வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா.
அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும் இப்போவே ஃபோன் போடுங்க ம்மா..சாப்பாட்டை முடிச்சிட்டு அவங்களோட பேசறது சரி வராது..சாப்பாடு முடிச்சிட்டுப் சிந்துவோட பேசலாம்..அவங்க டைம்முக்கு கரெக்ட்டா இருக்கும்..பெரியப்பாகிட்டே பேச எனக்கு நேரமே கிடைக்கலை..இன்னைக்கு அவரோடேயும் பேசிடறேன்..அப்புறம் கடைசியா மாமா, மாமிகிட்டே பேசலாம்..ஓகே தானே?” என்று கேட்டான்.
‘ஓகே’ என்று தலையசைவில் அவரது சம்மதத்தை தெரிவித்த விஜயாவும் வேறு உடைக்கு மாறிக் கொள்ள அவரது அறைக்குச் சென்றார். உடை மாற்றிக் கொண்டு விஜயா வந்த போது வரவேற்பறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்றபடி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகவேல். இங்கே வந்த பின் மகனை இதுபோல் கவலையாக பார்ப்பது இதுதான் முதல்முறை என்பதால்,”என்ன சாமி இங்கே நின்னுட்டு இருக்கீங்க?” என்று விசாரித்தார்.
“ஒண்ணுமில்லை ம்மா..சும்மா தான்..நீங்க அக்காக்கு ஃபோன் போடுங்க..நேரமாகுது” என்று அந்தப் பேச்சை முடித்தான்.
அவரது விசாரணையை மேலே தொடர விஜயாவிற்கு வழி தெரியவில்லை. ‘என்னவாக இருக்கும்? கவலையா நின்னுட்டு இருக்குது சாமி..வேலை இடத்தில் ஏதாவது பிரச்சனையா?’ என்று யோசித்தபடி ஜெயந்திக்கு அழைப்பு விடுத்தார் விஜயா.
அழைப்பை ஏற்றது ஜெயந்தியின் கணவன் ரங்கநாதன். தில்லியைப் பற்றி விஜயாவிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு கைப்பேசியை அவருடைய மகன் சித்துவிடம் கொடுத்து விட்டார். அவனுடைய அம்மா பிஸியாக இருந்ததால் அடுத்த சில நிமிடங்களுக்கு விஜயா பாட்டியுடன் பள்ளிக்கூடத்தைப் பற்றி வம்பு அளந்தவன் கடைசியில் ஜெயந்தியின் அதட்டலில் கைப்பேசியை அவளிடம் கொடுத்தான்.
“என்ன சித்தி இன்னைக்கு அதிசயமா ஃபோன் செய்திருக்கீங்க?” என்று ஜெயந்தி கொஞ்சம் நக்கலாக கேட்க,
“தினமும் ஃபோன் செய்து பேச என்ன விசேஷமிருக்கு?” என்று அவளிடம் விஜயா கேட்க,
“இன்னைக்கு என்ன விசேஷம் ஃபோன் செய்திருக்கீங்க?” என்று ஜெயந்தி பதிலுக்கு கேட்டவுடன்,
கடைக்குப் போனது, அனைவர்க்கும் புடவை வாங்கியது, ஃபால், பிக்கோ வரை அனைத்தையும் அவளிடம் ஒப்பித்தார் விஜயா.
அதைக் கேட்டு அளவில்லா சந்தோஷமடைந்தவள்,”அப்படியே அவங்ககிட்டேயே ஒரு பிளவுஸ்க்கும் ஏற்பாடு செய்திடுங்க சித்தி.” என்றாள்.
“அவங்ககிட்டே தைக்கணும்னா அளவு பிளவுஸ் வேணும் கண்ணு.” என்றார் விஜயா.
“ரெடிமேட் கிடைக்குமே..என்னோட அளவு உங்களுக்கு அனுப்பி வைக்கறேன்..புடவையோட அதையும் சேர்த்து அனுப்பி விட்டிடுங்க..என் தம்பி தில்லிலேர்ந்து வாங்கி அனுப்பியிருக்கான்னு எல்லோர்க்கிட்டேயும் பெருமையா சொல்லிப்பேன்.” என்றாள்.
அந்த உரையாடல் ஸ்பீக்கரில் இருந்திருந்தால், மகன் கடமையை ஆற்றத் தொடங்கியிருந்தவனுக்கு தம்பிக்கான கடமையையும் அவன் செய்ய வேண்டுமென்று ஷண்முகத்திற்குப் புரிந்திருக்கும். சித்துவின் முதல் பிறந்த நாள் போது மாமாவாக அவனை மடியில் அமர்த்தி அவன் செய்த சடங்குகள் எதுவும் அவனுள் எந்த விதமான உணர்வுகளையும் எழுப்பவில்லை. இப்போது கூட அம்மாவை இங்கே அவனுடன் அழைத்து வந்திருக்காவிட்டால் உறவினர்களிடம் மட்டுமில்லை அம்மாவிடம் கூட அவனுக்கு இத்தனை நெருக்கம் ஏற்பட்டிருக்காது. அவனைப் பொறுத்த வரையில் அனைவரும் அவனைத் தூரத்தில் நிறுத்தியதால் அவனின் உறவினர்கள் அனைவருமே தூரத்தில் நிறுத்த வேண்டியவர்கள் தான். வீட்டு விசேஷங்கள், விடுமுறை நாள்கள் என்று பலவற்றை அவர்களுடன் கழித்திருந்தாலும் அதன் முடிவில், தனியாக, அவனிருப்பிடத்திற்கு வந்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். சிறு வயதில் சிலதை கடந்து வர அவனுக்கு துணை தேவைப்பட்ட போது அவனுடன் யாருமில்லை. அதையெல்லாம் தனி ஒருவனாக கடந்து வந்து அவனது கனவை அடைந்து விட்டாலும் அந்தத் தழும்புகள் அப்படியே தான் இருந்தன. இன்று போல் யாராவது நியாபகப்படுத்தும் வரை அவைகளைப் பற்றி அவன் நினைப்பதில்லை. திடீரென்று விழிதெழுந்த நினைவுகளைப் புதைக்கும் வேலையில் ஷண்முகம் ஈடுப்பட்டிருக்க, ஜெயந்தியோடு உரையாடலை தொடர்ந்தார் விஜயா.
“ரெடிமெட் பிளவுஸ்ஸா? அவங்கிட்டே இருக்காதுன்னு தெரியலை..விசாரிச்சு சொல்றேன்..புடவைலேயே பிளவுஸ் இருக்குது.” என்றார்.
“சரி..ரெடிமேட் கிடைக்கலைன்னா பரவாயில்லை..ஃபால், பிக்கோ வேலை முடிஞ்சதும் புடவையை கூரியர்லே அனுப்பி விடுங்க..இங்கே டைலர்கிட்டே தைச்சுக்கறேன்..ஷண்முகம் பக்கத்திலே இருந்தா அவன்கிட்டே ஃபோனைக் கொடுங்க.” என்றாள் ஜெயந்தி.
“இங்கே தான் இருக்கான்..கேட்டிட்டு தான் இருக்கான்..கொடுக்கறேன்.” என்று கைப்பேசியை மகனிடம் நீட்டினார் விஜயா.
ஷண்முகத்திடம் கைப்பேசி வந்தவுடன்,”ரொம்ப தாங்க்ஸ் டா.. சந்தோஷமா இருக்கு..நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்னைக்கு கோவிலுக்குக் கட்டிட்டு போயிட்டு அப்படியே என் மாமியார் வீட்டுக்குப் போய் ‘என் தம்பி வாங்கிக் கொடுத்திருக்கான்னு’ பெருமையா சொல்லப் போறேன்.” என்றாள் ஜெயந்தி.
அவளுடைய திருமணத்திலிருந்து இப்போது வரை அதாவதுநல்ல பள்ளிக்கூடத்தில் நன்கொடை கொடுத்து சித்துவை சேர்த்தது வரை அவர்களின் பங்களிப்பு இருக்கிறதென்று குடும்பத்தினர்க்கு தெரியும். அது அத்தனையும் மறைமுகமான செயல். அதாவது அவனுடைய அம்மா விஜயா செய்த உதவிகள். அதை ஒருபோதும் அவர் வெளிப்படையாக சொல்லிக் காட்டியதில்லை. அதே போல் தான் ஷண்முகமும். பெரியப்பா, மாமா இருவரும் அவனுக்குத் தெரிவித்து விட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொண்டாலும் எதற்காக என்று ஒரு வார்த்தை கேட்டதில்லை. ஜெயந்தி, வசந்தி இருவருக்கும் பலவிதவங்களில் அவர்களின் பணம் பயன்பட்டிருக்கிறது என்றாலும் அதற்காக அவர்களிடம் நன்றியெல்லாம் எதிர்பார்த்ததில்லை. இப்போது இந்த சின்ன விஷயத்தை பெரிதுபடுத்தி நன்றி சொல்லும் அக்காவின் செயலில் லஜ்ஜையுற்றவன், அதை மறைக்க,
“புடவையோட ஃபோட்டோ பார்த்தேயா? உனக்குப் பிடிச்சிருக்கு தானே?” என்று அதிகாரமாக கேட்டான்.
அதற்கு,”இப்போ கேட்கற? பிடிக்கலைன்னா என்ன செய்வ?” என்று சிரிப்புடன் ஜெயந்தி கேட்க,
“உனக்கு பிடிச்ச மாதிரி வேற மாத்திக்கிடலாம்..தெரிஞ்சவங்க கடை..நம்ம கடை மாதிரி.” என்றான்.
உடனே, ஜெயந்தியின் ஆண்டெனா விழித்துக் கொள்ள,”நம்ம கடையா? யாருடா அது?” என்று கேட்டாள்.
ஒரு நொடி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவன்,”தமிழ்க் கடை க்கா..அதான் அப்படிச் சொன்னேன்..அங்கே அம்மாக்கு இரண்டு பிரண்ட் கிடைச்சிருக்காங்க..அம்மாகிட்டே கொடுக்கறேன்.” என்று சொல்லி கைப்பேசியை விஜயாவிடம் கொடுத்தான் ஷண்முகம்.
சிறிது நேரம் போல் சினேகா, ஜோதியைப் பற்றி ஜெயந்தியோடு பேசி விட்டு வசந்திக்கு அழைப்பு விடுத்தார் விஜயா.
வசந்திக்குப் பதிலாக அழைப்பை ஏற்றது வெங்கடேஷ் தான். விஜயா வாயைத் திறக்கும் முன்,”எங்கம்மா வந்திருக்காங்க..வசந்தி பிஸியா இருக்கா.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அதைப் பார்த்து,”என்ன ம்மா? தூங்கற நேரத்திலே அக்கா பிஸின்னு சொல்றார்? என்று கேட்டான் ஷண்முகம்.
“மாமியார் வந்தாங்கன்னா வேலை, வேலைன்னு தான் வசந்தி இருப்பா.” என்றார் விஜயா.
“சரி..அப்போ நாளைக்கு பேசிக்கோங்க.” என்றான்.
“அப்போவும் அவ பிஸியா தான் இருப்பா..அந்த அம்மா வந்தா அவளை பிஸியாவே வைச்சிருக்கும்.” என்று பதில் அளித்த விஜயா,’குழந்தையா? குட்டியா? எனக்கு செய்ய கூட இவளாலே முடியலையா? என்ன வளர்த்து வைச்சிருக்கீங்க.’ என்று அவருடைய அக்காவிடமே வசந்தியைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கிறார் வெங்கடேஷனின் அன்னை சீதா என்ற விவரத்தை மகனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை லேசாகக் கோடிட்டுக் காட்டியிருந்தால் கூட காவல் அதிகாரியாக அவனது அறிவை உபயோகித்து அக்காவிற்கு அனர்த்தம் நடக்காமல் தடுத்திருப்பான். வசந்தியின் கணவன், புகுந்த வீட்டினர் பற்றி அம்மா மூலம் கிடைக்கும் தகவலை அப்படியே மனத்தில் போட்டு வைத்துக் கொண்டிருந்தவனுக்கு அதை அலசி, ஆராய வேண்டுமென்று தோன்றவில்லை.