அத்தியாயம் – 18-1

அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளும் அதிகரித்திருந்தன. அன்பை விழுங்கும் சக்தி அவைகளுக்கு இருந்தன. அது நிகழாமல் இருக்க இருவரும் சம அளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. உடலளவில் சோர்ந்து போயிருக்கும் நாள்களில் தான் அவனுக்கான ஓய்வைத் தேடுகிறான். நேற்றிரவு அது போல் ஓர் இரவு. வெகு நாள்கள் கழித்து நேற்று இரவு தான் நன்றாக உறங்கியிருந்தான். அவனது அந்தச் செய்கையால்  தங்கை பாதிக்கப்பட்டது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. அவளின் கோவம் புரிந்தது. அதில் இருந்த நியாயம் அவனைச் சுட்டது. 

செல்வம் மாமாவின் மகளுக்குக் கல்யாணம் என்ற செய்தி அவனுக்குப் புதியது. சினேகாவை விட இரண்டு வயது இளையவள் வனிதா. எனவே,“வனிதாவுக்கா கல்யாணம்?” என்று கேட்டான்.

“நிச்சயம் நடந்திருக்கு..அதிலே தான் இவ்வளவு பிரச்சனையும்.” என்றாள் சினேகா.

“எப்படி அம்மாக்குத் தகவல் கொடுக்காம நிச்சயத்தார்த்தம் செய்திருக்காங்க?” என்று கேட்டான்.

அதில் எரிச்சலடைந்த சினேகா,”நீயே ஃபோன் செய்து விசாரிச்சுக்கோ..அப்படியே அந்தக் கடனை எப்போ அடைப்பேன்னு அவங்களுக்கு தகவல் கொடுத்திடு.” என்று பதிலளிக்க, வாயைப் முடிக் கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டான் மனோகர்.

சில நொடிகள் கழித்து கையில் துடைப்பம், குப்பை அள்ளும் முறத்துடன் திரும்பியவன், வரவேற்பறை வழியாக கடைக்குச் சென்றான். கடையை கூட்டி முடித்து, குப்பையோடு வெளியே வந்தவன் அதைக் கொட்ட ஃபிளாட்டின் பின்பக்கம் சென்றான்.

இந்த நிகழ்வுகளில் பத்து நிமிடங்கள் போல் கடந்திருக்க, கடைக்கு வெளியே, கார் அருகில் விஜயா கண் விழிப்பதற்காக காத்திருந்தான் பிரகாஷ். ‘இப்போ தான் அஞ்சு நிமிஷமா கண்ணை மூடிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு இருக்காங்க மா ஜி.’ என்று அரைகுறை ஆங்கிலத்தில் பிரகாஷ் கேட்காமலேயே தகவலைப் பகிர்ந்து கொண்டான் அனிஷ்.

அவர்கள் இருவரும் கடையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். கடை மூடியிருந்தது. திறக்கட்டும் அதன் பிறகு அத்தையை எழுப்பலாமென்று பிரகாஷும் அமைதியாக காத்திருக்க ஆரம்பித்தான். காலையில் எப்போது ஷண்முகம் கிளம்பிச் சென்றான் என்று அவனுக்குத் தெரியவில்லை. எட்டரை மணி போல் எழுந்து வந்தவனிடம் அவரது ப்ரோக்ராமை விஜயா சொல்ல, அவசரமாக குளித்து, பூரி, மசாலவை உள்ளே தள்ளி, ஒன்பது மணி போல் வீட்டிலிருந்து புறப்பட்டிருந்திருந்தார்கள். வாகன நெரிசல் அதிகமாக இருந்தாலும் திறமையாக ஓட்டி கோவில் மூடும் முன் அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தான் அனிஷ். தரிசனத்தை முடித்துக் கொண்டு நேராக இங்கே வந்தனர். விஜயா அத்தையைக் காரில் உட்கார வைத்து விட்டு மெயின் ரோட்டை வேடிக்கை பார்த்தபடி ஷண்முகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தான் பிரகாஷ். முதல் அழைப்பு மிஸ் ஆகி விட, பிஸி போல என்று எண்ணிக் கொண்டான். 

அந்த சாலையில் நடைபயிற்சி கொண்டிருந்தவனை புழுதியும் புகையும் காம்பவுண்டு உள்ளே துரத்தி விட்டது.  கடையருகே நின்றிருந்த போது ஷண்முகம் காணொளி அழைப்பு விடுக்க, அதை ஏற்றவனிடம்,’ஏன் இங்கே நின்னிட்டு இருக்க’ என்று அவன் கேட்க, கடை திறக்காததால் அத்தை காரினுள்ளே அமர்ந்திருப்பதையும் தலை நகர்ப் பகுதியைச் சார்ந்த மக்களை வேடிக்கைப் பார்த்தபடி இவன் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதையும் அவனோடு பகிந்து கொண்டான். அது நடந்து சில நிமிடங்களாகி விட்டது. இப்போது மணி பத்தரையை நெருங்கி கொண்டிருந்தது. இன்னமும் கடை திறந்தபாடில்லை. அந்தக் கட்டிடத்தினுள் அந்தப் பெண் சென்று பத்து நிமிடங்கள் மேலாகியிருந்தது. ‘அந்த பொண்னோட கடைன்னு சொன்னான்..திறக்கறத்துக்கு இத்தனை நேரமா ஆகும்? இல்லை இது வேற பொண்ணா? வேலுக்கு அடையாளம் தெரியலையா?’ என்ற கேள்விகள் வர,’டேய் அவன் போலீஸ்காரன் டா..ஆளைப் பார்க்கமாலேயே சரியான ஆளைப் பிடிச்சு உள்ளே போட்டிடுவான்.’ என்று அவனே அவனின் கேள்விக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்த போது, கண் விழித்த விஜயா,”பிரகாஷ்” என்று அவனை அழைத்தார்.

பின்பக்கக் கதவருகே வந்தவன்,“இதுக்கு தான் விடியற்காலையெல்லாம் நான் எழுந்திருக்கறது இல்லை..இந்த மாதிரி நினைச்ச போதெல்லாம் ஆபிஸ்லே தூங்க விடுவாங்களா?” என்று அவரைக் கேலி செய்தான்.

‘என்ன டா இது தூங்கற நேரத்திலே கூட வீட்லே சுத்தமா தூக்கமே வராது..இங்கே கார்லே இந்த நேரத்திலே இப்படி தூங்கிப் போயிருக்கோம்’ என்று ஏற்கனவே சங்கடத்தில் இருந்தவர், பிரகாஷின் கேலியில்,“அரைமணி நேரம் தூங்கின மாதிரி பெரிசா பேசற..பத்து நிமிஷம் இருக்குமாடா?” என்று பொங்கினார்.

“கிட்டதட்ட அரைமணி நேரமாகப் போகுது அத்தை..அந்தப் பொண்ணு கடையைத் திறந்திருந்தா இதுக்குள்ளே துணியை வாங்கிட்டு வீடு போய் சேர்ந்திருப்போம்..அவ வந்து கால் மணி நேரமாகிடுச்சு இன்னும் கடையைத் திறக்கலை.” என்றான் பிரகாஷ்.

காரிலிருந்து இறங்கி வந்த விஜயா, அவரது புடவையை சரி செய்து கொண்டு, மறக்காமல் சீட்டில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக் கொண்டு,”எந்தப் பொண்ணு டா?” என்று கேட்டார்.

“அதான் அந்தப் பொண்ணு..நம்ம ஊர் பொண்ணு அத்தை..கடையைத் திறக்க தான் அவ வர்றான்னு வேலு சொன்னான்.” என்றான் பிரகாஷ்.

சினேகாவைத் தான் சொல்கிறான் என்று புரிந்தாலும், சினேகாவை எப்படி ஷண்முகம் பார்த்திருக்க முடியுமென்ற  கேள்வி வர,”அவன் தான் ஆபிஸ்லே இருக்கானே..எப்படி அவளைப் பார்த்தான்?” என்று கேட்டார்.

“ஃபோன் வழியா தான்..என்னோட வீடியோ கால்லே பேசிட்டிருந்தான் அத்தை..அப்போ இந்தப் பொண்ணு வந்திட்டு இருந்திச்சு.” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டவன், அந்தப் பெண்ணைப் பார்த்து வாய்ப் பிளந்ததை வெளியிடவில்லை. சினேகாவின் தோற்றத்தை வேலுவிடம் விவரிக்க முடியாமல், கைப்பேசியின் கேமராவைத் திருப்பியதால் தான் சினேகாவை அவன் பார்க்க முடிந்தது என்ற முக்கியமானத் தகவலைச் சொல்லவில்லை. இப்போது அதை நினைத்துப் பார்த்தவன், சில நிமிடங்களில் அவளை நேரில் சந்திக்கும் போது உறுத்துப் பார்க்காமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டுமென்று சபதம் எடுத்துக் கொண்டான்.

அதே நொடி, ஓசையுடன் கடையின் கதவை திறந்த மனோ,”நான் குளிச்சிட்டு, டிஃபன் சாப்டிட்டு வரேன்.அதுவரை கடையைப் பார்த்துக்க..உனக்கு எத்தனை மணிக்கு இண்டர்வியூ? எங்கே நடக்குது?” என்று சினேகாவிடம் கேட்டான்.

“மதியம் போல..எஸ் பி மார்க்லே இருக்கற ஹோட்டல்லே.” என்று ஹோட்டல் பெயரைச் சொன்னாள்.

அது ஓர் ஐந்து நட்சத்திர விடுதி என்பதால்,”எந்தக் கம்பெனியோட நேர்காணல்?” என்று கேட்டான் மனோகர்.

‘கம்பெனி இல்லை..தனி நபர்.” என்று இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஒருவரின் பெயரைச் சினேகா சொன்னவுடன்,”அவரா?” ஆச்சரியமடைந்தவன், மீண்டும் தங்கையை தலை முதல் கால் வரை அலசியவன்,”இந்த டிரெஸ்லேயா இண்டர்வியூக்குப் போகப் போற?’ என்று கேட்டான்.

“இந்த டிரெஸ் தான் கரெக்ட்டுன்னு முடிவு எடுக்க எப்படி மண்டையை உடைச்சுக்கிட்டேன் தெரியுமா? அப்புறம் கட்டிலுக்கு அடிலே ராஜாய்யோடு புதைஞ்சு கிடந்ததை எடுத்து நைட்டோட நைட்டா மெஷின்லே போட்டு துவைச்சு, இரண்டு முறை ஸ்பின் டிரை செய்து, ஃபேன் கீழே காய வைச்சு..இஸ்திரி போட்டு.” என்பதோடு நிறுத்திக் கொண்டாள். வெறும் உள்ளாடையில் அமர்ந்து இஸ்திரி போட இருந்ததை அவளுடனேயே வைத்துக் கொண்டாள். ஒரு மடிப்போ கசங்கலோ இல்லாமல் இஸ்திரி சூட்டோடு  உடுத்திக் கொண்டு, டிப்டாப்பாக புறப்படத் திட்டமிட்டிருந்ததெல்லாம் ஷிக்காவின் அலைப்பேசி அழைப்பில் தவிடுப் பொடியானது. 

வீட்டிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு நேரே ஹோட்டலுக்கு செல்லத் திட்டமிட்டிருக்க, இப்போது சரக்கை வாங்கி வைக்க கடைக்கு வந்திருந்தாள். இப்போது அவளது உடையில் ஆங்காங்கே சிறு சிறு மடிப்புகள், கசங்கல்கள் இருந்தன. பெல்ட்டில் அதிகமாக தெரிந்தது. இஸ்திரிப் பெட்டியை அமர்த்திய பின் பெல்ட்டை இஸ்திரி போட்டது தவறு என்று ஆளுயரக் கண்ணாடியில் அவளை முழுமையாகப் பார்த்த போது தான் புரிந்தது. பெல்ட்டும் அதே மெட்டீரியல் என்பதால் உடையை இஸ்திரி செய்யத் தேவைப்பட்ட அதே சூடு அதற்கும் தேவை என்று அவளது மூளைக்கு எட்டியிருக்கவில்லை.

ஒரு நீளமான நாடாக்கு இது போதுமென்று நினைத்ததால், அதிலிருந்த சுருக்கங்கள் இப்போது அவளது கண்களை உறுத்திக் கொண்டிருந்தன. ‘ச்சே..சின்ன விஷயம் தான் ஆனா நம்ம கண்ணை உறுத்தற போது அந்த ஆள் கண்ணையும் உறுத்தப் போகுது.’ என்ற எண்ணம் சோர்வைக் கொடுத்தது. சமீபக் காலமாக அவள் போடும் திட்டங்கள் அனைத்தையும் கடவுள் ஹைஜக் செய்து கொண்டிருப்பது எதற்காக என்ற கேள்வி எப்போதும் போல் இப்போதும் அவளது மனத்தில் வந்து அமர்ந்தது.

தங்கையை மேலும் கீழும் பார்த்த மனோகர்,”சினேஹ், சாதாரண டெனிம் டிரெஸ் இது.” என்று அவனது கருத்தை வெளியிட்டான்.

“எக்ஸாக்ட்லி….நான் என்ன எக்ஸிகியுட்டிவா பவர் டிரெஸ்ஸிங்லே இண்டர்வியு அட்டெண்ட் செய்ய..காப்பி எடிட்டர்கான வேலை..ஃபாஷன் பற்றின என்னோட கண்ணோட்டத்தை வார்த்தைலே சொல்லாம என்னைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்..நான் அழகா இல்லைன்னாலும் இந்த டிரெஸ் கிளாஸிக் பீஸ்..என்னோட எண்ணம், ரசனையை வெளிப்படுத்தற மாதிரி இருக்கு.” என்றாள்.

அழகு என்பதற்கு தில்லியின் டெஃபனிஷன் வேறு என்று தெரிந்ததால், அது ஒரு நாளும் அவனுடைய தங்கைக்குப் பொருந்தி வராதென்பதால், தங்கையின் விளக்கத்தைக் கேட்ட பின் தான் அந்த உடையில் அவளது ஆளுமையை உணர்ந்தவன், டக்கென்று அவளை அணைத்து,”நீ சொல்றது உண்மை..யு ஆர் லுக்கிங் ஆஸம் சினேஹ்.” என்றான்.

”தாங்க்ஸ் மனோ.” என்று அண்ணனின் பாராட்டை ஏற்றுக் கொண்டாள் தங்கை.

அதே நொடி, அதே தில்லியின் வேறோரு பகுதியில், அவளது தோற்றத்தை அல்யுரிங் (alluring) என்று வகைப்படுத்தியிருந்தான் ஒருவன்.