Advertisement

இரவின் இருள் சூழ காரின் வெளிச்சம் அந்த இருளை கிழித்து கொண்டு வர, அந்த இரவு வேளையில் அந்த வீட்டின் முன் வந்து இறங்கினர் அம்மூவரும்.

வரும் வழியிலேயே, சூர்யா இல்லத்தில் சிறிது காலம் அஞ்சலி இருக்கட்டும், பின் சமயம் பார்த்து தன் வீட்டில் விஷயத்தை கூறி விடுவதாக ஆதி கூற,

சூர்யாவும் சரி என்று விட, அவனின் வீட்டிலும் கூட ஆதியின் நிலைமையை எடுத்துரைக்க, அவர்களும் வேறு வழி இன்றி ஆதியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள, இதோ சூர்யா வீட்டின் முன் வந்து நின்றது அந்த கார்.

வாசலில் இரும்பு கேட் மூடப்பட்டு இருக்க, அதன் வழி பார்க்க பூக்களும், காய்களும், கனிகளும் பூத்து குலுங்கும் அந்த அழகிய தோட்டம் சூழ ஒரு சாதாரண, அழகான வீடு ஒன்றின் வாசல் அழகே தென்பட்டது.

வண்டியை விட்டு நண்பர்கள் மூவரும் இறங்க, அஞ்சலி மட்டும் காரின் உள்ளே இருந்தாள்.

இவர்கள் வந்ததை உணர்த்த சிவகாமி கையில் எதோ தட்டுடன் வர, அவரை பின் தொடர்ந்த படி வந்தார் சந்தானம்.

வந்தவர்களை பார்த்த ஆதி மனதில் குற்ற உணர்ச்சி பெருக,

“அத்தை இது எதுவுமே எதிர் பார்த்து நடக்கல. நடந்த எதையும் தடுக்கவும் முடியல, தவிர்க்கவும் முடியல, அதுக்கு அப்புறம்… ” பேசுபவனை இடைமறித்த சிவகாமி.,

“எல்லாத்தயும் சூர்யா சொல்லிட்டான் ஆதி. நீ கவலைப்படாத. கல்யாணத்துல குடும்பத்தோட ஆதரவு இல்லாம போனால் எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும். வீட்ல பேசி நீ ஒரு முடிவு எடுக்குற வரைக்கும் என்னோட பொண்ணா அவளை என்னோட வீட்ல இருக்கட்டும்” என்றார் ஆதியின் தோள் தொட்டு உறுதியளித்த படி.

“நீ எதுக்கும் கவலைப்படாத ஆதி, நானும் உன் அத்தையும் உன்னோட பக்கம் தான். ஆனா உங்க அப்பாவை சம்மதிக்க வெக்குறது அவ்வளவு சுலபம் இல்லை” என்றவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளியேறியதில் இருந்தே, இனி தன்னுடைய பாதையின் இன்னல்கள் மிக தெளிவாக புரிந்தது ஆதிக்கு.

“ஆதி உன் பொஞ்சாதிய வர சொல்லுபா. ஆரத்தி எடுக்கணும்” என்ற சிவகாமியை புரியாமல் பார்த்தான் ஆதி.

இது வரை அஞ்சலி தன் மனைவி ஆகி விட்டாள் என்பதே அவனின் சிந்தையில் பதியாமல் இருக்க, சிவகாமியின் இந்த தீடீர் ‘பொஞ்சாதி’ என்ற வார்த்தை அவனுள் பெயர் இல்லாத மாற்றங்கள் பலவற்றை உருவாக்கியது.

மேலும் இரு முறை சிவகாமி அதையே திரும்ப கூறவே தான் மிகவும் கடினப்பட்டு அவனின் கால்கள் காரை நெருங்கியது.

ஆதி தான் இப்டி என்றாள் அவனின் புது மனையாளின் நிலைமை இன்னும் மோசம்.

உடல் முழுதும் நடுங்க, கை கால்கள் அனைத்தும் வேர்த்துக் கொட்ட, கைகளை பிசைந்து கொண்டு, விழியை நிலம் தாழ்த்தி முகம் சிவக்க அமர்ந்து இருந்தவளின் காதில் விழுந்த,

“உன் பொஞ்சாதி” என்ற வார்த்தையில் பெண் அவள் இத்துணை நாள் எழுத்தில் பார்த்த அச்சம் மடம் என்ற அத்தனையும் அவளுள் ஒரே நேரத்தில் குடி கொள்ள,

இவைகளின் திடீர் தாக்குதலில் நிலை தடுமாறியவளின் கன்னம் அவளை காட்டிக்கொடுக்கவே சிவந்து போய்விட, அந்த நேரம் பார்த்து காரின் கதவை திறந்தான் ஆதி.

“உன்ன..இறங்கு.. வர சொல்லுறாங்க” என்றவனின் வார்த்தைகளும் கூட சதி செய்து திக்கி திணறி வர, வாழ்வில் முதல் முறை வெட்கம் என்பதின் அர்த்தத்தை தன்னுள் உணர்கிறான் ஆதி.

இறங்க யோசித்த படி கைகளை பிசைந்த படி அமர்ந்து இருப்பவளின் முக சிவப்பை கண்டவனுக்கு எதோ இனம் புரியாத உற்சாகம் எழ, அவள் இறங்க வசதியாய் தன் கையை அவள் முன் நீட்ட.

அவளின் உத்தரவு எதுவும் இல்லாமல் அதை பட்டென பற்றி கொண்டது அஞ்சலியின் மென்கரங்கள்.

அதை பற்றியவள் மனதில் நம்பிக்கையை விட கேள்விகளே அதிகமாக வர, வெட்கத்தில் சிவந்த முகத்தில், இப்போது குழப்பம் குடி கொள்ள,

அவன் கை பற்றியவள் அவன் சென்ற வழி பின் தொடர, இருவரையும் ஒருசேர நிற்க வைத்து ஆரத்தி எடுத்த சிவகாமியின் பார்வை மொத்தமும் அஞ்சலியை மேல் இருந்து கீழ் வரை ஆராய, பேதையோ அதை எதையும் கவனிக்காமல் தன் யோசனையில் முழ்கி இருந்தாள்.

வாடிய முகம், கலைந்த கேசம், கலை இழந்த ஆடை என்று அஞ்சலியின் தோற்றத்தை பார்த்தவருக்கு தன்னுடைய திருமணம் போது, தான் இருந்த அவள நிலை அனைத்தும் நினைவிற்கு வர,

‘தன் வாழ்வின் துயரம் இந்த பெண்ணிற்கும் வர கூடாது’ என்ற அவரின் எண்ணமே, அஞ்சலியை நெருங்க வைத்து அவருக்கு.

கொண்டு வந்த சில பல துணிகளுடன் ஆதியுடன் அஞ்சலி உள் நுழைய, அஞ்சலியை மட்டும் தன்னுடன் வரும் படி அழைத்து சென்றார் சிவகாமி.

மறுபுறம் ஆதியின் நினைவு மொத்தமும் ரகுநாத்தின் மீதே இருக்க, அவரின் குணம் அறிந்தவன், “என்ன செய்யலாம்” என்ற யோசனையில் இருக்க,

“வீட்டுக்கு எப்போடா போகலாம். ஒரே பசி. எங்க அம்மா சிக்கன் பிரியாணி பண்ணி வெச்சி இருக்காங்களாம். நா சீக்கிரம் போகணும்டா” பள்ளி சென்ற பிள்ளை போல் வெற்றி சினுங்க.

“இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு நீ என்னடா பேசிக்கிட்டு இருக்க. உன்ன… ” என்ற படி அவன் தலையில் இரண்டு அடி போட்டான் சூர்யா.

“அதெல்லாம் என் வயித்துக்கு தெரியுமாடா. அதுக்கு பசிக்குது. நான் என்ன பண்ண!” என்றான் வெற்றி முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

“அதுக்கு என்னபா. நம்ப வீட்டுல சாப்பிடு. சாப்பாடு எல்லாம் எப்பவோ ரெடியா இருக்கு” என்றார் சந்தானம் உற்சாகமாக.

அதில் சில வினாடி தயங்கியவன், “வீட்டுக்கு வரேன்னு சொல்லிடேன் அங்கிள். அம்மாவும் காத்துகிட்டு இருப்பாங்க. இங்க சாப்பிட்டுட்டு போனா அங்க சாப்பிட முடியாது, அவுங்களும் சங்கடபடுவாங்க” என்றவனுக்கு, எங்கு தானும் ஜாதி பார்த்து தான் சாப்பிட மறுக்கிறோமோ என்று எண்ணம் வந்து விடுமோ என்ற பயம் இருக்க,

அதை உணர்ந்த சந்தானம், “பரவால்ல தம்பி, நாளைக்கு ஆதிக்கு கல்யாணம் ஆனா சந்தோஷத்துல விருந்து ஏற்பாடு பண்ணுறோம். வந்து அப்போ சாப்பிட்டுக்கோங்க. சரி தானே நான் சொல்லுறது” என்றார் கொஞ்சமும் சளைக்காமல்.

அவரின் அந்த கள்ளம்கபடம் அற்ற அவரின் குணம் எப்போதுமே வெற்றியை ஈர்க்கதான் செய்யும். எதிலுமே தன்னலம் பாராமல் பிறரை முன்னிலை படுத்தி யோசிக்கும் அவரின் குணம் அழகாகவே பட்டது வெற்றிக்கு.

அத்துடன் வெற்றியும் கிளம்பும் முடிவெடுக்க, அவனை தடுத்த சூர்யா.

“சரி சரி, உன் பையில இருக்க அந்த பைலை எடுத்து குடுத்துட்டு போ” என்றான் படு சாதாரணமாக.

“எந்த பைல்டா. என்கிட்ட எதுவும் இல்லையே!!!” என்றான் வெற்றி ஒன்றும் புரியாமல்.

“மொதல்ல உன் பையை திறந்து பாருடா. சும்மா வாய் பேசாத” என்றான் சூர்யா கொஞ்சம் கடுப்பாக.

“என்னடா புரியாத மாதிரி பேசிட்டு, இதுல கோவம் வேற படுறே. சின்ன புள்ளய ரொம்ப டார்ச்சர் பண்றீங்கடா நீங்க” புலம்பியவன் அவன் பையில் தேட, கமிஷனர் சூர்யாவிடம் கொடுத்த பைல் தன் பையில் இருப்பதை கண்டு திடுக்கித்தவன்,

“என்னடா, இது எப்படி என்கிட்ட வந்துது. யார் வேலடா இது” என்றான் ஒன்றும் புரியாமல்,

அன்று மாலை வெற்றி பைலை இடம் மாற்றி வைத்தது அதன் பின் நாட்டாமை ஆட்கள் பொருட்களை தேடியது வரை அனைத்தையும் கூறிய சூர்யா, வெற்றி கையில் இருக்கும் அந்த பைலை வாங்கி கொண்டு அதை புரட்ட ஆரம்பிக்க,

“அடேய் உங்கள எல்லாம் நம்பி இவ்ளோ தூரம் வந்தேன் பாரு, புத்திய தான் செருப்பாலேயே அடிச்சிக்கணும்டா. டூர்னு கூட்டிட்டு போய், என்ன கொல்லுறதுக்கு பிளான் பண்ணி இருக்கீங்க. போங்கடா நீங்களும் வேணாம் உங்க சவகாசமும் வேணாம்” என்றவன் கோவமாக கிளம்ப முற்பட,

அவனை தடுத்த ஆதியை கண்டவன், “இப்போ என்ன, வேற எதுலயாச்சும் கோர்த்து விடணுமா?” என்றான் எரிச்சலுடன்.

அவனை எரிப்பது போல் பார்த்தவன் பார்வைக்கு அடங்கிய வெற்றியிடம்,
” நடந்த எதுவும் யாருக்கும் தெரிய வேணாம். அஞ்சலி கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும். நான் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு யோசிக்குற வரைக்கு நீ உளறி வெச்சிடாத” என்றான் ஆதி.

“சரிடா, நான் எதையும் யார்கிட்டயும் சொல்லல, ஆனா உன் பொண்டாட்டிகிட்ட என்ன சொல்லி, எப்படி சமாளிக்க போறே” என்றவன் வார்த்தையில் பூவாய் வெட்கம் பூத்தான் ஆதி.

“இது தான் ஆண்கள் வெட்கப்படும் தருணமோ” என்றான் சூர்யா, வெற்றியுடன் சேர்ந்து கொண்டு.

அதற்கும் வெட்கமே பதிலாய் ஆதி அமர்ந்து இருக்க,

“எப்பா டேய். நீ என்ன கருமத்தை வேணா பண்ணிக்கோ. வெட்கம் மட்டும் படாதடா. பாக்க சகிக்கலை” என்றான் வெற்றி ஏதோ உண்மையில் மனம் உடைந்தவன் போல் முகத்தை வைத்து கொண்டு.

அதில் இருவருக்கும் சிரிப்பு வர, மூவரும் சிரித்து கொண்டு இருக்க,

“ஆதி அஞ்சலி கிட்ட என்னனு சொல்ல போறே? அவளுக்கு எதுவுமே தெரியாதே. அவளை இங்க விட்டுட்டு போகுறதால அவ ஏதும் தப்பா நெனச்சிக்க போறாடா. எப்படி புரிய வெக்க போறே அவளுக்கு?” என்றான் சூர்யா உண்மையான அக்கறையுடன்.

“பேசணும்டா. அத்தை கீழ வரட்டும் நான் போய் முயற்சி பண்றேன்” என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே, வெற்றி கைபேசி அலற.,

அழைப்பு அவன் வீட்டில் இருந்து வர, வேறு வழி இன்றி கிளம்பினான் வெற்றி.

சூர்யாவும் கூட தான் அந்த ஊரில் இருந்து கொண்டு வந்த விவரங்கள் கொண்ட பென்டிரைவுடன் தன் அறை புகுந்தவன், அடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் படு கச்சிதமாக பிளான் செய்து முடித்து, நாட்டாமையின் ராஜ்யத்தை வேரோடு அசைக்கும் முடிவில் இருந்தான் அவன்.

வெகு நேரம் ஆகியும் ஹாலில் அமர்ந்து இருந்த ஆதிக்கு அஞ்சலியை எதிர் கொள்ள துணிவு வராமல் போக, யோசனையில் அவன் அமர்ந்து இருக்க,

அவனை நெருங்கிய சிவகாமி,

” ஆதி, உங்களோட இந்த திடீர் கல்யாணத்தை பத்தி நீ என்ன முடிவு பண்ணி இருக்க? அந்த பொண்ணு பாவம் பயந்து போய், குழம்பி போய் இருக்கா? இப்போ உன்னோட எண்ணம் என்ன? தாலி கட்டிட்டதால வேற வழி இல்லாம கூட்டிகிட்டு வந்து இருக்கியா? இல்லை இனி அவளை விட்டுகுடுக்குறது இல்லைனு கூட்டிட்டு வந்து இருக்கியா?

எதை முடிவு பண்ணுறதா இருந்தாலும் உன்னோட அப்பாவையும், இந்த ஊரையும் மனசுல வெச்சிக்கிட்டு பண்ணு. இன்னைக்கு எடுக்குற முடிவுல நீ கடைசி வரைக்கும் திடமா இருக்கனும். அத மறந்துடாத” எச்சரிக்கவே செய்தார் சிவகாமி.

அதற்கு ஆதியின் தெளிவான, திடமான பதிலை கேட்டவருக்கு ஒரு நிம்மதி பிறக்க,

“இதை எல்லாத்தையும் அஞ்சலி கிட்டயும் போய் சொல்லுபா. அவ பாவம் பயந்து போய் இருக்கா. அவளுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார் சிவகாமி.

அதன் படியே அஞ்சலியை காண அவள் இருக்கும் அறையை நோக்கி சென்றான் ஆதி.

கதவு லேசாக திறந்தே இருக்க, அதை மேலும் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் பார்வையில்,

கட்டிலை ஒட்டி தரையில் தன் பையில் எதையோ தேடி கொண்டு இருக்கும் அஞ்சலி பட,

“தரையில எதுக்கு உக்காந்து இருக்க? மேல பெட்ல உகரலாம்ல” என்றான் எடுத்த எடுப்பில், தன்னுடைய கணீர் குரலில்,

அதில் திடுக்கித்தவள், கையில் இருக்கும் அனைத்தையும் கீழே போட்டு விட்டு, படபடப்பும், பயமும் கலந்த முகத்துடன் எழுந்து நின்றாள் அவன் முன்.

அவளின் பயத்தை உணர்ந்தவன் தன்னை நிலை படுத்தி கொண்டு, ஒரு பெரு மூச்சை வெளியிட்டவன்,

“அஞ்சலி” என்றான் இம்முறை மெல்லிதான குரலில்.

அதில் அஞ்சலிக்கு படபடப்பு மேலும் கூட, இதய துடிப்பு கணக்கில் அடங்காமல் அதிகரிக்க, அவ்விடமே நின்று விடுமோ என்ற பயம் அவள் மனதில் எழவே செய்தது.

அதன் தாக்கமாய் கைகள் வெடவெடக்க, முகத்தில் வேர்வை துளிகள் எட்டி பார்க்க, கால்கள் கூட சிறு நடுக்கம் கொள்ள,

“சொல்லுங்க” என்றவளின் வார்த்தைகளின் சத்தம் கூட ஆதியை சென்று அடையவில்லை.

அவளின் அந்த நிலை கண்டவன் அவளில் மொத்தமும் துளைத்து போக, சற்றே கிரங்கியவன், தன்னை நிலை படுத்தி கொண்டு மேலும் தொடர்ந்தான் ஆதி.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும். இதுவரைக்கும் நடந்தது எல்லாம் உனக்கு புரியுது தானே?” என்றவனுக்கு.

“ஹ்ம்ம்ம்” என்பது மட்டுமே பதிலாக வர,

“இங்க நிறைய பிரச்சனைகள் இருக்கு அஞ்சலி. அதை எல்லாத்தையும் சரி செய்ய எனக்கு கொஞ்சம் டைம் வேணும். இந்த ஊர், இங்க இருக்க மக்களோட மெண்டாலிட்டி எல்லாம் ரொம்பவே கொடுமையா இருக்கு.

ஆனா அதுக்கு எல்லாம் நீ கவலை படாத. இது என்னோட அத்தை வீடு தான். சூர்யா என்னோட மச்சான் தான். அதனால இங்க நீ தைரியமா இருக்கலாம். உனக்கு எந்த பிரச்சனையும் வராது. உன்ன இங்க நல்லா பார்த்துப்பாங்க.

இப்போதைக்கு உனக்கு இதை விட பாதுகாப்பான இடம் வேற எதுவும் இல்ல. நான் எங்க வீட்ல நேரம் பார்த்து பேசணும். என்னோட அப்பாவை பத்தி உனக்கு தெரியாது. அதெல்லாம் சரி பண்ண எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்” என்றான் ஆதி.

அதற்கும் “சரி” என்ற படி தலையை மட்டும் அஞ்சலி அசைக்க,

“நான் நாளைக்கு வந்து உன்ன பாக்குறேன். நைட் நல்லா தூங்கு. எதுவா இருந்தாலும் குழப்பிக்காத. ஏதாச்சும் பிரச்சனைனா எனக்கு கால் பண்ணு. நான் உடனே வரேன்” என்றான் ஆதி.

அதற்கும் அவள் தலையை மட்டுமே அசைக்க, கதவு நோக்கி நடக்க துவங்கிய ஆதியை நிறுத்தியது அஞ்சலியின் குரல்.

“ஒரு நிமிஷம்” என்றவள், அவன் நின்றதை உறுதி செய்து கொண்டு,

“இது எல்லாம் என்னோட டிகிரி செர்டிபிகேட்” என்றவள் ஒரு பைலை அவன் முன் நீட்ட,

எதுவும் புரியாமல் போனாலும் அதை வாங்கியவன், அவளை பார்க்க,

“நீங்க ரொம்ப குழம்ப வேண்டாம். இனி நீங்க உங்களோட வாழ்க்கையை வாழுங்க. இந்த திடீர், எதிர் பார்க்காத திருமணத்துக்கு நீங்க ரொம்ப யோசிக்குறீங்க. நான் உங்க வாழ்க்கைல வரமாட்டேன். நீங்க என்னை பத்தி கவலை படமா உங்க வாழ்க்கையை தொடரலாம்” என்றவளை கொல்லும் அளவிற்கு கோவம் ஆதிக்கு, அதோடு நிறுத்தாமல்,

“எனக்கு இந்த பூமியில வாழ உங்களோட பேர் இருக்கு, பட் அத வெச்சி உங்க லைப்ல வர மாட்டேன். எனக்கு இங்கயே ஒரு வேலை ஒன்னை பார்த்து குடுத்தா நல்லா இருக்கும். நான் அப்படியே வாழ்ந்துப்பேன்” என்றவளின் திடத்தில் அதிர்த்தவனுக்கு கோவம் தலைக்கேற,

“வாயை மூடுடி. என்ன நெனச்சுக்கிட்டு இருக்க. கல்யாணம்னா விளையாட்டா போச்சா? நானே இந்த விஷயம் எங்க அப்பாக்கு தெரிஞ்சிட்டா என்ன நடக்கும். அவர் ஏத்துக்குற மாதிரி என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். இதுல நீ வேற” பல்லை கடித்தவனுடைய கோவம் பார்த்து அஞ்சியவள் நடுங்கி போய் நிற்க,

அதில் தான் கோவத்தை குறைத்தவன்,

“நான் நாளைக்கு வரேன். அதுவரைக்கும் ஜாக்குரதையா இரு. இனி நீ எனக்கு சொந்தமானவ. இன்னொரு தடவை இப்டி பேசிகிட்டு இருக்காதா. ஒழுங்கா தூங்கு” என்றவன் இளகிய பார்வை ஒன்றை அவள் மேல் வீசி விட்டு சென்று விட்டான்.

வெளியில் வந்தவனின் மனது தான் தீயில் இட்டது போல் கொதித்து கொண்டு இருந்தது,

“நான் இவளுக்காக எவ்ளோ கஷ்ட பட்டு எல்லாத்தையும் யோசிச்சி செஞ்சிகிட்டு இருக்கேன். இவ என்னடானா. வேலை வாங்கி குடு, வாழ்க்கையை விட்டு விலகிக்குறேன்னு பேசுறாளே” கோவத்தில், காதல் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.

ஹாலிற்கு வந்தவன், “அத்தை கொஞ்ச நாளைக்கு அஞ்சலி இங்கயே இருக்கட்டும். உங்க வீட்ல இருந்தா யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. அதனால தான். ” என்று இழுத்தவனின் தலையை ஆதரவாய் கோதி விட்ட சிவகாமி,

“நாங்க பார்த்துக்குறோம் ஆதி… நீ கவலை படாம போய்ட்டுவா. எத்தனை நாள் வேணும்னாலும் அவ இங்க இருக்கட்டும். ஆனா உன் மனைவியா இருக்க வரைக்கும் தான் இந்த அனுமதியும்” என்றார் திடமாக.

அவரின் அந்த கடைசி வரி புரியாமல் போனாலும், சரி என்றவனின் தோள் தொட்டு,

“அவ இனி எங்க பொண்ணு, நீ கவலை படாத ஆதி” என்றார் சந்தானம்.

அத்துடன் அவ்விடம் விட்டு கிளம்பியவன் மனதில் எதோ ஒரு உற்சாகம்.

காரில் கிளம்பியவன் மனதில், “என் மனைவி” என்ற எண்ணம் அவனுள் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்த,

மறுபுறம், கண்ணாடி முன் நின்ற அஞ்சலி, தன் கேசத்தை சீவிய படியே,

“ஆதித்யன்” என்ற பேரை பல முறை தன் உதட்டால் உச்சரித்து அதை ரசித்து கொண்டு இருக்க,

இவர்களின் காதல் மனது புரியாத ரகுநாத்தோ, தன்னுள் பல திட்டத்துடன் ஆதிக்காக காத்திருந்தான், அடுத்த பிரளயத்தை உண்டாகும் நோக்கத்துடன்…

Advertisement