அத்தியாயம் – 13

கைப்பேசி அழைப்பைச் சினேகா துண்டித்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ஜோதி. வெளியே, கடையில், வாடிக்கையாளருடன் ஷிக்கா உரையாடவது காதில் விழுந்தாலும் அது அவரது கருத்தில் பதியவில்லை. கவனம், கருத்து இரண்டையும் மகள் தான் நிறைந்திருந்தாள். காலமானது அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க இருபத்தி நாலு வயதாகியும் மகளின் கல்யாணம் இன்னும் கை கூடவில்லையே என்று கவலையானது ஜோதிக்கு. எப்படியாவது ஒரு நல்ல குடும்பத்தில் சினேகாவைத் திருமணம் செய்து கொடுக்க அவரால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார். ஆன்லைன் மேட் ரிமோனியல் சைட்டில் சினேகாவின் விவரங்களைப் பதித்து வைத்து ஒரு பலனும் கிட்டவில்லை. இவர்கள் தரப்பில் பெரிய குறையாக, மனோகரின் காதல் திருமணம் தான் பலரது கண்களைப் புண்ணாக உறுத்தியது. 

சில  மாப்பிள்ளை வீடுகளிலும் அதே போல் திருமணங்கள் நடந்திருக்க, அந்த வரன்களுக்கு சினேகாவின் வேலை பிடிக்கவில்லை. பப்ளிகேஷனில் காப்பி எடிட்டராக வேலை செய்து கொண்டிருந்தாலும்,’மீடியா வேலையை விட்டிட்டு வேற வேலை தேடிக்கணும்..ஸ்கூல்லே இங்க்லிஷ் டீச்சர் வேலை சரியா இருக்கும்…பி எட் படிச்சா அரசாங்க வேலை கிடைக்கும்.’ என்று மாப்பிள்ளை வீட்டினர் ஆலோசனை அளிக்க, அதை மகளிடம் ஜோதி தெரிவிக்க,’மாப்பிள்ளை பையனோட வேலை எனக்கு பிடிக்கலை..ஐ டி வேலைலே ஷிஃப்ட்லே போகறது எனக்கு ஒத்து வராது..அந்த வேலையை நம்பவே முடியாது..நிச்சயம் செய்யும் போது வேலை இருக்கும் கல்யாணம் போது வேலை இருக்காது..காரணம் சொல்லாம சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடறாங்க..அதனாலே அவன் வேற வேலை தேடிக்கிட்டா எனக்கு இந்தக் கல்யாணம் ஓகே.’ என்று சினேகா பதிலடி கொடுக்க, இடையே மாட்டிக் கொண்ட ஜோதிக்கு தான் தலை வெடித்தது.

மனோகர், ஷிக்கா திருமணம், சினேகாவின் தோற்றம், படிப்பு, வேலை என்று அனைத்தும் ஒத்து வந்தாலும், லௌகீக விஷயங்களால் மேலே முன்னேறாமல் ஆரம்பக் கட்டதிலேயே நின்று போனது சில வரன்கள். ‘இந்தத் தடையெல்லாம் தாண்டி என் பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை அமையப் போகுது..எப்போ அவ லைஃபை செட்டில் செய்து, எப்போ மீதி கடனை அடைச்சு எந்தக் கவலையுமில்லாம அக்கடான்னு இருக்கப் போறேன்? இல்லை இன்னும் வேற ஏதாவது கஷ்டம் என் விதிலே எழுதி வைச்சிருக்கோ’ என்ற பெருங்கவலை அவரது சின்ன சின்ன சந்தோஷங்களைப் பறித்திருந்தது. 

கடந்த இரண்டு வருடங்களில், பல சமயங்களில், வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை எடுத்து காசியப்பனின் கடனை அடைத்து விடலாமென்று முடிவு செய்த போதெல்லாம் பொட்டீகிலிருந்து கிடைக்கப் போகும் வருமானத்திலிருந்து கடனை அடைக்கப் போவதாக மனோகர் வாக்கு கொடுத்தது மனத்தில் வந்து அந்த முடிவை தகர்த்து விடும். இதுவரை பொட்டீக் வருமானத்திலிருந்து அவருக்கு ஒரு பைசா கொடுக்கவில்லை மனோகர். கடை தொடங்கி கிட்டதட்ட இரண்டு வருடங்களாகியிருந்தாலும் பெரிதாக வருமானம் வரவில்லை என்பதும் உண்மை என்பதால் ஜோதியும் பணத்தைக் கொடுக்கும்படி மனோகருக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

மனோகருக்கு வியாபாரம் பற்றி ஏபிசிடி தெரியாது. அவனது அறிவிற்கு மாதச் சம்பளத்திற்கு வேலை செய்வது தான் அவனுக்குப் பொருந்தி வரும் என்பதால் தான் வியாபாரப் பின்னணியிலிருந்து வந்த ஷிக்காவிற்கு பொட்டீக் வைத்துக் கொடுத்திருந்தான். இந்த முடிவு கல்யாணத்திற்கு முன்னரே அவர்கள் இருவரும் எடுத்த முடிவு என்று ஜோதிக்கு தெரியவில்லை. அதை விட அவரது ஒப்புத்தலுடன் எடுக்கப்பட்ட முடிவு என்று மனோகர் சொன்னதை கேட்டு அவருக்கு மயக்கம் வராத குறை தான்.

பொட்டீக் ஆரம்பிக்கும் ஐடியா கல்யாணத்திற்கு முன்னரே தீர்மானம் செய்தது அதற்கு ஜோதியும் ஒப்புக் கொண்டார் என்று மனோகர் வலியுறுத்த, ‘நீயும் ஷிக்காவும் முடிவு செய்திருக்கலாம்..எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது..இப்போ தான் என்கிட்டே சொல்ற.’ என்று ஜோதி அதை தீவிரமாக மறுக்க, ‘சாகேத் அங்கிள் நம்ம வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசின போது எல்லாத்துக்கும் ஓகே, ஓகேன்னு சொல்லிட்டு இப்போ நீங்க தெரியாதுன்னு சொல்றது பெரிய தப்பு ம்மா..அவனோட பங்கை மொத்தமாக் கொடுத்திடுங்க..அவன் பொட்டீக் திறக்கறான் இல்லை பொட்டிக் கடை திறக்கறான் உங்களுக்கு என்ன வந்திச்சு?’ என்று மத்தியஸ்தம் செய்து மனோகருக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கிக் கொடுத்தது சினேகா தான்.

கல்யாணம் பேசுவதற்காக அவர்களின் வீட்டிற்கு சாகேத் வந்த போது ஜோதியின் உடல் தான் அங்கே இருந்தது மனமானது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே  படுவேகமாக பயணம் செய்து கொண்டிருந்தது. சாகேத்தை அடுத்த நாள் அழைத்து வந்திருந்தால் கூட கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருப்பார் ஜோதி. காதலை வெளியிட்ட சில மணி நேரத்தில் சாகேத் கல்யாணம் பேச வர, அவரும் மனோகரும் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கவில்லை என்றாலும் மொழி தெரிந்திருந்தால் கூட தானாகவே அவர்கள் பேசிய அத்தனை விஷயங்களும் ஜோதியின் மனத்தில் பதிந்து போயிருக்கும்.

சாகேத்தை மனோகர் அறிமுகம் செய்து வைத்ததும் கணவர் இறந்த அன்றும் அதற்கு அடுத்தும் அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு அமைதியாகிப் போனார் ஜோதி. மனோகரும் சாகேத்தும் கல்யாணத்தைப் பற்றி பேசியது கொஞ்சமும் அவரது கருத்தில் பதியவேயில்லை. ஆனால் இடையிடையே ‘ஓகே தானே’ என்று ஜோதியின் ஒப்புதலை மனோகர் கேட்ட போது சரியென்று தலையசைத்து வைத்தது பின்னாளில் வினையாக வந்து சேர்ந்தது. 

ஜோதியின் ஹிந்தி மொழி வளம் மிகவும் குறுகியது. அக்கம் பக்கத்து வீட்டினரிடம் உடல் நலம் விசாரிக்க, அவரின் ஆரோக்கியத்தைப் பற்றி ஒன்றிரண்டு வாக்கியங்களில் தெரிவிக்க தெரியும். காய்கறிகளின் பெயர்கள்,  மளிகைச் சாமானின் அளவுகள், விலைகளை ஒப்பிட்டு பார்க்க ஹிந்தியில் சில எண்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார். எப்போதாவது தனியே வெளியே சென்றால், திசை, முகவரி விசாரிக்க என்று அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் நகரும் உரையாடல்களை எத்தனை முயன்றாலும் அவரால் புரிந்துகொள்ள முடியாது. அதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மனத்தில் பதித்து வைத்துக் கொண்டு மகனிடம் இல்லை மகளிடம் அர்த்தம் கேட்டு, அந்த உரையாடலை தமிழில் ஓட்டிப் பார்த்துக் கொள்வார். அவரது இந்த மொழி வறட்சியை அவனுக்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்தான் மனோகர். என்ன நடந்தாலும் ஷிக்கா தான் அவளுடைய அண்ணி என்பதால் சினேகாவும் அவனது திருமண விஷயத்தில் தலையிடவில்லை.

டிசைனிங் கோர்ஸ் படித்திருந்த ஷிக்காவிற்கு சொந்தமாக பொட்டீக் வைத்துக் கொடுக்க வேண்டுமென்று அவளது குடும்பம் போட்ட கண்டிஷனுக்கு அவரும்  ‘ஓகே’ சொல்லி இருக்கிறாரென்று தெரிய வந்த போது ஜோதிக்கு திக்கென்றானது. நல்லவேளை, ஆரம்பத்திலேயே, தனிக்குடித்தனம் என்ற சினேகாவின் முடிவினால் வரவு, செலவு கணக்குத் தனியாக இருப்பாதால் சச்சரவில்லாமல், பெரிய சண்டை வராமல் வாழ்க்கை கொஞ்சம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. 

கோந்து போல் ஒட்டியும் இல்லாமல், தொற்று நோய் போல் ஒதுங்கியும் போகாமல், அதட்டிப் பேசவும் அன்பு காட்டவும், ஷிக்கா உள்பட அவர்கள் வீட்டில் அனைவர்க்கும் போதிய உரிமை இருக்கிறது. மாமியார் என்று விழுந்து விழுந்து உபசரிக்கவில்லை என்றாலும் இதுவரை வெளிப்படையாக மரியாதை குறைவாக  ஜோதியை அவள் நடத்தியதில்லை. மூட் அவுட்டாக இருக்கும் சமயங்களில் அவரிடம் ஒரு வார்த்தை பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் மூடில் இருக்கும் போது முகம் முழுவதும் சிரிப்பும் மனம் முழுவதும் சந்தோஷமாக, ‘ஆன்ட்டி, ஆன்ட்டி’ என்று அவரைச் சுற்றி வருபவள் மீது கோபத்தைப் பிடித்து வைக்க மாட்டார் ஜோதி. ஆனாலும் எத்தனை முயன்றாலும் ’இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம்..செலவைக் குறைச்சுக்கலாம்’ என்ற ஆதங்கம் மட்டும் அவரை விட்டுச் செல்வதாக இல்லை.

ஷிக்காவின் வாழ்க்கைமுறைக்கு ஒரு கடை இல்லை பத்து கடை திறந்தாலும் போதாதென்று புரிந்த போது ஒரு தாயாக மகன் மனோகர் நிலையை நினைத்து விசாரமும் அவன் மீது பரிவிரக்கமும் உண்டானது. அதே சமயம் அவன் தருவதாக சொன்ன தொகையைத் தராமல் அலைக்கழிப்பதில் அவன் மீது அளவில்லா ஆத்திரமும் இருந்தது. இனியும் கடனை அடைக்காமல் இருப்பது நல்லது கிடையாதென்ற யோசனை செய்து கொண்டிருந்தவருக்கு திடீரென்று காசியப்பன் ஏன் இது போல் நடந்து கொண்டார் என்ற கேள்வி வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு ரூபாய் கூட அனுப்பாத போது  பொறுமையாக இருந்தவர் இப்போது ஏன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவர்களை அவமானப்படுத்தினார் என்று புரியவில்லை. அதைப் பற்றி யோசிக்க, யோசிக்க, அடுத்து என்ன நடக்குமோ என்று அவரது எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்க, தலை சுற்றுவது  போல் உணர்ந்தவர்,

“ஷிக்கா, ஷிக்கா” என்று உரக்க அழைத்தார்.

அடுத்த நொடியே வீட்டிற்குள் நுழைந்த ஷிக்கா, சோபாவில் ஜோதி சாயந்தமர்ந்திருந்த விதத்தைப் பார்த்து, ஏதோ சரியில்லை என்று புரிந்து, அவரருகே சென்று மண்டியிட்டவள்,”என்ன செய்யுது ஆன் ட்டி?” என்று விசாரித்தாள்.

“கப்ராட்டா (படபடப்பு, பதற்றம், anxiety, worry) இருக்கு.” என்று அவர் பதிலளிக்க,

சமையலறைக்கு ஓடிச் சென்று ஒரு கிளாஸ் தண்ணீருடன் வந்தவள்,”இதைக் குடிங்க.” என்று அவரிடம் கொடுத்து விட்டு, அவரருகே இருந்த அவளது கைப்பேசியைக் கையில் எடுத்துக் கொண்டு,

“காலா நமக் போட்டு நீம்பு பானி (லைம் ஜுஸ்) கலந்திட்டு வரேன்.” என்று மீண்டும் சமையலறைக்கு சென்றாள்.

எலுமிச்சை ஜுஸைக் கலந்தபடி அவளது கைப்பேசியை உயிர்ப்பித்து சினேகாவை அழைத்தாள் ஷிக்கா.  அழைப்பை ஏற்று, ஜோதி என்று நினைத்து,”அம்மா, இப்போ என்னாலே உங்களோட பேசவே முடியாது..ஒரு மீட்டிங்லே இருக்கேன்..சைலெண்ட்லே போடலாம்னு நினைச்ச போது கூப்பிடறீங்க.” என்று தமிழில் சொல்ல,”சினேஹ்” என்று ஷிக்காவின் அழைப்பைக் கேட்டு,”அம்மான்னு நினைச்சேன்..இப்போ நேரமில்லை ஷிக்கா..ஒரு மணி நேரம் கழிச்சுப் பேசறேன்.” என்று அவளிடம் ஹிந்தியில் தெரிவிக்க,”ஆன்ட்டிக்கு கப்ராட்டா இருக்குன்னு சொல்றாங்க..தண்ணி கொடுத்தேன்..இப்போ லைம் ஜுஸ் கலந்திட்டு இருக்கேன்..மனோக்கு இப்போ தான் ஷிஃப்ட் ஆரம்பிச்சிருக்கும்..லீவ் போட்டு வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டு அமைதியான சினேகா, சில நொடிகளுக்கு பின்,”தேவையில்லை..நீ ஒண்ணும் பயப்படாதே..அம்மாவோட மைக்கேலேர்ந்து (மைக்கா, பிறந்த வீடு) ஃபோன் வந்திச்சு எனக்கு..மாமா பேசினாங்க..அதை அம்மாகிட்டே சொல்ல தான் உன் நம்பருக்கு ஃபோன் செய்தேன்..அங்கே கொஞ்சம் பிரச்சனை ஓடிட்டு இருக்கு..அதைக் கேட்டு அம்மா டென்ஷனாகிட்டாங்க..வேறு எதுவுமில்லை..சாயங்காலம் நான் வந்த பிறகு அவங்க வீட்டுலே  பேசலாம்னு சொல்லியிருக்கேன்..நீ ஜுஸ் கலந்திட்டுப் போய் கொடு..அதைக் குடிச்சிட்டு அவங்க ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் போடு மனோவை தொந்தரவு செய்யாதே..ஏற்கனவே மாண்ட்டியை நினைச்சுக் கவலைலே இருக்கான்..அம்மாக்கு எதுவும் ஆகாது நீயும் கவலைப்படாதே.” என்று ஷிக்காவிற்கு தைரியம் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் சினேகா.

அவளுடைய அப்பாவின் மறைவு, தில்லிவாசம், மனோகரின் காதல் கல்யாணம், அவளின் கல்யாணம், எதிர்காலம் என்று அனைத்து நிகழ்வுகளும் அவரது மனத்தை ஆக்கிரமிக்கும் போது இது போல் அவர் உணர்வது வழக்கமானது என்பதால் மாலையில் பார்த்துக் கொள்ளலாமென்று அந்த விஷயத்தை மனத்திலிருந்து ஒதுக்கி வைத்து  விட்டு அவள் வேலையில் மும்முரமானாள்.

ஷிக்கா கொடுத்த ஜுஸைக் குடித்து விட்டு சினேகா சொன்னது போல் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சென்று விட்டார் ஜோதி. கிட்டதட்ட இரண்டு மணி நேரம் உறங்கியதில் அவரது மனமும் உடலும் ஃப்ரெஷ்ஷாக உணர, கடையில் பிஸியாக இருந்த ஷிக்காவைத் தொந்தரவு செய்யாமல் சமையலறைக்குச் சென்று அவளுக்கும் அவருக்கும் சேர்த்து இஞ்சி டீ தயார் செய்தார் ஜோதி.