அத்தியாயம் – 25

உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப் போனது. ‘உன் மேலே நம்பிக்கை இல்லாமயா அம்மா, மகன் இரண்டு பேரும் புடவை செலெக்‌ஷனை உன் கையிலே விட்டாங்க.’ என்று அவளது மனம் அவளைச் சாடியது. பலமுறை மன்னிப்பு கேட்டாலும் பேசிய வார்த்தை பேசியது தான் அதை மீட்டெடுக்க முடியாதென்பதால் விஜயா ஆன்ட்டியை எப்படிச் சமாதானம் செய்வதென்று சினேகா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது தான் பல காலம் பழகியவர்கள் போல் அவளை ஒருமையில் கேலி செய்து அவனுடைய அம்மாவின் சஞ்சலத்தை மட்டுமல்லாது அவளது மனசஞ்சலத்தையும் போக்கினான் ஷண்முகம்.

அந்தக் கைக்குட்டைகளைப் பார்த்தவுடன்,“சாமி, அன்னைக்கு கைக்குட்டை கிடைக்கலைன்னு நீங்க..” என்று ஆரம்பித்த விஜயா அது கத்தியில் போய் முடியுமென்று உணர்ந்து மேலே தொடராமல் நிறுத்திக் கொண்டார். 

பாதியில் நிறுத்திய வாக்கியத்திலிருந்து தானாக ஒனறைப் புரிந்துக் கொண்டு,“தம்பிக்கு கைக்குட்டை தேவைப்படுதா விஜயாம்மா?” என்று கேட்ட ஜோதி, அதற்குப் பதிலை எதிர்பார்க்காமல்,”நம்மகிட்டே இருக்கறதையெல்லாம் எடுத்து காட்டு டீ..எத்தனை வேணும்னாலும் எடுத்திட்டுப் போங்க.” என்றார்.

ஏற்கனவே வைத்ததோடு மேலும் சில கைக்குட்டைகளைக் கேஷ் கௌண்டர் மீது வைத்தாள் சினேகா.

”தீபாவளி பண்டிகை போது தெரிஞ்சவங்களுக்கு பரிசு கொடுக்கறது இந்தப் பக்கத்து பழக்கம்..போன தீபாவளிக்கு என் பையன் அவனோட பிரண்ட்ஸுக்கு அவங்க பெயர் போட்ட கைக்குட்டையைப் பரிசா கொடுத்தான்.” என்று பொதுவாகச் சொன்ன ஜோதி,”சுத்தமான பருத்தித் துணி தம்பி..ஏற்கனவே சிலதிலே ஆங்கில எழுத்தை எம்ப்ராய்டரி செய்து வைச்சிருக்கோம்.” என்று ஷண்முகத்திடம் சொன்னார்.

அதில் சிலதைப் பிரித்துப் பார்த்த விஜயா,”சாமி, அரை டஜன் எடுத்துக்கலாமா?” என்று ஷண்முகத்திடம் கேட்டார்.

“வேணாம் ம்மா..என்கிட்டே  இருக்கு..அன்னைக்கு கிடைக்கலை.” என்று மறுத்தான் ஷண்முகம்.

“எழுத்து போட்டது இல்லையேப்பா.” என்று விஜயா வற்புறுத்த,

அவனது வேலையில் அடையாளம், தடம் எதையும் விட்டுச் செல்லாமல் இருக்க அவன் பயிற்சி எடுத்திருக்க, எழுத்துப் போட்டதெல்லாம் கூடவே கூடாதென்பதை எப்படி அவனுடைய அம்மாவிற்குப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. எனவே, 

“ப்ளேயின்னா இரண்டு மட்டும் கொடுங்க ஆன்ட்டி.” என்றான் ஜோதியிடம்.

“எழுத்து போட்டது தான் நல்லது தம்பி..தொலைஞ்சுப் போயிடுசுன்னா சுலபமாக் கண்டு பிடிக்க முடியும்.” என்றார் ஜோதி.

“எஸ் நு எம்ப்ராய்டரி செய்தது இருக்கா ஜோதி?” என்று கேட்டார் விஜயா.

அதற்கு ஜோதி பதிலளிக்கும் முன்,“அம்மா, ’எஸ்’ ந்னு எம்பிராய்டரி செய்த கைக்குட்டை எல்லா ஷர்மாகிட்டேயும் இருக்கும்..உங்க ஆசைக்கு வாங்கினா நான் அதை வீட்லே தான் உபயோகிக்கணும்..நான் வெளியே தான் அதிகம் இருக்கேன்..எழுத்து போட்டது வேணாம் ம்மா.” என்று எழுத்து எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்டிருந்த கைக்குட்டை வேண்டாமென்று மறுத்தான்.

“அதெல்லாம் மிஷின் எம்ராய்ட்ரி தம்பி..இது சினேகா அவ கையாலே செய்யறது.. இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.” என்றார் ஜோதி.

அவளது கைவண்ணம் என்றவுடன் மறுக்க முடியாமல்,“அப்போ இரண்டு கைக்குட்டைலே என் பெயரோட முதல் எழுத்தை தமிழ்லே எம்ப்ராய்ட்ரி செய்து கொடு.” என்று நேரடியாக சினேகாவிற்குக் கட்டளையிட்டான் ஷண்முகம்.

அதற்கு,”எனக்குத் தமிழ் பேச மட்டும் தான் தெரியும்..எழுத, படிக்க தெரியாது.” என்றாள் சினேகா.

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை…நான் எழுதி தரேன்..நீ எம்ப்ராய்ட்ரி செய்திடு.” என்றார் ஜோதி.

அந்த ஏற்பாடு விஜயாவிற்குப் பிடித்திருக்க,”இரண்டுத்திலேயும் ஒரே நிறத்திலே ‘ஷ’ந்னு எம்ப்ராய்ட்ரி செய்து கொடுங்க ஜோதி.’ என்றார்.

அதற்கு,“ஷா இல்லை ச தான் சரி..தமிழ்லே சண்முகம் தானே.” என்றார் ஜோதி.

சில நிமிடங்களுக்கு முன் அவரது விவாகரத்தைப் பற்றி பேச சங்கடப்பட்ட விஜயா,“நாங்க ‘ஷ’ன்னு தான் எழுதவோம்..என் மாமனாரோட பெயர் ஷண்முகவேல்..அவர் பெயரைத் தான் இவனுக்கு வைச்சிருக்கு.” என்று வெகு இயல்பாக மகனின் பெயருக்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ள, ஷண்முகவேலுக்கு தான் ஷாக் அடித்தது போலானது. அந்தக் குடும்பத்தின் ஆண்மகனாக அவனை அடையாளப்படுத்துவதை அறவே வெறுப்பவன் அவன். அது தெரியாமல்,

“அப்போ தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கறது தான் உங்க குடும்ப வழக்கமா?” என்று கேட்டார் ஜோதி. அந்த கேள்வி வந்ததற்குக் காரணம் இருந்தது. அவருடைய பேரனுக்கு அவர்கள் வீட்டு வழக்கப்படி எதுவுமே நடக்கவில்லை. அதை வைத்து அவருக்கும் மனோகருக்கும் நிறைய வாக்குவாதங்கள் இன்றும் வருவதுண்டு. இறுதியில்,’உங்க பிள்ளை அப்போ உங்க இஷ்டப்படி தானே எல்லாம் நடக்கும்.’ என்று அதை முடித்து விடுவார். அவரை மீறிப் புலம்பிக் கொண்டிருக்கும் சமயங்களில்,’உங்க பேரனா இருந்தாலும் தவறுதலாக் கூட மாண்ட்டியை யாரும் மதராஸின்னு சொல்ல மாட்டாங்க..மனோகர் செய்ததை அந்த மாதிரியும் பார்க்கலாம்.’ என்று அவளுடைய அம்மாவிற்கு அதை ஏற்றுக் கொள்ள வழி வகுத்துக் கொடுத்திருந்தாள் சினேகா.

அந்தக் கேள்வி வந்தவுடன் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை ஷண்முகத்திற்கு. எனவே,”இந்தாங்க கார்ட்..பில் பணத்தை எடுத்துக்கோங்க..நாங்க கிளம்பறோம்.” என்றவனின் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை ஆனால் குரலில் உட்கோபம் தெரிந்தது.

அவனது கார்ட்டை கையில் வாங்கிக் கொண்டு,”நீங்க சொன்ன மாதிரியே ‘ஷ’ நு எம்பிராய்ட்ரி செய்து கொடுக்கறேன் ஆன்ட்டி.” என்றாள் விஜயாவிடம்.

அதற்கு,”எனக்கு கைக்குட்டை வேணாம்னு சொன்னேன்..புடவைக்கு மட்டும் பில் போடு.” என்று சொன்ன ஷண்முகத்தின் முகம், குரல் இரண்டும் உணர்ச்சியற்று இருந்தது. 

உடனேயே அத்தனை கைக்குட்டைகளையும் அள்ளி அவளது காலடியில் போட்டு விட்டு, வேகமாக பில் போட ஆரம்பித்தாள்.

ஷண்முகத்திடம் ஏற்பட்டிருந்த மாற்றம் இரண்டு பெரியவர்களுக்கும் தெரியவில்லை. எனவே, அவனது மறுப்பைப் பொருட்படுத்தாமல்,

“காசு வேணாம் தம்பி..எங்களோட பரிசா கொடுக்கறோம்..அம்மாவோட அளவு பிளவுஸ் வாங்க ஆள் வருவானில்லே ‘ஷ’ நு எம்ப்ராய்ட்ரி செய்து அவன் கைலே கொடுத்து விடறேன்.” என்றார் ஜோதி.

“பரிசெல்லாம் வேணாம் ஜோதி..காசுக்கு கொடுத்தா தான் வாங்கிப்பேன்.” என்றார் விஜயா

“’ச’ வும் வேணாம்..’ஷ’ வும் வேணாம்..கைக்குட்டையே வேணாம் ஆன்ட்டி.” என்று தன்மையாக ஜோதியிடம் சொன்னவன்,”எதுக்கு ம்மா எனக்கு இப்போ புதுக் கைக்குட்டை?..வேணாம்..விடுங்க.” என்று கறாராக விஜயாவிடம் மறுத்து, அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஷண்முகவேல்.

சாதாரணமாக போய்க் கொண்டிருந்த உரையாடல் எந்த புள்ளியில் அபாயகரமாக மாறிப் போனது என்று யோசித்த சினேகாவிற்கு எம்ப்ராய்ட்ரி விஷயத்தினால் தான் என்று புரிந்து போனது. ‘முதல் எழுத்து போடறது பிடிக்கலையா இல்லை இவங்களுக்கு அவங்க பெயரே பிடிக்கலையா?’ என்று அவளுள் கேள்வி வந்தது. அதைப் பற்றி யோசித்தபடி பில் போடும் வேலையைத் தொடர்ந்தாள். விஜயாவும் ஜோதியும் வியாபாரத்திலிருந்து வானிலை வரை பேசி கொண்டிருந்தனர். சினேகா பில் போட்டு முடிக்கும் வரை கடையில் தான் இருக்கிறானா என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு வெகு அமைதியாக இருந்தான் ஷண்முகம். அவனிடம் பில்லை அவள் நீட்ட  அந்தத் தொகையைச் செலுத்தி விட்டு, லேசான தலையசைவில் ஜோதி, சினேகா இருவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டான் ஷண்முகவேல். 

அவர்கள் சென்றதும் கௌண்டர் மீதிருந்த புடவைகளை ஜோதி அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, அவரது கவனத்தைக் கவராமல் காலடியில் இருந்த இரண்டு கைக்குட்டைகளைக் டிராக் பேண்ட் பேக்கெட்டினுள் போட்டுக் கொண்டாள் சினேகா. ’ஜோதியம்மா, விஜயம்மா, இரண்டு அம்மாக்கும் தெரியாம எப்படி அவங்க கைலே இதைச் சேர்க்கலாம்னு இருக்க?’ என்று அவளது மனது கேள்வி கேட்க,’ஒரு கவர்லே போட்டு ஷர்மா அங்கிள் கைலே சேர்ப்பிச்சு அவங்க கைலே சேர்ப்பிக்க சொல்லிட்டா வேலை முடிஞ்சது.’ என்று அதற்கு தயாராக பதில் வர,’அதைத் தூக்கிட்டு வந்து உன் முகத்திலே விட்டெறிஞ்சா என்ன செய்வ? இந்த தீபாவளிக்கு எங்களோட பரிசா கொடுத்து விட்டேன்னு ஒரு லைன் கதை விட வேண்டியது தான்.’ என்று மனத்தினுள் உரையாடல் நடத்திக் கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தார் ஜோதி.

“கழுத்திலே தாலி இல்லை..நெத்திலே சின்னதா ஒரு பொட்டு…விதவைன்னு நினைச்சேன் விவாகரத்து ஆனவங்கண்ணு நினைக்கவே இல்லை..அந்தத் தம்பிக்கு முப்பத்தி மூணு வயசாகுது..அப்போயெல்லாம் விவாகரத்துங்கற பேச்சுக்கே இடமிருக்கலை..அந்தச் சூழ்நிலைலே இவங்களுக்கு விவாகரத்து ஆகியிருக்குன்னா ஏதாவது வலுவான காரணம் இருக்கணும்.” என்று விஜயாவின் வாழ்க்கையை அலச ஆரம்பித்தார் ஜோதி.

“அம்மா, நமக்கு எதுக்கு அவங்க கதை..எல்லாத்தையும் அடுக்கி வைங்க.” என்று அவரது அலசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்தாள் சினேகா.

அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்,“அன்னைக்கு ஷர்மா அவரோட பெண்டாட்டியோட கடைக்கு வந்திருந்தாரில்லே.. அவர் எங்கே வேலை செய்யறார்னு அந்தம்மா சொல்லிச்சு?” என்று மகளிடம் கேட்டார் ஜோதி.

“ஹோம் மினிஸ்ட்ரி..இவர் ஷர்மா அங்கிளோட பாஸ்..உயர் பதவிலே இருக்காங்க..அது தெரியாம உதவி செய்யறேன்னு அவங்ககிட்டேயே உளறிட்டு இருந்தீங்க.” என்றாள் சினேகா.

“என்ன டீ சொல்ற? பெரிய பதவியா? உங்கப்பா, ஷர்மா சர் போலன்னு நினைச்சேன்.” என்றார் ஜோதி.

போலீஸ் என்று சொல்லி அவரைப் பயமுறுத்த விரும்பாம,”இப்போ தெரிஞ்சிடுச்சுயில்லே..இனி அடக்கி வாசிங்க.” என்று எச்சரிக்கை செய்தாள் சினேகா.