அத்தியாயம் – 33

வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி.

அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின் குடும்பம். ”தாதிகிட்டே போ.” என்று அவளின் மடியிலிருந்த மாண்ட்டியை ஜோதியிடம் கொடுத்தாள் ஷிக்கா. அதே நேரம் சினேகாவின் கையில் பூச்சரத்தை வைத்து விட்டு கத்தியை நிதானமாக பேக்கெட்டில் போட்டான் ஷண்முகம். 

“ஹலோ பய்யா..எப்படி இருக்கீங்க?” என்று ஷண்முகத்திடம் குசலம் விசாரித்தாள் ஷிக்கா.

“படியா” என்று அவனும் புன்சிரிப்போடு பதிலளித்தான்.

அடுத்து, விஜயாவிடம்,”ஆன் ட்டி உங்க புடவை ரொம்ப கிராண்டா இருக்கு.” என்றாள். ஜோதி அதை மொழிபெயர்க்க,

அதற்கு,”சுப விசேஷத்துக்கு எங்க பக்கத்திலே இப்படித் தான் உடுத்திப்போம்..அதான் இன்னைக்கு என்னோட மகனும் வேஷ்டி சட்டைலே வந்திருக்கான்.” என்ற விஜயாவின் பதிலை ஷிக்காவிற்கு கடத்தினார்.

இத்தனை நாள்கள் இதே கோவிலுக்கு பேண்ட் சட்டையில் வந்திருந்தவன் ஏன் இன்று இந்த உடைய உடுத்திக் கொண்டு வந்தான் என்ற கேள்விக்கு சில நொடிகளுக்கு முன் தான் அவனுக்கு விடை கிடைத்தது. சினேகாவின் கரத்தில் பூவை வைக்கும் போது அவனது மனத்தில் தோன்றிய உணர்ச்சிகள் அவனது முகத்திலும் தெரிய, இது என்னோட உரிமை என்றுஅவனுக்கு புரிய, பாவம் சினேகாவிற்கு தான் அது புரியவில்லை. ‘இவ எனக்குரியவள்..நான் அவளுக்கு உரியவன் அதான் அவ புடவைலே இருக்கா..நான் வேஷ்டிலே வந்திருக்கேன்.’ என்று அவனது மனது கொடுத்த விடையை அதே இடத்தில் அசையாமல் நின்றபடி. சினேகாவை விழி எடுக்காமல் பார்த்தபடி அசை போட்டுக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை உணர்ந்தவள் ஒரு விதமான மோன நிலையில் கையில் பூவுடன் சிலை போல் நின்று கொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த பூவை எடுத்து சினேகாவின் கூந்தலில் அதை அழகாகச் சூட்டினாள் ஷிக்கா. அவர் கையில் இருந்த மீதி பூவை ஷிக்காவிடம் கொடுத்து,”நீயும் வைச்சுக்கோ.” என்று தமிழில் சொன்னார் விஜயா. அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டு அவளது விரிந்த தலையில் ஷிக்கா சூடிக் கொள்ளும் போது பைக்கை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்த மனோகர் விஜயா அருகில் நின்றிருந்த ஷண்முகத்திடம் சென்று,

“ஹலோ சர்..நான் மனோகர் பாண்டியன்…பட்பட்கஞ் பால் பண்ணைலே வேலை பார்க்கறேன்.” என்று சுயஅறிமுகம் செய்து கொண்டான்.

“தெரியும்..உங்களைப் பற்றியும் அம்மா சொல்லியிருக்காங்க..நான் ஷண்முகவேல்.” என்று அவன் பெயரோடு நிறுத்திக் கொண்டான் ஷண்முகம். வேலை பார்க்கும் இடம், பதவி இரண்டையும் வெளியிடவில்லை. தோண்டித் துருவி கேட்பது நாகரிகமில்லை என்று மனோகரும் அந்த உரையாடலைத் தொடரவில்லை. அப்போது,

“மனோ, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு ஃபோன் செய்து விசாரி டா..இன்னும் அவங்களைக் காணலை..லக்ஷ்மி நகர்லேர்ந்து வர்ற ஏன் இத்தனை நேரமாகுது.” என்றார் ஜோதி.

அப்போது உள்ளேயிருந்து மேளச் சத்தம், மணி சத்தம் கேட்க,”தீபாராதனை நடக்குது..நீங்க எல்லோரும் உள்ளே போய் சுவாமியைத் தரிசனம் செய்திட்டு அப்படியே மண்டபத்துக்கு போயிடுங்க..நான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களைக் கூட்டிட்டு வரேன்.” என்றான்.

‘உன்னைப் பார்க்கவே வர மாட்டேன்’ என்று சபதம் செய்தவள் இப்போது அதே கிருஷ்ணனின் சன்னிதியில் கை கூப்பி நின்று,’உன்னோட பவரை உடனே காட்டிட்ட..நான் அப்படிச் சொன்னது தப்புதான்..என்னோட சபதத்தை வாபஸ் வாங்கிக்கறேன்..மன்னிச்சிடு.” என்று மன்னிப்பு கேட்டு விட்டு கண்களை திறக்க, குறும்பு சிரிப்போடு அவளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார் ஶ்ரீ கிருஷ்ணர். இருபது நிமிடங்கள் கழித்து தரிசனம் முடித்து அனைவரும் கோவிலின் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் வந்தபாடில்லை. மனோகரையும் காணவில்லை. மாண்ட்டியைச் சமாளிப்பது ஷிக்காவிற்கு சவாலாக மாறியிருந்தது. ஜோதியும் விஜயாவும் மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருக்க, சங்கமித்து போயிருந்த இருவரும் அடுத்து நடக்க போகும் நிகழ்வை எப்படிக் கடப்பது என்ற கவலையில் இருந்தனர். அப்போது தெரிந்தவர்கள் சிலர் வந்து என்ன, ஏது என்று  ஜோதியிடம் விசாரணை நடத்த, ‘கோவிலுக்கு வந்தோம்’ என்று ஜோதி மழுப்ப, அவர்களின் பார்வை சினேகாவையும் விஜயா அருகில் நின்றிருந்த ஷண்முகத்தையும் மாறி மாறி பார்க்க, அசௌகர்மயாக உணர்ந்தனர் தாய்மார்கள் இருவரும். அப்போது அங்கே வந்த மனோகர்.

“சித்தி விநாயகர் கோவிலுக்கு போயிட்டு இங்கே வர்றதா பிளானாம்..அதான் லேட்டாகிடுச்சு..பக்கத்திலே வந்திட்டோம்னு சொன்னாங்க.” என்று சொல்ல, 

“தெரிஞ்சவங்க வந்து விசாரிச்சிட்டு வேற போறாங்க..கோவிலுக்கு தான் வந்தேன்னு பொய் சொல்லிட்டு இருக்கேன்.” என்று மகனிடம் கடுகடுத்தார்.

”வந்திடுவாங்க ம்மா..நீங்க தயாரா இருங்கண்ணு சொல்லத் தான் வந்தேன்.”என்று சொல்லி விட்டு சென்றான் மனோகர். 

அதைக் கேட்டவுடன் ஒன்றாகிப் போயிருந்த இருவரும் திடுக்கிட்டுப் போயினர். சினேகலதா அவனுள்ளே ராகலதாவாக இன்னிசை மீட்டி கொண்டிருக்க, அன்புவேலகாக ஷண்முகவேல் அவளது இதயத்தை வலம் வந்து கொண்டிருக்க, இருவருக்குமே அந்த நொடி அப்படியே உறைந்து போகாதா என்றிருந்தது. 

அதற்கு மேல் அங்கே நின்றிருந்தால் அவனால் சும்மா இருக்க முடியாதென்று உணர்ந்த ஷண்முகம், பேக்கெட்டிலிருந்து அவனது கைப்பேசியைப் வெளியே எடுத்து,

“அம்மா, எனக்கு ஒரு ஃபோன் பேசணும்..இங்கே முடிஞ்சதும் நீங்க எனக்கு ஃபோன் செய்யுங்க..நான் வரேன்.” என்று அவர் மறுப்பு சொல்லுமுன் வேகமாக அங்கேயிருந்து வெளியேறினான்.

அவளது பார்வையிலிருந்து ஷண்முகம் மறையும் வரை வெறித்துப் பார்த்துக் கொண்டிந்த சினேகா, ஒரு முடிவிற்கு வந்து,”எனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலை ம்மா..இந்த சம்மந்தம் வேணாம்.” என்று தமிழில் தெளிவாகச் சொன்னாள்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன ஜோதி,”என்ன டீ மாப்பிள்ளை வர்ற நேரத்துக்கு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற..நீ இன்னும் அவரைப் பார்க்கவேயில்லையே.” என்று பதற்றத்துடன் சொல்ல,

“அவசியமில்லை.. இன்னொரு பெண்ணை பார்க்க தான் விநாயகர் கோவிலுக்குப் போயிருக்கான்..அதை நம்மகிட்டே சொல்லியிருக்கணும்..இல்லை என்னைப் பார்க்க இன்னொரு நாள் வந்திருக்கணும்….இந்த மாதிரி ஆளோட எனக்கு செட்டாகாது..முதல்லே கோவிலுக்கு வெளியே காத்திருந்தோம்..இப்போ உள்ளே வந்து அரைமணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு…தெரிஞ்சவங்க எத்தனை பேர் விசாரிச்சிட்டுப் போயிட்டாங்க..இதுக்கு மெலே என்னாலே முடியாது ம்மா..டீ கூட குடிக்க விடாம லேட்டாகிடும் லேட்டாகிடும்னு  இழுத்திட்டு வந்திட்டீங்க..எனக்குப் பயங்கரமாப் பசிக்குது வேற ம்மா” என்று கோபத்துடன் உரைத்தாள்.

“நல்ல விஷயம் ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி பிள்ளையார் பூஜை செய்யறது, விநாயகர் கோவிலுக்கு போகறது நம்ம ஊர் வழக்கம் டீ..உன்னோட கற்பனைத் திறனை இங்கே காட்டாத..உன்னோட வேலைலே காட்டு.” என்று பதில் கொடுத்தார் ஜோதி.

மாண்ட்டியோடு போராடியபடி அவளுடைய மாமியாரும் நாத்தனாரும் வாக்குவாதம் செய்தவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிக்கா, அவனை ஓர் அதட்டல் போட்டு அமைதியாக்கி விட்டு,”என்ன பிரச்சனை சினேஹ்?” என்று ஹிந்தியில் சினேகாவிடம் விசாரித்தாள். 

மாப்பிள்ளை பற்றிய அவளது கணிப்பைச் சொல்லாமல்,“எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேன்…உன் மாமியார் ஒரு வேளை உன்னாலே பொறுத்துப் போக முடியாதான்னு கேட்கறாங்க.” என்றாள்.

“இந்தச் சம்பிரதாயமெல்லாம் தேவையில்லாத தலைவலி..அவனை நீ தனியா ஒரு ரெஸ்டாரண்ட்லே மீட் செய்திருக்கணும்..சந்திப்பு, சாப்பாடு சேர்ந்து முடிஞ்சிருக்கும்.” என்றாள் ஷிக்கா.

“நான் ரெடியா தான் இருந்தேன்..அவன் அதுக்கு ரெடி இல்லை.” என்றாள் சினேகா.

“அப்போ அவன் உனக்கு ஏத்த ஆளில்லை.” என்றாள் ஷிக்கா.

உடனே விரைந்து சென்று அவளை அணைத்து,”தாங்க்யூ ஷிக்கா..உன் மாமியாருக்கு அதைப் புரிய வை.” என்றாள் சினேகா.

“மதனியும் நாத்தியும் ஈஷிட்டு இருக்கறதைப் பார்த்தீங்களா விஜயாம்மா..மத்த நாள் இரண்டும் அடிதடி வரை போகும்..இன்னைக்கு இவ மாப்பிள்ளையை நேர்லே பார்க்கறதுக்கு முன்னாடியே பிடிக்கலைன்னு சொல்றா..அவளும் ஓகேன்னு தலையாட்டறா..இரண்டு பேரும் நல்லவலாகிட்டாளுங்க இப்போ நான் தான் வில்லியா நிக்கறேன்.” என்றார்.

அதற்கு பதில் சொல்லாமல்,“எதுக்கு ஜோதி பிள்ளைக்கு டீ கூட கொடுக்காம அழைச்சிட்டு வந்திருக்க?” என்று விஜயா கேட்க, 

“மனோகரோட சேர்ந்து வெளியே சாப்பிடறதா பிளான் போட்டிருக்கு விஜயாம்மா.” என்றார் ஜோதி.

உடனே,”அது டின்னர்..இப்போ என்னோட வயிற் அத்தனை சத்தம் போட்டிட்டு இருக்கு.” என்று பசியில் கத்தினாள் சினேகா.

“கொஞ்ச நேரம் பொறுத்துக்க டீ..பக்கத்திலே வந்திட்டாங்களாம்.” என்று கெஞ்சினார் ஜோதி.

“முடியவே முடியாது..மனோக்கு ஃபோன் செய்து பிஸ்கெட் பேக்கெட் வாங்கிட்டு வரச் சொல்லுங்க.” என்றாள் சினேகா.

“மாண்டி மாதிரி நடந்துக்கற டீ..நல்லா இல்லை.” என்றார் ஜோதி.

அம்மா, மகள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போது அவருடைய மகனை கைப்பேசியில் அழைத்து சினேகாவின் நிலையைத் தெரியப்படுத்தினார் விஜயா.

அடுத்த சில நிமிடங்களில் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்த ஷண்முகவேல் அதை அவனுடைய அம்மாவின் கையில் வைத்து விட்டு மாயமாக மறைந்து போனான்.

அதை சினேகாவிடம் கொடுத்த விஜயா,”இந்தா கண்ணு..சாமி உனக்காக வாங்கிட்டு வந்திருக்கான்.” என்றார்.

அவள் அந்த பொட்டலத்தைப் பிரித்து பார்க்க, சட்னியுடன் இரண்டு தவல வடை இருந்தது.

“உனக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்திருக்கு அந்தத் தம்பி..மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றத்துக்குள்ளே கிடுகிடுன்னு உள்ளே தள்ளு.” என்று சொன்ன ஜோதிக்கு தெரியவில்லை அவருடைய மகளிற்கு பூவும் அவளுக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளும் வாங்கிக் கொடுத்தவன் தான் அவரின் மாப்பிள்ளையென்று.

கையில் இருந்த ப்ரியமான உணவு பொருள் சினேகலதாவை ப்ரிதிலதாவாக மாற்ற அதை அவளுக்காக வாங்கி வந்த ஷண்முகவேல் அமுதவேலாக அவளை ஆக்கிரமித்திருந்தான்.

***********

வாசகர்கள் அனைவர்க்கும்  சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.