அத்தியாயம் – 42

‘அம்மாவைப் போல ஆன்ட்டியும் கல்யாணத்தைப் பற்றி கவலைப்படறாங்க..என்ன சொல்லி சமாதானம் செய்ய?’ என்று யோசித்தபடி சினேகா அமர்ந்திருக்க, சினேகாவின் கைப்பேசி ஓசை எழுப்பியது. அழைத்தது ஜோதி தான்.

‘தெருமுனை கூட போயிருக்க மாட்டாங்க அதுக்குள்ளே ஃபோன் செய்யறாங்க’ என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றவள்,”சொல்லுங்க ம்மா.” என்றாள். அதன் பின் சரி, சரி என்று அந்த ஒரு வார்த்தையை மட்டும் பலமுறை சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தவள்,”அத்தை” என்று மெதுவாக விஜயாவை அழைத்தாள்.

“என்ன கண்ணு?” என்று விஜயா கேட்க,

“அம்மா உங்ககிட்டே கேட்க மறந்திட்டாங்களாம்..கல்யாணத்துக்கு உங்க வீட்லேர்ந்து எத்தனை பேர் வருவாங்கண்ணு தெரிஞ்சா ஏற்பாடுகள் செய்ய வசதியா இருக்கும்னு சொல்றாங்க..நாங்கெல்லாம் எங்க மாமா வீட்லே தங்கப் போறோம்..உங்களுக்கும் உங்க வீட்டு ஆளுங்களுக்கும் சின்ன மாமி வீட்லே ஏற்பாடு செய்திருக்காங்க..அந்த வீட்லே விநாயகம் தாத்தா மட்டும் தனியா இருக்கார்..அதனாலே நீங்க எத்தனை பேர் வருவீங்கண்ணு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி அறைகளை சுத்தம் செய்து படுக்கைக்கும் சாப்பாடுக்கும் ஏற்பாடு செய்திடுவாங்களாம்.” என்றாள் சினேகா.

அவர்கள் தரப்பிலிருந்து எத்தனை பேர் என்ற கணக்கு இன்னும் முடிவாகவில்லை. ஜெயந்தியின் குடும்பம் கண்டிப்பாக வருமென்று விஜயா எண்ணியிருக்க,’சித்துக்கு சைக்கில் டெஸ்ட் நடக்குது சித்தி..வர முடிஞ்சாதா வருவோம்.’ என்று குண்டைத் தூக்கிப் போட்டிருந்தாள் ஜெயந்தி. சித்துக்கு மாமா முறை செய்தது ஷண்முகம் தானென்றாலும் அதைச் சொல்லி காட்டி அவளை வற்புறுத்த, கட்டாயப்படுத்த விஜயாவிற்கு தெரியவில்லை. அவர் வற்புறுத்த வேண்டும் கட்டாயப்படுத்த வேண்டுமென்று தான் காத்திருந்தாள் ஜெயந்தி. சித்தி தில்லிக்கு சென்ற பின் அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் அவளுக்கு ஏற்புடையதாகயில்லை. 

சென்னையில் இருந்த போது அவளுடைய மகன் சித்து மீது அவர் காட்டிய பாசம் இப்போது காணாமல் போனது போல் இருந்தது. அதை வைத்து தான் மகனின் கல்லூரி வரை படிப்பு வரை திட்டம் போட்டு வைத்திருந்தாள். சில மாதங்களுக்காக தில்லிக்கு சென்றவர் இப்போது தில்லியில் பிறந்து வளர்ந்த பெண்ணை மகனுக்கு நிச்சயம் செய்ய, இனி அவர் சென்னைக்குத் திரும்பவே மாட்டார் என்று அவளுக்கு தோன்ற, அந்த ஏமாற்றத்தைக் கையாளத் தெரியாமல், நாத்தனாராக தம்பிக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முன்வராமல் முறுக்கிக் கொண்டு  அவளது நிலையை மேலும் மோசமாக்கிக் கொண்டாள். 

அவள் சொன்னதை அப்படியே மகனிடம் விஜயா சொன்ன போது,’சைக்கில் டெஸ்ட் முக்கியும்னு சொன்னா என்ன செய்ய முடியும்? வரலைன்னா விடுங்க..எதுக்கு புலம்பிட்டு இருக்கீங்க?’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளிக்க,’அக்கா முறை டா..நாத்தனார் செய்ய வேண்டியதை பின்னே யார் செய்வா?’ என்று கவலைப்பட்டார் விஜயா.

அதற்கு,’வசந்தி அக்கா வரலையா?’ என்று ஷண்முகம் கேட்க,”அவகிட்டே பேசவே முடியலை..உனக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்குன்னு மெசேஜ் போட்டேன்..சந்தோஷம்..பெங்களூர்லே இருக்கேன்னு பதில் போட்டா..அக்காகிட்டே பேசின போது எப்போ சென்னைக்கு வருவான்னு விசாரிச்சேன்,’சிந்துக்கு பெட் ரெஸ்ட்ன்னு சொன்னதிலிருந்து எனக்கு மூச்சு விட கூட நேரம் கிடைக்கலை…அங்கே போகறது என்ன புதுசா..என்னைக் கவனிச்சுக்கவே நேரமில்லை எங்கேயிருந்து அவளுக்கு ஃபோன் போட்டு விசாரிக்கறது?’ ந்னு சொல்றா.” என்றார். வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லாத மகாவிற்கு இப்போது பெண்டு நிமிர்ந்து கொண்டிருந்ததால் கணவரின் கவலையான முகத்தைக் கூட கவனிக்கத் தவறினார்.

அதைக் கேட்டவுடன் அலுவலக வேலையாக வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவன் அவனது கைப்பேசியை எடுத்து,“வெங்கடேஷ் மாமாக்கு ஃபோன் செய்து பேசட்டு ம்மா?” என்று விஜயாவிடம் கேட்டான்.

“வேணாம்..வேணாம்..கல்யாண மாப்பிள்ளைன்னு கூட பார்க்காம உன்னை ஏதாவது சொல்லிடுவான் சாமி..மாப்பிள்ளை இரண்டுபேர் கிட்டேயும் பேசுங்கண்ணு பெரியப்பாகிட்டே சொன்னேன்..’இங்கேயிருந்து நான் பேசறதை விட நீயே பேசிடு விஜயான்னு’ சொன்னார்..அக்கா, மாமா இரண்டு பேரும் சிந்துவோட டென்ஷன்லே இருக்காங்கண்ணு புரிஞ்சுக்கிட்டேன்..அதனாலே ஜெயந்தி வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு முறையா கல்யாணத்துக்கு அழைச்சேன்..ஜெயந்தி சொன்னதையே தான் அவரும் சொன்னார்..வசந்திகிட்டே முதல்லே பேசிட்டு அப்புறம் அவ வீட்டுக்காரர்கிட்டே பேசலாம்னு நினைக்கறேன்..அவளைப் பிடிக்கவே முடியலை..கல்யாணத்துக்கு நான் அழைச்சா அவளோட மாமியார் ஏதாவது சொல்லுவாங்க..சிந்து கல்யாணத்து போது வசந்தி வீட்டு ஆளுங்களோட ரொம்ப கஷ்டப்பட்டிட்டோம்..இங்கே அவளோட வீட்லே இருந்தாலாவது கொஞ்சமாவது ஃப்ரீயா இருப்பா..அங்கே அவளோட நாத்தனார் வீட்லே எப்போதும் பிஸி தான்..மூணு குடும்பத்துக்கும் சேர்த்து இவ ஒருத்தி தான் உழைச்சுக் கொட்டணும்..அம்மாவும் பொண்ணும் ஒரு கரண்டியைக் கூட நகர்த்த மாட்டாங்க..எப்படியும் இன்னைக்கு நாளைக்கு அவளோட பேசிடுவேன்.” என்றார் விஜயா.

“ஆன்ட்டிகிட்டே பேசி வங்கிக் கணக்கு டீடெயில்ஸ் வாங்கிட்டீங்களா?” என்று கேட்டான்.

“இல்லை சாமி..ஒரு நாள் சினேகாவையும் ஜோதியையும் வீட்டுக்கு கூப்பிட்டு பேசலாம்னு நினைக்கறேன்..இந்த விஷயமெல்லாம் ஃபோன்லே பேசினா சரியா வராது.” என்றார்

“நம்ம செய்ய நினைக்கறதை பணமா கொடுக்கறதுலே என்ன தப்பு ம்மா..அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கட்டும்.” என்றான்.

“புரியுது சாமி..சேலை, நகைன்னு கொடுத்தா நம்ம வீட்டு சீர்னு வாங்கிப்பாங்க..பணமா கொடுத்தா அப்படித் தோணாது.” என்றார்.

ஒரு நொடி யோசித்தவன்,”நான் பேசவா அவக்கிட்டே?” என்று கேட்டான்.

“அதெல்லாம் வேணாம் சாமி..பெரியவங்க நாங்க பேசிக்கறோம்…ஜோதி பிடிவாதமா இருந்தா அண்ணன், அண்ணிகிட்டே சொல்லி புடவையும் நகையும் வாங்கினா போச்சு.” என்றார்.

“வேணாம்..அவளுக்கு ஒண்ணு நீங்க இங்கேயே வாங்கணும்..இல்லை அவ தான் வாங்கிக்கணும்..வேற யாரையும் நடுவுலே அழைச்சிட்டு வராதீங்க.” என்று திட்டவட்டமாக சொன்னான்.

“அக்கா இருந்திருந்தா பிரச்சனையே இல்லை..நான் சொல்றத்துக்கு முன்னாடி அவளே போய் எல்லாத்தையும் அழகா வாங்கி வைச்சிருப்பா.” என்றார் விஜயா.

காலில் ஷுவை மாட்டியபடி,”பெரியம்மா இங்கே இருந்திருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பேன்..சிந்துவுக்கு எப்போ டியு டேட்?” என்று கேட்டான்.

“நாள் இருக்குதுப்பா..ஆனா இரத்தக் கொதிப்பு பிரச்சனை இருக்கறதுனாலே பெட் ரெஸ்ட் சொல்லியிருக்காங்க..நல்லபடியா பிள்ளையைப் பெத்துப் பிழைக்கணும்னு தினமும் வேண்டிட்டு இருக்கேன்..ஆப்ரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்கணும்னா அக்காவும் மாமாவும் அங்கே அதிக நாள் இருக்க வேண்டியதாகிடும்..இங்கேயும் அதுக்கு ஏற்றார் போல சில ஏற்பாடுகள் செய்யணும்னு அக்கா சொல்றா.” என்றார் விஜயா.

“என்ன ஏற்பாடு?” என்று ஷண்முகம் கேட்க,

“வீட்டை சுத்தம் செய்யறது..வாடகை, மின் கட்டணம்னு நிறைய வேலை இருக்கே..வேலைக்கு வரத் தாமதமாகும்னு மாமா அவங்க முதலாளிகிட்டே வேற சொல்லணுமே.” என்றார்.

“பெரியப்பா வேலைக்குப் போறாரா?” என்று கேட்க,

“வேலைன்னு சொல்ல முடியாது சாமி..அப்பப்போ முதலாளி கூப்பிட்டு விடுவார்..ஒரு வாரம் போல வேலை இருக்கும்..கைலே ரொக்கம் கொடுத்திடுவார்..சிந்து கல்யாணத்துக்கு கூட பணம் கொடுத்து உதவி செய்தார்.” என்றார் விஜயா.

அப்போது அனிஷிடமிருந்து அவனது கைப்பேசிக்கு அழைப்பு வர,”கொஞ்சம் வெயிட் பண்ணு வரேன்.” என்று அந்த அழைப்பைத் துண்டித்தவன், பெரியப்பாவின் நிதி நிலை பற்றி விசாரிக்க இதுதான் சரியான சந்தர்ப்பமென்று என்று உணர்ந்து“அம்மா, சிந்துவோட பிரசவ செலவெல்லாம் யார் பார்த்துக்கறா? விக்னேஷ் மாப்பிள்ளையா?” என்று கேட்டான்.

“இல்லை சாமி..தலைப்பிரசவம் தாய் வீடு தானே பார்க்கணும்…அக்கா அவளோட நகை சிலதை வித்திட்டா..சிலதை மாற்றி ஒரு கங்கணம் போல் வாங்கிட்டு போனா..வளைகாப்பு செய்யலைன்னாலும் நல்ல நாள்ளே அதை போட்டு விட்டிட்டா….இங்கே நம்ம ஊர்லேயே பிரசவம் லட்ச கணக்கிலே ஆகுது..அங்கே இன்னும் எவ்வளவு ஆகுமோ.” என்று கவலைப்பட்டார் விஜயா.

அம்மா சொன்னதை காதில் வாங்கிய மகனுக்கு இப்போது அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தொகையை எப்படி திருப்பித் தரப் போகிறார் பெரியப்பா என்ற கேள்வி வர,“பெரியப்பாவுக்கு சொத்து எதுவும் இருக்குதா?” என்று விசாரித்தான். 

“அவங்க ஊர்லே நிலம்புலம் இருக்குது..தரிசா தான் கிடக்குது..இப்போ அந்த இடத்திலே பிளாட் போட்டு விக்கறாங்களாம்..அவரோட பங்கை பங்காளிக்கு கை மாத்தி விட்டிட்டு சிந்துவோட கல்யாணத்துக்கு நான் கொடுத்த பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்திட்டு மிச்சம் மீதியை வைப்பு நிதிலே போட்டு வைக்கலாம்னு திட்டம் போட்டு வைச்சிருந்தார்…சிந்து குழந்தை உண்டாகிடுவான்னு அக்கா, மாமா இரண்டு பேரும் எதிர்பார்க்கலை…ஜெயந்திக்கு கொஞ்சம் வருஷமாச்சு..வசந்திக்கு இன்னும் அந்தப் பாக்கியம் கிடைக்கலை..இவளுக்கு உடனே கிடைச்சிடுச்சு..இப்போ பிரசவ செலவு, வெளி நாட்டுக்குப் போக, வர்ற செலவுன்னு எக்கசக்க செலவு..எப்படிச் சமாளிக்கரார்னு தெரியலை.” என்று சொன்ன விஜயாவிற்கு தெரியவில்லை நிலத்தை விலை பேசி அட்வான்ஸ் வாங்கிய பணத்தில் தான் வெளிநாட்டு பயணம் ஏற்பாடானதென்று.

பெரியப்பாவின் நிதி நிலையைப் பற்றி தெரிந்து கொண்டாலும் அவரது திடீர் பணத் தேவைக்கு காரணம் என்னயென்று கண்டுபிடிக்க முடியாததால்,

“கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பேசணும்னு பெரியப்பா சொன்னாரில்லே ஞாபகமிருக்கா?” என்று விஜயாவிடம் கேட்க,

“ஆமாம் சாமி..என்ன விஷயம் சாமி?” என்று கேட்க,

“பணம் தேவைப்பட்டிச்சு ம்மா அவருக்கு…பெரிய தொகை ம்மா..முக்கால்வாசி அனுப்பிட்டேன்..இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குது..இது விஷயமா உங்கக்கிட்டே பெரியம்மா ஏதாவது சொன்னங்களா?” என்று கேட்டான்.

“அவ காதுக்கு எதுவும் போகாது சாமி..எதிர்பார்த்ததை விட அங்கே நிறைய செலவாகுதோ? அதான் பெரிய தொகையா கேட்டாரோ? மீதியையும் அனுப்பி விட்டிடு சாமி.” என்றார் விஜயா.

“சரி ம்மா.” என்று ஷண்முகம் சொன்னவுடன்,

“கொஞ்சம் தானே பாக்கி இருக்கு சாமி?” என்று வினவ,

“ஆமாம் ம்மா.” என்றான்.

“அப்போ கல்யாணம் முடிஞ்சதும் அனுப்பி விடு சாமி..நமக்கும் கல்யாணச் செலவெல்லாம் இருக்குதே.” என்றவுடன்,”அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்..என்னோட கல்யாணச் செலவு என்னோட பொறுப்பு.” என்று சொல்லி விட்டு ஷண்முகம் கிளம்பிச் சென்று நான்கு நாள்களாகியிருந்தது.

மகனைப் பற்றி யோசித்து கொண்டிருந்த மனத்தை நிகழ்விற்கு அழைத்து வந்து,”நான், சாமி, என் அண்ணன் வீட்லே அஞ்சு பேர், ஜெயந்தி இன்னும் கன்ஃபர்ம் செய்யலை, கடைசி நிமிஷத்திலே வந்து நிப்பான்னு நினைக்கறேன்..அவங்க மூணு பேர்..வசந்தியும் அவ புருஷனும்..பத்து பதினைஞ்சு பேர்..கரெக்ட்டா எத்தனை பேர்ன்னு சொல்லணுமா கண்ணு?” என்று சினேகாவின் கேள்விக்குப் பதில் அளித்தார்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லை..அன்னைக்கு எத்தனை பேர்ன்னு பார்த்திட்டு சாப்பாடு சொன்னா போகுது..நான் பார்த்துக்க்றேன்.” என்று தைரியம் கொடுத்தாள் சினேகா.

“இந்த ஜெயந்தி இப்படி செய்வான்னு நான் நினைக்கவே இல்லை..”என்று ஆரம்பித்து வீட்டு உறுப்பினர்களைப் பற்றி பேசியவர்,”என்னோட கல்யாண வாழ்க்கையைப் பற்றி உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்தேன் கண்ணு..சாமிகிட்டே கூட இங்கே வந்த பிறகு தான் மனசு விட்டு பேசினேன்..அவன் சின்ன பிள்ளையா இருந்த போது நான் அவனை விட சின்ன பிள்ளையா நடந்துகிட்டேன்..சாப்பாடு ஊட்டி விடறது, உடை போட்டு விடறது, பாத்ரூம் அழைச்சிட்டுப் போகறது வரை என்னோட அப்பா, அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க..

என்னோட உலகமா இருந்தவரே உரு தெரியாத அளவுக்கு என்னோட மனசை உடைச்சிட்டார்..ஆரம்பத்திலேயே காதல் தோல்வின்னு உண்மையைச் சொல்லியிருந்த எனக்கு இந்தளவுக்கு பாதிப்பு வந்திருக்காது..விதவை ஆன காதலிக்கு மேலே வந்த கரிசனம் கூட கட்டின மனைவி என் மேலே வரலை..ஷண்முகத்திற்காக என்னோட வாழ தயாரா இருந்தவர் அவனுக்காக அவளை விடணும்னு நினைக்கலை..எல்லாத்தையும் யோசிச்சி எனக்குப் பித்துப் பிடிச்சு போயிடுச்சு..மாத்திரை, மருந்து, மனநல ஆலோசனைன்னு என்னை மீட்டு எடுக்க அஞ்சு ஆறு வருஷமாகிடுச்சு..ஆனாலும் தனியா வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியம் வரலை..அக்கா, அண்ணனோட தான் இப்போவரை இருக்கேன்..

என்னோட இந்த நிலைன்னாலே என்னை விட அதிகமாக பாதிக்கப்பட்டது சாமி தான் கண்ணு..ஆரம்பத்திலிருந்து அம்மா இருந்தும் இல்லாத நிலை அவனுக்கு..சின்ன வயசுலேயே ஹாஸ்டலுக்கு அனுப்பி வைச்சிட்டேன்…இப்போ இங்கே வந்த பிறகு தான் அப்போ விட்டு போனதை, செய்ய முடியாததை செய்ய முயற்சி செய்திட்டிருக்கேன்..’எதுக்கும் ம்மா கஷ்டப்படறீங்கண்ணு அதுக்கும் கோவிச்சுக்கறான்..

அன்னைக்கு உங்க வீட்லேர்ந்து எடுத்திட்டுப் போன டிஃபன் பாக்ஸை போல ஒரு டப்பாவிலே ஆபிஸூக்கு சோறு எடுத்திட்டுப் போறான்..மாசத்திலே பாதி நாளைக்கு மேலே வெளியூர்லே தான் இருக்கான்..எங்கே சாப்பிடறான், என்ன சாப்பிட்டான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டான்..சில சமயம் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஃபோன் செய்து எப்படி இருக்கீங்கண்ணு விசாரிப்பான்..சில சமயம் பத்து நாளானாலும் பேச மாட்டான் திடீர்னு நேர்லே வந்து நிப்பான்..சென்னைலே இருந்த போது இந்த வேலையைப் பற்றி பெரிசா பயம் எதுவும் தோணலை கண்ணு..நாலு பேருக்கு நல்லது செய்யறான் கடவுளே அவனுக்கு கவசமா இருப்பார்ன்னு நினைச்சுக்குவேன்..ஆனா இங்கே வந்ததிலிருந்து எதுக்கு இந்த மாதிரி வேலையைத் தேர்ந்தெடுத்தான்னு கேள்வி வந்திட்டே இருக்கு..போலீஸ் வேலையே ஆபத்தானது..இவன் இப்போ ரகசியப் போலீஸ்ன்னு சொல்றான்..என்னோட ஆயுசையும் சேர்த்து அவனுக்குக் கொடுத்திடுன்னு தினமும் கடவுள்கிட்டே வேண்டிட்டு இருக்கேன்.” என்று படு ஸீரியஸாக பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சு சினேகாவின் மனத்தில் அச்சத்தைக் கிளப்ப, அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல்,

“அதெல்லாம் முடியாது..இன்னும் எத்தனை இருக்கு நீங்க பார்க்க, அனுபவிக்க..கல்யாணம்னு சொல்லி எங்கம்மா என்னை எவ்வளவு கொடுமை படுத்தறாங்கண்ணு தெரியுமா? எப்போ டா கல்யாணம் முடியும்? உங்க மகன்கிட்டே கோள்மூட்டி உங்களைப் போல சுடிதார் போட்டா தான் ஆச்சுன்னு எங்கம்மாவை மிரட்டலாம்னு திட்டம் போட்டு வைச்சிருக்கேன்.” என்று உரையாடலின் போக்கை மாற்றியவள் அதன் எதிர்வினையாக பெரிய சிரிப்பை எதிர்பார்க்க, அவளது வேடிக்கை பேச்சு விஜயாவிடம் போய் சேரவேயில்லை.

”இன்னைக்கு காலைலே எழுந்திருச்சதிலிருந்து மனசு ஒரு மாதிரி இருந்திச்சு கண்ணு..உடனே அவனுக்கு ஃபோன் போட்டேன்..இணைப்பு கிடைக்கவேயில்லை..ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்திச்சு..இப்போ வரை ஃபோனை ஆன் செய்யாம என்ன செய்திட்டு இருக்கான்னு யோசிச்சு யோசிச்சு தலை பாரமாகிப் போச்சு.” என்றார். 

அதைக் கேட்டு கொண்டிருந்தவளின் இதயமும் பாரமாகிப் போனது.