அத்தியாயம் – 30

நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டாள். அவளது அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல்,

“புதுப் புடவையா வசந்தி? உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு எங்கே வாங்கின?” என்று விசாரித்தார் அவளுடைய பக்கத்து பில்டிங்கில் வசிக்கும் பெண்மணி ஒருவர்.

“ஆமாம் க்கா..என் தம்பி நவராத்திரிக்கு வாங்கிக் கொடுத்திருக்கான்.” என்றாள்.

“அதான் கோவிலுக்கு கட்டிட்டு வந்திருக்க போல..இப்போயெல்லாம் உன்னை வெளியே பார்க்க முடியறதேயில்லை..பால்கனிக்கு கூட வர்றதில்லை..மாமியார், மாமனார் வந்திருக்காங்களா?” என்று விசாரித்தார்.

“ஆமாம் க்கா..அவங்களுக்கு சமைச்சு வைச்சிட்டு கோவில் மூடறத்துக்குள்ளே அவசர அவசரமா ஓடி வந்தேன்..வேலை சரியா இருக்குது க்கா..பால்கனிலே உட்கார கூட நேரம் கிடைக்கறதில்லை.” என்றாள் வசந்தி.

“அப்படித் தான் இருக்கும்னு நானும் நினைச்சேன்..உன் வீடு ஆயிரத்தி மு ந்நூறு சதுரஅடி தானே?” என்று திடீரென்று அவர் கேட்க, வசந்தியிடமிருந்து பதில் வரவில்லை.

“என்ன க்கா கேட்கறீங்க?” என்று அவள் மீண்டும் கேட்க,

“உங்க ஃபிளாட்டுக்கு அறுபது லட்சம் கேட்கறார் உன் வீட்டுக்காரர்..எங்களுக்கு தெரிஞ்சவங்க அம்பதைஞ்சுக்கு கேட்கறாங்க..நம்ம ஏரியாலே இரண்டு படுக்கையறை அம்பதுலேர்ந்து அம்பதைஞ்சு வரை தான் போகுது..அதுக்கு மேலே பத்திரப் பதிவு செலவு வேற இருக்குதிலே..எங்களோடது ஒரு படுக்கையறைதானே..உன்னோட இரண்டு படுக்கையறை எத்தனை சதுர அடின்னு ஐடியாலே இல்லை அதான்  கேட்டேன்.” என்று பதில் கொடுக்க, வசந்தியின் சந்தோஷமான மனநிலை நொடியில் மாயமாக மறைந்து போனது. 

‘ஃபிளாட்டை விற்க விலை பேசிட்டு இருக்காங்களா? நம்மகிட்டே ஒரு வார்த்தை சொல்லலை..ஏன்? ஏதாவது பணமுடையா?’ என்று யோசனையில் ஆழ்ந்து போக, “உன்னோட மாமியார் போன பிறகு ஒரு நாள் சாயங்காலம் வீட்டுக்கு வா வசந்தி..நிதானமா பேசலாம்.” என்று அந்தப் பெண்மணி அவளை வீட்டிற்கு அழைத்தது கூட வசந்தியின் மனத்தில் பதியவில்லை. 

அன்றைய பொழுது முழுவதும் அதே யோசனையில் செல்ல, அவளது அந்த யோசனை சீதாவின் மனத்தில் அச்சத்தை வரவழைத்தது. வசந்திக்கு விஷயம் தெரிந்து விட்டதோ என்று சந்தேகம் வந்தது. அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய மகனின் காதில் அவரது சந்தேகத்தை போட்டு வைக்க,’நீங்க கவலைப்படாதீங்க..நான் பார்த்துக்கறேன்.’ என்று அவரைச் சமாதானம் செய்தான் வெங்கடேஷ்.

அவனை ஏதாவது கேள்வி கேட்டால்,’உனக்கு என்ன தெரியும்? நீயா வெளியே போய் சம்பாதிக்கற? இந்தச் சாமான் இல்லை அந்தச் சாமான் தேவைன்னு எப்போ பார்த்தாலும் ஏதாவது செலவு வைக்கற..சாப்பிடற..தூங்கற..காசு எப்படி வருதுன்னு உனக்குத் தெரியுமா?..என்ன செலவாகுது எப்படி சமாளிக்கறேன்னு உனக்கு ஏதாவது  ஐடியா இருக்கா? என்னோட ஃபிளாட் இது..நான் சம்பாதிச்சு வாங்கினது.. விப்பேன், உடைப்பேன்..உனக்கு என்ன வந்தது?’ என்று அவள் மீது எரித் தனலைக் கொடுட்டுவான் என்று தெரிந்தும் அவளது கல்யாண வாழ்க்கையைத் தொடங்கிய அந்த வீட்டிற்கு அவள் மனத்தில் தனி இடம் இருந்ததால் அன்றிரவு அவன் படுக்கையறக்கு வந்ததும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,”நம்ம ஃபிளாட்டை விலை பேசிட்டு இருக்கீங்களா?” என்று வெங்கடேஷிடம் கேட்டு விட்டாள் வசந்தி.

‘நம்ம ஃபிளாட்’ என்று அவள் சொன்னது எரிச்சலை ஏற்படுத்த, பழைய வெங்கடேஷாக இருந்தால்,’நீதான் பணம் போட்டு வாங்கினேயா? இல்லை உங்க வீட்லே வாங்கிக் கொடுத்தாங்களா?’ என்று சுள்ளென்று கேட்டிருப்பான். இந்தப் புது வெங்கடேஷிற்கு அவனது புது வாழ்க்கையை எந்த விதமான தடங்கல், மனத்தாங்கல் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டும் அதற்கு முடிந்த வரை வசந்தியை இருட்டில் வைப்பது நல்லது என்பதால், சாதாரணமான குரலில்,”ஆமாம்” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்து விட்டு படுத்து விட்டான்.

அந்த ஒரு வார்த்தை வசந்தியின் வயத்தில் புளியைக் கரைத்தது.  மனத்தை பிசைந்தது. ‘என்ன ஆச்சு இவங்களுக்கு? ஒரு வார்த்தை கூட திட்டாம ஒரே வார்த்தைலே பதில் சொல்லிட்டுப் படுத்திட்டாங்க..எதுக்கு இந்த ஃபிளாட்டை விக்க முடிவு செய்திருக்காங்க?’ என்று பலமாக யோசிக்க ஆரம்பித்தாள். அவர்கள் வீட்டில் இருக்கும் அத்தனை விலை உயர்ந்த பொருளும் வெங்கடேஷ் வாங்கியது தான். அவனின் அந்தஸ்த்திற்கு ஏற்றார் போல் சீர் செய்ய அவளுடைய வீட்டில் வசதி இருக்கவில்லை. ஜெயந்தி, சிந்து, அவள் என்று மூவரையும் சமமாக தான் பார்க்க வேண்டி இருந்தது. ஜெயந்தியின் திருமணத்தை போல் தான் அவள் திருமணம் நடந்தது. இருவருக்கும் எல்லாமே ஒன்று போல் செய்தனர். வெளி நாட்டு மாப்பிள்ளை என்பதால் சிந்துவின் திருமணம் கொஞ்சம் ஆடம்பரமாக நடந்தது. சீர்வரிசையும் கொஞ்சம் கூடுதல் தான். ஜெயந்தி அதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை ஏனென்றால் சித்துவின் பள்ளிக்கு கொடுத்த நன்கொடை, சில சமயங்களில் ஃபீஸ் என்று பல செலவுகளை சபாபதி தான் செய்கிறார். நல்ல வேலை, சம்பளம், சொந்த ஃபிளாட் என்று வெங்கடேஷுடனான அவளது  வாழ்க்கை நிறைவாக சென்று கொண்டு இருந்ததால் அவளும் பெற்றோரை கேள்வி கேட்கவில்லை. 

‘இந்த ஃபிளாட்டை விற்க முடிவு செய்திருக்கார்.’ என்று கணவனின் முடிவைப் பற்றி அவளது குடும்பத்தினரிடம் கூறினால்,’நிலம் வாங்கி வீடு கட்ட திட்டம் போட்டிருப்பார்.’ என்று ஜெயந்தியும்,’இன்னும் பெரிய ஃபிளாட் வாங்கி இருப்பார்.’ என்று அவளுடைய அம்மாவும் வதந்தியைக் கிளப்பி விட்டால் அவளுக்குத் தான் வினையாக வந்து முடியும் என்று நினைத்து அவளுடைய வீட்டு ஆள்களிடம் ஃபிளாட் விற்பனையைப் பற்றி வாயைத் திறக்கவில்லை வசந்தி.

புகுந்த வீட்டு விஷயங்களைப் பிறந்த வீட்டினரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாதென்ற கோட்பாட்டைத் திருமணமான பெண்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள். அந்தக் கோட்பாடு அனைத்து குடும்பங்களுக்கும் சூழ் நிலைகளுக்கும் பொருந்திப் போகாதென்ற அறிவு பெண்களுக்கு அவசியமான ஒன்று. வசந்திக்கு அந்த அறிவு இருந்ததால் தான் தனது பிரச்சனைகள் அனைத்தையும் அம்மாவின் காலடியில் கொட்டாமல் சிலதை மட்டும் கொட்டும் வழக்கத்தை வைத்திருந்தாள். அந்த வழக்கத்தில் இந்த விஷயத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்தவளுக்குத் தெரியவில்லை அவளது மணவாழ்க்கை ஆரம்பமான இடத்தில் தான் முடியவும் போகிறதென்று.

“எங்கேயோ கிரமாத்தில்லே கிடந்தேன்..கல்யாணம் என்னைத் தூக்கிட்டு வந்து தில்லிலே போட்டிச்சு..இப்போவரை இங்கே தான்னு போட்டிருக்கு..காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்..எனக்கு மட்டுமில்லை பொண்ணுங்க எல்லோருக்கும் அப்படித் தான்..ஃபாரின்லே பத்து மாப்பிள்ளை பார்த்தாலும் புகுந்த வீடு புழைக்கடைன்னா அந்த வேளை வரும் போது தான் அது நமக்கு தெரிய வரும்..உனக்கு எங்கே போட்டிருக்கோ அங்கே தான் போய் நீ வாழப் போற..தில்லி தில்லின்னு சொல்லாதேன்னு  உனக்கு எடுத்துச் சொல்லி எனக்கு அலுத்துப் போயிடுச்சு..ஆனாலும் அப்படி ஒரு வரனைத் தான் தேடி எடுத்திட்டு வந்திருக்கேன்..

பையன் தில்லிலே, மீடியாவுலே வேலை பார்க்கறான்..அப்பா, அம்மாக்கு திருச்சிலே சொந்த வீடு இருக்குதாம்..பையனுக்கு இரண்டு அக்கா..இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து பேரன், பேத்தி எல்லாம் எடுத்தாச்சு..மாப்பிள்ளை பையன் இரண்டு வருஷமா தனியா தான் தில்லிலே இருந்திருக்கான்….இப்போ அம்மா, அப்பாவை அழைச்சிட்டு வந்திட்டான்..மும்பை, பெங்களூர்லே இன்னும் நல்ல வேலையா தேடிட்டு இருக்கானாம்..உன் தலையெழுத்திலே அந்த ஊர்னு இருந்தா தில்லி மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டாலும் அவன் போற இடத்துக்கு தான் நீயும் போவ..பொண்ணு பார்க்க எப்போ வரச் சொல்ல?” என்று மகளிடம் கேட்டார் ஜோதி.

அவளுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் தில்லியில் மாப்பிள்ளை கிடைக்க மாட்டான் என்ற தைரியத்தில் தான் அப்படியொரு கண்டிஷன் போட்டிருந்தாள் சினேகா. ‘இரண்டு வருஷமா இங்கே வேலை பார்க்கறவன் எதுக்கு இப்போ கல்யாணத்துக்கு தாயாராகி என்னை இக்கட்டிலே மாட்டி விட்டிருக்கான். எந்த காரணமும் சொல்லி இவனை வேணாம்னு சொல்ல முடியாதே.  நம்ம தலையெழுத்து பக்கத்து செக்டர் கிடையாதா? திருச்சி தானே?’ என்று மனத்தில் பல யோசனைகளோடு மௌனமாக இருந்தவளிடம்,

“நம்ம வீட்லே பெண் பார்க்கறதை வைச்சுக்க முடியாது..ஷிக்கா, மனோகர் பற்றி அவங்களுக்கு சொல்லியிருந்தாலும் அங்கே வைச்சுக்கிட்டு அவளாலே ஏதாவது ஏடாக்கூடமா நடந்தா என்னாலே தாங்கிக்க முடியாது..குருவாயூரப்பன் கோவில்லே வைச்சுக்கலாம்னு நினைக்கறேன்..உனக்கு எந்த நாள் சௌகர்யப்படும்னு சொல்லு அவங்க சௌகர்யம் கேட்டுக்கறேன்.” என்றார்.

அதற்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்த மகள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஜோதிக்கு.  “இத்தனை யோசனை செய்ய என்ன இருக்கு? முன்னேயோ பின்னேயோ அவங்க கேட்கறதைக் கொடுத்து உன்னை கரையேத்தின கையோடு உங்கப்பா வாங்கினதை திருப்பி கொடுத்து, அண்ணன் வீட்லே கல்யாணம் கலாட்டா இல்லாம நடந்தா தான் எனக்கு நிம்மதி.” என்றார் ஜோதி.

அதற்கு,”அந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணுங்கறதுக்காக இந்த ஆளை டக்குனு நான் கல்யாணம் செய்துக்க முடியாது.” என்று மறுத்தாள் சினேகா.

“இந்த ஆளோ இல்லை எந்த ஆளோ உன் கல்யாணத்தை டக்குன்னு முடிச்சு தான் இத்தனை வருஷமா இழுத்திட்டு இருக்கற பிரச்சனைக்கு டக்குனு முடிவு கிடைக்கும்.” என்றார் ஜோதி.

“அம்மா, நானா இந்தப் பிரச்சனைக்குக் காரணம்? என்னை வைச்சு முடிக்க பார்க்கறீங்க.” என்றாள் சினேகா.

“பிரச்சனைக்குக் காரணமானவர் இப்போ இங்கே இல்லையே..இழுத்திட்டு வர முடியாத இடத்துக்கு போயிட்டார்..நானும் அங்கே போனா தான் உனக்கு புத்து வருமா?” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டார் ஜோதி.

“எதுக்கு இப்போயெல்லாம் அடிக்கடி இந்த மாதிரி பேசறீங்க?” என்று பதிலுக்கு கத்தினாள் சினேகா.

“அப்படி பேசியும் உனக்கு புரிய மாட்டேங்குதே? நான் இருக்கும் போதே எல்லாத்தையும் முடிச்சிடலாம்னு நினைக்கறேன்..உங்கப்பா மாதிரி பணப் பிரச்சனையை விட்டிட்டுப் போக எனக்கு விருப்பமில்லை..மனோ தப்பிச்சுக்குவான்..எல்லாம் உன் தலைலே தான் வந்து விழும்..நீ கல்யாணம் கட்டிட்டு போனா தான் உனக்கு நல்லது..இந்த வரன் நல்ல இடம்..சரின்னு சொல்லு.” என்று கெஞ்சினார் ஜோதி.

“சரி..பெண் பார்க்க ஏற்பாடு செய்யுங்க..அவங்களுக்கு எப்போ சௌகர்யப்படும்னு கேளுங்க.” என்று ஒப்புதல் அளித்தாள் சினேகா.

“இதோ..இப்போவே அவங்ககிட்டே பேசறேன்.” என்று கைப்பேசியை எடுத்தார் ஜோதி.

“இன்னொரு விஷயம்.” என்று சினேகா சொல்ல,

“எதுவாயிருந்தாலும் பொண்ணு பார்த்து முடிச்சதும் பேசிக்கலாம்.” என்றார் ஜோதி.

“அதுக்கும் நான் சொல்ல போகறத்துக்கும் சம்மந்தமில்லை.” என்ற சினேகா சொல்ல,

“என்ன சொல்லு.” என்று ஜோதி கேட்டவுடன்,

“அப்பா பணம் வாங்கினதா சொல்றது பொய்னு எத்தனையோ முறை சொல்லிட்டேன்..நீங்க காதிலே போட்டுக்கலை..மறுபடியும் மறுபடியும் அதை வைச்சு அவரைப் பற்றி தப்பா பேசறீங்க.” என்றாள் சினேகா.

“அவர் வாங்கமாலா வீடு தேடி வந்து கெடு வைச்சான்..வீட்லேயே அடைச்சு வைச்சிடுவேன்னு மிரட்டினான்..உன் மாமா இரண்டு பேரும் கடனவுடன வாங்கி கொடுத்த பிறகு தானே நம்மளை தில்லிக்கு அனுப்பி விட்டான்..அவனோட பணப் பலம், படை பலம் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று மகளைக் கடிந்து கொண்டார்.

“அவனைப் பற்றி எனக்கு தெரியாது ஆனா அப்பாவைப் பற்றி தெரியும்..பணம் வாங்கியிருக்க மாட்டார்.” என்று எப்போதும் போல் அடித்துப் பேசினாள் சினேகா.

மகள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜோதி,“நீயும் இதையே நிறைய முறை சொல்லிட்ட..அப்படியே நீ சொல்றதை நிரூபிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்.” என்றார்.

“அன்னையோட அவன் கதையையும் முடிஞ்சிடுவேன்.” என்று சொன்ன சினேகா அறியவில்லை உண்மையாகவே அவளுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது ஆனால் அதைக் கண்ணியமாக கணவனின் கைக்கு மாற்றி விடப் போகிறாளென்று.