தீபாவளிக்கு இரண்டு நாள்கள் இருக்கையில் விஜயாவின் அழைப்பின் பெயரில் ஜோதியும் சினேகாவும் அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்று தான் அவர்கள் இருவருக்கும் நேரம் கிடைத்தது. ஷிக்காவின் புதுக் கடையின் வேலை, கல்யாண வேலை என்று ஜோதிக்கு சரியாக இருந்ததால் சினேகாவிற்கு ஓய்வு நேரம் கிடைத்த போது கூட அவருக்கு கிடைக்கவில்லை. இதற்கு மேல் தாமதம் செய்ய முடியாதென்று வேறு வேலையோடு இதை இணைத்துக் கொண்டு விஜயாவைச் சந்திக்க வந்திருந்தனர். கதவைத் திறந்த விஜயா மிகவும் சோர்வாக தெரிந்தார்.
“என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?..காய்ச்சல் அடிக்குதா? இன்னொரு நாள் வந்திருப்போமில்லே..மனோவை வரச் சொல்லவா..டாக்டர்கிட்டே போகலாமா?” என்று ஜோதி படபடக்க,
“காய்ச்சல் எல்லாம் இல்லை..தலை பாரமா இருந்திச்சு..படுத்திட்டு இருந்தேன்.” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தார் விஜயா.
“முதல்லே தலைக்கு குல்லா போடுங்க..இல்லை ஸ்கார்ஃபைக் கட்டுங்க..குளிர் ஆரம்பிச்சிடுச்சு..இப்படி தலையை திறந்து வைச்சா பாரம் தான் ஆகும்.” என்றார்.
“நீங்க வர்ற வரை படுத்திருக்கலாம்னு இப்போ தான் அவிழ்த்தேன் ஜோதி..நீங்கெல்லாம் சாதாரணா இருக்கீங்க..ஒரு ஷால் கூட உடுத்திக்கலை.” என்று கேட்டார்.
“இப்போ தான் வாசல்லே ஷாலை கழட்டி பைக்குள்ளே போட்டோம்.” என்று அவர்கள் கொண்டு வந்திருந்த பையைச் சுட்டிக் காட்டினார்.
அவர்களின் உரையாடலைக் கேட்டபடி ஏதோ யோசனையில் இருந்த சினேகாவிடம்,”என்ன டீ சும்மா நின்னுட்டு இருக்க..இஞ்சி தட்டிப் போட்டு மூணு டீ கொண்டு வா.” என்று மகளுக்கு கட்டளையிட்டார்.
அதுவரை அமைதியாக நின்றிருந்த சினேகாவிற்கு அது டூ மச்சாக தெரிய,”அம்மா” என்று அடிக்குரலில் அழைத்து அவளது மறுப்பைத் தெரிவித்தாள்.
உடனே,“இந்த வீட்டுக் கிச்சனைத் தெரிஞ்சுக்க இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கு அவளுக்கு..நானே போய் நம்ம மூணு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வரேன்.” என்று விஜயா எழுந்து கொள்ள, அவரின் கையைப் பிடித்தவர்,”எல்லாம் இப்போவே தெரிஞ்சுக்கட்டும்…அவ போட்டுக் கொண்டு வருவா..உங்களோட ஸ்கார்ஃப் ரூம்லே இருக்குதா? வாங்க அங்கே போகலாம்.” என்று அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்.
சரியாக ஒரு வாரம் கழித்து அதே நாளில் திருமதி ஷண்முகவேல் ஆகியிருப்பாள் சினேகா. வேறு வழியில்லாமல் அமைதியாக அவளுடைய அம்மா சொன்னதை செயல்படுத்த சமையலறைக்குச் சென்றாள். சிரமமில்லாமல் பால், தேயிலை, சர்க்கரை என்று அனைத்தும் மேடை மேல் இருக்க, குளிர்ச்சாதனப் பெட்டியைத் திறந்து இஞ்சியைத் தேடிப் பிடித்து டீ போட்டாள். டீயை எடுத்துக் கொண்டு செல்லுமுன் சமையலறையிலிருந்து விஜயாவின் படுக்கையறையைப் பார்க்க, பெரியவர்கள் இருவரும் கண்களில் படவில்லை ஆனாலும் அவர்களின் உரையாடல் காதில் விழுந்தது. இப்போதைக்கு அம்மா அழைக்க மாட்டார் என்று உறுதி செய்தவள், மெல்ல நடந்து இன்னொரு படுக்கையறையை நோக்கிச் சென்றாள்.சத்தம் செய்யாமல் கதவைத் திறந்து உள்ளே சென்றவள், படு சுத்தமாக இருந்த அந்த அறையில் அவளது தீபாவளி பரிசை வைக்க ஏற்ற இடத்தைத் தேடிய போது,”மூணு டீ போட மூணு நாள் எடுத்துக்குவேயா டீ?” என்று ஜோதி சத்தம் போட, வெள்ளை தலையணை மீது அவளது பரிசுப் பொருளை வைத்து விட்டு கதவைச் சாத்திக் கொண்டு வேகமாக சமையலறைக்குச் சென்று விட்டாள்.
பெரிய ஸ்டீல் தட்டில் மூன்று டீயோடு நிதானமாக நடந்து வந்த மகளை ஜோதி முறைத்துப் பார்க்க,”எதுக்கு ஜோதி கோபப்படற? புது இடத்திலே நேரம் எடுக்கத் தான் செய்யும்.” என்று சினேகாவிற்கு ஆதரவாகப் பேசினார் விஜயா.
தாய், மகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்ததற்கு காரணம் இருந்தது. வருங்கால மருமகளுக்கு வாங்க வேண்டிய துணிமணிகள், நகை நட்டுக்கள் என்று எதையும் வாங்க முடியாமல் தில்லியில் மாட்டிக் கொண்டிருந்த விஜயா மகனுடன் கலந்தாலோசித்து விட்டு ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அதைத் தெரியப்படுத்த தான் ஜோதியையும் சினேகாவையும் வீட்டிற்கு அழைத்திருந்தார். சில லட்சங்களைச் சினேகாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி விட விஜயா முடிவெடுத்திருக்க, தேநீர் அருந்தியபடி அதை அவர்களிடம் தெரிவித்தார். பணத்தை ஏற்றுக் கொள்ள ஜோதிக்கு சங்கடமாக இருந்தது. எனவே,
“நீங்க எப்படியும் சென்னைலேர்ந்து தானே ஊருக்கு வருவீங்க..புடவை, நகை எல்லாம் அங்கேயே வாங்கிக்கலாமே..ப்ளவுஸ் ரெடிமெடா கிடைச்சிடும் பிரச்சனையில்லை..எதுக்கு பணத்தை அனுப்பிட்டு..தேவையில்லை விஜயாம்மா.” என்றார்.
“இல்லை ஜோதி..சினேகா அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கணுமில்லே..அதான் பணத்தைக் கொடுத்திட்டா சென்னைலே அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போய் நீங்க வாங்கிக் கொடுக்கலாமே.” என்றார்.
“முதல்லே அப்படித் தான் ப்ரோக்ராம் போட்டிருந்தோம்..சென்னைக்குப் போய் இவ சித்தப்பா வீட்லே ஒரு நாள் தங்கிட்டு, கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறவங்களையும் கூட அழைச்சிட்டு ஊருக்குப் போகலாம்னு நினைச்சேன்..பிள்ளைங்க இரண்டு பேருக்கும் அந்தத் திட்டம் பிடிக்கலை..அவங்க கல்யாணத்துக்கு வந்தா வரட்டும் வரலைன்னாலும் பரவாயில்லை மனோவும் ஷிக்காவும் கல்யாணத்தை நடத்தி வைச்சா போதும்னு இவ சொல்றா..நானும் ஷிக்காவும் நடத்த வேணாம்னு நீங்க நினைச்சீங்கன்னா கடவுள் காலடிலே தாலியே வைச்சு ஐயரே எடுத்துக் கொடுக்கட்டும்னு மனோ சொல்றான். நான் ஷிக்காவை ஏத்துக்கிட்டாலும் என் வீட்லே அவளை ஏத்துக்கலை..மனோ சொன்னபடி செய்யலாம்னு ஊருக்குப் போய் அண்ணன்கிட்டே சொல்லிடலாம்னு முடிவு செய்திட்டேன்..அதனாலே இங்கேயிருந்து டிரெக்ட்ரெயின்லே ஊருக்குப் போகப் போறோம்..சாமானும் நிறைய இருக்கு..அதைத் தூக்கிட்டு இங்கே அங்கேன்னு ஏறி இறங்க முடியாது…
மனோ கல்யாணத்துக்கு நான் யாருக்கும் எதுவும் செய்யலை..இவ கல்யாணத்துக்கு செய்யணும்னு நினைக்கறேன்..இவளோட அத்தை, சித்தப்பா, தாய் மாமன்னு இரண்டு பக்க ஆளுங்களுக்கும் இங்கேயிருந்தே துணிமணி வாங்கிட்டு போகப் போறோம்..குடம், குத்துவிளக்குன்னு சடங்கு, சம்பிரதாயத்துக்கு தேவைப்படறதையும் இவளுக்குத் தேவையானதையும் ஊர்லே வாங்கச் சொல்லிட்டேன்..தீபாவளி நேரம் நிறைய வெரைட்டி இருக்குன்னு என்னோட அண்ணி வீடியோ அழைப்புலே புடவையைக் காட்டி இவகிட்டே சம்மதம் கேட்டாங்க..அளவு பிளவுஸ் ஏற்கனவே கூரியர்லே அனுப்பி விட்டாச்சு..கிட்டதட்ட எல்லா ஏற்பாடும் ஆகிடுச்சு..போய் இறங்கினா கடைசி நேர வேலைகளுக்கு தான் நேரம் சரியா இருக்கும்..இதிலே எங்கேயிருந்து இவளைக் கடைக்கு அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுக்கறது..நீங்களே வாங்கிடுங்க விஜயாம்மா..மாமியார் வாங்கிக் கொடுக்கறதை நல்லா இல்லைன்னு சொல்லுவேயா டீ நீ.” என்று விஜயாவிடம் ஆரம்பித்து மகளிடம் முடித்தார் ஜோதி.
‘இல்லை’ என்று சினேகா தலையசைக்க, “வாயைத் திறந்து சொல்லு டீ” என்று ஜோதி அதட்ட,”உங்க இஷ்டம் அத்தை.” என்றாள் சினேகா.
திருமணம் நிச்சம் ஆனதிலிருந்து விஜயாவை அத்தை என்று தான் அழைக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார் ஜோதி. ‘ஆன்ட்டின்னு கூப்பிட்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்று விஜயா சொல்ல,’ஷிக்கா அந்த மாதிரி கூப்பிட்டா ஓகே..இவ ஏன் அப்படிக் கூப்பிடணும்..தில்லி பொண்ணா இருந்தாலும் இவ தமிழ்ப் பெண்ணு தானே.’ என்று அந்த விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார் ஜோதி. சினேகாவின் திருமணம் முடிவானதிலிருந்து அவளின் நடை, உடை, பாவனையில் பெரும் கவனம் செலுத்துகிறார். நாளுக்கு நாள் அவரின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருந்தது.
எல்லாம் நல்லபடியா நடக்க வேண்டும். சினேகாவின் திருமணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதிலும் குறிப்பாக அவளால் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று அவளைப் பக்கா தமிழ் பெண்ணாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார் ஜோதி. இப்போது கூட சல்வார் அணிந்து வந்தவளிடம்,’மாமியார் கூப்பிட்டு விட்டிருக்காங்க..இப்படித் தான் இந்த ஊர் பொண்ணு மாதிரி சல்வார் போட்டிட்டு போவேயா? போய் புடவை கட்டிட்டு வா.’ என்று அவளைக் கோபித்து கொண்டு வலுக்கட்டாயமாக புடவை உடுத்த வைத்திருந்தார். வெளிர் நீல நிற ஜார்ஜட் புடவையில் உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் சுனரி (chunari, bandini) ப்ரிண்ட் டிசைன். கரையில் செய்திருந்த சரிகை வேலைப்பாடு கண்களை உறுத்தாமல் இதமாக இருந்தது. அடர் நீலக் கான்ட் ராஸ் பிளவுஸ் அந்தப் புடவைக்கு மேலும் அழகு சேர்த்து சினேகாவை தேவதை போல் காட்டியது. ஜோதியின் பேச்சு, நடிவடிக்கைகளில் மூச்சு முட்டிப் போனாலும் அம்மாவின் மனது புரிந்தததல் முடிந்தளவு அமைதியாகவே அவர் சொன்னபடி செய்தாள்.
இப்போதும் அம்மாவின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் அமர்ந்திருந்தவளிடம்,”கண்ணு, உன்னோட விருப்பப்படி நீ வாங்கிக்கணுங்கறது சாமியோட விருப்பம்.” என்றார்.
அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்த ஜோதி,”உன்னோட வங்கிக் கணக்கு தகவலை விஜயா அம்மாக்கு அனுப்பி விட்டிடு சினேகா.” என்றார்.
“எனக்கு அனுப்பி வைச்சு பிரயோஜனமில்லை ஜோதி..என்னோட வங்கிக் கணக்கை என்னோட அண்ணன், மாமா, சாமி மூணு பேரும் தான் பார்த்துக்கறாங்க..நீ சாமிக்கே அனுப்பி விடு கண்ணு.” என்றவர், அப்படியே அவரது கைப்பேசியை அவளிடம் கொடுத்து,’இதிலே சாமின்னு ஷண்முகத்தோட நம்பரைப் பதித்து வைச்சிருக்கேன்.” என்றார்.
இப்போது வரை அவர்கள் இருவரும் கைப்பேசியில் உரையாடி இருக்கவில்லை. கைப்பேசி இலக்கை பரிமாறிக்க கொள்ளவில்லை. அவளின் கைப்பேசி இலக்கு அவனிடமிருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் தெரிய வரப் போகிறது என்று தெரியாமல் அவனுடைய கைப்பேசி இலக்கை பதித்து வைத்துக் கொண்டவள், ஒருமுறை அவனோடு உரையாடி விட்டு வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அவனோடு பகிர்ந்து கொள்ளலாமென்று முடிவு செய்தாள்.
அடுத்து வந்த நிமிடங்கள் கல்யாணம் பற்றிய உரையாடலில் கழிய, டீ கோப்பைகளைக் கழுவி வைத்து விட்டு மீண்டும் படுக்கையறைக்கு வந்தாள் சினேகா. விஜயா ஆன்ட்டியை இதுபோல் சோர்வாக அவள் பார்த்ததேயில்லை. எனவே,”தைலம் எங்கே இருக்கு அத்தை?” என்று கேட்டாள்.
அந்த அறையிலிருந்த அலமாரியைக் காட்டி,”மேல் அடுக்குலே இருக்கு கண்ணு.” என்றார் விஜயா.
அலமாரியைத் திறந்து தைலத்தோடு வந்த மகளிடம்,“நீ என்னோட வர வேணாம்..இங்கே விஜயாம்மாவோட இரு..வேலையெல்லாம் முடிச்சிட்டு நானே வந்து அழைச்சிட்டு போறேன்.” என்றார்.
சினேகாவை வீட்டில் இருத்திக் கொள்ள விஜயாவிற்கும் இஷ்டமிருந்ததால்,”நீங்க கஷ்டப்பட வேணாம் ஜோதி..அவளை அனிஷோட அனுப்பி விடறேன்.” என்றார்.
“சரி” என்று சொல்லி விட்டு சென்று விட்டார் ஜோதி.
சினேகாவின் கையிலிருந்து தைலத்தை வாங்கி நெற்றியில் தேய்த்துக் கொண்ட விஜயா,”காலைலேர்ந்து மனசு என்னவோ போல இருக்கு..இன்னும் ஒரு வாரத்திலே கல்யாணம்.. நல்லபடியா நடக்கணும்னு கண்ணு.” என்றார்.