அது முகத்தில் தெரியாமல் சமாளித்துக் கொண்டவள்,”இதுவரை நீங்க செய்த முயற்சியே போதும்..உங்க கைப்பேசியை என்கிட்டே கொடுங்க..கொஞ்ச நேரத்துக்கு சைலெண்ட்டிலே போட்டு வைக்கிறேன்..தூக்கம் வரலைன்னாலும் கண்ணை மூடி படுங்க..களைப்பு போகும்.” என்று விஜயாவின் கைப்பேசியை வாங்கி சைலெண்ட்டில் போட்டு கட்டில் அருகே இருந்த சிறிய மேஜை மீது வைத்தாள். அப்படியே அவளுடைய கைப்பேசியைக் கைப்பையிலிருந்து எடுத்து அதையும் ஊமையாக்கி,”என்னோடதையும் சைலெண்ட்லே போட்டிட்டேன்..நீங்க விழிக்கற வரை நம்ம இரண்டு பேரையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாது.” என்றாள்.
“வேணாம் கண்ணு..உங்கம்மா ஃபோன் செய்து நீ எடுக்கலைன்னா கவலைலே நேர்லே வந்திடுவா.” என்றார்.
“நான் ஃபோன் எடுக்கலைன்னா மெஸேஜ் போடறது தான் அவங்க வழக்கம்.” என்று சொன்னவளுக்குத் தெரியவில்லை அந்த வழக்கம் இப்போது செல்லுபடியாகதென்று.
உடனே அவளது கையைப் பற்றி,”கண்ணு, நீங்க இங்கே என்னோட இருக்கறது சந்தோஷமா இருக்கு.” என்று சொல்ல,
அவர் பற்றியிருந்த கையை விடுவித்து கொண்டு, அவரருகில் அமர்ந்து, மென்மையாக அவரது நெற்றியைப் பிடித்து விட்டபடி,”இன்னைக்கு இப்படிச் சொல்றீங்க..ஒரு மாசம் கழிச்சு என்ன சொல்வீங்களோ?” என்று வேண்டுமென்றே வம்பு வளர்த்தாள்.
“என்ன கண்ணு இப்படிச் சொல்ற?” என்று விஜயா வருத்தமடைய,
“சும்மா..சும்மா சொன்னேன் அத்தை..ஒரு மாசம் கழிச்சு ‘என் சாமிக்கு ஏத்த ஜோடி நீ மட்டும் தான் கண்ணுன்னு சொல்லப் போறீங்க..இப்போ எல்லாக் கவலையையும் இறக்கி வைச்சிட்டு நிம்மதியாக் கண்ணை மூடி கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்றாள்.
சினேகா சொன்னபடி விஜயா செய்ய, அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியாக கழிய, அவரது நெற்றியை இதமாக பிடித்து விட்டபடி,“உங்க சாமி அவங்க கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவ் எடுத்திருக்கார்?” என்று விசாரித்தாள்.
“நானும் இரண்டு வாரம் தான்.” என்று பதில் அளிக்க, உறக்கத்தை தழுவியிருந்த விஜயாவிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. சில நிமிடங்கள் போல் அவரின் நெற்றியைப் பிடித்து விட்டவள் அப்படியே கண்களை மூடி தலையைக் கட்டிலில் சாய்த்துக் கொண்டாள்.
அவளுக்கும் இரண்டு வாரங்கள் தான் விடுப்பு கிடைத்திருக்கிறது. இருபது நாள்களாவது கொடுத்திருக்க வேண்டுமென்ற ஜோதியின் புலம்பலுக்கு,”நீங்க சொல்ற மாதிரி லீவ் கேட்டா கல்யாணம் செய்திட்டு வீட்லேயே இருந்துக்கோன்னு மொத்தமா அனுப்பி விட்டிடுவாங்க.” என்று அவள் சொல்ல,
“மாப்பிள்ளைக்கு மாற்றலாகிடுச்சுன்னா வேலையை விட்டு தானே ஆகணும்.” என்று ஜோதி பதில் அளிக்க,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” என்று அந்த உரையாடலை முடிக்க பார்க்க,
“உங்கப்பாவோட நான் பாடுபட்டதைப் பார்த்தும் உனக்கு புத்தி வரலை..இந்த ஒரு பதில் போதும் நல்ல புருஷனைக் கெட்டவனாக்க..படிப்பு, வேலை, சம்பாத்தியம்னு எல்லாம் சிறப்பா இருந்தாலும் புருஷன் துணை இல்லைன்னா மரியாதை கிடைக்காது…அது கிடைக்கணும்னா ‘அவங்களைத் தான் கேட்கணும்..அவங்களுக்குத் தான் தெரியும்னு சொல்லப் பழகிக்கோ..ஏற்கனவே தில்லிப் பொண்ணுன்னு உன்னை வேற தரத்திலே தான் வைச்சிருப்பாங்க..உன் வாயை விட்டு அதை மோசமாக்கிக்காத.” என்று மகளுக்கு போதனை செய்து செய்து அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார்.
‘அப்புறம் எதுக்கு தையல் மிஷினோட மல்லுக்கட்டினீங்க? மத்தவங்க கொடுக்கற மரியாதையை நம்பி இருக்க வேண்டியது தானே’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை வெளியே விடவில்லை. அப்பா மீது அவளது அன்பு, பாசம் உண்மையாக இருந்தாலும் அவரது குணத்தினால் அம்மா பட்ட கஷ்டமும் பொய் கிடையாதே. அந்த வயதில் அதை எதிர்க்க, விமர்சிக்க தைரியம் இருக்கவில்லை. ஆனால் அம்மாவின் முயற்சிகளுக்கு துணையாக இருந்திருக்கிறாள். அப்போது தான் எந்தக் காரணத்திற்காகவும் கணவனின் கையை எதிர்பார்க்காமல் சுயமாக, சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற எண்ணம் அவளது அடிமனத்தில் ஆழமாக நங்கூரம் அடித்து உட்கார்ந்து கொண்டது. மனோவின் திருமணத்திற்கு முன் அவளது திருமணத்தை நடத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதை உபயோகித்துக் கொள்ளவில்லை.
வாழ்க்கையை வேறொருவருடன் இணைத்துக் கொள்ளும் முன் தனியாக இந்த உலகத்தை சந்திக்கும் துணிவை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது அவளது கருத்து. கல்யாணத்தினால் ஏற்படும் கணவன், மனைவி உறவு கடைசிவரை தொடரும் என்ற கியாரண்டி அதில் சம்மந்தப்பட்டவர்களால் கூட கொடுக்க இயலாது. திருமணத்திற்குப் பிறகும் கணவன், மனைவி இருவரும் சுயமாக சிந்தித்து செயல்பட சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது அவளது எண்ணம்.
திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றி பலவாறு யோசித்து வைத்திருந்தாலும் அவளுடைய எதிர்காலத்தை நினைத்து கொஞ்சம் கவலையாக தான் இருந்தது சினேகாவிற்கு. அவளுடைய வேலை, அவனின் வேலை, குடும்பம், உறவினர்கள், வாழ்க்கை என்று கல்யாணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பேசும்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. திருமணம் முடிவான பிறகு அவர்கள் இருவரும் இதுவரை பேசிக் கொள்ளவே இல்லை. இன்று விஜயா ஆன்ட்டியின் உபயத்தால் குறைந்தபட்சம் அவர்களின் குடும்பம் பற்றி சிறிதளவாவது விவரம் கிடைத்திருந்ததால் கொஞ்சம் போல் தெளிவடைந்தவள்,’வர்றதும் வரட்டும்..கிணறா இருந்தா என்ன? குளமா இருந்தா என்ன..தண்ணீர் தானே நீந்திடலாம்.’ என்று அவளது திருமண வாழ்க்கையை எதிர்கொள்ள தயாரானாள் நீச்சல் வீராங்கனை.
கண்களை மூடியபடி பலமாக யோசித்துக் கொண்டிருந்ததால் விஜயாவின் கைப்பேசி சிலமுறை ஊமையாக அழைத்து, அதிர்ந்து ஓய்ந்ததை சினேகா உணரவில்லை. அடுத்த சில நொடிகளில் கைப்பையில் இருந்த அவளுடைய கைப்பேசியும் அதிர்ந்தது அவளைப் போய் சேரவில்லை. அவளது எண்ணப் போக்கு எங்கெங்கேயோ சென்று கடைசியில் அன்றைய தினத்தில் வந்து சேர திடீரென்று கண்களைத் திறந்தவள் அவளருகில் அமைதியாக படுத்துறங்கி கொண்டிருந்த விஜயாவை உற்றுப் பார்த்தாள். வெகு ஜாக்கிரதையாக கட்டிலிருந்து எழுந்து கொண்டவள் அவசர அவசரமாக அடுத்த அறையில் அவள் வைத்த பரிசுப் பொருளை இப்போது நிதானமாக சரியான இடத்தைத் தேடி வைக்க முடிவு செய்து, சத்தம் செய்யாமல் தரையில் காலடி வைத்த நொடி, பக்கவாட்டு மேஜையில் இருந்த விஜயாவின் கைப்பேசி அதிர்ந்தது. அதில் தெரிந்த பெயரைப் பார்த்து அவளது இதயம் தடதடத்தது. அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என்று மனது பட்டிமன்றத்தை ஆரம்பிக்கும் முன்னரே கைப்பேசியை எடுத்துக் கொண்டு வேகமாக அறைக்கு வெளியே வந்தவள், அழைப்பை ஏற்று,”ஹலோ” என்றாள்.
அவளது குரலைக் கேட்டு அந்தப் புறம் இருந்தவன் ஊமையாகிப் போனான். அது புரியாமல், அவளது குரல் அவனைப் போய் சேரவில்லையோ என்றெண்ணி, அடுத்திருந்த அவனது அறைக்குள் சென்றவள் சற்று குரலை உயர்த்தி,”காலைலேர்ந்து உங்களோட பேச முயற்சி செய்திட்டு லைன் கிடைக்காம என்னவோ ஏதோன்னு கவலைப்பட்டு தலைவலியை இழுத்து விட்டுக்கிட்டு இப்போ தான் தைலத்தை தடவிட்டிட்டு தூங்கப் போனாங்க அத்தை.” என்று ஒரே மூச்சாக விஷயத்தை சொல்லி முடித்தாள்.
அதற்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை. அதே அவகாசத்தில் அடுத்தடுத்து என்று இடைவெளி இல்லாமல் எழுந்த யெல்ப் (yelp) ஒலி அவளது செவியில் போய் சேர, மனத்தில் அச்சம் பரவ, தொண்டையிலிருந்து வெளியே வராத குரலில்”எங்கே இருக்கீங்க?” என்று அவள் கேட்டது அவளுக்கே கேட்கவில்லை.
மீண்டும் அதே கேள்வியைக் கேட்க துணிவைத் திரட்டிக் கொண்டிருந்த போது,”கிளம்பிட்டேன்.” என்று ஒரு வார்த்தையில் பதிலுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான் ஷண்முகம்.
“கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்னு இதையே எத்தனை தடவை சொல்லிட்டு இருக்க ண்ணா..இனிமேல் என்னாலே காத்திருக்க முடியாது.” என்றாள் ராதிகா.
“கிளம்பிட்டேன் ராதிகா..டிராஃபிக்லே மாட்டிட்டு இருக்கேன்..காரை விட்டிட்டு நடந்து வந்திருந்தா கூட இதுக்குள்ளே வீடு வந்து சேர்ந்திருப்பேன்.” என்றான் வெங்கடேஷ்.
“பத்து நிமிஷத்திலே நீ வரலைன்னாலும் நான் கிளம்பிடுவேன்..நாங்க திரும்பி வர எப்படியும் இராத்திரி ஒன்பது மணியாகிடும்..உங்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்யும் போது எனக்கும் சேர்த்து ஆர்டர் செய்திடு.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் ராதிகா.
வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் குழந்தைகளோடு சேர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த சீதாவிடம்,”அம்மா மெஷின்லே துணி போட்டிருக்கேன்..ஸ்டாண்ட்லே காயப் போடுங்க..பால்கனிலே வேணாம்..பனிலே காயாது..மதியம் சமைச்ச பாத்திரத்தை ஒழிச்சுப் போட்டிடுங்க..காலைலே சீக்கிரமா வருவேன்னு வேலைக்காரி சொல்லிட்டுப் போயிருக்கா..அவ வர்ற நேரத்துக்கு க்ளீன் செய்து போட்டா அவளுக்கு கோவம் வந்திடும்..லீவ் எடுத்துக்குவா..அப்புறம் நீங்க தான் எல்லாம் செய்யணும்..இது என் வீடா இருந்தாலும் மற்ற விஷயத்திலே என் பேச்சைக் கேட்கலைன்னாலும் இதிலேயாவது என் பேச்சை கேளுங்க..நீங்க செய்து வைச்சிருக்கற வேலைன்னாலே இனி எத்தனை இடத்திலே பேச்சு கேட்க வேண்டி வரப் போகுதோ? இப்படியா உங்க பிரச்சனையை சென்னைலேயே முடிக்காம முட்டாள்தனமா இங்கே இழுத்திட்டு வந்து விடுவீங்க..நல்லவேளை உங்க மாப்பிள்ளை வெளிநாட்லே இருக்கார்..இங்கே இருந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ..அவ மகாராணி மாதிரி இருக்கறா நான் தன் வேலைக்காரி மாதிரி அவ ரூமுக்கு மாப் போட்டிட்டு, சாப்பாடை கைலே கொடுத்திட்டு இருக்கேன்..ஆஸ்பத்திரி, வீடுன்னு உங்க மருமகளுக்கு இராஜ சேவை ” என்றவளை இடைமறித்து,
“அவளை மருமகன்னு சொல்லாதே.” என்று சீதா கோபப்பட,
“அப்போ அதுக்கான வேலையை செய்திருக்கணுமில்லே.” என்றாள் ராதிகா.
“எப்போ இன்னொரு வாழ்க்கைன்னு முடிவு செய்தானோ அன்னைக்கே அவ வீட்டு ஆளுங்களைக் கூப்பிட்டு பேசிடுன்னு உன் அண்ணன்கிட்டே சொன்னேன்..என் பேச்சை கேட்கலையே..இப்போ இப்படி ஆகிப் போயிடுச்சு.” என்றார்.
“சென்னைலே இல்லாத ஆஸ்பத்திரியா? எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்து என் தலையை உருட்டறீங்க? ” என்றாள்.
“அன்னைக்கு அவளை அப்படிப் பார்த்து எனக்கு அல்லாம் ஆடிப் போயிடுச்சு..மயக்கத்திலே தான் அவளை உட்கார வைச்சு அழைச்சிட்டு வந்தோம்..கார் சீட்லே அந்தக் கருமத்தை செய்து வைச்சிடுவாளோன்னு பயந்திட்டு இருந்தேன்..அதான் நேர ஆஸ்பத்திரிலே கொண்டு போய் போட்டிட்டு உன் வீட்டுக்கு வந்தோம்..’பெரிய பிரச்சனை எதுவுமில்லை..உடல் தான் பலகீனமா இருக்குன்னு சொன்னதை என்னாலே நம்பவே முடியலை..அவளோட அந்த நிலை அக்கம் பக்கம் அவ சொந்தம்னு அத்தனை பேருக்கும் தெரிய வந்தா மாமியார்காரி நான் தான் ஏதாவது செய்திருப்பேன்னு கிளப்பி விட்டிருப்பாங்க..இத்தனை வருஷமா நல்லா தான் இருந்தா இப்போ இப்படி ஆகியிருக்குன்னா ஏதாவது காரணமிருக்கும்னு அவளுக்கு தான் அனுதாபம் காட்டுவாங்க..உன் அண்ணனுக்கு விவகாரத்து கிடைக்கறது கஷ்டமாகிடும்.” என்றார் சீதா.
அதைக் கேட்டு கொதித்துப் போன ராதிகா,“அறிவுகெட்டதனமா நடந்திட்டு நல்ல வாய்ப்பை நழுவ விட்டிட்டீங்க…அவளுக்கு மனநலம் சரியில்லை அதான் கொஞ்ச நாளா இங்கே இருக்கேன்..திடீர்னு சின்ன புள்ளை மாதிரி படுக்கைலே பாத் ரூம் போயிடறான்னு நீங்களே அக்கம் பக்கத்திலே பத்த வைச்சிருந்தா அதைப் பலவிதமா திரிச்சு அண்ணனுக்கு சாதகமாகி விட்டிருப்பாங்க..இப்போ இங்கே வந்து அவ மகாராணி மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கா..நாம சேவகம் செய்திட்டு இருக்கோம்.” என்றாள்.
அதை மறுத்துப் பேச முடியாமல் அமைதியாக இருந்தார் சீதா. சென்னையிலிருந்து நேரே ராதிகா வீட்டருகில் இருந்த மருத்துவமனைக்கு தான் வசந்தியை அழைத்துச் சென்றனர். பயணம் முழுவதும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக வந்தவள் இன்று வரை அதைக் கடைபிடித்து வருகிறாள். நான்கு நாள்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அனைத்து சோதனைகளும் செய்து, இறுதியில், உடலளவில் ஒன்றுமில்லை என்ற முடிவு தெரிந்த பின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
அவளது உடல் நலக் குறைவு பற்றி அவளுடைய பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டுமென்ற சீதாவின் ஆலோசனையை,”கல்யாணம் ஆனவளுக்கு புருஷன் தான் எல்லாம்..ஆஸ்பத்திரிலே நீட்டின இடத்திலே எல்லாம் நான் தான் கையொப்பம் போட்டேன், கணக்கே இல்லாம பணத்தைக் கொட்டினேன்…அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது..நான் தான் முடிவெடுப்பேன்.”என்று நிராகரித்தான் வெங்கடேஷ்.
ஏற்கனவே செலவு செய்ததை முழுமையாக வசூலிக்கும் முன் மீண்டுமொரு ஆஸ்பத்திரி செலவு என்று கடுங்கோபத்தில் இதுவரை அடக்கி வைத்திருந்ததை, மறைத்திருந்த திருமணமுறிவைப் பற்றிய திட்டத்தை அப்படியேமனைவியிடம் கொட்ட, ஸ்திம்பித்து போனாள் வசந்தி. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிப் போனதில் அனைத்தும் அபத்தமாக தெரிந்தது. அனைவரும் அன்னியமாகத் தெரிந்தனர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தவள் அதன் பின் வெளியே செல்லவேயில்லை. அவள் இருந்த அறையின் வாசலைக் கூடதாண்டவில்லை. எதிலும் ஈடுபாடு இருக்கவில்லை. பசி என்ற உணர்வு அவளைத் தின்றாலும் சாப்பாடு வேண்டுமென்று கேட்க பிடிக்கவில்லை. பட்டினியில் ஏதாவது ஆகி இந்த உலகத்தை விட்டுப் போனால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் அவளை ஆட்டி படைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை முழுமையாகச் செயல்படுத்த துணி இருக்கவில்லை. மாமியாரும் நாத்தனாரும் கொண்டு வந்து கொடுத்த சாப்பாட்டை கையில் எடுத்த நொடி அவளையே வெறுத்தாள் வசந்தி. அந்த நொடி அவெளியேற வேகம் வரும் ஆனால் அதைச் செயல்படுத்த தேகத்திற்கு சக்தி இருக்கவில்லை.
‘என்னோட சக்தி எல்லாம் எங்கே போயிடுச்சு? வியாதி எதுவும் இல்லைன்னு தானே வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க..ஏன் இப்படி படுத்திட்டே இருக்கேன்? எனக்கு என்ன ஆகிட்டு இருக்கு? என்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடி கண்ணீரில் கரைந்து போனாள் வசந்தி. சில சமயங்களில் தவறு அனைத்தும் அவளுடையது என்று தோன்ற அவள் மீதான வெறுப்பு அதிகமானது. அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றாலும் அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்று தெரியவில்லை. அவளது கைப்பேசி வெங்கடேஷின் வசம் இருந்ததால் அவளுடைய அப்பாவிடம் பேச வேண்டுமென்றுநினைத்தாலும் அதைச் செயல்படுத்த அவளால் முடியவில்லை. சில மாதங்களாக கணவனிடம் தெரிந்த மாற்றம் எதனால் என்று அவனாக சொல்லும் வரை புரியாத அவளது முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து மனமும்உடலும் புண்ணானது. அவ்வப்போது அவளது அறைக்குள் வந்து செல்லும் குழந்தைகள் தான் பைத்தியம் பிடிக்காமல் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.
இப்போது கூட வெளியே நடந்த உரையாடல்கள் அனைத்தும் காதில் விழுந்தாலும் ஜடம் போல் படுத்துக் கிடந்தாள் வசந்தி.அன்று ஏன் அவளது உடல் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. மீண்டும் அப்படியொரு சூழ் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உழன்று கொண்டிருந்தாள்.
“நாலு நாள் ஆஸ்பத்திரிலே சொகுசா வைச்சிருந்தாச்சு..இங்கே வீட்லேயும் இராணி மாதிரி உபசாரம் நடக்குது..எனக்குத் தலைவலி மண்டையை பிளக்குது.”என்று சீதா புலம்ப,
“நல்லவேளை படுக்கைலே எதுவும் செய்யறதில்லைன்னு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க..உங்க மாப்பிள்ளை ஊர்லேர்ந்து வர்றத்துக்கு முன்னாடி அவளைப் பற்றி முடிவு எடுங்க..இல்லை இங்கேயிருந்து மூட்டையைக் கட்டுங்க.” என்று அவருக்கு கெடு வைத்து விட்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றாள்.
பெங்களூருக்கு வந்ததிலிருந்து தீராத தலைவலி சீதாவைப் பிடித்திருந்தது. ‘இவளை தூரத்தி விட்டா தான் இந்த தலைவலியும் ஒழியும் போல’ என்று எண்ணியபடி அலமாரியைத் திறந்து தைலத்தை நெற்றியில் தடவிக் கொண்டிருந்தவருக்கு தெரியவில்லை வசந்தியை விரட்டி விட்ட பின் அது பலமடங்காக அதிகரிக்கப் போகிறதென்று.
********
எதிர்பாராத நிகழ்வுகள், சூழ் நிலைகளாலே கதை பக்கம் வர முடியலை. எழுத முடியலை. காத்திருந்தவர்களுக்கு ஒரு பெரிய சாரி. Stay blessed readers.