Advertisement

வருவாயோ அன்பே..! 08

 கோவிலிலிருந்து வேகமாக கார் ஓட்டி துள்ளலோடு வீட்டுக்குள் வந்து சேர்ந்தான் விஐபி..

வாசலுக்கு வரும்போதே தாய் வந்துவிட்டதை அறிந்து “ அம்மா அம்மா.. ” என மீராவை ஏலம் விட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான்..

 என்றும் இல்லாத துள்ளலோடு மகன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்த தாய் மனம் குளிர்ந்து போனது..

“ வாப்பா விஜய்.. என்ன இவ்வளவு சந்தோசம்?.. என்னனு சொன்னா இந்த அம்மாவும் சந்தோஷப்படுவேன் இல்ல..”

“ உங்களுக்கு சொல்லாம யாருக்கு நான் சொல்லப்போறேன்?… இப்படி வந்து இருங்க..” என்று கை பிடித்து தன் அருகே அமர்த்தி கொண்டான்…

 என்னதான் தாயைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும். மகன் திருமண வாழ்க்கை என்று வரும் போது அவரும் மற்றவர்கள் போல் கண்மணியின் வசதி குறைபாடு பார்த்து ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுவாரோ என்ற பயம் அவன் மனதில் இருக்கத்தான் செய்தது..

 அவன் நினைத்தால் அவளை திருமணம் செய்து கொள்ள முடியும்.. ஆனால் அவனுக்கென்று இருக்கும் தாயை மனம் நோக்க பண்ணி திருமணம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை..

 மீரா சம்மதிப்பாரா?..மாட்டாரா?. என்று குழப்பிக் கொள்ளாமல் சொல்லிப் பார்ப்போம் என்ன பதில் சொல்கிறார் என யோசித்து தாயிடம் பேச போனான்..

 ஆனால் அவன் பேசும் முன்பே மகன் முகத்தை பார்த்தே தாய் அறியாததா அவரே கேட்டுவிட்டார்..

“ என்னப்பா எனக்கு மருமக பார்த்துட்ட போல.. ” என்று மகனிடம் கேட்டுவிட்டு அவர் கேள்வியால் மகன் முகத்தில் தோன்றிய வெட்கத்தை பார்த்து விட்டு அது தான் உண்மை என தெரிந்து கொண்டார்..

 எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு தாயே எடுத்துக் கொடுத்த பின் இனி என்ன..

“ எப்பவோ உங்களுக்கு மருமகளை பார்த்துட்டேன் அம்மா.. ஆனா அவளோட சம்மதமும் வேணும்னு காத்திருந்தேன்.. இன்னைக்கு அவளோட பிறந்தநாள் அவளை கோயிலுக்கு வர வச்சி நேரடியாகவே சந்தித்து பேசிட்டேன்..

ஆனா ஒன்னு நான் யாருன்னு அவளுக்கு தெரியாது… என்னை தான் புடிக்குமாம் ஆனா எனக்கு ரசிகை மட்டும் தானாம்.. அப்படி ஒரு ரசிகை இருக்கிறது அறிந்து நான் அவளை கல்யாணம் பண்ணினா அவ ரொம்ப கொடுத்து வச்சவலாம்.. யாரோன்னு நினைச்சு என்னை பிடிக்கலைன்னு சொல்லி அனுப்பி விட்டாள்.. ஆனா விஐபி சார் நேரில் வந்து ஐ லவ் யூ சொன்னாலும் எங்க அம்மா கிட்ட வந்து பேசுங்கன்னு தான் சொல்லுவேன்.. அவங்களுக்கு பிடித்திருந்தால் தான் நான் யாரையும் கல்யாணம் கட்டுவேன்.. இப்படி சொல்லிட்டமா.. ” என்றான்..

“ நிறுத்து விஜய்.. நீ வழமை போல மாஸ்க் போட்டுட்டு அந்த பொண்ணு முன்னாடி போய் நின்னு இருப்ப.. ஆனா அவ நீ வேற யாரோன்னு நினைச்சு உன்ன பிடிக்கல விஐபி தான் புடிச்சிருக்குனு .. நீ தான்னு தெரியாம உன்னிடம் இப்படி சொல்லி இருக்கா இது தானே நடந்துச்சு?.. .. இதுக்கு நீ என்ன சொல்லிட்டு வந்த?.. ” என்றார் மீரா..

“ நான் எதுவுமே சொல்லலைமா அதான் அம்மா கிட்ட வந்து பேசுங்கன்னு அவளே சொல்லிட்டு போயிட்டாளே.. அடுத்தது என்ன அவங்க அம்மா கிட்ட பேசி சட்டுன்னு மகனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க பாருங்க.. கல்யாணம் எப்ப கல்யாணம்னு எப்பன்னு கேட்டுக்கிட்டே இருக்கீங்க.. இப்ப நானே அதுக்கு பச்சைக் கொடி காட்டிட்டேன்.. இனி லேட் பண்ணாம வேலைய பாருங்க.. ” என்றான்.. அவன் கலருக்கு அவன் வெட்க்கப்பட்ட அழகில் முகமே சிவந்து போயிருந்தது..

“ அடேய்..! அதெல்லாம் சரி யாரு பொண்ணு தெரிஞ்சா தானே அடுத்த வேலையை பார்க்க முடியும்.. “

 எப்படி சொல்வது என தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்..

“ இந்த அம்மாகிட்ட சொல்ல என்ன விஜய் இவ்வளவு தயக்கம்.. நான் உனக்கு அம்மா மட்டும் இல்ல.. நல்ல ஒரு தோழின்னு உனக்கே தெரியும்.. அப்படி இருக்கும்போது நான் எதுவும் நினைப்பேன்.. இல்ல வேணாம்னு சொல்லுவேன்னு தயங்குறியா?.. என்னை பத்தி உனக்கு தெரியாததா விஜய்?..

நான் என்ன நினைப்பேன்னு நீ நினைக்கிறது தான் விஜய் எனக்கு கஷ்டமா இருக்கு.. அம்மா காதலுக்கு எதிரி இல்ல.. ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆளும் நான் இல்லை.. நான் எவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொண்ணுன்னு உனக்கே தெரியும்.. யசோக்கு பிரண்டா இல்லன்னா இன்னைக்கு உனக்கு அம்மாவா இருக்க வாய்ப்பே இல்லை.. அப்படி இருக்கும் போது என் மகனுக்கு பிடிச்ச பொண்ணை எப்படி நான் வேணாம்னு சொல்லுவேன்.. ” எங்கே மகன் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என்று நினைத்து கண் கலங்கிவிட்டார் மீரா..

“ அச்சோ.. சாரிமா ப்ளீஸ் அழாதீங்க.. பிள்ளைன்னு வந்தா அம்மாக்களுக்கு எப்பவுமே புள்ளைகள் உசத்தி தானே.. அப்படித்தான் நினைத்தேனே தவிர உங்களை தப்பா நினைக்கல..” என்று தாயின் கண்ணை துடைத்து அவரை தோள் மீது சாய்த்து கொண்டான்..

“ அம்மாக்களுக்கு பிள்ளைகள் எப்பவுமே உசத்தி தான்.. ஆனா அதை சரியான முறையில் சிலர் பயன்படுத்துவாங்க சிலர் பயன்படுத்துவதில்லை.. பிள்ளைக்கு இதுதான் சரின்னு அவங்களே தீர்மானிச்சு அதை பிள்ளை மேல திணிப்பாங்களே தவிர புள்ளையோட விருப்பம் எது என்று கேட்காமல் இருக்கிற அம்மாக்களும் இருக்காங்க… அந்த புள்ள சந்தோஷமா வாழுமா?.. இல்லையான்னு அவங்களுக்கு யோசிக்கிற பக்குவம் இல்லாம கூட இருக்கலாம்.. அவங்களே ஒன்னை சரிவரும் என்று நினைத்து முடிவு பண்ணி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்… ஆனா இந்த அம்மாவுக்கு எப்பவுமே என் புள்ளையோட விருப்பம் மட்டும் தான் முக்கியம்.. உனக்கு புடிச்சிருக்கா?.. பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு கூடிய சீக்கிரமே வர முகூர்த்தத்தில் ஜாம் ஜாம்னு கல்யாணத்தை பண்ணிடலாம்..” என்றார்..

“ என் அம்மான்னா அம்மா தான்..” என்று மீராவின் கண்ணம் கிள்ளி கொஞ்சி மகிழ்ந்தான்..

“ சரிடா கண்ணா ஐஸ் வச்சது போதும் பொண்ணு யாருன்னு முதல் சொல்லு இன்னும் சொல்லவே இல்லையே..? “

“ எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான் மா.. “

“ என்னது எனக்கு தெரிஞ்ச பொண்ணா?.. கல்யாண வயசுல எனக்கு தெரிஞ்ச ஒரே பொண்ணு சீதா மட்டும் தான்.. அவளும் கல்யாணம் பண்ணிட்டா.. வேற யாரா இருக்கும்.. அம்மாக்கு யாருன்னு தெரியல டா கண்ணா, நீயே சொல்லிடேன் ப்ளீஸ்..”

“ என்னம்மா இதுக்கு போய் ப்ளீஸ் எல்லாம் சொல்லிட்டு சொல்றேன்.. கண்மணி தான்.. “

“ என்ன கண்ணா சொல்ற கண்மணியா?.. யாரு அந்த பொட்டிக் வச்சிருக்கிற பொண்ணா?.. அந்த பொண்ணு எப்படி உனக்கு தெரியும் எப்படி பழக்கம்?..”

“ உங்களுக்கு தெரியும் தானே அம்மா.. உங்களுக்கு வர கைபேசி அழைப்புகள் நீங்க எடுக்காட்டி அது எனக்கு ஆட்டோமேட்டிக்கா வரும்.. மூணு மாசம் முன்னாடி இந்த பொண்ணோட அழைப்பு ஒரு டைம் எனக்கு வந்துச்சு.. அப்போ அந்த பொண்ணோட குரல் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.. அப்புறம் ஏதோ மனச டச் பண்ற மாதிரி பீல் இருந்தது.. நானும் அந்த பொண்ணு அனுப்புற மெசேஜ் எல்லாம் எனக்கு வருவது மாதிரி செட் பண்ணிக்கிட்டேன்.. அப்புறம் கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்.. இப்பதான் அன்னைக்கு நீங்க பொட்டிக் போக சொன்ன டைம் அந்த பொண்ணு உங்களுக்கு ட்ரெஸ் பத்தி கன்ஃபார்ம் பண்றதுக்காக பண்ணின அழைப்பை நீங்க அட்டென்ட் பண்ணவே இல்ல.. அது எனக்கு வந்துச்சு.. அவளை அன்னைக்கு பார்த்த உடனே அவளா இருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன்… ஆனா பாருங்க அந்த கால் வந்து அதுதான் உண்மை.. அவள் தான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்.. பார்த்ததுமே மனசுல பசை போட்ட மாதிரி ஒட்டிகிட்டா.. எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு அம்மா.. ” என்று கூறிவிட்டு இனித்தாய் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவனது அறைக்கு சென்று விட்டான்..

 கண்மணி பார்க்க அழகான அமைதியான பெண்.. நன்றாக பழகக் கூடியவள்.. என்ற நல்ல எண்ணமே அவரிடம் இருந்தது அவளைப் பற்றி..

 நாளை யசோதாவிடமும் இதைப்பற்றி பேசிவிட்டு முடிவெடுக்கலாம் என தீர்மானித்து விட்டு அவரும் உறங்க சென்றார்..

 கோவிலில் இருந்து பொட்டிக் வந்த கண்மணியும் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்..

 அவள் சொன்னதை அவன் அமைதியாக கேட்டதால் இனி தொல்லை செய்ய மாட்டான் என்று நிம்மதியுடன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை உண்டு விட்டு அவளுக்கு பிடித்த விஐபி பாடலை போனில் ஒலிக்க விட்டு அவளது அறையில் உறங்க ஆரம்பித்தாள்..

 அடுத்த நாள் காலை அவள் எதிர்பாராத அதிர்ச்சியை அவளுக்கு தர காத்திருப்பது தெரியாமல் நன்றாக உறங்கி விட்டாள்..

              ****************

 யசோதா காபி போட்டு மகளிடம் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றாள் சீதா..

 அவள் ஓரளவுக்கு நிதானமாக நிமிர்ந்து பார்த்தாலே அவள் கண்ணில் படும் இடத்தில் தான் அந்த கடிதம் இருந்தது..

 அவன் புதிதாக கடிதம் எழுதி எல்லாம் வைத்துவிட்டு செல்வான் என்று அவள் என்ன கனவா கண்டாள்..அதனால் அதை கவனிக்காமலே விட்டு விட்டாள்..

 காலம் அவளுக்கு கொடுத்த கால அவகாசம் முடிந்தது போல்.. வெளியே மழை பெய்து கொண்டு இருக்க மழையை ரசித்துக்கொண்டே காபி குடிப்பதற்காக அறை ஜன்னலை திறந்து வைத்தாள்..

 இங்கெல்லாம் ஜன்னல் திறப்பது மிகவும் அரிதான ஒன்று..

 மழை குளிர்ந்த காற்றோடு வீச அந்த காற்று அவள் முகத்தில் பட அந்த குளுமையோடு சேர்ந்து இதமாக இருந்தது அவளுக்கு..

 அவளுக்கு காபி மிகவும் நிதானமாக ஒவ்வொரு சொட்டும் ரசித்து குடிக்க பிடிக்கும்..

அவள் காபி பிரியை.. நேரத்திற்கு உணவு இல்லாவிட்டாலும் ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐந்து ஆறு காபியாவது குடித்து விடுவாள்..

 அந்த ஜன்னல் வழியாக காற்றடித்து அந்த கடிதம் மெது மெதுவாக அசைந்து அதன் இருப்பிடத்தை மறைத்துக் கொண்டது..

 வேகமாக அடித்த காற்றினால் அந்த கடிதம் அந்த மேசைக்கு கீழே சென்று மறைந்து கொண்டது..

இனி சம்பவம் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்த பின்பு அந்த கடிதம் அவள் கையில் கிடைக்கும்.. ஆனால் அதன்பின் கிடைத்து பயன் என்ன?..

 அதன்பின் கைபேசியில் கொஞ்ச நேரம் சோசியல் மீடியாவில் உலாவி வந்தவள்.. நாளைய எக்ஸாமுக்காக பிரிப்பேர் பண்ண ஆரம்பித்தாள்..

 ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்த முத்து நண்பனுக்கு அழைத்து மதுரைக்கு வரும்படி கூறியதால் அவன் ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்து காத்திருந்தான்..

முத்து அதில் ஏறி அமர்ந்ததும் இருவரும் பேசிக் கொண்டே அவர்கள் ஊரை நோக்கி பயணித்தார்கள்..

 வீட்டுக்குள் வந்ததுமே கணேசன் “ என்னப்பா முத்து இவ்வளவு சீக்கிரமா உடனே திரும்பி வந்துட்ட?.. ரெண்டு நாள் நிக்கிறதுக்கு தானே எல்லா ஏற்படும் பண்ணி வச்சிட்டு போன.. மருமக பொண்ணு நீ சங்கடப்படுற மாதிரி ஏதாவது பேசிடுச்சா?.. நீ உடனே திரும்பி வந்ததும் யசோக்கு எவ்வளவு கவலையா இருக்குன்னு தெரியுமா?.. இங்கே இருக்கும் போது வாய் நிறைய அண்ணா அண்ணான்னு கூப்பிடும்.. அதோட பொண்ணுக்கு நீ மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோசம்னு சொல்லி சந்தோசமா பேசிட்டு போச்சு.. அங்க அந்த பொண்ணு ஏதாவது சங்கடப்படுற மாதிரி நடந்தாலும் நீதானேப்பா கொஞ்சம் பொறுத்து போகணும்.. ” என்றார்..

“ அப்படி எல்லாம் எதுவும் சங்கடப்படுற மாதிரி எதுவும் நடக்கலப்பா.. அத்தை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க நாங்க போனதும் சீதா காலேஜ் போயிட்டா.. அவளுக்கு வேற படிப்பு இருக்கு.. பரீட்சை இருக்கு.. எதுக்கு நான் அங்க இருந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கணுமேன்னு தான் நானே அத்தை கிட்ட சொல்லி புறப்பட்டு வந்துட்டேன்.. இங்கே நம்ம பிழைப்பையும் பார்க்க தானே வேணும்.. நான் அங்க இருந்துட்டா இந்த மாதத்துக்குரிய செலவில் ரெண்டு நாள் பட்ஜெட்ல அடிபடும் தானே.. நீங்க இத பத்தி எதுவும் கவலைப்படாதீங்கப்பா படிப்பு முடிய உங்க மருமக இங்க வந்துருவா.. இன்னும் மூணு மாசத்துக்கு பிறகு உங்க மருமகள் இங்க வர்றதை பற்றி நினைத்து சந்தோஷப்படுங்க..” என்று தந்தையிடம் கூறிவிட்டு குளிக்கச் சென்றான்..

 அவன் ஒரு நாள் நைட் அங்கே தங்கினாலும் நடக்க இருக்கும் விபரீதத்தை அறிந்து கொண்டு தான் அவனே ஓடி வந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..

 வரும் வழியிலேயே இரவு உணவை முடித்து விட்டு வந்ததால் அவனும் குளித்துவிட்டு வந்து அவள் நினைவுகளுடன் உறங்க ஆரம்பித்தான்..

 திருமணம் முடித்த அன்று முதல் இரவு கார் பயணத்தோடு முடிந்து விட்டது..

 நேற்று திருமணம் முடித்து இன்று இருவரும் ஆளுக்கு ஒரு திசையில்..

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்த காலை பொழுது அழகாக விடிந்தது..

 எப்போது விடிந்து அடுத்த நாள் ஆகும் என காத்திருந்தவன் போன்று நேரத்தோடு தாயின் முன்னே வந்து நின்றான் விஐபி..

“ என்னடா கண்ணா.. இன்னைக்கே பொண்ணு பார்க்க போறோமா என்ன?..” என்று பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு மகனுக்கு காபி கொடுக்க வந்துபோது கேட்டார் மீரா…

“ ச்சீ போங்கம்மா.. உங்களுக்கு சேட்டை ரொம்ப அதிகமா போயிடுச்சு.. கண்மணி விஷயத்துல எடுத்துதோம் கவுத்தோம் என்று எதுவும் செய்ய முடியாது.. அவங்க அம்மாகிட்ட தான் பேசணும்னு அவள் தெளிவா சொல்லிட்டா.. எங்களுக்கு இது லவ் மேரேஜ் எனக்கு அவளை பிடிச்சிருக்கு.. அவளும் என்னை லவ் பண்ணினாள்.. இது எதுவுமே அவங்க அம்மாவுக்கு தெரியாம பெரியவங்க நீங்களா பேசுற மாதிரி தான் இருக்கனும்.. முதல் உங்களுக்கு தெரிஞ்ச ஒரு நம்பிக்கையான புரோக்கர் வர வைங்க.. அதுக்கு முன்னாடி அத்தை கிட்ட போய் இந்த விஷயத்தை சொல்லிடுவோம்.. கால் பண்ணுங்க காலையில அங்க தான் வரோம்.. சாப்பாட்டு சேர்த்து பண்ண சொல்லிடுங்க.. புரோக்கரையும் அங்கே வர சொல்லுங்க… ” என்று கூறிவிட்டு காபியை குடித்துவிட்டு அவன் தயாராக அறைக்கு சென்று விட்டான்..

 மீராவும் யசோதாவுக்கு அழைத்து இருவரும் அங்கே வருவதாகவும் காலை உணவை அங்கேயே சாப்பிட அவர்களுக்கும் சேர்த்து உணவு செய்யும்படியும் கூறிவிட்டு தயாராக சென்று விட்டார்..

 இருவரும் ரெடியாகி 15 நிமிடத்தில் யசோதாவின் வீட்டிற்கு சென்று விட்டார்கள்..

சீதா காலேஜ் போவதற்காக தயாராகி வெளியே வந்தாள்..

 மீரா வந்ததும் “ வாங்க அத்தான்.. வாங்க அத்தை.. ” என அழைத்துவிட்டு அவள் காலேஜ்க்கு புறப்படுவதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்..

 எங்கே நின்றால் விஐபியை ஒரு முறை தான் விரும்பியதை நினைத்து பார்த்து விடுவோமோ?.. அது தவறாக போய்விடுமோ?. என பயந்துவிட்டாள்..

 மீரா யசோதாவிடம் சந்தோஷமாக விஐபி திருமணத்திற்கு சம்மதித்ததை கூறி பெண் யார் என்றும் கூறிக் கொண்டிருக்கும் போதே புரோக்கர் அங்கே வந்து சேர்ந்தார்..

 அவரிடம் பேச வேண்டியதை பேசி அவரை அனுப்பிவிட்டார்கள்..

 சற்று நேரத்தில் கண்மணியின் ஜாதகம் அவர்கள் கையில் கிடைக்க அதை எடுத்துக் கொண்டு இருவரும் ஜோசியரை பார்க்க சென்று விட்டார்கள்..

 ஜோசியர் அங்கே கண்மணியின் ஜாதகத்தை பிரித்துப் பார்த்த போது இங்கு கண்மணிக்கு கையில் தையல் மெஷினின் ஊசி ஆழமாக குத்திவிட்டது..

 சீறி பாய்ந்து ஓடிய ரத்தத்தோடு கண் கலங்கி போய் நின்றாள்..

 காலை எழுந்து இவ்வளவு நேரம் ஆகியும் தன் மனைவியிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்பதை பார்த்ததுமே அவள் இன்னும் அவன் எழுதி வைத்த கடிதத்தை பார்க்கவில்லை என தெரிந்து கொண்டான் முத்து..

 இந்நேரம் கடிதத்தை பார்த்தால் அதில் அவன் எழுதி வைத்த அவனது நம்பர் இருக்கும் அதற்கு அழைத்து கண்டபடி திட்டி தீர்த்து இருப்பாள்..

அப்படி திட்ட கூட இன்னும் அழைப்பு வரவில்லை.. அதனால் அவள் இன்னும் கடிதத்தை பார்க்கவில்லை என தெரிந்து கொண்டான்..

 அவன் சொல்வதை கடிதத்தில் சொல்லாமல் நேரடியாகவே சொல்லி இருக்க முடியும்..

 அதன் பின் அதைக் கேட்டு அவன் மனைவி எப்படி ருத்ர தாண்டவம் ஆடுவாள் என அவனுக்கு நன்கு தெரியும்..

 இப்படி ஒன்று நடந்தால் அவன் மீது அவளுக்கு இருக்கும் ஒரு சின்ன நல்ல எண்ணம் கூட கெட்டுவிடும்..

 அதன் பின் காலம் முழுக்க மனம் ஒத்து இருவரும் வாழ முடியாது என அவனுக்கு நன்கு தெரியும்..

 கடிதத்தை அவள் பார்த்தாளோ?. பார்க்கவில்லையோ?. அது அடுத்த கட்டம் இனி தான் என்ன செய்ய வேண்டும் என முத்து நன்கு தெரிந்துகொண்டான்..

 ஜோசியரிடம் சென்ற யசோதாவுக்கும் மீராவுக்கும் முகத்தில் சற்றும் கலை இல்லாமல் இதை எவ்வாறு வி ஐ பி யிடம் கூறுவது என தெரியாமல் தவித்து போய் வீடு வந்த சேர்ந்தார்கள்..

 மகன் திருமணத்திற்கு தயாராக அதை தானே தடுக்கும்படி ஆகிவிட்டது என மீராவிற்கு மிகுந்த கவலை..

 விஐபி ரெக்கார்டிங் முடித்துவிட்டு ஆபீஸ் போகாமல் நேரடியாக யசோதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.. தாய் மற்றும் அத்தை இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டதாக அழைத்து கூறியதும் என்னவோ ஏதோ என தெரிந்துகொள்ள ஆசையோடு வந்தான்..

 மகனுக்கு எப்படி சொல்வது என தெரியாமல் தவித்து போய் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் யோசியர் கூறியதை சொன்னார் மீரா..

 அதைக் கேட்டு சற்று நேரம் ஆடிப் போய் அப்படியே அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்து விட்டான் விஐபி..

இருவர் ஜாதகத்தையும் பார்த்து ஜோசியர் என்ன சொன்னார்?..

 முத்து எதற்காக கவலைப்பட்டு கடிதத்தில் என்ன எழுதி வைத்தான்..

Advertisement