அத்தியாயம் – 15

மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க,

“இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்.” என்றார்.

“எனக்கு தெரிஞ்சவங்களா?” என்று உரக்க யோசனை செய்த போது அழைப்பு நின்று போனது.

“ஆமாம்..நம்ம சொந்தக்காரங்களா கூட இருக்கலாம்..பிரகாஷ் பொண்டாட்டி நித்யா உனக்கு நெருக்கமாச்சே அவளா இருக்குமோ.” என்று லேசாகப் பொறாமையைக் கலந்து அவரது சந்தேகத்தை வெளியிட்டார் மகா.

அக்காவின் கூற்றிலிருந்த உண்மையை விஜயாவினால் மறுக்க முடியவில்லை. பிரகாஷின் மனைவி நித்யாவிற்கும் அவருக்கும் இடையே அன்பான உறவு தானாக அமைந்து விட்டது. பிரகாஷின் திருமணத்திற்கு முன்னர் சில மாதங்களும் திருமணத்திற்குப் பின்னர் சில மாதங்களும் அண்ணன் வீட்டில் தான் இருந்தார் விஜயா. சென்னையில் ஒரு தனியார் கம்பெனியின் மார்கெட்டிங் பிரிவில் மேலாளராக வேலை செய்து வருகிறான் பிரகாஷ். வேலை விஷயமாக அடிக்கடி அவன் வெளியூர் செல்வது வழக்கம். கல்யாணத்திற்கு முன் வெளியூர் செல்வதில் பெரும் ஆர்வம் காட்டியவன் கல்யாணத்திற்குப் பின் அப்படியே நேர்மாறாக உணர ஆரம்பித்தான். 

புது மனைவியைப் பிரியும் அவஸ்த்தை ஒரு காரணமாக இருந்தாலும் அவனில்லாமல் அவன் வீட்டில் அவள் பொருந்திப் போக கஷ்டப்படுவது அதை விட பெரிய காரணமாக இருந்தது. அவனுடைய அம்மாவின் சிடுசிடு குணத்தைப் பற்றி இத்தனை நாள்கள் கவலைப்படாது இருந்தவன் திருமணத்திற்கு பின் அவனுடைய மனைவி அடிக்கடி அதற்கு பலியாவதை உணர்ந்து, அவரை திருத்த முற்பட, மகனுக்கும் அம்மாவிற்கும் முட்டிக் கொண்டது. வேலைக்குப் போகும் மருமகளோடு மீனாவிற்கு ஒத்துப் போகவில்லை. நிதானமாக எழுந்து அதை விட நிதானமாக காப்பி, டிஃபன் செய்து, மதியம் இரண்டு மணிக்கு மேல் மதிய உணவை உண்டு, இரவு உணவை பக்கத்து ஓட்டலிருந்து வரவழைத்து என்று ஒழுங்கில்லாமல் வீட்டை நிர்வகித்து வந்தார் மீனா. அதை நிர்வாகமென்றே சொல்லக் கூடாது. வீட்டில் இருந்த ஆண்பிள்ளைகள் அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு மூன்று வேளையும் வெளியே சாப்பிட பழகிக் கொண்டனர். துணி துவைத்து வீட்டை சுத்தப்படுத்த மட்டும் ஓர் ஆளை வேலைக்கு வைத்தனர். அந்த ஆள் வேலைக்கு வராத நாள்களில் வீட்டைப் பார்க்கவே முடியாது அத்தனை அலங்கோலமாக இருக்கும். எந்த வேலையும் செய்யாமல், உடம்பை வளைக்காமல், வாய்க்கும் மட்டும் வேலை கொடுத்துப் பழகி இருந்தார் மீனா. 

விஜயா வந்தால் தான் அந்த வீட்டில் மாற்றம் வரும். சரியான நேரத்திற்கு சாப்பாடு, டிஃபன் தயாராகும். வீடும் ஓர் ஒழுங்கில் வந்து நிற்கும். மீனாவின் கடுகடு குணத்திற்கு வடிகால் கிடைக்கும். கிரிக்கும் மனைவியின் சிடுசிடுப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். மீனாவின் சோம்பேறித்தனம், துர்குணம் கிரிக்குத் தவறாக தெரிந்தாலும் அதைச் சரி செய்ய அவர் ஒன்றும் செய்யவில்லை. தங்கையை மனைவி டார்ச்சர் செய்வது தெரிந்தாலும் அதையும் கண்டு கொள்ளவில்லை. அவருடன் விஜயா தங்கி இருக்கும் நாள்களில் தான் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல கவனிப்பும் அன்பும் கிடைத்தால் மனைவி செய்த அட்டூழியங்களைப் பொருட்படுத்தியதில்லை. 

பிரகாஷ், சத்யன் இருவருக்கும் என்றைக்கும் அவர்களின் அம்மாவின் குணம் தவறாக தெரிந்ததில்லை. விஜயாவும் மீனாவை எதிர்த்து பேசாமல் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு போனதால் பெரிதான சச்சரவு எதுவும் அவர்களுக்குள் வந்ததில்லை. ஆனால் மகாவிற்கும் மீனாவிற்கும் இடையே  சின்ன விஷயம் கூட பெரிதாகி, வெடித்து, முகம் திருப்புவது, பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வது வரை செல்லும். அதனால் மீனாவின் வீட்டில் விஜயா இருக்கும் போது தங்கையுடன் அதிகமாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார் மகாலக்ஷ்மி. அதே போல் மகா வீட்டில் விஜயா இருக்கும் போது மீனாவும் அவரோடு உறவாட மாட்டார்.

இந்த உட்பூசல்கள் வெளியே தெரியாமல், தாய் மாமனாக கிரியைச் சபையில் நிறுத்தி மூன்று மகள்களின் திருமணத்தை செய்து முடித்திருந்தார் மகாலக்ஷ்மி. இரண்டு அத்தைகளுக்கும் பெரிதாக மரியாதை எதுவும் செய்யாமல் பிரகாஷின் திருமணத்தை நடத்தியிருந்தார் மீனா. பெண் பார்த்ததிலிருந்து திருமணம் வரை கிரியின் சொந்தங்கள் பார்வையாளர்கள் தான். மகா எந்த விஷயத்திலேயும் பட்டுக் கொள்ளவில்லை. விஜயாவை சேர்க்கவேயில்லை மீனா. அதன் விளைவாக மீனாவின் குண நலன்கள் பற்றி பெண் வீட்டினர்க்கு முக்கியமாக மருமகள் நித்யாவிற்கு தெரியவில்லை. புகுந்த வீட்டிற்கு வந்த பின் தான் மாமியாரின் வர்ணஜாலங்கள் கண்களுக்கு தென்பட்டது.

வேலையிலிருந்து திரும்பிய மருமகளிடம் தனக்கும் காப்பி போட்டு கொண்டு வரும்படி கட்டளையிட்டு, இரவு உணவை சமைக்க ஓர் உதவி கூட செய்யாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து ஆர்டர் போட்டு என்று ஆறிலிருந்து பத்து மணிக்குள் அதாவது நானகு மணி நேரத்தில் மீனாட்சியின் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து பிறந்த வீட்டிற்கு நித்யா மூட்டையைக் கட்ட, அவளைத் தடுத்து, அவளை ஆறுதலாகத் தாங்கிக் கொண்டது விஜயா தான்.

“என்ன விஜயம்மா அத்தை இப்படி நடந்துக்கறாங்க.” என்று அவர் தோளில் சாய்ந்து கண் கலங்கிய போது,

“அண்ணி அப்படி தான்ம்மா..சுறுசுறுப்பா வேலை செய்தா ஏதாவது வியாதி வந்து உட்கார்ந்திடும்..இப்போ செய்யற கொஞ்சம் நஞ்சம் கூட நின்னு போயிடும்..நான் இருக்கேனில்லே நீ கவலைப்படாதே ம்மா.” என்று ஆறுதல் அளித்தார் விஜயா.

‘நீங்க இல்லாத போது?’ என்று எழுந்த கேள்வியை விஜயாவிடம் வெளியிடாமல் கணவனிடம் வெளியிட, ‘ஹோட்டல்’ என்று அவன் அவர்களின் வாழ்க்கைமுறையைப் பகிர,’வீட்லே சும்மா உட்கார்ந்திருக்கறவங்களை எந்த வேலையும் சொல்ல மாட்டீங்களா? சமையல் வேலை கூட செய்யாம வெளியே வாங்கிச் சாப்பிடுவோம்னு சாதாரணமா சொல்றீங்க..எல்லா வேலைக்கும் விஜயாம்மா, அப்புறம் ஒரு வேலைக்காரி, இப்போ நான்..வேலைக்கும் போய்கிட்டு இங்கேயேயும் முழு வேலை செய்ய என்னாலே முடியாது..ஒரு சமையல்காரியை வேலைக்கு வைங்க.” என்று கறாராக மறுத்து விட்டாள்.

அம்மா பித்தத்தை வேப்பிலை அடித்து மனைவி ஓட்டி விட்ட பிறகு தான் விவாகரத்தான விஜயா அத்தைக்கு அவர்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இருளில் இருந்த பிரகாஷின் புத்திக்கு அத்தை தான் இத்தனை வருடங்களாக அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறார் என்ற பிரகாசம் கிடைத்தது. விஜயா இருந்தவரை நித்யாவிற்கும் மீனாவிற்கு பிரச்சனை எதுவும் பெரிதாக வரவில்லை. அப்படியே வந்தாலும் இடையில் புகுந்து அது பெரிதாகும் முன் அதை முடித்து வைத்து விடுவார். அவரில்லாத போது அந்த வீட்டில் என்ன நடக்கிறதென்று அவருக்குத் தெரிய வந்த போது, மீனாவைப் போல் நித்யாவும் ஏட்டிக்குப் போட்டியாக வீட்டைப் புறக்கணித்ததில் அவள் மீது அவருக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. 

சிந்துவின் பிரசவதிற்ககற்காக மகா அக்கா வெளிநாடு போக திட்டமிட்டது போது எப்போதும் போல் அண்ணன் வீட்டிற்குச் சென்று விடுவோமென்று நினைத்திருந்தார் விஜயா. ஆனால், கடைசி நிமிடத்தில், மீனாவின் அண்ணன் உடல் நிலை சரியில்லை என்று அவரின் பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டனர் கிரியும் மீனாவும். அந்த நேரத்தில் தான் விஜயாவிற்கு ஓர் உண்மை புரிந்தது. அவர் வளர்த்த பிள்ளைகள் தான் என்றாலும் அக்காவின் மகள்களோ இல்லை அண்ணனின் மகன்களோ அவர்களோடு வந்து இருக்கும்படி அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஜெயந்தி, வசந்தி இருவரும் திருமணமாகி வேறு வீட்டிற்குச் சென்று விட்டதால் அவர்கள் அழைக்காததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல் அண்ணனின் இளைய மகன் சத்யன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனை இந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. ஆனால், பிரகாஷ் அப்படி இல்லையே. அவன் அழைக்காமல் அண்ணன் வீட்டிற்குச் செல்ல விஜயா விரும்பவில்லை. 

உடன்பிறப்புக்களின் குடும்பத்தினருடன் பூரணமான உறவு இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நெருக்கமாக இருந்த அந்த உறவில் கீறல் ஏற்பட, ஒரு திரை விழ, தனித்து விட்டது போல் உணர, அந்த  நாள் வரை மனதால் தேடியிராத மகனைத் தேடிப் போனார் விஜயா. அதன் பின் போயிருக்கக் கூடாதோ என்று பலமுறை நினைத்தாலும் அவரது முடிவை மாற்றிக் கொள்ள அவர் முயன்றாலும் அவருடைய மகன் விடவில்லை. அவனுக்குக் கிடைத்த வாய்ப்பை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டான்.