அத்தியாயம் – 19-1

அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா.

“யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில் சென்றிருக்குமோ, சரக்கை அடுக்கி முடித்திருந்த சோட்டூ,”தீதி.” என்று அழைத்து சினேகாவிடம் ஒரு காகிதத்தை நீட்ட, அதில் கையொப்பம் போட்டு, கல்லாவைத் திறந்து அதிலிருந்து சில நோட்டுக்களை எடுத்து அவன் கையில் வைக்க,’நன்றி தீதி” என்று பெரிதாக புன்னகையோடு வெளியேறினான அந்தச் சிறுவன்.

எற்கனவே சிறியதாக இருந்த கடை இப்போது மிகவும் சிறியதாக, ஒற்றையடி பாதையாக மாறியிருந்தது. ஒரு பண்டலில் பத்து உருப்படி என்ற எண்ணிக்கையில் கிட்டதட்ட  இருபத்தைந்து பண்டல்கள் சுவரையொட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கண்ணைக் கவரும் நிறத்தில், கல், முத்து வேலைப்பாடோடு இருந்த துணியைப் பார்த்து,”இதெல்லாமும் சுடிதார் செட்டா?” என்று விசாரித்தார் விஜயா. அதைப் பார்த்தவுடன் அவரது மனத்தில்,  பிரகாஷ் மூலம் ஜெயந்தி, வசந்தி இருவருக்கும் சுடிதார் செட் வாங்கி அனுப்பினாலென்ன என்ற எண்ணம் வந்திருந்தது.

“இல்லை ஆன்ட்டி..லெஹங்கா சோளி..நவராத்திரி வருதில்லே புது சரக்கு வரவழைச்சிருக்கோம்.” என்றாள்

“நவராத்திரிக்குன்னு தனியா டிரெஸ் விக்கறீங்களா?’ என்று அப்பாவியாக கேட்ட விஜயாவிற்கு தெரியவில்லை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று வாரத்தின் ஒவ்வொரு தினத்திற்கும் கூட தனி தனி உடை வகைகள் விற்பனைக்கு இருக்கிறதென்று.

அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தவள்,”முதல்லே நவராத்திக்கெல்லாம் இந்த மாதிரி புதுசு புதுசா யாரும் வாங்க மாட்டாங்க ஆன் ட்டி…கிராண்ட்டா இருக்கறதை உடுத்திப்பாங்க..இப்போ அப்படியில்லை..ஒவ்வொரு வருஷமும் புது டிசைன் அறிமுகப்படுத்தறாங்க..அதைத் தான் போட்டுக்க விரும்பறாங்க..ஒவ்வொரு பில்டிங்லேயும் நவராத்திலே டைம்லே கர்பா, டாண்டியா நைட் நடக்குது..எத்தனை வாங்கினாலும் பத்த மாட்டேங்குது..அதனாலே செட்டா வாங்கறது கிடையாது..இதிலே ஸ்கர்ட், டாப் தனி தனியா இருக்கு..மிக்ஸ் மேட்ச் செய்துக்கலாம்..சூரத்லேர்ந்து வரவழைச்சு இருக்கோம்..காட்டன், சிந்தடிக் இரண்டும் இருக்கு..விலை அதிகம் இல்லை..சிம்பிலா சொல்லணும்னா நம்ம ஊர் பாவாடைச் சட்டை தாவணி ஆன்ட்டி.” என்றாள் சினேகா.

“பாவாடை தாவணி செட்டா? அது சரிப்பட்டு வராது.” என்றார் விஜயா.

“யாருக்கு?” என்று விசாரித்தாள் சினேகா.

“என்னோட அக்கா மகள்களுக்கு..இரண்டு பேருக்கும் முப்பத்தி நாலு வயசாகுது..சாமி எனக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்கான்னு கேள்விப்பட்டவுடனே இரண்டு பேரும் எங்களுக்கு இல்லையான்னு கேட்டு மனசு வருத்தப்பட்டாங்க..இதெல்லாம் பார்த்ததும் சுடிதார்ன்னு நினைச்சிட்டேன்..இவன்கிட்டே கொடுத்து விட்டா நாலு நாள்லே அவங்கிட்டே போய்ச் சேர்ந்திடும்..வசந்திக்குக் கொஞ்சம் தையல் வரும்..வீட்லே தையல் மிஷின் இருக்கு..அவளுக்கு மட்டும் தைச்சுக்குவா..அதுக்கே அவ புருஷன் ஏதாவது சொல்லுவான்..ஜெயந்தி வெளிலே கொடுத்து தைச்சுக்குவா.” என்றார் விஜயா.

அதற்கு சினேகா பதிலளிக்கும் முன்,”அத்தை, நித்யாவுக்கு வாங்கலாமே.” என்றான் பிரகாஷ்.

அதைக் கேட்டு விஜயாவின் மனத்தில் மகா அக்கா தான் ஆவேசமாகத் தரிசனம் அளித்தார். ’நீ நித்யாவுக்கு தான் வாங்கித் தருவ..உனக்கு அவ மேலே பிரியம் ஜாஸ்தி..ஜெயந்தி, வசந்திக்கு வயசாகிடுச்சுன்னாலும் சிந்துக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாமே.’ என்று கண்டிப்பாக பிரச்சனை செய்வார். இது போல் உடையை அவர் தான் நித்யாவுக்கு வாங்கிக் கொடுத்தார் என்று தெரிந்தால் அக்காவை விட பெரிய பிரச்சனை செய்வார் மீனா அண்ணி என்பதால்,”என் மருமகளுக்கு எப்படி இந்த மாதிரி வாங்கிக் கொடுத்தேன்னு உங்கம்மா ஏதாவது சொல்லப் போறா டா..வேண்டாம்” என்றார் விஜயா.

அவனைப் பற்றி சினேகாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயம் விழ வேண்டும் என்ற எண்ணத்தில்,”என் மனைவிக்கு நான் வாங்கிக் கொடுக்கப் போறேன்..அதிலே அவங்க என்ன பிரச்சனை செய்ய முடியும்? ஜெய்ப்பூர்லேர்ந்து குர்த்தி வாங்கிட்டு வரச் சொல்லியிருந்தா நித்யா..அங்கே எனக்கு நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ இங்கேயிருந்து ஒரு லெஹங்கா செட் வாங்கிட்டுப் போயிடறேன்.” என்றான் பிரகாஷ்.

சற்று முன் அவள் செய்த பிரார்த்தனைக்கு உடனே கடவுள் பதில் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில்,”சொல்லுங்க சர்..அவங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்.” என்று முதல் போனிக்குத் தயாரானாள் சினேகா.

பத்து நிமிடங்களில் பல லெஹங்கா செட்டைப் பிரித்து காட்டி சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் சினேகா. இளம் சிகப்பு, மஞ்சள், பச்சை, அடர் சிவப்பு, பச்சை, நீலம் என்று அனைத்து வண்ணங்களிலும் அழகான வேலைப்பாடோடு பார்த்தவர்  மனத்தைக் கவர்ந்திழுத்தன. அடுக்கி வைத்திருந்ததிலிருந்து, மயில் இறகு டிசைனில் ஒரு லெஹங்கா செட்டை கொண்டு வந்து கௌண்டர் மீது வைத்தான் பிரகாஷ். அதுவரை வாய் ஓயாமல் ஒவ்வொரு செட்டின் விலை, நிறம், தரம் என்று அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொண்ட சினேகா அந்த செட்டைப் பார்த்து அமைதியானாள்.

“என்ன கண்ணு?” என்று விசாரித்தார் விஜயா.

“ஆன்ட்டி இது வேற விதமான பாவாடை சட்டை செட்டு.” என்று அவருக்குப் பதிலளித்தவள், பிரகாஷிடம்,”இது க்ராப் டாப் லெஹங்கா..இரண்டு பீஸ் செட்..உங்க மனைவி இந்த மாதிரி உடை போடுவாங்களா? என்று அந்த செட்டின் பாவாடையை விரித்து கௌண்டர் மீது போட்டு அதன் மேல் பகுதியின் சட்டையை வைத்தாள். மிகவும் அழகாக இருந்தது அந்த உடை. அதே சமயம் சினேகாவைப் போலவே அந்த மாதிரி உடையை நித்யா அணிந்து கொள்வாளா? என்ற சந்தேகம் பிரகாஷுக்கும் வந்தது. 

அந்த அழகான உடையைத் தொட்டுப் பார்த்த விஜயா,”துணி மிருதுவா நல்லா இருக்குது..அவளோட கலருக்கு இந்தக் கலர் நல்லா இருக்கும் டா.” என்று பிரகாஷிடம் சொல்ல, “அத்தை இந்த செட்டுக்கு தாவணி கிடையாது.” அவன் சொல்ல, “ஐயோ அப்போ வேணாம் டா.. மாராப்பு இல்லாம எப்படி? அவளுக்கு அசௌகர்யமா இருக்கும்.” என்று அவரது மறுப்பை தெரிவித்தார்.

“ஆன்ட்டி, டிரெஸ்ஸெல்லாம் அவங்க அவங்க சொந்த விஷயம்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்..பொண்ணுங்க அவங்களுக்கு  கம்ஃபர்டபிலா இருக்கற டிரெஸ் தான் போடணும்.” என்றாள்.

அடுத்த நொடி நித்யாவிற்கு காணொளி அழைப்பு விடுத்தான் பிரகாஷ். அலுவலகத்தில் இருந்ததால் சில நொடிகள் கழித்து அவளே அவனை அழைத்தாள். கொஞ்சம் போல் அன்று காலையில் நடந்தவைகளை அவளிடம் பகிர்ந்து கொண்டு, துணிக் கடையில் இருப்பதை அவளுக்கு தெரிவித்து, பின் பக்கக் கேமராவை உயிர்ப்பித்து, கௌண்டர் மீதிருந்த லெஹங்கா செட்டை காண்பித்தான். பிரகாஷின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவிற்கு ஏதோ உறுத்தியது. அது என்னயென்று அவள் ஆராயும் முன்,”இல்லை ப்பா..என்னாலே இதைப் போட்டுக்க முடியாது…இதே கலர்லே துப்பட்டாவோட வேற காட்ட சொல்லுங்க.” என்று பிரகாஷிடம் சொன்னாள் நித்யா.

உடனே அதே கலரில் சில லெஹங்கா செட்டுக்களை வேகமாக பிரித்து, விரித்து சினேகா வைக்க, அவளுக்குப் பிடித்தமானதை தேர்ந்தெடுத்த நித்யா, சினேகாவிற்கு ஒரு பெரிய நன்றியைக் கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டாள்.

அப்போது வீட்டுக்கும் கடைக்கும் இடையே இருந்த கதவைத் திறந்து லேசாக எட்டிப் பார்த்த மனோகர்,”சினேஹ்..கிவ் மீ ஃபூ மினிட்ஸ்..ஷிக்காவோட பேசிட்டு வரேன்.” என்று சினேகாவின் எதிர்வினைக்கு காத்திருக்காமல் போய் விட்டான். மனோகரின் குரல் தான் அங்கே இருந்தவர்களுக்கு கேட்டது அவனது முகத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவனும் தங்கையின் முகத்தைக் கூட பார்க்காமல் தகவல் மட்டும் கொடுத்து விட்டு கதவை மூடிக் கொண்டான்.

நித்யா தேர்ந்தெடுத்தைத் தனியாக எடுத்து கேஷ் கௌண்டர் மீது வைத்த சினேகா அதற்கான பில்லைத் தயாரிக்க நாற்காலியில் அமர்ந்த போது தான் இன்னமும் அவரின் துணியைத் தரவில்லை என்று உணர்ந்த விஜயா, ”கண்ணு, நேரமாகிடுச்சு ம்மா..வீட்டுக்குப் போய் சமைக்கணும்..சாப்டிட்டு இவன் ஜெய்ப்பூர் போகணும்..என்னோட துணி எங்கேம்மா?” என்று கேட்டார்.

அதற்கு மேல் அதை தேடும் பொறுமை சினேகாவிற்கும் இருக்கவில்லை. “இதோ ஆன்ட்டி..எங்கே இருக்குதுன்னு அம்மாகிட்டே கேட்கறேன்.” என்று ஜோதிக்கு காணொளி அழைப்பு விடுத்தாள். இரவு முழுவதும் தூங்காததால் உறங்கிக் கொண்டிருந்தவர் சில நொடிகள் கழித்து தான் அழைப்பை ஏற்றார். விரிந்திருந்த கூந்தலைக் கொண்டையில் அடக்கியபடி,”என்ன டீ? சரக்கு வரலையா? ஏதாவது பிரச்சனையா? இன்னும் கடைலே இருக்க?” என்று கேட்டார்.

“மனோகருக்காக வெயிட்டிங்..ஷிக்காவோட பேசிட்டு இருக்கான்..சரகெல்லாம் வந்திடுச்சு ம்மா..கடைலே தான் அடுக்கி வைச்சிருக்கு..அறையோடு சாவியை தூக்கிட்டு ரோஹினிக்குப் போயிட்டார் அந்த அங்கிள்.” என்று சொன்னவள், அப்படியே அவளது கைப்பேசியின் பின் பக்கக் கேமராவை உயிர்ப்பித்து, சுவரோடு அடுக்கி வைத்திருந்த சரக்கை ஜோதிக்குக் காட்டினாள்.

”எதுக்கு டீ இவ்வளவு ஆர்டர் செய்திருக்கா?” என்று கேட்க, சரக்கருகே நின்றிருந்த பிரகாஷைக் கைப்பேசி திரையில் பார்த்த சினேகாவிற்கு அவளது உறுத்தலுக்கான தீர்வு கிடைக்க, சற்றுமுன் பிரகாஷ் கொடுத்த பதிலில் புதைந்திருந்தது மூளையில் அறைய, கேமரா வழியாக பார்க்காமல் நேரடியாக அவனை கோபத்துடன் அவள் நோக்க, ஒரு நொடி குழம்பிப் போனவன் அடுத்த நொடியே அவளது கோபத்திற்கான காரணம் புரிய,’ஐயோ மாட்டிக்கிட்டேனே’ என்று உணர்ந்தவனுக்கு அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடையில் இருந்த விஜயா, கைப்பேசி திரையில் இருந்த ஜோதி இருவருக்கும் சினேகாவிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் தெரியவில்லை.

“அம்மா, நேத்து ஆறு செட் சல்வார் ரெடி செய்திருக்கா ஷிக்கா..அதை எங்கே வைச்சிருக்கா? டெலிவரி எடுக்க ஆள் வந்திருக்காங்க.” என்றாள்.

சில நொடிகள் யோசித்தவர்,”மதராஸி ஆன்ட்டியோடதா?” என்று கேட்க, 

“ஆமாம் ம்மா.” என்றாள்.

“கௌண்டர் கோடிலே இருக்காண்ணு பார்..ப்ரேஸ் போட்டு முடிச்சதும் அங்கே தான் இருந்திச்சு..ஒரு கவர்லே போட்டு வைச்சிட்டு அவங்களுக்கு ஃபோன் செய்தேன்..அழைப்பை எடுக்கலை.” என்றார் ஜோதி.

கௌண்டரின் கோடியில் துணிகள் குவிந்து கிடந்தன. அங்கே சென்ற சினேகா,”இங்கேயா அம்மா?” என்று கேட்க,

“ஆமாம்..அடிலே ஒரு கவர் தெரியுது பார்..அதுதான்னு நினைக்கறேன்.” என்று சொல்ல, அதை வெளியே இழுத்து, திறந்து பார்த்தவள்,”அதேதான் ம்மா..தாங்க்ஸ் ம்மா..நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க..மதியம் மறக்காம மாத்திரை போட்டுக்கோங்க..நான் வீட்டுக்கு வர எப்படியும் சாயங்காலம் ஆகிடும்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

கவரை கொண்டு போய் கேஷ் கௌண்டர் மீது வைத்து விட்டு,”எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.” என்று கடுமையான குரலில் சொன்னவள் வேண்டுமென்றே ஆன்ட்டி என்ற வார்த்தையை அந்த வாக்கியத்திலிருந்து கட் செய்தாள்.

அவளது குரலில் தெரிந்த பேதம் விஜயாவைப் போய் சேர, அவளுடைய அம்மாவுடனான உரையாடலைக் கேட்டிருந்ததால், அவரின் உடல் நிலையைப் பற்றிய கவலையில் அப்படிப் பேசுகிறாள் என்று எண்ணி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கவரைத் திறந்து உருப்படிகளை எண்ண ஆரம்பித்தார்.

அப்போது, திடீரென்று, அதே குரலில்,”உங்க மகன் எப்படி இருக்காங்க ஆன்ட்டி?” என்று விசாரித்தாள் சினேகா.

அவன் செய்த வேலையில், அவனுடைய கேரெக்ட்டர் தான் கேள்விக்குறியாகும் என்று எண்ணியவனுக்கு அந்தக் கேள்வியில் டேமேஜானது வேலுவின் கேரெக்டர் என்று புரிய, அதை எப்படிச் சரி செய்வதென்று பிரகாஷிற்குத் தெரியவில்லை.