சினேகாவின் வீடு இருந்த சந்தின் ஆரம்பத்தில் அவனது வண்டியை நிறுத்திய ஷண்முகவேல்,”எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கறீங்க ம்மா?” என்று கேட்டான்.
சில நொடிகளுக்கு யோசித்தவர்,”என்னோட கல்யாணத்தை முடிச்சுக்கணும்னு பிடிவாதமா இருந்தவ இப்போ உன்னோட கல்யாணத்தை முடிக்கணும்னு பிடிவாதமா இருக்கேன்..அந்த முடிவு நல்ல முடிவுன்னா இந்த முடிவும் நல்ல முடிவு தான்..என் போக்கிலே என்னை விடுங்க சாமி..” என்றார்.
“அம்மா, அதில்லை ம்மா, இது வேற மாதிரி முடிஞ்சா உங்களுக்கு தான் மனசு வருத்தமா இருக்கும்..இப்படியே திரும்பிப் போயிடலாம் ம்மா.” என்று சொன்னவனின் மனது ‘உனக்கு அதை விட வருத்தமா இருக்கப் போகுது..அதான் போயிடலாம்னு சொல்ற’ என்று சொன்னது.
“வேணாம் சாமி..இப்போ இருக்கற தைரியம் திரும்ப வருமான்னு தெரியலை..இன்னைக்கே இதை முடிச்சிடறேன்..இல்லைன்னா என் மனசு என்னை நிம்மதியா இருக்க விடாது.” என்றார்.
இருவரும் வண்டியை விட்டு இறங்கி சினேகாவின் வீட்டை நோக்கி சென்றனர். சினேகா தான் விஜயாவோடு அவளின் வீட்டு முகவரியைப் பகிர்ந்து கொண்டிருந்தாள். அது மட்டுமில்லாமல் ஜோதிக்கு ஈடாக இல்லையில்லை அவருக்கும் மேலாக எக்கசக்கமான அட்வைஸ்களை கொடுத்து விட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தாள். வீட்டை விட்டு வெளியேறும் போது கூட,
“ஏன், என்னென்னு கேட்டா,’உடம்பு முடியலை அதான் பேசலைன்னு சொல்லுங்க.” என்று ஜோதிக்கு ஆயிரமாவது முறையாக ஆலோசனை அளிக்க,
“போதும் டீ..பள்ளிக்கூடத்துக்கு போகற சின்ன பிள்ளை மாதிரி படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்க..எல்லாம் நீ கிளப்பி விட்டதுனாலே வந்தது.” என்று கோபம் கொண்டார் ஜோதி.
“நான் ஒண்ணும் கிளப்பி விடலை..ஏற்கனவே இருக்கிறது தான்..தில்லி அதிகாரிங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டாள்.
அதற்கு,“சாகறவரை அவங்கெல்லாம் சார் தான்.” என்றார் ஜோதி.
“புரியுதுயில்லே..பார்த்து நடந்துக்கோங்க..உருளைக்கிழங்கு மசாலாவை உருட்டி வைச்சிருக்கேன்..கடலை மாவை கரைச்சு வைச்சிருக்கேன்..எண்ணெய்லே போடணும்..செய்திடுவீங்க தானே? இல்லை நான் பர்மிஷன் போடட்டும்மா?” என்று கேட்டாள்.
“உருளைக்கிழங்கு போண்டாவை உனக்கு அறிமுகப்படுத்தி வைச்சதே நான் தான்..என்கிட்டேயே இப்படிக் கேட்கற.” என்று கடுப்படித்தார் ஜோதி.
“அம்மா, தேவையில்லாமப் பேசாதீங்க..செய்வீங்களா? மாட்டீங்களா?” என்று குரலை உயர்த்த,
“இவ்வளவு ஏற்பாடு தேவையா? அந்தத் தம்பி அதிகாரி வர்க்கம்..நம்ம வீட்டுக்கெல்லாம் வர மாட்டார்..விஜயாம்மா மட்டும் தான் வருவாங்க.” என்றார் ஜோதி.
“அவங்க அந்த மாதிரி அதிகாரி கிடையாது..அப்படி இருந்தா ஆன்ட்டியை நம்மளோட பழக விட்டிருக்க மாட்டாங்க.” என்றாள்.
“இதைத் தான் நான் அன்னைக்கே சொன்னேன்..காதிலே போட்டுக்காம என்னைக் குழப்பி விட்டிட்டு இப்போ நான் சொன்னதை எனக்கே சொல்ற..சின்ன வயசுலேர்ந்து சுயமா சிந்திச்சு முடிவு எடுக்குது அந்தத் தம்பி..கல்யாணம் மட்டும் விஜயாம்மா முடிவு போல அதான் இத்தனை நாளா ஒத்தையா இருக்குது.” என்று அவரது அனுமானத்தை சொல்ல,
”அதெல்லாம் நமக்கு எதுக்கு ம்மா?”
“அந்தத் தம்பியை அழைச்சிட்டு வர்றதா விஜயம்மா சொன்னாங்களா? என்று கேட்க,
“முகவரி கேட்கும் போது அப்படி எதுவும் சொல்லலை…இன்னைக்கு வீட்லே தான் இருக்கப் போறாங்க..நீங்க சொல்ற மாதிரி டிரைவரோட கூட ஆன் ட்டியை அனுப்பி விடலாம்..அவங்க வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி நீங்க தேவையில்லாத விஷயத்தைப் பேசாதீங்க.” என்று எச்சரிக்கை செய்ய,
“என்ன பேசணும்னு பட்டியல் போட்டு கொடுத்திடு..அதைப் பார்த்து, கவனமாப் பேசுறேன்.” என்றார்.
“அம்மா, அவங்களோட சொந்த விஷயம், நம்ம சொந்த விஷயம் இரண்டும் வேணாம்.” என்று சொன்னவளுக்கு தெரியவில்லை அவர்களின் சொந்த விஷயத்தைப் பேசத் தான் விஜயா வருகிறாரென்று.
“சரி பேசலை..புதுக் கடையைப் பற்றி பேசறேன்.” என்றார் ஜோதி.
“குட் டெசிஷன் ம்மா..ஆன்ட்டி கிளம்பிப் போன பிறகு எனக்கு ஒரு ஃபோன் போடுங்க.” என்றாள் சினேகா.
“மாட்டேன்..என்ன நடந்திச்சுன்னு சாயங்காலம் வீட்டுக்கு வந்து தெரிஞ்சுக்கோ.” என்று சொன்ன ஜோதிக்கு தெரியவில்லை விஜயா வந்து போன பிறகு ஃபோன் போட்டு மகளை உடனே வீட்டுக்கு அழைக்கப் போகிறாரென்று.
இரண்டு அறைகளைக் கொண்டு வீட்டை விருந்தினர் வருகைக்கு தயார் செய்து வைத்திருந்தாள் சினேகா. வாயில் அழைப்புமணி ஓசையை கேட்டு கதவைத் திறந்த ஜோதியின் வாயிலிருந்து ஓசை வரவில்லை. அவருடைய வீட்டு வாசலில் ஷண்முகவேலின் தரிசனம் கிடைத்ததால் பேச்சு வரவில்லை.
“ஹலோ ஆன்ட்டி” என்று அவன் சொன்னவுடன் தான் அவரது புலன்கள் விழித்துக் கொண்டன.
“வாங்க தம்பி..வாங்க விஜயாம்மா.” என்று ஷண்முகத்தின் அருகில் நின்றிருந்த விஜயாவையும் வரவேற்றார் ஜோதி.
அவனுடைய அம்மாவும் ஜோதி ஆன்ட்டியும் பேசும் போது அவன் உடன் இருக்க வேண்டுமென்று தான் சினேகாவின் வீட்டிற்கு வந்திருந்தான் ஷண்முகம்.
முதலில் பொதுவான விஷயங்கள், புதுக் கடை என்று பொழுது போய்க் கொண்டிருக்க, ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க விஜயா நினைத்த போது ஷண்முகத்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைத்தது சபாபதி.
“அம்மா, நீங்க பேசிட்டு இருங்க..இந்த அழைப்பை பேசிட்டு வரேன்.” என்று வீட்டிலிருந்து வெளியே சென்றான்.
சிக்னல் கிடைக்காமல் தெருவில் இங்குமங்கும் செல்ல, அதற்குள் இரண்டுமுறைக்கு மேல் அழைத்து விட்டார் சபாபதி. யோசனையோடு அவரது அழைப்பை ஏற்க,” மீதிப் பணத்தை தீபாவளிக்கு முன்னாடி அனுப்பி வைக்க முடியுமா ஷண்முகம்?” என்று கேட்டார்.
அவசரமில்லை என்று சொன்னவர் இப்போது உடனே மீதிப் பணத்தை அனுப்பி வைக்கும்படி கேட்க, விஷயம் என்னயென்று தெரியாமல் பணத்தை அனுப்பி வைக்கக் கூடாதென்ற முடிவிற்கு வந்தவன்,”ஆடிட்டர் வங்கிக் கணக்கைப் பார்த்திட்டு இருக்கார் பெரியப்பா..அடுத்த மாசம் மீதியை அனுப்பி வைச்சிடுறேன்.” என்றான்.
“அடுத்த மாசமா? அதுக்கு முன்னாடி முடியாதா?” என்று சபாபதி கேட்க,
“யாருக்குத் தேவைப்படுது? இப்போவே என்னோட கணக்குலேர்ந்து அனுப்பி விடறேன்..ஓகே தானே.” என்று அவர் ஒத்துக் கொள்ள மாட்டாரென்று தெரிந்தே அந்தத் தீர்வைக் கொடுத்தான்.
“வேணாம்..வேணாம்..நான் பேசிக்கறேன்..அடுத்த மாசம் கண்டிப்பா அனுப்பி விடணும் நீ.” என்று கட்டளையிட்டார் சபாபதி. இது போல் அவனிடம் அவர் பேசியதே இல்லை.
அப்போது அவனுடைய இன்னோரு கைப்பேசியில் அலுவலகத்திலிருந்து அழைப்பு வர,”அனுப்பிடறேன்.” என்று சொன்னவன் இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளாமல் இனி ஒரு பைசா கூட அனுப்பக் கூடாதென்று முடிவெடுத்தான். இதைப் பற்றிய விசாரணையை அவனுடைய அம்மாவிடமிருந்து ஆரம்பிக்க நினைத்தான். ஆனால் அந்த நினைப்பைச் செயல்படுத்த அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவனது கல்யாண யோகம் கூடி வந்ததால் வசந்திக்கான காலம், நேரம் கூடி வரவில்லை. அப்படி கூடி வந்திருந்தால் வசந்திக்கு விஷயம் தெரிய வருமுன் இவனுக்குத் தெரிய வந்திருக்கும். கயவனான அவளுடைய கணவன் அவளை அதல பாதாளத்தில் தள்ளி விடுமுன் அவள் கண்முன்னே அவனைக் கூண்டினுள் தள்ளி கதற அடித்திருப்பான்.
கண்ணுக்கு முன் இருந்த கணவன் புதியவனாக தெரிந்தான் வசந்திக்கு. அவளை விட இரண்டு வயது பெரியவன் இப்போது முப்பது வயது இளைஞன் போல் தோற்றமளித்தான். இந்தமுறை வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பி வந்தவனின் தோற்றம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது. புது ஹேர்ஸ்டைல், மழுக்கப்பட்ட தாடை, முகத்தில் தெரிந்த பொலிவு எல்லாம் சேர்ந்து அவனது வயதை குறைத்துக் காட்டியது. காலம் காலமாய் நாப்பது ரூபாய்க்கு முடி வெட்டும் முடித்திருத்தகத்திற்கு நாயாக அலைந்து தேடிச் செல்பவன் திடீரென்று ஆயிரக் கணக்கில் செலவழித்திருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
மனத்தின் குழப்பத்தை மறைத்து,“ஏங்க போய் முடி வெட்டினீங்க..உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு..அஞ்சு வயசு குறைஞ்சு போயிடுச்சு.” என்று கணவனின் தோற்றத்தை மனதாரப் பாராட்டினாள்.
அதற்கு வெங்கடேஷ் பதில் அளிக்கும் முன்,”அவனோட படிப்பு, வேலை, சம்பாத்தியம் எல்லாம் அவனுக்கு தனி மிடுக்கைக் கொடுக்கும்..இத்தனை நாள் அவன் அதை உணரலை..இப்போ தான் அவனோட மதிப்பு அவனுக்கே புரியது..மாப்பிள்ளை மாதிரி இருக்கே டா..பொண்ணு தயாரா இருந்தா இந்தத் தீபாவளி உனக்கு தலை தீபாவளி தான்.” என்றுசீதா சிலாகிக்க,
“நீங்க வேற ம்மா..தலை முடியை வெட்டியிருக்கேன், மீசையை எடுத்திருக்கேன், ஃபேஷியல் செய்தேன்..அவ்வளவு தான்..இதுக்கே நீங்க என்னை புது மாப்பிள்ளை ஆக்கிட்டீங்க.” என்று சிரித்தபடி அவன் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷ் அவளுடைய கணவன் வெங்கடேஷ் இல்லை என்று கன்ஃபர்மானது வசந்திக்கு.
அவனுடைய அம்மாவிடம் மெல்லிய குரலில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான் ஷண்முகம். அப்படியே ஜோதியின் புறம் திரும்பி,”ஆன்ட்டி, எனக்கு அவசரமா போகணும்..அனிஷை வரச் சொல்லியிருக்கேன்..அவன் வர எப்படியும் அரைமணி நேரமாகும்.” என்றான் ஷண்முகம்.
“அதனாலே என்ன தம்பி..சாயங்காலம் வரை கூட விஜயாம்மா இங்கே இருக்கட்டும்..பிரச்சனையில்லை.” என்றார் ஜோதி.
உடனே,”நீ எப்படிப் போவ சாமி?” என்று விஜயா கவலைப்பட,
“அப்போ நீ கிளம்பு சாமி..வீட்டுக்குப் போனதும் உனக்கு ஃபோன் செய்யறேன்.” என்றார் விஜயா.
“வேணாம் ம்மா..நேர்லே பேசிக்கலாம்..வரேன் ஆன்ட்டி..வரேன் ம்மா.” என்று இருவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு செல்லயிருந்தவனை,”ஒரு நிமிஷம் தம்பி..வீட்டுக்கு வந்திட்டு ஒண்ணுமே சாப்பிடாமாப் போறீங்க..ஒரு போண்டாவது சாப்டிட்டு போங்க..மாவைக் கரைச்சு, மசாலாவைத் தயார் செய்து வைச்சிட்டுப் போயிருக்கா சினேகா.” என்று நிறுத்தினார் ஜோதி.
முதலில் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கே ஒரு அவசரச் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அத முடிந்தததும் தான் அடுத்தது என்னயென்று தெரிய வரும். அதுவரை உணவு பற்றி யோசிக்கக் கூட அவகாசம் கிடைக்காதென்பதால், சினேகாவின் தயாரிப்பை ருசி பார்க்க வேண்டுமென்று அவனது மனம் ஆசைப்பட்டதால்”அதை ஒரு டப்பாலே போட்டுக் கொடுங்க.” என்றான் ஷண்முகவேல்.
அதைக் கேட்டு ஜோதியின் முகமும் மனமும் மலர்ந்து போக, ஷண்முகம் விரும்பியபடி அதை ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு,”தாங்க்ஸ் ஆன் ட்டி.” என்று ஜோதிக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றான் ஷண்முகம்.
அதுதான் சரியான சந்தர்ப்பமென்று உணர்ந்த விஜயா,”நேத்து நைட் தான் வந்தான்..இன்னைக்கு என்கூட தான் இருக்கப் போறேன்னு சொன்னான்..இப்போ திடீர்னு வேலை இருக்குன்னு கிளம்பிப் போறான்..அரசாங்க வேலையா இருந்தாலும் இந்த மாதிரி கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வந்து போகற ஆளைக் கல்யாணம் செய்துக்க எந்தப் பொண்ணு விரும்பும்..அப்படியே விரும்பினாலும் அவங்க அப்பாவைப் பற்றி தெரிஞ்ச பிறகு அவனையும் அதே தராசிலே தான் வைப்பாங்கண்ணு அஞ்சுக்கிட்டு..கல்யாணம் வேணாம்னு சொல்றான்.” என்றார்.
அதற்கு,”மனோ இப்போ ஷிஃப்ட்லே வேலை பார்க்கறான்..மூணு நாலு வருஷத்திலே அவனுக்கு பதவி உயர்வு வந்ததும் காலைலே போயிட்டு சாயங்காலம் வந்திடுவான்..தம்பிக்கும் பெரிய பதவி கிடைச்சதும் காலைலே போயிட்டு சாயங்காலம் வந்திடுவார்..அம்மா, அப்பா யாரு, அவங்க வசதி எப்படின்னு பெற்றவங்களைப் பற்றி எல்லோரும் தோண்டித் துருவிப் பார்க்கறதில்லை விஜயாம்மா..என்னைப் பொறுத்தவரை பெண் எப்படி, பையன் எப்படின்னு தீர விசாரிக்கணும்..அவங்க தானே வாழப் போறாங்க…அவங்க இரண்டு பேரோட பொருத்தத்தைத் தான் பார்க்கணும்.” என்றார் ஜோதி.
உடனே,”அப்போ என் மகனை மட்டும் பார்த்து உங்க மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பீங்களா ஜோதி?” என்று தடாலடியாக கேட்டார் விஜயா.