Advertisement

“மாமா சாப்பாடு எடுத்து வெச்சிட்டேன். சாப்பிட வாங்க. உங்க மகன் வர நேரம் ஆச்சு. இன்னும் நீங்க தூங்காம இருக்கறத பாத்தா திட்டுவாரு” கிச்சனில் இருந்து நான்காவது முறையாக பார்வதி குரல் கொடுக்க, அது எதையும் பொருட்படுத்தாமல்,

மருதநாயகம் ஒரு புறம் அமர்ந்து ஐபேடில் எதையோ நோண்டி கொண்டு இருந்தார்.

அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த ஆதி முகம் களைத்து கிடக்க, மனதில் கூட பல தரப்பட்ட குழப்பங்கள் மேலோங்கி கிடக்க,

காரை அமைதியாய் நிறுத்தியவன், யோசனையுடன் வீட்டிற்குள் வர, அவனின் காலடிகளை வைத்தே வாசலிற்கு ஓடி வந்த பார்வதிக்கு, ஆதியின் வரவு இன்ப அதிர்ச்சியே.

இரண்டு நாள் கழித்து வர வேண்டிய மகன் இன்று வந்து விட்டதில் படு ஆனந்தம் அவருக்கு.

“என்ன ஆதி. ரெண்டு நாள் கழிச்சி வருவேன்னு சொல்லிட்டு போன. இப்போவே வந்துட்ட” மகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை அவருக்கு.

“சும்மா தான்மா. சூர்யாவுக்கு ஏதோ வேலை வந்துடுச்சாம். அதான் திரும்ப வந்துட்டோம்” என்றவன் புருவத்தின் கீழ் இருக்கும் அந்த காயத்தை மறைக்க முயன்றும் கூட, தாய் பார்வையில் இருந்து தப்பவில்லை அது.

“என்னப்பா இது காயம், எப்படி ஆச்சு.. பாத்து கவனமா இருக்குறது இல்லையா?” பதறியவரை அமைதி படுத்தியவன்.

“அது எல்லாம் ஒன்னும் இல்லமா. லேசா கார்ல இடிச்சிகிட்டேன். அதான் வேற ஒன்னும் இல்ல” என்றான் சமாளிக்கும் விதமாக.

“கார்லா இடிச்சிகிட்டியா? இல்ல காதல்ல இடிச்சிகிட்டியா?” கேள்வி வந்தது மருதநாயகத்திடம் இருந்து.

அதில் திடுக்கிட்டவன், “அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா. சம்மந்தமே இல்லாம கோர்த்து விடாதீங்க” என்றவன் முகத்தில் முயன்றும் கூட, தோன்றும் வெட்கத்தை மறைக்க முடியவில்லை.

“அப்படியா ஆதி. பொண்ணு யாருடா. நம்ப ஊரா? வேற ஊரா இருந்தாலும் பரவாயில்லை. யாருன்னு சொல்லுடா” கோவம் எதிர்பார்த்த இடத்தில், மாறாக சம்மதத்தின் ஆர்வத்தை பார்வதி வெளிப்பட, அதில் முதலில் அதிர்ந்தவன், பின் இளகியவன், மருதநாயகத்தை நோக்க அவரோ,

“பேராண்டி, சீக்கிரம் என் மருமகளை கூட்டிகிட்டு வந்துடு. உன் கல்யாணத்தை பார்க்க தான் இந்த கட்டை காத்துகிட்டு கெடக்கு” அவர் முகத்திலும் ஆர்வம் மிதமிஞ்சியே மின்ன,

“அஞ்சலியை பற்றி கூறிவிடுவோமா?” என்று கூட ஆதிக்கு ஒரு நிமிடம் தோன்ற, அனைத்தையும் கூறிவிட வாய் எடுத்தவனின் சிந்தையை தட்டியது நிதர்சனம்.

ரகுநாத்தை நினைத்தவன், அவரின் குணம் புரிந்தவன்,

“அஞ்சலி இந்த ஊரோட மொதல்ல பழகட்டும். அவளோட அந்த பழைய வாழ்க்கையோட துயரத்தை அவள் மொதல்ல மறக்கட்டும். அதுக்கு அப்பறம் மத்ததை யோசிக்கலாம்” என்றவன், கணவனாய் மாறி தன் மனைவியை பற்றி இவ்வளவு அக்கறை கொள்ள ஆரம்பித்தும் இருந்தான், தன்னையும் அறியாமலே.

இன்றைய நாள் வழமையை விட கொஞ்சம் நீண்டு இருக்க, விடியும் போது சிங்கிளாக இருந்தவன் இரவு முடியும் போது, திருமணம் ஆன ஆண்மகன்.

தன்னுடைய பொறுப்பில் ஒரு பெண்ணும், தன்னை மொத்தமாக சொந்தம் கொண்டாட ஒரு துணையும் கிடைத்து இருக்க, இந்த தருணத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை இதனால் வர போகும் இன்னல்களை நினைத்து வருந்துவதா என்பதும் கூட அவனுக்கு புரியாமலே இருந்தது.

களைப்போ, மன சோர்வோ எதனுடைய தாக்கமோ அவனை விரைவாக கண்ணயர வைக்க, அஞ்சலி தான் மறுபுறம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டவள்,

இதுவரை தன் வாழ்வின் போக்கும், இன்றைய தினம் ஈடேறிய நிகழ்வும் அனைத்தும் கண்முன் மாறி மாறி வந்து கொண்டு கிடக்க,

தூக்கம் துளியும் அவளை நெருங்க வில்லை. புது இடத்தில் சூழல் மாற்றமும், கழுத்தில் தொங்கும் புதிய உறவின் வரவும், அவளை மகிழ்ச்சி, குழப்பம் என்று அனைத்திலுமே ஆழ்த்தியது.

ஒரு வாரம் வரை யார் என்றே தெரியாத ஒருவன், நேற்று வரை முகம் மட்டுமே தெரிந்த ஒருவன் இனி தன் சர்வமும் என்று நினைக்கும் எண்ணம் தான் புதிதாய் இருந்தது அவளுக்கு.

தான் இங்கு வந்து இருப்பது சரியா இல்லையா. இவர்களை நம்பலாமா இல்லையா என்ற எண்ணம் கூட வரவே செய்தது அவளுக்கு. அவை அனைத்துமே ஒரு பெண்ணின் சுபாவத்தில் தோன்றிய பயமே தவிர, ஆதி மேல் நம்பிக்கை இல்லாத எண்ணத்தில் தோன்றியது இல்லை என்பதை அவளுமே உணர்ந்தே இருந்தாள்.

அந்த முடியா இரவும் ஒரு வழியாக முடிந்து போக, அடுத்த நாள் காலை பொழுதும் கூட இனிதே விடிந்தது. இரவு சரியாக உறங்காதவள் காலையும் விரைவாக எழுந்து, குளித்து முடித்தவள், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி கொண்டு இருந்தவளை கவனித்தான் சூர்யா.

“என்னமா. சீக்கிரம் எழுந்துட்ட போல இருக்கே. ஒழுங்கா தூங்குனியா இல்லையா?” என்றான் கண் திறக்க சிரம பட்டவனாக.

“புது இடம்ன்றதால ஒழுங்கா தூங்க முடியல அண்ணா. அதான் சீக்கிரம் எழுந்துட்டேன்” என்றாள் துளசி மடத்தை சுற்றிய படி.

“இருக்கட்டும் இருக்கட்டும். இன்னைக்கும் உன் வீட்டுக்காரனை வர சொல்லுறேன். அப்புறம் எப்படி தூக்கம் வருதுன்னு பாரு” என்றவன் சிரித்த படியே குளிக்க சென்று விட,

வீட்டுக்காரன் என்ற வார்த்தையிலேயே திடுக்கிட்டவள், மனதில் பெருகும் அந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி, முகத்தில் ஒளிரும் அந்த வெட்கமும், பூரிப்பும் அவளை மேலும் அழகாக்க,

“அவர் என்ன செஞ்சிகிட்டு இருப்பாரு? எழுந்து இருப்பாரா இல்லையா?” தன் மணாளனை பற்றிய நினைவை மனதில் நிறைத்தவள், அவனை பற்றியே நினைத்து கொண்டு இருக்க,

தூக்கத்திலும் புரை தட்டியது ஆதிக்கு. இரும்பிய படி துக்கத்தில் இருந்து அவன் எழுந்து, தன்னை நிலைப்படுத்தி கொள்ளும் முன்பே, அவனின் கைபேசி ஒலியெழுப்பி அவனை அழைக்க,

“சொல்லுங்க அத்தை. காலைலயே கூப்பிட்டு இருக்கீங்க? தாத்தா கிட்ட பேசணுமா?” என்றான் சகஜமாக.

“அதெல்லாம் இல்ல ஆதி. நீ எப்போ இங்க வர?” என்றார் சிவகாமி.

“இன்னைக்கு வர முடியுமான்னு தெரியல அத்தை. ஸ்கூல்ல கொஞ்சம் வேலை இருக்கு. அது இல்லாம கரிச காட்டுல போட்ட கம்பு அறுவடைக்கு நிக்குது. அது அறுவடைக்கு ஆளுங்கள ஏற்பாடு பண்ணனும். இந்த வாரம் ரொம்ப வேலை இருக்கு அத்தை” என்றான் அவன் போக்கில்.

“அப்டியா ஆதி. நீ வரேன்னு வேற சொல்லி வெச்சிட்டேன். பாவம் பொண்ணு ஆசையா வேற இருப்பா…” முடிக்கும் முன்பே பேசிய ஆதி.

“எந்த பொண்ணு அத்தை?” என்றான் சகஜமாக.

தூக்கி வாறி போட்டது போல் இருந்தது சிவகாமிக்கு,

“என்ன ஆதி இப்டி கேக்குறே. உன் பொண்டாட்டியை தான் சொல்லுறேன். தினமும் வந்து பார்த்துட்டு போறேன்னு சொன்னது மறந்து போச்சா?” என்றார் காட்டமாக.

“உன் பொண்டாட்டி” என்ற வார்த்தை அவனை ஓங்கி அறைய, நேற்றைய நினைவுகளை எண்ணி பார்த்தவன்,

இன்று தான் தனி ஆள் இல்லை. தனக்கு துணையாக ஒருத்தி வந்து விட்டாள் என்பது புரிய. இதை எப்படி மறந்தோம். இனி மறக்க கூடாது என்று தனக்கு தானே அறிவுரை வழங்கியவன்,

“மறக்கல அத்தை. முடிஞ்ச வரைக்கும் வேலையை சீக்கிரம் முடிச்சிகிட்டு, கொஞ்ச நேரம் அங்க வந்து இருந்துட்டு போறேன்” என்றான் சமாளிக்கும் விதமாக.

“சரிப்பா. புது இடம்னு அந்த பொண்ணு ஒரு மாதிரியே இருக்கா. அதான் நீ வந்தா கொஞ்சம் சகஜமா பழகுவான்னு வர சொல்லுறேன்” என்றவர் அத்துடன் அழைப்பை துண்டித்து விட,

“நான் வரேன்னு உண்மையிலேயே அவ எதிர்பாக்குறளா? அப்போ அவளுக்கு என்னை பிடிச்சி இருக்கா? இல்லை என்ன வரவழைக்க அத்தை பொய் சொன்னார்களா?” தீவிரமான யோசனையில் இருந்தவனை தேடி வந்த மருதநாயகம்,

“ஆதி, இந்த ஸ்மார்ட் வாட்ச்ன்னு எதோ புதுசா வந்து இருக்காமே. அது எங்க விக்குதுனு பார்த்து ஒன்னு வாங்கி குடுடா. வாட்ச் மாதிரி கையில கட்டிக்கிட்டா போதுமாம். அதுலயே போட்டோ எடுக்குறது, போன் பேசுறது, கேம்ஸ் கூட விளையாடலாம்னு சொல்லுறாங்க. அது எங்கப்பா கிடைக்கும்” என்றார் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு.

அதில் கடுப்பான ஆதி,

“எல்லாம் இந்த வெற்றி சூர்யாவை சொல்லணும். அவனுங்க ஒரு ஸ்மார்ட் போன் அறிமுகம் பண்ணி வெச்சது இப்போ ஸ்மார்ட் வாட்ச்ல வந்து நிக்குது” தனக்குள் முணுமுணுத்தவன்,

“ஸ்மார்ட் வாட்ச் வெச்சி விளையாடுற வயசா கிழவா உனக்கு. பேரம் பேத்தி பாக்குற வயசுல ஸ்மார்ட் வாட்ச் கேக்குதா உனக்கு” என்றான் குறும்பும் கடுப்பும் சேர்ந்த படி.

“அட போடா, பெத்து குடுத்தா நானா பார்த்துக்க மாட்டேன்னு சொல்லுறேன். எனக்கு ரெண்டு பேரன் இருக்கான்னு தான் பேரு. ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்ல.

ஒருத்தன் என்னடானா கஞ்சிய சட்டைக்கு மட்டும் போடாம நாளு கிளாஸ் குடிச்ச மாதிரி விறைப்பா சுத்துனா எந்த பொண்ணு திரும்பி பார்க்கும்.

இன்னொன்னு நீ, உனக்கு ஆசிரமம் நடத்தவே நேரம் சரியா இருக்கு. இதுல பாக்குற பொண்ண எல்லாம் அக்கா இல்ல தங்கச்சியா ஆக்கிடுறே.

உங்கள நம்பி இனி பிரயோஜனம் இல்ல. உதவாக்கரை பசங்களா” என்றவர் ஏளனமாக பார்வை ஒன்றை பார்த்து விட்டு.

“அந்த ஸ்மார்ட் வாட்ச் ஆச்சும் சீக்கிரம் வாங்கி குடுங்கடா. என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எனக்காக வைட்டிங்” என்றவர் அதே துள்ளலில் சென்று விட,

“வர வர இவருக்கு கூட கொழுப்பு அதிகம் ஆயிடுச்சி. ஆனாலும் அவர் சொல்லுறது உண்மை தானோ. நாம அதுக்கு சரி பட்டு வரமாட்டோமோ” நினைத்து பார்த்தவனுக்கு மருதநாயகம் கூறியதில் தவறு எதுவும் இருப்பதாக தோன்றவில்லை.

“இப்போவே அஞ்சலியை பாக்குறோம். அவ கூட வாழுறோம். குழந்தையை பெத்து இந்த கிழவன் கையில கொடுக்குறோம்” நினைக்கும் போதே எதோ ஒரு புது உணர்வு அவனுள் பாய,

“அவளுக்கும் எனக்கும் குழந்தை பிறக்குமா. பிறந்தா அது என்னை போல இருக்குமா? இல்லை அவளை போல இருக்குமா?” நினைத்தவனை உலுக்கியது நிதர்சனம்.

“மொதல்ல அவளுக்கு உன்னை பிடிச்சி இருக்கானு பாரு. அதுக்கு அப்பறம் அவளுடன் வாழ்ந்து குழந்தை வரைக்கும் போகலாம். இதுல அஞ்சலியை பத்தி வீட்ல வேற சொல்லணும்” நினைக்கும் போதே வேர்க்கவே செய்தது ஆதிக்கு. அதே நினைவில் குளியலறை அவன் புக,

அவனின் கற்பனைக்கான கொள்ளிக்கட்டை இனிதே தயாராகி கொண்டு இருந்தது ரகுநாத்திடம்.

சூர்யா இல்லத்தில் அஞ்சலியோ, இன்று ஆதி இரவிற்குள் வந்து விடுவான் என்ற செய்தி கேட்டதில் இருந்து அவளின் கால்கள் தரையில் இல்லை, மனதும் அவளிடம் இல்லை, வயிற்றில் கூட பட்டாம்பூச்சிகள் பறக்க,

உணவு விடுத்து, உறக்கம் விடுத்து ஆதிக்காக காத்திருந்தவள் மனதில் ஏனோ ஒரு புது படபடப்பும் வெட்கமும்.

இடைவெளி விடாமல் பேசும் அஞ்சலிக்கு, இன்று, “என்ன பேசுவது அவனிடம்” என்ற குழப்பமே அதிகம் இருந்தது.

காலை உணக்கிற்கே வந்து விடுவான் என்று காத்திருந்தவள், அவனிடம் என்ன பேச வேண்டும் என்பதையும் மனதில் பல முறை தனுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச,

மதியம் அவனுடன் சேர்ந்தே உணவு உண்ணலாம் என்று எண்ணியவள் மதியமும் காத்திருக்க, ஆதி அப்போதும் வராமல் போக,

சோர்ந்த முகத்துடன் அறைக்கு சென்றவள், பசி மயக்கமோ, மன சோர்வோ, சட்டென உறங்கியே விட்டாள்.

மதிய நேரம் களைப்பில் உறங்குகிறாள் என்று எண்ணிய சூர்யாவும், பைளுடன் அவன் சேர்த்த மற்றும் சில அறிக்கைகளுடன் வேகமாக எங்கோ கிளம்பி கொண்டு இருந்தான்.

வாசலில் கிடக்கும் ஷூவை அணிந்த படி இருந்தவனை நெருங்கினாள் வெண்பா. அவள் வந்ததை உணராமல் கவனம் மொத்தத்தையும் அடுத்து செய்ய வேண்டிய வேலையில் நிறைத்து வைத்து இருந்தவனுக்கு கவனம் வேறு எங்கும் செல்லாமல் கிடக்க, தன் முன் வெண்பா நிற்பதை பார்த்து திடுக்கிட்டான் என்று தான் கூற வேண்டும்.

வெண்பா அதிகம் சூர்யா வீட்டிற்கு வந்தது இல்லை. இத்துணை வருடத்தில் அதிகம் ஒரு மூன்று முறை தான் வந்து இருப்பாள். அதுவும் இருமுறை வெற்றியுடன் வந்தது தான்.

வெற்றி தந்தை சுபாவம் தெரிந்த சூர்யா, முடிந்த வரை வெண்பாவை தவிர்க்கவே செய்து வந்தான். இத்துணை நாளில் அவளிடம் ஒரே ஒரு முறை தான் பேசி இருக்கிறான்.

அதுவும் வெற்றிக்கு அழைக்க, அவன் குளிக்க சென்றதால் வெண்பா அதற்கு பதிலளிக்கவே தான் அந்த பேச்சும் நடந்தது.

சூர்யா தெரிந்து, கவனமாக தான் வெண்பாவை தவிர்த்து வந்தான். ஆனால் வெண்பா எந்த வேறுபாடும் அவனிடம் காட்டியது இல்லை. ஆதியிடன் அவள் பழகுவதை போலவே தான் சூர்யாவிடமும் பழகி வந்தாள்.

இப்போது சூர்யா முன் வந்து நின்றவளும் கூட,

“எனக்கு அண்ணியை பாக்கணும்” என்றாள் எடுத்த எடுப்பில் ஒய்யாரமாக.

“அண்ணியா” யோசித்தவன், “ஒரு வேலை அஞ்சலியை கூறுகிறாளோ” என்று எண்ணியவன்,

“எந்த அண்ணி. யார சொல்லுறே?” என்றான் அப்போதும் புரியாதவன் போல.

“ஆதி அண்ணன் கட்டிட்டு வந்து இருக்கே அந்த பொண்ண தான் அண்ணின்னு சொல்லுறேன். எங்க அவுங்க?” என்றவள் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் பாராமல் சூர்யாவை இடித்து கொண்டு செல்ல,

“ஏய்ய்ய் எங்க போறே. யார் சொன்னது உனக்கு இதெல்லாம். நான் பேசிக்கிட்டே இருக்கும் போது நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்” என்றவன் ஒரு கால் ஷூவுடன் அவள் பின்னே ஓட,

“வெண்பாவோ, அண்ணி அண்ணி. எங்க இருக்கீங்க. வெளிய வாங்க” என்றாள் அதட்டும் குரலில்.

அதில் சிவகாமி பதறி கொண்டு வெளியே வர,

“என்ன ஆச்சு வெண்பா. எதுக்கு இப்டி கூச்சல் போடுறே” என்றார் அவளை அமைதியாக்கும் பொருட்டு.

“நேத்து கல்யாணம் ஆகி இருக்கு. இப்போ தான் அந்த தடி மாடு வெற்றி என்கிட்ட விஷயத்தை சொல்லுறான். நீங்களும் கூட யாருமே என் கிட்ட எதையுமே சொல்லாம மறச்சிட்டீங்க” என்றவள் குழந்தை போல் உதட்டை பிதுக்கி கொண்டு கூற,

அதற்குள் துயில் கலைந்த அஞ்சலி, முகத்தை கழுவி கொண்டு முற்றம் வரவும் சரியா போக, வந்தவள் யாரோ ஒரு புது பெண்ணொருத்தி நிற்பதை பார்த்து ஒன்றும் புரியாமல் சிவகாமி அருகில் போய் நின்று கொள்ள,

“நீங்க தான் ஆதி அண்ணனை மடக்கி போட்டு, அவரை கல்யாணம் பண்ணிகிட்டவங்களா?” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி.

அதில் கொஞ்சம் அஞ்சிய அஞ்சலி, என்ன கூறுவது என்பது புரியாமல் சூர்யாவை பார்க்க, அவனுக்கும் கூட வெண்பாவின் மனநிலையை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

மூவரும் திகைத்து போய் வெண்பாவை பார்த்த நேரம், அவளோ அஞ்சலியை ஓடி போய் தழுவி கொண்டாள்,

“என்ன அண்ணி பாக்குறீங்க. உங்களுக்கு அண்ணன்கள் ரெண்டு பேர் கிடைச்சி இருக்கலாம். ஆனா நாத்தனார் நான் ஒருத்தி மட்டும் தான். அதுவும் உங்களுக்கு எப்போவும் பக்கபலமா இருக்க நாத்தனார்” என்றவளின் பேச்சை கேட்ட பின் தான்

“ஹப்பாடா” என்று இருந்தது மூவருக்குமே.

வெண்பா காதை பிடித்து திருகிய சிவகாமி,

“வாலு வாலு. வர வர சேட்டை அதிகம் ஆயிடுச்சி உனக்கு. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா” என்றவர் அவளை வாரி அணைக்கவும் தவறவில்லை.

“எனக்கே இப்டி பயந்தா, ரகுநாத் அங்கிள் முன்னாடி என்ன பண்ணுவீங்க. அதுக்கு தான் ஒரு சின்ன டெஸ்ட் வெச்சேன்” என்றவள் அஞ்சலியிடம் போய் ஒட்டி கொள்ள, சூர்யாவை பார்த்த சிவகாமியோ,

“டேய் என்னடா இது. ஒரு கால்ல மட்டும் ஷூ போட்டுட்டு நிக்குறே. இப்டியேவா போக போறே?” என்றார் அவனை சீண்டிய படி.

“ஒத்த கால் ஷூ போட்டு நின்னா சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு யாராவது சொல்லி இருப்பாங்க சிவா ஆண்ட்டி. அதான் தவம் கிடக்குறாரு போல உங்க புள்ள” என்று வெண்பா தன் பங்கிற்கு கோர்த்து விட, பதில் எதுவுமளிக்காமல் சூர்யா நிற்க,

“என்னடா உண்மையிலேயே அப்டி ஏதாச்சும் பண்ணுறியா என்ன. அப்டி கல்யாண ஆசை வந்துட்டா சொல்லிடுடா. நானே ஒரு நல்ல பொண்ணா பார்த்து உனக்கு கட்டி வெக்குறேன்” என்றார் சூர்யவை நம்பாமல்.

“அந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு அவர் குடுக்க மாட்டாரு ஆண்ட்டி. பாருங்க ஆதி அண்ணா மாதிரி ஒரு பொண்ண கட்டிக்கிட்டு கூட்டிட்டு வர போறாரு” சீண்டியவள் சிரித்த படி நிற்க.

“அப்டியா சூர்யா. யாருடா பொண்ணு?” சூர்யா பக்கம் அனைவரும் கவனமும் திரும்ப,

“அம்மா அந்த பொண்ணு தான் எதோ உளருறான்னா நீங்களும் இப்டி கேக்குறீங்க. ஒரு சாக்ஸ் தான் இருந்துது, அதான் இன்னொன்னு எடுக்க வந்தேன். அதுக்குள்ள… ” கடுகடுத்தவன் வந்த வழியே சென்றும் விட்டான்.

அனைவரையும் அறிமுகம் செய்கிறேன், அனைவரை பற்றியும் கூறுகிறேன் என்று ஆரம்பித்த வெண்பா ஒரு மணி நேரமாக அஞ்சலியை படாதபாடு படுத்தி கொண்டு இருந்தாள்.

அஞ்சலியை காப்பாற்ற சிவகாமி முயற்சித்தும் கூட, வெண்பா விட்ட பாடில்லை.

இப்பிடியே மாலை போய் இரவு நெருங்கவும், கிளம்புவதாக வெண்பா கூறி கிளம்பி விட, அப்போது தான் ஆதி வருவதாக கூறி இருந்ததே நினைவிற்கு வந்தது அஞ்சலிக்கு.

யாரிடமும் கேட்பது என்று யோசித்த அவளுக்கு, வெட்கம் அதிகம் வர, எப்படி கேட்பது என்பது புரியாமல் போக,

காத்திருப்பதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தவள், ஜன்னல் வழி நின்று கொண்டு வாசலை நோட்டம் விட,

அங்கு நின்று கொண்டு இருந்த அந்த கை ஏந்தி பவன் போன்ற உணவு கடை அவளுக்கு வித்தியாசமாகவே பட்டது.

சின்ன கிராமம், கல்லூரிகள் கூட எதுவும் இல்லாமல், ஒரு அரசு பள்ளியும், பால்வாடி பள்ளியும் மட்டுமே இருக்கும், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பும் ஊர் என்று வெண்பா கூறிய நினைவு வர,

“அப்போ இந்த சாப்பாடு கடை எதுக்கு. இங்க யார் வந்து சாப்பிடுவாங்க” என்று எண்ணியவளின் எண்ணத்தை திசை திருப்பியது சிவகாமியின் அழைப்பு தான்.

“அஞ்சலி ஆதி இன்னைக்கு வர முடியாதாம். நாளைக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம். நாளைக்கு மதியம் கண்டிப்பா வரேன்னு சொன்னான். நீ ஒழுங்கா சாப்பிடுவியாம். எதை பத்தியும் கவலைபடாம இருப்பியாம். உன் கிட்ட சொல்ல சொன்னான்” என்றவர் அவ்விடம் விட்டு சென்று விட,

தூரத்தில் நின்று அஞ்சலியை கவனித்து கொண்டு இருந்த சூர்யாவிற்கு அவளின் வாடிய முகம் எதோ செய்ய, அஞ்சலியின் அண்ணனாய் ஆதியை அழைத்தான் சூர்யா.

“டேய் நீ மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்க. கல்யாணம் பண்ணலனாலும் பரவாயில்லை. உன்னையே எதிர் பார்த்து ஒருத்தி காத்துகிட்டு இருக்கா. நீ என்னடானா இப்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்க” எடுத்த எடுப்பில் கோவத்தில் கத்தினான் சூர்யா.

“நானும் வரலாம்னு தான்டா இருந்தேன். நாளைக்கு காலையில ஸ்வாதி குடும்பம் வருதாம். ஏதோ தொழில் துவங்க போறாங்களாம். நானும் வெற்றியும் போய் கூட்டிட்டு வரணும்ன்னு உங்க மாமா உத்தரவு போட்டுட்டாரு. அதனால தான் வர முடியல” என்றவன் பேச்சில் அமைதியானவன்,

ஸ்வாதி குடும்பத்தை பற்றி நன்கு அறிந்தவன்,

“மகாராணி குடும்பம் வருதோ. இனி உங்க அப்பாக்கு தலை கால் புரியதே. சரி நாளைக்கு முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்து அஞ்சலியை பார்த்துட்டு போ” என்றவன் ஒரு சில வார்த்தையில் வைத்தும் விட்டான்.

அஞ்சலி எனக்காக காத்திருக்கிறாள் என்பதே ஆதிக்கு தனி காதல் போதையை கொடுக்க, இப்போதே அவளை கண்டு விட வேண்டும் என்று துடித்த மனதை அடக்கியவன், நாளை பொறுமையாக அவளுடன் நேரத்தை செலவழித்து வரலாம் என்ற எண்ணத்துடன் உறங்கவும் சென்று விட,

அங்கு வெற்றி தான் கோவத்தில் கொப்பளித்து கொண்டு இருந்தான்.

“மகாராணி குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வர, வேலைகாரங்க மாதிரி நாங்க வேற போகணுமா. அவுங்களும் இந்த ஊர்ல வாழ்ந்தவங்க தானே. அவுங்களே வர மாட்டார்களா?” கொதிக்கும் இதயத்தின் பாரத்தை வார்த்தையில் இறக்க முயற்சித்தவனுக்கு நன்கு தெரியும் இது அவ்வளவு எளிதில் அணையும் தீ அல்ல என்று.

மறுபுறம் ஸ்வாதி குடும்பத்தை வரவேற்க ரகுநாத் பல ஏற்பாடுகளுடன் ஆவலுடன் காத்திருந்தார். தன் அறிவுபூர்வமான திட்டத்துடன்…

Advertisement