Advertisement

 வருவாயோ அன்பே 07

 யசோதா அழுது புலம்பி கவலையுடன் இருப்பதை பார்த்த மீரா தனியே அவரை விட்டு செல்ல மனம் இல்லாமல் யசோதா வீட்டில் இருந்தார்..

 அங்கிருந்து சீதாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்வதாக கூறி வந்த முத்து திடீரென இன்று மீண்டும் மதுரைக்கு செல்வதை பார்த்த யசோதாவுக்கு இது மகளின் வேலை என நன்றாகவே தெரிந்தது..

 இவளை எவ்வாறு வழிக்கு கொண்டு வந்து அங்கே அழைத்துச் சென்று முத்துவுடன் சேர்ந்து வாழ வைப்பது என பல யோசனையுடன் தவித்து போயிருந்தார்..

“ ஏன் அண்ணி இந்த சீதா மட்டும் இப்படி இருக்கா?.. உங்க அண்ணா இப்ப இருந்தா எவ்வளவு கவலைப்படுவார்… அவர் மகளுக்கு கொடுத்த செல்லம் இப்ப எங்க கொண்டு வந்து அவளை நிப்பாட்டி இருக்கு பார்த்தீங்களா?.. யார் சொல்லியும் அவள் கேட்கவே இல்லையே..! அவளோட முடிவு தானே தேர்ந்தெடுத்தாள்.. மாப்பிள்ளையாவது அவளை அங்கேயே புடிச்சு வைப்பார் என்று பார்த்தால் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணி அவளோட வழியிலேயே விட்டுட்டு அவர் போயிட்டார்..

இன்னும் எவ்வளவு காலம் நான் உயிரோடு இருப்பேன்னு தெரியாது.. அதுக்கு முதல் என் பொண்ணோட வாழ்க்கை சந்தோசமா எல்லாரையும் போல குடும்பம் புள்ள குட்டி கூட வாழ்வதை பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைக்காது போல இருக்கு.. இன்னும் எத்தனை காலத்துக்கு பிடிவாதத்தை கட்டிக்கிட்டு இவ இங்கயும் மாப்பிள்ளை அங்கயும் தனித்தனியா இருக்கப்போறாங்களோ தெரியாது.. எல்லாத்துக்கும் எப்ப தான் சரியான தீர்வு கிடைக்குமோ..? ” என்று மகளின் அடுத்த கட்ட வாழ்க்கையை நினைத்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார் யசோதா..

“ அட விடுங்க அண்ணி அதுதான் இன்னும் மூணு மாசம் டைம் கேட்டிருக்காளே.. அந்த மூணு மாதம் வரைக்கும் நம்மளும் டைம் கொடுத்து பார்ப்போம்.. முன்னபின்ன தெரியாத அறியாத இடத்தில போய் வாழ சொன்னா அவளும் என்னதான் பண்ணுவா?.. இந்த சென்னை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவ.. அந்த வீடு அவங்களோட சூழ்நிலை அவங்களோட பழக்க வழக்கம் எல்லாம் அவளுக்கும் புரிவதற்கு கொஞ்ச காலம் வேணும்.. மூன்று மாதம் படிப்புக்காக டைம் கேட்டு இருக்கா.. அந்த டைம் முடிய அவ அங்க போயிட்டா சரி.. இல்லன்னா நமக்கு அவ புதுவித கேம் காட்டினா?.. பிறகு நாம அவளை பாத்துக்கலாம்.. இப்ப வெளிய போயிருக்கான் வி ஐ பி.. அவன் சொல்லி சீதா கேட்காம போயிடுவாளா என்ன?.. சும்மாவே யோசனை அலைச்சல் அதனால உங்க உடல் நிலை கெட்டுப் போய் இருக்கும்.. நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அண்ணி.. சீதா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா.. ” என்று மீரா யசோதாவை சமாதானப்படுத்தி அவரது அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வாக படுக்க வைத்தார்..

 மீராவும் வெளியே வர சீதாவும் வீட்டுக்குள்ளே வந்தாள்..

 சீதாவின் முகத்திலும் மிகுந்த கலைப்பு தெரிந்தது.. இன்று ஒரு நாள் எதுவும் பேச வேண்டாம்.. என்று நினைத்த மீரா சீதாவை அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடாக பிளாக்கில் இருந்த காபியை போட்டு கொடுத்தார்..

 அதை வாங்கி ரசித்து ருசித்து அருந்தியவள் “ ஹாய் அத்தை.. எங்க விஜய் அத்தான்?.. “

“ அவன் எங்க மா வீட்ல இருக்கான்.. அவன் வெளிய வேலையா போயிட்டான்.. சரிம்மா உனக்காகத்தான் பார்த்திருந்தேன்… நான் வீட்டுக்கு போறேன்.. போய் நைட்டுக்கு டின்னர் ரெடி பண்ணனும்.. அம்மாவை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி வச்சிருக்கேன்.. நீயும் போய் ரிலாக்ஸா இரு.. ” என அவளிடம் கூறிவிட்டு அங்கே நிற்காமல் அவளது கன்னத்தை தட்டி விட்டு உடனடியாக அவர் காரில் ஏறி சென்று விட்டார் மீரா..

மீரா தன் தோழி எனும் காரணத்திற்காகவே தனது அண்ணனை தனக்கு திருமணம் செய்து வைத்து நன்றாக வாழ வைத்தவர் யசோதா..

 அப்படிப்பட்ட தோழி இன்று தன் மகளை நினைத்து கலங்கி நிற்பதை பார்த்து மீராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

 மூன்று மாத காலம் மட்டுமே அவளுக்கு கால அவகாசம்..

அதற்குள் அவள் மனதை திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அந்த வாழ்க்கைக்கு தயாராக வேண்டும்..

 இல்லை என்றால் தோழியின் மன அமைதிக்காக மீராவே அவளை அழைத்துச் சென்று அங்கே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்..

 யசோதா சற்று அமைதியாக உறங்கினார்..

 சீதா அவள் அறைக்கு சென்று பார்த்தாள்.. அறை யாரும் அற்று வைத்த பொருள் எல்லாம் வைத்த இடத்தில் அப்படியே வெறிச்சோடி இருந்தது..

 அவள் அறையை விட்டு அதன் பக்கத்து அறைக்கு சென்றாள் அங்கும் யாரும் இல்லை..

 கீழே பூஜை அறை மற்றும் யசோதா அறை தவிர மற்ற அறைகள் அனைத்தும் பூட்டியே இருக்கும்..

 வீட்டில் தற்பொழுது தாயையும் அவளையும் தவிர யாரும் இல்லை என தெரிந்து கொண்டாள்..

“ ஒருவேளை துரை வெளில ஊர் சுத்த போயிருப்பாரோ?.. அவனுக்கு தான் சென்னை பத்தி எதுவுமே தெரியாதே ஓசில கார் எடுத்துட்டு சுத்தி பார்க்க போயிருப்பானோ?..” என்று நினைத்தபடி வெளியே சென்று பார்த்தாள். தாயின் காரும் அங்கே நின்றது..

“ ஓ..! ஒருவேளை ஆட்டோக்காரன் தானே ஆட்டோவில் போயிருப்பானோ?.. ஆட்டோவில் சென்னை சுற்றி பார்க்கிறதா இருந்தா சொத்து இல்ல விக்கணும்..

ஆமா விக்கிறதுக்கு அப்படியே அவன் கிட்ட சொத்து குவிந்து கிடக்கு பார்.. எங்க போயிருக்க போறான்.. எல்லாம் அம்மா எழுந்ததும் ஈவினிங் போல தெரிஞ்சிடும்.. ” என்று நினைத்துக் கொண்டு அவள் அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்

 பிறந்தநாள் அன்று காலையில் வேலை அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு செல்ல முடியாமல் வேளையில் ஆழ்ந்து போய் இருந்தாள் கண்மணி..

 மாலை அந்த கடிதத்தில் இருந்த மாதிரி கோயிலுக்கு சென்று இறைவனையும் வணங்கி விட்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தாயிடம் சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்றாள்..

 விஐபியும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கோயிலில் அவளுக்காக காத்திருந்தான்..

 அவள் கோயிலுக்கு வந்து சாமி பேரில் அர்ச்சனை முடித்துவிட்டு கோயிலை சுற்றி வளம் வந்து சன்னிதியில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தாள்..

அப்போது ஒரு பிஞ்சு கரம் அவளது தோளை சுரண்டியது..

 கண் மூடி இறைவனை வணங்கிக் கொண்டிருந்தாள்.. தற்போது அவளுக்கு ஆரம்பித்திருக்கும் இந்த பிரச்சினை இன்றுடன் முடித்து வைக்கும் படியும் இதை தாய்க்கு தெரியாமல் மறைப்பதே அவளுக்கு பாவமாகப்பட்டது.. எனக்காகவே வாழும் அந்த ஜீவன் எந்த ஒரு நல்லதையும் அனுபவிக்காதவர். அவளும் அவருக்கு மனக்கஷ்டம் தலைகுணிவு தர விரும்பவில்லை.. யார் குறுஞ்செய்தியை அனுப்பியது என கண்டுபிடித்து அதற்கு தகுந்த மாதிரி பேசி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து இறைவனை வணங்கிக் கொண்டிருந்தாள்..

 அதை இடைஞ்சல் பண்ணும் விதமாக தோளை சுரண்டவும் கண் திறந்து திரும்பி பார்த்தாள்..

 ஐந்து வயது அழகிய பெண் குழந்தை ஒன்று கையில் ஒரு பேப்பருடன் அவளைப் பார்த்து சிரித்தது..

“ ஹாய் அத்தை.. ஒரு மாமா உங்க கிட்ட இத குடுக்க சொன்னார்.. ” என்று அந்த பேப்பர் துண்டை அவ்வளவு கையில் வைத்து விட்டு கண்மணி கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சிட்டாக பறந்து விட்டாள் குழந்தை..

 இதுவும் அவன் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்து அந்த பேப்பரை பிரித்து பார்த்தாள்..

“ கோவிலின் பின் இருக்கும் குளக்கரைக்கு வாடி ராசாத்தி..” என அதில் எழுதி இருந்தது..

அதை பார்த்துவிட்டு மீண்டும் இறைவனை ஒரு தரம் கண்மூடி ஒரு நிமிடம் வணங்கி விட்டு அங்கிருந்து கோவில் குளக்கரைக்கு சென்றாள்..

 குளக்கரை படிக்கட்டில் அமர்ந்து அவன் மீன்களுக்கு பொறி போட்டுக் கொண்டிருந்தான்..

 அவ்விடத்தில் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை… அதனால் எளிதாக அவன் தான் என்று அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது..

 வழமை போல் இன்றும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான்..

 அவன் அருகில் போய் “ ஹலோ சார்.. யார் நீங்க?..ஏன் என்னை இப்படி இங்க வரச்சொல்லி டார்ச்சர் பண்றீங்க?.. ” என்றாள் பாவை..

“ ஹாய்ங்க.. இப்படி உட்காருங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் ஒன்னும் பண்ணிட மாட்டேன் நம்பி இருங்க.. ” என்றான்..

“ எனக்கு இருந்து சாவகாசமா பேச நேரமில்லை.. நீங்க என்ன சொல்லணுமோ டக்குனு சொல்லுங்க.. அப்படி இல்லன்னா நான் பேசுறதை கேளுங்க.. சொல்லிட்டு நான் போய்க்கிட்டே இருக்கேன்.. எனக்கு பொட்டிக்கில் நிறைய வேலை இருக்கு..”

‘ உன்ன பார்த்தாலே எனக்கு என்னென்னமோ பண்ண தோணுதுடி.. அப்படியே அந்த கைய புடிச்சு இழுத்து மடியில் வச்சு ரசிச்சு ரசிச்சு கொஞ்சனும் போல இருக்கு.. படபடன்னு அடிச்சுக்கிற கண்ணுல ஆயிரம் முத்தம் கொடுக்கணும்.. பேசுற வாய்க்கு வேற மாதிரி பலவகையில் தண்டனை கொடுக்கணும்.. அப்படியே காத்து கூட இடையில போகாத அளவுக்கு இருக்கி கட்டி பிடிச்சுக்கணும்.. ம்ம்ம்.. என்ன பண்றது அதுக்கெல்லாம் எனக்கு கொடுப்பன நீ அமைத்துக் கொடுப்பியோ?.. இல்லையோ?.. நீ சொல்ற பதிலில் தான்டி இருக்கு தங்கமே..’ நிமிர்ந்து அவளை பார்த்து மனதிற்குள் கொஞ்சிக்கொண்டான்.. அவள் அருகே இருக்க போவதில்லை என்பது அறிந்து அவனும் எழுந்து அங்கே அருகே இருந்த மரத்தடியின் கீழே போய் நின்றான்..

“ கண்மணி.. என்னை கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க ப்ளீஸ்..” என்று கூறி முகவாயில் அவன் கையை வைத்து முகத்தை நிமர்த்தி பார்க்க பேராசை கொண்டான்.. அவள் தற்போது வரை அவன் உரிமை இல்லை என்ற ஓர் விடயம் அவனைத் தடுத்தது..

அவளும் நேரம் கடத்த விரும்பாமல் பேசி முடித்து விட்டு செல்ல வேண்டும் என்பதால் அவனைப் பார்த்தாள்..

“ மூணு மாசமா உங்களோட குட் மார்னிங். குட் ஆப்டர்நூன். குட் நைட். விஷஸ் தான் நான் யார் என்னன்னு தெரிய வச்சு.. என்னை ஒரு ஆணா உணர வைத்தது.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு என்னோட வாழ்க்கை துணையா நாம் வாழும் காலம் வரை வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. என் குழந்தைக்கு நீங்க அம்மாவா இருக்க நான் ஆசைப்படுறேன்.. நம்ம கல்யாணம் பண்ணிட்டு தெவிட்ட தெவிட்ட காதலிப்போமா?.. ” என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக அவள் முகத்தை பார்த்திருந்தான்..

“ ஹலோ சார் என்ன விளையாடுறீங்களா..? நீங்க யாருன்னு முன்ன பின்ன எதுவும் தெரியாது.. நான் கஸ்டமருக்கு விஷ் அனுப்புவேன்.. உங்களுக்கு எப்படி அது வரும்.. உங்க அம்மா இல்லன்னா அக்கா தங்கை யாரும் எங்க பொட்டிக் கஸ்டமரா இருப்பாங்க போல.. சாரி சார் அது எப்படி உங்களுக்கு வந்ததுன்னு எனக்கு தெரியல..

இப்பவரை உங்க முகம் காட்டாம மாஸ் போட்டுட்டு தான் என்னோட பேசிட்டு இருக்கீங்க.. நீங்க யாரா வேணாலும் இருங்க எனக்கு அது தேவைப்படாது.. எனக்கு இந்த காதல் மேல நம்பிக்கை இல்லை.. முக அழகும் உடல் அழகும் பார்த்து வர காதல் தான் இந்த காலத்து காதல்.. எனக்கு நிறைய பொறுப்பிருக்கு எங்க அம்மா இருக்காங்க.. அவங்க எனக்கு கல்யாண வயசு வந்த உடனே அவங்க மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி தருவாங்க.. எனக்கு ஒருத்தர் மேல ரொம்ப விருப்பம் இருக்கு.. நான் எங்க அம்மாவுக்கு தெரியாம மறச்சி வச்சிருக்கேன்.. அதாவது அவர் யாருன்னு பார்க்கறீங்களா?.. இதுவரைக்கும் என் மனச திறந்து நான் யாரிடமும் சொன்னதில்லை.. என் முன்னாடி காதல்னு வந்து நிக்கிறீங்க அதனால சொல்றேன்.. பாடகர் விஐபி கேள்விப்பட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்.. அவரை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?.. அவர்தான் என்னோட க்ரஷ். என்னோட லவ்வர் பாய் எல்லாம்..என் உசுரே அவர்தான்னு சொல்லணும்.. அப்படிப்பட்ட அவரே வந்து நேரடியா என்கிட்ட ஐ லவ் யூ சொன்னாலும் நான் எங்க அம்மா கிட்ட வந்து பேசுங்கன்னுதான் சொல்லுவேன்.. தினமும் காலை நான் கண் முழிக்கும்போதும் சரி கண் உறங்கும்போதும் சரி அன்றைய நாள் ஃபுல்லா அவரோட பாடல் தான் குரல் தான் என்னை உயிர் ப்போட வாழ வச்சுட்டு இருக்கு.. நான் கடந்து வந்த பல முள் பாதைகள் கஷ்டம் எல்லாம் எனக்கு தோள் கொடுத்தது அவரோட குரல் தான்.. எனக்கு அவர் கணவரா கிடைப்பார் என்றால் நான் தான் அதிர்ஷ்டசாலி.. எங்க அது என் வாழ்க்கையில கனவுல கூட நடக்காது.. அவர் இருக்கிற உயரம் எங்க?.. நான் இருக்கிற இடம் எங்க?… இப்படி ஒரு தீவிரமான ரசிகை அவருக்கு இருக்குன்னு தெரியுமோ எனக்கு தெரியாது.. அவருக்கு இருக்க கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருத்தி.. அதுக்காக உங்கள தாழ்வாக பேசல.. என் மனசுல இருக்குறதை சொல்றேன்.. சரி சார் நான் பேச வேண்டியது பேசிட்டேன்.. இனி கடிதம் கொடுக்கிறது மெசேஜ் பண்றது எல்லாம் வேணாம்.. ப்ளீஸ் என்னோட நிலைமை புரிஞ்சுக்கோங்க.. நீங்க யாருன்னு உங்க முகமே நான் பார்த்ததில்லை.. நீங்க யாருன்னு தெரியாமலே போகட்டும்..

 நான் ஒரு நேரம் விஐபி சார் கல்யாணம் பண்ணி உங்களை கடந்து போற சூழ்நிலை வந்தாலும் எனக்கு நீங்க யாருன்னு தெரிய வேணாம்.. அவர் எனக்கு கிடைக்காமல் நான் தனியா ரோட்ல போனாலும் அப்போ நீங்க வேற கல்யாணம் பண்ணி இருந்தீங்கன்னா நம்மள கல்யாணம் பண்ண கேட்டவரே..! நம்ம மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு ஃபீல் கூட எனக்கு வந்து உங்க வாழ்க்கையை கெடுக்க விரும்பல.. சொல்ல வேண்டியது எல்லாம் நான் சொல்லிவிட்டேன் சார்.. நான் போயிட்டு வரேன்.. இதோட எல்லாத்தையும் நிறுத்திடுங்க அதான் ரெண்டு பேருக்கும் நல்லது.. ” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்..

 இன்று காதலை சொல்லி அவன் தான் விஐபி என சொல்லி அளை சர்ப்ரைஸ் பண்ண விரும்பித்தான் மாஸ்க் அணிந்து வந்தான்… ஆனால் அவள் போட்டு விட்டு போகும் கோட்டை பார்த்தால் அவனே நேரில் வந்து பேசினாலும் இதுதான் முடிவு என்று சொல்லிவிட்டு போகிறாளே.. இதை வேறு மாதிரி தான் டீல் பண்ண வேண்டும் என தீர்மானித்தான்..

தாமதிக்காமல் கோவிலுக்கு சென்று இன்று அவளது பிறந்த நாள் என்பதால் அவள் பெயரில் அர்ச்சனை பண்ணிய கூடையை வாங்கிக் கொண்டு நேரடியாக தாயை தேடி வீட்டுக்கு சென்றான்..

 பொறுத்து பொறுத்து பார்த்த சீதா அவளே தாயின் அறைக்கு சென்று பார்த்தாள்..

அப்போது தான் யசோதாவும் சற்று உறங்கி எழுந்து அமர்ந்திருந்தார்..

“ வாம்மா.. “

“ இப்ப ஓகேவாம்மா.. “

“ எனக்கு என்ன மா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. மாப்பிளைக்கு வாய்க்கு ருசியா என் கையால விருந்து சமைச்சு போட முடியலையே அதுதான் கவலை… தாய் இல்லாத பிள்ளை.. எவ்வளவோ சொன்னேன் அவசர வேலைன்னு உடனே நிக்காமல் போய்ட்டார்…” என்றார்..

‘ ஓ போய்ட்டானோ…! அதுதானே வேணும் நமக்கு.. அப்பாடா.. ‘ என்று அவள் நினைத்து சிந்தனையில் இருக்க

அதை கலைக்கும் விதமாக

“ என்னம்மா ஏதோ யோசனையில் இருக்க?.. ” என்றார் யசோதா..

“ ஒண்ணும் இல்ல.. எனக்கு ஒரு காபி போட்டுத்தாங்க.. ” என்று விட்டு அவள் வெளியேறி விட்டாள்..

அவள் அறையில் இவ்வளவு நேரம் அவனை அவள் தேடியதற்க்கான விடை கடித வடிவில் பேப்பரில் காத்திருந்தது..

பாவைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவள் கண்ணில் படும் அவள் வாழ்கை காப்பாற்றப்படும்..

இல்லை விதி கோர தாண்டவம் ஆடித்தான் அவளுக்கு வாழ்கை எதுவென தெளிவு கிடைக்கும் என்றால் என்ன பண்ண முடியும்..

பலவித கலவையான மனநிலையில் பஸ்ஸில் பயணம் செய்தான் முத்துராமன்..

அவன் மனதிற்கு பொருந்தாத வாழ்க்கையில் அவனே தலையை கொடுத்து விட்டான்..

அதை பொருத்தமாக மாற்றுவனா?..

இல்லை வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்வானா?..

விஐபி கண்மணி வாழ்கை எப்படியோ

யார் அறிவர்..

Advertisement