அத்தியாயம் – 28

“சொல்லுங்க பெரியப்பா..எப்படி இருக்கீங்க?” என்று சபாபதியை விசாரித்தான் ஷண்முகவேல்.

பத்து நிமிடத்திற்கு மேலாக அக்கா, சிந்து இருவருடனும் அளவளாவிய விஜயா, அதன் பின் அவருடைய மாமாவிடம் சில நொடிகளுக்குப் பேசி விட்டு ஷண்முகத்திடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டார்.

ஷண்முகத்தின் கேள்விக்கு பதில் கொடுக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டார் சபாபதி. ‘நல்லா இருக்கேன்’ என்று சாதாரணமாக வாயில் வரும் வார்த்தை இப்போது ‘வரமாட்டேன்’ என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. எந்த இடத்தில் அவருடைய எண்ணங்கள் தவறாகிப் போனது என்று அவருக்குப் புரியவில்லை. மூன்று மகள்களையும் கரை சேர்த்தாகி விட்டது என்று அவர் மனநிம்மதி அடைந்திருந்த வேளையில் அந்த நிம்மதிக்குப் பங்கம் வந்திருந்தது. மனைவியிடம் கூட இந்த விஷயத்தைப் பற்றி இதுவரை மூச்சு விடவில்லை. சிந்துவின் வீட்டில் அதைப் பற்றி பேசுவது உசிதமில்லை என்பதால் ஊருக்குப் போனதும் அனைத்தையும் மனைவியிடம் சொல்லி விடலாமென்று முடிவு செய்திருந்தார். அதுவரை யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாமென்று முடிவு செய்திருந்தார். அந்த முடிவினால் ஏற்படப் போகும் விபரீதத்தைப் பற்றி முன்பே அறிருந்திருந்தால் அப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார் சபாபதி. சிறிதளவாவது சந்தேகம் வந்திருந்தால் உடனடியாக ஷண்முகவேலின் காதில் விஷயத்தைப் போட்டிருப்பார். அவர்களுடைய மகன் ஸ்தானம் அவனுக்கு தானென்றாலும்  மனைவியிடம் பகிர்ந்து கொள்ளாததை அவனிடம் பகிர்ந்து கொள்ள சபாபதிக்கு மனம் வரவில்லை.

 இந்த யோசனைகளில் அவர் மூழ்கி இருக்க, டக்கென்று பதில் வர வேண்டிய கேள்விக்கு உடனே பதில் வராது போனதில் பெரியப்பாக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்து போனது ஷண்முகத்திற்கு.

“கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்டே பேசணும்னு நீங்க சொன்னதா அம்மா சொன்னாங்க..இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயானேன்…என்ன பிரச்சனை பெரியப்பா?” என்று நேரே விஷயத்திற்கு வந்தான் ஷண்முகம்.

அவன் அப்படிக் கேட்டதும் சபாபதிக்கு படபடப்பானது. அவரருகில் மனைவியும் மகளும் இருந்திருந்ததால் அவர்களின் கவனத்தை கவராமல் அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் கொடுப்பது என்று யோசனையானார் சபாபதி. 

வெளிநாட்டில் பணப் பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? மாப்பிள்ளை எதிரில் அவரது தேவையைத் தெரிவிக்க சங்கடப்படுகிறார் என்று நினைத்து, அவனுடைய அம்மாவின் கவனத்தைக் கவராமல் கைப்பேசியோடு அவனது அறைக்கு வந்து,”நான் கேட்கறத்துக்கு ஆமாம், இல்லைன்னு மட்டும் பதில் சொல்லுங்க.” என்றான்.

“சரி டா.” என்று அவரது ஒப்புதலைக் கொடுத்தார் சபாபதி.

“பணம் எதுவும் தேவைப்படுதா உங்களுக்கு?” என்று கேட்டான்.

அதற்கு,“ஆமாம்.” என்று பதிலளித்தார்.

“எவ்வளவு?” என்று கேட்டான்

மனைவி, மகள் இருவரும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விலகி வந்தவர் சில நொடிகளுக்குப் பின்,”இருபது” என்றார்.

”மொத்தமா அனுப்பி விட்டா டேக்ஸ் சிக்கல் வரும்..எப்படி அனுப்பணும்னு ஆடிட்டர்கிட்டே கேட்டு அடுத்த வாரத்துக்குள்ளே அனுப்பி விடறேன்.” என்றான்.

“மெதுவா அனுப்பி விடு..கொஞ்சம் கொஞ்சமா அனுப்பினாலும் பரவாயில்லை டா..அவசரமில்லை.” என்ற சபாபதியின் பதிலில் இந்தப் பணம் சிந்துவிற்காக கேட்கவில்லை என்று ஷண்முகத்திற்குப் புரிந்து போனது. எனவே,

எதற்காக இத்தனை பணம் தேவைப்படுகிறது என்று கேட்காமல்,“என்ன பிரச்சனை?” என்று மீண்டும் விசாரித்தான் ஷண்முகம்.

பணம் கொடுத்து விட்டால் பிரச்சனை வராதென்று நினைத்து தான் ஷண்முகத்திடம் பணம் கேட்டிருந்தார். எனவே,”பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் கேட்கறேன்.” என்றார்.

பணத்தால் பிரச்சனைகள் வளருமே தவிர முடிந்து போகாதென்பது ஷண்முகத்தின் கருத்து. அவனுக்கும் சபாபதிக்குமிடேயே அப்பா, மகன் உறவு, தானென்றாலும் அவர்களுக்கிடையே அந்த உறவிற்கான நெருக்கம், வெளிப்படையான பேச்சுக்கள் இல்லை என்பதால்,”சரி..உங்க இஷ்டப்படி செய்யுங்க.” என்றான்.

உடனே,“இப்போதைக்கு கிரிக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்..சிந்துவோட பிரசவம் முடிச்சிட்டு ஊருக்கு வந்ததும் நானே கிரிகிட்டே இதைப் பற்றி பேசறேன்.” என்றார் சபாபதி.

அதற்கும் “சரி.” என்றவன் அதன் பின் சிறிது நேரம் வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றி உரையாடி விட்டு கைப்பேசி அழைப்பை துண்டித்தான். அடுத்த சில நிமிடங்களுக்கு பலவாறு யோசனை செய்தவனுக்கு சபாபதிக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனை என்னயென்று பிடிபடவில்லை. ‘அம்மாகிட்டே கேட்கலாமா?’ என்று ஒரு நொடி நினைத்தவன்,’வேணாம்..அப்படியே இந்த விஷயம் பெரியம்மா காதுக்குப் போக வாய்பிருக்கு.’ என்று அந்த முடிவைக் கைவிட்டு ஆடிட்டருக்கு மெஸேஜ் செய்தான். 

அவளது கைப்பேசி எழுப்பிய தொடர் ஓசையில் மடிக்கணினியிலிருந்து பார்வையைத் திருப்பினாள் சினேகா. ஷிக்காவிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சிலது புகைப்படங்கள். மற்ற அனைத்தும் ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையை விதவிதமாக தாங்கி வந்தன. ‘இவ ஒருத்தி’ என்று ஷிக்காவை மியூட் செய்து விட்டு, கண்களை மூடி, கைகளைத் தலைக்கும் மேல் உயர்த்தி சோம்பல் முறிக்க,”போதும் நீ வேலை செய்தது..வந்து படு..இன்னும் முறிச்சேன்னா முழங்கை உடைஞ்சு போயிடும் டீ.” என்றார் ஜோதி.

தலையைத் திருப்பியவள், கட்டிலில் படுத்திருந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம்,”அத்தனை சுலபமா நீச்சல் வீராங்கனை கை உடைஞ்சிடுமா? என்னைப் பற்றி கவலைப்படாம தூங்க போங்க ம்மா.” என்றாள்.

“உன்னை ஒருத்தன் கைலே பிடிச்சுக் கொடுக்கற அன்னைக்கு தான் எனக்கு நிம்மதியான தூக்கம் வரும்.” என்று ஜோதி பதில் கொடுக்க,

“ஒருத்தன் தானா? இரண்டு பேர்கிட்டே பிடிச்சுக் கொடுங்க..டபுள் நிம்மதி கிடைக்கும்.” என்று ஜோதியைக் கிண்டல் செய்தாள் சினேகா.

“என் கவலை உனக்கு விளையாட்டா இருக்கு..நான் போயிட்டேன்னா..” என்றவரின் வாக்கியத்தை முடிக்க விடாமல், துள்ளி வந்து படுக்கை மீது விழுந்து, அவரது வாயைக் கை வைத்து பொத்தி,”நோ சச் டாக்ஸ்.” என்று சொல்ல,

அவளது கையை வாயிலிருந்து அகற்றியவர்,”என்ன டீ இப்படி வந்து விழுற? இது நீச்சல் குளமில்லை..பெட்..ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தா என்ன செய்வ? பைத்தியக்காரி.” என்று மகளைத் திட்டினார்.

“தண்ணீர், தரை, பெட் எல்லாத்தையும் சரியா அட்டாக் செய்யற சூட்சமம் எங்களுக்குத் தெரியும்..நான் வந்து குதிச்சதுலே எனக்கு எதுவும் அடிப்படலை..உங்களுக்கு எங்கேயாவது அடிப்படிச்சா?” என்று கேட்டாள்.

“எனக்கு அடிப்பட்டா கை, காலுக்கு தொட்டில் கட்டிக்குவேன்..கட்டிலுக்கு அடிப்பட்டா உன் அண்ணிக்காரி உன்னை வீட்டு உள்ளே விட மாட்டா.” என்றார்.

“அப்படி ஏதாவது செய்தான்னா இனிக் கடை பக்கம் வர மாட்டேன்னு சொல்லிடுவேன்..கட்டிலை கழட்டி வெளியே போட்டிட்டு ‘அப்படியெல்லாம் செய்யாதேன்னு’ என் கால்லே விழுந்து வீட்டுக்குள்ளே கூப்பிடுவா.” என்று ஒரு பக்கமாக அமர்ந்து அவளது கால்களை ஆட்டியபடி சினேகா பேச, ஜோதியின் கவனம் மகளின் கால்களுக்கு செல்ல, 

“வேலை பளு அதிகமாகிடுச்சுன்னு சொல்லிட்டு இருந்தவ, இங்கே வரவே முடியாதுன்னு மறுத்திட்டு இருந்தவ வீட்டுகுள்ளே தானே உட்கார்ந்திருந்திருக்கணும்? எதுக்கு அரைகுறை உடைலே ஓடி வந்த? அவங்க தமிழ் தானே நானே அவங்களுக்கு வேண்டியதைக் காட்டியிருப்பேனில்லே..இப்படித் தான் விளைவை யோசிக்காம நடந்திட்டு சிக்கல்லே, ஷிக்காகிட்டே மாட்டிக்கற…அவளும்  உஷரா உன்னைப் பிடிச்சு வைச்சிட்டு விட மாட்டேங்கறா..உங்க இடையிலே மாட்டிக்கிட்டு நான் தான் திண்டாடுறேன்..உன்னை எங்கேயாவது தொலைவுலே கட்டிக் கொடுத்தா தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.” என்றார்.

“உங்க பிரச்சனையைத் தீர்க்க கண்காணாத இடத்திலே இருக்கறவனை கல்யாணம் செய்துக்க முடியாது..தில்லியோட ராஜா கிடைக்கலைன்னாலும் ஒரு சேவகன் கிடைப்பான் எனக்கும்.” என்றாள் சினேகா.

“செத்து போன உங்கப்பாவோட உத்யோகத்தை வைச்சு கல்யாண மார்கெட்லே நம்ம ஸ்டேடஸை ஃபிக்ஸ் பண்றாங்க டீ..கிளார்க் மகளுக்கு இன்னொரு கிளார்க் கூட கிடைக்க மாட்டான்..சேவகன் தான் கிடைப்பான்.” என்றார்.

“ரொம்ப நல்லது..தில்லிலே முழுக்க சேவகர்கள் தான்..என்னோட சேவகன் கண்டிப்பா இங்கே தான் ஒளிஞ்சிட்டு இருக்கணும்.” என்றாள் சிரிப்புடன்.

“கல்யாண, கடைன்னு எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கற.” என்று வருத்தப்பட்டார் ஜோதி.

“அம்மா, இனி என்னாலே கடைக்கு நேரம் ஒதுக்க முடியாதுன்னு ஏற்கனவே பலமுறை ஷிக்காகிட்டே சொல்லியாச்சு..இந்த மாதிரி இங்கே வந்து தங்கறது முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்..பிரார்த்தனையை நிறைவேற்ற ஊருக்குப் போகணும்னு சொன்னதாலே தான் வர முடியாதுன்னு சொல்ல எனக்கு மனசு வரலை..மாண்டிக்காக தான் ஒதுக்கிட்டேன்..அவளுக்கும் இதெல்லாம் தெரியும்மா..பிரச்சனை செய்தா அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்..எங்க நடுவுலே நீங்க வர வேணாம்..இப்போ தூங்க போங்க..இன்னும் கொஞ்ச நேரம் வேலை பார்த்திட்டு வந்து படுத்துக்கறேன்.” என்று சொல்லி விட்டு கட்டிலிருந்து எழுந்து சென்று மீண்டும் கணினியோடு ஒன்றிக் போனாள் சினேகா.