அத்தியாயம் – 17

விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத் திறந்தான்.

பெரிதாக புன்னகை சிந்தியபடி,“என்ன அத்தை என்னைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியாகிட்டே? போலீஸ் வீட்லே தலைமறைவா இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேயா?” என்று கிண்டல் செய்தபடி வீட்டினுள் நுழைந்தவனின் முதுகில் ஓர் அடி போட்டு,”இப்படி திடீர்னு வந்து நின்னா அதிர்ச்சியாக மாட்டேனா? யார் தலைமறைவா இருக்கா? இந்த வீட்டு முகவரியை நித்யாக்கு அனுப்பி வைச்சது யார்?” என்று கேட்டார் விஜயா.

ஸ்ட்ராலியை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தவன், தோளில் மாட்டியிருந்த லேப்டாப் பையை சோஃபா மீது வைத்து விட்டு, அடி விழுந்த இடத்தை லேசாக தடவி விட்டபடி,“போலீஸ்காரன் அம்மான்னு காட்டிட்டேயே அத்தை..ஒரேயொரு அடி மரண அடி.” என்று விஜயாவைக் கிண்டல் செய்தான் பிரகாஷ்.

“டேய்” என்று கத்தியபடி மீண்டும் கையை ஓங்கிய விஜயாவிடமிருந்து தப்பிக்க ஷண்முகத்தின் பின்னால் மறைந்து கொண்டு,”என்ன போலீஸ்  பூ போல இருந்த அத்தையை இப்படிப் புயல் போல மாத்தி வைச்சிருக்கீங்க.” என்று கேட்டான்.

அதைக் கேட்டு சிரிப்பு பீறிட்டு வந்தது ஷண்முகத்திற்கு. ஆனால் அம்மாவிற்குப் பயந்து அதை அடக்கப் பார்க்க,”சென்னைலே பூச்சியா இருந்த நீங்க  தில்லி வந்ததும் எவ்வளவு பவர்ஃபுல்லா மாறியிருக்கீங்க.. கையா அது உலக்கை அத்தை.” என்று மேலும் விஜயாவை கலாய்க்க, அதற்கு மேல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஷண்முகம் சிரித்து வெடிக்க, அவனோடு பிரகாஷும் சேர்ந்து கொள்ள, அந்த அறையே சிரிப்பில் அதிர்ந்தது. விஜயாவின் முகத்தில் சங்கோஜம், சந்தோஷம், சிரிப்பு என்று கலவையான உணர்வு வந்து போனது. அவரைத் தேடி பிரகாஷ் வந்திருந்ததில் அவரது மனது நிறைந்து போயிருந்தது. 

“போதும் டா..நிறுத்துங்க..அக்கம் பக்கத்திலிருந்து வந்திடப் போறாங்க.” என்று எச்சரிக்கை செய்தார் விஜயா.

“அப்படி யாராவது வந்தா போலீஸ்காரர் பார்த்துப்பார்..என்னை விட அவர் தான் ஜாஸ்தி சவுண்டு விட்டார்.” என்று அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான் பிரகாஷ்.

வார்த்தைக்கு வார்த்தை ஷண்முகத்தை போலீஸ்க்காரன் என்று அழைப்பது பிரகாஷின் வழக்கம். அதற்கு முன் ஷண்முகத்தை ‘வேலு’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தான். இப்போதும் சில சமயங்களி அப்படித் தான் அழைப்பான். ஷண்முகம் ஐபிஎஸ் ஆனதிலிருந்து அவனை போலீஸ்க்காரன் என்று அழைப்பதை வழக்கமாக்கி இருந்தான் பிரகாஷ். அவர்களின் வீட்டு முகவரி தான் ஷண்முகத்தின் ரெக்கார்ட்டில் நிரந்தர முகவரிக்கான கட்டத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. நேர்காணலில் வெற்றி பெற்ற பின் போலீஸ் வெரிஃபிகேஷனுக்காக கிரியின் வீட்டிற்கு தான் வந்திருந்தார்கள். அப்போது மகா வீட்டில் இருந்தார் விஜயா. நல்லவிதமாக அதைக் கையாண்டது பிரகாஷ் தான். விசாரணையை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டு சென்ற அடுத்த நொடியே ஷண்முகத்தை அழைத்து,’என்ன போலீஸ்காரரே உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டு ம்மா?’ என்று கேட்டவுடனே பிரகாஷ் சொல்ல வந்த ரகசியம் என்னயென்று ஷண்முகத்திற்குப் புரிந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஷண்முகத்தை போலிஸ்காரன் என்று தான் அழைத்துக் கொண்டிருக்கிறான். வீட்டு உறுப்பினர்களுக்கும் பழகிப் போய்விட்டதால் யாரும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வதில்லை.

அதற்கு விஜயா எதிர்வினை ஆற்றும் முன் பிரகாஷின் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது நித்யா. காணொளி அழைப்பை ஏற்றவன்,”இப்போ தான் வந்து சேர்ந்தேன்..இந்தா பேசு.” என்று விஜயாவின் கையில் அவனது கைப்பேசியைத் திணித்தான்.

அடுத்த பத்து நிமிடங்கள் நித்யாவுடன் விஜயா உரையாடிக் கொண்டிருக்க, பிரகாஷை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான் ஷண்முகம். அந்த ஃபிளாட்டில் கழிவுறைகளோடு சேர்ந்து மூன்று பெரிய படுக்கையறைகள் இருந்தன. அதில் ஒன்றை விருந்தினர் அறையாக மாற்றியிருந்தான் ஷண்முகம். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அந்த அறையைத் தூசி தட்டி, பெருக்கி, சுத்தம் செய்து வைத்தார் விஜயா. அதைப் பார்த்து,’இரண்டு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேணாம் ம்மா..ஒரு வாரத்துக்கு ஒருமுறை செய்தா போதும்.’ என்று ஷண்முகம் கருத்து தெரிவிக்க,’உங்ககூட படிச்சவங்க, வேலை செய்யறவங்களுக்காக ஓர் அறையை எப்போதும் தயாரா வைச்சிருக்கணும்னு நீங்க தானே சொன்னீங்க சாமி..முன்னாடியே தகவல் கொடுத்திட்டு வந்தா பிரச்சனை இல்லை திடீர்னு வந்து நின்னா என்னா செய்வீங்க? அவங்களை உட்கார்த்தி வைச்சிட்டு துடைப்பம், வாளியைத் தூக்கிட்டுப் போக முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டு அவன் வாயை அடைத்திருந்தார்.

பிரகாஷின் வருகை திடீர் வருகை தான் என்றாலும் முந்தைய தினம் தான் அந்த அறையைச் சுத்தம் செய்திருந்ததால் வெகு சுத்தமாக இருந்தது. அதைப் பார்த்து,”அத்தை எங்களோட இருக்கும் போது எங்க வீடும் இப்படித் தான் சுத்தமா இருக்கும்..எங்கம்மாக்கு ஒரு வேலையும் செய்ய வராது..வணங்காது..வேலைக்கு ஆள் இருந்தாலும் வேலை வாங்க கூட தெரியாது..ஏதோ அத்தை எங்களோடு வந்து இருக்கறதாலே சமையல், சாப்பாடு, வீட்டு பரமாரிப்புன்னு எல்லாம் சரியாப் போயிட்டு இருக்கு.” என்றான் பிரகாஷ்.

அவன் அம்மா எந்த வீட்டில் இருக்கிறாரோ அங்கே தான் விடுமுறையைக் கழித்திருக்கிறான் ஷண்முகம். அந்த வீடு எப்போதும் சுத்தமாக இருந்ததால் அதைப் பற்றி பெரிதாக யோசித்ததில்லை. அதற்கு அம்மா மட்டும். காரணமாக இருக்கக் கூடுமென்று நினைத்ததில்லை. இப்போது அதெல்லாம் அவனுடைய அம்மாவின் உழைப்பு என்று தெரிய வந்த போது மனம் கனமானது. ‘இந்த வயசுலேயும் இத்தனை உழைக்கறாங்களா?’ என்ற கேள்வி வந்தது. அதனைத் தொடர்ந்து,’எந்த வேலையும் செய்யத் தெரியாத, செய்ய வணங்காத  மாமி அவங்க அண்ணன் வீட்டுக்குப் போய் என்ன வேலை செய்யறாங்க? உடம்பு சரியில்லாதவருக்கு என்ன உதவி செய்யறாங்க?’ என்ற கேள்வியும் வந்தது. 

அதற்கு,“நீ ஃப்ரெஷ்ஷாகிட்டு வா டா..சாப்பிடலாம்.” என்று சொல்லி விட்டு அறையிலிருந்து வெளியே வந்தவன், அம்மாவைத் தேட, சமையலறையில் இருந்தார் விஜயா.

கேஸ் அடுப்பில் கடாயை வைத்து சமைக்க ஆயுத்தம் செய்து கொண்டிருந்தார் விஜயா. அடுப்பை அணைத்தவன்,”இப்போ எதுவும் செய்ய வேணாம்..நேரம் கிடையாது..இருக்கறதை சாப்பிடுவோம்..ஃபிரிஜ்லே பழம் ஏதாவது இருக்குதா?” என்று கேட்டான்.

“நீங்க வாங்கிப் போட்டதெல்லாம் அப்படியே இருக்குது சாமி.” என்றார்.

“அம்மா” கோபத்தில் கத்தியவன் அவரது முகத்தைப் பார்த்து வந்த கோபத்தை விரட்டி விட்டான். “ஒரு பெரிய கிண்ணத்திலே கொஞ்சம் பால் ஊத்திக் கொண்டு வாங்க.” என்றான்.

பிரகாஷ் வருவதற்குள் அந்தக் கிண்ணத்தில் ஆப்பிள், வாழைப்பழத் துண்டங்களை வெட்டிப் போட்டு அதைக் குளிர்ச்சாதனப் பெட்டியினுள் வைத்தவன்,”சாப்பிட்டு முடிஞ்சதும் இதை அவனுக்கு கொடுங்க.” என்றான்.

“உனக்கு சாமி?” என்று விஜயா வினவ,

“எனக்கு வேணாம் ம்மா.”

“சூடா பால் கலந்து கொடுக்கறேன்..குடிச்சிட்டு படுப்பா” என்று விஜயா வற்புறுத்த, என்ன மறுத்தாலும் கேட்க மாட்டாரென்பதால்,”சின்ன கிளாஸ்லே கொடுங்க.” என்றான்.

பிரகாஷ் வந்ததும் மூவரும் மேஜையில் அமர்ந்து அவர்களுக்கு வேண்டிய அளவிற்கு உப்பும்மா, சட்னியைத் தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தனர். ஒரு வாய் உப்பும்மாவை வாயில் போட்டுக் கொண்ட பிரகாஷ்,

“என்ன அத்தை, அரிசி உப்பும்மா செய்திருக்க? போலீஸ்க்காரனுக்குப் பிடிக்குமா?” என்று கேட்டான்.

அதற்கு விஜயா பதிலளிக்குமுன்,”உன் அத்தைக்குப் பிடிக்கும்.” என்றான் ஷண்முகம்.

“அத்தைக்கா? அவங்க எப்போதும் அரிசி கஞ்சி தானே சாப்பிடுவாங்க..எங்களுக்கு நல்ல டிஃபன் செய்து கொடுப்பாங்க..நாங்க எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்..அவங்க மட்டும் கஞ்சி குடிப்பாங்க..ஏன் அத்தைன்னு கேட்டா, எனக்கு அதுவே போதும்னு சொல்லுவாங்க.” என்று அவனை அறியாமல் அவன் வீட்டு நிலவரத்தையும் நடைமுறையையும் அவர்கள் வீட்டில் விஜயா அத்தையின் நிலையையும் வெளியிட்டு கொண்டிருந்தான் பிரகாஷ்.

அனைவரும் வயிற் முட்ட சாப்பிட்ட பின் அம்மாவிற்கு டிஃபன் மீந்திருக்காதென்று ஷண்முகத்திற்குப் புரிந்து போக, தலையை உயர்த்தி அவனெதிரே அமர்ந்திருந்த அம்மாவைப் பார்க்க, அவரோ எளிமையான அரிசி உப்புமாவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உணவு நேரம் முடியும் வரை அத்தையின் கைப்பக்குவத்தை, எப்படி ரிபீட், ரிபீட் என்று சில பலகாரங்களை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் அவனும் சத்யனும் ஆசைத் தீரச் சாப்பிடுவார்களென்று சிறு வயது கதைகளைப் பகிர்ந்து கொண்டவன், அப்படியே நிகழ் காலத்திற்கு வந்து,

“நித்யாவுக்கு சரியா சமைக்க வரலை அத்தை..இப்போ அம்மா இல்லாத போது செய்து பழகிக்கலாமில்லே..’உங்கம்மா செய்யாத போது நான் எதுக்கு செய்யணும்னு’ விதண்டாவாதம் செய்யறா..’வேலைக்குப் போனா சமையல் செய்யக் கூடாதுன்னு சட்டம் இருக்கான்னு’ கேட்டிட்டேன்..அவ்வளவு தான்,’உங்கம்மா வீட்லேயே இருந்துகிட்டு இத்தனை வருஷமா எத்தனை நாளைக்கு மூணு வேளையும் சமைச்சு வைச்சிருக்காங்கன்னு?’ சண்டை போடறா..’இரண்டு நாள் கழிச்சு ஜெய்ப்பூர்லே ஒரு கான்ஃபரன்ஸ் இருக்கு நான் போகணும்னு’ நேத்து சொன்னவுடனே,’நாளைக்கு நான் அம்மா வீட்டுக்குப் போயிடறேன்..எங்கம்மா கையாலே சாப்பிட்டு ரொம்ப நாளாகிடுச்சுன்னு’ இன்னைக்கு காலைலேயே மூட்டையைக் கட்டிக்கிட்டு அங்கே போயிட்டா..நானும் அத்தை கையாலே சாப்பிட்டு ரொம்ப நாளாகிடுச்சுன்னு ஒரு நாள் முன்னாடி புறப்பட்டு தில்லி வந்திட்டேன்..நாளைக்கு நைட் நான் ஜெய்ப்பூர்லே இருந்தா போதும்.” என்று அவனது திடீர் வருகைக்கான காரணத்தை வெளியிட்டான் பிரகாஷ்.

“நீ இங்கே வந்திட்ட..நித்யா அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா..சத்யன் சாப்பாட்டுக்கு என்ன செய்வான் டா?” என்று கவலையானார் விஜயா.

“அவனுக்கு பிடிச்சதை ஆர்டர் செய்து சாப்பிட்டுப்பான்.” என்று அந்தக் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பிரகாஷ்.

சாப்பாடு முடிந்த பின்னர் அதிக நேரம் தாமதிக்காமல் மூவரும் உறங்கச் சென்றனர். அடுத்த நாள் காலை ஷண்முகம் எழுந்து வந்த போது சமையலறையிலிருந்து உருளைக் கிழங்கு மாசலா வாசனை வந்தது. 

“அம்மா” என்று அழைத்தபடி வந்தவனிடம்,

“தோள்பட்டை எப்படியிருக்கு சாமி?” என்று விசாரித்தார் விஜயா.

“கொஞ்சம் வலிக்குது ம்மா..அந்த சைட்லே தூங்கிட்டேன் போல.” என்றான்.

“இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துக்க சாமி..பிரகாஷ் வேற வந்திருக்கான்.” என்றார்.

“முடியாது ம்மா..முக்கியமான மீட்டிங் இருக்கு..ஏழரை மணி போல் ஆபிஸ்லே இருக்கணும்னு மெஸேஜ் வந்திருக்கு..அதைச் சொல்ல தான் வந்தேன்..நான் ஆபிஸ் போயிட்டு வண்டியை அனுப்பி வைக்கறேன்..பிரகாஷை அழைச்சிட்டு குருவாயூரப்பன் கோவிலுக்கு போயிட்டு அப்படியே அந்தக் கடைக்குப் போய் துணியை வாங்கிட்டு வந்திடுங்க..ஃபிரிஜ் மேலே பணத்தை வைச்சிட்டேன்.” என்று சொல்லி விட்டு குளித்து தயாராகி வர அவனது அறைக்குச் சென்று விட்டான்.

அதன் பின் காப்பி, டிஃபனை முடித்துக் கொண்டு ஷண்முகம் புறப்படும் வரை பிரகாஷ் எழுந்திருக்கவில்லை. அதில் கொஞ்சம் போல் கவலையான ஷண்முகம்,”லேட்டா போனா கோவில் மூடிடும் ம்மா.” என்றான்.

“பரவாயில்லை சாமி..கடைக்கும் மட்டும் போயிட்டு வந்திடறோம்..அவனுக்கும் எங்கேயாவது வெளியே போன மாதிரி இருக்குமில்லே.” என்றார் விஜயா.

அலுவலகத்தை அடைந்த பின், எங்கே போக வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்று தெளிவாக அனிஷிற்கு உத்தரவு போட்டு வண்டியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

பத்து மணி போல் ஷிக்கா பொட்டீக்கை அடைந்திருந்தனர் விஜயாவும் பிரகாஷும். கடை மூடியிருந்தது. அவசர அவசரமாக குருவாயூரப்பன் தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கே வந்திருந்தனர்.

கடையின் பக்கவாட்டில் வீட்டிற்கு செல்லும் வழி இருந்தது. அங்கே சென்று வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தியிருந்தால் தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்திருப்பான் மனோகர். அந்தப் பாதையில் விஜயாவின் எண்ணங்கள் செல்லவில்லை. கடைக்குப் பின்னால் வீடு இருக்கிறதென்று அப்போது அவருக்குத் தோன்றவேயில்லை. 

கடையிலிருந்து சிறிது தொலைவில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி, ஒரு மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தியிருந்தான் அனிஷ். காரின் உள்ளே அமர்ந்திருந்தார் விஜயா. கடை வாசலுக்கு சற்று தள்ளி நின்றபடி ஷண்முகத்தோடு காணொளியில் உரையாடிக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

கைப்பேசித் திரையில் தெரிந்த ஷண்முகத்திடம்,“நாங்க வந்து பத்து நிமிஷமாகிடுச்சு டா..இன்னும் கடை திறக்கலை.” என்றான் பிரகாஷ்.

“கொஞ்சம் லேட்டாகலாம் டா..அவங்க ஸன்னுக்கு உடம்பு சரியில்லைன்னு  சொன்னாங்க.” என்றான் ஷண்முகம். 

“பத்தரை மணி வரை வெயிட் செய்யலாம்னு அத்தை சொல்றாங்க..மதியம் லன்ச் செய்யணும் அதுக்கு மேலே முடியாதுன்னு சொல்லிட்டாங்க.”

“நீ எத்தனை மணிக்கு கிளம்பற?” என்று விசாரித்தான் ஷண்முகம்.

“ஆறு மணிக்கு டிரெயின்.” என்றான் 

“நாலரை மணிக்குக் கிளம்பினா சரியா இருக்கும்..அனிஷ்கிட்டே சொல்லியிருக்கேன்..இரயில்வே ஸ்டெஷன் போகற வழிலே உனக்கு வேற ஏதாவது ப்ரோக்ரம் இருக்கா?” என்று கேட்டான் ஷண்முகம்.

அதற்குப் பதில் சொல்லாமல், கேமராவைப் பார்க்காமல் கைப்பேசியைத் தாண்டி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

“என்ன டா பதிலைக் காணும்..அங்கே என்ன பார்த்திட்டு இருக்க?” என்று கேட்டான் ஷண்முகம்.

“பொண்ணு டா” என்றான் பிரகாஷ்.

“பொண்ணா?” என்று கேட்டான் ஷண்முகம்.

“ம்ம்..பார்க்க நம்ம ஊர் பொண்ணு மாதிரி தெரியுது ஆனா..” என்று சொல்லியவன் அதற்கு மேல் விவரிக்க முடியாமல் கைப்பேசியின் பின்பக்கக் கேமராவை உயிர்பிக்க, பிரகாஷ் நேரில் பார்த்துக் கொண்டிருந்ததை காணொளி வழியாகப் பார்த்தான் ஷண்முகம்.

ஹை பொனிடெயில், கண்களை மறைத்த தேன் நிற சன் கிளாஸ், முட்டியைத் தொட்ட வெளிர் நீல நிற பருத்தி டெனிம் மிடி டிரெஸ், பாதங்களில் கறுப்பு நிறத்தில் இரண்டு அங்குல ஸ்டிராப்பி ஹீல், இடது தோளில் எதினிக் லேப் டாப் பேக், வலதுக் கையில் கைப்பேசி. டக் டக்கென்று குதிகால் ஹீல் தரையில் ஒலி எழுப்ப, கைப்பேசியில் உரையாடியபடி, வேகமாக கடையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் சினேகலதா.

அவளது நடை, உடை, பாவனையில் தெரிந்த ஆளுமையில் அசந்து போன ஷண்முகம், கைப்பேசி கேமரா வழியாக தலை முதல் கால் வரை அவளை அளவிட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு பின்னால் பெரிய ஓசையோடு வந்த இரு சக்கர வாகனத்தில் நிகழ்விற்கு வந்தவன்,”பொண்ணு நம்ம பக்கம் தான் ஆனா பக்கா தில்லிக்காரி..கடை அவங்களோடது தான் டா..அதைத் திறக்க தான் வர்றா..நீ போய் அம்மாவை அழைச்சிட்டு வந்திடு..நான் இப்போ போகணும்..நேரம் கிடைக்கும் போது உங்களோட பேசறேன்.” என்று அவனது கட்டுப்பாடு கரையை உடைத்து பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடும் முன் கைப்பேசி அழைப்பைத் துண்டித்தான் ஷண்முகம்.

அவளது தோற்றத்தை தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்ததில் காவல் அதிகாரியின் கட்டுப்பாடு கைமீறிப் போனதை அறியாமல், அவளது கைப்பேசியை டிரெஸ் பேக்கெட்டில் போட்டுக் கொண்டு, இடுப்பு பெல்ட்டை சரி செய்தபடி, கடை வாசலருகே நின்றிருந்த பிரகாஷை சன் கிளாஸஸ் வழியாக அளந்தவள்,’யாரா இருக்கும்?’ என்று யோசித்தபடி மனோகரின் வீட்டை நோக்கி சென்றாள் சினேகலதா.