அத்தியாயம் – 19

பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு கடினமானதை சினேகாவிடம் தள்ளியிருந்தான் மனோகர். அவளுடைய மடிக்கணினியோடு கல்லாவில் போய் அமர்ந்து கொண்ட சினேகா, முந்தைய தினத்தின் ரசீதுகளை ஒரு பக்கம் தனியாக எடுத்து வைத்து விட்டு மடிக்கணிக்கு இடம் ஏற்படுத்திக் கொண்டாள். அதை உயிர்ப்பித்தவள் அப்படியே கண்களை மூடி,’இன்னைக்கு வியாபாரம் நல்லா இருக்கணும்,’ என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் விஜயாவும் பிரகாஷும்.

கண்களைத் திறந்தவுடன் விஜயாவின் தரிசனத்தில் மலர்ந்த சினேகாவின் முகம் அவருக்குப் பின்னால் வந்த பிரகாஷைப் பார்த்து, ‘ஓ ஆன்ட்டியோட இன்னொரு மகனா இவங்க.’ என்ற தவறாக அனுமானம் செய்து கொண்டாள். ‘இரண்டு மகனும் ஆன்ட்டியோடு ஜாடை இல்லை. அவங்க வீட்டுக்காரர் ஜாடை போல..ஆனா இவங்க மொத்தமா வேற மாதிரி இருக்காங்க’ என்று மனது கண்டபடி யோசனை செய்ய,’இன்னைக்கு உனக்கு இண்டர்வியு இருக்கு..அதைப் பத்தி யோசி..அந்த ரைட் அப்புக்கு பதில் வந்திச்சான்னு பார்.’ என்று அவளது எண்ணங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள்,

“குட் மார்னிங் ஆன்ட்டி..வாங்க..வாங்க.” என்று பளிச்சென்ற சிரிப்போடு விஜயாவை வரவேற்று, அப்படியே மடிக்கணினியில் அவளது மின்னஞ்சல் பக்கத்திற்கு சென்றாள். விஜயாவின் பின்னால் நின்றிருந்த பிரகாஷின் புறம் அதற்கு பின் பார்வையைத் திருப்பவில்லை.

‘நல்லவேளை நம்மளைத் நேரடியாப் பார்க்கலை.’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் அப்படியே அவனது பார்வையைக் கடை மீது திருப்பினான்.

“கண்ணு..நான் தைக்க கொடுத்த துணி தயாரா இருக்குன்னு உன் அண்ணிகிட்டேயிருந்து தகவல் வந்திச்சு..இவனை குருவாயூரப்பன் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு அப்படியே துணியை வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்..இவன் என் அண்ணனோட மூத்த மகன்..பிரகாஷ்.” என்று பிரகாஷை அறிமுகம் செய்து வைத்தார் விஜயா. 

“ஓ” என்று சொன்னவள், ‘அண்ணனோட மகன் அதான் முகஜாடை வேற மாதிரி இருக்குது’ என்று எண்ணியவள் அப்படியே பார்வையைப் பிரகாஷ் புறம் திருப்ப, அவனும் லேசாக அவளைப் பார்த்து தலையசைத்தான். 

’ஒரு நிமிஷம் ஆன்ட்டி வெயிட் செய்யுங்க..எடுத்துக் கொடுக்கறேன்’ என்று விஜயாவிடம் சொல்லி விட்டு அவளது மின்னஞ்சல்களை அலசியவளின் கண்களில் ஆடடை வடிவமைப்பாளிடமிருந்து மெயில் எதுவும் தென்படவில்லை. உடனே ஜங்க் ஃபோல்டருக்கு சென்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்த போது எல்லாம் குப்பை என்று உணர்ந்த மனது சோர்ந்து போக, அதை மறைத்துக் கொண்டு, உதட்டில் ஒரு புன்னகையை ஓட்டிக் கொண்டு,

“இப்போ தான் கடையைத் திறந்தோம் ஆன்ட்டி..நேத்தோட கணக்கு, வழக்கு டேலி செய்யணும்..கஸ்டம்ருக்கு எடுத்துப் போட்ட துணியெலாம் கௌண்டர்லே அப்படியே இருக்கு பாருங்க..இனி தான் மடிச்சு அந்தந்த இடத்திலே அடுக்கி வைக்கணும்.” என்று பேசியபடி கேஷ் கௌண்டரின் கீழே அடுக்கி வைத்திருந்த கவர்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க, விஜயாவின் துணி அதில் இல்லை. ‘எங்கே வைச்சிருக்கா ஷிக்கா?’ என்று யோசனை செய்தபடி எழுந்தாள்.

அப்போது தான் சினேகாவின் உடையைக் கவனிதார் விஜயா. முதல்முறை அவளைப் பார்த்த போது புது விதமான உடை அணிந்திருந்தவள் இன்று சின்ன குழந்தைகள் அணியும் ஃப்ராக் அணிந்திருப்பதை அதிசயமாகப் பார்த்தார்.’எப்படி இந்தப் பொண்ணாலே இந்த உடைலே இப்படி அழகாப் பொருந்திப் போக முடிஞ்சது?’ என்று ஆச்சரியப்பட்டார். இன்று அவளது முகம், கை, கால் அனைத்தும் ஒரே நிறம், மா நிறம் என்று சந்தேகமில்லாமல் தெரிந்தது. அந்த உடையில் அவளது மென்மை, பெண்மை எந்த அளவிற்கு வெளிப்பட்டதோ அதை விட அதிகமாக அவளது தன்னம்பிக்கை, துணிவு, உறுதிப்பாடு வெளிப்பட்டது. எந்த நோக்கத்தோடு அந்த உடையை அணிந்திருந்தாளோ அந்த நோக்கம் மிகத் தெளிவாக போய் சேருகிறது என்று விஜயா வெளிப்படுத்தியிருந்தால் அவரைக் கட்டித் தழுவி அவளது நன்றியைத் தெரிவித்திருப்பாள்.

விஜயாவின் ஆராய்ச்சிப் பார்வையை உணர்ந்திராத சினேகா, கொஞ்சம் போல் எம்பி, நேர் மேலே அலமாரி தட்டில் இருந்த சில கவர்களை எடுக்க முயன்றபடி,”இதிலே இருக்கணும் இல்லைன்னா அம்மாக்கு ஃபோன் செய்து விசாரிக்கறேன்..நேத்து முழுக்க அம்மா கடைலே தான் இருந்தாங்க..எங்கே வைச்சிருக்காங்கண்ணு அவங்களுக்குத் தெரியும்.” என்றாள்.

அதற்கு,“உன் அண்ணிக்கு ஃபோன் போட்டு கேளும்மா..அவ தான் என் மகன்கிட்டே பேசினா.” என்றார் விஜயா.

ஏற்கனவே மூட் அவுட்டாக இருக்கும் ஷிக்காவிற்கு ஃபோன் செய்தால்,’உன் அண்ணனைக் கேளு.’ என்று அவனுக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில் மனோகரைச் சம்மந்தப்படுத்தி புதிதாக ஒரு சண்டையை ஆர்மபித்து வைப்பாள் என்பதால் அந்தத் தீர்வு காதில் விழுந்தது போல் காட்டிக் கொள்ளாமல் தேடுதலைத் தீவிரப்படுத்தினாள். 

அப்போது வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த விடலைப் பையன் ஒருவன், பிரகாஷையும் விஜயாவையும் நோட்டம் விட்டபடி,”தீதி, சரக்கு எடுத்திட்டு வந்திருக்கேன்..எங்கே வைக்கறது?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு அவளது தேடுதலை நிறுத்தி விட்டு, அவன் புறம் திரும்பியவள், இடுப்பில் கைகளை வைத்து, கோபத்தோடு, கடுமையான குரலில்,“ ஏன் எனக்கு ஃபோன் செய்யலை..இப்படி திடுதிடுப்புனு வந்து நிக்கற? கடை பக்கத்திலே வண்டி வந்ததும் தகவல் கொடுக்கணும்னு உன் முதலாளிகிட்டே சொன்னேனில்லே.” என்று கேட்டாள்.  

“எங்க ஃபோன்லே சார்ஜ் இல்லை தீதி..எப்படிக் கூப்பிட முடியும்? வந்திட்டு இருக்கோம்னு காலைலேயே  சொல்லிட்டோமில்லே.” என்று அவன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான்.

அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததால்,“கொஞ்சம் வெயிட் பண்ணு.” என்று அவனிடம் சொன்னவள், அதே போல் விஜயாவிடமும்,”ஆன்ட்டி ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க.” என்று அனுமதி கேட்டுக் கொண்டாள்.

பேக்கெட்டில் இருந்த அவளது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவள்,”அங்கிள் ஜி.” என்று ஆரம்பித்து ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து தணிவான குரலில் உரையாடினாள். அதன் பின்,”ஜி..ஜி..” என்ற ஒரே வார்த்தையைப் பதிலாக அளித்தவள், முடிவில்,”இல்லைன்னு சொல்லலையே அங்கிள்..அவன் சூரத்லேர்ந்து வர்றான்..பக்கத்திலே வந்த பிறகு ஃபோன் செய்தா தான் நம்ம டைம் வேஸ்ட் ஆகாதுன்னு நீங்க சொன்னதை சொல்லி வைச்சிருந்தோம்..இன்னைக்கு அவன் ஃபோன்லே சார்ஜ் தீர்ந்து போயிடுச்சாம்..இப்போ கடைலே வந்து நிக்கறான்..நீங்க ரோஹினிலே இருக்கீங்க.” என்றாள். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை,”இன்னைக்கு என் நேரம் சரியில்லை டா சோட்டூ.” என்று நொந்து கொண்டவள்,”சரக்கைக் கொண்டு வந்து கடை உள்ளேயே சுவரோரமா அடுக்கி வைச்சிடு.” என்றாள்.

அவன் வெளியே சென்றவுடன்,”ஆன்ட்டி கொஞ்சம் உள்பக்கமா போயிடுங்க..புது சரக்கு வந்திருக்கு..மாடிப்படி கீழே இருக்கற அறையோட சாவியை எடுத்திட்டு செக்ரெட்டரி அங்கிள் வெளியே போயிட்டார்..இப்போ அதை சுவர் ஓரமா தான் அடுக்கி வைக்கணும்.” என்றாள் சினேகா.

கடையின் வாயில் அருகே இருந்தவர்கள் அப்படியே உள்பக்கமாக நகர்ந்தனர். விஜயாவைத் தொடர்ந்து உள்ளே வந்த பிரகாஷ் சும்மா இருக்காமல்,”கடை திறக்கறதுக்காக ஏற்கனவே அரைமணி நேரம் வெளியே காத்திருந்தோம்..இன்னும் லேட்டாகுமா? ” என்று வாயை விட்டான்.

அதைக் கேட்டவள், விஜயாவிடம்,”வெளியே ரொம்ப நேரம் வெயிட் செய்திட்டு இருந்தீங்களா? உங்களை நான் பார்க்கலையே ஆன்ட்டி..இவங்களைத் தான் பார்த்தேன்.” என்றாள்.

“ஆமாம் கண்ணு..கிருஷ்ணர் கோவில்லே தரிசனத்தை முடிச்சிட்டு பத்து மணி போல இங்கே வந்திட்டோம்..கடை மூடியிருந்திச்சு..இவன் வெளியே சுத்திட்டு இருந்தான், நான் கார் உள்ளே உட்கார்ந்திருந்தேன்..ஒரு பத்து நிமிஷம் அப்படியே கண் அசந்திட்டேன்..அதான் நீ வந்ததை நான் பார்க்கலை..விழிப்பு வந்ததும் கடையைத் தான் பார்த்தேன் அப்போவும் மூடி இருந்திச்சு..என்ன டா இன்னும் திறக்கலையேன்னு யோசனை செய்திட்டு இருந்த போது தான் ‘கடையைத் திறக்க அந்தப் பொண்ணு வந்து கொஞ்சம் நேரமாகிடுச்சு ஆனா இன்னும் ஏன் கடையைத் திறக்கலைன்னு தெரியலைன்னு’ இவன் சொன்னான் அதனாலே..” என்று சொல்லிக் கொண்டிருந்த விஜயாவை இடைமறித்து,

“இவரை நான் மீட் பண்ணினதில்லையே..கடையைத் திறக்க தான் வந்திருக்கேன்னு இவருக்கு எப்படித் தெரிஞ்சுது ஆன்ட்டி?” என்று கரெக்ட்டான கேள்வியைக் கேட்டாள் சினேகா.

அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன பிரகாஷ்,’ஐயோ இந்த அத்தை இப்படி யோசிக்காம பேசி நம்மை மாட்டி விட்டிட்டாங்களே’ என்று மனத்திற்குள் அலறியவன், எப்படிச் சமாளிப்பது என்று தடுமாற்றத்துடன் அவளை நோக்க, அவளோ,’என்ன மாதிரி ஆள் இவன்?’ என்ற யோசனையோடு பிரகாஷைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கதவை திறந்து கொண்டு கையில் சரக்குடன் உள்ளே வந்த சோட்டூ அதை சுவரோரமாக அடுக்கி வைக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்து என்று கேட்டருகே நிற்க வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து அவன் சரக்கை எடுத்து வந்து அடுக்க அதன் எண்ணிக்கையை மனத்தில் குறித்தபடி இருந்தாள் சினேகா.

அவளுடைய மனத்தில் அவனைப் பற்றி தவறான அபிப்பிராயம் விழும் முன், அவளின் கேள்விக்கு விஜயா பதிலளிக்கும் முன்,“வேலு சொன்னான்.” என்றான் பிரகாஷ்.

புருவங்களை மட்டும் உயர்த்தி,“வேலுவா? யார் அது?” என்று அவள் கேட்க, மீண்டும் ஒரு பண்டலோடு உள்ளே வந்தான் சோட்டூ.

அதில் கொஞ்சம் போல் கவனம் சிதறிப் போன பிரகாஷ், முன்பக்க கேமராவிலிருந்து பின்பக்கக் கேமராவிற்கு மாறி விவரத்தை வெளியிடாமல் எப்படி அந்த உரையாடலைச் சரியான பாதையில் எடுத்துச் செல்வது என்று யோசித்தவன், சில நொடிகள் கழித்து,“ஷண்முகவேல்..நீங்க நடந்து வந்திட்டு இருந்த போது நானும் அவனும் வீடியோ கால்லே பேசிட்டு இருந்தோம்.” என்று பதிலளித்தான்.