அத்தியாயம் – 14

அவரின் தேநீரை சமையலறையிலேயே குடித்து முடித்தவர் ஷிக்காவிற்காக தயார் செய்த தேநீரோடு வரவேற்பறைக்கு சென்றார். அதை மேஜை மீது வைத்து விட்டு லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கடைக்குs சென்றார் ஜோதி. கைக்குழந்தையோடு இருந்த பெண்மணிக்கு பார்ட்டியில் அணியக் கூடிய விலையுர்ந்த சல்வார் கமீஸ் செட்களைக் காட்டிக் கொண்டிருந்தாள் ஷிக்கா. ஜோதியைப் பார்த்து புன்னகைத்த அந்த வாடிக்கையாளர் ஷிக்காவின் உறவினர் என்று அடையாளம் கண்டு கொண்ட ஜோதி பதிலிற்கு மெலிதாகப் புன்னகை செய்தார்.

ஒரு கையால் குழந்தையைச் சமாளித்தபடி இன்னொரு கையால் துணியைப் புரட்டியபடி ஷிக்காவிடம் ஹிந்தியில் அவரைப் பற்றி ஏதோ சொல்ல, அவரைப் பற்றிய் ஆர்வம் அவளின் உறவினர்களுக்கு எழுவது வழக்கமானது என்பதால் அதைப் புறக்கணித்து, ஷிக்காவிடம்,”உனக்கு டீ போட்டு வைச்சிருக்கேன்.” என்றார் ஜோதி.

அதற்கு ஷிக்கா எதிர்வினை ஆற்றும் முன்,”ஷிக்கா நல்ல வேலை செய்த..டீ போட்டு கொடுக்கற மாமியார் சல்லடை போட்டு தேடினாலும் நம்ம ஆளுங்கள்லே கிடைக்க மாட்டாங்க..கால்லை பிடிச்சு விட்டு, தலையை மாசாஜ் செய்து விட்டு, வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டு, கேட்கறதையெல்லாம் கைலே கொண்டு போய் கொடுத்து கைக்குழந்தையை விட கவனமா என் மாமியாரை நான் பார்த்துக்கிட்டாலும் என்ன பிரயோஜனம்? ஒரு நாள் கூட என்னைப்  பாராட்டினதில்லை..பாராட்டை விடு ஒரு நாள் கூட ஏதாவது குறை சொல்லாம இருந்ததில்லை..அதுக்கு மேலே உன்னோட பய்யா. ’மருமக தான் மாமியாருக்கு செய்யறது கடமை..அதுக்கு எதுக்கு பாராட்டு? கடமையைச் சரியா செய்யலைன்னா குறை சொல்லத் தான் செய்வாங்க..அதைக் கேட்டு நீ உன்னைத் திருத்திக்கணும்னு’ எனக்கு அட்வைஸ் செய்வார்..உன்னைப் போல அதிர்ஷ்டசாலி யாருமில்லை..புருஷன், மாமியார், நாத்தனார்னு எல்லோரும் உன் பாட்டுக்கு ஆடறாங்க..உனக்கு ஒண்ணுன்னா ஓடி வராங்க..உன்னோட கடமையை அவங்க செய்யறாங்க..என்ன ஒரு மாமியார் அமைஞ்சிருக்காங்க உனக்கு..” என்று பஞ்சாபியில் பொறாமையைக் கொட்டினார் அந்தப் பெண்மணி.

“உண்மை தான் பாபி..நான் அதிர்ஷ்டசாலி தான்..நீங்களும் மதராஸியைக் கல்யாணம் செய்திருந்தா உங்களுக்கும் இந்த மாதிரி வாழ்க்கை கிடைச்சிருக்கும்.” என்று பஞ்சாபியில் பதில் சொல்லி சிரித்த ஷிக்காவின் சிரிப்பு அவளது கண்களை எட்டவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இது போன்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டுமோ என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு. அவளின் திருமணத்தை அக்குவேராக ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து விட்டனர் அனைவரும். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் அந்த ஆராய்ச்சியை தொடர்வது ஏன்யென்று அவளுக்குப் புரியவேயில்லை. 

“மதராஸியா?” என்று முகத்தை சுளித்தாள் அந்தப் பெண்.

இது போல் எதிர்வினை பழகிப் போனதால்,”ஒரு செட் தானா பாபி? பில் போடட்டுமா?” என்று வினவினாள் ஷிக்கா.

“பார்த்து போடு..சொந்தக்காரின்னு தான் இங்கே வரேன்..எங்களோட பாக்கெட்லேயும் (pocket, செக்டரோட உட்பிரிவு) அத்தனை பொட்டீக் கொட்டிக் கிடக்கு.” என்றாள் அந்தப் பெண்.

‘சரி..அங்கேயே போங்க’ என்று சொல்ல நினைத்ததை முழுங்கிக் கொண்டு கம்மியாக பில் போட்டாள் ஷிக்கா. அதில் பெரிய புன்னகை மலர்ந்தது அந்த பெண்மணியின் முகத்தில். புதுத் துணியைக் கவரில் போட்டு அவரிடம் நீட்ட, அதைப் பெற்றுக் கொள்ளாமல்,

“போன தடவை கை தான் டைட் ஆகிடுச்சு..இந்தமுறை அதை மட்டும் சரி செய்திடு..கமீஸ்லேர்ந்து துணியை எடுத்து சல்வார்லே வைச்சு அதிலே நூல் வேலைப்பாடு செய்யணும்..சல்வார் கேட்லாக் எடுத்திட்டு வா..டிசைன் பார்த்து சொல்றேன்.”  என்று ஆர்டர் போட்டார்.

“பாபி வெளியே தைச்சுக்கோங்க..மாண்ட்டிக்கு உடம்பு சரியாகறவரை தைக்கற வேலை எடுக்கப் போகறதில்லை.” என்றாள் ஷிக்கா.

“மாண்ட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு எனக்குத் தெரியாதா? இன்னைக்கு கடை திறந்திருக்கான்னு கேட்க மாஸிக்கு (சித்தி) ஃபோன் செய்து பேசிட்டு தான் வந்தேன்..காலைலேர்ந்து துணி தான் தைச்சிட்டு இருந்தேயாம்..அதை டெலிவரிக்கு கடைக்கு எடுத்திட்டு போயிட்டேன்னு சொன்னாங்க..மாண்ட்டியை மாஸியும் உன்னோட மாமியாரும் தானே பார்த்துக்கறாங்க..இரண்டு நாள் கூட எடுத்துக்க எனக்கு தைச்சு கொடு.” என்று பிடிவாதமாக இருந்தார் அந்தப் பெண்மணி. அதற்கு,

வெகு நிதானமான குரலில்,”கேட்லாக்லே இருக்கற மாதிரி தைக்கணும்னா டிசைனுக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபா ஆகும்.” என்றாள்.

“இரண்டாயிரமா?” என்று வாயைப் பிளந்தார் அந்தப் பெண்மணி.

“கேட்லாக் டிசைனெல்லாம் வேலை அதிகம்..நீங்க சொல்ற மாதிரி மாண்ட்டியைப் பார்த்துக்க அம்மாவும் ஆன்ட்டியும் ஹெல்ப் செய்தாலும் தையல் வேலைக்கு உதவி செய்ய யாருமில்லை..ஒரு ஸுட்டுக்குன்னு வேலைக்கு ஆள் எடுத்தாலும் அந்த வேலை முடியறவரை அவங்களுக்குத் தினமும் சம்பளம் கொடுத்து தான் ஆகணும்..அதுக்கு தான் இரண்டாயிரம் ஆகும்னு சொன்னேன்..நான் தான் செய்யணும்னா சிம்பில் டிசைன் கூட எனக்கு இரண்டு வாரம் எடுக்கும்..ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒரே இடத்திலே நான் உட்கார்ந்து வேலை செய்யறதே பெரிய விஷயம்..இன்னைக்கு தைச்சு எடுத்து வந்ததெல்லாம் இரண்டு வாரம் முன்னாடி கொடுத்த ஆர்டர்..எல்லாம் சிம்பில் ஸூட்..அது முடிக்கவே எனக்கு நேரம் கிடைக்கலை..வேலைப்பாடு டிரெஸ்ஸை தயார் செய்து கொடுக்க இரண்டு வாரத்துக்கு மேலேயும் ஆகலாம்..அம்மா வீட்டு மாடிலே கட்டியாவைப் (khatia, cot) போட்டு ஏற்பாட்டை ஆரம்பிக்கறேன்..ஆளை வரவழைக்கறேன்.. என்ன சொல்றீங்க..தையலுக்கு பில் போடட்டும்மா?” என்று கேட்டாள்.

உடனேயே,“அடுத்தமுறை உன்கிட்டே தைச்சுக்கறேன்..நீ மாண்ட்டியை நல்லபடியா பார்த்துக்க..துக் நிவாரன் சாஹிப்கிட்டே (Dukh nivaran sahib) வேண்டுதல் வை..ஒருமுறை அவனை அங்கே அழைச்சிட்டு போ.” என்று ஆலோசனை அளித்து, துணிக்கான தொகையை மட்டும் கொடுத்து விட்டு கவரை எடுத்துக் கொண்டு வெளியேறினார் அந்தப் பெண்மணி.

ஷிக்காவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் இடையே பஞ்சாபியில் நடந்த உரையாடல் புரியவில்லை என்றாலும் ஷிக்காவின் முகபாவனையிலிருந்து அவளது கடுப்பை உணர்ந்த ஜோதி,”டீ ஆறிப் போயிருக்கும்..சூடு செய்து கொண்டு வரவா?” என்று மெதுவாக கேட்டார்.

“வேணாம் ஆன்ட்டி..நீங்க கடையைப் பார்த்துக்கோங்க..நானே சூடு செய்துக்கறேன்.” என்று வீட்டினுள்ளே சென்று விட்டாள் ஷிக்கா.

கௌண்டரின் ஒரு பக்கத்தில் அவர் பாதியில் விட்டுச் சென்ற துணிகளை இஸ்திரி போட்டு அடுக்கி வைத்திருந்தாள் ஷிக்கா. அதை ஒரு கவரில் போட்டு வைத்தவர், அங்கிருந்தபடியே,”யாரோடது இந்த ஆர்டர்?” என்று குரல் கொடுத்தார் ஜோதி.

அதற்கு,“மதராஸி ஆன்ட்டியோடது..பில் எடுத்து வைச்சிருக்கேன் அதிலே அவங்க நம்பர் இருக்கு..ரெடின்னு அவங்களுக்கு ஃபோன் செய்து சொல்லிடுங்க..என் ஃபோன் அங்கே தான் இருக்கு.” என்று பதில் குரல் கொடுத்தாள் ஷிக்கா.

‘மதராஸி ஆன்ட்டியா? யாரது?’ என்று யோசித்தபடி கல்லாவில் அமர்ந்த ஜோதி, ஷிக்காவின் கைப்பேசியிலிருந்து பில்லில் இருந்த கைப்பேசி இலக்கிற்கு அழைத்தார். லைன் பிஸி என்று தகவல் கிடைக்க சிறிது நேரம் கழித்து அழைக்கலாமென்று முடிவு செய்தார்.

அதே நேரத்தில், மகாவுடன் பேசிக் கொண்டிருந்த விஜயா,”அக்கா, யாரோ ஃபோன் செய்யறாங்க..உன்கிட்டே அப்புறமா பேசறேன்.” என்றார்.

“யாரோவா? யார்ன்னு தெரியலைன்னா அழைப்பை எடுக்காத..அதெல்லாம் ஃப்ராட் அழைப்பு..நான் எடுக்கறதில்லை..அந்த நம்பரை உடனே பிளாக் செய்திடு டீ.” என்று தங்கையை எச்சரிக்கை செய்தார் மகா.

“என் நம்பருக்கு அந்த. மாதிரி யாரும் கூப்பிடறதில்லை க்கா..அப்படியே கூப்பிட்டாலும் அவங்க பேசறது எனக்குப் புரியறதில்லை..உடனே கட் செய்திடுவேன்..சாமி இருந்தா அவன்கிட்டே கொடுத்திடுவேன்..அவன் பிளாக் செய்திடுவான்.” என்றார் விஜயா.

“இப்போதான் அவன் இல்லையே..அதான் எடுக்காதேன்னு சொல்றேன்..ஓடிபியைக் கொடு, அகௌண்ட் நம்பரைக் கொடுன்னு உன்கிட்டேயிருந்து எப்படியாவது வங்கி விவரத்தை கரந்திடுவாங்க..அப்புறம் ஷண்முகமே நினைச்சாலும் ஒண்ணும் செய்ய முடியாது..அத்தனை வேகமாக பணத்தைத் தூக்கிடறாங்களாம்.” என்று நாட்டு நடப்பைச் சொன்னார் மகாலக்ஷ்மி.

“அந்த விவரமெல்லாம் என்கிட்டே இல்லையே..அண்ணனைக் கேட்கணும் இல்லை மாமாவை தான் கேட்கணும்..இல்லைன்னா சாமிக்கு தான் ஃபோன் போட்டு கேட்கணும்..அப்படி செய்தா அவங்க அவ்வளவு தான்.” என்று சொல்லி சிரித்தார் விஜயா.

“அது சரி..நம்ம கணக்குலே என்ன இருக்குன்னு நமக்கு தெரியாது..அதை எப்படி எடுக்கணும்னு தெரியாது..கத்துக்கோ, கத்துக்கோன்னு உன் மாமா என்னை துளைச்சிட்டு இருக்கார்..அடுத்த தடவை உன்னைத் தனியா அனுப்பி விடறேன்னு பயமுறித்திட்டு இருக்கார்.” என்றார் மகா.

அக்கா, தங்கை இருவருக்கும் வரவு, செலவு, சேமிப்பு, வட்டி, கடன் என்று எந்த விவரமும் தெரியாது. மகாவிற்கு தெரிந்து கொள்ள விருப்பமில்லை. விருப்பமிருந்தாலும் தெரிந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலை விஜயாவிற்கு. அண்ணன், அக்கா இரண்டு பேர் வீட்டிலும் மாறி மாறி இருப்பதால் இருவரும் சரிசமமாக தான் அவரது பணத்தைப் பங்கு பிரித்துக் கொள்வார்கள். ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள். அதன்படி எத்தனை மாதம் எந்த வீட்டில் இருக்கிறாரோ அத்தனை மாதத்திற்கான தொகையை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு விடுவார்கள். 

அவரது அனைத்து தேவைகளையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பதால் அவருடைய அந்தப் பணத்தை என்ன செய்தார்கள், எப்படிச் செலவு செய்கிறார்கள் என்று விஜயா கேட்டதில்லை. அவ்வப்போது அவரது பெயரில் வைப்பு நிதி கணக்கை திறக்கும் ஷண்முகமும் அந்த விவரங்களை பெரியப்பா, மாமாவுடன் பகிர்ந்து கொள்வது தான் வழக்கம். அவனுமே அம்மாவின் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறது? அதை யார் பார்த்துக் கொள்கிறார்கள், எப்படி அதை பெருக்குகிறார்கள் என்று எந்த விவரமும் கேட்டதேயில்லை. அம்மாவை ஏமாற்ற வேண்டுமென்று நினைத்திருந்தால் அது எப்போதோ நடந்திருக்கும் என்பதால் பணத்தைப் பற்றி கேள்விகளில் அவனது நேரத்தை வீணடிக்கவில்லை.

விஜயாவின் பணத்திற்கும் நகைக்கும் அக்கா, அண்ணன் இருவருக்குமிடையே கொஞ்சம் போட்டி, ஆசை இருக்கத் தான் செய்தது. அதுவும் மகாவிற்கு மூன்று பெண் குழந்தைகள் என்பதால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்,’மூணு பேருக்கும் ஒரே போல செய்யணும்..சின்னவ சிந்துக்கு கல்யாண வயசு வரும் போது உன் மாமா ரிடையராகி நிறைய வருஷமாயிடும்..அதையெல்லாம் யோசனை செய்து தான் அந்தப் பிள்ளையே வேணாம்னு நினைச்சேன்..ஆனா எல்லோரும் சேர்ந்து கடவுளா கொடுத்த வரம் அது மகனா இருந்தான்னு ஆசை காட்ட, நானும் அந்த வயசிலே கஷ்டப்பட்டு பெத்துக்கிட்டேன்..கடைசிலே அதுவும் பொண்ணா போச்சு..நீ இருக்கறதுனாலே தான் தைரியமா இருக்கேன்.” என்று விஜயாவிடம் பூடமாக அவருடைய பெண்களைக் கரையேற்ற விஜயாவின் உதவி கண்டிப்பாக தேவை வலியுறுத்துவார் மகா.