அத்தியாயம் – 16

அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான்.

“ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா.

“அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?” என்று அவன் ஆச்சிர்யப்பட,

“அது சாமி கஞ்சிக்காக அரிசி உடைச்சு வைச்சிருந்தேனில்லே அதையே போட்டு கிளறி வைச்சிட்டேன்.” என்று விஜயா விளக்கம் கொடுக்க,

“கஞ்சியா? உங்களுக்கு உடம்பு முடியலையா? நேத்து ஃபோன் செய்தேன்னே ஏன் என்கிட்டே சொல்லலை?” என்று ஷண்முகம் கவலையோடு கேட்க,

“உடம்புக்கு ஒண்ணுமில்லை சாமி..எல்லாம் நல்லா தான் இருக்கு..ஒத்த ஆளாக்கு மூணு வேளையும் விருந்தா சமைச்சிட்டு இருக்க முடியும்? அதான் காலைலே, இராத்திரி இரண்டு வேளையும் கஞ்சி செய்துக்குவேன்.” என்று உண்மையாக பதிலளிக்க,

அதை கேட்டு மகனது மனது வலிக்க,”உங்களுக்குப் பிடிச்சதை தானே சமைக்க சொன்னேன்..விருந்தா செய்யச் சொன்னேன்..கஞ்சிக்காக உடைச்சு வைச்சிருந்தது வீணாப் போயிடும்னு வேற விதமா செய்திருக்கீங்க.” என்று வருத்தப்பட்டான். 

“எனக்கு அரிசி உப்பும்மா பிடிக்கும் சாமி..மிளகு, சீரகப் பொடி தூக்கலாப் போட்டு, தேங்காயையும் கேரெட்டையும் மேலாப்லே துருவிப் போட்டு தேங்காய் எண்ணெய் வாசனையோட மணக்க மணக்க செய்திருக்கேன்..இதெல்லாம் செய்யலைன்னா அரிசி உப்பும்மா ருசியா இருக்காது சாமி..அதான் சோம்பேறிதனத்திலே கஞ்சி வைச்சுக்குவேன்.” என்றார் விஜயா.

“அதுக்காக இரண்டு வேளையும் கஞ்சி சாப்பிடுவீங்களா? காய்கறி எல்லாம் சேர்த்துகிட்டா தானே உடம்புக்கு சக்தி வரும்..ஏற்கனவே பலகீனமா இருக்கீங்க..வீட்டு வேலைகளைத் தனியா செய்யறீங்க..இடுப்பு வலி..கால் வலின்னு ஏதாவது ஒரு வலியைக் காரணமாச் சொல்லிட்டு ஒரே இடத்திலே உட்கார்ந்திருக்கீங்க..எத்தனை வலிச்சாலும் கால், கையை உபயோகிச்சிட்டு இருக்கணும்ம்மா..வீட்டு வேலை மட்டும் செய்தா சரி வராது..சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யணும்..வாக்கிங் போகணும்..உடற்பயிற்சி செய்யலைன்னாலும் பரவாயில்லை..வாக்கிங் கண்டிப்பா போகணும்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கறீங்க..கிளம்புங்க வாக்கிங் போயிட்டு வந்து சாப்பிடலாம்..அப்புறம் ஓர் உங்களுக்கு ஓர் ஆர்டர் போடலாம்னு இருக்கேன்…இனி தினமும் உங்களுக்குப் பிடிச்சதை தான் நீங்க சமைக்கணும்..சாயங்காலம் ஓர் அரைமணி நேரமாவது கண்டிப்பா வாக்கிங் போகணும்..ஒரு வாரம் கழிச்சு நீங்க எப்படி உணர்றீங்கண்ணு எனக்கு ரிப்போர்ட் கொடுக்கறீங்க.” என்று கண்டிப்புடன் பேசினான் ஷண்முகம்.

“அந்த மாதிரி எல்லாம் செய்தா சாமி அப்புறம் நான்..” என்று ஆரம்பித்தவர் அப்படியே அந்த வாக்கியத்தை முடிக்காமல் விட்டார். ‘அப்புறம் நான் சென்னைக்குப் போன பிறகு இதே மாதிரி இருக்க முடியாதே..அக்கா வீட்லேயும் அண்ணன் வீட்லேயும் வேற வேற வாழ்க்கைமுறை அங்கே எப்படி என்னோட விருப்பத்தைத் திணிக்க முடியும்?’ என்று மகனிடம் கேட்டு அவரது நியாயத்தை எடுத்துக் கூறினால் அவருடைய இத்தனை கால வாழ்க்கை எப்படி இருந்தது என்று அவனுக்குப் புரிந்து விடும், உறவினர்களோடு ஒட்ட மாட்டான் என்ற பயத்தில் அப்படியே பாதியில் விட்டு விட்டார். அது புரியாமல்,

“எனக்கு எந்த விளக்கமும் வேணாம்…இப்போ வாக்கிங் போயிட்டு வரலாம்.” என்று சொல்ல,

“இன்னைக்கு வேணாம் சாமி..நாளைக்குக் கண்டிப்பா போறேன்..நீங்க அடிப்பட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..ஓய்வு எடுத்துக்கோங்க.” என்று மறுத்தார் விஜயா.

“எனக்கு ஒண்ணுமில்லை ம்மா.” என்று டக்கென்று தரையில் நெஞ்சாண்கிடையாக படுத்தவன், கையை ஊனி அடுத்தடுத்து நான்கு முறை புஷ் அப் செய்து காட்ட,”போதும்..போதும்..வலிக்கப் போகுது சாமி..இதோ கிளம்பிட்டேன்.” என்று மகனோடு வாக்கிங் சென்றார் விஜயா.

அவர்கள் ஃபிளாட் இருந்த காம்ப்ளெக்ஸில் பத்து கட்டிடங்களும் இரண்டு பூங்காக்களும் இருந்தன. இரண்டு கட்டிங்களை அரசாங்கம் குத்தகைக்கு எடுத்திருந்தது. மற்ற கட்டிங்களில் வெளியாள்கள் இருக்க இந்த இரண்டில் மட்டும் அரசாங்க ஊழியர்கள். இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உறவு இருந்தாலும் அரசுக்கு வேலை செய்வதால் ஒதுங்கி தான் இருந்தனர். தில்லியில் இருக்கும் நாள்களில், அலுவலகத்திலிருந்து வந்த பிறகு, தினமும் அந்த காம்ப்ளெக்ஸை மெல்லோட்டத்தில் சுற்றி வந்து அவர்கள் கட்டிடத்திற்கு அருகே இருந்த பூங்காவில் சில உடற்பயிற்சிகளை செய்வது ஷண்முகத்தின் வழக்கம். சில சமயங்களில் விஜயாவை அழைத்துப் போய் பூங்காவில் அமர வைத்து விட்டு மெல்லோட்டத்தை முடித்துக் கொண்டு உடற்பயிற்சியை செய்தபடி அவரோடு பேசிக் கொண்டிருப்பான். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் விஜயாவிற்கு மகனுடனான அந்தப் பொழுது பிடித்தமான ஒன்று. இன்று மெல்லோட்டத்திற்கு விடுமுறை அளித்தவன் காயமடைந்திருந்த தோள்பட்டையைத் துன்புறுத்தாமல் சில உடற்பயிற்சிகளைச் செய்ய, மகா அக்காவிடம் பேசியதைப் பற்றி மகனுடன் பகிர்ந்து கொண்டார் விஜயா.

“வீட்டுக்குப் போனதும் பெரியப்பாக்கு ஃபோன் செய்து பேசறேன்..என்ன விஷயம்னு பெரியம்மா சொல்லலையா?” என்று ஷண்முகம் கேட்க,

“அவகிட்டே விஷயத்தை சொல்லலை..உன்கிட்டே பேசணும்னு மட்டும் சொல்லியிருக்கார்.” என்றார் விஜயா.

என்னவாக இருக்குமென்று யோசனை செய்தபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனிடம்,”சாமி, ஒரு புது நம்பர்லேர்ந்து இரண்டு மூறை கால் வந்தது..அக்காவோட பேசிட்டு இருந்ததாலே முதல் முறை எடுக்கலை..இரண்டாவது முறையும் கால் வர, அக்கா சொல்றா உனக்குத் தெரிஞ்சவங்களா தான் இருப்பாங்கண்ணு..ஃபோன் செய்து பார்க்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்த போது நீங்க வந்திட்டீங்க.” என்றார் விஜயா.

அதற்கு,”நான் வீட்டுக்குள்ளே வந்த போது இராத்திரி சாப்பாட்டைப் பற்றி யோசனை செய்திட்டு இருந்தீங்கண்ணு என்கிட்டே சொன்னீங்க..பொய் சொன்னீங்களா?” என்று அவரை குறுக்கு விசாரணை செய்தான் காவல் அதிகாரி.

“ஐயோ உண்மை தான் சாமி..அக்காவோட பேசிட்டு இருந்த போதே இராத்திரி சாப்பாட்டைப் பற்றி யோசனை செய்தேன்..அவ கூட கஞ்சி வேணாம்..நல்லா சமைச்சு சாப்பிடுன்னு சொன்னா.” என்றார்.

“சொன்னாங்க இல்லே அப்புறம் ஏன் நீங்க உப்பும்மா செய்தீங்க?” என்று கேட்க,

“எனக்கும் பிடிக்கும் சாமி.” என்று பாவமாக விஜயா பதிலளிக்க, அது உண்மையாக இருக்க,

“அப்போ ஓகே..வாங்க வீட்டுக்குப் போகலாம்.” என்று அம்மா, மகன் இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.

சட்னிக்காக தேங்காயைப் பத்தை போட ஷண்முகம் கத்தியைக் கையில் எடுக்க, வேணாம் என்று விஜயா மறுக்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வலிக்காது..பெயின் கில்லர் போட்டிருக்கேன் ம்மா..என்கிட்டே கொடுங்க.” என்று ஒரு முழுத் தேங்காயைப் பத்தைப் போட்டுக் கொடுத்தான்.

“நம்ம இரண்டு பேருக்கு எதுக்கு சாமி இவ்வளவு..ஒரு மூடி கூட ஜாஸ்தி.” என்றார் விஜயா.

“சட்னி செய்து ஃபிரிஜ்லே வைச்சிடுங்க..நாளைக்கு வெண் பொங்கல் சட்னி தான் பிரேக்ஃபாஸ்ட்.” என்று தீர்ப்பு கொடுத்தான்.

“எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்கீங்க..உங்ககிட்டே பேசி ஜெயிக்கவே முடியாது.” என்று விஜயா சந்தோஷமாக சலித்துக் கொள்ள,

“நான் எப்படி ஜெயிக்க முடியும்? விஜயலக்ஷ்மி நீங்க தானே?” என்று கேலி செய்ய, 

“அம்மா பாவம் ப்பா..விட்டிடு.” என்று அவர் கெஞ்ச,

“பொழைச்சுப் போங்க.” என்று சொன்னவன்,“உங்க ஃபோன் எங்கே ம்மா? அந்த நம்பர் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்றேன்.” என்றான்.

“வாசல்லே சார்ஜ்லே போட்டு வைச்சிருக்கேன்.” என்று சொல்லி விட்டு மிக்ஸியில் சட்னியை அரைக்க ஆரம்பித்தார் விஜயா. வரவேற்பறைக்கு சென்ற ஷண்முகம் அங்கே சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த கைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்று கதவை சாத்தியவன், அதை உயிர்ப்பித்து மிஸ்ட் கால் ஹிஸ்ட்ரியில் முதலில் இருந்த அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தான். அவனுக்குமே அம்மாவை அழைத்தது யாராக இருக்கக் கூடுமென்ற கேள்விக்குப் பதில் தெரிய வேண்டியிருந்தது.

அழைப்பை ஏற்ற ஷிக்கா, ஹிந்தியில்,”உங்க சல்வார் செட்டெல்லாம் தயாரா இருக்கு..அதைச் சொல்ல தான் ஃபோன் செய்திருந்தோம் நீங்க அழைப்பை ஏற்கலை.” என்றாள்.

அதைக் கேட்டது அவனது கண்களில் கடையில் பார்த்த கன்னி வந்து போக, சுவர்க் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”எப்போ கடையை க்ளோஸ் செய்வீங்க.” என்று ஷிக்காவிடம் கேட்டான்.

“பண்ணிட்டேன்..கடையை மூடறத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு முறை ஃபோன் செய்திருக்கேணும்..வேற வேலைலே பிஸியா இருந்ததாலே முடியலை..நாளைக்குக் காலைலே பத்து மணிக்கு மேலே கடை திறந்திருக்கும்..வந்து வாங்கிட்டுப் போங்க.” என்றாள் ஷிக்கா.

நாளைக்கு அவனுடைய நாள் எப்படி இருக்கப் போகிறதென்று அவனுக்குத் தெரியுமாதலால்,”இராத்திரி எப்போ மூடுவீங்க?” என்று கேட்டான்.

“என் மகனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..அதனாலே முன்னே பின்னே தான் கடையைத் திறக்கறோம், மூடறோம்..இராத்திரி வர்றதா இருந்தா ஒரு ஃபோன் செய்திட்டு வாங்க ஸர்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் ஷிக்கா.

ஷிக்காவின் இலக்கை கைப்பேசியில் பதித்து விட்டு, கதவைத் திறந்து வரவேற்பறைக்கு வந்தவன் அங்கே அதை மீண்டும் சார்ஜில் போட்டு விட்டு சமையலறைக்குச் சென்று,”அம்மா, அந்த நம்பர் துணிக் கடை ஓனர் பொண்ணோடது..உங்க சுடிதாரெல்லம் ரெடியாகிடுச்சுன்னு சொல்ல தான் ஃபோன் செய்திருக்காங்க..இப்போவே போய் வாங்கிட்டு வந்திடலாமான்னு நினைச்சேன்..கடையை மூடிட்டாங்களாம்..அவங்க மகனுக்கு உடம்பு சரியில்லையாம்..அதனாலே கடையை முன்னே பின்னே தான் திறந்து மூடறாங்களாம்..நாளைக்குக் காலைலே பத்து மணிக்கு மேலே திறந்திருக்குமாம்..அனிஷை வரச் சொல்றேன்..அவனோட போய் வாங்கிட்டு வந்திடறீங்களா?” என்று கேட்டான். 

அதற்கு விஜயா பதில் அளிக்கும் முன் அழைப்பு மணி ஒலித்தது. இந்த நேரத்தில் யாரென்ற யோசனை அம்மா, மகன் இருவருக்கும். 

”போங்க..போய்த் திறங்க.” என்று விஜயாவிற்கு கட்டளையிட்டான் ஷண்முகம்.

“நீங்க போய்த் திறங்க சாமி..நான் டிஃபனை எடுத்து வைக்கணும்.” என்று மறுத்தார் விஜயா.

“நான் இன்னைக்கு வரலைன்னா என்ன செய்திருப்பீங்க? நீங்க தானே போய் திறந்திருப்பீங்க..போங்க ம்மா..போய் திறங்க..எப்படித் திறக்கணும்னு நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குயில்லே?” என்று கேட்டான்.

“எல்லாம் இருக்கு.” என்று அலுத்தபடி வரவேற்பறைக்குச் சென்றவர், முதலில் அவரது கைப்பேசியை சார்ஜிலிருந்து நீக்கி கையில் தயாராக வைத்துக் கொண்டார். அதன் பின் கதவில் பொருத்தியிருந்த ஊடுபுழை (spyhole) வழியாக பார்க்க, யாரையும் காணவில்லை. பாதுக்காப்பிற்கு கொடுத்திருந்த சங்கிலியை பொருத்தி விட்டு லேசாக கதவைத் திறந்தவர், வாசலில் நின்றிருந்த நபரைப் பார்த்து,”ஹாங்.” என்று அதிர்ச்சியானார்.