விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும் அவரது மனசை மாற்ற முயல, விஜயாவும் கொஞ்சம் போல் கரைய ஆரம்பித்தார். பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாமல் முக்கியமாக அவனுடைய அம்மாவின் தலையீடு இல்லாமல் நித்யாவுடன் சிறிது காலம் தனிமையில் சந்தோஷமாக இருக்கலாமென்று எண்ணிய பிரகாஷ் விஜயா அத்தையை இடையூறாகவே நினைக்கவில்லை. அதை அவரிடம் சொல்லியிருக்க வேண்டுமென்று அப்படியொரு முடிவிற்கு அவர் வந்த பின்னர் தான் புரிந்தது. அவனுடைய மனைவி நித்யாவுடன் மகாலக்ஷ்மி வீட்டிற்கு சென்ற பிரகாஷ்,’நீங்க எப்போ வேணும்னாலும் கிளம்பிப் போங்க பெரியத்தை..நான் இப்போவே சின்னத்தையை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்.’ என்று கையோடு விஜயாவை அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயல, அந்த செயல் விஜயாவின் மனத்தில் இதத்தை வரவழைத்தாலும் அவனுடைய அழைப்பை மறுத்து விட்டார். பிரகாஷும் விடுவதாக இல்லை. அவரை அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தான். அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. ‘விஜயம்மாவை கையோட கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு.’ என்று மனைவி நித்யாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தான்.
‘விஜயம்மா ப்ளீஸ்..ப்ளீஸ்..நம்ம வீட்டுக்கு வாங்க..நீ இப்படியொரு முடிவு எடுப்பீங்கண்ணு நினைக்கவேயில்லை..எப்போதும் நம்ம வீட்டுக்கு தானே வருவீங்க திடீர்னு ஏன் இப்படி..நான் தான் தப்பு செய்திட்டேன்..உங்ககிட்டே பேசியிருக்கணும்..ப்ளீஸ்..ப்ளீஸ் வாங்க வீட்டுக்கு.’ என்ற நித்யாவின் கெஞ்சலில், அவர் எதிர்பார்த்தபடி பிரகாஷ் அழைப்பு விடுத்ததில் அவர் மனமுருகிப் போனாலும் மகனுடன் இருக்க வேண்டுமென்று அவர் எடுத்த தீர்மானத்திலிருந்து விஜயா பின் வாங்க முடியவில்லை. அவருக்காக வீடு, பாத்திரப் பண்டம், கட்டில், மேஜை என்று ஷண்முகம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்திருந்ததால் அத்தனை எளிதாக முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதையெல்லாம் எடுத்துரைத்து, ஷண்முகத்துடன் மூன்று நான்கு மாதங்கள் இருந்துவிட்டு அக்கா திரும்பி வருவதற்கு முன் சென்னைக்குத் திரும்பி வருவதாக பிரகாஷிற்கு உறுதி கொடுக்க, அதை ஏற்க மறுத்து, அவர் எப்போதும் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்று அந்த உறுதியை மாற்றி அமைத்து அவருக்கு விடை கொடுத்திருந்தான் பிரகாஷ்.
“ஆமாம்..ஆமாம்..மறந்திட்டேன்..அவளுக்கு ஃபோன் செய்து பேசிருப்பேயே..அவன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமே.” என்றார் மகா.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை க்கா..உனக்கு தான் அண்ணியைப் பற்றி தெரியுமே..கல்யாணமாகி வீட்டுக்கு வந்த முத நாளே இருபது பேருக்கு டீ போடு, காப்பி போடுன்னு படுத்தி எடுத்திட்டாங்க..நான் தான் உதவி செய்தேன்..எப்போ பார்த்தாலும் இதைச் செய், அதைச் செய்யுனு மாமியாரா ரொம்ப தொல்லை கொடுத்தாங்க மீனா அண்ணி..அது வேலைக்கு போகற பிள்ளைக்கா வீட்டு வேலை செய்து அத்தனை பழக்கமில்லை..பார்க்க பாவமா இருந்திச்சு..அண்ணியோட எப்படி நடந்துக்கறதுன்னு கொஞ்சம் நீக்குப் போக்கு சொல்லிக் கொடுத்தேன்..அப்படியே பிரகாஷுக்கு எதுக்கு பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்..யாரும் எதுவும் சொல்லிக் கொடுக்காம இருந்தா அந்தப் பிள்ளை எப்படிக் கத்துக்கும்..புது இடத்துக்கு எப்படிப் பழகிக்கும்.” என்று அக்காவிற்குப் புரியும்படி விளக்கம் கொடுத்தார் விஜயா.
“உன்னை மாதிரி வசந்தி வீட்லே ஓர் ஆள் இருந்திருந்தா இன்னைவரை அவ கஷ்டப்பட்டிட்டு இருக்க மாட்டா..அவ புருஷனோட குணம் புரிஞ்சிருக்கும்..அவனைப் பற்றி நாம ஏதாவது சொன்னா..’நீங்க தானே இந்த ஆளை எனக்குக் கட்டி வைச்சீங்க..அப்போ உங்களுக்கு இவர் குணம் தெரியலையான்னு?’ என்னையே கேள்வி கேட்கறா..அவளுக்குக் கல்யாணமாகி இத்தனை வருஷமாகிடுச்சு..எந்த நேரத்திலே என்ன பேசணும், செய்யணும்னு அவனுக்குப் புத்தி சொல்லாம, புரிய வைக்காம அவன் எது செய்தாலும் பேசினாலும் இவ நியாயப்படுத்திட்டு இருக்கா..இரண்டு நாள் முன்னாடி உங்க மாமாக்கு ஃபோன் செய்திருந்தான்..பத்து நிமிஷத்துக்கு மேலே பேசிட்டு இருந்தான்..என்னென்னு கேட்டா இந்த மனுஷன் வாயைத் திறக்க மாட்டேங்கறார்..’எல்லாம் ஊருக்குப் போய் பேசிக்கலாம்..இங்கே வேணாம்னு என் வாயை அடைச்சிட்டார்.’ நானும் விடாம கேட்டிட்டு தான் இருக்கேன்..’ என்று மகா உரையாடலைத் தொடருமுன், ‘அம்மா’ என்று சிந்து அழைப்பது காதில் விழ,
“சிந்து எழுந்திருச்சிட்டா போல..என்னைக் கூப்பிடறா டீ..இன்னொரு நாள் பேசறேன்..அவளையும் உன்கிட்டே பேச வைக்கறேன்.” என்று விஜயா பதிலளிக்குமுன் அழைப்பைத் துண்டித்து விட்டார் மகாலக்ஷ்மி.
புதிதாக இருந்த அந்த நம்பருக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடி கைப்பேசியை விழி அகற்றாமல் விஜயா பார்த்துக் கொண்டிருந்த போது அவனது சாவியை உபயோகித்து வாசல் கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஷண்முகம். மகனைப் பார்த்துத் திகைத்துப் போன விஜயா,
“சாமி, இப்படித் திடீர்னு வந்து நிக்கறீங்க?” என்று கேட்க,
அவர் எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்து, இடது தோள்பட்டைக்கு அதிக வேலை கொடுக்காமல் வலது கை, தோள்பட்டையை மட்டும் உபயோகித்து காலணியைக் கழட்டியபடி,”நாளைக்கு ஆபிஸ்லே வேலை இருக்கு ம்மா..நேரே அங்கே போயிருந்திருக்கலாம்..ஓர் இராத்திரி வீட்லே இருக்கலாம்னு கிளம்பி வந்திட்டேன்.” என்று பதிலளித்தான் ஷண்முகம்.
அதைக் கேட்டு விஜயாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. “ரொம்ப சந்தோஷம் சாமி..ஒரு இராத்திரி என்ன, அரையா இருந்தா கூட வீட்டுக்கு வந்திடுங்க சாமி..இராத்திரிக்கு என்ன சமைக்கறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..நீங்க வந்திட்டீங்க.. சொல்லுங்க சாமி..உங்களுக்குப் பிடிச்சதை சமைக்கறேன்.” என்றார் விஜயா.
ஷுவைக் கொண்டு போய் கதவிற்கு பின்னால் வைத்த ஷண்முமகம்,”உங்களுக்குப் பிடிச்சதைச் செய்யுங்க ம்மா..எனக்கும் அதுவே போதும்.” என்றான்.
அதைக் கேட்டு விஜயாவின் கண்கள் பனித்தன. இதுவரை யாரும் இப்படி சொன்னதே இல்லை. அக்கா வீட்டிலும் சரி அண்ணன் வீட்டிலும் சரி அந்த வீட்டு உறுப்பினர்களுக்குப் பிடித்ததை தான் சமைத்துக் கொடுத்திருக்கார். அவருக்குப் பிடித்ததைப் பற்றி அவரே கவலைப்படாத போது அவர்கள் எங்கே கவலைப்படப் போகிறார்கள். அந்த நொடி அந்த வீடு அவருடைய வீடாக தோன்ற, உரிமையாக,
“அரிசி உப்பும்மா செய்யறேன்.” என்றார். அதைக் கேட்டு ‘உப்பும்மாவா?’ என்று ஷண்முகத்தின் மனம் அலறினாலும், அதை முகத்தில் காட்டாமல்,”உங்களுக்கு பிடிக்கும் தானே?” என்று கேட்டவன், சட்டையைக் கழற்றியபடி அவனது அறைக்கு செல்ல முற்பட, அவனது இடது தோள்பட்டையைப் பார்த்து திடுக்கிட்டுப் போன விஜயா,”சாமி, என்ன ஆச்சு?” என்று கத்தினார்.
அவனது தவறை உணர்ந்தவன், கழட்டிய சட்டையை வைத்து அந்த இடத்தை மறைத்து, அவரருகே வந்து, நேராக அவரைப் பார்த்து,”ஓர் இடத்திலே கொஞ்சம் வேகமா போய் இடிச்சுக்கிட்டேன்..கொஞ்சம் போல சிராய்ப்பு தான்..டாக்டர்கிட்டே காமிச்சிட்டு தான் வரேன்.” என்றான்.
இடது தோள்பட்டையின் நிறமே மாறியிருந்ததால்,”என்ன சாமி சின்ன சிராய்ப்புன்னு சொல்றீங்க…இரத்தம் கட்டின மாதிரி இருக்கு.” என்றார் விஜயா.
“தெரியும் ம்மா..மாத்திரை எடுத்திருக்கேன்..ஒண்ணுமாகாது..வெ ந்நீர்லே குளிச்சா சரியாப் போயிடும்..நீங்க போய் உப்பும்மாக்கு ஏற்பாடு செய்யுங்க.” என்று அவரை சமாதானம் செய்து சமையலறைக்கு அனுப்பி வைத்தான் ஷண்முகம்.
மகனின் காயத்தைப் பார்த்தவுடன் விஜயாவிற்கு பதற்றமானது. சற்றுமுன் மகாவிடம் பேசியது மனத்திலிருந்து மறைந்து போனது. குளித்து முடித்து, ஷார்ட்ஸ் டீ ஷர்ட்டில் வரவேற்பறையில் அமர்ந்து அவனது கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் ஷண்முகம். சமையலறையில் இருந்தாலும் விஜயாவின் கவனம் முழுவதும் தொடர்ந்து,’ஸர், ஸர், ஸர்’ என்று ஒரேயொரு வார்த்தையைக் கைப்பேசியில் உச்சரித்துக் கொண்டிருந்த மகன் மீது தான் இருந்தது. அந்த அழைப்பை முடித்து விட்டு பலமான சிந்தனையில் ஆழந்திருந்த மகனைப் பார்த்து கவலையடைந்த விஜயா, கேஸ் அடுப்பை அணைத்து விட்டு வரவேற்பறைக்கு வந்து மகன் எதிரே அமர்ந்தார். அவர் வந்ததை உணராமல் யோசனையில் இருந்தவனை,”சாமி” என்று அழைக்க,
“சொல்லுங்க ம்மா.” என்று அவரை நோக்கியவனிடம்,
“என்ன பிரச்சனை சாமி?” என்று விசாரித்தார்.
இன்று மிகப் பெரிய சொதப்பல் அரங்கேறி இருந்தது. காரணம் யார்? என்ன? என்ற அலசல், அறிக்கை தாக்கல் தான் நாளை அலுவலகத்தில் நடக்கப் போகிறது. அதைப் பற்றிய யோசனையில் தான் ஆழ்ந்திருந்தான். அவனை அறியாமல் அவனது வேலையின் டென்ஷனை அம்மாவிடம் கடத்தி விட்டானென்று புரிய, டக்கென்று வேறொரு முகத்தை மாட்டிக் கொண்டவன்,”யாருக்கு?” என்று சிரிப்போடு கேட்க, அந்தச் சிரிப்பில் குழம்பிப் போன விஜயா,”உங்களுக்கு தான் சாமி..ஸர், ஸர் ந்னு ஒரே வார்த்தையைச் சொல்லிட்டு இருந்தீங்க..அடிப்பட்டிட்டு வந்திருக்கீங்க.” என்று அடுக்க,
“ஸ்டாப்..ஸ்டாப்..அடி வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லமா விட்டீங்களே.” என்று சொல்லி உரக்க சிரித்தவன்,”அம்மா, என் மேலதிகாரிகிட்டே அந்த ஒரு வார்த்தைக்கு மேலே நான் பேசவே முடியாது..அவரை யாரும் கேள்வி கேட்க முடியாதுன்னு இல்லை அதுக்குன்னு தனியா குழு இருக்கு..நம்ம கருத்தை அங்கே தான் சொல்லணும்..இப்போ அந்த இடத்திலே வலிஇல்லை ம்மா.” என்று தோள்பட்டையை சுழற்றிக் காட்டினான் ஷண்முகம்.
அதைப் பார்த்து விஜயாவின் மனத்தில் நிம்மதி குடியேற, முகத்தில் இருந்த சஞ்சலம் வெளியேறியது.