வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும்,
“ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே அவர் உடம்போடு ஒட்டி வைத்திருந்த பார்சலுக்காக கையை நீட்ட, பவ்யமாக அதை அவன் கையில் அதைக் கொடுத்தார். உடனே,
”எங்களோட புடவையை நீயே வைச்சிட்டு இருக்க? இப்போ அனுப்பி விட்டாலாவது தீபாவளிக்கு கட்டிப்போம்னு அக்கா சொன்னா..அதான் அனுப்பிவிடலாம்னு நினைச்சு..” என்று விஜயா வாக்கியத்தை முடிக்கும் முன்,
“நான் அனுப்பி வைக்கறேன்..இந்த வேலையெல்லாம் இவர் செய்யக் கூடாது.” என்றான் ஷண்முகம்.
“இல்லை டா..உள்ளூரா இருந்தா சினேகாவே அனுப்பி விட்டிருப்பா..முகவரி எல்லாம் எழுதின பிறகு தான் இது வெளி நாடு ஆன் ட்டி, நீங்களே அனுப்பினா தான் சரியா இருக்கும்னு சொல்லிட்டா..உனக்காக காத்திருந்தேன்..இப்போ நவராத்திரியும் போயிடுச்சு….நீ வீட்டுக்கே வர்றதில்லை..அப்படியே வந்தாலும் இதுக்கு நேரமிருக்கப் போகறதில்லைன்னுதான்.” என்று விஜயா காரணம் சொல்ல,
“நாலு மாசம் கூட ஆகட்டும் எப்போ நம்மளாலே முடியுதோ அப்போ தான் இந்த வேலையெல்லாம் செய்யணும்..இந்த மாதிரி வேலையெல்லாம் இவரைச் செய்ய சொல்றது தப்பு..நான் திரும்பியே வர மாட்டேன்னு நினைச்சீங்களா?” என்று ஆத்திரத்தில் வாயை விட்டான்.
“சாமி..” என்ற ஒரு சொல்லிற்கு மேல் விஜயாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அவனது சுடு சொற்கள் அவரது இதயத்தை ஈட்டியாக தாக்கி அவரது கண்கள் கலங்க அது அழுகையாக மாறும் முன் படுக்கையறைக்குச் சென்று விட்டார் விஜயா.
அதுவரை அமைதியாக இருந்த ஷர்மா, விஜயா சென்றவுடன்,”ஸர், எனக்கு தெரிஞ்சவங்க கொரியர் ஆபிஸ்லே வேலை செய்யறாங்க..அவங்ககிட்டே கொடுத்து விட்டா நம்பிக்கையா போய் சேர்ந்திடும் சொன்னேன்..உங்களைக் கேட்டிட்டு தான் கொடுக்கறதா இருந்தாங்க..அம்மாவைக் கோவிச்சுக்காதீங்க.” என்று அவர் விளக்கம் கொடுக்க,
“ஷர்மா, ப்ளீஸ் இதிலே நீங்க தலையிடாதீங்க…அம்மாக்கு உங்க உதவி தேவைதான் ஆனா இந்த மாதிரி வேலையெல்லாம் அதிலே சேராது.” என்று கண்டிப்புடன் பேசினான்.
ஷர்மா வெளியேறியவுடன் உடையைக் கூட மாற்றாமல் படுக்கையறைக்குச் சென்றான் ஷண்முகம்.
படுக்கையில் அமர்ந்து கண்ணீர் சொறியும் கண்களோடு சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா. அவரது அந்த தோற்றம் மனத்தில் அச்சத்தைக் கிளப்பினாலும் அவருக்கு ஆறுதல் சொல்லாமல், எடுத்தவுடனேயே,”நான் எந்த வேலைலே இருக்கேன்னு தெரியுமில்லே.” என்று கடுமையான குரலில் கேட்டான்.
அவசரமாக கண்ணத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,”தெரியும் சாமி..ஆனா..” என்று அவர் அடுத்து பேசத் தயங்க,
“அதை எப்போதும் மறக்காதீங்க..எனக்கு என்ன நடந்தாலும் நீங்க தைரியமா இருக்கணும்..உங்க வேலையைச் செய்ய நீங்க கத்துக்கணும்..வாழ்க்கையை வாழணும்” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
காவல் துறையை தேர்ந்தெடுத்தது விஜயாவிற்கு பிடிக்கவில்லை. சிறு வயதிலேயே விடுதியில் சேர்த்து விட்டதால் படிப்பு முதல் பணி வரை அனைத்தும் ஷண்முகத்தின் முடிவு தான். வழி காட்டவென்று சில ஆசிரியர்கள் இருந்ததால் வீட்டில் யாரையும் ஆலோசனை கேட்கவில்லை. இப்போது அவன் பெரிய பணியில், பதவியில் இருப்பதால் ஆலோசனை, உதவி என்று அறிந்தவர் அறியாதவர் பலரும் அவனை அணுகுகிறார்கள். அவனால் முடிந்த உதவியை பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வருகிறான். அதன் விளைவாக அவனுடன் உறவு கொண்டாட முயற்சி செய்பவர்களை முழுவதுமாக ஒதுக்கி வைத்து விடுவான். உடன் வேலை செய்ப்வர்கள், உறவினர்கள் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.
எத்தனை வருந்தி அழைத்தாலும் எந்த விழாவிலும் தலையைக் காட்டாதவன் அவனுக்கு தோணும் போது சில விழாக்களுக்கு செல்வான். எதிர்பாராத நேரத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வான். உறவினர்களை என்றாலும் அவர்களோடு ஒட்டி உறவாட அவனுக்கு வரவில்லை. அதுவும் இந்த வேலையில் சேர்ந்த பிறகு அதைக் காரணம் காட்டி சில சூழ்நிலைகளில் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறான். அதே சமயம் அண்ணனாக, தம்பியாக ஒன்று விட்ட உடன்பிறப்புகளுக்கு பல விதத்தில் பல உதவிகள் செய்திருக்கிறான். எப்படி இருந்தாலும் கடைசிவரை அவனுடைய அம்மா அவர்களோடு தான் என்பதால் யாரையும் பகைத்துக் கொண்டதில்லை. யாரிடமும் பகட்டாக நடந்து கொண்டதில்லை.
இப்போது கூட அந்தப் புடவைகளை அவனாக அனுப்பி வைப்பது தான் முறை, மரியாதை என்று நினைத்து தான் அம்மாவிடம் கோபம் கொண்டான். ஷர்மா மூலம் அனுப்பி வைப்பது சரியாகப் படவில்லை. இதுவரை அவனோடு வேலை செய்தவர்கள் யாருடனும் நெருக்கமாக அவன் பழகியதில்லை. அவனுடைய பேட்ச்மேட்ஸ் சிலருடன் தான் பழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறான். அனைவரும் ஒரே படகில் பயணம் செய்வதால் அவர்களோடு தான் இலகுவாக பழகுவான். மற்ற நேரத்தில் ஆல்வேஸ் அலர்ட் என்று சர்வ ஜாக்கிரதையாக இருப்பான்.
எச்சரிக்கை, முன் ஜாக்கிரதை என்று தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் அனைவரும் அவனது சந்தேக பட்டியலில் குடியேறி விடுவார்கள். அவனைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத வேலி ஒன்றை அமைத்து வைத்திருக்கிறான். இப்போது சில மாதங்களாக, அம்மா அவனோடு வந்த பிறகு, அவரால் அந்த வேலியில் சில இடைவெளிகள் ஏற்படுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அந்த இடைவெளிகளையும் அவனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்று தான் நினைக்கிறான். இன்னும் சில மாதங்கள் தான். அதன் பின் பழையபடி அவனது வாழ்க்கை மாறிவிடுமென்று அவன் கணக்கு போட, கண்ணுக்கு தெரியாத வேலி மீது குஞ்சலதாவாக (காட்டுக் கொடி, wild creeper) சினேகலதா படர்ந்திருந்ததை முழுமையாக உணரும் தருணம் அருகில் வந்துவிட்டதை அவன் அறியவில்லை.
சில நிமிடங்கள் கழித்து வேறு உடைக்கு மாறி அவனது அறையிலிருந்து வெளியே வந்தான் ஷண்முகவேல். சமையலறையில் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தவன்,
“அம்மா இராத்திரிக்கு எதுவும் செய்ய வேணாம்..கிளம்புங்க..கூரியர் அனுப்பிட்டு அப்படியே வெளியே சாப்டிட்டு வரலாம்.” என்றான் ஷண்முகம்.
சற்று முன்னர் வரை அழுது கொண்டிருந்தவர் இப்போது சாதாரணக் குரலில்,“இத்தனை நாள் வெளியே தானே சாமி சாப்பிட்ட எதுக்கு இன்னைக்கும் சாப்பிடணும்?” என்று மறுப்பு தெரிவிக்க,
“இத்தனை நாள் நீங்க தனியா சமைச்சு சாப்பிட்டீங்க..இன்னைக்கு வெளியே போகலாம்..இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றான்.
“பொங்கல் செய்து வைச்சிட்டேனே சாமி..வீணாப் போயிடும்.” என்று விஜயா தயங்க,
“உங்களுக்கு மட்டும் தானே?” என்று ஷண்முகம் கேட்க,
‘ஆமாம்’ என்று அவர் தலையசைக்க,
“சரி ஸ்னாக்ஸ் போல சாப்டிட்டு வரலாம்..அப்புறம் வீட்டுக்கு வந்து இந்தப் பொங்கலை சேர்ந்து சாப்பிடலாம்..எதுவும் வீணாகாது..இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்ட மாதிரியும் ஆகும்.” என்று புன்சிரிப்புடன் சொன்னான் ஷண்முகம்.
விஜயாவும் சிரித்தபடி,”சரி சாமி..புடவை மாத்திட்டு வரேன்.” என்று கிளம்ப,
“நோ..சல்வார் கமீஸ் போட்டிட்டு வாங்க.” என்று கட்டளையிட்டான் ஷண்முகம்.
அதைக் கேட்டு ஆயிரம் வாட்ஸ் விளக்கு போல் பிரகாசித்தது விஜயாவின் முகம். பத்து நிமிடங்கள் கழித்து அவரது படுக்கையறையிலிருந்து வந்த விஜயாவைப் பார்த்து சீட்டி அடித்தான் ஷண்முகம்.
“ஸுப்பர் ம்மா.” என்று அவரை அணைத்துப் பாராட்டினான்.
வெட்கத்துடன் அவனது பாராட்டை ஏற்றுக் கொண்டவர், அவரது கைப்பேசியை அவனிடம் கொடுத்து,”இதிலே ஒரு ஃபோட்டோ எடுத்து சினேகாவுக்கு அனுப்பி விடு சாமி.” என்றார்.
அதைச் செய்து விட்டு, பார்சலையும் எடுத்துக் கொண்டு அவனது காரில் அம்மாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் ஷண்முகம். கொரியர் ஆபிஸில் பார்சலை சேர்ப்பித்து விட்டு, காரில் ஏறியவுடன், விஜயாவிடம்,
“சாப்பிட எங்கே போகலாம்?” என்று கேட்டான் ஷண்முகம்.
“உன்னிஷ்டம் சாமி.” என்றார் விஜயா.
சில நொடிகள் யோசனை செய்த பின்,“உங்க ஃபிரண்டை கேளுங்க.” என்றான் ஷண்முகம்.
“என் ஃபிரண்டா? யாரது?” என்று விஜயா கேட்க,
“ஃபோட்டோ அனுப்பினீங்களே.” என்று அவன் விளக்கம் கொடுக்க,
“ஐய்யோ சாமி, சினேகாவைச் சொல்றீங்களா? சரியா சொன்னீங்க..அவ பெயர்லேயே சினேகம் இருக்கு..ஆளும் அப்படித் தான் இருக்கா..இதோ கேட்கறேன்.” என்றுசினேகாவிற்கு ஆடியோ மெசேஜ் அனுப்பினார் விஜயா.
சில நொடிகள் கழித்து, படபடவென்று பல குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்க, அதை விஜயா திறந்து பார்க்க, வாகனம் ஓட்டியபடியே அவைகளைப் பார்த்த ஷண்முகம்,”அம்மா, நம்மூர் கடைமுகவரி கேளுங்க.” என்று கட்டளையிட்டான்.
‘கண்ணு, சாமிக்கு நம்மூர் சாப்பாட்டு கடை முகவரி வேணுமாம்.” என்று அப்படியே மெஸேஜ் அனுப்ப,’தவல வடை படையல் பிடிக்குமா உங்க சாமிக்கு? என்று அவள் பதில் போட, அவளது கேலியில் அவன் கடுப்பாக, விஜயாவோ,”தெரியலை கண்ணு..நான் செய்ததில்லை.” என்று அவர் பரிதாபமாக பதில் அளிக்க,’குருவாயூரப்பன் கோவில் சைட்லே தான் இந்தக் கடை இருக்கு..சின்ன கடை தான்..சாயங்காலம் மட்டும் தான் திறந்து இருப்பாங்க..மத்த டிஃபன் ஐட்டம்ஸும் கிடைக்கும்.’ என்று கடையின் முகவரியைப் அனுப்பி வைத்தாள் சினேகா.
“அம்மா, இதிலே மட்டும் பக்கா தமிழ் போல உங்க ஹிந்தி சினேகிதி.” என்று ஷண்முகம் சொல்ல,
“எந்த ஊர்லே இருந்தாலும் எல்லார் வீட்லேயும் அவங்களோட சாப்பாடு தான் செய்வாங்க சாமி..இப்போ நம்ம வீட்லேயும் அப்படித் தானே.”
“அப்புறம் எப்படி இந்த ஊர் சாப்பாட்டு கடையைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கா..டக்குடக்குன்னு அத்தனை முகவரி அனுப்பி வைச்சா.” என்று ஷண்முகம் கேட்டவுடன்,
“இங்கே தான் வளர்ந்திருக்கு அந்தப் பிள்ளை..அவங்க அப்பா அவளை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போவாராம்..பொண்ணை பெரிய விளையாட்டு வீராங்கனை ஆக்கணும்னு ஆசையாம்..சதுரங்கம், டென்னிஸ், நீச்சல்னு நிறைய கிளாஸ்ஸுக்கு அனுப்பி வைச்சிருக்கார்..மகனை விட மகள் மேலே தான் நிறைய அன்பு வைச்சிருந்திருக்கார்..இந்தப் பொண்ணு பள்ளிப் படிப்பை முடிக்கறத்துக்கு முன்னாடியே ரிடையர்மெண்ட் வாங்கியிருக்கார்..காலேஜ் படிப்பை ஊர்லேயே வைச்சுக்கலாம்னு திட்டம் போட்டிட்டு இருந்திருக்கார். இரண்டு மூணு முறை ஊருக்குப் போய் வீடெல்லாம் பார்த்திட்டு வந்திருக்கார்..பையன் அப்போ படிப்பை முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருந்திருக்கான் அந்த நேரத்திலே தான் திடீர்னு மாரடைப்புலே போயிட்டார்..” என்று சினேகாவின் குடும்பக் கதையை அவர் சொல்லி முடிக்கும் போது கடை வந்திருந்தது.
கடையில் கூட்டமிருக்கவில்லை அதே சமயம் சரக்கும் இருக்கவில்லை. அவர்கள் சென்ற போது அனைத்தும் காலியாகி கடையை மூடும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஷண்முகம் புதுமுகம் என்பதால் அவர்களுக்காக என்று எடுத்து வைத்திருந்த தவல வடையிலிருந்து இரண்டை சட்னியோடு தட்டில் போட்டுக் கொடுத்தார் கடைக்காரர். வெய்யில் காலம், குளிர்க்காலத்தில் கடை திறக்கும் நேரம், சாப்பாடு ஐட்டம் என்றுகடையைப் பற்றிய விவரங்களை, அவரது கைப்பேசி இலக்கை விஜயாவுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு வடையை அம்மா, மகன் இருவரும் பகிர்ந்து கொண்டனர். மற்றொன்றை ஒரு கவரில் போட்ட ஷண்முகம்,
“அம்மா, இன்னொரு வடைய வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடலாம்..இப்போ பக்கத்திலே இருக்கற பார்க்லே கொஞ்சம் நடக்கலாம்.” என்று விஜயாவோடு அருகிலிருந்த பூங்காவிற்கு சென்றான்.
காற்றில்லா விட்டாலும் மிதமாக இருந்தது வானிலை. இளம் ஜோடிகள், குழந்தைகள், தாய்மார்களென்று அந்த நேரத்திலும் கலகலப்பாக இருந்தது பூங்கா.
“நம்மூர்லே இந்த மாதிரி பார்க்க முடியாது..இங்கே தான் நாள் தவறாம எல்லோரும் பூங்காக்கு போறாங்க.” என்றார் விஜயா.
“எந்த ஊர்லே இருந்தாலும் தினமும் பூங்கா போறவங்க இருக்காங்க ம்மா..மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்.” என்றார்.
அப்போது விஜயாவின் கைப்பேசியில் அவரது புகைப்படத்திற்கு ‘ஸுப்பர்’ என்று பதில் போட்டிருந்தாள் சினேகா.
அதைப் பார்த்தவர்,”என் மனசுக்கு பிடிச்சாலும் இந்த மாதிரி சுடிதார் போட்டுக்கிட்டு நம்ம தெருவிலே நான் போக முடியுமா? இந்த ஊருங்கறதுனாலே முடியுது..பிறந்து வளர்ந்த ஊர்லே கண்ணுக்கு தெரியாத பல சட்டதிட்டம் இருக்குது..அதையெல்லாம் தாண்டி வர்றது கஷ்டம் சாமி..அதுவும் பொண்ணுங்களுக்கு ரொம்பவே கஷ்டம்..ஊர் மட்டுமில்லை வீடும் தான் எதிரி.” என்றார்.
சில நொடிகள் கழித்து,”உங்களுக்கு கஷ்டமா இருந்திச்சா ம்மா?” என்று முதல்முறையாக விஜயாவிடம் அவர் தேர்தெடுத்த வழியை, வாழ்க்கையைப் பற்றி கேட்டான்.
இந்த நொடிக்காக பல வருடங்களாக காத்திருந்த விஜயா அதை இறுக்கமாக பற்றிக் கொண்டு பல வருடங்களாக அவரது மனத்தில் புதைந்திருந்ததை மகனிடம் கொட்ட, அம்மாவின் கதையைக் கேட்ட மகன், அவரது கைகளை இறுக்கமாகப் பற்றி அவருக்கு ஆறுதல் அளிக்க,”உன்கிட்டே சொல்லணும்னு நினைப்பேன் சாமி ஆனா சொல்ல மாட்டேன்..நான் சரியா சொல்லணும் என்னை நீ சரியா புரிஞ்சுக்கணும்னு ஏகப்பட்ட குழப்பத்திலே எதையும் சொன்னதில்லை..இன்னைக்கு என்னவோ எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாம எல்லாம் தானா வெளியே வந்து விழுந்திடுச்சு சாமி.” என்றார்.
“நான் அவர் மாதிரியா? அவரோட குணம் என்கிட்டே இருக்குதான்னு நானும் நிறைய தடவை உங்ககிட்டே கேட்கணும்னு நினைச்சிருக்கேன் ம்மா..ஆனா கேட்டதில்லை..அவரைப் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் இந்தக் கேள்விகள் வந்து என்னைக் கலவரப்படுத்தும்..இப்போ என்னாலே நான் அவர் மாதிரி இல்லைன்னு தைரியமாச் சொல்ல முடியும்..இந்த மாதிரி ஒரு பொண்ணை அதுவும் மனைவியை ஏமாத்தறவன் மனுஷனே இல்லை..ஏம்மா அந்த ஆளை விவாகரத்து செய்தீங்க? விவாகரத்து கொடுக்காம நாய் மாதிரி அலைய விட்டிருக்கணும்..அவங்க குடும்பத்தையே சந்திலே இழுத்திருக்கணும்.” என்றான் ஷண்முகம்.
சில நொடிகள் மௌனமாக இருந்த விஜயா, இறுதியில்,”உனக்காக கூட என்னாலே அவரோட வாழ முடியலை சாமி..அந்த ஆள் ஒரு பொய் சாமி..உண்மை எப்படி பொய்யோட ஜோடி சேர முடியும்?” என்று கேட்ட விஜயா அறிந்திருக்கவில்லை அதை காரணத்திற்காக தான் வெங்கடேஷிடமிருந்து வ்சந்தி விலகப் போகிறாளென்று.