பிரகதி மைதானத்தில் கைவினை, கைத்தறி கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரிசா கைத்தறி பொருள்களை விற்பனை செய்த கடையின் உள்ளே அமர்ந்திருந்தாள் சினேகா. வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு செல்லும் போது இது போல் ஓர் இடத்தில் அசமந்தமாக அமர்ந்திருக்க மாட்டாள், சுறுசுறுப்பாக செயல்பட்டு அவளுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை அழகாகப் பயன்படுத்திக் கொள்வாள். அவளின் இண்டுஇடுக்குகலிலெல்லாம் வேல் பாய்ந்திருந்ததால் சினேகலதா சினேகவேலாக மாறிப் போய் கிட்டதட்ட் எட்டு மணி நேரமாகியிருந்ததால் அவளுடைய மனமானது வெளியே தெரிந்த சுறுசுறுப்பான உலகத்தை விட படுவேகமாக வேலை செய்து கொண்டு தான் இருந்தது. எப்போது டா வீட்டிற்குப் போய் அம்மாவின் வாயால் நடந்ததைக் கேட்போமென்ற அடங்கா ஆவலை இழுத்துப் பிடித்து சிறை செய்திருந்தாள்.
அலுவலகத்தில் வேலையை முடித்துக் கொண்டு மாலை நான்கு மணி போல் மைதானத்திற்கு வந்து சேர்ந்தாள். மும்பையைச் சேர்ந்த வடிவமைப்பாளரின் இந்தியக் கைவினைப் பொருள்கள், கைத்தறி, நூல் வேலைப்பாடு (Weaves, motifs and embroderires of India)புத்தகத்தை எடிட் செய்யும் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஷிக்காவின உபயத்தில் துணி வகைகள் பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றிய நுணுக்கமான தகவல்களைக் கண்டறிய அவற்றைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறதில் மிகவும் அவசியமென்பதால் தான் இதுபோன்ற கண்காட்சி, கூட்டங்களை அவள் விட்டு வைப்பதில்லை. தலை நகரில் எப்போதும் எங்கேயாவது பெரிதும் சிறிதுமாக ஏதாவது கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் என்பதால் இந்தப் புத்தக்கத்தைத் திறம்பட எடிட் செய்ய முழு முயற்சி செய்து கொண்டிருந்தாள் சினேகா.
அந்தப் பெவிலியனில் இருந்த கடைகளில் கடைசி கடை இந்த ஓரிசா கைத்தறிக் கடை. இந்தக் கடையின் உரிமையாளர் பொறியியல் பட்டதாரி.ஹைதராபாத்தில் செய்து கொண்டிருந்த ஐடி வேலையை உதறி விட்டு பரம்பரை பரம்பரையாக செய்து வந்த தறி வேலையை அவனது சொந்த முயற்சியால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருந்தான். தறியில் அவன் செய்திருந்த மாற்றங்கள், சாயம் ஏற்றும் முறையில் அவன் கொண்டு வந்திருந்த புதுமைகள், ஆன்லைன் கடைகள், விற்பனைகள் என்று பல வழிகளில் சாதனை புரிந்திருந்தான். அவனை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க தான் இன்று இங்கே வந்திருந்தாள்.
ஒரு வெளிநாட்டவருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்து விட்டு அவள் அமர்ந்திருந்த இடம் வந்தவன், கலைந்து கிடந்த துணிகளை அதன் இடத்தில் மடித்து வைத்தபடி சினேகாவின் கேள்விகள் ஒவ்வொன்றிர்க்கும் விடை கொடுத்தான். அப்படியே அவளிடம் சில துணிகளைக் கொடுக்க அவற்றை அவளிடமிருந்த பையில் போட்டுக் கொண்டாள் சினேகா. பிகாஸுடன் பலமுறை கைப்பேசியில் பேசியிருக்கிறாள். அவனை நேரில் சந்திப்பது இதுதான் முதல் முறை. அவனிடமிருந்து சில சாம்பில்களைப் பெற்று அதை மும்பைக்கு எடுத்து வர வேண்டிய பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவனது பதில்களை அவளுடைய கைப்பேசி பதிவு செய்து கொண்டிருக்க அதற்கு இணையாக நோட்புக்கில் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் சினேகா. கடையினுள்ளே சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரிசைகளுக்கு நடுவே தரையில் அமர்ந்திருந்ததால் சாலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவள் இருப்பது தெரியவில்லை. அதே சமயம் கடைக்கு பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அவள் தான் பிரதானமாகத் தெரிந்தாள்.
பிகாஸ் சொல்வதை ஷார்ட் ஹாண்டில் வேகமாக எழுதியவள் அப்படியே அதை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்த்து விட்டு அப்போதே சில திருத்தங்களையும் செய்தாள். அவர்களைத் தவிர கடையில் யாருமில்லாததால் பிகாஸிடம் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு துரிதமாக வேலையை முடிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருந்தாள் சினேகா. அப்போது திடீரென்று கூட்டமாக சில வாடிக்கையாளர்கள் கடையின் உள்ளே நுழைந்தனர். கடையின் பின்புறத்தில் தொங்கி கொண்டிருந்த புடவைகளை அவர்கள் சுட்டிக் காட்ட, அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான் பிகாஸ். மற்றொரு நாளாக இருந்திருந்ததால் அந்த வாடிக்கையாளர்கள் யார், எந்த ஊர் என்று அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்திருப்பாள் சினேகா. இன்று அவளது ஒரே குறிக்கோள் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும், காலையில் நடந்தவற்றை ஒரு வரி விடாமல் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருந்ததால் அவர்களின் புறம் பார்வையைக் கூட திருப்பவில்லை.
தலை குனிந்தபடி அவளது நோட்டுப்புத்தகத்தில் எழுந்திக் கொண்டிருந்த சினேகா, சில நிமிடங்கள் கழித்து ஏதோ உந்துதலில் அவளது தலையை உயர்த்தி கடைக்கு வெளியே பார்த்தாள். அங்கே அவளை பார்த்தபடி ஷண்முகவேல். கண்களில் சந்தோஷம் மின்ன, மின்னலாக எழுந்து நின்றவளுக்கு கண்களாலேயே ‘நோ’ என்று அவன் விடுத்த எச்சரிக்கையை அவள் புரிந்து கொண்டாலும் முழுமையாக எழுந்து விட்டதால் அதற்கு அடிபணிய அவளால் முடியவில்லை. அவனருகே நின்றிருந்த நபரின் பார்வை சுற்று வட்டாரத்தை அலசிக் கொண்டிருக்க, அவரது கவனத்தைக் கவராமல் சில அடிகள் நடந்து சென்று, நோட்புக்கையும் கைப்பேசியையும் ஒரு கைக்கு மாற்றி மற்றொரு கையால் அடுக்கி வைத்திருந்த துணிகளைப் புரட்டி கடைக்கு வந்த வாடிக்கையாளர் போல் நின்று கொண்டாள் சினேகா.
இதுதான் கடைசி இதற்கு பிறகு வீடு தான் என்று திட்டமிட்டிருந்தாள். சிலமணி நேரங்களாக இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இந்த நொடி வரை ஷண்முகவேல் அவள் கண்களில் படவில்லை. அவளைக் கண்டு கொண்டவன் அதை வெளிக்காட்டாமல், வெளிக்காட்டக் கூடாதென்று அவளையும் எச்சரிக்கை செய்தது அவளை யோசிக்க வைத்தது. இதற்கு முன் அவன் கண்களில் அவள் பட்டிருந்தாலும் அவளை அவன் அணுவில்லையோ? காரணம் என்னவாக இருக்குமென்று யோசித்தவள், இறுதியில் அவனது ‘வேலை’ என்று புரிய,’இந்த இடத்திலே என்ன செய்யறாங்க? சாதாரண மக்கள் வந்து போற இடத்திலே என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்விகள் வர, எத்தனை முறை முயன்றும் தலையை உடைத்தும் அதற்கு விடை தான் கிடைக்கவில்லை.
சினேகாவைப் போலவே வாயில் அருகே இருந்த துணிக் குவியலை ஷண்முகவேலின் கைகள் புரட்டிக் கொண்டிருக்க, அவனது கண்கள் கடையை வலம் வந்தன. அவனருகே நின்றபடி அக்கம் பக்கத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவர் ஷண்முகத்தின் தோளைத் தட்டி தூரத்தில் எதையோ காட்டி அவன் கைகளில் இருந்த துணியையும் சுட்டிக் காட்டினார். இருவரின் தோற்றமும் செய்கையும் சாதாரணமாக தான் இருந்தது. ஊன்றிப் பார்த்தால் கூட எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. இது போல் இடங்களில் இது போல் தான் மக்களின் நடவடிக்கைகள் இருக்கும். ஒரு கடையில் பொருளைப் பார்த்துக் கொண்டு அடுத்த கடையில், எதிர்த்த கடையில் என்று மற்றக் கடைகளில் இருக்கும் பொருள்களைப் பார்ப்பது, கடையின் வெளியே வைத்திருக்கும் சரக்குகளை அலசி ஆராய்வது, தெரிந்தவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்வையைச் சுழற்றுவது என்று அடுத்து நடந்த அனைத்துமே அவர்கள் இருவரிடமும் இயல்பாக இருந்தது. ஷண்முகவேலின் வேலையைப் பற்றி தெரிந்திருக்கா விட்டால் ஒரு வாடிக்கையாளனாக, கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தவனாக தான் அவனைப் பார்த்திருப்பாள் சினேகா.
அப்போது கடையின் பின்பக்கத்திலிருந்து வந்த பிகாஸ்,”நீங்க சொல்ற கலர் காம்பினேஷன்லே நாங்க செய்து கொடுப்போம்.” என்று வாடிக்கையாளர்களுக்கு பதில் அளித்தபடி அவனது கார்ட்டை கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளியேற, ஷண்முகவேலிடம்,”என்ன வேணும் சர்?” என்று விசாரித்தான்.
அதற்கு அவன் பதில் அளிக்கும் முன் அவனருகே இருந்த நபர்,”ஸ்டோல்” என்றார்.
“ஸ்டோல், துப்பட்டான்னு தனியா கிடையாது..துணியைக் காட்டறேன்..பிடிச்சிருந்தா உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கறோம்.” என்றான்.
“சரி..மஞ்சள் கலர்லே காட்டுங்க.” என்றார் அந்த நபர்.
இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த போது ஷண்முகவேல் அங்கிருந்து வெளியேறியதை சினேகா, பிகாஸ் இருவரும் உணரவில்லை. அடிக்கடி ஓரக் கண்ணால் வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள்ஒரு நொடி அவனைக் காணாது திடுக்கிட்டுப் போனாள். துணியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் வேறொரு ஆள் இப்போது அவனோடு பேசிக் கொண்டிருப்பது வேறொருவர் என்று பிகாஸ் உணராமல் அந்த உரையாடலை நகர்த்தியிருந்தார் அந்த நபர், மதன் பெரியசாமி.
உடனே,”சினேகாடீ (di) இப்போ உங்ககிட்டே கொடுத்த சாம்பில்லே மஞ்சள் கலர் இருக்கு அதைக் கொடுக்க முடியுமா?” என்று ஷண்முகவேலைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த சினேகாவிடம் கேட்டான்.
அதுவரை அவளைக் கண்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் பார்வை மாறியது. நொடிப் பொழுது மாற்றத்தை அவர் மறைக்கும் முன் சினேகா அவரைக் கண்டு கொண்டாள். அதை உறுதி செய்ய முடியாமல்,”மஞ்சள் கலர் ஆஸ்பிஷியஸ் அதான் அந்தக் கலர்லே கேட்டேன்.” என்று ஹிந்தியில் அவளிடம் நேரடியாக சொன்னார். அவரது ஹிந்தி அவளுடையது போல் தான் இருந்தது. அவரது தோற்றமும் மதராஸி போல் தான் இருந்தது. ‘இத்தனை பெரிய மைதானத்திலே, ஆயிரக் கணக்கான கடைகள் இருக்கும் போது அவங்களுக்கும் இந்த ஆளுக்கும் பொருள் வாங்க இந்தக் கடை தான் கிடைச்சுதா? ஆனா அவங்க எதுவும் வாங்கலையே..இவங்களோட துணைக்கு வந்தாங்களா? என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா என்னென்னு சொல்லி இவருக்கு அறிமுகப்படுத்த முடியும்னு சங்கடத்திலே கிளம்பிப் போயிட்டாங்களா?’ என்று பலவாறு யோசித்தபடி தரையில் கிடந்த பையை எடுத்து வந்து பிகாஸிடம் கொடுத்தாள்.
அதனுள்ளேயிருந்து ஐந்தாறு சாம்பில் துணிகளை வெளியே எடுத்துப் போட்டான் பிகாஸ். அனைத்திலுமே மஞ்சள் நிறத்தில் கறுப்பு, நீலம், அரக்கு என்று பல வண்ணங்களில் நுணுக்கமான வேலைப்பாடு இருந்தன.
“மஞ்சள் கலர்லே புதுசா டிசைன் செய்திருக்கோம்..இதிலே உங்களுக்குப் பிடிச்சதை உங்களுக்கு வேண்டிய அளவுலே நெய்து கொடுக்க முடியும்..புடவை கூட பாஸிப்பில்.” என்றான்.
மஞ்சளில் நீல நூல் வேலைப்பாடு கண்களைக் கவர, அதைக் கையில் எடுத்துப் பார்த்தவர் அதன் விலையைக் கேட்க,”புடவைன்னா முப்பதாயிரம்..துப்பட்டான்னா மூவாயிரம்..ஸ்டோல் அதை விட கொஞ்சம் கம்மியா வரும்..புடவையை ரெடி செய்ய நாலு மாசமாகும்..ஸ்டோல், துப்பட்டா இரண்டு மாசம்.” என்றான்.
அந்தத் துணியைத் திருப்பி பார்த்து, கையால் உணர்ந்து ‘விலை ஜாஸ்தி’ என்று திருப்பிக் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார் அந்த நபர்.
“இப்படித் தான் தீ (di) விலை ஜாஸ்தின்னு நிறைய பேர் சொல்லிட்டுப் போறாங்க..ஆன்லைன்லே நக்லி (duplicate) வாங்கிப் போட்டுக்கறாங்க.” என்று வருத்தப்பட்டான் பிகாஸ்.
“ஒரிஜினல் விலை ஜாஸ்தியா தான் இருக்கும்னு அவங்களுக்குத் தெரியலை போல.” என்று பதில் கொடுத்தாலும் அந்தப் பதிலில் சினேகாவிற்கே திருப்தி இல்லை. ஷண்முகவேலும் அந்த நபரும் அந்தக் கண்காட்சிக்கு வந்தது கைத்தறிப் பொருள் வாங்க இல்லையென்று திண்ணமாக தெரிந்திருந்திருக்க, அவனின் வேலையின் தன்மையை நினைத்துப் பார்த்தவளின் மனதனாது ஒரு மாதிரி அமைதியற்று போனது. அடுத்த அரைமணி நேரமும் அவளது விழிகள் ஷண்முகவேலைத் தேடியபடி இருந்தன. ‘கிளம்பிப் போயிட்டாங்களா? திரும்ப இங்கே வருவாங்களா?’ என்று அலைபாய்ந்து கொண்டிருந்த மனத்தை சம நிலைக்கு இழுத்து வந்து வேலையை முடித்துக் கொண்டுஒன்பது மணி போல் வீடு போய் சேர்ந்தாள். வீட்டினுள் நுழைந்தவுடனேயே அவளது வாயில் இனிப்பை திணித்து அவளது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டு திருமண வேலைகளுக்கு பிள்ளையார்சுழி போட்டாள் ஷிக்கா.
அதே நேரம் பிரகதி மைதானத்தின் வேறொரு கோடியில், அலுவலக அறையொன்றில் அவனுடைய உயர் அதிகாரி மதன் பெரியசாமி முன்னே யோசனையுடன் நின்று கொண்டிருந்தான் ஷண்முகவேல்.
“வேலு நீ என்ன நினைக்கற? நாளைக்கும் வரணுமா?” என்று அவனது அபிப்பிராயத்தைக் கேட்க,
“சர்..நாளைக்கு கடைசி நாள்..நிறைய கூட்டம் வர்ற வாய்ப்பு இருக்கு..நாளைக்கும் நாம இங்கே வரணும்..நம்ம கண்ணுலே அவன் தென்பட்டா நமக்கு கிடைச்ச இண்டல் உண்மை தான்னு உறுதியாகிடும்.” என்றான்.
“கண்காட்சி ஆரம்பிச்சதிலிருந்து சிசிடிவியை டெக்னிகல் டீம் செக் பண்ணிட்டு இருக்காங்க..அவங்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கலை..அதான் இன்னைக்கு உன்னைக் கொண்டு வந்தேன்….நாளைக்கு வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை வேலு..இன்னைக்கு தான் வருவான்னு தகவல் கிடைச்சது..நம்மகிட்டே இருக்கற புகைப்படம் தெளிவா இல்லை..அவனை நீ தான் சமீபத்திலே நேர்லே பார்த்திருக்க..லட்சம் பேர் இருந்தாலும் உன்னோட பார்வைலேர்ந்து அவன் தப்பிக்க முடியாது…நாளைக்கும் வரலைன்னா வி வில் ஹவ் நத்திங் வித் அஸ்..வேற வழிலே தான் இண்டல் கலெக்ட் செய்யணும்.” என்றார்.
சில சமயம் மாதக் கணக்கில் ஓர் ஆளை, இடத்தைக் கண்காணித்தாலும் அதில் பலன் ஏதுமில்லாமல் போயிருக்கிறது. பலனை எதிர்பார்த்து இது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அது நல்லவிதமாக முடிவதற்கு வாய்ப்பில்லை. பொறுமை, பொறுமை..இந்த வேலையில் சம்மந்தப்பட்டவர் அனைவர்க்கும் டன் கணக்கில்தேவைப்படும் பண்டம். ஒவ்வொரு நொடியையும் இதுதான் அந்த நொடியா?என்ற எதிர்பார்ப்பும் அதைக் கையாளத் தேவையான யுக்தி, வேகம் இரண்டும் அந்தப் பொறுமையினுள் புதைந்து இருக்க வேண்டும். கிட்டதட்ட ஆறு வருடங்களாக அவன் இதைச் செய்து வருவதால், அந்த அனுபவத்தில்,
“நாளைக்கும் வருவோம்..காண்டாக்ட் யாருன்னு நமக்குத் தெரியும்..அந்தக் காண்டாக்ட்டை முழுக் கண்காணிப்புலே வைப்போம்..அவன் வரலைன்னாலும் வேற யாராவது காண்டாக்ட்டை சந்திக்க வந்தா அதை நாம மிஸ் செய்யக் கூடாது..அதுவும் ஒரு லீட்..அது மூலம் புது இண்டல் கிடைக்கலாம்.” என்றான் ஷண்முகவேல்.
உடனே, அந்த அறையில் இருந்தவர்களிடம்,“ஓகே..நாளைக்கும் எல்லோரும் அவங்க அவங்க பொஸிஷனை மெயிண்டெயின் செய்யுங்க..பப்ளிக் யாருக்கும் எந்த சேதாரமும் நடக்கவே கூடாது..அப்படி ஏதாவது நடந்தா சர்கார் எந்த விளக்கத்தையும் ஏத்துக்காது.” என்று சொல்லி விட்டு அனைவர்க்கும் விடை கொடுத்து விட்டு புறப்பட்டு விட்டார் மதன் பெரியசாமி. அவர் சென்ற பின் அங்கேயிருந்தவர்களுக்கு அடுத்த நாள் செய்ய வேண்டியதை பட்டியலிட்டவன் அப்படியே அதுவரை அவர்கள் செய்த வேலைக்கு பாராட்டி விட்டு அவர்களை அனுப்பி வைத்து விட்டு கேட் மூடிய பின்னும் அந்த அறையில் தான் அமர்ந்திருந்தான் ஷண்முகவேல். வெளிப்பார்வைக்கு அமைதியாக தெரிந்தாலும் அவனது உள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
சினேகாவை அந்தக் கடையில் பார்த்ததும் அவனது மனத்தில் லேசான தடுமாற்றம். இதுவரை மிக அபாயகரமான ஆப்ரேஷன் போதும் இதுபோல் நேர்ந்ததில்லை. பத்து பேர் வசிக்கும் வீட்டினுள் புகுந்து, கைத்துப்பாக்கி, க்ரனேட்டுக்கு மத்தியில் சிறிதளவு பயம், படபடப்பு இல்லாமல், உயிர் சேதம் நேராமல் அவனுக்குத் தேவையான ஆளை அமைதியாக தூக்கி வந்திருக்கிறான். இன்று, ஏனோ அச்சத்திற்கு இடமளித்திருந்தது அவனது மனது.
நியாயமாகப் பார்க்கப் போனால் மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களில் அவளும் ஒருத்தி. ஆனால் காலையில் நடந்த நிகழ்வால் அந்த நியாயம் மாறி போயிருந்ததை அவனது மனத்தின் தடுமாற்றம் அவனுக்கு உணர்த்தியிருந்தது. அவனைப் பார்த்து அவள் சந்தோஷித்த அந்த நொடி அவனுள் அச்சத்தை ஏற்படுத்தியதால் தான் அவளுக்கு கண்களால் எச்சரிக்கை விடுத்தான். அவளும் அதைப் புரிந்து கொண்டு அவனைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாததில் அவனுள் பரவிய நிம்மதி உணர்வை இப்போதும் சிலமணி நேரங்கள் கடந்த பின்னும் அவனால் உணர முடிந்தது. இன்றைய சந்திப்பு அவளுள் அவனுடைய வேலையைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் அதை எப்படிச் சமாளிப்பது? அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? சமாதானம் செய்வது? என்று ஷண்முகவேல் யோசிக்க, அவர்களின் சந்திப்பை பற்றி அவனது வேலையைப் பற்றி சினேகாவிடமிருந்து ஒரு கேள்வி கூட வரவில்லை. அதே சமயம் அவனைச் சமாதானம் செய்யும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்த போது அதைச் செவ்வனே செய்தாள்.