அத்தியாயம் – 26-1

வேலூரில் இருந்தது வசந்தியின் புகுந்த வீடு. சென்னையில் வேலை செய்து வந்த வெங்கடேஷ் கல்யாணம் வரை தனியாக வீடு எடுத்து வசித்து வந்தான். திருமணம் முடிந்ததும் அதே வீட்டில் வசந்தியுடன் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தான். பெயருக்கு தான் அது தனிக்குடித்தனம். வசந்தியின் வீட்டை சின்ன வேலூர் என்று தான் சொல்ல வேண்டும். திருமணமான புதிதில் வருடத்தில் பாதி நாள்கள் சென்னையில் வெங்கடேஷோடு தான் இருந்தனர் அவனின் பெற்றோர். மீதி நாள்களை பெங்களூரில் அவர்களின் மகள், வெங்கடேஷின் தங்கை ராதிகாவின் வீட்டில் கழித்தனர். ராதிகாவின் கணவர் மென்பொருள் துறையில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி வெளியூர், வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவளுடைய அம்மா, அப்பாவை உடன் வைத்துக் கொள்வது பழக்கமாகி இருக்க, இரண்டு குழந்தைகள் வந்த பின்பும் அதே பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள் ராதிகா. 

வசந்தி, வெங்கடேஷின் திருமணத்தின் போது ராதிகாவிற்கு சில மாதங்களே ஆன மகள் இருந்ததால் அவளுடன் பேசிப் பழகும் வாய்ப்பு வசந்திக்குக் கிடைக்கவில்லை. அவளின் இயல்பு, குணம் பற்றி தெரிய வரவில்லை.  இப்போது ராதிகாவின் மகள் நான்காவது வகுப்பில் இருக்கிறாள். மகனுக்கு இரண்டு வயதாகிறது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே இருந்த சில வருட இடைவெளிக்கு காரணம் ராதிகாவின் உடல் நிலை தான். மகளைக் கருவுற்றிருந்த போது பல பிரச்சனைகள் எழுந்ததால் அடுத்த குழந்தை இப்போதைக்கு கூடவே கூடாதென்று மருத்துவர் எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் அந்தத் தம்பதி அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. 

பிள்ளை உண்டானதிலிருந்து வாரக் கணக்கில் மருத்துவமனை வாசம் ராதிகாவிற்கு. வீட்டிற்கு வந்தால் ஹை ரிஸ்க் பிரெக்னன்ஸி என்று எப்போதும் படுக்கையில் தான் இருந்தாள். கரு கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருபத்திநாலு மணி நேரமும் உடலுக்கு ஓய்வு தான். அப்படியொரு அபாயம் இருந்ததால் தான் அடுத்த குழந்தையைப் பற்றி யோசிக்கவே முடியாதென்றிருந்தார் மருத்துவர்.

கிட்டதட்ட ஒரு வருடம் போல் மகளையும் பேத்தியையும் அவருடன் வேலூரில் வைத்துக் கொண்டார் சீதா. அந்த நேரத்தில் தான் வெங்கடேஷ், வசந்தி திருமணம் நடந்தேறியது. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் ஜெயந்தியின் திருமணம் நடந்திருந்தது. இரட்டையர்களுக்கு ஒரே முகூர்த்ததில் திருமணத்தை நடத்த மகாலக்ஷ்மி விரும்பினாலும் அதை நிறைவேற்ற கூடிய செல்வ நிலை சபாபதிக்கு இருக்கவில்லை. ஆனாலும் இதுவரை இரண்டு பேருக்குமிடேயே பாரபட்சம் பார்க்கவில்லை என்பதால் திருமணத்திலேயும் அதைத் தொடர நினைத்தார். அந்த நினைப்பு சிறிது சிறிதாக கல்யாண மார்க்கெட்டில் காணாமல் போக, யாருக்கு முதலில் அமைகிறதோ அந்தத் திருமணத்தை முடித்து விட்டு அடுத்தவளுக்கு இரண்டு வருடங்கள் கழித்து செய்யலாமென்று முடிவு செய்தார்.

ஜெயந்தி, வசந்தி இருவரும் இரட்டையர்கள் என்றாலும் தோற்றம், குணம், படிப்பு என்று அனைத்திலும் இரு துருவங்களாக இருந்ததால் வெவ்வேறு பின்னணியிலிருந்து வரன்கள் வந்தன. இருவரின் ஆசைகள், ஆர்வங்கள் வெவ்வேறாக இருந்ததால் அவர்களின் பாதையும் வேறாக இருக்க அங்கே போட்டி, பொறாமைக்கு இடமிருக்கவில்லை. திருமணத்திற்கு பின் தான் இருவரின் குணமும் மாறிப் போனது . 

திருமண வயதை அடைந்த பெண்ணிடம் எதிர்பார்க்கும் அழகு, இளமை, கல்வி, துணிவு, வசதி, வேலை போன்ற பேறுகள் அந்தந்த காலக்கட்டித்திற்கு ஏற்ப, அவரவர் சௌகர்யத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டிருந்தாலும் திருமணத்திற்குப் பின் ‘தாய்மைப்பேறு’ என்ற எதிர்பார்ப்பு மட்டும் மாறுவதே இல்லை. உயிர், ஜீவன், சக்தியை உலகிற்கு அளிக்கக் கூடிய, அருளக்கூடிய ‘தாய்மை’ என்ற அம்சம் தான் காலம் காலமாய் திருமணமான பெண்களின் மதிப்பை, மரியாதையை அளக்கக் கூடிய அளவுகோலாக செயல்படுகிறது.

கல்யாணச் சந்தையில் முதலில் விலை போனது ஜெயந்தி தான். பட்டப்படிப்பு முடிந்ததும் டிராவல் ஏஜென்ஸி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயந்தி. வசந்தியும் அவளைப் போல் பட்டதாரி தான். ஆனால் வெளியே எங்கும்  வேலைக்கு செல்லவில்லை. செல்ல பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்ட சில முயற்சிகள் செய்ய, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 

வேலை, திருமணம் என்று ஜெயந்திக்கு எல்லாம் கூடி வர மகாவும் அவரது முந்தைய எண்ணத்தை கைவிட்டு அவளுக்கு முதலில் திருமணம் முடித்து வைத்தார். கன்னிகாதானம் செய்து கொடுத்த போது தன்னைப் போல் இல்லாமல் தன் தங்கையைப் போல் சீக்கிரமே குழந்தை வரம் ஜெயந்திக்குக் கிடைக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுதலும் வைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்காமல் நாள்கள் நகர்ந்து போக, மகாவின் மனத்தில் அச்சமேற்பட்டது. அவர் பயந்தது போலவே கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஏமாற்றத்தில் கழிய, ஜெயந்தி, வசந்தி இரட்டையர்களின் பிறப்பு, மகாவின் சிகிச்சை என்று பழைய சரித்திரத்தை ஜெயந்தியின் புகுந்த வீட்டினர் அலச ஆரம்பித்தனர். இறுதியில்,’அவங்க அம்மாக்கு ஏதோ சிக்கல் இருக்கப் போய் தான் சிகிச்சை எடுத்திருக்காங்க..அதன் பிறகு தான் இவளும் வசந்தியும் பிறந்திருக்காங்க..அந்த சிகிச்சையோட பலன் தான் சில வருஷம் கழிச்சு சிந்து பிறந்திருக்கா ..இனி காத்திருக்க வேணாம்..நாமளும் இவளை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போவோம்.’ என்று ஜெயந்தியின் மாமியார் செயற்கை முறை தானென்று முடிவு செய்த போது இயற்கையாகவே குழந்தை உண்டாகி விட்டாள் ஜெயந்தி. 

குழந்தை வேண்டுமென்று ஜெயந்தியும் அவளது வாழ்க்கையில் சில பல மாற்றங்களை மேற்கொண்டிருந்தாள். கருதரிப்பு சிகிச்சைக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டோடு இருந்தாள். சில விரதங்கள், பிரார்த்தனைகள் என்று மனதளவிலும் உடலளவிலும் தாய் ஆக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் பயணத்தை ஆரம்பித்திருந்தாள். எங்கேயோ ஓர் அதிர்ஷட ரேகை இருந்ததால், இயற்கையின் கருணையால், நம்பிக்கையை விதைத்து அதே சமயம் மனஉறுதியைக் உடைத்து, உடல் ஆரோக்கியத்தை குலைத்து, முதுகெலும்பை தொலைத்து, சிறிது சிறிதாக அவநம்பிக்கையின் பிடியில் சிக்கி, கடைசியில்,’நமக்கு விதித்தது, நாம வாங்கிட்டு வந்தது’ என்று தன் மீதே பழியைப் போட்டுக் கொள்ளும் நரகப்பாதையில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஜெயந்திக்கு ஏற்படவில்லை. அவளின் இரட்டையாக இருந்தாலும், இருவருக்கும் ஒரே பிறந்த நாளென்றாலும், ஜனித்த நேரத்தில் சில நொடிகள் வித்தியாசம் இருந்ததால் வசந்திக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கவில்லை.

வசந்தியின் வாழ்க்கையில் சின்ன விஷயம் கூட பெரும் முயற்சிக்கு பின் தான் சாத்தியமானது. வெங்கடேஷுடன் நடந்த திருமணமும் அப்படித் தான் நடந்தது. பெரிய படிப்பு, நல்ல வேலை, சென்னையில் சொந்த ஃபிளாட் என்று அனைத்திலும் அவர்களை விட உசந்த இடத்தில் இருந்த வெங்கடேஷின் வரன் வசந்திக்கு தகையாது என்று தான் மகாவும் சபாபதியும் நினைத்தனர். வெங்கடேஷின் பெற்றோரும் பிடிகொடுத்து பேசவில்லை. இவர்களது கைப்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. அவர்களுக்கு வசந்தி, வசந்தியின் வசதி, படிப்பு, குடும்பம் எதுவும் திருப்தியாக இல்லை. மகன் இல்லாத வீட்டில் அவருடைய மகன் மருமகனாவது வெங்கடேஷின் அன்னை சீதாவிற்கு பிடிக்கவில்லை. 

ஆனால் இந்தக் காலத்தில், நவயுகத்தில் வேலைக்குப் போக விரும்பாமல் வீட்டோடு இருந்த வசந்தி வெங்கடேஷை ஈர்த்தாள். அவனுடைய முக்கியமான கண்டிஷனுக்குள் வசதியாக வசந்திக்குப் பொருந்தி போனதால் அவளை மறுக்க அவனுக்கு காரணம் இருக்கவில்லை. வருங்காலத் துணையைப் பற்றிய அவனது எதிர்பார்ப்பில் இல்லத்தரசியாக இருக்க இஷ்டமிருக்கும் பெண் தான் வேண்டும் என்று எழுதியிருந்தான் வெங்கடேஷ். வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்டும் பெண் கூட அவன் பார்வையில் வேலை பார்க்கும் பெண் தான் என்ற அவனது எண்ணத்தை அவன் தெளிவாக எழுதவில்லை. அனைத்திற்கும் அவனது கையை எதிர்பார்க்கும் பெண், அவனுக்கு மட்டுமில்லை அவனது குடும்பத்திற்கு அடிமையாக இருக்கும் பெண் தான் அவனுக்கு தேவை என்று தெரிந்திருந்தால் வெங்கடேஷ் வேண்டவே வேண்டாமென்று வசந்தி மறுத்திருப்பாள். வருமானம் ஈட்ட அவள் செய்த முயற்சி வெற்றி அடைந்திருந்தால் வெங்கடேஷின் காதிற்கு அது எட்டியிருக்கும், அவனும் அவளை வேண்டாமென்று மறுத்திருப்பான். இருவரின் அடிப்படைகளும் வேறு வேறாக இருக்க அதை இருவருமே உணரவில்லை. 

மனித இயல்பு என்பது நேர்மறை, எதிர்மறை கூறுகளாளானது. திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மகன், மகளின் பெரிய எதிர்மறை கூறுகளை மறைக்க அவர்களின் சிறிய நேர்மறை கூறுகளைப் பெரிதுப்படுத்துவது, நேர்மறை கூறுகளைப் பற்றி மட்டும் சிறப்பாக பேசி எதிராளியை சிந்திக்க விடாமல் செய்வது, பொய்களுக்கு முலாம் பூசி உண்மையை மறைப்பது என்று அனைத்து தில்லுமுல்லு வேலைகளையும் செய்து, கல்யாணத்தை நடத்தி, ‘இனி எல்லாம் உன்பாடு’ என்று இளைய தலைமுறையினரின் தலையில் பழி, பாரத்தை இறக்கி விட்டு அவர்களது கடமையை செவ்வனே செய்து கை கழுவி விடுவார்கள். வசந்தி, வெங்கடேஷ் இருவரும் அவர்களின் துணையைப் பற்றிய தவறான பிம்பத்தோடு வாழ்க்கையைத் துவங்கினர். சிறிது சிறிதாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தலை தூக்க, வழக்கம் போல்  கணவனை அனுசரித்து போவது தான் மனைவிக்கு அழகு என்று வசந்திக்கும் அறிவுரை கிடைக்க, அவளது சுயத்தை அடக்கம் செய்து விட்டு இணையுடன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் வசந்தி.