அவளது கைப்பேசி அழைப்பு நின்று போனதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவள் சார்பாக யாரிடமோ அவள் பிஸியாக இருப்பதாக வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள். யாரென்று அவனிடம் கேட்டால்,’இந்த நேரத்துக்கு ஃபோன் வருது..நான் இல்லாத போது இப்படித் தான் கண்ட கண்ட நேரத்திலே கால் பேசிட்டு இருக்கேயா?’ என்று அவளது கால் ஹிஸ் ட் ரியை சோதனை செய்வான். அப்படி செய்வதில் அவளுக்கொன்றும் பிரச்சனை இல்லை. அவளது கைப்பேசியை எப்போது சோதனை செயாலும் அவளுடைய குடும்பத்தினர், எதிர்வீட்டு பெண்மணி, அந்த பில்டிங்கில் வசிப்போர் என்று அத்தனை பேரும் வெங்கடேஷிற்கும் அறிமுகமானவர்கள் தான். அவனில்லாத போதும் அவன் இருப்பது போல் தான் அவளது தினசரி வேலைகள் இருக்கும். அதாவது அதே நேரத்திற்கு எழுந்து, அதே போல் வேலைகள் செய்து என்று அனைத்தும் அவனது ரூல்புக் படி தான் நடக்கும். இத்தனை வருடங்களில் அவள் மீது சிறிதளவு நம்பிக்கை வந்திருந்ததால் தான் வீட்டினுள் இதுவரை சிசிடிவி இணைப்பு கொடுக்கவில்லை.
அவனது செயல்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள மனமானது முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வெங்கடேஷ் என்பவன் அவளுடைய கணவன் என்ற உணர்வு இருக்கப் போய் தான் அந்தச் செயலைக் கடக்க அவளால் முடிகிறது. திருமணமானவுடன், அதாவது கழுத்தில் தாலி ஏறியவுடன், அவர்கள் இருவரும் கணவன், மனைவி என்ற புது உறவு பிறந்த நொடியில் அந்த உணர்வு டக்கென்று அவளிடம் ஏற்படவில்லை. அவனுடன் சில வருடங்கள் வாழ்ந்த பின்னும் வரவில்லை. ‘வசந்தி’ என்ற தனி நபரை அவன் அடக்கம் செய்வதை தடுக்க, அவனிடம் பிடிக்காததை பொறுத்துப் போக, பிடித்தைத் தேடிப் பிடிக்க, அவளை அவனிடமிருந்து ரட்சித்து கொள்ள என்று திருமண வாழ்க்கையில் மூச்சு முட்டி தத்தளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த உணர்வு இருப்பதை உணர்ந்தாள். இன்று வரை அந்த உணர்வுதான் அவர்களின் உறவிற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு அன்பு என்று பெயர் கொடுக்க முடியாமல் அதே சமயம் அன்பு இல்லையென்று ஒதுக்கவும் முடியாமல், இப்போது வரை அவனைப் பற்றிய முழுப் புரிதல் வராமல், அவளைப் பற்றிய சிறு புரிதல் கூட அவனிடமில்லாமல் தான் அவர்களின் திருமண வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அவர்களுக்கிடையே ஏற்கனவே இருக்கும் இடைவெளி போததென்று குடும்பத்தினரின் தலையீட்டால் பலமுறை பல திசைகளில் அவர்கள் இருவரும் பயணம் செய்ய நேர்ந்ததால் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்யும் இரயில் கூபே போல் இருக்க வேண்டிய அவர்களின் வாழ்க்கை பலர் பயணம் செய்யும் பொதுப் பெட்டி போல் மாறிப் போயிருந்தது. வசந்தியின் அனுசரணையான செயல்கள் அனைத்தும் அவளை ஓர் அடிமையாக காட்ட, வெங்கடேஷ் குடும்பத்தினரின் அகம்பாவம் அதிகமாக, அவளும் ஒரு மனுஷி தான் என்ற மனிதாபிமானம் கூட அவர்களிடம் இருக்கவில்லை.
வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் சமயங்களில், சாப்பாடு பற்றிய எண்ணம் கூட இல்லாமல் கணினியோடு கட்டுண்டு கிடப்பவனுக்கு சோறு ஊட்டி விட்டிருக்கிறாள் வசந்தி. அவளது தலை வலியைப் பொறுத்துக் கொண்டு அவனுக்கு தைலம் தடவி விட்டிருக்கிறாள். எத்தனையோ சமயங்களில் அவனது சுடு சொற்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ணீர் பொங்கி விடும் போது, ‘அம்மா சொல்ற மாதிரி நான் வாங்கிட்டு வந்த வரம் இது தான்.’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு மனைவியாக அவளது கடமைகளை மனச் சுணக்கமில்லாமல் செய்தாள். வெகு சில சமயங்களில், அவளை அலட்சியம் செய்யாமல் சமமாக நடத்தியிருக்கிறான் வெங்கடேஷ். வருடங்கள் ஓட ஓட அவனது அலட்சிய சுபாவம் வளர்ந்து அவள் காயப்படுவது வழக்கமாகிப் போனது. காயம் ஏற்படுத்திய வலிக்குப் பழகிக் கொண்டு காலப் போக்கில் அதைக் கருத்திலிருந்து கழட்டி வைக்கவும் கற்றுக் கொண்டாள் வசந்தி.
அவனுக்குப் பிடிக்கவில்லை என்று அவளுக்கு பிடித்த தையல், எம்ப்ராய்ட்ரி வேலையை தியாகம் செய்தாள். சுயமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை சிதைத்து போட்டாள். அவனது குண நலன்களைப் புரிந்து கொள்ள அவள் எடுத்த முயற்சியில் ஒரு சதவிகிதம் கூட அவன் எடுக்கவில்லை என்றாலும் அதைப் பெரிது படுத்தி அவனோடு சண்டை போடவில்லை. ‘நீங்க என்னைப் புரிஞ்சுக்கப் போகறதில்லை..அது எனக்குப் புரிஞ்சிடுச்சு..ஒருத்தருக்குப் புரிதல் இருந்தா போதும்…சச்சரவுக்கு இடம் இருக்காது.’ என்று அவளைச் சமாதானம் செய்து கொண்டவளுக்குத் தெரியவில்லை ஒருவரின் புரிதல் என்னும் ஒத்தையடி பாதையில் இருவர் பயணம் செய்ய முடியாதென்று. இருவர் சம்மந்தப்பட்ட திருமணம் பந்தம் தழைக்க, கணவன், மனைவி உறவு நிலைக்க, கடைசிவரை தம்பதியராக பயணம் தொடர புரிதல் என்பது இருவருக்குமே அவசியமான ஒன்றுயென்று.
சமீபக் காலமாக வெங்கடேஷின் சுபாவத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருப்பது வசந்திக்குப் புரிந்திருந்தாலும் அது என்னவென்று அவளுக்குப் பிடிபடவில்லை. அவனது அன்பு எனும் அருவியில் லேசாக நனைத்திருந்தாலும் கூட அது வத்திப் போகும் போது அவள் உணர்ந்திருக்க முடியும். எந்நேரமும் கோபம் என்னும் நெருப்பினால் அவளைச் சுட்டிருந்தால் அது அணைந்து போனதை உடனே உணர்ந்திருப்பாள். அவனது குணம் இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது போனதால் அவன் சிடுசிடுப்பதும் சாதாரணமான நிகழ்வு தான் என்பதால் அவனுள் ஏற்பட்டிருந்த மாற்றத்தின் வீர்யம் வசந்தியைச் சென்றடையவில்லை. ஒருவேளை அவர்களுக்குள் தம்பதியருக்கான நெருக்கம் இருந்திருந்தால் அவனது மாற்றம் அதாவது மனமாற்றம் அவளிடம் போய்ச் சேர்ந்திருக்காலம்.
ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது சிந்துவின் திருமணம் நிச்சயம் ஆன போது வசந்தி, வெங்கடேஷின் வாழ்க்கை தடம் மாறியது. இனி அவர்களின் வாழ்க்கை இப்படித் தான் என்று ஒருமித்தமாக இருவரும் எடுத்த முடிவு அது. அந்த முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட்டது என்று வசந்தி அறிந்திருக்கவில்லை. அவளது உள்ளமும் உடலும் புண்ணாகிப் போயிருந்ததால் அது மாற வாய்ப்பில்லை என்று எண்ணியிருந்தாள்.
பொதுவாக புது தம்பதிகளின் இல்வாழ்க்கை முதல் சில வருடங்களுக்கு குழப்பம், தயக்கம், மகிழ்ச்சி என்று கலவையாக தான் போய்க் கொண்டிருக்கும். துவையலுக்கு அரைக்கும் போது, துணிகளை துவைக்கும் போது, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்று இடம், பொருள், செயல் பார்க்காமல், சம்சார சாகரத்தின் எந்தப் புள்ளியிலும் இல்லறப் புயல் மையம் கொண்டிருக்கும்.வீடு என்பது பூங்கா மட்டுமில்லை போர்க்களமும் கூட, மூச்சுக் காற்றில் தீப்பொறியும் கண்களில் கண்ணிவெடியும் மறைந்திருப்பது கல்யாணத்திற்கு பிறகு தான் புரியும்.எல்லைகளைக் கடந்து பொங்கி வழியும் உணர்வுகளால் உறவு முறிந்து போகாமல், கடைசிவரை அந்த உறவை இழுத்துச் செல்லக் கூடிய வலிமை பல அனுபவங்களை கொண்ட பெரியவர்களுக்கு கூட கிடையாது. புதிதாக உதிக்கும் பிஞ்சிற்கு தான் அந்த சக்தி இருக்கிறது. உதிரத்திலிருந்து உதிக்கும் உயிர் தான் கல்லாக உறைந்து இருக்கும் உள்ளத்தை உருக்க முடியும்.
அந்தப் புது வரவிற்காக காத்திருந்து காத்திருந்து வாழ்க்கை வெறுத்துப் போனது வசந்திக்கு.அவளிடம் எந்தக் குறைபாடும் இல்லையென்றாலும் ஜெயந்தியைப் போல் இயற்கையாக பிள்ளை வரம் கிடைக்கவில்லை. அவளுடைய அம்மாவைப் போல் மருத்துவ உதவி மூலமாகவும் குழந்தை உண்டாகவில்லை. நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டுக்கும் இடையே மாறி மாறிபயணித்து பயணித்து இனி அவளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாதென்ற நிலையில்,’இனி நான் எந்த டாக்டர்கிட்டேயும் வர மாட்டேன்..என்னாலே சிகிச்சை செய்துக்க முடியவே முடியாது.’ என்று வெங்கடேஷிடம் மறுத்து விட்டாள். அதற்கு,’நம்ம இரண்டுபேர்கிட்டேயும் எந்தக் குறையுமில்லை..கொஞ்ச நாள் போகட்டும்..மீண்டுமொருமுறை முயற்சி செய்து பார்க்கலம்.’ என்று ஆறுதல் வார்த்தை கூறாமல் இதுவரை சிகிச்சைக்காக செலவழித்தது வீணாகிப் போனதில்,’இந்த அறிவு முன்னே வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.’ என்று வசந்தியை காயப்படுத்தினான். சிந்துவின் கர்ப்பம் பற்றி தெரியும் வரை அவர்களிடையே அந்தப் பேச்சு எழவில்லை.
அவளின் தங்கை சிந்துவிற்கு குழந்தை வந்து விட்டவிஷயத்தைக் கேட்டதிலிருந்து பிள்ளைச் செல்வத்திற்காக அவனின் செல்வம் எவ்வளவு செலவானது என்று தினமும் மந்திரம் போல் வசந்தியிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். அவளுக்கு செலவு செய்ததை போலவே அவனுடைய தங்கை ராதிகாவிற்கும் செலவு செய்திருக்கிறான். அதைப் பற்றி அவனிடம் அவள் ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது. முதல் காரணம் அந்தப் பணம் அவனுடையது. அவன் சம்பாதித்து. இரண்டாவது காரணம், மிக முக்கியமான காரணம், ராதிகாவின் செல்ல மகன். அத்தனை செலவையும் வரவாக மாற்றி விட்டான்.
ராதிகாவிற்கு கருச்சிதைவு நிகழந்தபோதெல்லாம் செவிலி, வேலைக்காரி, சமையல்காரி என்று பல அவதாரங்கள் எடுத்து மாடாக உழைத்திருக்கிறாள் வசந்தி. அந்த நாள்களில் அவள் பெங்களூர்வாசியாகி விடுவாள். அப்போதும் எப்போதும் போல் வெங்கடேஷ் சென்னைவாசி தான். திருமணத்திற்கு முன்பே தனியாக வீடெடுத்து தங்கி இருந்ததால் சமையலும் மற்ற வீட்டு வேலைகளும் அவனுக்கு நல்ல பழக்கம். ஆனால் திருமணம் முடிந்த பின் இப்போது வரை ஒரு நாளும் வசந்திக்கு சமைத்துக் கொடுத்ததில்லை, வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ததில்லை. அவனுக்கு மட்டும் செய்து கொள்ள தான் அவனுக்கு முடியும். அவளின் பிறந்த வீட்டிற்கு இளைப்பாறச் சென்றாலும் சரி புகுந்த வீட்டில் உழைத்து விட்டு வந்தாலும் சரி வசந்தி திரும்பி வந்ததும் அனைத்து வேலைகளையும் அவள் தலையில் கட்டி விடுவான். அவனது அந்தக் குணத்தை தவறதுலாக எடுத்துக் கொள்ளாமல் ‘நம்ம வீடு தானே.’ என்று நினைத்து நாயாக உழைத்தாள் வசந்தி.
‘நம்ம வீடு’ என்று அவள் நினைக்கும் அந்த வீட்டில், இத்தனை வருடத் திருமண வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவளுடைய பெற்றோர் தங்கியதில்லை. தங்கும்படி வெங்கடேஷும் அவர்களை வற்புறுத்தியதில்லை. அவளின் குடும்பத்துடன் முதலிருந்து ஏனோதானோ என்ற உறவு தான் வெங்கடேஷிற்கு. ஜெயந்தியுடன் வசந்திக்கு போட்டி மனப்பான்மை இல்லாவிடிலும் திருமணத்திற்கு பின் அவர்களின் கணவர்களுக்கிடையே அது இருந்தது. ஜெயந்திக்கும் ஜெயந்தியின் கணவனுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக ஆரம்பத்திலேயே வெங்கடேஷின் மனத்தில் ஓர் எண்ணம் வந்து விட்டது.
அவனைப் போலவே வசந்தியின் மனத்திலும் அவளுடைய நாத்தனார் ராதிகாவைப் பற்றி ஓர் எண்ணம் வந்து விட்டிருந்தது. அவள் செய்த உதவிகள், சேவைகளுக்கு ராதிகாவின் வாயிலிருந்து ‘நன்றி’ என்று ஒரு வார்த்தை இதுவரை வந்தததில்லை. அதே வாய் தான் அவளைப் பற்றி விதவிதமாக பேசும் வழக்கத்தை இன்றுவரை விடவில்லை. அவளது வாயை நினைத்தால் இப்போது கூட வசந்திக்கு அச்சம் ஏற்படும். அவளது பிரார்த்தனையை ஏற்று அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து ராதிகாவின் நாவை ஏன் கடவுள் கட்டிப் போடவில்லை என்று அவர் மீது ஆத்திரம் கொண்டாள். புகுந்த வீட்டினரிடம் அவள் எத்தனை அனுசரனையாக நடந்து கொண்டாலும் குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்திற்காக அவளிடம் இழிவாக நடந்து கொண்டனர். அவர்களின் செய்கையை ஒதுக்கி வைத்து விட்டு மருமகளாக அவளின் கடமையை செய்து கொண்டிருந்தாள் வசந்தி. ஈடுபாடலில்லாமல் இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்த வசந்திக்கு இந்தமுறை மாமியார், மாமனாரின் வருகைக்கு பலமான காரணம் இருப்பது புலப்படவில்லை.
எப்போதும் போல் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கையறைக்கு வசந்தி வந்த போது அங்கே வெங்கடேஷ் இல்லை. பக்கவாட்டு மேஜையில் இருந்த கைப்பேசியை எடுத்து சித்தியிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைப் பார்த்து கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். இப்போது அவளால் அழைப்பு விடுக்க முடியாது. பக்கத்து படுக்கையறையில் பெற்றோருடன் பேசிக் கொண்டிருக்கும் வெங்கடேஷ் எப்போது வேண்டுமானாலும் திரும்பி விடலாம் என்பதால் இரண்டு நாள்கள் கழித்து, மாமனார், மாமியார் வேலூர் கிளம்பிச் சென்றதும் பேசிக் கொள்ளலாமென்று முடிவு செய்து கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு கண் மூடி படுத்து விட்டாள். சில நிமிடங்கள் முயற்சிக்குப் பின்னும் உறக்கம் வராததால் கண்களை திறந்தபடி கட்டிலில் படுத்திருந்தாள். ‘அப்படி என்ன தினமும் பேசிட்டு இருக்கார்?’ என்ற கேள்வி வர, வேற என்ன? எப்போதும் போல குழந்தை இல்லாததைப் பற்றி தான் இருக்கும்’ என்று அவளே அதற்கு பதிலுடன் வர, அப்படி தானே?’ என்றுசில நிமிடங்கள் கழித்து படுக்கையறைக்குத் திரும்பிய வெங்கடேஷிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
அந்த உரையாடல் எப்படி ஆரம்பித்தாலும் எந்தப் பாதையில் பயணம் செய்தாலும் கடைசியில் காயமடையப் போவது அவள் தான் என்பதால் அமைதியாக இருந்தாள் வசந்தி. ‘இன்னும் சில வருஷத்திலே நாப்பது வயசாகிடும்..அம்மா ஆகலைன்னாலும் அக்கம் பக்கத்து குழந்தைங்களுக்கு ஆன்ட்டியாகிடுவேன்..அப்படியே பாட்டியாகிடுவேன்..எந்த சிக்கலும் இல்லாம இனியாவது என் வாழ்க்கை சரியா போனாப் போதும்..வேற எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் எனக்கில்லை..இதையாவது நிறைவேற்றி வைச்சிடு கடவுளே.’ என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த வசந்திக்குத் தெரியவில்லை இனி தான் புயல், பூகம்பம் எல்லாம் வந்து அனைத்தும் அழிந்து, இறுதியில், அவளது வாழ்க்கையில் புத்தம் புதிய வசந்தம் வீசப் போகிறதென்று.