையை முடிக்க விடாமல் இதென்ன மாப்பிள்ளை இப்படிப் பேசறார்? நீங்க இரண்டு பேரும் நாளைக்குக் கிளம்பிடுவீங்க..நானும் தில்லிக்குப் போயிடுவேன்..இவங்கெல்லாம் இங்கே தானே இருக்கப் போறாங்க..வனிதா கல்யாணம் வேற வருது.” என்று ஜோதி புலம்ப,
“மதி மாமி அம்மா புலம்பலை ஒதுக்கிடுங்க..என் சாமி, வீராச்சாமி வேலையை ரசிக்கத் தயாராகுங்க.” என்று பாவனையாக சொல்ல, மதிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
“உன் வாய் மேலே ஒண்ணு போடுவேன்..’சாமி, சாமி’ நு உருகற உன் மாமியார் காதிலே இது விழுந்தா என்ன ஆகும்?” என்று சினேகாவைக் கோபித்துக் கொள்ள,
“அவங்களைப் போலவே அவங்க மகன் மேலே ஆசையா இருக்கேன்னு புரிஞ்சுப்பாங்க.” என்று கண்சிமிட்டி பதில் சொல்ல,
“எப்படி கூச்சமேயில்லாம பேசறா பாருங்க அண்ணி.” என்று மதியிடம் ஜோதி புகார் வாசித்தார்.
“அப்போ என்னையும் அவரையும் ராத்திரி இந்த வீட்லே தங்க வைக்காதீங்க..பொண்ணுக்கு கூச்சமா இருக்குது அவ..” என்ற வாக்கியத்தை முடிக்க விடாமல் அவளது வாயைப் பொத்திய ஜோதி,”போதும்..இனி நான் வாயைத் திறக்க மாட்டேன்..நீயும் திறக்கக் கூடாது.” என்றவுடன்,
“குட்..இனி வெளியே நடக்கப் போற வேடிக்கையை எந்தக் கவலையும் இல்லாமப் பாருங்க.” என்றாள்.
ஷண்முகத்தின் நிதானம் காசியப்பனைக் கலவரப்படுத்தினாலும் அதை வெளியே காட்டாமல்,”என்ன செல்வம் இதெல்லாம்? ஒரு ஃபோன் போட்டேன் புது மாப்பிள்ளை இன்னைக்கு இராத்திரி கம்பி எண்ணிட்டு இருப்பான்.” என்றான்.
அடுத்த நொடி, அவனது கைப்பேசியை காசியப்பனிடன் நீட்டி,”போடுங்க.” என்றான் ஷண்முகம்.
அவ்வளவு தான் காசியப்பனின் கோபம் கட்டுக்கடங்காமல் போக, எழுந்து நின்று வேட்டியை மடித்துக் கட்டி,”என்ன டா நினைச்சிட்டு இருக்க? என்கிட்டேயே விளையாடறேயா?..உன்னோட முத இராத்திரியை நீ மறக்க முடியாத மாதிரி செய்யறேன் பார்.” என்று அவருடைய அடியாள் ஒருவனிடம் கைப்பேசிக்காக கையை நீட்ட, வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு,”வேணாம்..வேணாம்..அந்த மாதிரி எதுவும் செய்திடாதீங்க..பணம் உள்ளே தான் இருக்கு..கொண்டு வரேன்.” என்று கெஞ்சினார் செல்வம்.
ஷண்முகம் இந்த அளவிற்கு போகக் கூடுமென்று அவர் துளி கூட எதிர்பார்க்கவில்லை. மூன்று நாள்கள் இல்லை சரியாக சொல்லப் போனால் இரண்டு நாள்கள் முன்பாக மாப்பிள்ளையாக அறிமுகமானவனை இந்தச் சூழ்நிலையில் எப்படிக் கையாள்வதென்று அவருக்குப் புரியவில்லை. அவனை அவர் ஏதாவது சொல்லப் போய் தங்கைக்கும் சினேகாவிற்குப் பிரச்சனை வந்து விடுமென்று பயந்து காசியப்பனின் காலில் விழத் தயாரானார்.
“தில்லிலே வேலை செய்தா பெரிய ஆள்ன்னு நினைப்பா உனக்கு? தொலைசிடுவேன்.” என்று ஷண்முகத்தின் முகத்திற்கு நேரே ஆள்காட்டி விரலை அசைத்து மிரட்டினான் காசியப்பன்.
அதற்கு ஷண்முகம் பதிலளிக்கும் முன்,”வேணாம் ப்பா ஷண்முகம்..பிரச்சனைலே மாட்டினா உன் வேலைக்கு கூட ஆபத்தாகிடும்..அரசாங்க வேலைலே இருக்க.” என்றார் விநாயகம்.
அந்தத் தகவலில் ஆனந்தமடைந்த காசியப்பன்,”இங்கே இருக்கற போலீஸ்காரன்கிட்டே சொல்லி உன்னை ஒரு நாள் உள்ளே உட்கார வைச்சு தில்லிலே இருக்கற போலீஸ்காரன்கிட்டே அதைச் சொல்லி உன்னை மொத்தமா முடிக்கறேன்.” என்றான் காசியப்பன்.
அதைக் கேட்டு ஜோதியின் வீட்டினர்க்கு திக்கென்று ஆக, அதுவரை படப்படப்பாக இருந்த ஜோதி நிதானத்திற்கு வந்தார். அவருடைய மாப்பிள்ளை போலிஸ் என்ற விவரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. தில்லியில் அரசாங்க வேலை என்று பொதுவாக தான் சொல்லியிருந்தார். மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள யாரும் ஆர்வம் காட்டவில்லை. மனோவின் திருமணம் போல் இல்லாமல் ‘நம்ம பையன்..பெரியவங்க பார்த்து நடத்தற கல்யாணம்’ என்பதே போதுமானதாக இருந்ததது அவளுக்கு.
காசியப்பனின் மிரட்டல் எப்படி முடியப் போகிறதென்ற அறிந்து கொள்ள ஆவல் எழுந்தாலும் அறையை விட்டு வெளியே வரவில்லை ஜோதி. ஆனால் சினேகாவினால் அறையினுள்ளே அமர்ந்திருக்க முடியவில்லை. கணவனின் கட்டளையை மீறி அறை வாயிலருகே வந்து நின்று வரவேற்பறையில் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மனைவியின் வருகையை உணர்ந்தாலும் அவள் புறம் திரும்பாமல், காசியப்பனைப் பார்த்து,”வாழ்த்துக்கள்.” என்றான் சம்ஹார வேல்.