அத்தியாயம் – 35

அடுத்த நாள் மதியம் போல் ஜோதிக்கு கைப்பேசி அழைப்பு விடுத்தார் விஜயா. அவரது அழைப்பை ஜோதி ஏற்கவில்லை. மீண்டுமொருமுறை முயற்சி செய்த போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போனவுடன் நடந்ததிலிருந்து வெளி வர ஜோதிக்கு சிறிது அவகாசம் கொடுக்க முடிவு செய்தார் விஜயா. அந்த நிகழ்விலிருந்து வெளி வர ஜோதிக்கு மட்டுமில்லை சினேகாவிற்கும் அவகாசம், தனிமை தேவைப்பட்டது. ஆனால் ஜோதி, சினேகா இருவரின் காரணமும் வெவ்வேறாக இருந்தது. அத்தனை முயற்சி செய்தும் மகளுக்கு அந்த வரன் அமையவில்லையே என்று மனவருத்தத்தில் இருந்தார் ஜோதி. எப்படி அவளது நிலையை, தகுதியை மறந்து அவளது மனம் அவன் மீது நாட்டம் கொண்டது என்று அவளை வருத்திக் கொண்டிருந்தாள் சினேகா. 

‘நல்லவேளை நம்ம மனசுலே இருக்கறது யாருக்கும் தெரியறத்திற்கு முன்னாடி நம்ம தகுதியைச் சுட்டிக் காட்டி நம்ம கண்ணைத் திறந்த அந்தப் பையனோட அம்மாக்கு தான் பெரிய நன்றி சொல்லணும்…பிரைவேட்லே வேலை பார்க்கறவனைக் கல்யாணம் செய்துக்க நமக்கு வக்கு இல்லை..அரசாங்க அதிகாரி மேல ஆசை வைச்சிருக்கேன்.’ என்று அவளது மனத்தின் ஆசை நியாயமானதில்லை, நடக்கப் போவதில்லை என்று அந்த எண்ணத்திற்கு ஜீவசமதியை எழுப்பி விட்டாள். 

அம்மாவும் தங்கையும் அவரவர் வேதனையில் ஊழன்று கொண்டிருக்க, அவனது வேண்டுகோளை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று அவர்களை அணுகினான் மனோகர்.

“எப்படி டா உன்னாலே இப்படிக் கேட்க முடியுது?” என்று வேதனையோடு மனோகரிடம் கேட்டார் ஜோதி.

இரண்டு அறைகளைக் கொண்டு வீட்டில், வாசலில் இருந்த திவானில் அமர்ந்திருந்தான் மனோகர். அவனருகே ஜோதி அமர்ந்திருக்க, அவர்களெதிரே ஒரு ஸ்ட்டூலில் அமர்ந்திருந்த சினேகா,

“எப்போ வேணும்?” என்று அவனிடம் கேட்டாள்.

அந்தக் கேள்வியே அவளுக்கு ஆட்சேபணை இல்லை என்று புரிய வைக்க,”இந்த வாரக் கடைசிவரைக்கும் அவகாசம் இருக்கு.” என்றான்.

உடனே,“பைத்தியமா டீ நீ?” என்று வெடித்தார் ஜோதி.

“அதுக்கு பதில் உங்களுக்கே தெரியும்.” என்று சொன்னவள், மனோகரின் புறம் திரும்பி,”நீ கேட்கற பணத்தைக் கொடுக்கறேன்..ஆனா சில கண்டிஷன்ஸ் இருக்கு.” என்றாள்.

“எல்லாக் கண்டிஷன்ஸுக்கும் ஓகே.” என்று உடனே சம்மதம் தெரிவித்தான் மனோகர்.

அது நடந்த இரண்டாவது நாள் ஷிக்காவின் புதுக் கடையில் வேலைகள் ஆரம்பமாகின.  சினேகாவின் முடிவில் ஜோதிக்கு உடன்பாடில்லை.

“இந்த வரன் இல்லைன்னா வேற வரன்…இன்னும் இரண்டு இடம் உனக்கு ஏத்த மாதிரி பார்த்து வைச்சிருக்கேன் டீ..ஒத்து வந்திச்சுன்னா டக்குனு கல்யாணத்தை முடிச்சிடுவேன்..எதுக்கு அவனுக்குப் பணத்தைத் தூக்கி கொடுக்க ஒத்துக்கிட்ட..அது உன் கல்யாணத்துக்காக ஒதுக்கி வைச்சது.” என்றார் ஜோதி.

“என் கல்யாணத்துக்கு அவசரமில்லை.” என்று சினேகா சொன்னவுடன்,

“அப்போ எதுக்கு பொண்ணு பார்க்க ஒத்துக்கிட்ட?”

“அதான் எனக்கும் புரியலை..உங்களோட தொல்லையைத் தாங்க முடியுமா தான்னு நினைக்கறேன்.” என்று சொன்ன சினேகா, ஜோதியை அணைத்து,”ப்ளீஸ்..பணத்தை வைச்சுக்கிட்டு இல்லைன்னு சொல்றது தப்புன்னு தோணிச்சு..மனோக்கு நம்மை விட்டா வேற யார் உதவி செய்வாங்க..ஷிக்காக்கும் ஒரு நல்ல வாய்ப்பு ம்மா இது..நல்ல இடம், பெரிய கடை, வியாபாரம் பிக் அப் ஆகிடும்மா..நாம இரண்டு பேரும் அதிலே பார்ட்னர் ம்மா..இனி அவளோட லாபத்திலே நம்மளுக்கும் பங்கு உண்டு.” என்றாள் சினேகா.

“வனிதா கல்யாணத்துக்கு முன்னே உங்கப்பா வாங்கின கடனை அடைக்கணும்..அப்புறம் ஆத்திர அவசரத்துக்கு நம்மகிட்டே பெரிசா எதுவும் இருக்காது.” என்றார் ஜோதி.

“இனி அவன் தான் சமாளிச்சுக்கணும்னு மனோவுக்கு தெரியும் ம்மா….எப்படி பணத்தை அனுப்பி வைக்கறதுன்னு மாமாகிட்டே கேளுங்க அவர் சொல்றபடி அனுப்பி வைச்சிடலாம்.” என்றாள்.

“அண்ணனோட கணக்குக்கு தான் அனுப்பி வைக்கணும்.” என்றார் ஜோதி.

“அவங்க கணக்குக்கு அனுப்பி வைச்சு அதிலிருந்து அந்த ஆள் கணக்குக்கு இல்லை கைலே கொடுக்கறது எல்லாம் தேவையில்லாத வேலைன்னு தோணுது..நீங்க நேரடியா போய் அந்த ஆள் கைலே கொடுத்து, கணக்கு முடிஞ்சிடுச்சுன்னு எழுதி வாங்கறது தான் நல்லது..பெரிய மாமாகிட்டே பேசுங்க..எப்படியும் வனிதா கல்யாணத்துக்கு ஊருக்கு போவீங்கயில்லே அப்போ முடிச்சிடுங்க” என்றாள் சினேகா.

“நிச்சயத்துக்கே எனக்கு சொல்லலை..கல்யாணத்துக்கு எங்கே சொல்லப் போறாங்க?” என்று வருத்தப்பட்டார் ஜோதி.

“சொல்லலைன்னா நல்லது ம்மா..கல்யாணத்தைப் பற்றி நீங்களும் விசாரிக்காதீங்க..பணத்தைப் பற்றி மட்டும் பேசுங்க.” என்றாள்.

“எனக்கு யாரோடவும் பேசவே பிடிக்கலை..விஜயாம்மா கூட ஃபோன் செய்தாங்க..எடுக்கவே இல்லை.” என்றார் ஜோதி.

“நல்லது..அப்படியே மெயிண்டெயின் செய்யுங்க.” என்று சினேகா ஆலோசனை அளித்தவுடன்,

“என்ன டீ இப்படிச் சொல்ற..அவங்களோட நெருக்கமா பழகிட்டு எப்படித் திடீர்னு ஒதுக்கி வைக்க முடியும்?..மனசு சரியானதும் பேசலாம்னு நினைச்சேன்.” என்றார்.

“அவங்களோட தகுதி என்னென்னு தெரியுமில்லே? ஷிக்காவோட கடை நம்ம அந்தஸ்த்தை அவங்க கண்ணுக்கு வேற மாதிரி காட்டுது..இன்னைக்கு அப்பா உயிரோட இருந்திருந்தா இல்லை ஸர்வீஸ்லே இருந்திருந்தா ஷர்மா அங்கிள் போல விஜயா ஆன்ட்டி வீட்லே எடுபிடியா வேலை பார்த்திருப்பார்..அந்த உண்மை தெரிஞ்சா விஜயா ஆன் ட்டியும் உங்களை அப்படித் தான் நடத்துவாங்க.” என்று சினேகா வேகத்துடன் பேச,

“என்ன டீ விஜயாம்மா பற்றி கன்னாபின்னான்னு பேசற? அவங்க அந்த மாதிரி நம்மகிட்டே பழகலை.” என்றார் ஜோதி.

“இதுவரை அந்த மாதிரி வாய்ப்பு அவங்களுக்கு கிடைக்கலை..இனி அப்படியொரு வாய்ப்பு கொடுக்க நான் விரும்பலை.” என்றாள்

“அவங்க மறுபடியும் ஃபோன் செய்தா எப்படிப் பேசாம இருக்கறது? வாரத்துக்கு இரண்டு முறையாவது அவங்க வீட்டுக்குப் போவேனே..எப்படி போகாம இருக்கறது?” என்று சிறு குழந்தை போல் மகளிடம் தீர்வு கேட்டார் ஜோதி.

“டக்குன்னு வெட்டி விடுங்கண்ணு சொன்னேனா..தினமும் பேசாதீங்க..இரண்டு நாளைக்கு ஒருமுறை பேசுங்க..இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அவங்க வீட்டுக்குப் போங்க..கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிப் போங்க ம்மா.” என்று அவளுடைய அம்மாவிற்குப் பிளான் போட்டு கொடுத்தவள் தான் விஜயாவை நேரில் பார்த்தவுடன், ஓடிப் போய் அவரை விசாரித்தாள்.

சினேகா சொன்னபடி செய்யாமல்,’எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா விலகணும்..ஃபோனை எடுக்காம போனா அவங்களே விலகிடுவாங்க.’ என்று முடிவு செய்து விஜயாவின் அழைப்புக்களைப் புறக்கணித்தார் ஜோதி. ஒருவேளை அந்த அழைப்புக்களை ஏற்று விஜயாவுடன் பேசியிருந்தால் ஜோதியின் மன அழுத்தம் குறைந்திருக்கலாம். உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டாம்.

தீபாவளிக்கு சில நாள்கள் இருக்கையில் ஓர் அதிகாலை பொழுதில் அவளது வீட்டிலிருந்து சிறிது தூரத்திலிருந்த பெரிய பூங்காவை மெல்லோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள் சினேகா. குளிர்க்காலத்திற்கு ஏற்றார் போல் இருந்தது அவளது உடை. கனமான துணியில் டிராக்ஸும் ஹூடியும் அணிந்திருந்தாள். வீட்டிலிருந்தால் தேவையில்லாமல் அம்மாவிடம் வாயாடுகிறோம் என்று தான் காலையிலேயே இங்கே வந்து விட்டாள். இதமான குளிரில் உடற்பயிற்சி செய்வது புத்துணர்வை அளிக்க, மனமானது உற்சாகமாக உணர்ந்தது. 

அவள் ஓடி வந்து கொண்டிருந்த பாதையில், சிறிது தூரத்தில் தடாகம் ஒன்றிருந்தது. அதைச் சுற்றி நடைபாதை இருக்க அந்த நடைபாதையை சுற்றி இருந்த புல்வெளியில், ஒரு கல் இருக்கையில் மேல் உடம்பு முழுவதையும் ஷாலில் மறைத்து அமர்ந்திருந்த  உருவத்தைப் பார்த்ததும் அவளது ஓட்டம் தடைப்பட்டு நடையாக மாறியது. அவர் அமர்ந்திருந்த இடம் வந்ததும் அதுவரை அவளது மனத்தில் இருந்த சந்தேகம் மறைந்து போக,”ஆன்ட்டி? நீங்க எங்கே இங்கே இந்த நேரத்திலே?” என்று விஜயாவிடம் கேட்டாள் சினேகா.

சினேகாவின் குரல் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்ட விஜயாவிற்கு முதலில் மெலிதான அதிர்ச்சி பின் சந்தோஷம்.

“சாமி தான் அழைச்சிட்டு வந்தான்..குளிர் தாங்க முடியலை கண்ணு..வீட்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தா அப்படித் தான் இருக்கும்னு ஒரு ஷாலைப் போத்தி என்னை இழுத்திட்டு வந்திட்டான்.” என்றார். 

“எதுக்கு இப்படி வெளியே வந்தீங்க? தலைக்கு ஸ்கார்ஃப், காலுக்கு சாக்ஸ், ஷு எல்லாம் வாங்கிப் போட்டிட்டு வந்திருக்கலாமே.” என்றாள். 

“அதுக்கு உங்கம்மாக்கு ஃபோன் செய்தேன் கண்ணு..அவ எடுக்கவேயில்லை..நடந்ததை நினைச்சு இன்னும் வருத்தத்திலே இருக்கறாளா? அன்னைக்கே அவளுக்கு ஆறுதல் சொல்லணும்னு நினைச்சேன் முடியலை..சாமிக்கு அவசரமா போக வேண்டி வந்திருச்சு..அன்னைக்குப் போனவன் நேத்து நைட் தான் வீட்டுக்கு வந்தான்..இன்னைக்கு வீட்லே தான் இருப்பேன்னு சொல்லியிருக்கான்..மதியம் போல அவனையும் அழைச்சிட்டு உங்க கடைக்கு வந்து ஜோதி எப்படியிருக்கான்னு ஷிக்காகிட்டே விசாரிக்கலாம்னு நினைச்சேன்.” என்று சொன்னவர், சில நொடிகள் கழித்து,”நீயும் என்னோட அழைப்பை எடுக்கலையே கண்ணு.” என்றார்.

அதைக் கேட்டு மிகப் பெரிய தவறு செய்து விட்டோமென்று புரிய,‘யார் என்ன சொன்னா என்ன? அம்மா சொன்னது போல ஆன்ட்டி நம்மகிட்டே நல்லபடியா தானே நடந்துக்கறாங்க..அவங்க மனசு நோகும்படி நடந்திக்கிட்டோமே.’ என்று மனம் வருந்தியவள்,

“அம்மாக்கு உடம்பு முடியாம போயிடுச்சு..ஒரு நாள் ஆஸ்பத்திரிலே இருந்தாங்க ஆன்ட்டி..” என்று அவள் சொல்ல,

“என்ன ஆச்சு கண்ணு?” என்று கவலையாக விஜயா கேட்க,

“இரத்த அழுத்தம் கூடிப் போயிடுச்சு..இப்போ நார்மல் ஆகிடுச்சு..வீட்லே தான் இருக்காங்க ஆன் ட்டி.” என்றவள், அடுத்த கேள்வியோடு அவர் வருமுன்,”நான் இங்கே அடிக்கடி வருவேன்.. இதுக்கு முன்னே உங்களை இங்கே பார்த்ததில்லையே.” என்றாள் சினேகா.

“சாமிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்திலே இருக்கற பூங்காக்கு என்னை அழைச்சிட்டு போவான்..இரண்டு பேரும் கொஞ்சம் பேசுவோம், நடப்போம் அப்புறம் என்னை ஓர் இடத்திலே உட்கார்த்தி வைச்சிட்டு அவனோட உடற்பயிற்சியை செய்யப் போயிடுவான்..அதை முடிச்சுக்கிட்டு வந்ததும் வீட்டுக்குக் கிளம்பிடுவோம்..அவன் ஓடப் போய் ரொம்ப நேரமாகிடுச்சு கண்ணு..இப்போ வந்திடுவான்..” என்றார்.

அதே நேரம் தடாகத்தின் மறுப்புறத்திலிருந்த ஷண்முகவேல் அவனுடைய அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனது ஓட்டத்தின் வேகத்தை கூட்டினான். 

விஜயா சொன்னதைக் கேட்டவளின் இதயம் படபடக்க,”எனக்கு லேட்டாகிடுச்சு ஆன் ட்டி..கிளம்பறேன்.” என்று சொல்லி விட்டு, விஜயாவின் பதிலிற்காக நிற்காமல் சிட்டாகப் பறந்து விட்டாள் சினேகலதா.

விஜயா அருகே வந்து மூச்சு வாங்க நின்றவன்,”யாரோட ம்மா பேசிட்டு இருந்தீங்க?” என்று விசாரித்தான்.

சினேகா சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயா மகனின் புறம் பார்வையைத் திருப்பினார். ஏனோ பாரம்பர்ய உடையில் மகனையும் சினேகாவையும் பார்த்த போது தெரியாத பொருத்தம் இப்போது இருவரும் ஒரே போல் உடற்பயிற்சி உடை அணிந்திருந்ததில் தெரிய, “சாமி, மூச்சு வாங்குது பாருங்க..இப்படிப் பக்கத்திலே உட்காருங்க.” என்றார்.

அவரருகே உட்கார்ந்தவன்,“யாரு ம்மா அது? உங்க ஃபோன் எங்கே?” என்று கேட்க,

ஷாலினுள்ளே இருந்த கையை வெளியே எடுத்துக் காண்பிக்க, அதில் ஃபோன் இருந்தது. “சினேகா தான் சாமி..இந்தப் பூங்காலே உடற்பயிற்சி செய்யறது வழக்கமாம்..என்னைப் பார்த்ததும் இரண்டு வார்த்தை பேசிட்டு நேரமாகிடுச்சுன்னு கிளம்பி போயிட்டா.” என்றார்.

அதைக் கேட்டவுடன்,’ஏன் என்னைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசணும் தோணலையா அவளுக்கு?’ என்று அவள் சென்ற திசையை நோக்கினான் ஷண்முகவேல். 

மகனின் பார்வை போன திசையைப் பார்த்தவர், அப்படியே அவரது மனத்தில் தோன்றியதை,”சாமி, சினேகாவைக் கட்டிக்க உனக்குச் சம்மதமா?” என்று வெளிப்படுத்தினார்.

அந்தக் கேள்வியில் ஒரு நொடிக்கு நிலைகுலைந்து ஷண்முகவேல், சில நொடிகள் மௌனமாக தன்னைச் சுதாரித்துக் கொண்டு,”என்னைப் பற்றி முழுசாத் தெரிஞ்ச பிறகு நான் இருக்கற பக்கம் கூட வர மாட்டா ம்மா.” என்றான்.

அதைக் கேட்டு வேதனையடைந்த விஜயா,“ஜோதிக்கு நம்ம குடும்பத்தைப் பற்றி எல்லாம் தெரியும் சாமி..சினேகாவுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.” என்றார்.

“கதையா கேட்டிருக்கலாம்..நீங்க சொல்றது வாழ்க்கை ம்மா..என் அப்பாவைப் போலவா நான்னு எனக்கு சந்தேகம் வந்த மாதிரி தான் என்னைக் கட்டிக்கப் போற பொண்ணுக்கும் வரும்..எப்படி நம்பிக்கை கொடுக்கறதுன்னு எனக்குத் தெரியலை ம்மா..நம்பிக்கை இல்லாத கல்யாண வாழ்க்கை நரகம் ம்மா.” என்றான்.

“சினேகா சுயமாச் சிந்திக்கிற பொண்ணு சாமி..அன்னைக்கு அந்தப் பையனைப் பற்றி சரியா கணிச்ச மாதிரி உன்னைப் பற்றியும் சரியாக் கணிச்சிருக்கும்..உனக்குச் சம்மதம்னா ஜோதிகிட்டே பேசறேன்..என்ன சொல்ற சாமி?” என்று மீண்டும் மகனின் சம்மதத்தைக் கேட்டார் விஜயா.

“வேணாம் ம்மா..அவ உங்களோட சகியாவே இருக்கட்டும்..உங்க உறவுக்கு இடையே என்னைக் கொண்டிட்டு வந்து அதைக் கொன்னுடாதீங்க.” என்றான் ஷண்முகவேல்.

அடுத்த சில நொடிகளுக்கு அமைதியாக இருந்த விஜயா,“சாமி, உடம்பு முடியாம ஜோதி ஆஸ்பத்திரிலே இருந்திருக்கா..அதான் என்னோட அழைப்பை ஏற்கலை..இப்போ பரவாயில்லைன்னு சினேகா சொன்னா..ஒரு நடை நேர்லே போய் பார்த்திட்டு அப்படியே ஜோதி காதிலே இந்த விஷயத்தைப் போடப் போறேன் .” என்றார்.

“அம்மா, வேணாம்.” என்று மறுப்பு தெரிவித்த மகனிடம்,

“அம்மாவோட ஆசையை வேணாம்னு சொல்லாதீங்க சாமி.” என்று ஷண்முகவேலின் வாயை அடைத்த விஜயா அவருடைய சகியை மகனின் சதி ஆக்க வேண்டுமென்று உறுதி பூண்டார்.