அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய வைத்திருந்தது. இன்று காலையில் கண் விழித்ததுமே தலையணை கீழ் இருந்த கைக்குட்டையை எடுத்து அதில் அவள் செய்திருந்த நூல் வேலைபாட்டை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தீபாவளி பரிசாக ஷண்முகவேலிற்கு அவள் கொடுக்க நினைத்த கைக்குட்டை. குழப்பமில்லாத சாதாரண டிசைனாக தான் ஆரம்பமானது. ஷண்முகவேலின் பெயரில் இருந்த வேலை வரைந்து முடித்த போது அது வேல் போல் வந்திருக்கவில்லை. மேல் பாகத்தில் நுனி கூர்மையாக இருக்க, அரை வட்டமாக இருக்க வேண்டிய அடி பாகத்தில், கன்னக்குழி போல் லேசான குழி அமைந்து அதை இதயமாக மாற்றியிருந்தது. இதயப் பகுதியைத் தாங்கியிருந்த கீழ் பகுதி நீளமாக,சீராக இருந்தாலும் அதன் மீது வளைந்து, நெளிந்து கொடியொன்று படர்ந்திருந்தது. .
அந்த நூல் வேலைப்பாட்டை தடவியபடி கனவுலகத்தில் முழ்கியிருந்த சினேகாவிடம்,”எழுந்திரிச்சு எத்தனை நேரமாச்சு..இன்னும் படுக்கைலே இருந்தா என்ன அர்த்தம்? சாயங்காலம் சரியான நேரத்திற்கு கோவில்லே இருக்கணும்..விஜயம்மாவை கரெக்ட்டா அழைச்சிட்டு வந்திடணும்னு மனோக்கு இன்னொரு முறை சொல்லி வைச்சிடு..கிளம்பறேன், கிளம்பிட்டேன்னு ஷிக்கா லேட் செய்திடப் போறான்னு எனக்கு பயமா இருக்கு.” என்றார். இந்த வரனுக்கு அவளது சம்மதத்தை தெரிவித்த பின் வீட்டிலிருக்கும் பொழுதெல்லம் இந்த புலம்பலைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறாள் சினேகா. இந்த வைபவத்திற்கு விஜயா ஆன்ட்டியை அழைத்து வரும் பொறுப்பு மனோவிடம் ஒப்படைத்திருந்தார் ஜோதி. அதை உறுதி செய்யும் பொறுப்பு அவளுடையதானது
இதுவரை விஜயா ஆன்ட்டியின் வீட்டிற்கு மனோ சென்றதில்லை. ஆனால் விஜயாவைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் அவனுடன் அம்மா, மனைவி மூலம் அனைத்தையும் அறிந்திருந்தான். இந்தமுறை அம்மாவிற்கு துணையாக விஜயா ஆன்ட்டி இருக்கப் போவது அவனுக்கு தைரியத்தை கொடுத்திருந்தது. சினேகாவின் கல்யாணத்தை நடத்தி முடித்தால் தான் அவர்களின் பிரச்சனைக்கு முடிவு கிடைக்குமென்பதால் இந்த வரன் அமைய அவனுமே கடவுளிடம் வேண்டுதல் வைத்திருந்தான்.
அன்றைய பகல் பொழுது முழுவதும் மாலையில் நடக்கும் போகும் நிகழ்வைப் பற்றிய எதிர்பார்ப்பில் கழிந்தது. மாலை நான்கு மணி போல் ஜோதியைக் கைப்பேசியல் விஜயா அழைக்க,”வர்றீங்க தானே?” என்றுவிஜயா வாயைத் திறக்கும் முன் கேள்வியோடு வந்தார் ஜோதி.
“இப்போ தான் சாமி வந்தான்..ஓய்வெடுத்திட்டு இருக்கான்..பிள்ளை வீட்டுக்கு வந்து நிறைய நாளாகிடுச்சு..அதான் அவனை விட்டிட்டு வர யோசனையா இருக்கு.” என்று ஜோதி ஏற்றுக் கொள்ளும்படியான காரணத்தோடு வந்தார்.
அதற்கு,“என்ன விஜயாம்மா இப்படி ஆகிடுச்சு? உங்களைத் தான் மலை போல நம்பி இருந்தேன்.” என்றார் ஜோதி.
“சாமியோட வேலை அப்படி..எப்போ வர்றான் போறான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும்..ஆளுங்க துணை எதுக்கு? ஆண்டவன் துணை இருந்தா போதும் ஜோதி.” என்று சொன்னவர், அதற்கு நேர்மாறாக கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இப்படியொரு வாய்ப்பு கொடுத்த மகனுக்கு மனத்திற்குள் பலமுறை நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரது மனத்தில் அந்த ஆசை துளிராக, துளி நேரத்திற்கு தோன்றியிருந்தாலும் அவரால் அதை வெளியேற்ற முடியவில்லை. சினேகாவை பெண் பார்க்கும் வைபவத்தில் கலந்து கொள்ள அவருக்கு துளி கூட விருப்பமிருக்கவில்லை. நாசுக்காக பலமுறை மறுப்பு தெரிவித்தும் ஜோதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மகன் மூலமாக அவருக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதாக நினைத்தவருக்கு தெரியவில்லை விஷயத்தைக் கேட்டவுடன் அவருடைய மகன் அவரை வலுக்கட்டாயமாக அந்த நிகழ்விற்கு இழுத்துச் செல்லப் போகிறானென்று.
விடுமுறை தினம் என்பதால் குருவாயூரப்பன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. சாயரக்ஷை பூஜை நேரமாதலால் திரை விலகி ஶ்ரீகிருஷ்ணனைத் தரிசனம் செய்யக் காத்திருந்தனர் பக்தர்கள். கோவில் வாயில் அருகே ஓர் ஒரமாக காத்திருந்தனர் ஜோதியும் சினேகாவும். அவர்கள் இருவரும் வந்து அரைமணி நேரமாகியிருந்தது. இன்னும் மனோகர் வந்தபாடில்லை. மாப்பிள்ளை வீட்டினர் வருமுன் அவன் வரவேண்டுமென்று கருவறையில் இருந்த கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் ஜோதி. அப்போது அவர்களுக்கு நேரெதிரே, சாலையின் அந்தப் புறம் ஒரு கார் வேகத்தை குறைத்தது.
ஓட்டுநனர் இருக்கையில் ஷண்முகவேல் அமர்ந்திருக்க அவன் அருகில் விஜயா அமர்ந்திருந்தார். தெருவின் மறு கோடியைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் ஜோதி அவர்களைக் கவனிக்கவில்லை. அவளது கைப்பேசியில் கவனமாக இருந்த சினேகாவும் அவர்களைக் கவனிக்கவில்லை.
அம்மா, மகன் ஜோடி அம்மா, மகள் ஜோடியைத் தான் தலை முதல் கால் வரை ஆராய்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் பொடி பொடியாக தங்க இழைக் கட்டங்கள், பார்டரில் சுண்டு விரலளவு சரிகை, தலைப்பில் அதே அளவு மூன்று பட்டைகள் கொண்ட சிகப்பு நிற மென்பட்டில் பெண் பார்க்கும் படலத்திற்கு அழகாகத் தயாராகி வந்திருந்தாள் சினேகா. கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளது முக அலங்காரம் சரியாக தெரியவில்லை.
காரின் வேகத்தைக் குறைத்தபடி,’தலைலே பூ மட்டும் தான் வைக்கலை..அது வைச்சிருந்தா ஹண்ட் ரட் பர்செண்ட் கல்யாணப் பொண்ணு தான்.’ என்று சினேகாவின் தோற்றத்தை ஒருபக்கம் அவனது மனது எடை போட்டுக் கொண்டிருக்க, மறுப்பகம், ‘உனக்கு எதுக்கு டா இந்த வேலை..அவ பூ வைச்சுக்கிட்டா என்ன வைக்கலைன்னா உனக்கு என்ன..நீ எதுக்கு இப்போ இங்கே அம்மாவை இழுத்திட்டு வந்திருக்க?’ என்று கேள்வி கேட்க, அவனிடம் பதிலில்லை.’இந்த மாதிரின்னு அம்மா சொன்னவுடனே உனக்கு ஏன் டா பக்குன்னு ஆகணும்..உன்னோட பயிற்சி எல்லாம் ஒரு நொடிலே பாழாப் போயிடுச்சு..இங்கே என்ன நடந்திச்சுன்னு தெரிஞ்சுக்க அனிஷை வரச் சொல்லி அம்மாவை அவனோட அனுப்பியிருக்கணும்..நீ எதுக்கு டா வந்திருக்க..மடையா..மடையா.’ என்று அவனே அவனைத் திட்டிக் கொண்டிருக்க, அது தெரியாமல்,
“சாமி, கொஞ்சம் தள்ளி அந்தப் பூக்கடை பக்கத்திலே வண்டியை நிறுத்து ப்பா..வெறுங்க கையா கிளம்பிட்டோம்..பூ வாங்கிட்டு போகலாம்..சினேகா தலைலே பூ இல்லை.” என்று விஜயா சொன்னவுடன்,”சரியா சொன்னீங்கம்மா’ என்றுஅவரை ஆரத் தழுவி முத்தமிடத் தோன்றியது ஷண்முகத்திற்கு. அந்த எண்ணப் போக்கு அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்த, எக்குத்தப்பான எண்ணங்களை அப்புறப்படுத்தி விட்டு அவனது அகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான் காவல்காரன்.
காரை பூக்கடை வாசலில் ஷண்முகவேல் நிறுத்த, இறங்கி சென்ற விஜயா அவருக்குத் தேவையானதை வாங்கி கொண்டு,”நான் நடந்து போயிடறேன்..நீ காசு கொடுத்திட்டுக் காரை ஓரமா நிறுத்திட்டு வா சாமி.” என்று சொல்லி விட்டு சாலையைக் கடந்து ஜோதி இருக்குமிடம் சென்றார் விஜயா. அவரைப் பார்த்ததும் சினேகாவின் இதயம் தடதடத்தது. ‘ஆன்ட்டி வந்திருக்காங்கன்னா அவங்களும் வந்திருக்கணுமே.’ என்று அவளது மனம் ஷண்முகத்தை தேட விழைய அதை அடக்கி, அவளது கைப்பேசியினுள் அவளைப் புதைத்துக் கொண்டாள்.
விஜயாவைக் கண்டதும் அவரது கரத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டு,”நல்ல வேளை வந்திட்டீங்க விஜயாம்மா..வரமுடியாதுன்னு நீங்க சொன்னதிலிருந்து எனக்கு மனசே சரி இல்லை..இப்போ உங்களைப் பார்த்ததும் தான் சரியாகி இருக்கு..எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தோணுது..நான் பெத்த நல்லவனை இன்னும் காணும்..இந்த இடத்தை இவளுக்குப் பேசி முடிக்கணும்னு நான் எத்தனை முயற்சி எடுத்தேன்னு உங்களுக்குத் தெரியும்..பக்கத்திலே இருக்கற வீட்லேர்ந்து இங்கே வர அவனுக்கு நோவுது..அவன் இப்படித் தான்னு தெரியும்….இவ அப்பா இருந்திருந்தா இப்படி தெருவிலே நின்னுட்டிருப்பேனா..பிள்ளையும் என் பேச்சை கேட்டு சேலை கட்டிட்டு தயாரா வந்து காத்திட்டு இருக்கு..அவங்க வர்ற நேரம் தான்..ஏன் இன்னும் வரலைன்னு தெரியலை..ஃபோன் செய்து கேட்கறத்துக்கு முன்னாடி இந்த மனோகரும் வந்திட்டா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்.” என்று புலம்பியவரின் கையில்லிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டு,அவரது கையில் இருந்த பூவை ஜோதியின் கையில் வைக்கப் போனதும்,
“என் கைலே கொடுக்காதீங்க..நீங்களே அவளுக்கு வைச்சு விடுங்க.” என்று விஜயாவிடம் சொன்ன ஜோதி, சினேகாவின் புறம் திரும்பி,”தங்கம்..ஃபோனைக் கொஞ்சம் ஃபீரியா விடு.” என்று சொன்னப் போது அங்கே ஷண்முகவேல் வந்து சேர்ந்தான்.
கைப்பேசியை அமர்த்தி விட்டு தலையை உயர்த்திய சினேகாவின் பார்வையில் அடர் நீல நிற முழுக்கைச் சட்டை, நீலக் கரை வேஷ்டியில் இருந்த ஷண்முகவேல் விழ, அவனிடம் விழுந்தாள் அவள். ‘என்னமாப்பிள்ளை மாதிரி தயாராகி வந்திருக்காங்க.’ என்று அவளது மனத்தில் தோன்ற, ‘எப்போவும் ஷர்ட் பேண்ட்லே பார்த்திட்டு இப்போ உன் முன்னாடி வேஷ்டி சட்டைலே வந்து நின்னா உனக்கு மாப்பிள்ளை மாதிரி தான் தோணும்..குருவாயூரப்பன் கோவிலுக்கு முக்கால்வாசி ஜெண்ட்ஸ் இப்படித் தான் வருவாங்கன்னு மறந்திட்டேயா.’ என்று அவளே அதற்கு விடையைக் கொடுக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்,’குருவாயூரப்பா..இது என்ன சோதனை..இப்படி என்னை மாட்டி விட்டதுக்கு இனி இந்தப் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன்.’ என்று கிருஷ்ணனை அர்ச்சனை செய்தவள் அது அவளது முகத்தில் தெரியாதபடி, அவனைப் பார்த்து, அளவாகச் சிரித்து, ஏதோ பெண் பார்க்கும் வைபவம் தினமும் நடப்பது போல், வெகு சாதாரணமாக,”ஹலோ சர்.”என்றாள் சினேகா.
அவனும் அந்த நிகழ்விற்கு அடிக்கடி வந்து அலுத்துப் போனவன் போல் லேசான தலையசைவில் அதை ஆமோதித்து அவனது மனத்தில் இருப்பது வெளியே தெரியாமல் இருக்க அவனது வாய்க்குப் பூட்டு போட்டுக் கொண்டான் ஷண்முகவேல். அப்போது,
“சாமி, அந்தப் பூக்காரன் கிட்டே இந்த அளவுக்கு நறுக்கி வாங்கிட்டு வா ப்பா..நான் மறந்திட்டேன்..மாப்பிள்ளை வீடு வந்திடப் போறாங்க..சீக்கிரம் போ ப்பா.” என்று சொல்லி அவர் கையிலிருந்த மல்லிப்பூச் சரத்தை ஷண்முகத்திடம் கொடுத்து இரண்டு முழும் அளவிற்கு வெட்டி வரச் சொன்னார் விஜயா.
அதைக் கேட்டு சினேகா சங்கடமடைய, ஜோதியோ படபடப்புடன்,”தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி….இவளைத் இங்கே இப்படித் தனியா விட்டிட்டு என்னாலே போக முடியாது…மனோகர் வந்ததும் பூ வாங்கிட்டு வரச் சொல்லாம்னு நினைச்சேன்..அதுக்குள்ளே உங்கம்மா வாங்கிட்டு வந்திட்டாங்க.” என்று சினேகாவின் தலையில் பூ இல்லாததற்கான காரணத்தை விளக்கினார்.
பூச்சரத்தைக் கையில் வாங்கியவன் சாவகாசமாக சட்டை பேக்கெட்டிலிருந்து சுவிஸ் ஆர்மி நைஃபை வெளியே எடுத்து, இரண்டு முழுத்திற்கு மேலாக உயர்த்திப் பிடித்து, உணர்வுகளைக் கையக்கப்படுத்தி, ஷண்முகத்தில் புதைதிருந்த ஸஹஸ்ர முகத்திலிருந்து ஒரு புது முகத்தை பொருத்தி, புதிரான முகப் பாவத்துடன் சினேகாவைப் பார்க்க, ‘இதுயென்ன முகப் பாவனை?’ என்று யோசித்தபடி அவனை அவள் நோக்க, கண்களால்,’ஓகேவா’ என்று ஷண்முகவேல் கேட்க, அதைப் புரிந்து கொண்டு சரியென்று சினேகா தலையசைக்க, அந்த அளவிற்கு வெட்டி மணம் வீசும் மல்லியை அவள் கையில் அவன் வைக்க, வேலும் கொடியும் தொடர்பில் வந்த நொடியில் இருவரின் மூலக்கூறும் மாறி காந்தம் போல் அவர்களைக் கவர்ந்திழுக்க, சடாரென்று இருவரும் அவர்களின் விரல்களை விலக்கிக் கொண்ட போது தனிச்சையாக அவர்களின் விழிகள் கலக்க,, சுவாசங்கள் சங்கமிக்க, இதயங்கள் இணைய, வேட்டியும் சேலையும் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டது.
*************
நானும் கதைலே சிக்கிக்கிட்டதாலே மிக முக்கியமான வேலைகளைக் கிடப்பில் போட்டிட்டு தினமும் ஒரு பதிவு கொடுத்திட்டு இருக்கேன். எழுதியனதை மீண்டும் படிக்க நேரமில்லாத்தால் பிழை திருத்தம் செய்யாமல் அப்படியே பதிவேற்றம் செய்திட்டு இருக்கேன்..தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் வாசகர்களுக்கு நன்றிகள் பல…stay blessed readers.