மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.
“வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது அவளது லேப் டாப் பேக்கை தொப்பென்று போட்டு விட்டு, வாசல் கதவிற்கு நேரெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலை முதல் கால் வரை தனது முழுத் தோற்றத்தைப் பார்த்தவள், இடுப்பு பெல்ட்டை ஏனோ தானொயென்று மாட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டாள். அதைச் சரியாக அணிந்து கொள்ள அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் அத்தனை கைப்பேசி அழைப்புகள். ஷிக்கா, வண்டி டிரைவர் இருவரிடமிருந்தும் ஓயாமல் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஒற்றைக் கையால் அதைச் சரி செய்ய முயற்சி செய்திருந்தாள். எப்போதும் அவளது இடதுக் கையில் அழகாக பொருந்திப் போகும் கைக்கடிகாரமும் இன்றைக்குப் பிரச்சனை கொடுத்தது.
கண்ணாடியிலிருந்து கவனத்தை திருப்பி, கைக்கடிகாரத்தை சரியாக கட்டிக் கொண்டவள் அறிந்திருக்கவில்லை பெல்ட்டை சரி செய்ய முயற்சி செய்த போது, அரை நொடிக்கும் குறைவான அவகாசத்தில் அவளது அந்தக் கைக்கடிகாரம் காவலனின் கவனத்தைக் கவர்ந்து விட்டதென்று. இடுப்பு பெல்ட்டை முழுவதுமாக நீக்கி, அதைச் சரியாக அனைத்து லூப்களிலும் நுழைத்து முன்பக்கம் கொண்டு வந்தவள், நிமிர்ந்து நின்று, மூச்சைப் பிடித்து வைத்து, கீழே குனிந்து பார்க்காமல் கண்ணாடியில் பார்த்தபடி,’இரண்டு வருஷத்திலே நிறைய வெயிட் போட்டிருக்கோம்..நாளைலேர்ந்து தினமும் ஜாகிங் போகணும்..இல்லைன்னா இந்த டிரெஸ்ஸை தூக்கிப் போட வேண்டியது தான்..ஒரு முப்பது வயசு வரையாவது வரும்னு நினைச்சோமே.’ என்று எண்ணியவள்,’அது இன்னும் பத்து வருஷம் கூட வரும்..நீ இதே மாதிரி அடுத்த வருஷம் இருப்பேயா மோட்டி (குண்டச்சி)?’ என்று தன்னைத் தானே கடிந்தபடி லேசாக வெயிட் போட்டிருந்த வயிற்று பகுதியை தடவிக் கொடுத்து அந்தப் பெல்ட்டை இடுப்பில் இறுக்கினாள்.
அவளுக்குப் பின்னால் கதவில் சாயந்தபடி நின்று கொண்டிருந்த மனோவின் தூக்கம் அழைப்பு மணி ஓசையில் பறந்து போயிருந்ததால், தங்கை அவளது தோற்றத்தில் செலுத்திய கவனம் அவனது மனத்தில் பதியவில்லை.
”எழுந்து வர மாட்டேனா? அப்படித் தொடர்ந்து அடிச்சிட்டு இருக்க..தூக்கம் மொத்தமா ஓடிப் போயிடுச்சு.” என்று அவளைக் கடிந்து கொண்டான்.
சன் கிளாஸஸைக் கழற்றி, நிதானமாக, டிரெஸ்ஸின் மார்புப் பகுதியில் சொருகிக் கொண்டு,”கொஞ்சம் ஒட்டிட்டு இருந்தா நீ அது பின்னாடியே ஓட்டிட்டு இருப்பேன்னு தானே விடாம அடிச்சிட்டு இருந்தேன்..போய் உன் ஃபோனைப் பார்..நானும் ஷிக்காவும் எத்தனை முறை உனக்கு ஃபோன் செய்திருக்கோம்னு நினைக்கற?” என்று நக்கலாக கேட்டாள்.
“ஷிட்” என்று சொன்னவன், வேகமாக படுக்கையறைக்குச் சென்று அவனுடைய கைப்பேசியோடு திரும்பினான். திரையில் தெரிந்த மிஸ்ட் கால் எண்ணிக்கையைப் பார்த்தவனுக்கு வாயிலிருந்து வார்த்தை வரவிலை. ஷிக்காவின் கோபத்தை நினைத்து பயமானது. காலைக் கடன்களை முடித்து விட்டு அவளோடு பேசலாமென்று முடிவு செய்து கைப்பேசியை அவனுடைய ஷார்ட்ஸ் பேக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
அப்போது அவளது லேப் டாப் பேக்கிலிருந்து ஒரு டப்பர்வேர் டிஃபன் பாக்ஸை சினேகா வெளியே எடுத்துக் கொண்டிருக்க, மனோகரின் வயிற் பசி என்று அலற,
“என்ன டிஃபன் இன்னைக்கு?” என்று தங்கையிடம் கேட்டு அவளது கோபத்தை விசிறி விட்டான்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டிஃபன் பாக்ஸை சமையல் அறையில் வைத்து விட்டுத் திரும்பியவள்,”போய் முதல்லே கடையைத் திற..லெஹங்கா சோளி செட் ஸ்டாக் வரப் போகுது..’உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை..அதான் அவ வாழ்க்கை இப்படி இருக்குன்னு ஷிக்கா என்கிட்டே கத்திட்டு இருக்கா. ஏன்னா என்கிட்டே கேட்டு தானே நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டேங்க, குழந்தை பெத்துக்கிட்டேங்க, குவாடர்ஸைக் காலி செய்திடு இங்கே வந்து கடை போட்டீங்க..
அம்மா எவ்வளவு டென்ஷன்லே இருக்காங்கண்ணு தெரியுமா? அந்தக் கடங்காரன் போய் வனிதா நிச்சயத்திலே அசிங்கமாக் கத்தியிருக்கான்..’சம்மந்தி வீட்டு ஆளுங்க முன்னாடி எங்களுக்கு தலை குனிவாப் போயிடுச்சு..உங்களாலே கடனை அடைக்கமுடியாதுன்னா இப்போவே சொல்லிடுங்க நானும் அண்ணனுமே மீதிக் கடனை அடைச்சிடறோம்..உன்னாலே எங்க மானம் போகுதுன்னு’ அம்மாவை செந்தில் மாமா பயங்கரமாப் பேசிட்டாங்க..அதைக் கேட்டதிலிருந்து ப்ரேஷர் ஏறி, தலை சுத்தி, வாந்தி எடுத்து இராத்திரி முழுக்க என்னைப் படுத்தி எடுத்திட்டாங்க அம்மா..
இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான இண்டர்வியூ இருக்கு..சாம்பில் ரைட் அப்பை ரெடி செய்ய விடியற்காலை மூணு மணி ஆகிடுச்சு..அதுக்கு அப்புறம் தூங்கப் போய் ஆறு மணிக்கு எழுந்து அம்மாக்கு கஞ்சி செய்து கொடுத்து, மதியத்துக்கு சமைச்சு வைச்சிட்டு வந்திருக்கேன்..இதுக்கு நடுவுலே நீ ஃபோனை எடுக்கலைன்னு ஷிக்கா வேற பத்து தடவை கால் செய்திட்டு இருந்தா..இன்னைக்கு சரக்கு வருதுன்னு உனக்கும் தெரியுமில்லே அப்புறம் ஏன் தூங்கிட்டு இருக்க..அலார்ம் வைச்சு எழுந்திருக்க வேண்டியது தானே..
நீ ஃபோனை எடுக்கலைன்னு வண்டிக்காரன் ஷிக்காக்கு ஃபோன் போட, அவ உனக்கு ஃபோன் போட, அதையும் நீ எடுக்கலைன்னவுடனே அவ எனக்குப் ஃபோன் போட்டு உன்னை அர்ச்சனை செய்ய, அதைக் காது கொடுத்து கேட்க முடியாம சரக்கை வாங்கி வைக்க உடம்பு சரியில்லாத அம்மா இங்கே வரத் தயாராகறாங்க..நான் போறேன்னு அவங்களைச் சமாதானம் செய்து, உனக்கும் சேர்த்து பிரேக்ஃபாஸ்ட் செய்து ஒரு முக்கியமான நேர்காணலை வைச்சுக்கிட்டு லெஹங்கா ஸ்டாக்கை ரிசீவ் செய்ய இங்கே வந்திருக்கேன்..நீ என்னென்னா ஒரு கவலையும் இல்லாம காலை பத்து மணி வரை நல்லா தூங்கிட்டுஎன்ன டிஃபன்னு கேள்வி வேற கேட்கற?” என்று கொட்டித் தீர்த்தாள் சினேகா.
இதே சினேகா தான் நேற்றிரவு இதே போல் அவனுக்காக அம்மாவுடன் வாதிட்டாள் என்று மனோகருக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அவனது காதலையும் திருமணத்தையும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டவள், பல தலைமுறைகளைக் கடந்த படைப்புக்களைப் பாடங்களாக கல்லூரியில் படிக்க, அது ஏற்படுத்திய தாக்கத்தில், வாழ்க்கை, மனிதர்கள் மீதான அவளது கருத்து, பார்வை மாறிப் போனது. சில நேரங்களில் அம்மாவிற்கு ஆதரவாக பேசுபவள் சில சூழ்நிலைகளில் ஷிக்காவிற்கு அவளது ஆதரவை அளித்திருக்கிறாள்.
அவருடைய மகன் என்று எப்போதும் மனோகருக்கு ஆதரவு அளிக்கும் ஜோதிக்கு ஷிக்காவை ஸப்போர்ட் செய்யும் மகளது செயல் புரிவதில்லை. தன்னுடைய மகள் தனக்கு தான் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பலமுறை சினேகாவிடம் சண்டை போட்டிருக்கிறார். மனிதர்களைப் பார்க்கும் விதம் மாறிப் போனதால் பிரச்சனைகளை சினேகா கையாளும் விதமும் மாறிப் போனது.பலரின் எழுத்துக்களைப் படித்து, அதை ஆராய்ந்து, அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அதில் அவளது பார்வையை கொண்டு வந்து, புது கோணத்தைக் கொடுத்து, முதுநிலைப் படிப்பில் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.பதிப்பகத் துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு அவளது அலசி, ஆராயும் திறமையை மெருகேற்றியபடி ஏட்டு சுரக்காயை நிஜத்தில் உபயோகித்து, அது அளித்த அனுபவப் பாடங்களினால் அவளும் மெருகேறிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாள்களாக மாண்ட்டியின் உடல் நலக் குறைவு காரணமாக நல்ல உறக்கம் இருக்கவில்லை மனோகருக்கு. கைப்பேசியின் அழைப்பு ஒலியைக் குறைத்து விட்டு உறங்கச் சென்றிருந்தான். ஷிக்காவிடமிருந்து தப்பிக்க இது போல் செய்வது வழக்கம். வேலை முடித்து வருபவனை உறங்க விடாமல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள். போதும் என்று சொல்லி விட்டால் அவ்வளவு தான். ‘காதலிக்கற போது மணிக்கணக்கா பேசிட்டு இரு இருன்னு கெஞ்சுவ..இப்போ அஞ்சு நிமிஷம் கூட என் பேச்சை கேட்க முடியலையா?’ என்று சண்டை பிடிப்பாள். அந்த மனநிலையைக் கொடுக்கும் சூழ்நிலைஇப்போது அவனுக்கில்லை இல்லை என்று ஏனோ ஷிக்காவிற்குப் புரியவேயில்லை.
ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் குழந்தை போல் அவள் அடம் பிடிப்பதை பல சமயங்களில் பொறுமையாக கையாண்டாலும் சில சமயங்களில் எரிச்சலடைந்தான் மனோகர். இன்றைக்கு, இப்போது இந்த நொடி, டபுள் ஷிஃப்ட்டில் உழைத்து விட்டு, களைப்பு மிகுதியால் கணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளாமல், அவனைப் பற்றி அவனுடைய அம்மா, தங்கையிடம் குறை சொன்னது அவனை வெகுவாகக் காயப்படுத்தியது. பக்கத்தில் தானே இருக்கிறாள், நேரில் வந்து இந்தப் பிரச்சனையை அவர்களுக்குள் முடித்திருக்கலாமே என்று அவனுக்குத் தோன்றியது.