அத்தியாயம் – 20

கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக் கேமரா வழியாக நோக்கியிருந்தவனைப் பஸ்மமாக்கும் அளவிற்கு பொங்கியது. அன்று சத்தம் செய்யாமல் கடையினுள் ஷண்முகம் நுழைந்தது இன்று திருட்டுத்தனமாக நுழைந்தது போல் சினேகாவுக்குத் தோன்றியது. ‘திருடன் மாதிரி உள்ளே வந்திருக்கான்..அப்போவே கொஞ்சம் எச்சரிக்கையா இருந்திருக்கணும்…கோல்ட் ஷோல்டர் கொடுத்திருக்கணும்..ஷர்மா அங்கிள் பாஸ்ஸுன்னு மரியாதை கொடுத்தது தப்பு..ராஸ்கல்..ரோக்..ஸ்கௌண்ட் ரல்..’ என்று அவளது மனத்தில் ஷண்முகத்தை பொரித்து எடுத்தாள். 

அடுக்கடுக்காக அவனைத் திட்டிக் கொண்டிருந்தவளுக்கு அவளெதிரே இருந்த விஜயாவைப் பார்த்ததும், ‘சாமி, சாமி’ வார்த்தைக்கு வார்த்தை வாஞ்சையைக் காட்டற அம்மாக்கு இப்படியொரு மகனா? என்று ஷண்முகம் மீது கடும் வெறுப்பு (revulsion) எழுந்தாலும்,’இருக்காது..அன்னைக்கு அப்படி ஒண்ணும் தப்பானவங்களா தெரியலையே.’ என்று அவனது அயோக்கியத்தனத்தை நம்ப சண்டித்தனம் செய்தது அவளது மனது.

‘அவனைப் பற்றிய ஆராய்ச்சியை அப்புறம் வைச்சுக்கலாம் இப்போ, இங்கே கண்ணெதிரே இருக்கறவனை விட்டுடாதே.’ என்று மனது அவளுக்கு எடுத்துக் கொடுக்க, நாலு வார்த்தை நறுக்குனு கேட்டு பிரகாஷை அவமானப்படுத்த வேண்டுமென்ற வேகம் வந்தது சினேகாவிற்கு. ‘இவன் நேர்லே பார்க்கறதை அவனுக்கு நேரலையா ஒளிப்பரப்பு செய்திருக்கான்..கல்யாணமாகி மனைவி இருக்கும் போது இப்படி ஒரு கேவலமான வேலை செய்யறவனை என்ன செய்யலாம்?’ என்று மீண்டும் பிரகாஷை நோக்கி தீப் பார்வை வீச, அவனோ பார்வையாலேயே அவளிடம் ஏதோ செல்ல முயல, ‘மன்னிப்பு கேட்கறானா?’ என்று யோசித்தவள், ‘அதுக்கு கையாலே கும்பிடு போடணும் இல்லை என் கால்லே விழணும்’ என்று நினைத்தவள், பிரகாஷ் என்ன சொல்ல வருகிறானென்று தெரிந்து கொள்ள விழி அகற்றாமல் அவனைத் தொடர்ந்து பார்க்க, அவனும் பார்வையைத் தாழ்த்தி, உயர்த்தி என்று தயங்கி, தயங்கி அவளைச் சங்கடத்துடன் நோக்கினான்.

’என்ன சொல்ல வர்றான் ?என் மேலே தப்பில்லைன்னு சொல்றானா?இவன் தப்பு இல்லைன்னா நான் நினைச்சது போல அவன் தான் தப்பா..நான் நடந்து வந்ததைப் பார்த்து இவன் ஏதோ கமெண்ட் அடிச்சிருக்கணும்..அதுக்கு அவன், ‘நீ பார்க்கறதை எனக்கும் அலைபரப்பு செய்யுன்னு கேட்டிருக்கணும்..க்ரீப் (creep)..’ என்று நடந்ததை அலசி, அலசி அதன் இறுதியில் அனைத்துக் கோணங்களிலும் ஷண்முகமே தவறாக தெரிந்ததால்,’உங்க பையன் என்ன வேலை செய்திருக்கார் தெரியுமா?’ என்ற கேள்வியைத் தான் விஜயாவிடம் கேட்க நினைத்தாள் சினேகா. ஆனால் திடீரென்று விஜயாவிடம் அவருடைய மகனைப் பற்றி அவதூறாகப் பேச முடியாதென்பதால் பொதுவான கேள்வியில் ஆரம்பித்தாள். 

அந்தக் கேள்வியின் பின்னணி புரியாமல்,”நேத்து இராத்திரி நான் கேட்ட போது,’வலி இல்லை ம்மா மாத்திரை போட்டிருக்கேன்னு சட்னிக்கு தேங்காயைப் பத்தைப் போட்டு கொடுத்தான் கண்ணு..இன்னைக்குக் காலைலே தோள்பட்டை எப்படி இருக்கு சாமின்னு கேட்டபோது,’அந்த சைட் திரும்பி படுத்திருக்கேன் வலிக்குது ம்மான்னு’ சொன்னான்..அப்போ இன்னைக்கு ஆபிஸ் போக வேணாம் ரெஸ்ட் எடுத்துக்க சாமி…பிரகாஷும் வந்திருக்கான் வீட்லே இருன்னு சொன்னேன்..எங்கே என் பேச்சை கேட்டான்? ‘இன்னைக்கு நான் கண்டிப்பா போகணும்னு’ வலியோட தான் ஆபிஸுக்குக் கிளம்பிப் போனான்.” என்ற விஜயாவின் பதிலைக் கேட்டு பிரகாஷ் திகைத்துப் போக, குழம்பிப் போனாள் சினேகா.

‘நல்லா இருக்கான்.’ என்ற சாதாரணப் பதிலை எதிர்பார்த்திருந்த சினேகா இது போலொரு பதிலை எதிர்பாக்கவேயில்லை. இனி எந்தப் பாதையில் உரையாடலை எடுத்துச் சென்று, எப்படி அவள் மனத்தில் இருப்பதை அவரிடம் தெரியப்படுத்துவது என்று அவளுக்குப் புரியவில்லை. ஷண்முகத்திற்கு அடிப்பட்ட விஷயம் பிரகாஷிற்கு தெரியவில்லை. நேற்றிரவு வலி நிவாரணியின் உதவியால் எப்போதும் போல் ஷண்முகம் பேசி, சிரிக்க இந்த விஷயம் வெளியே வரவில்லை. இன்று காலையில் ஷண்முகத்தின் தரிசனம் பிரகாஷிற்குக் கிடைக்கவில்லை. 

எனவே, சினேகா அவளது யோசனையில் மூழ்கியிருக்க,

“என்ன அத்தை சொல்ற? வேலுக்கு அடிப்பட்டிச்சா? எப்போ?” என்று விசாரித்தான் பிரகாஷ்.

“நேத்து டா..சாயங்காலம் தோள்பட்டைலே அடிப்படிட்டு வந்தான் டா..என்கிட்டே சொல்லலை..அவனோட சட்டையைக் கழட்டினதும் நான் பார்த்திட்டேன்.. அந்த இடமே நிறம் மாறிப் போயிருந்திச்சு..என்ன டா ஆச்சுன்னு கேட்டா ‘ஒண்ணுமில்லை ம்மா சிராய்ப்பு தான் மாத்திரை எடுத்திட்டேன் சரியாகிடும்னு’ சொன்னான்.” என்றார்.

“அவனுக்கு அடிப்பட்டதை ஏன் நீங்க என்கிட்டே சொல்லலை?” என்று பிரகாஷ் கோபமாகக் கேட்க,

“எதுக்கு டா என் மேலே கோவப்படற? ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு அவன் சொல்லும் போது நான் என்னத்தை சொல்றது..என் கண்ணெதிரே நாலைஞ்சு தடவை தண்டால் எடுத்தான்..என்னை வாக்கிங் அழைச்சிட்டுப் போனான்..எப்போதும் போல பூங்காவிலே உடற்பயிற்சி செய்தான்..அவன் சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை போலன்னு நானும் நினைச்சுக்கிட்டேன்..காலைலே கேட்ட போது தான் லேசா வலிக்குதுன்னு சொன்னான்.” என்று நடந்த அனைத்தையும் சினேகாவின் முன்னிலையில் பிரகாஷிடம் ஒப்பித்தார் விஜயா.

அதைக் கேட்டு கெட்டதிலும் ஒரு நல்லது என்று நினைத்து, ஷண்முகத்தின் மீது சினேகாவிற்கு ஏற்பட்டிருந்த தவறான அபிப்பிராயத்தைப் போக்க அதுதான் சரியான தருணம் என்று தவறாக யுகித்து.’ போலீஸ்காரினில்லே இது போல நிறைய பார்த்திருப்பான்..அடிப்பட்ட தோளோட இத்தனை செய்திருக்கான்னா நிஜமாவே ஒண்ணுமில்லைன்னு தான் அர்த்தம்..நீங்க கவலைப்படாதீங்க.” என்றான்.

‘போலீஸ்க்காரன்’ என்ற வார்த்தையைக் கேட்டு சினேகா அதிர்ச்சியாக, விஜயா திகைத்துப் போனார். வார்த்தைக்கு வார்த்தை ஷண்முகத்தைப் போலீஸ்க்காரன் என்று சொல்லும் பிரகாஷ் இப்போதும் அதே பழக்கத்தில் சொல்லக் கூடாததை சொல்லி விட, அதை எப்படி சப்பைக்கட்டுவது என்று யோசிக்கலானார் விஜயா.

அவளது யோசனையிலிருந்து வெளியே வந்த சினேகாவிற்கு போலீஸ்க்காரன் என்ற வார்த்தை முதலில் அதிர்ச்சி அடுத்து அருவருப்பை கொடுக்க, கடைசியில் ஆக்ரோஷம் ஏற்பட , அதை மறைக்காமல்,”போலீஸ்க்காரங்க தான் இப்பொயெல்லாம் பொய், பித்தலாட்டம் செய்யறாங்க.” என்று  கூற்றின் மூலம் அப்படியே வெளியேற்றியவளின் பார்வை பிரகாஷைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

ஷண்முகத்தை தான் சொல்கிறாள் என்று பிரகாஷ், விஜயா இருவருக்கும் புரிந்தது. அவன் சார்பாக என்ன சொல்லி அவளின் கருத்தை, எண்ணத்தை மாத்துவது என்று பிரகாஷிற்குப் புரியவில்லை. 

எதையும் கடந்து போய்விடும் விஜயாவினால் அவரது மகன் மீது சுமத்தப்பட்ட பழியை அப்படியே கடந்து போக முடியவில்லை. ‘இந்த பெண்ணுக்கு நம்ம மகனைப் பற்றி என்ன தெரியும் இப்படி சட்டுன்னு அவனைப் பேசுது? நல்ல பொண்ணுன்னு நினைச்சோமே? நமக்குத் தெரியாம ஏதாவது நடந்திருக்குமா?’ என்று யோசனை செய்தவர் சினேகாவை நோக்க அவளோ பிராகஷைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவரது பார்வையை அவரும் பிராகஷின் புறம் திருப்ப, நொடிக்கும் குறைவான நேரத்திற்கு அவர்களின் பார்வை கலக்க, அதற்கு மேல் அவரது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவனது தலையைத் தாழ்த்திக் கொண்டான் பிரகாஷ்.

அவர் வளர்த்த பிள்ளை என்பதால் அந்தச் செயலே அவனிடம் ஏதோ சரியில்லை என்று விஜயாவிற்கு செய்தி சொல்ல, சினேகாவின் புறம் பார்வையைத் திருப்பிய விஜயா,“என்ன கண்ணு என்னோட சாமியைப் பத்தி இப்படிச் சொல்லிட்ட?” என்று மகனிற்காக வருத்தப்பட,

அதற்கு, பிரகாஷை அழுத்தமாகப் பார்த்தபடி,” அடிப்பட்டதை நினைச்சு நீங்க கவலைப்படக் கூடாதுன்னு நிறைய பொய் சொல்லி நல்லா நடிச்சு உங்களை ஏமாத்தியிருக்கார் உங்க மகன், போலீஸ்க்காரர்..அதைத் தான் சொன்னேன்” என்றவள் ‘போலீஸ்க்காரன்’ என்ற வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தாள்.