அத்தியாயம் – 37

இப்படியொரு திருப்பத்தை மகளின் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத ஜோதிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, டீபாயில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டார். சில நொடிகள் கழித்து,”என்ன கேட்டீங்க விஜயாம்மா?” என்று கேட்டார்.

ஜோதியின் மனநிலை புரிந்ததால், இந்தமுறை,“ஷண்முகத்திற்கு சினேகாவைக் கட்டிக் கொடுப்பீங்களான்னு கேட்டேன்.” என்று மிகத் தெளிவாக அவரது எண்ணத்தை வெளியிட்டார் விஜயா.

சரியாக தான் கேட்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக உணர்ந்தாலும்,“உங்களுக்கு இந்த மாதிரி எண்ணம் இருக்கறது தம்பிக்குத் தெரியுமா?” என்று விஜயாவிடம் கேட்டார்.

“அவனுக்கு விருப்பமில்லைன்னா என்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்க மாட்டான்…நீங்க சினேகாவோட விருப்பத்தைக் கேட்டு சொல்லுங்க ஜோதி.” என்றார்.

அதைக் கேட்டு மனம் நிறைந்து போனது ஜோதிக்கு. அதே சமயம் சிறிது நேரத்திற்கு முன் அவருடைய மகளுடன் நடந்து உரையாடல்கள், அதிலிருந்த உண்மைகள் அவர்களது தகுதியை அவருக்கு அறிவுறுத்த,”அவகிட்டே கேட்க வேண்டிய அவசியமில்லை..ஒத்து வராது விஜயாம்மா.” என்று திருமணப் ப்ர்போசலை மறுத்தார்.

“ஏன் ஒத்து வராது? வயசு வித்தியாசத்தைப் பார்க்கறீங்களா? இடைவெளி அதிகம் தான்.. என்ன செய்ய, இப்போதான் அவனுக்கு வேளை வந்திருக்கு..அடுத்த முகூர்தத்திலே கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும்.” என்றார் விஜயா.

‘அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை..உங்க மகன் பெரிய அதிகாரி..நாங்க கிளார்க் குடும்பம்..தில்லிலே இந்த அந்தஸ்து இடைவெளியை செத்தாலும் கடக்க முடியாது..அப்படியே இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தாலும் உங்க மகனோட தகுதிக்கு என்னாலே கல்யாணம் செய்து கொடுக்க முடியாதே..கைலே இருந்த ரொக்கத்தை புதுக் கடைலே போட்டிருக்கேனே..இந்த மாதிரின்னு அன்னைக்கு கோவில்லே கோடிட்டு காட்டியிருந்தா பணத்தை கொடுத்திருக்க மாட்டேனே..அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் வைக்கணும்னு சொல்றீங்க..கார்த்திகை வரை கூட காத்திருக்க மாட்டீங்களா..ஐயோ இப்படி என்னை இக்கட்டிலே நிறுத்தி வைச்சிட்டேயா குருவாயூரப்பா.’ என்று ஜோதி மனத்தில் புலம்பித் தவிக்க, அது தெரியாமல்,

“என் மனசுலே இந்த மாதிரி ஓர் ஆசை கொஞ்ச நாளா இருக்குது ஜோதிம்மா..சினேகாக்கும் சாமிக்கும் ஒத்துப் போகும்னு திடமாத் தோணுது..அன்னைக்கு கோவில்லே கல்யாணம் பெண் போல சினேகாவைப் பார்த்த போது தோணாதது இன்னைக்குக் காலைலே பூங்காவிலே அவங்க இரண்டு பேரையும் பார்த்த போது தான் தோணிச்சு..சாமியை போல் விளையாட்டிலே நாட்டம் இருக்கு..உடற்பயிற்சி செய்யற பழக்கம் இருக்கு..அவன் அமைதிக்கு சினேகாவோட கலகலப்பு சரியாப் பொருந்திப் போகும் ஜோதிம்மா..

சாமி கல்யாணத்தை பெரிசா செய்யணும்னு எனக்கு ஆசையில்லை..நாலு பெரியவங்களைக் கூப்பிட்டு. கடவுள் சன்னதிலே நல்லபடியா செய்தா போதும். ” என்றார்.

‘கடவுளே கல்யாணம் வரை போறாங்களே..இந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே..அவ ஒத்துக்கிட்டாலும் குறைஞ்ச அவகாசத்திலே எப்படிக் கல்யாணத்தை முடிக்கறது.’ என்று ஜோதியின் மனது எல்லாத் திசையிலும் பயணம் செய்ய, தலை கிறுகிறுத்துப் போக, மனத்தையும் உடலையும் சமநிலைக்குக் கொண்டு வந்து,”சினேகாவைப் பெண் கேட்டு வந்திருக்கீங்கண்ணு என்னாலே நம்பவே முடியலை…அவ சம்மதிச்சாலும் உடனே கல்யாணத்தை நடத்த கைலே காசு இல்லை..அன்னைக்கு நடந்தது உங்களுக்கும் தெரியும் தானே..அதனாலே இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு ஷிக்காவோட புதுக் கடைலே காசைப் போட்டு நானும் அவளும் பார்ட்னராகி இருக்கோம்..கடை வேலை இப்போதான் ஆரம்பமாகியிருக்கு..கைலே காசு பார்க்க எப்படியும் ஒரு வருஷமாகிடும்..”என்றவரை இடைமறித்து,

“சினேகா விருப்பத்தைக் கேட்டு சொல்லுங்க ஜோதி..என்னோடது எல்லாம் சாமிக்கு தான்..அதனாலே கல்யாணச் செலவைப் பற்றி கவலைப்படாதீங்க..நாங்க பார்த்துக்கறோம்..என்னோட அண்ணன் பசங்க, அக்கா பிள்ளைங்க தில்லிக்கு வரணும்னு ஆசைப்படறாங்க நீங்க கல்யாணத்தை இங்கே வைச்சாலும் பிரச்சனையில்லை..என் அக்காவாலே கல்யாணத்திலே கலந்துக்க முடியாது..சிந்துக்குப் குழந்தை பிறந்து மூணு மாசம் வரை அவளோட தான் இருப்பாங்க..என் சைட்லே அண்ணனும் அண்ணியும் தான் பெரியவங்களா கல்யாணத்திலே கலந்துக்குவாங்க..உங்க சைட்லே இருக்கற பெரியவங்களைக் கூப்பிடுங்க..நிறைவா நடத்திலாம் கல்யாணத்தை.” என்றார் விஜயா.

அவர் சொன்னதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போன ஜோதி ஒரு தீர்மானாத்திற்கு வந்தார். காசியப்பனுக்கு கொடுக்க வேண்டியதை ஒத்திப் போட்டு மகளின் திருமணத்தை நடத்த முடிவு செய்து, அவருடைய கைப்பேசியை எடுத்து சினேகாவிற்கு அழைப்பு விடுத்தார். விஜயாவின் முன்னிலையில் மகளிடம் பேசுவது சங்கடத்தை கொடுத்தாலும் இந்த விஷயத்திற்கு உடனே ஒரு முடிவு தெரிந்தால் நிம்மதியாக இருக்குமென்று தோன்ற சினேகாவை அழைத்து விட்டார். மெட்ரோ இரயில் நிலையத்திற்கு வெளியே ஷேர் ஆட்டோ பிடிக்க காத்திருந்த சினேகா அவரின் அழைப்பை ஏற்று,”என்ன ஆச்சு, கடலை மாவு புளிச்சிடுச்சா..குளிர்க் காலம்னு அவங்க வர்றத்துக்கு முன்னாடியே ஃப்ரிஜ்லேர்ந்து வெளியே எடுத்து வைக்காதீங்கண்ணு சொல்லணும்னு நினைச்சேன்..காலைலே மட்டும் தான் குளிருது அப்புறம் வெய்யில் கொளுத்துதின்னு உங்களுக்குத் தெரியலையா? அந்த மாவை அப்படியே ஃப்ரிஜ்லே வைச்சிடுங்க.இராத்திரிக்கு தக்காளி ஆம்லெட் போட்டுக்கலாம்..புதுசா மாவு கரைச்சு ஆன்ட்டிக்கு போண்டா செய்து கொடுங்க..பேசன் (கடலை மாவு) கவரை ஃப்ரீசர் கதவுலே வைச்சிருக்கேன்..உங்களாலே முடியாதுன்னா இப்போவே சொல்லுங்க இன்னும் நான் ஆபிஸுக்கு போகலை..ஷேர் ஆட்டோக்கு காத்திட்டு இருக்கேன் அப்படியே திரும்ப ஸ்டேஷ்னுள்ளே போய் மெட்ரோ பிடிச்சு வீட்டுக்கு வந்திடறேன்..” என்றாள்.

எப்படி விஷயத்தை மகளிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த ஜோதி,”வந்திடு..உன் மாமியாருக்கு உன் கையாலே போண்டா செய்து கொடு.” என்று பட்டென்று விஷயத்தைப் போட்டுடைத்தார்.

ஜோதி மறைமுகமாக சொன்னது தெளிவாக சினேகாவைப் போய் சேர்ந்தாலும் அவளால் அதை நம்பமுடியவில்லை. எனவே,”அம்மா என்ன உளறிட்டு இருக்கீங்க? யார் வந்திருக்காங்க நம்ம வீட்டுக்கு?” என்று கேட்டாள்.

“விஜயாம்மா தான்..இங்கே என் முன்னாடி தான் உட்கார்ந்திருக்காங்க..அவங்க மகன் தான் அழைச்சிட்டு வந்தார்..திடீர்னு அவருக்கு வேலை வந்திடுச்சு..’அவசரமா ஆபிஸ் போகணும் ஆன்ட்டி..அம்மாவை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக டிரைவரை வரச் சொல்லியிருக்கேன்னு’  சொல்லிட்டு அந்தத் தம்பி கிளம்பிப் போயிட்டார்..நம்ம வீட்டுக்கு வந்திட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறாரேன்னு போண்டாவை உன்னோட டிஃபன் பாக்ஸ்லே போட்டு கொடுத்தனுப்பினேன்.” என்று அவள் கேட்டதற்கு பதில் சொன்னவர் அப்படியே அவள் கேட்காததற்கும் சேர்த்து பதில் சொன்னார்.

‘ஆன்ட்டியும் அவங்க மகனும் என்னைப் பெண் கேட்டு வந்திருக்காங்களா?’ என்று சினேகா உணர்ந்த நொடி அவளது கை, கால்கள் செயலிழக்க, அதே இடத்தில் அவள் மரம் போல் நின்று கொண்டிருக்க,”ஃபோன் பேச வேற இடம் கிடைக்கலையா?” என்று யாரோ அவளைத் தள்ளிக் கொண்டு போக, தன்னுர்வுக்கு வந்தவள்,”அம்மா” என்று பலவீனமான குரலில் அழைக்க, மகளின் மனநிலை புரிந்து போக,”விஜயாம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்கு உன்னைப் போல தான் இருந்திச்சு..உன்னோட சம்மதம் தான் முக்கியம்னு சொல்லிட்டாங்க..உனக்குப் பிடிக்கணுங்கறாங்க..அதான் உடனே உனக்கு ஃபோன் செய்திட்டேன்.” என்றார்.

நடப்பதை நம்பமுடியாமல் சினேகா வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க சில நொடிகள் கழித்து அவளைச் சுற்றி சுழன்று கொண்டிருந்த உலகம் சினேகாவிற்கு நிஜத்தை உணர்த்த,”அம்மா, நம்ம நிலைமை தெரியுமில்லே..இப்போ தான் மனோகருக்கு பணத்தைக் கொடுத்தோம்..திரும்பிக் கொடுன்னு அவன்கிட்டே கேட்க முடியாது..வனிதா கல்யாணத்துக்கு முன்னே அப்பா வாங்கின கடனை வேற அடைக்கணும்..இந்த நிலைலே என் கல்யாணத்தை எப்படி நடத்துவீங்க?” என்ற கேள்வியில் மகளின் மனது, விருப்பம் அம்மாவிற்கு புரிய,

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்..அவங்க மருமகளுக்கு செய்ய விஜயாம்மாவும் தயாரா இருக்காங்க..உன் சம்மதம் தான் தேவை..விஜயாம்மாகிட்டே ஃபோனை கொடுக்கறேன்..நீயே அவங்ககிட்டே சொல்லிடு.” என்று அவரது கைப்பேசியை விஜயாவிடம் கொடுத்தார் ஜோதி.

“சாமியைக் கட்டிக்க சம்மதமா கண்ணு?” என்று அவளிடம் கேட்டார்.

அதற்கு,“அவங்க என்ன சொன்னாங்க ஆன் ட்டி?” என்ற கேள்வியுடன் வந்தாள் சினேகா.

“அவனுக்கு இஷ்டம் தான் கண்ணு..நீ வேணாம்னு சொல்லிடுவேயோன்னு ஒரு பயம்..அதனால் தான் அவசர வேலைன்னு ஓடிப் போயிட்டான்னு நினைக்கறேன்.” என்று விஜயா விட் அடிக்க, அம்மா, மகள் இருவரும் சிரிக்க, சந்தோஷம் அங்கே சிறகடிக்க,”உங்க மருமகளை வீட்டுக்குக் கூப்பிட்டு அவ கையாலே இனிப்பு செய்து கொடுக்கச் சொல்லுங்க.” என்றார் ஜோதி.

“வேலைக்கு போகற பிள்ளையைத் திடீர்னு வீட்டுக்கு வரச் சொல்லக் கூடாது..அதுக்கு ஆயிரம் வேலை காத்திட்டு இருக்கும்..இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” என்றார் விஜயா.

“அந்த ஃபோனை என்கிட்டே கொடுங்க.” என்று விஜயாவிடமிருந்து கைப்பேசியை வாங்கியவர்,”சாயங்காலம் வரை விஜயாம்மா நம்ம வீட்லே தான் இருக்கப் போறாங்க..பர்மிஷன் எடுத்திட்டு வந்திடு..மனோகரையும் ஷிக்காவையும் வரச் சொல்றேன்.” என்றார்.

“அம்மா, இன்னைக்கு சாயங்காலம் முடியவே முடியாது..மும்பை டிசைனர் ஒரு வேலை சொல்லியிருக்கார்..ஆபிஸ்லேர்ந்து நேரா பிரகதி மைதானுக்குப் போகப் போறேன்.” என்றாள் சினேகா.

“ஜோதி பிள்ளையைக் கட்டாயப்படுத்தாதீங்க..சாயங்காலம் சாமியாலே வர முடியுமான்னு தெரியலை..உங்க மகன், மருககிட்டே முதல்லே விஷயத்தை சொல்லுங்க..இன்னொரு நாள் சந்திப்பை வைச்சுக்கலாம்.” என்றார்.

“நல்லவேளை இரண்டு பேரும் ஏற்கனவே நேர்லே சந்திச்சிருக்காங்க..அறிமுகம் இருக்கு..இல்லைன்னா அவங்களை நேர்லே சந்திக்க வைச்சு, பேச வைச்சு, அவங்க சம்மதத்தை கேட்டு கல்யாணத்தை முடிக்கறது பகீரதப்பிரயத்தனாகிடும்.” என்று சொன்ன ஜோதிக்குத் தெரியவில்லை அன்று மாலையில் பிரகதி மைதானத்தில் அவருடைய மகளும் வருங்கால மருமகனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் அதே சமயம் அறிமுகம் இல்லாதவர்கள் போல் நடந்து கொள்ளப் போகிறார்களென்று.