அத்தியாயம் – 34

அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல வடை அவனுக்குப் பிடித்திருந்ததால் அதையே இன்று வாங்கி வந்தான். அது அவளுக்கும் பிடித்தது என்று தெரிந்திருந்தால்,’நமக்குள்ளே செட்டாகும்னு சொல்ல இது ஒண்ணு போதும்..உன்னைக் காக்க வைச்சிட்டு இருக்கறவனோட உனக்கு செட்டாகுது.’ என்று அவளிடம் நேரடியாக சொல்லி இருப்பான். அவளுக்கும் அது பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிய வந்தது அவர்களின் திருமணத்திற்கு பின்பு தான். அதுவும் ஒரு வகையில் நன்மையில் தான் முடிந்தது. அவர்களின் திருமணம் அவர்களின் தாய்மார்கள் இருவரும் தயார் செய்த திருமணமாக நடந்தேறியதால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஈர்ப்பு பற்றி அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவரவில்லை. 

ஜோதி, விஜயா இருவருக்கும் லேசாக சந்தேகம் எழுந்தாலும் இருவரும் அதைப் பற்றி வாயைத் திறக்கவேயில்லை. கணவன், மனைவி உறவின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வலிமை ஆசைக்கு இருக்கிறது என்பது விஜயாவின் கருத்து. ஜோதிக்கு அது போன்ற கருத்தெல்லாம் இல்லை. அவருடைய  கல்யாண வாழ்க்கை ஆரம்பித்த போது ஆரம்பத்தில் இருந்த ஆசையெல்லாம் வீம்பாக மாறி அவரைக் கஷ்டப்படுத்தி விட்டது. எப்படியோ கணவரை அனுசரித்துப் போகக் கற்றுக் கொண்டு கடைசிவரை அவரோடு இருந்து விட்டார். எனவே அவரைப் பொறுத்தவரை கல்யாணம் என்பது கரடுமுரடான பாதை தான். அவ்வப்போது இளைப்பாற இடங்கள் கிடைத்தாலே போதும் பயணம் இனிதாக முடிந்து விடும். இல்லையென்றால் முடிந்தால் போதும் என்ற மன நிலையில் தான் கடைசிவரை பயணம் நடக்கும்.

கையிலிருந்த பொட்டலம் வாயிலாக புதிரான முகப் பாவத்திற்கான விடை, அவளுக்கான துணைவேல் ஷண்முகவேல் தானென்று புரிய,  முகத்தில் தோன்றிய ரகசியப் புன்னகை சினேகலதாவை ஸ்வர்னலதாவாக மாற்ற, பிரகாசத்திற்குக் காரணமானவனின் முகத்தைப் பார்க்க சினேகாவின் மனம் விழைய, அவளது கண்கள் அவனைத் தேட, மகளின் முக மாற்றத்தைக் கவனித்த ஜோதி,”மாப்பிள்ளை வந்திட்டாரா?” என்று கூட்டத்தில் தேடியவர்,”இன்னும் அவங்க வரலை..நீ இங்கேயும் அங்கேயும் பார்த்திட்டு  இருக்காம சீக்கிரமா சாப்பிடு.” என்று மகளை அதட்டினார். சம்ஹாரவேலாக ஷண்முகவேல்  அவளது அழிபசியை பசியை அழித்திருக்க, அந்தப் பொட்டலத்தை மடித்து கையினுள் அடக்கிக் கொண்டாள் சினேகா.

அதைப் பார்த்து,“பசி பசின்னு கத்திட்டு கிடந்தவ ஒரு வாய் கூட சாப்பிடாம மூடி வைச்சிட்ட..என்ன டீ நினைச்சிட்டு இருக்க?” என்று கோபப்பட்டார் ஜோதி.

மாப்பிள்ளை வீட்டினர் நேரத்திற்கு வராததனால் ஜோதியின் பதற்றம் கூடுகிறது என்று புரிந்து கொண்ட விஜயா,”விடு ஜோதி..பசி முத்திடுசுன்னா சாப்பிட முடியாது” என்று ஜோதியைச் சமாதானம் செய்தவர், சினேகாவிடம்,”சாமிகிட்டே சொல்லி சோடா இல்லை ஜுஸ் வாங்கிட்டு வரச் சொல்லட்டும்மா கண்ணு?” என்று கேட்டார்

“வேணாம் ஆன்ட்டி..இதெல்லாம் முடியட்டும்..நிதானமா சாப்பிட்டுக்கறேன்.” என்றாள் சினேகா.

அதற்கு,“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுன்னா அவங்களோட சேர்ந்து டிஃபன் சாப்பிடலாம்னு நினைச்சேன்..அதான் இவளை அப்படியே இழுதிட்டு வந்திட்டேன்.” என்றார் ஜோதி.

என்னவோ இந்த மாப்பிள்ளை தான் சினேகாவிற்கு உறுதியாகி விட்ட மாதிரி ஜோதி பேசியது விஜயாவிற்கு எரிச்சலை ஏற்படுத்த, “அதெல்லாம் நம்ம கைலே கிடையாது ஜோதி..கடவுள் சன்னதிலே இருக்கோம் அவர் தான் முடிவு தான்.” என்றார்.

“அது என்னவோ உண்மை தான் விஜயா ம்மா..பையனைத் தனியா மீட் செய்யணுங்கற சினேகா விருப்பத்தை அவங்க வீட்லே சொன்னேன்..’நாங்களும் இரண்டு பொண்ணுங்களைக் கட்டிக் கொடுத்திருக்கோம் அதெல்லாம் எங்க வீட்லே பழக்கமில்லைன்னு’ சொல்லிட்டாங்க…அப்புறம் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? அதுக்கு தான் இப்படி கோவில்ல பார்த்துக்கற மாதிரி ஏற்பாடு செய்தேன்..அவங்க ஊரோட தான் இருந்திருக்காங்க சமீபத்திலே தான் பையனோட செட்டிலாகிட்டாங்க…மும்பை, பெங்களூர்னு வேலை தேடிக்கிட்டு இருக்கானாம்..டிவி சேனல்லே வேலை செய்யறதுனாலே இவளுக்கு ஏத்த வரன்னு நினைச்சு தான்  பெண் பார்க்க ஏற்பாடு செய்தேன்..

நாங்க குடியிருக்கற வீடு இரண்டே ரூம் தான்னு உங்களுக்குத் தெரியுமில்லே..மூணாவது மாடிலே அடுத்தடுத்து அஞ்சு வீடு..அதிலே நடு வீடு எங்களோட வீடு..அதுக்கே வாடகை சொளையா பத்தாயிரம்..அந்தச் சந்திலே ஒரே சமயத்திலே ஓர் ஆள் வந்து போகறதே கஷ்டம்..அங்கே அவங்களை வரவழைக்க முடியாது..அந்த ஏரியாவான்னு கேட்டா இங்கே இருக்கற ஆளுங்க முகத்தை சுளிப்பாங்க..வயசு வந்த பெண்ணோட அந்த மாதிரி இடத்திலே இருக்கறது தான் பாதுகாப்புன்னு தான் அங்கே இருக்கோம்..வீட்டு முகவரியைக் கேட்டிட்டு இவங்க அந்த மாதிரி எதுவும் பேசலை..வீட்டுக்கு வரக் கூடத் தயாரா தான் இருந்தாங்க..

மனோகர் வீட்லே வைச்சுக்கலாம்னு தான் நினைச்சேன் ஆனா அங்கே வந்தா,’எப்படி உங்க பேரனை சிங் வீட்டு பையன் மாதிரி கொண்டையோட விட்டு வைச்சிருக்கீங்கன்னு எல்லாக் கதை தெரிஞ்சும் அதே கேள்வியைக் கேட்பாங்கண்ணு ஒரு பயம்..அவன் காதல் கல்யாணம் செய்துகிட்ட விவரத்தை சொல்லி தான் இவளுக்கு மாப்பிள்ளை தேடறேன் ஆனாலும் இந்தக் கேள்வியைக் கேட்காம இருக்கறதில்லை..அந்த கண்டிஷன்லே தான் ஷிக்காவைக் கட்டிக்கிட்டான்னு எனக்கே மாண்ட்டி பிறந்த பிறகு தான் தெரியும்..ஒருவேளை பெண் குழந்தையா பிறந்திருந்தா கடைசிவரை தெரியாமலேயே போயிருக்கும்..

எனக்கு மட்டும் என் பேரனைக் கொண்டையோட பார்க்கிறது கஷ்டமா இல்லையா? அவர் உயிரோட இருந்திருந்தா இந்த மாதிரி நடந்திருக்குமா? அம்மா தானேன்னு என்கிட்டே இந்த விஷயத்தை மறைச்சிருக்கான்..மொட்டை அடிக்கப் போகறதில்லை..காது குத்தப் போகறதில்லைன்னு கேள்விபட்டதும் இவனோட சித்தப்பா இதுக்கு தான் தில்லியெல்லாம் வேணாம்னு பாண்டியன்கிட்டே நாங்க சொன்னோம் எங்கே எங்களோட பேச்சைக் கேட்டான்..வீம்பு பிடிச்சவன்..இப்போ அவனும் போய் சேர்ந்திட்டான் இனி உன் மகன் பேச்சை தான் நீ கேட்டாகணும்..சினேகாக்கும் ஒரு கொண்டைக்காரனைக் கட்டி வைச்சிட்டீங்கன்னா உன்னோட வாழ்க்கை பிரச்சனையில்லாம போகும்னு அட்வைஸ்ங்கற பேர்லே என்னோட யோகியதை அவ்வளவு தான்னு குத்திக் காட்டறாங்க..

யார் சொல்றதையும் காதிலே போட்டுக்காம, மகனையும் விட்டுக் கொடுக்காம, மருமகளை எல்லாத்திலேயும் கூட வைச்சுக்கிட்டு நம்ம ஆளுங்களாப் பார்த்து இவளைக் கட்டிக் கொடுக்கணும்னு நினைச்சு தான் இந்த மாதிரி பொது இடத்திலே பெண் பார்க்கறத்துக்குச் சம்மதம் சொன்னேன்…எத்தனை கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு இந்த வரனைக் கொண்டு வந்திருக்கேன்னு இவளுக்குக் கொஞ்சம் கூட புரியலை..’என்னை மாதிரி நீயும் ரிஸ்க் எடுத்து ஒரு பையனை லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கோன்னு அண்ணிக்காரி அட்வைஸ் கொடுத்திட்டு இருக்கா..அதுக்கு என்னை மாதிரி ஒரு மாமியாரும் என் மகன் போல ஒரு நல்லவனும் கிடைக்கணுமில்லே..அப்போ தானே மகாராணி மாதிரி இருக்க முடியும்..” என்று ஜோதி அவரது வருத்தம், ஆதங்கத்தை அருவி போல் கொட்டி, கண்கலங்கினார். 

மாண்டியை முதன்முதலில் பார்த்த போது விஜயாவின் மனத்திலும்,’எதுக்கு இந்தப் பிள்ளை தலைலே எப்போது துணி சுத்தியிருக்கு?’ என்ற கேள்வி வந்தது ஆனால் அதைக் கேட்கவில்லை. அது போல் சில குழந்தைகளை அவரது குடியிருப்பில் பார்த்த போது மாண்டி ஷிக்காவின் மகனாக வளர்கிறானென்று விஜ்யாவிற்கு புரிந்து விட்டது. ஜோதியின் மனவருத்திற்கு தீர்வே இல்லை என்பதால்,

“இப்போ எதுக்கு ஜோதி அதெல்லாம் பேசிட்டு? கண்ணைத் துடைச்சுக்கோ..நடந்து முடிஞ்சதைப் பற்றி பேசினா அந்தப் பிள்ளையும் வருத்தப்படும்..உனக்கு குணமான மருமக தான் அமைஞ்சிருக்கா..இந்தக் காலத்திலே பையனும் பெண்ணும் தனியா சந்திக்கறாங்க..என் அண்ணன் பையன் அப்படித் தான் பெண் பார்த்து கல்யாணம் செய்துகிட்டான்..என் அக்காவோட கடைசி பொண்ணை நாங்க எல்லோரும் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போனோம்..அவங்க இரண்டு பேரும் தனியா ஒரு மேஜைலே உட்கார்ந்து பேசிக்கிட்டாங்க..சினேகா எதிர்பார்புலே தப்பில்லை..அவங்க பழக்கத்தையும் தவறு சொல்ல முடியாது..ஆனா சொன்ன நேரத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்கணுமில்லே..எத்தனை நேரமா பிள்ளை காத்திட்டு இருக்கு.” என்று ஜோதியின் மனது சமாதானம் அடையும் வகையில் ஆறுதலாகப் பேசினார்.

அதற்கு மேல் அவர்களைக் காத்திருக்க வைக்காமல் மாப்பிள்ளை வீட்டினரோடு அவர்கள் இருக்குமிடம் வந்தான் மனோகர்.

இரண்டு குடும்ப உறுப்பினர்களும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க, பெண்ணும், பையனும் மட்டும் அமைதியாக இருந்தனர். மாப்பிள்ளையுடன் பேச சினேகா ஆர்வம் காட்டவில்லை. அதற்கு என்ன காரணமென்று அவளுக்கு மட்டும் தெரிந்திருக்க, அதே காரணத்திற்காக தான் அவனும் தன்னுடன் பேச விழையவில்லையோ என்று சந்தேகம் ஏற்பட்டது சினேகாவிற்கு.

மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க நினைத்து,”அவங்க இரண்டு பேரும் தனியா பேசிக்கட்டும்..நாம அவங்க எதிர்லே இங்கேயே இருப்போம்.” என்றார் ஜோதி.

“சீக்கிரம் பேசிட்டு வா டா..சாமியைப் பார்த்திட்டு கிளம்பலாம்.” என்றார் அந்தப் பையனின் அம்ம.

அந்தப் பையனிடம்,”என்னையும் பார்த்தாச்சு..எந்தப் பொண்ணுன்னு முடிவு செய்திட்டீங்களா?” என்று சினேகா கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனான் அவன். அவளது கணிப்பு சரியாகிப் போனதில் உற்சாகமடைந்தவள்,”பிள்ளையார் கோவில்லே பார்த்த பொண்ணு தான் உங்களுக்கு ஏத்த ஜோடி..நான் இல்லை..ஆல் தி பெஸ்ட்.” என்று சொல்லி விட்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஜோதியை நோக்கிச் சென்றவள்,”எனக்கும் இவருக்கும் ஒத்து வராது ம்ம்..கொஞ்ச நேரம் முன்னாடி பிள்ளையார் கோவில்லே பார்த்த பொண்ணு தான் அவருக்கு ஏத்த ஜோடின்னு அவர்கிட்டேயே சொல்லிட்டேன் ம்மா…நாம கிளம்பலாம்.” என்று சொல்ல, மாப்பிள்ளையின் பெற்றோர் சங்கடத்துடன் ஜோதியை நோக்கினர். அவர்களின் பார்வையே சினேகாவின் அனுமானம் சரி என்று ஜோதிக்கு செய்தி சொல்ல, அவர் வாயைத் திறக்கும் முன்,

“இன்னைக்கு ஒரு நாள் தான் அவன் ஃப்ரீ..அதான் முதல்ல அந்தக் கோவில்லுக்கு போயிட்டு அந்தப் பொண்ணை பார்த்திட்டு அங்கேயிருந்து இங்கே வரலாம்னு பிளான் செய்தோம்..அங்கே கொஞ்சம் தாமதமாகிடுச்சு.” என்று சொன்ன மாப்பிள்ளையின் அப்பா, அவருடைய மனைவியின் புறம் திரும்பி,”நான் சொன்னேனில்லே..இண்டர்வியூவை சீக்கிரமா முடிக்கச் சொல்லி..உன் பையன் எங்கே காதிலே போட்டுக் கிட்டான்? எல்லாத்தையும் விவரமா விசாரிச்சிட்டு இருந்தான்.” என்றார்.

“அந்தப் பொண்ணு ஐடிலே வேலை பார்க்குது..இங்கே சொந்த வீடு வைச்சிருக்காங்க..பொண்ணோட அப்பா பெரிய பதவிலே இருக்கார்..இன்னும் இரண்டு வருஷம் சர்வீஸ் வேற இருக்கு..நம்ம பையன் தகுதிக்கு அந்த பொண்ணு தான் சரின்னு சொன்னேன்..எங்கே என் பேச்சை கேட்டீங்க..வாடகை வீடு, வேற மதத்திலே மருமக, அரசங்காத்திலே கிளார்க்கா வேலை பார்த்தவர் இப்போ உயிரோட இல்லை..பொண்ணோட படிப்பும் வேலையும் நம்ம பையனோடு ஒத்துப் போகுதுங்கற ஒரே காரணத்திற்காக இந்த வரனுக்கு சரின்னு சொன்னீங்க..இப்போ அந்தப் பொண்ணை பார்த்துப் பேசி, பிடிச்சிருக்குன்னு இவன் சொன்ன பிறகு ஒரு ஃபோனைப் போட்டு ஏதாவது ஒரு பொய்யை சொல்லி  பெண் பார்க்க வரலைன்னு தகவல் சொல்லச் சொன்னேனில்லை..இப்போ பாருங்க..தகுதியே இல்லாதவ என் பையனை வேணாம்னு சொல்றா.” என்று கணவரை போட்டுத் தாக்கினார் அந்தப் பெண்மணி. 

”என் பொண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட வேலை இருக்கு..உங்களுக்கு இன்னைக்கு தான் சௌகர்யம்னு சொன்னதாலே அவ சௌகர்யத்தைப் நான் பார்க்கலை..இன்னைக்கு என் மகளை மட்டுமில்லை வேறொரு பொண்ணையும் பார்க்கப் போறீங்கண்ணு முன்னே சொல்லியிருந்தா வர வேணாம்னு மறுத்திருப்பேன்..உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராதுங்க.” என்று முகத்திற்கு நேரே மறுப்பைச் சொல்லி விட்டு,”கிளம்பலாம் டா மனோ.” என்று மகனிடம் சொன்னார் ஜோதி.

“ஓகே ம்மா.” என்று சொன்னவன் அப்படியே மாண்ட்டியை மனைவியிடமிருந்து வாங்கி கொண்டு,”வாங்க ஆன்ட்டி.” என்று விஜயாவையும் உடன் அழைத்துக் கொள்ள, அனைவரும் கோவிலிருந்து வெளியேறினர். 

அப்போது வேகமாக காரை ஓட்டி வந்து கோவில் வாயிலில் நிறுத்திய ஷண்முகவேல், ஓட்டு நர் இருக்கையில் அமர்ந்தபடி,”அம்மா, அவசர வேலை வந்திடுச்சு…உடனே கிளம்பணும்” என்று விஜயாவிடம் சொன்னான்.

ஜோதியும் மனோகரும் அவனுக்கு நன்றி உரைக்க, ஏதோ சிந்தனையில் அமைதியாக இருந்தாள் சினேகா. அவனது பார்வை அவளது இடதுக் கையில், அவன் வாங்கிக் கொடுத்த பொட்டலத்தில் தேங்கி நின்றது,’ஏன் சாப்பிடலை? நேரம் கிடைக்கலையா? இல்லை பிடிக்கலையா?’ என்ற கேள்விகள் வர, விடையைத் தேடி அவளது முகத்திற்குப் பார்வையைத் திருப்ப, அவனது பார்வையை உணர்ந்து அவனை பார்ப்பாள் என்று ஷண்முகம் எதிர்பார்க்க, அவள் பார்க்கவேயில்லை. 

‘என்ன நடந்திச்சுன்னு அம்மாகிட்டே விசாரிச்சுக்கலாம்.’ என்று முடிவு செய்தவன்,”வாங்க ம்மா” என்று கார் கதவைத் திறக்க, “வரேன்” என்று ஒரே வார்த்தையில் விடைபெற்றுக் கொண்டார் விஜயா. அம்மா, மகள் இருவருக்கும் சில ஆறுதல் வார்த்தைகள் சொல்ல நினைத்த விஜயாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.