அத்தியாயம் – 28-1

கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்,”சைட் டேபிள்லே வைச்சிடு.” என்று சொன்ன கணவனை வி நோதமாகப் பார்த்தாள் வசந்தி. அப்படி வைத்து விட்டு போன சமயங்களில்,’எனக்காக காத்திருக்கறதை விட, என்னைப் பார்த்துக்கறதை விட உனக்கு வேற என்ன முக்கியமான வேலை காத்திட்டு இருக்கு?’ என்று வார்த்தையால் காயப்படுத்தி இருக்கிறான். இன்று அவனே வைத்து விட்டு செல்லும்படி சொல்ல,’திடீர்னு இவருக்கு என்னாகிடுச்சு..சாந்தமா பேசுறார், அனுசரணையா நடந்துக்கிறார்.’ என்று எண்ணியவளுக்குத் தெரியவில்லை அவளிடமிருந்து அவனை விலக்கிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கி விட்டானென்று. 

சில நாள்களுக்கு என்று அவர்கள் வீட்டிற்கு வந்த மாமியார், மாமனார் இருவரும் பல நாள்களாக அவர்களுடன் தங்கியிருப்பதும் புதிராக இருந்தது வசந்திக்கு. நவராத்திரி சமயத்தில் மகள் வீட்டிற்கு சென்று பேரன், பேத்தியோடு இருக்காமல், ‘குழந்தை இல்லாத வீட்லே எல்லா நாளும் ஒரே நாள் தான்.’ என்று குத்தி காட்டும் மாமியார் நவராத்திரி நெருங்கும் சமயத்தில் குத்தல் பேச்சு இல்லாமல் அமைதியாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

கல்யாணமாகி வந்ததிலிருந்து இது போல் அவர்கள் செய்ததில்லை. அவர்கள் வருவது, போவது எல்லாம் திடீர் திடீரென்று தான் முடிவு செய்யப்படும். இந்தமுறையும் அப்படித் தானென்று நினைக்க, மாமியார் சீதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அப்படி இல்லை என்று அறிவுறுத்த, அதை ஊர்ஜித்தம் செய்ய வசந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவளுடைய அம்மா சென்னையில் இருந்திருந்தால் கைப்பேசி மூலமாவது அவளது சந்தேகத்தை தெரியப்படுத்தி அவளைத் தெளிவுப்படுத்திக் கொண்டிருப்பாள். வெளிநாடு சென்றதிலிருந்து அவளைப் பற்றிய நினைப்பு அவருக்கு முற்றிலும் இல்லை. வீட்டின் கடைசி பிள்ளை சிந்துவிற்கு பிள்ளை வரப் போகும் சமயத்தில் சின்ன பிள்ளை போல் நடந்து கொள்ளக் கூடாதென்று அவளது மனத்தினை கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் வசந்தி. அப்படியும் ஒரு சில சமயங்களில் அதில் கசிவு ஏற்பட, அவளிடம் கோபத்தைக் காட்ட முடியாத சித்தியிடம் அவளது ஆதங்கத்தைக் கோபமாக வெளியிட்டு விடுவாள். விஜயா சித்தியும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு விடுவார். இப்போது அவர் ஷண்முகத்தின் வீட்டில் இருப்பதால் அவரிடம் சுதந்திரமாகப் பேச முடிவதில்லை. மண்டை, மனது இரண்டையும் வண்டு ஒன்று குடைந்து கொண்டிருக்க அதுயென்ன என்று வசந்திக்கு விளங்கவில்லை. அவளுக்கே பிடிபடாததை யாரிடம் சொல்லி விளக்கம் கேட்பது என்று புரியவில்லை. 

மாமியார், மாமனார் இருவரும் அதிக நாள்கள் இருப்பதைப் பற்றி அம்மாவிடம் சொன்னாலும்,’அவங்க மகன் வீடு..எத்தனை நாள் தங்கினா என்ன?’என்று அவள் வாயை அடைத்து விடுவார். கணவனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால்,’உன் புருஷன் என்னைக்கு உன்கிட்டே நல்லவிதமா பேசியிருக்கான்? நடந்திருக்கான்?’ என்று கேட்டு அவளது பயத்தைக் புதைத்து விடுவார். ஜெயந்தியிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி பல வருடங்களாகி விட்டது. என்னவோ நடக்கிறது ஆனால் என்னயென்று தெரியவில்லை அவளுக்கு. இதே யோசனையில் அடுத்த இரண்டு நாள்கள் கழிய, மூன்றாவது நாள் வெங்கடேஷ் அலுவலகம் சென்றவுடன் மாமனார், மாமியார் இருவரும் அவளிடம் தகவல் சொல்லாமல் வெளியே கிளம்பிச் சென்றனர். ‘எங்கே போயிருப்பார்கள்? என்ன விஷயமாக இருக்கும்? என்று யோசனை செய்யாமல்,’நல்லவேளை நம்மளை கூப்பிடலை.’ என்று நிம்மதியடைந்தவள், கிடைத்த தனிமையை வீணடிக்காமல் விஜயாவிற்கு கைப்பேசி அழைப்பு விடுத்தாள் வசந்தி.

விடியற்காலையில் வேலை விஷயமாக ஷண்முகம் வெளியூருக்குக் கிளம்பிச் சென்றிருந்ததால் அவரது தினசரி வேலைகள் அனைத்தும்  தாமதமாக  நடந்து கொண்டிருந்தது. வசந்தி அழைத்த போது பாத் ரூமில் பிஸியாக இருந்த விஜயா, துணி துவைக்கும் இயந்திரத்தின் மீது கைப்பேசியை வைத்து விட்டு ஸ்பீக்கரில் அவளுடன் உரையாட ஆரம்பித்தார். 

“என்ன சித்தி இந்த நேரத்திலே மிஷின் போட்டிருக்க? என்று விசாரித்தாள்.

“இன்னைக்கு தான் டீ இப்படி ஆகிடுச்சு..தினமும் இந்த நேரத்திக்கு எல்லா வேலையையும் முடிச்சிட்டுக் கொஞ்சம் கண் அசந்திடுவேன்…விடியற்காலைலே தான் வேலை விஷயமா சாமி வெளியூர் போனான்..அவனுக்கு டிஃபன், சாப்பாடு இரண்டும் பேக் செய்து கொடுத்தேனில்லே மத்த வேலைங்க செய்ய லேடாகிடுச்சு..நாலைஞ்சு நாளா சேர்ந்தார் போல வீட்லேர்ந்து வேலைக்குப் போனதாலே அவனோட அழுக்குத் துணி சேர்ந்து போயிடுச்சு..எனக்காக மட்டும் மிஷின் போடறது வேஸ்ட்னு கைலே துவைச்சுக்குவேன்..இன்னைக்கு இரண்டுபேரோட துணியையும் சேர்த்து மிஷின் உள்ளே போட்டேன் கரெண்ட் போயிடுச்சு..இப்போ தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திச்சு..மறுபடியும் கரெண்ட் போகறத்துக்குள்ளே மிஷினைப் போட்டுடிலாம்னு வந்தேன்..உன்னோட அழைப்பு வந்திச்சு..ஃபோனை பாத்ரூமுக்கு தூக்கிட்டு வந்திட்டேன்.” என்றார் விஜயா.

“காலைலே கரெண்ட் போகுதா? அப்போ எப்படி சமையல் வேலையை நேரத்துக்கு செய்து முடிக்கறீங்க?” என்று கேட்டாள்.

“சாமி எங்கே இங்கே இருக்கான்? என் ஒருத்திக்கு தினமும் சமைக்கணும்..நேரத்துக்கு செய்யணும்னு அவசியமில்லையே..அவன் வீட்லே இருந்தா தான் எல்லாம் டயமுக்கு நடக்கும்..அவனுக்கு அந்த மாதிரி வேலை இல்லை..திடீர்னு வருவான்..இரண்டு நாள் வீட்லேர்ந்து ஆபிஸ் போவான்..அப்படியே ஆபிஸ்லேர்ந்து வெளியூர் போயிடுவான்..அங்கேயிருந்து எனக்கு ஃபோன் செய்து பேசுவான்..வாசல் மணி அடிக்குதேன்னு கதவைத் திறந்தா வாசல்லே நிப்பான்..சில சமயம் அவனே சாவி போட்டு கதவைத் திறந்துகிட்டு உள்ளே வந்து வந்ததே தெரியாமப் படுத்துக்கிடுவான்..காலைலே காப்பி போடும் போது கண் எதிரே வந்து நிப்பான்.” என்று ஷண்முகத்தின் போக்குவரத்து பழக்க வழக்கங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டார்.

“தம்பி ஊர்லே இல்லாத போது நீ தனியா சமாளிச்சிக்குறேயா சித்தி?” என்று விசாரித்தாள்.

“வருஷக் கணக்கா எல்லோரோடேயும் சேர்ந்து இருந்திட்டு இங்கே தனியா இருக்க கஷ்டமா தான் இருக்குது..பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லை..ஃபோன் போட்டு பேசினா தான் உண்டு..இன்னைக்கு உன்கிட்டே பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்..நீயே ஃபோன் செய்திட்ட..நவராத்திரிக்கு எல்லோர்க்கும் புடவை வாங்கியிருக்கான் சாமி.” என்று ஆரம்பித்து ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தார் விஜயா.

“ஜெயந்திக்கு ரெடிமேட் பிளவுஸ் வாங்குறேன்னா எனக்கும் வாங்கி அனுப்பிடு சித்தி.” என்றாள் வசந்தி.

“டைலர் கடைக்குப் போக நேரமில்லைன்னு சொல்லி அவ ரெடிமேட் பிளவுஸ் கேட்குறா..உனக்கு எதுக்கு டீ ரெடிமேட் பிளவுஸ்? டைலர்கிட்டேயே தைச்சுக்கோ.” என்றார்.

“எனக்கும் நேரமில்லை சித்தி..அத்தை, மாமா இருக்காங்க..அவங்க என்னோட இருந்தா என் பொழுது எப்படிப் போகும்னு உனக்குத் தெரியுமில்லே?” என்று கேட்டாள்.

“எத்தனை நாளைக்கு இருக்கப் போறாங்க?”

“அதான் தெரியலை..நவராத்திரிக்கு ராதிகா வீட்டுக்குப் போயிடுவாங்கன்ணு நினைக்கறேன்.” என்றாள் வசந்தி.

“நீயும் அவங்களோட போவயா?” என்று கேட்டார் விஜயா.

அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று வசந்திக்குத் தெரியவில்லை. எப்போதும் கேட்கும் சாதாரணமான கேள்வி தான். இதுவரை மாமியார், மாமனாரோடு பலமுறை ராதிகாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். சில பண்டிகைகளை அவள் வீட்டில் தான் கொண்டாடி இருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப் பிறப்பு அவள் வீட்டில் தான். ஏப்ரல் மாதத்தில் சென்னையும் வேலூரும் தகித்துக் கொண்டிருக்கும் என்பதால் பெங்களூரில் வருடப் பிறப்பை கொண்டாடுவதை வழமாக்கி இருந்தார் அவளுடைய மாமியார். 

திருமணமான புதிதில் ராதிகா அவளை அழைக்க வேண்டும், மரியாதையாக நடத்த வேண்டுமென்ற எதிர்பார்பு இருந்தது தான். ஆனால் கணவனே அவளை ஒரு பொருட்டாக நினைக்காத போது அவனது குடும்பத்தினரிடம் மரியாதையை எதிர்பார்ப்பது தவறென்று புரிந்து போனதால் அழையா விருந்தாளியாக தான் நாத்தனாரின் வீட்டிற்கு செல்வாள். ஆனால், வீட்டு ஆள் போல் அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பாள். சில சமயங்களில் மனமானது இந்தப் பழக்கத்தை ஏற்க மறுத்து முரண்டு செய்தாலும் வேறு பாதை இல்லாதததால் மீண்டும் பழைய பாதையையே மனம் ஏற்றுக் கொண்டு விடுமென்பதால்,

“இங்கே அம்மாவும் இல்லை..பண்டிகை நாள்லே ஜெயந்தியும் என்னைக் கூப்பிட மாட்டா…நான் கூப்பிட்டாலும் வர மாட்டா..இங்கே தனியா இருக்கறத்துக்கு நாத்தனார் வீட்டுக்கே போயிடறது நல்லது தானே சித்தி.” என்றாள் வசந்தி.

“என்ன டீ தனியான்னு சொல்ற? மாப்பிள்ளை இருக்கார்..நீயும் அவரும் தான் உன்னோட குடும்பம்.” என்றார் விஜயா.

“நல்ல நாள், பண்டிகை நாள்லே தான் அவருக்கு வெளியூர் போக வேண்டி வருது..நாங்க இரண்டு பேரும் குடும்பம்னு நீ தான் சொல்ற..குழந்தை இல்லைன்னா குடும்பம்னு ஒண்ணு இல்லைன்னு என் மாமியார் சொல்றாங்க.” என்றாள் வசந்தி.

“அவங்க சொல்றதை மனசுலே போட்டுக்காதே..ஒரே பையனுக்கு வாரிசு இல்லையேன்னு ஆதங்கத்திலே சொல்றாங்க.” என்றார் விஜயா.

அதை ஆமோதிக்காமல் அமைதியாக இருந்தாள் வசந்தி. சில நொடிகள் கழித்து,

“பண்டிகை நாள்லே எதுக்கு வெளியூர் வேலைக்கு ஒத்துக்கறார் மாப்பிள்ளை..வேற யாரையாவது போகச் சொல்லலாமில்லே?” என்று விஜயா ஆதங்கப்பட,

“அப்படி ஏதாவது நான் சொன்னா,’என் வேலையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்னு?’ சண்டை ஆரம்பமாகும்.” என்ற போது வசந்தியின் குரல் தழுதழுத்தது.

வசந்தியின் வேதனையில் வருத்தமடைந்த வீஜயா,’செந்தில்வேலா இந்தப் பிள்ளைக்கு நீ ஒரு நல்லது செய்து கூடுப்பா.’ என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்து,”காலம் எல்லாத்தையும் சரி செய்திடும்..நம்பிக்கையா இரு கண்ணு.” என்று வசந்திக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்ன விஜயாவிற்கு தெரியவில்லை அவருக்கு நேர்ந்தது போலவே எந்த ஆறுதல் வார்த்தையும் வேலை செய்யாத வேளை வசந்தியின் வாழ்க்கையில் வரப் போகிறதென்று.