அத்தியாயம் – 40

“வசந்தி எப்படி இருக்கா ஜெயந்தி?” என்று கேட்டார் விஜயா.

“அவளுக்கு என்ன சித்தி சொந்த கார்லே பெங்களூர், வேலூர், சென்னைன்னு ஊர் சுத்திட்டு இருப்பா..என்னைப் போல ஒரே இடத்திலே அடைஞ்சு கிடக்கணும்னு தலை எழுத்தா என்ன? நான் வெளியே சுத்தறது வீடு தேடத் தான்..அதுவும் அம்மா பக்கத்திலே தான் இருக்கணும்னு இவர் சொன்னதாலே இதே எரியாலே சுத்தி சுத்தி வந்திட்டு இருக்கேன்..அவளுக்கு அந்தக் கஷ்டமும் கிடையாது..கல்யாணம் முடிஞ்சதிலிருந்து ராணி மாதிரி தனி ராஜ்ஜியம் தான்.” என்று விஜயா கேட்ட கேள்விக்கு வயிற் எரிந்து பதில் அளித்தாள் ஜெயந்தி.

‘எல்லாம் இருந்தும் அவளுக்கு நிம்மதி இல்லையே’ என்று வசந்திக்கு ஆதரவாகப் பேசினால் ஜெயந்தி அவரை வெளுத்து வாங்கி விடுவாளென்பதால்,”எங்கே இருந்தாலும் என்னோட அழைப்பு தவறிடுச்சுன்னா நேரம் கிடைக்கும் போது எனக்கு ஃபோன் செய்து பேசிடுவா..நிறைய முறை அழைச்சிட்டேன் ஆனா ஒருமுறை கூட அவ என்னை அழைக்கலை..அதான் உன்கிட்டே விசாரிச்சேன்.” என்றார்.

“அம்மா ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி அவளை நம்ம வீட்லே பார்த்தது தான்..அப்புறம் ஒண்ணு இரண்டு முறை அவ ஃபோன் செய்தா..கொஞ்ச நேரம் பேசினோம்..வெட்டிக்கதை பேச அவளுக்கு நேரமிருக்கு எனக்கு இருக்குதா? ” என்று தேளாகக் கொட்டினாள் ஜெயந்தி.

‘இப்போ அக்காவும் ஊர்லே இல்லை..ஒருமுறை அவளுக்கு ஃபோன் செய்து என்ன ஏதுன்னு நீ கேட்கலாமில்லே?’ என்று விஜயாவினால் ஜெயந்தியிடம் உரிமையாக கேட்கமுடியவில்லை. வசந்தியைப் பற்றிய யோசனையில் விஜயா இருக்க,

“ஷண்முகம் கல்யாணத்தை ஏன் கிராமத்திலே வைச்சிருக்கீங்க? தில்லிலே தானே பொண்ணு வீடு..அங்கே வைக்க வேண்டியது தானே.” என்று வசந்தி பற்றிய பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள் ஜெயந்தி.

“இங்கே தான் நடக்கும்னு நானும் நினைச்சேன்..’இங்கே வேணாம்..ஊர்லே நடத்திடலாம்..என்னோட அண்ணன், தம்பி குடும்பம் அங்கே இருக்காங்க..அவங்களை விட்டா எனக்கு யாருமில்லைன்னு” சம்மந்தியம்மா சொல்லும் போது மறுக்க முடியலை.” என்று சொன்ன விஜயாவிற்கு காசியப்பனின் கடனை தீர்த்து அந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுக்க தான் திருமணத்தை அங்கே வைத்திருக்கிறார் ஜோதி என்ற விவரம் தெரியவில்லை. 

பெண்ணின் திருமணம் திடீரென்று கூடி வந்து விட்டதால் கடனை அடைக்க அவகாசம் வேண்டுமென்று சகோதரர்களிடம் இவர் கோரிக்கை வைத்தார். இத்தனை துரிதமாக ஒரு திருமணமா என்று ஷாக்காகிக் போனார்கள். இரண்டு வருடமாக தேடித் தான் வனிதாவிற்கு வரன் அமைந்திருந்தது. மாப்பிள்ளை ஷண்முகத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டதும் அவர்களால் நம்பமுடியவில்லை. அவருடைய பெண்ணிற்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளையை விட வேலை, வசதியில் உயர்ந்த மாப்பிள்ளை எப்படி சினேகாவிற்கு அமைந்தது என்ற கேள்வி வந்தது செல்வக்குமாருக்கு. மாப்பிள்ளையின் பழக்க வழக்கங்களைப் பற்றி நன்றாக விசாரித்தாரா என்ற ஜோதியிடம் கேட்க,

“அதெல்லாம் செய்ய யார் இருக்கா? மாப்பிள்ளையோட அம்மாவை மூணு நாலு மாசமா தெரியும்..அவங்க தான் பெண் கேட்டு வந்தாங்க..மத்திய அரசுலே பெரிய பதவிலே இருக்கார் நம்ம அந்தஸ்த்துக்கு ஒத்து வருமான்னு எனக்குத் தயக்கம் தான்..சினேகாவோட நேரம் கல்யாணம் கூடி வந்திடுச்சு.” என்றார்.

கல்யாணச் சந்தையில் எத்தனையோ ஏமாற்று வேலைகள் நடப்பதால் மாப்பிள்ளை பற்றி விவரங்கள் உண்மையாக இருக்கக்கூடுமென்று அண்ணன், தம்பி இருவருக்கும் நம்பிக்கை வரவில்லை. அதுவும் திருமணத்தை தில்லியில் வைக்க சம்மதம் தெரிவித்தவர்கள் மீது அவநம்பிக்கை தான் ஏற்பட்டது. எனவே,

“மாப்பிள்ளை வேலை செய்யற ஆபிஸ்ஸுக்குப் போய் மனோ விசாரிச்சானா?” என்று கேட்டார் செந்தில்குமார்.

“அதெல்லாம் அவசியமில்லை செந்திலு..சினேகா அப்பாவோட வேலை செய்த ஒருத்தர் தான் ஷண்முகம் தம்பி ஆபிஸ்லே வேலை செய்யறார்..அவர் மூலம் தான் நம்ம கடைக்கு வந்தாங்க விஜயாம்மா..அப்படியே அவங்களோட பழக்கம் ஆச்சு..அந்தத் தம்பி தில்லிக்கு மாற்றலாகி வந்து மாசக் கணக்குத் தான் ஆகுது.” என்றார் ஜோதி.

உடனே,“முன்னாடி எந்த ஊர்லே வேலை செய்திட்டு இருந்தார்?” என்று விசாரித்தார் செல்வம்.

“தெரியலை ண்ணா.” என்றார் ஜோதி.

“எத்தனை வருஷம் சர்வீஸ் ஆகியிருக்கு?” என்று கேட்டார் செந்தில்.

“தெரியலை ண்ணா.” என்றார் ஜோதி.

“சென்னைலே சம்மந்தியம்மா வீடு எந்த ஏரியா?” என்று கேட்டார் செல்வம்.

“அவங்களுக்குன்னு தனியா வீடு கிடையாது ண்ணா..அவங்க அக்கா, அண்ணனோட தான் மாறி மாறி இருக்காங்க.” என்றார் ஜோதி.

அதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன செந்திலின் மனத்தில் ஷண்முகத்தைப் பற்றி பெரிய சந்தேகம் வர,”எதையும் தீர விசாரிக்காம இப்படித் தான் பொண்ண கட்டிக் கொடுப்பேயா? நாளை பின்னே ஏதாவது கெட்டது நடந்திச்சுன்னா என்ன செய்வ?” என்று கத்த,

“இல்லை ண்ணா மாப்பிள்ளை மத்திய அரசுலே பெரிய பதவிலே இருக்கார்னு எனக்கே தெரியும்….சென்னை தான் சொந்த ஊர்..மாமா, பெரியம்மா, பெரியம்மாவோட இரண்டு மக, மாமாவோட பசங்கண்ணு எல்லோரும் அங்கே தான் இருக்காங்க..நல்ல குடும்பம் தான்..சம்மந்தியம்மாக்கு தான் அவங்க கணவரோடஒத்துப் போகலை..விவாகரத்து ஆகிடுச்சு..தொடர்பிலே இல்லை..அப்போலேர்ந்து”என்றவரை இடைமறித்து,

“நீ சொன்னதைக் கேட்கவே பக்குன்னு இருக்குது..பையனுக்கு கூடப் பிறந்தவங்க இல்லை..பெத்த அப்பாவோட தொடர்பில்லை..மனோ மாதிரி எப்படியோ போகட்டும்னு சினேகாவை எங்களாலே விடமுடியாது…தகப்பன் இல்லாத பெண் பிள்ளையைக் கண்டவனுக்கு கட்டி கொடுக்க முடியாது.” என்றார் செல்வம்.

“விஜயாம்மா அப்படிப்பட்டவங்க இல்லை ண்ணா..நீங்க அவங்களை சந்திக்கும் போது தான் நான் சொல்றது புரியும்..அந்தக் காசியப்பன் கிட்டே பேசி கொஞ்சம் அவகாசம் கேளுங்கண்ணா..மனோவோட பொண்டாட்டி பெரிய கடை திறந்திருக்கா..அதிலே நானும் சினேகாவும் பங்குதாரர்..கடை பிக் அப் ஆக ஒரு வருஷம் போல ஆகும்..லாபத்திலே என்னோட பங்கை வைச்சு கடனை அடைச்சிடுவேன்.” என்றார் ஜோதி.

“நீ கடனை அடைச்சா தான் வனிதாவோட கல்யாணம் சுமூகமா நடக்கும்..ஒரு வருஷம் வரை அவ கல்யாணத்தைத் தள்ளிப் போட முடியாது.” என்றார் செந்தில்.

“அதுக்காக தான் பணத்தை ஒதுக்கி வைச்சிருந்தேன்..இப்போ திடீர்னு சினேகாக்கு வரன் தகைஞ்சிடுச்சு..என்னாலே எப்படி ண்ணா கல்யாணச் செலவையும் சமாளிச்சு கடனையும் அடைக்க முடியும்? கல்யாணத்தையே சிம்பிலா கோவில்ல தான் வைக்கப் போறேன்..சின்னதா ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்து இங்கே இருக்கறவங்களுக்கு பார்ட்டி கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கேன்..தயவு செய்து இந்த ஒருமுறை எனக்காக அந்த ஆள்கிட்டே போய் பேசுங்க ண்ணா.” என்றார் ஜோதி.

‘முடியவே முடியாதென்று’ என்று செந்தில் பதில் சொல்ல நினைக்க அவரை அடக்கி விட்டு,”கடனை விடு திடீர்னு சினேகாக்கு கல்யாணத்தை நிச்சயம் செய்ததை என்னாலே ஏத்துக்க முடியலை ஜோதி..வீட்லே உன் அண்ணிகிட்டே பேசிட்டு சொல்றேன்..ஒருமுறை நானோ இல்லை செந்திலோ நேர்லே மாப்பிள்ளையை சந்திச்சா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது.” என்றார்.

அதைக் கேட்டு,’இதுயென்ன புதுப் பிரச்சனை? இவ்வளவு நாள் தள்ளி இருந்தவங்க இப்போ திடீர்னு மாப்பிள்ளையைச் சந்திக்கணும், தீர விசாரிக்கணும்னு சொல்றாங்க..இடையிலே புகுந்து ஏதாவது கேள்வி கேட்டு கலவரமாகிடுமோ?’ என்று பயந்து போன ஜோதிக்கு அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை.  எனவே அண்ணனின் ஆலோசனைக்கு சரி என்று தலையசைத்து அதை விஜயாவின் காதில் போட,”அக்கறைலே தான் அப்படிப். பேசறாங்க ஜோதி..ஒண்ணும் பிரச்சனையில்லை..சாமிக்கு சௌகர்யமான தேதிலே சென்னைலே எங்க அண்ணனோட வீட்லேயே சந்திப்பை வைச்சுக்கலாம்.” என்றார்.

விஜயா, ஜோதி எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. சினேகாவின் திருமணத்தை அவர்கள் ஊர் கோவிலில் நடத்த வேண்டும், திருமணச் செலவுகள் போக்குவரத்து, சாப்பாடு, ஜவுளி, இருபது பவுன் நகை வரை அனைத்து செலவுகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் காசியப்பனின் கடனை மட்டும் மொத்தமாக ஜோதி அடைத்து விட்டால் போதுமென புதுத் திட்டத்தோடு சகோதரர்கள் வர, 

“ஏற்கனவே நீங்க கொடுத்த இரண்டு லட்சத்தை நான் இன்னும் திருப்பித் தரலை..இப்போ கல்யாணச் செலவை ஏத்துக்கறேன்னு சொல்றீங்க..வேணாம்..என்னைக் கடனாளி ஆக்காதீங்க.” என்று அவர்கள் திட்டத்தை ஜோதி மறுக்க, அவனின் ஒப்புதலைக் கொடுத்தான் மனோகர்.

“மாமா சொல்றது நல்ல ஐடியா ம்மா..கல்யாணத்தை அவங்களே நடத்தட்டும்..முதல்லே கடனை முழுசா அடைச்சிடுவோம்..அப்புறம் அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்திடுவோம் ம்மா.” என்றான் மனோகர்.

“எப்படி டா என்னோட கல்யாணச் செலவை அவங்க தலைலே கட்ட முடியும்? அடுத்து வனிதாவுக்கு செலவு செய்யணுமில்லே…நம்ம கைலே இருக்கறதை வைச்சு என் கல்யாணத்தை முடிக்கலாம்..அடுத்த வருஷம் எப்படியும் கடைலே லாபம் கிடைக்கும்..என்னோட பங்கையும் சேர்த்து கடனை அடைச்சிடலாம்.” என்றாள் சினேகா.

அதற்கு,“சும்மா இருடீ..உன் பங்கு உன்னோடது..மாப்பிள்ளையோடது..அதிலே நான் கை வைக்க மாட்டேன்.” என்றார் ஜோதி.

ஜோதி எத்தனை மறுப்பு தெரிவித்தும் சகோதரர்கள் இருவரும் பிடிவாதமாக இருந்தனர். ‘வனிதா கல்யாணம் இருக்கு..எனக்கு மனசு கேட்க மாட்டேங்குது.’ என்று ஜோதி கண்ணீர் வடித்த போது,’சினேகாவை தன்னோட பேத்தியா நினைச்சு எங்கப்பா தான் கல்யாணத்தை நடத்தப் போறார் அண்ணி..மொத்த கடனையும் அடைக்க அவர் முன் வந்த போது நீங்க வேணாம்னு மறுத்திட்டீங்க..அதான் உங்ககிட்டே விஷயத்தை சொல்ல வேணாம்னு நினைச்சோம்..வனிதா கல்யாணத்திலே எந்தக் குறையும் வராது.” என்று மதியழகி சொன்னவுடன் ஜோதியின் மனம் நெகிழ்ந்து போனது.

கல்யாணத்தை ஊரில் நடத்த போவதாக விஜயாவிடம் ஜோதி தெரிவிக்க விஜயாவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டவில்லை. அக்கா, அக்காவின் மகள்களை வேறொரு சந்தர்ப்பத்தில் தில்லிக்கு அழைத்துக் கொள்ளலாமென்று மனத்தை சமாதானம் செய்து கொண்டார். இப்போது ஜெயந்தி அவளது ஏமாற்றத்தை வெளியிட்டவுடன்,

“நானும் சம்மந்தியம்மாகிட்டே சொன்னேன் டீ..அவங்களும் சரின்னு தான் சொன்னாங்க..ஆனா திடீர்னு ஊர்லே வைச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க..இங்கே வர்றதை விட சென்னைலேர்ந்து அங்கே வர்றது உங்களுக்கெல்லாம் சௌகர்யமா இருக்கும்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்..டிசம்பர்லே சித்துக்கு லீவ் விட்டதும் தில்லிலே தங்கற மாதிரி வா ஜெயந்தி.” என்றார்.

அதற்கு,“அப்போ தம்பியோட கல்யாணம் முடிஞ்சிருக்கும்..உங்க மருமக எங்களையெல்லாம் வீட்டு உள்ளே விடணுமில்லே?” என்று இடக்காக சொன்ன ஜெயந்தி அறிந்திருக்கவில்லை வசந்தியை அவர்களுடன் அவர்களின் வீட்டில் வைத்துக் கொண்டு அவளை மீட்டெடுக்கப் போவது சினேகாதானென்று.

“அவ நல்ல மாதிரி தான்..நீயே உன் வாயாலே..” என்றவரை இடையிட்டு,”சித்தி, கிச்சன்லேர்ந்து ஏதோ வாசனை வர்றது..உங்களோட பேசிட்டு இருந்ததுலே அடுப்பை மறந்திட்டேன்.” என்று சொல்லி விட்டு விஜயாவின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள் ஜெயந்தி.

“நாத்தமா? என்ன ம்மா சொல்றீங்க?” என்று கேட்டான் வெங்கடேஷ்.

“உன்னோட அறைக்குப் போய் பார்த்திட்டு கதவைச் சாத்திட்டு வந்து பத்து நிமிஷமா உனக்கு முயற்சி செய்திட்டு இருக்கேன்..கைக்குழந்தை போல படுக்கைலேயே எல்லாம் செய்து வைச்சிருக்கா..இப்போ நாத்தம் தாங்க முடியாம தான் கதவை தாழ் போட்டிருக்கேன்…அவகிட்டேயிருந்து சத்தம் வருது ஆனா உடம்புலே அசைவு எதுவுமில்லை..அதிலேயே படுத்திட்டு இருக்கா.” என்றார்.

மனைவியின் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்து,”ஏதாவது ஆகறத்துக்கு முன்னே பக்கத்து தெருவுலே இருக்கற ஆஸ்பத்திரிக்கு அவளை அழைச்சிட்டுப் போயிடறோம் டா..லீவ் சொல்லிட்டு நீ நேரா ஆஸ்பத்திரிக்கு வந்திடு.” என்றார் வெங்கடேஷின் அப்பா.

“இல்லை..இல்லை..முட்டாள்தனமா அப்படி எதுவும் செய்யாதீங்க..நான் இப்போ வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன்..அரைமணிலே வந்திடுவேன்.” என்று கட்டளையிட்டு விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான். 

முக்கால்மணி நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்த வெங்கடேஷ் நேரே சாத்தியிருந்த அவனது படுக்கையறைக்குச் சென்றான். மூக்கின் மீது கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு வசந்தியைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குச் சென்றான். இரண்டு மணி நேரம் கழித்து, கண்களை மூடியபடி பின்னிருக்கையில் வசந்தி அமர்ந்திருக்க, அவளருகே அவளுடைய மாமியார் அமர்ந்திருக்க, முன் இருக்கையில் மாமனார் அமர்ந்திருந்திருக்க, ஓட்டுநனர் இருக்கையில் இருந்த வெங்கடேஷ் படுவேகமாக பெங்களூரை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.