Advertisement

ஓம் நமச்சிவாய

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை. 8

 பாரதியும் செல்வியும் யார் கட்டிலில் படுப்பது யார் கீழே படுப்பது என்று அவர்கள் இருவரும் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.. அதனால் நேரம் தான் கடந்து சென்றது… ஆனால் இருவரும் சற்று நேரமும் ஓய்வு எடுக்க வில்லை இறுதியில் பாரதிக்கு கமிஷ்னரிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது..

 அந்த அழைப்பே இருவரது விவாதத்தையும் தடை செய்தது.. பாரதியை உடனடியாக கமிஷ்னர் அலுவலகம் வருமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்…

பாரதியும் செல்வியிடம் அவன் மீண்டும் ஸ்டேஷன் செல்வதை அர்ச்சனாவிடம் கூற வேண்டாம் என்று கூறி அவனது காக்கி உடையை அணிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றான்…

 வீட்டிலிருந்து அரை மணி நேரத்தில் கமிஷ்னர் அலுவலகத்தை சென்றடைந்தான் பாரதி…

 கமிஷ்னர் அலுவலக அறைக்குள் சென்று கமிஷ்னருக்கு சல்யூட் வைத்து விட்டு ” எனி ப்ராப்ளம் சார் ” என்றான்

 கம்பீரத்தோடு

” சாரி மிஸ்டர் பாரதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த காயத்துக்கு வருந்துறேன்… மேலிடத்திலிருந்து மணல் அகழ்வு கேஸ் பற்றி ரொம்ப கேள்வி கேக்குறாங்க… உங்களை நம்பி நானும் அந்த கேசை சீக்கிரம் முடிச்சுடுவோம்னு ஐஜி கிட்ட சொல்லிட்டேன்.. இரண்டு நாள் டைம் தந்திருக்காங்க அதுக்குள்ள அந்த கேஸ் முடிஞ்சு இருக்கணுமாம்.. உங்களால மட்டும் தான் பாரதி இதை சீக்கிரம் சக்ஸஸ்ஃபுல்லா முடிக்க முடியும்.. உங்களுக்கு தேவையான டீம் நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்க… இதை நான் உங்ககிட்ட ஆர்டரா சொல்லாம ரிக்வெஸ்ட்டாக கேட்டுக்கிறேன் ப்ளீஸ் பாரதி.. ” என்றார் கமிஷனர்….

 பாரதியும் ” ஓகே சார் டண்.. முடிச்சிடலாம்.. எனக்கு இந்த டீமுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டரா மூர்த்தி வேணும்.. நீங்க ஜட்ஜ் சாரிடம் ரிக்வெஸ்ட் பண்ணி மூர்த்தியோட சஸ்பென்ஸ் ஆர்டரை கேன்சல் பண்ணி திரும்ப ஜாயின் பண்ண வைக்கணும்.. அப்படி எனக்கு நான் கேட்கிற டீம் தருவீங்க அப்படின்னா இந்தமுறை அந்த கூட்டத்தை என்னால கண்டிப்பா அரெஸ்ட் பண்ண முடியும்… ” என்றான் நிமிர்வாக பாரதிகிருஷ்ணா…

 கமிஷ்னரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு அரைமணிநேரத்தில் வந்துவிட்டான்.. அர்ச்சனா சொன்னது போன்று மாலை 4 மணிக்கு அவர்களை எழுப்புவதற்கு அவர்களின் அறையின் முன் நின்று கதவை தட்டினார்.. பாரதி அதற்குள் வீட்டிற்கு வந்து விட்டதால் இது அர்ச்சனாவுக்கு தெரியாமல் போனது… கதவை தட்டும் சத்தம் கேட்டதும் செல்வி வந்து கதவை திறந்தாள்…

” நாலு மணி ஆயிடுச்சு செல்வி சீக்கிரமா ரெடியாகுங்க.. 5 மணிக்கு எல்லாம் ஹாஸ்பிடல் போய் இருக்கணும்.. சீக்கிரம் ரெடியாகி கீழ வாங்க நான் காஃபி போட்டு வைக்கிறேன்.. ” என்றார் அர்ச்சனா

” சரிங்க அத்தை.. ” இன்று அவரைப் பார்த்து சிரித்தபடியே செல்வி கதவை அடைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்..

” லோட்டஸ் நீ இங்கே குளிச்சு ரெடியாகு நான் அச்சும்மாவோட ரூம்ல குளிச்சு ரெடியாகிறேன்..” என்று கூறி அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு அவனது

 மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கீழே வந்தான்..

” வர வர ரொம்ப ஓவராத்தான் இந்த கருவாப்பய பண்ணுறான்… உனக்கு எல்லாத்துக்கும் சேர்த்து இருக்கு டி ஒரு நாளைக்கு.. குழந்தை பிறக்கட்டும் இந்த குழந்தைக்கும் இந்த திருமணத்துக்கும் இடையில உன்னோட பிளான் எதுவும் இல்லாட்டி நிச்சயம் என்னோட காதலை உனக்கு தெரியப்படுத்துவேன்.. அதுக்கு அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி.. ” என்று மனதில் நினைத்துவிட்டு நேரம் போவதை உணர்ந்து அவளும் குளியலறைக்குள் சென்றாள்…

 மேலே இருந்து செல்வி ரெடியாகி கீழே வரும் தருணத்தில் பாரதியும் அவனது அச்சும்மாவின் அறையில் இருந்து வெளியே வந்தான்..

 அதன்பின் அர்ச்சனா கொடுத்த காஃபியை இருவரும் குடித்துவிட்டு பாதுகாப்பாக கால் டாக்ஸி பிடித்து இருவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்கள்…

 அங்கு சென்றதும் முதலில் செல்வியை பெண் டாக்டர் பரிசோதித்தார்.. ஏழாவது மாத ஸ்கேன் எடுத்தார்கள்.. ஸ்கேனில் பாரதியும் குழந்தையை பார்த்தான்.. டாக்டர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அனைத்தும் நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் பயப்படும் படி எதுவும் இல்லை.. ஆனால் தாய் மிகவும் வீக்காக இருப்பதாகவும் சத்தான ஆகாரங்கள் மற்றும் பழவகைகள், கீரை வகைகள் போன்றவற்றை தினமும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார்..

 அதன்பின் அவள் கும்மிடிப்பூண்டியில் செக்கப் சென்ற ரிப்போர்ட்டை ஆராய்ந்து பார்த்தார்.. அதில் ஒரு விஷயம் செல்விக்கு தெரியவில்லை என்று அவரும் தெரிந்துகொண்டார்..

 செல்வியை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு பாரதியிடம் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த முதல் மாத செக்கப்பிலிருந்து இந்த ஏழாவது மாத செக்கப் வரையான அனைத்தையும் தெளிவாக புரிய வைத்தார்…

 அதை தெளிவாக கேட்டுக்கொண்டு பாரதியும் அவனது காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு செல்வியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்…

 செல்வியை வீட்டில் விட்டுவிட்டு அர்ச்சனாவிடம் மணல் அகழ்வு கேஸை பற்றி சுருக்கமாக கூறிவிட்டு மீண்டும் ஸ்டேஷன் சென்றான்..

 அங்கு சென்றதும் கமிஷ்னருக்கு அழைத்து மூர்த்தியை பற்றிக் கேட்டுக்கொண்டான்.. ஜட்ஜ் பாரதி கேட்டதனால் மட்டுமே மூர்த்தியை மீண்டும் ஜாயிண்ட் பண்ணுவதற்கு அனுமதித்தார் என்று கமிஷனர் கூறினார்..

 அதன்பின் மூர்த்திக்கு அழைத்து இன்னும் அரை மணி நேரத்தில் டியூட்டியில் ஜாயின் பண்ணி இருக்க வேண்டும் எனக் கூறினான்..

 அவனும் மிகவும் மகிழ்ச்சியோடு வருவதாக கூறினான்..

 பாரதி சொன்னது போன்று அரைமணிநேரத்தில் முகத்தில் பிரகாசமான மகிழ்ச்சியோடு மூர்த்தி மீண்டும் டியூட்டியில் ஜாயின் பண்ணினான்…

 பாரதி மற்றும் மூர்த்தி அவர்களோடு சேர்ந்து வழிப்பறி கேஸில் அவன் ஸ்பெஷலாக ரெடிபண்ணி வைத்திருந்த டீமையும் அழைத்துக்கொண்டு மணல் அகழ்வு நடக்கும் இடத்திற்கு அங்கிருப்பவர்களை வேட்டையாடச் சென்றான் பாரதிகிருஷ்ணா டி சி பி..

அவன் கை நீட்டி பணம் வாங்கிய தைரியத்தில் பாரதியைக் கண்டு அஞ்சாமல் மிகவும் சாதரணமாக சிரித்து பேசியபடி இருந்தார்கள் அவன் தேடிவந்த குற்றவாளிகள்..

 இந்த முறை வேங்கை பதுங்குவதற்கு அல்லாமல் பாய்வதற்காக வந்துள்ளது என தெரியாமல் நரிகள் போக்கு காட்டி கொண்டிருந்தது…

 பாரதி மட்டும் முன்னே நடந்து வந்தான்.

 பாரதியை பார்த்துவிட்டு ராமுவின் கையாள் ஒருவன். “அடடே! ராமு அண்ணே அங்க பாருங்க நம்ம டிசிபி வர்றான்..”என்றான் எகத்தாளமாக.

 இது அவர்களை வளைத்து சற்று தள்ளி இருந்த பாரதியின் டீமிற்கு கேட்டது..

 மூர்த்தியோ அருகில் இருப்பவரிடம்

“அவனுக்கு இன்னைக்கு கட்டம் சரியில்லை.. ஏழரைச் சனியன் டங்காமாரி பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடுது.. சார் கையால இன்னைக்கு நல்லா வாங்க போறான்..” என்றான்..

 பாரதியைப் பார்த்து சற்றும் பயமில்லாமல் சகஜ நிலையில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..

 அவர்களின் அருகில் சென்றவன் இரண்டு மூன்று தடவை அவனுக்கு அவர்கள் போக்குக் காட்டிக் கொண்டிருந்த கோவத்தில் இந்த முறை வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்று நினைத்து ராமு என்று அழைக்கப்படும் அந்த கூட்டத்தின் தலைவனை விலங்கு மாட்டி கைது செய்தான் பாரதி..

 அதைப் பார்த்த மூர்த்தி டீம் அங்கிருந்த மற்றவர்கள் தப்பித்து ஓட முயன்றதை தடுத்து அவர்களையும் கைது செய்தார்கள்…

 பணமும் வாங்கிவிட்டு அவர்களின் ஆள் என்று பொய் கூறி சகஜமாக பழகி விட்டு இன்று போலீஸ் புத்தியை காட்டி விட்டான் .. என்ற கோபத்தில் ராமு என்பவன் அவர்களின் மணல் அகழ்விற்கு ஆதரவாக இருக்கும் அமைச்சருக்கு கைப்பேசியில் அழைத்தான்…

 அவன் கைப்பேசியில் அழைப்பதைப் பார்த்து கைப்பேசியை பிடிங்கி தூக்கி எறிந்து விட்டான்..

 அதன் பின் அவர்களை அழைத்துச் சென்று லாக்கப்பில் தள்ளிவிட்டு மூர்த்தியிடம் எப் ஐ ஆர் ஃபையில் பண்ண சொன்னான்..

 அதன்பின் கமிஷ்னருக்கு அழைத்து

” இந்த எருமை கூட்டங்களை பிடிக்க எனக்கு இரண்டு நாள் தேவை இல்லை சார்.. எனக்கு இரண்டு மணி நேரமே போதும்.. ஆப்பரேஷன் சக்சஸ் சார்.. “

 என்றான் பாரதிகிருஷ்ணா டிசிபி வேலையை முடித்து விட்ட திமிரோடு…

  இது டிவி நியூஸில் பரவலாக வெளியாகியது அதை பார்த்த அமைச்சர் ஐஜி-க்கு அழைத்தான்..

 அங்கு யாரிடமும் அமைச்சரின் பதவி பலம் எடுபடவில்லை.. போலீஸ் தன் கடமையை திறம்பட செய்து முடித்தது..

 இதற்கும் டிவி நியூஸ்ஸில் பாரதியின் புகைப்படம் போட்டு ” இளம்புயல் டிசிபி பாரதிகிருஷ்ணா அவரின் அடுத்தமிகவும் சவாலான கேஸை வெற்றிகரமாக முடித்து விட்டார்.. இதை தெரிந்துகொண்ட காவல் துறை அமைச்சர் டி சி பி- யை பாராட்டினார்.. மக்களின் மத்தியில் டிசிபி மதிக்கத்தக்க ஒருவர் ஆகிவிட்டார்.. டிசிபி-யின் தீவிர வேட்டையை பார்த்த ஏனைய குற்றவாளிகள் அரண்டு போய் உள்ளார்கள்.. இனியாவது இந்த சென்னை மாநகரம் குற்றம் குறைந்து அசுத்தம் நீங்கி சுத்தமாக இருக்கும் என நம்புவோம்… மக்களாகிய நாமும் காவல்துறைக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பை கொடுத்து நாம் வாழும் இடத்தை குற்றம் அற்றதாக்குவோம்.. ” என்று டிவி நியூஸ் நிறைவு பெற்றது..

 அமைச்சரின் மூலம் பாரதி லஞ்சப்பணம் பெற்ற விஷயம் கமிஷ்னருக்கு தெரியவந்தது.. கேட்ட கமிஷ்னர் நம்பாமல் அமைச்சரிடம் வாதாடி விட்டு அதை உறுதிப் படுத்துவதற்கு பாரதியை கமிஷ்னர் அலுவலகம் வருமாறு அழைத்தார்…

 அவனும் அழைப்பை ஏற்று அங்கு சென்றான்.. ” அமைச்சர் கோதண்டம் நீங்க இந்த மணல் அகழ்வு கேஸ்க்கு ராமுகிட்ட லஞ்சமா பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தி உள்ளார்… இதை ஐஜி உட்பட நாங்க யாரும் நம்பவில்லை.. ஆனால் அவர் அடித்துச் சொல்கிறார் நீங்கள் லஞ்சப் பணம் வாங்கியதாக இதற்கு உங்கள் பதில் என்ன பாரதி…” என்றார் கமிஷ்னர்…

” இது அவங்களை வெளியே எடுப்பதற்காக அமைச்சரோடு ஒரு யுத்தி.. நான் யார்கிட்டயும் பணம் வாங்கலை சார்.. அப்படி வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.. என்னோட நேர்மையை சந்தேகப்பட்ட இந்த நிமிஷமே இந்த வேலையை நான் ராஜினாமா பண்ணுறேன்.. என் மேல சுமத்தி இருக்கிற குற்றத்துக்கு ஆதாரத்தை காட்ட சொல்லுங்க.. இல்லன்னா நான் அமைச்சர் கோதண்டம் மேல மானநஷ்ட வழக்கு போட வேண்டியது வரும்..” என்றான் கோபத்தில்..

 கமிஷ்னர் ஐஜி அனைவரும் அமைச்சரிடம் விசாரித்து விட்டார்கள் இதற்கு ஆதாரம் இல்லாததால் இந்த குற்றம் யாரிடமும் எடுபடவில்லை..

 பொய் குற்றச்சாட்டில் இருந்து சற்று வெளிவந்த பாரதி நேராக ஸ்டேஷன் சென்றான்.. ” ஏண்டா எடுபட்ட நாய்களா

 உங்களை கைது பண்ணினா அந்த அமைச்சர் ஏன் இதுக்குள்ள வர்றான்?.. இதுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்.? பர்மிஷன் இல்லாம நீங்க மணலை கொள்ளை அடிப்பீங்க அதை நாங்க பார்த்துட்டு சும்மா போகணும்.. இதனால ஆறு குளம் நீர் நிரம்பி வழிந்தோடும்.. அப்பாவி விவசாயிகளும், ஏழை மக்களும் பாதிக்கப்படுவார்கள்.. நீங்க சொகுசாக அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி ரூம்ல ஜாலியா இருப்பீங்க..” என்று இந்த குற்றத்திற்கும். அவன் மீது சுமத்திய குற்றத்திற்கும் சேர்த்து வைத்து அடி பின்னி விட்டான் பாரதி கிருஷ்ணா..

 அடுத்த நாள் அவர்களையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.. அதனால் அமைச்சரிடம் இருந்து பெரிதாக ஆபத்து வரும் என்று தெரிந்து.. அவனே அன்று இரவு அவர்களுக்கு காவலாக இருந்தான்..

 அமைச்சர் கோதண்டத்தின் மேல் சந்தேகம் ஏற்பட்டது பாரதிக்கு.. அவரை கண்காணிக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டான்…

 ஒரு வழியாக இரண்டு நாள் நேர்முகத் தேர்வும் தொய்வில்லாமல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.. எஸ் கே பில்டர்ஸ் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அவனது செல்வாக்கையும் பண பலத்தையும் பயன்படுத்தி செய்ய ஆரம்பித்தான் எஸ் கே…

 எஸ் கே பில்டர்ஸை பற்றி சரவணனும் பாரதியிடம் கூறினான்..

 பாரதி கூடிய சீக்கிரம் யாரந்த எஸ்கே என்று பார்க்கலாம் என கூறினான்..

 தனது வீட்டிற்கு அழைத்து அர்ச்சனாவிடமும் செல்வியிடமும் இரவு முழுவதும் கேஸ் விஷயமாக ஸ்டேஷனில் கட்டாயம் அவன் இருக்க வேண்டியதால் அவனால் வீட்டிற்கு வர முடியாது.. என்றும் காலையில் அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வருவதாகவும் கூறினான்..

 பாரதி எதிர்பார்த்தது போன்று அவன் அங்கு இருப்பான் என்று எதிர்பார்க்காமல் அமைச்சரின் அடியாட்கள் அங்கு வந்து ராமுவின் குழுவை விடுவிப்பதற்காக அங்கிருந்த கான்ஸ்டபிளை தாக்கினார்கள்.. அவனின் உள் அறையில் இருந்த பாரதிக்கு சத்தம் கேட்டு வெளியே வந்தான்.. அங்கு ஆக்ரோஷமாக வந்த பாரதியைப் பார்த்து வந்த அடியாட்கள் பின்னே சென்றார்கள்.. பொறியில் சிக்கிய எலியை விட்டுவிடாமல் அவர்களையும் அடித்து துவைத்து சிறையில் அடைத்தான்.. வந்தவர்களில் பெரிய ஆள் ஒருவனுக்கு அமைச்சரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான். ” டேய் ராமு- வை வெளியே எடுத்துட்டீங்களா?.. அவன் மட்டும் நாளைக்கு கோர்ட்டுல அந்த பாரதியோட அடியை தாங்க முடியாம வாயைத் திறந்தான் நாம எல்லாரும் உள்ள போக வேண்டி வரும் அதை நினைப்பில் வச்சு சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போன தடம் தெரியாமல் வந்துருங்க.. ” என்றான் அமைச்சர்..

” ஹலோ மச்சான் நானே தான் டி சி பி பாரதிகிருஷ்ணா.. முதல் இந்த கேஸை நல்லபடியா கோர்ட்டில் ஒப்படைத்து ஆதாரங்களைத் திரட்டி இந்த குற்றத்தை நிரூபிக்கிறேன்.. அப்புறம் இருக்கு நீ மாமியார் வீட்டுக்கு போறது பற்றிய சங்கதி..” என்றான் ஆக்ரோஷமான வெற்றி சிரிப்போடு..

 அவனின் இச்செயலை சற்றும் எதிர்பார்க்காமல் கோட்டைவிட்ட அவரது முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டார் அமைச்சர் கோதண்டம்…

 அடுத்த நாள் காலையில் ஸ்டேஷனில் இருந்து நேரடியாக அவனே குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு கோர்ட்டிற்கு சென்றான்..

 அவர்களின் இந்த கேஸ் விசாரணைக்கு வந்து விசாரணை சரவணனால் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது.. மேலும் பத்து நிமிஷம் கடந்து கோர்ட்டின் கவனத்தை திசை திருப்பும் படி கொரியர் ஒன்று வந்தது..

அனைவரும் அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள்..

அது நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது..

 நீதிபதி அதை பிரித்து அதில் இருந்த சீடியை மடிக்கணினியில் போட்டுப் பார்த்தார்.. அதில் ராமுவும் அமைச்சர் கோதண்டமும் ஒப்பந்தம் போட்டு அமைச்சரின் முன்னிலையில் ராமுவின் ஆட்கள் மணலை சூறையாடுவதும் இருவரும் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்து இடுவதும் நீண்ட நேரமாக இருந்து பேசுவதும் என்று அந்த வீடியோ ஒளிபரப்பாகியது.. அதைப்பார்த்து நீதிபதி மக்களின் பார்வைக்கு திருப்பினார்..

மக்களும் பார்த்ததில் சரவணனின் வாதம் ராமுவிடம் தொடர்ந்தது..

அவனோ அது உண்மையில்லை என்றும் அந்த வீடியோ எடிட் பண்ணியது என்றும் கூறினான்..

 இந்தக் கேள்வி வரும் என்று தெரிந்தே அந்த கொரியர் அனுப்பிய நபர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒருவரை அனுப்பி வைத்தார்..

 அவரும் வந்து அது உண்மை என்று உறுதிப்படுத்திய பின் அதையே ஆதாரமாகக் கொண்டு ராமுவையும்

 அவனது கூட்டத்தையும் சிறையில் அடைக்கும்படி கூறி தண்டனையும் வழங்கினார்..

அடுத்து உடனடியாக அமைச்சரை கஸ்டடியில் எடுத்து அமைச்சருக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று விசாரிக்கும்படி டிசிபி பாரதிகிருஷ்ணாவுக்கு உத்தரவிட்டார்..

 கேஸ் விஷயம் முடிந்த பின் தான் பாரதி வீட்டுக்கு வந்தான்..

 டிவி நியூஸில் அனைத்தையும் பார்த்த அர்ச்சனா மிகவும் பயந்து போனார்..

பாரதி வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு சாப்பிட வந்தேன்.. அவன் சொன்னது போன்று வருவான் என்று தெரிந்து காத்திருந்தார்கள்..

 அர்ச்சனா மகனுக்கு உணவை ஊட்டி விட்டார்.. இந்த முறையும் வைதேகி வந்தாள் அவளுடன் சேர்ந்து செல்வியும் வந்தாள்..

அர்ச்சனா மூவருக்கும் போதும் என்ற அளவுக்கு ஊட்டி விட்டார்..

 மகன் வயிறார உணவு உண்டதும்.

” என்ன கண்ணா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அந்த அமைச்சர் ரொம்ப பொல்லாதவன்னு நானும் கேள்வி பட்டு இருக்கேன்.. நீ அவனோட மோதுறது நாளைக்கு உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்ணுறது.. ” என்றார் கவலையுடன் அர்ச்சனா..

 தாயின் அந்த கவலை ஒன்றுமில்லை என்பது போன்று ” ஐயோ அச்சும்மா நீங்க என்னை அவ்வளவு கோழையாகவா வளர்த்து இருக்கீங்க?.. இல்லையே.. எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்ன?.. அவனெல்லாம் எனக்கு ஒரு ஆளா?.. நான் பார்த்துப்பேன் நீங்க கவலைப்படாதீங்க அச்சும்மா.. ” என்று தாயை தேற்றினான்..

இதனால் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அவர்களின் குலதெய்வத்திற்க்கு காணிக்கை முடிந்து வைத்தார் அர்ச்சனா..

நேற்று மருத்துவமணை சென்று வந்ததுமே ஸ்டேஷன் சென்றதால்.. செல்வியை பற்றி டாக்டர் கூறியதை அர்ச்சனா மற்றும் யசோதாவிடம் இன்றுதான் சொன்னான்.. இது யசோதாவுக்கும் தெரியாது..

அவர்களும் பழவகை கீரை இரும்புச்சத்து அடங்கிய உணவு என அனைத்தையும் கொடுத்து செல்வியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்கள்..

பாரதிக்கு அவனது வீடு மற்றும் அமைச்சரின் கேஸ் என அலைந்து நாட்கள் நகர்ந்தது.. கிட்டத்தட்ட அமைச்சரின் அனைத்து குற்றங்களையும் ஆதாரத்துடன் கைப்பற்றி விட்டான்..

 மாதம்தோறும் தவறாமல் அவனே பாரதியை செக்கப்பிற்க்கு அழைத்துச் சென்றான்..

 எஸ் கே அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் செய்து கொண்டு அவனது எஸ் கே பில்டர்ஸை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கின்றான்..

 அவனது வேலையின் நேர்த்தியை அவன் கட்டியிருந்த அவர்களின் ஆபீஸ் டிசைன் கூறியது..

இன்டீரியர் டெக்கரேஷன் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செய்து இருந்தான்… கட்டிடக்கலையில் அவனின் பெயர் சென்னையில் அடிபட ஆரம்பித்தது..

 அதைத்தொடர்ந்து வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டித் தருமாறு வந்தது..

இவ்வாறு அவர்களுக்கு இரண்டு மாதம் சென்றது..

 செல்விக்கு பிரசவ காலம் நெருங்குவதால் இந்த நேரத்தில் அவன் கோர்ட் கேஸ் என அலைய விரும்பாமல் அமைச்சரின் கேஸ் பற்றிய அனைத்தையும் ஆதாரத்தோடு ஐஜியிடம் ஒப்படைத்தான் பாரதிகிருஷ்ணா..

அதோ இதோ என்று பாரதி எதிர்பார்த்த செல்வியின் பிரசவ நாளும் வந்தது..

 டாக்டர் அவளுக்கு கொடுத்த டேட் இன்று.. அதனால் தான் பாரதி குழந்தை பிறக்கும் வரை லீவ் எடுத்திருந்தான்..

செல்வியின் நிறை மாத வயிறு மிகவும் பெரிதாக இருந்தது.. பார்ப்போர் சற்று பயந்து விடுவார்கள்.. பாரதியின் கட்டாயத்தால் அர்ச்சனா வைதேகி யசோதா மூவரும் அனைத்தையும் தயார் படுத்தி ரெடியாக வைத்து இருந்தார்கள்.. அவனே வாடகை காரில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்வியை செக்கப் பண்ணிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்..

 அங்குசென்று அனுமதித்த பின் மாலை நேரத்தில் செல்வியை மிகவும் பாடு படுத்திவிட்டு பிறந்தார்கள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக..

 மயக்கம் தெளிந்து செல்வி கண்விழித்தபோது அருகில் தொட்டிலில் கண்மூடி செப்பு வாய் மெதுவாக திறந்து படுத்திருந்த குழந்தைகளைப் பார்த்தாள்..

 பார்த்தவள் மீண்டும் ஒரு கணம் உற்றுப் பார்த்தாள் உடனடியாக பார்வதியை அழைத்தாள்..

வைதேகி வந்து சொல்லவும் பாரதியும் உள்ளே சென்றான்..

” இப்ப புரிஞ்சிடுச்சு நீங்க ஏன் குழந்தை குழந்தைனு சொல்லி என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு.. உங்க முதல் மனைவி மட்டும் இறந்துட்டாங்களா?.. ” என்றாள் செல்வி.. அவள் அதை கேட்டு முடிப்பதற்குள் கண்ணீர் வழிந்தோடியது..

” ஹேய் கண்ணம்மா என்னடி சொல்ற முதல் மனைவியா?.. லூசாடி நீ.. எனக்கு முதல் மனைவியும் நீ தான்.. இனி எப்பவும் நீ மட்டும் தான்..” உனக்கே தெரியும் என்ன நடந்துச்சுன்னு இது எப்படி சாத்தியம்னு சத்தியமா எனக்கு தெரியல.. ப்ளீஸ் என்னை நம்பு இதை நான் கண்டுபிடிக்கிறேன்.. ” என்றான் பாரதி..

” ஆமா கண்டுபிடித்து கழிச்சீங்க… நீங்க விசாரித்து கண்டுபிடிப்பதற்கு இது கொலைக் கேஸ் இல்ல.. நான் குற்றவாளியும் இல்லை.. என்னை சீட் பண்ணிட்டீங்க… பொய் சொல்லி ஏமாத்திட்டீங்க… குழந்தைகளை நானே வளர்ப்பேன்.. நாம பிரிஞ்சிடுவோம்.. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகமா இருந்துச்சு இப்ப எல்லாமே தெளிவாகிடுச்சு.. ஊரே மதிக்கிற நீங்க எனக்கு மட்டும் இப்படி ஒரு துரோகத்தை பண்ணுவிங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. மொத இங்க இருந்து வெளியே போங்க.. உங்களைப் பார்க்கவே பிடிக்கலை.. நான் எங்க ஊருக்கே போகப்போறேன்.. ” என்று கூறி பாரதியின் கண்ணம்மா அவனுக்கு முகம் காட்டாமல் மறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

இதைப் பார்த்த அர்ச்சனா வைதேகி சரவணன் அனைவரும் திகைத்து நின்று பாரதியை சுற்றி வளைத்தார்கள்..

 குழந்தைக்காக திருமணம் செய்தாலும் அவளை பார்த்த இந்த குறுகிய காலத்திலேயே உண்மையாக அவனது கண்ணம்மாவை பாரதி காதலித்தான்.. ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் அவனது கண்ணம்மா அவனை பிரிந்து செல்வதாகக் கூறி தண்டித்தாள்..

வீணை இசைக்கும்..

Advertisement