அத்தியாயம் – 25 -1

“அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு தில்லி தான் சொந்த ஊரா? விஜயாம்மா பாவம்..தில்லி பொண்ணோட எப்படி மல்லுக்கட்டப் போறாங்களா?” என்ற பேச்சு சினேகாவை எரிச்சல்படுத்த,

“உங்களுக்குக் கல்யாணத்தை தவிர வேற எதுவுமே பேசத் தெரியாதா?” என்று கேட்டாள்.

அதற்கு மேல் அந்தப் பேச்சை தொடராமல்,“இன்னைக்கு இவங்க வியாபாரம் மட்டும் தான்..இவங்களுக்கு முன்னே ஒருத்தன் வந்தான்..அவனுக்கு எடுத்துப் போட்டு போட்டு கை வலி தான் மிச்சம்..கடைசிலே ஆன்லைன் விலைக்கு கொடுக்கறீங்களான்னு கேட்கறான்..இனி என்னாலே இந்த மாதிரி இரண்டு மூணு நாளெல்லாம் தங்கி கடையைப் பார்த்துக்க முடியாது..அவ வெளியே போனா கடையை மூடிட்டு போகட்டும்.” என்றார்.

“என்கிட்டே சொல்லாதீங்க..உங்களை விட டயர்டா இருக்கேன் நான்..என் வேலையை அப்படியே விட்டிட்டு ஓடி வந்தேன்.” என்றாள்.

அதைக் கேட்டவுடன் அதுவரை மறந்து போயிருந்தது நியாபகத்திற்கு வர,“எதுக்கு அப்படி ஓடி வந்த? அதுவும் அந்த உடைலே?” என்று கேட்டார் ஜோதி.

அதற்கு பதில் சொன்னால் முந்தைய சந்திப்பில் நடந்ததை சொல்ல வேண்டும், அப்படிச் சொன்னால் ஆன்ட்டியோடு ஏற்பட்டிருக்கும் நட்பு பாதிக்கபடும் என்பதால், அந்தக் கேள்வியை மொத்தமாக தவிர்த்து,”மதராஸி ஆன் ட்டி நீங்க சொன்னவுடனே அந்த ஆன்ட்டியோன்னு சந்தேகப்பட்டு அவசரமா நான் ஓடி வந்ததாலே தான் இன்னைக்கு இவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கு…இனி என்கிட்டே எதுக்கும் நேரமில்லை..வீட்டுக்கு மூணு மென்யுஸ்கிர்ப்ட் கொண்டிட்டு வந்திருக்கேன்..இனிமேல் தான் அதுக்கு பிள்ளையார்சுழி போடணும்..இந்த மூணுத்தையும் நல்லபடியா முடிச்சு கொடுத்தா தான் தனியா வேலை (freelance) செய்ய அனுமதி கொடுப்போம்னு சொல்லிட்டாங்க..இரண்டு வாரம் போல வீட்லேர்ந்து  தான் வேலை செய்யப் போறேன்..ஷிக்கா கெஞ்சினாலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு இந்தப் பக்கம் தலை காட்ட மாட்டேன்..அவ கேட்கும் முன்னே வரமாட்டான்னு நீங்களே சொல்லிடுங்க.” என்றாள் சினேகா.

பள்ளிப்படிப்பு முடித்ததும் ஆங்கிலத் இலக்கியத்தில் ஆனர்ஸ் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தாள் சினேகா. லிட்ரேச்சர் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது கடினம், மிஞ்சி மிஞ்சி போனால் டீச்சர் வேலை தான் கிடைக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தான் மனோகர். இளங்கலையை முடித்த பின் ஜர்னலிஸம், மாஸ் மீடியா, பப்ளிகேஷனில் முதுகலைப் பட்டம் பெற்று சின்ன பதிப்பாளரிடம் காப்பி எடிட்டராக வேலைக்கு சேர்ந்தாள். அந்த அனுபவத்தை வைத்து பெரிய பதிப்பகத்தில் அவள் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் போலாகிறது. கிட்டதட்ட இரண்டு வருடங்களாக இந்தத் துறையின் நெளிவு சுளிவுகளைக் சுற்றி வந்து கொண்டிருந்ததால் நிரந்தரமாக யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற முக்கியமான பாடத்தைப் கற்றிருந்தாள். எனவே தான் இந்த வேலையைத் தொடர்ந்தபடி மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரின் புத்தகத்தைக் காப்பி எடிடிங் செய்ய ஒப்புக் கொண்டிருந்தாள். எந்தத் துறையில் வேலை செய்தாலும், சொந்தமாக தொழில் செய்தாலும் பின்புலம் இல்லாதவர்களுக்கு அனைவரையும் அனுசரித்து, சகித்து போவதை தவிர வேறு வழி கிடையாதே.

“அவகிட்டே என்ன பேச்சு வேண்டி கிடக்கு..மனோகிட்டே சொல்றேன்..கேக்கலைன்னா இந்த மாசம் வீட்டு வாடகை அவன் தான் கொடுக்கணும்னு ஒரு குண்டைப் போடறேன்..வாயை மூடிக்குவான்..கடையை நடத்த நீயும் நானும் இவ்வளவு உதவி செய்யறோம் ஒரு பைசா நம்ம கண்ணுலே காமிக்க மாட்டேங்கறா.” என்று மருமகளைக் குறை சொன்னார் ஜோதி.

“நான் இங்கே வந்தாலே உடனே நீங்க ஃபோன் செய்து வீட்டுக்கு வரச் சொல்லிடறீங்க..’இங்கே வர்றது எனக்கு உதவி செய்ய அதைச் செய்ய விடாம செய்யறாங்க ஆன்ட்டி..நீ இங்கே தினமும் எத்தனை நேரம் வேலை பார்க்கற பணம் வேணும்னு கேட்கறத்துக்குன்னு?’ பதில் கேள்வி கேட்பா.” என்றாள் சினேகா.

“நாள் பூரா கடைலேயே இருந்து வியாபாரம் செய்யணும் உனக்கு அவசியமில்லை..இருபது நிமிஷம் கூட உனக்குப் போதும்..இப்போ கூட அதைத் தானே செய்த..ஒண்ணில்லை ஆறு புடவை வித்திருக்க..அதோட ஃபால், பிக்கோன்னு அந்த வேலை தனி..உன்னாலே எத்தனை வியாபாரம் நடக்குதுன்னு அவளுக்கு தெரியாதா?..அதனால் தான் நீ கடைக்கு வந்தா உன்னை விட மாட்டேங்கறா.. எப்போதையும் விட லேட்டா கடையை மூடறா..கடையைப் பூட்டினதும் பட்டுன்னு இந்தக் கதவைத் திறந்திட்டு அவ வீட்டுக்குள்ளே போயிடுவா..நீ தானே ரிக்‌ஷா பிடிச்சு இல்லை நடந்து வீட்டுக்கு வர..அதான் எட்டு மணியான உன்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கறேன்.” என்று நியாயமாகப் பேசினார் ஜோதி.

“உங்க இரண்டு பேருக்கு நடுவுலே என்னை இழுக்காதீங்க….என்னைக்கு என்னாலே முடியுதோ அன்னைக்குத் தான் வருவேன்னு ஏற்கனவே பலமுறை மனோகிட்டேயும் சொல்லிட்டேன்..ஆனாலும் அடிக்கடி என்னை தொந்தரவு செய்யறான்..இனி இரண்டு இடத்திலே வேலை செய்யப் போறேன்..சில நாள் தில்லிலே இருக்கவே போகறதில்லை..உங்களாலே இங்கேயே இருக்க முடியாது..தனியா நம்ம வீட்லேர்ந்து வந்து போக முடியாது..கடையைப் பார்த்துக்க ஆள் போடச் சொல்லுங்க.” என்றாள் சினேகா.

“இனி சினேகா அடிக்கடி மும்பைக்கு போவா அவளை நம்பாதே கடையைப் பார்த்துக்க ஆள் போட்டுக்கோன்னு ஏற்கனவே மனோகிட்டே சொல்லிட்டேன்..’பார்த்திட்டு தான் இருக்கோம் சரியா அமையலைன்னு’ ஷிக்கா சொல்றா..தையல் வேலைக்கு உதவிக்கு வைச்சிருக்கற ஆளை கடைக்கும் வரவழைக்கலாம்…ஆனா அதிலே ஒரு பிரச்சனை இருக்குது..வியாபாரம் நடக்குதோ இல்லையோ வேலைக்கு ஆள் வைச்சா மாசாமாசம் சொளையா பத்தாயிரம் கையை விட்டுப் போகும்..வீட்டோட இருக்கற கடைக்கு வீண் செலவுன்னு நினைக்கறா போல.” என்று சொன்ன ஜோதியின் குரலில் கொஞ்சம் கூட குற்றம் சாட்டும் உணர்வு இல்லை.

“அதே காரணத்துக்கு தான் ஆள் போட அவளோட மாமியாருக்கும் மனசு வராது..மாமியாருக்கு ஏத்த மருமக தான் அவ.” என்று சரியான பதில் கொடுத்தாள் சினேகா.

“ஆமாம் டீ..நான் பார்த்து, நிச்சயம் செய்து, கல்யாணம் கட்டி, ஆலத்தி எடுத்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் பாரு..அதான் அப்படியொரு பொருத்தம் எங்களுக்குள்ளே.” என்று கடுப்புடன் பதிலளித்தார் ஜோதி.

“அந்த வேலையெல்லாம் சரியா செய்து உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு மருமகளைக் கூட்டிட்டு வந்தது உங்க மகன் தானே.” என்று சினேகா கிண்டல் செய்ய,

“வேணாம் டீ..அந்த விஷயத்தை ஆரம்பிக்காத..எனக்கு மகனே இல்லைன்னு நினைச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கேன்.” என்று சொன்னவரின் கண்கள் கலங்க,

உடனே அவரை அணைத்து,”ஸாரி ம்மா..விளையாட்டுக்கு சொன்னேன்..உங்களுக்கு நான் இருக்கேன் ம்மா.” என்றாள் சினேகா,

“அதனால் தான் டீ அவன் அப்படியொரு வேலையைச் செய்தான்..எப்படியும் நீ என்னைப் பார்த்துப்பேன்னு அவனுக்குத் தெரியும்…உங்கப்பா பென்ஷன் இருக்குங்கற தைரியம் அவனுக்கு..எப்படியாவது உனக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திட்டு ஷிக்கா தலைலே உட்காரணும்னு நினைக்கறேன்..நடக்க மாட்டேங்குது..இனியாவது கடவுள் கண் திறக்கட்டும்.” என்ற சொன்ன போது  குருவாயூரப்பன் கோவிலிருந்து மணியோசை லேசாகக் கேட்க, 

“கோவில் மூடப் போகுது டீ…கடையை மூடுவோம்..இன்னைக்கு தான் நல்ல வியாபாரம் ஆகிடுச்சே..எல்லாம் கிருஷணர் அருள்.” என்று மகளிடம் சொன்னவர் அப்படியே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரும்படி கிருஷணரிடம் வேண்டிக் கொண்டார். 

அதே நேரத்தில், மகனோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜயாவை அவனது மௌனம் என்னவோ செய்ய,”என்ன சாமி ஆச்சு? அமைதியா வர்றீங்க? நிறைய செலவு வைச்சிட்டேனா?” என்று கேட்டார்.

அப்போது தான் அவனது அமைதி அம்மாவின் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கறது என்று உணர்ந்த ஷண்முகவேல்,”அதெல்லாம் இல்லை ம்மா..சும்மா விளையாட்டுக்கு தான் தலைலே துண்டு போட்டிட்டு போகணும்னு சொன்னேன்..ஆறு புடவை எடுத்ததிலே ஆண்டியாகிட மாட்டேன்.” என்று சொல்லி சிரித்தான்.

“வீட்டை விட்டுக் கிளம்பும் போது மனசு ஒரு மாதிரி இருந்திச்சு சாமி..இன்னைக்கும் கடை மூடியிருந்தா இன்னொரு நாளான்னு அலுப்பா இருந்திச்சு..எதுக்குப் போகணும்..காமிக்க வேணாம்னு கூட தோணிச்சு..ஆனா அங்கே போய் சினேகா முகத்தைப் பார்த்ததும் அத்தனையும் மாயமாகிடுச்சு..அவ இந்தச் சுடிதாரைப் பாராட்டினதும் அங்கே போனது சரின்னு மனசு சொல்லிச்சு..அவளும் முதல் நாள் போல சகஜமாப் பேசிப் பழகினா..அவங்க அம்மாவும் நல்லாப் பழகறாங்க..கடைலே இருந்த புடவை எல்லாமே அழகா இருந்திச்சு சாமி…நல்லவேளை சினேகாவை தேர்வு செய்யச் சொன்னேன்..என்கிட்டே விட்டிருந்தா எல்லாத்தையும் வாங்கியிருப்பேன்..உன்னை நிஜமாவே ஆண்டி ஆக்கியிருப்பேன்.”என்றார் விஜயா.

“அம்மா, மனசு சரியில்லாம இருக்கற போது கடைக்குப் போகறது, சில பொருள்கள் வாங்கறது அதன் மூலம் மனம் உற்சாகமடையறதுக்கு பெயர் ரீடேல் தெரபி…அடிக்கடி ஷாப்பிங் போகறது, தேவையில்லாத பொருள்களை வாங்கறது, அளவில்லாம காசு செலவழிக்கறதுன்னு அதுக்கு அடிமையாகிட்டா மனசோர்வை விட பெரிய வியாதி அது.” என்றான் ஷண்முகவேல்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான விஜயா,”சாமி, சென்னைலே நான் கடைக்கு அதிகம் போனதில்லை..அப்படியே போனாலும்..” என்ற அவரது விளக்கத்தை இடையீட்டு,

“அம்மா, எனக்கு உங்களைப் பற்றி தெரியாதா? அன்னைக்கு நடந்ததைச் சரி செய்ய இன்னைக்கு அந்தப் பொண்ணு ரொம்ப முயற்சி எடுத்தா..நாம எதுவும் வாங்காம வந்திருந்தா அவளோட மனசு கஷ்டப்பட்டிருக்கும்..உங்க இரண்டு பேருக்கு இடையே இருந்த மனஸ்தாபத்தைத் தீர்க்க தான் அக்கா இரண்டு பேருக்கும் புடவை வாங்கலாம்னு சொன்னேன்..இப்போ பழைய சினேகிதத்தை நீங்க புதுப்பிச்சாச்சு கொசுறா உங்களுக்கு ஒரு புது சினேகிதி கிடைச்சிருக்காங்க.” என்று வெகு சாமர்த்தியமாக அவனுடைய சகியைப் பற்றி ஒரு வார்த்தை வெளியிடாமல் அந்த உரையாடலை அழகாக முடிவிற்கு கொண்டு வந்தான் ஞானவேல்.