Advertisement

கரு மேகங்கள் சூழ்ந்த அந்த இளமாலை வேளையில், ஏதோ அவசரம் என்று சூர்யா கிளம்பி விட,

அந்த டீக்கடையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.

“அன்றாடம் நாம் சாதாரணம் என்று கடந்து போகும் டீ கடையில் இத்தனை அரசியலும், கொடுமைகளும் நடக்கிறதா” என்பது அவனுக்கு ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.

ஜாதியையும், அதன் கொடுமைகளையும் கதையிலும், படத்திலும் பார்த்து இருக்கிறானே தவிர, இப்டி கண்கூட பார்த்ததே இல்லை. இந்த நிதர்சனத்தில் மறுப்பக்கத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

ஆதியின் யோசனையின் பாதையை உணர்ந்த வெற்றி, அவனை திசை திருப்ப,

“கள்ளச் சாராயம் எல்லாம் காய்ச்சுறதா சொல்லுறாங்க. நமக்கு எதையும் கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்களே. இவனுங்கள நம்பி டூருக்கு வந்ததுக்கு இந்த வேலையவச்சு உருப்படியா பண்ணலாம்” தனக்கு தானே புலம்புவதாக, ஆதியை வம்பிழுத்தான் வெற்றி.

“இங்க என்ன நடந்து கிட்டு இருக்கு. ஒரு பக்கம் ஜாதி வெறிபிடிச்ச ஊரு. அதுல சூர்யா அந்த நாட்டாமை பின்னாடி சுத்திகிட்டு இருக்கான். சாதாரணமா இருந்த டீ கடையில கூட இவ்ளோ ஜாதி வெறி கலந்து இருக்கேனு நானு யோசிச்சிகிட்டு இருக்கேன். உனக்கு கள்ளச்சாராயம் கேக்குதோ. எருமமாடே” என்றவன் லேசாக வெற்றி மண்டையில் கொட்ட,

“ஆமாடா. ஆதின்ற பெரியாரும், சூர்யான்ற அம்பேத்காரும் தான் இந்த ஊரை திருத்த போறீங்களா? இது எல்லாம் இங்க தான் நடக்குதுன்னு நெனைக்குறியா? தமிழ்நாட்டுல இருக்க ஒவ்வொரு கிராமத்துலயும் இது இன்னமும் இருக்க தான் செய்யுது.

ஏன் நம்ப ஊருல கூட, விரும்புனவன கட்டிக்கிட்டதுமாக சூர்யா குடும்பத்தை ஜாதி பார்த்து ஒதுக்கி தானே வெச்சி இருகாங்க. அவனுக்கு இவ்வளவு திறமை இருந்தும் கூட, ஜாதின்ற கயிறு இன்னைக்கும் அவன் கழுத்தை நெறுச்சிகிட்டு தானே இருக்கு. நம்ப நண்பனுக்காக என்ன செய்ய முடிஞ்சுது நம்மளால. நம்ப ஊரையே நம்மளால மாத்த முடியல, இத்தனை அந்த ஊர் ஜமீந்தார் வாரிசு நீ, நம்ப ஊர்ல இருக்க பணக்கார குடும்பத்தோட வாரிசு நானு.

இருந்தும் அவன் கஷ்ட படுற அப்போ வேடிக்கை தானே பார்த்துட்டு இருக்கோம். நம்ப ஊரையே மாத்த முடியலாம், இதுல இன்னொரு ஊர திருத்த கிளம்பிட்டானுங்க” என்றவன் பேச்சில் உண்மையும் நக்கலும் சேர்த்தே ஒலித்தது.

அவனின் வாதத்திற்கு ஆதியிடம் பதிலே இல்லை. அவன் கூறும் அத்தனையும் உண்மை எனும் போது, என்ன பதில் பேச முடியும். சூர்யாவின் துயர் கண்டும்,

“ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத நண்பர்கள் தானே தாங்கள்” என்ற உண்மை அவன் சிந்தையை சுத்தியில் வைத்து அடித்தார் போல் இறங்கியது.

இவர்களின் பேச்சையும், யோசனையும் கலைக்கும் விதமாக, அங்கு வந்தவன்.

“தம்பிகளா, ராத்திரி சாப்பாட்டுக்கு தாயம்மாள் உங்களை வர சொல்லி சொன்னாங்க” என்ற தகவலை கூற.

இதுவரை சமூக பிரச்சனையை ஆராய்ந்த ஆதி, இப்போது காதல் மன்னனாக மாறி, அஞ்சலியை காண்பதே வாழ்வின் லட்சியம் என்பதை போல,

வர சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்வே அவர்களின் வீட்டை அடைந்து விட்டனர் இருவருமே. இதில் வெற்றி தான் பாவம். ஆதியின் மனப்போக்கு அவனுக்கும் தெரியும் தான். ஆனால் கேட்டால் அடி விழுமே என்று அவனும் வேறு வழி இன்றி உடன் வந்தான்.

ஆதியின் விழி அஞ்சலியை தேட, வெற்றிக்கோ.

“எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது. எலி புழுக்கை என்னத்துக்குடா கூட காயணும்” என்றான் ஆதி காதில் விழும் படி.

அதற்கு ஆதியிடம் இருந்து முறைப்பே பதிலாக வர,

“உங்க வீரத்தை எல்லாம் என்கிட்டயே காட்டுங்கடா. அந்த பொண்ணுகிட்ட பேசிடாதீங்க. இந்த ஊரை விட்டு கிளம்புன அப்பறம் முகத்துல தாடியும், கையில குவாட்டரும் வெச்சிக்கிட்டு,

“எங்கிருந்தாலும் வாழ்கன்னு” பாட்டு படுங்க. இதுக்கு தான் நாம இதுக்குள்ளலாம் போறதே இல்ல” என்றான் இல்லாத காலரை தூக்கி விட்ட படி.

ஏற்கனவே விழுந்து விட்ட தன் இதயத்தை பற்றி சுத்தமாக அறியாதவனாய் அவன் பேசி கொண்டு இருக்க,

“இதுக்கு எல்லாம் சேர்த்து நீ ஃபீல் பண்ணுவ ராஜா” ஏளனமாக எச்சரித்தது அவனின் மனது.

அப்படியும் இது வெற்றியின் காதை அடைய போவது இல்லை. விடுங்க அவன் கததுற அப்போ அவனை பார்க்கலாம். இப்போ ஆதி மேல மொத்த போகஸ்சையும் திருப்புங்க.

அஞ்சலி பரிமாற, விழியால் அஞ்சலியையும், வாயால் அவள் பரிமாறிய உணவையும் உண்டவன், மறந்தும் கூட வெற்றியின் பக்கம் தன் பார்வையையோ, கவனத்தையோ திருப்பவே இல்லை.

ஆதியின் விழியில் தன்னை தொலைத்த அஞ்சலி கூட வெற்றியை கண்டு கொள்ளாமல் போக, கடைசியாய் தானே தனக்கு பரிமாறி கொண்டு உணவை உண்டான வெற்றி.

அதிலும் வெற்றிக்கு லாபம் தான். கேசரியை இரண்டு கரண்டி அதிகம் வைத்தே சாப்பிட்டான்.

“சரி கிளம்புவோம்” என்று கிளம்பிய ஆதிக்கு, ஏனோ அஞ்சலியை இன்றே இறுதியாக பார்ப்பது போன்ற உணர்வு. நாளை எதோ உலகமே அழிந்து விட்டு. அவளை காண முடியாதே என்ற இனம் புரியாத ஏக்கம் அவனை சூழ, முடிந்த வரை அவளை தன் கண்ணில் நிறுத்து கொண்டான் ஆதி.

அஞ்சலிக்கும் கூட அதே உணர்வு தான். இத்தனை நாள் இல்லாமல் இன்று தான் ஆதி மேல் எதோ ஒரு புது வித உணர்வு அவளுள் தோன்ற அதை இன்னதென்று ஆராய விரும்ப வில்லை அவள். தன் பார்வை மொத்தமும் ஆதியாகி போக, மனம் மொத்தம் அவன் வசம் விழுந்தே விட்டது. ஆதியை மட்டும் அண்ணன் என்று அழைக்காமல் போனதை நினைத்து அவளின் மனமும் கூட கூத்தாடவே செய்தது.

சாப்பாடு முடித்து வீடு திரும்புகையில், டீ கடையில் இவர்களின் வருகைக்காக காத்திருந்தவன் போலவே ஒருவன் இவர்களை நெருங்க, வந்தவன்.

“தம்பி, எதோ சரக்கு வேணும்ன்னு பேசிகிட்டு இருந்தீர்களே. வேணுமா” என்றான் ஆர்வமாக.

“கிடைக்குமா?” என்றான் வெற்றி துள்ளலுடன்.

“வாங்க தம்பி. ஃப்ரஸ்ட் கிளாஸ் சரக்கு இருக்கு. கொஞ்சம் சாப்பிட்டாலே ஜிவ்வுன்னு போதை ஏறும். இப்போதான் புதுசா வந்து இறங்கி இருக்கு” என்றவன் அவர்களின் அழைக்க.

ஆதிக்கோ, “டேய் எதுக்குடா இந்த தேவை இல்லாத வேலை. வந்த இடத்துல வீண் வம்பு வேணாம்டா. நாளைக்கு சூர்யா வந்ததும் இங்க இருந்து கிளம்பிடலாம். அதுவரைக்கும் கொஞ்சம் உன் வாலை சுருட்டிக்கிட்டு இருடா” எச்சரித்தான் அவன்.

“அடேய் உங்கள நம்பி வந்து நான் எதையுமே பாக்கல. இதாவது என்னை செய்ய விடுங்கடா. ஒன்னு பண்ணலாம் நீ வேணா என் கூட வந்து இரு. நான் ஓவரா போனா நீ பார்த்துக்கோ” கெஞ்சினான் வெற்றி.

வேறு வழி இன்றி, வெற்றியுடன் ஆதி செல்ல, அந்த இரவின் அழகில் போதை உலகிற்குள் பயணித்து கொண்டு இருந்தான் வெற்றி. ஆதி தவறியும் கூட அதில் கை வைக்கவில்லை.

“தம்பி நீங்க எதுக்கு சும்மா உக்காந்து இருக்கீங்க. நீங்களும் ஒரு கிளாஸ் அடிங்க” என்றார் அந்த நபர்.

“ஹையோ, அவனுக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. அதுக்கு மேல பேசுனா.

குடி தப்பு. பல குடும்பம் அழிஞ்சி போயிருக்கு. குடுச்சா உடம்பு கெட்டுப்போய்டும்ன்னு, லெக்சர் எடுப்பானுங்க.

இவனும் இப்டி தான், அந்த பாழாப்போன சூர்யாவும் இப்டி தான். எதோ இவனுங்க ஒழுங்கா இருந்து தான் நாட்ட நிமுத்த போற மாதிரி பேசுவானுங்க” போதையில் உளறினான் வெற்றி.

“சரக்கு அடிக்க விருப்பம் இல்லனா என்ன கல்லு குடிங்க தம்பி. நாங்க குடுக்குற அப்போ நீங்க மட்டும் சும்மா உக்காந்து இருந்தா நல்லா இல்லை. இந்தாங்க” என்று ஒரு குட்டி பானை போல் ஒன்றை ஆதியிடம் நீட்டினார் அந்த நபர்.

வேண்டாம் என்று ஆதி பல முறை மறுத்தும்,

“நீ ஒரே ஒரு தடவை குடி. அதுக்கு அப்பறம் நான் குடிக்கவே மாட்டேன். ரெண்டு பேரும் வீட்டுக்கு போய்டலாம்” என்று ஒப்பந்தம் போட்டான் வெற்றி.

அப்படியாவது அவன் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணிய ஆதி, மறுபேச்சு இல்லாமல், யோசிக்காமல் அதை குடித்தும் முடித்தான்.

இதுவரை குடி பழக்கம் இல்லாத அவனுக்கு, கல்லே கிரக்கத்தை தர, வெற்றியை விட போதையில் இருந்தான் ஆதி.

“சரிடா வா வீட்டுக்கு போகலாம்” என்று ஆதி அழைக்கும் போதே,வெற்றி போதையில் மட்டையாகி கிடக்க,

அந்த நபரோ, “தம்பி நீங்க வீட்டுக்கு போங்க. நான் இவரோட போதை தெளிஞ்ச உடனே கொண்டு வந்து வீட்டுல சேர்த்துடுறேன்” எனவும்,

போதையில் எதுவும் புரியாதவன், சரி என்ற படி தட்டு தடுமாறி எழுந்து வீட்டை அடைய, கதவு திறந்தே இருப்பதயும் உணராதவன் உள்ளே சென்று படுத்தும் கொண்டான்.

தலையில் ஆணியாலும், சுத்தியல் கொண்டும் அடித்து மண்டையை உடைப்பது போன்ற வலி தலையில் பரவ, தலையை தன் உடலில் இருந்து பிரித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை போல தோன்ற, தலையில் கை வைத்த படி படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தான் வெற்றி.

கைபேசியில் மணியை பார்க்க, அது ஆரை காட்ட, தான் இருக்கும் இடத்தை சுற்றி தன் பார்வையை சூழல் விட,

அது அவர்கள் தங்கி இருந்த வீடு தான் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது வெற்றிக்கு.

நேரத்தை பார்த்தவனுக்கு, “இன்னுமா சூர்யா வரல. இன்னையோட வேலை முடியுதுனு சொன்னானே. எங்க ஆள காணோம்” என்றவனுக்கு அப்போது தான் ஆதியும் தன் அருகில் இல்லை என்பதே உறைத்தது.

“எங்கே ஆதி” என்று யோசித்தவனுக்கு நேற்று இரவின் சம்பவங்கள் அனைத்துமே நினைவிற்கு வர,

“தூங்குறதுக்கு தானே வரேன்னு சொன்னான். எங்க போனான்” என்றவன் வீட்டில் எல்லா இடமும் தேட, ஆதி எங்கும் இல்லாமல் போக,

சரி நேற்று இரவு அவர்கள் குடித்த இடத்தை சென்று பாப்போம் என்று வெற்றி கிளம்ப, ஊர் மொத்தமும் தேடி விட்டான் ஆதியை தான் காணவில்லை.

இறுதியாய் ஊர் நடுவே பெரிய கூட்டம் கூடி இருக்க,என்ன என்று அங்கு பார்க்க சென்றான் வெற்றி.

கையில் தாம்பூல தட்டுடன், அதில் புது சேலையும், மஞ்சள் குங்குமமும், தாலியும் கொண்டு அழகே அலங்கரிக்க பட்ட அந்த தட்டுடன் கோவில் பூசாரி இருவர் காத்திருக்க,

ஊரே அந்த காலை பொழுதில் திறக்க இருக்கும் அந்த அறை கதவிற்காக தான் காத்திருந்தது.

இந்த ஊரில் இருக்கும் வழக்கம் அது, மாதமாதம் வரும் நவமி அன்று ஊரே தீட்டாகி விடுவதாகவும், அதை போக்க ஊரில் இருக்கும் கன்னி பெண் ஒருத்தி இரவு முழுவதும் கோவிலுக்கு அருகில் இருக்கும் தேவிமடத்தில் விளக்கு எதுவும் இல்லாமல், இருள் சூழ்ந்த அந்த அறையில் தனித்து விட பட்டு,

இரவு முழுதும் இருளை மட்டுமே பார்க்கும் அவளின் விழிகள், காலையில் அறையை விட்டு வெளியே வரும் போது பார்க்கும் பார்வையில் ஊரின் தீட்டு கழிந்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்டி வரும் அந்த பெண்ணிற்கு புது உடை, ஆபரணம் எல்லாம் வழங்கி, குளித்து நீராடி அந்த பெண்ணே அம்மனுக்கு அபிஷேகம் செய்து,

அம்மன் கழுத்தில் இருக்கும் அந்த பழைய தாலியை கழட்டி, பூஜிக்க பட்ட புது தாலியை அணிவித்து, பூஜை முடித்து, அனைவரையும் ஆசீர்வதித்தால், ஊரின் தீட்டு முற்றிலும் மறைந்ததாக ஐதீகம் அவர்களுக்கு.

அதே போல் இந்த மாதம் அஞ்சலி அறையின் உள்ளே இருக்க வேண்டும், அவள் வெளி வந்தாள் தான் தீட்டு கழியும் என்று காத்திருக்கிறது ஊர் மொத்தமும்.

“என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?யாருக்காக இப்டி தேவுடு காத்துகிட்டு இருக்கீங்க?” புலம்பிய படியே தாயம்மாள் அருகில் வந்து வெற்றி நிற்க.

அப்போது சரியாக அந்த அறையின் கதவும் திறக்க பட, கண்ணை மூடி கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் அஞ்சலி.

தட்டு தடுமாறி, வாசலை கடந்து அவள் நிற்க, ஊர் மக்கள் அனைவரின் அவளின் கடை கண் பார்வைக்கு காத்திருக்க,

சரியாக தவறான நேரத்தில் வந்தான் ஆதி. அஞ்சலி வெளியே வந்த அதே அறையை விட்டு, அவளுக்கு பின்னால்.

அஞ்சலிக்கு பின் வரும் அவனை பார்த்து ஊரே திடுக்கித்து, குழம்பி நிற்க,

அரைகுறையாக கண்ணை திறந்த படி, உயிர் போகும் தலைவலியால் தலையை பிடித்த படி,

எதையும் கவனிக்காமல் வெளி வந்தான் ஆதி. வந்தவன் கண்ணை மூடி கொண்டு நிற்கும் அஞ்சலியை கவனிக்காமல் போக, அவள் மேல் மோதி விட,

பார்வை அடைத்து நின்று இருந்தவள் தடுமாற, தடுமாறியவளை ஆதி பிடிக்கவும், அதே சமயம் தன் கால் எதிலோ தட்டு பட்டுவிட்டதே என்ற படத்தில் அஞ்சலி கண்களை திறந்து, அவள் பார்த்த முதல் பார்வை ஆதியாகி போக,

அவ்வளவு தான், ஊர் மக்கள் அனைவரின் கோவமும் அந்த இருவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

கண்ணில் மிரட்சியும், நடந்த சம்பவத்தை கிரகித்த மனதில் பயமும் குடி கொள்ள, நடுக்கத்துடன் ஆதியை தள்ளி விட்டு,

நாலடி நகர்ந்து வந்து நின்றாள் அஞ்சலி. அவள் தன்னை நெருங்குவதை உணர்ந்த அந்த பூசாரி,

அருவருத்த முகத்துடன் இரண்டடி ஓதுங்கி நிற்க, அதில் மனமும், கண்ணும் கலங்கிய அஞ்சலி,

“சாமி, நான் ஒன்னும் பண்ணல. இவர் எப்படி… ” அவள் முடிக்கும் முன்பே ஒரு கை அவளின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.

அதன் அதிர்வு அவளின் மூளை வரை சென்று திரும்பி அவளின் சுயநினைவை உலுக்கி, அவள் மீண்டும் தன்னிலை பெற்று திரும்பி பார்க்க,

அங்கு கோவ பார்வையை உதிர்த்த படி நின்று கொண்டு இருந்தார் அந்த ஊர் நாட்டாமையின் மனைவி.

“ச்சி வாயை மூடு. இப்டி ஊர் மொத்தத்தையும் அசிங்க படுத்துற காரியத்தை செஞ்சிடியே. அதுவும் ஊர் சாமி மடத்துல வெச்சே எப்படி உன்னால இப்டி நடந்துக்க முடிஞ்சது” என்றார் ஆவேசத்துடன்.

“இல்லை… நான்… ” என்று அவள் எதையோ கூற வரும் முன்பே கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“நான் கூட இவங்களை தாயம்மாள் தோட்டத்துல தப்பா நின்னுகிட்டு இருந்தத பார்த்தேன் ஐயா. வேற எந்த இடத்துல, என்ன என்ன பண்ணாகளோ தெரியல. இன்னைக்கு ஊர் மத்தியில கையும் காலுமா மாட்டிக்கிட்டாங்க” பேசும் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பேசினான் அவன்.

தப்பு யாருடையதோ, எங்கு நடந்தாலும் பெண்ணை குற்றம் சொல்வது தானே நம் ஊர் வழக்கம். பெண் என்றாள் வலிமை அற்றவள், இலகுவானவள், அதனால் தவறுகளும் அவளே செய்வாள் என்பது நம் சமூகத்தின் இன்றளவும் வெளியில் நேரடியாக கூற படாத ஒரு கருப்பு பக்கம் தான்.

இதில் ஜாதியிலேயே ஊறி போய், மனிதம் அற்ற இந்த ஊர் மக்களிடம் பெண்மையை எப்படி விளக்கி கூற முடியும், அதுவும் ஆதரவு இல்லாமல் நிர்கதியாய் நிற்கும் அஞ்சலி என்ன பேசுவாள். பேசினால் மட்டும் இந்த மூடர்கள் காதில் விழுமா என்ன.

“இந்த மாதிரி பொண்ணை எல்லாம்..” பேசி கொண்டே அஞ்சலியை தாக்க நாட்டாமையின் மனைவி கை ஓங்க,

அப்போது சரியாய் ஆதி அவரை தடுத்து, அஞ்சலியை காக்க, அவ்வளவு தான் மிஞ்சம் இருந்த ஊர் மக்களும் வெறி பிடித்தவர்களாக மாற, யோசிக்கும் திறனை முற்றிலுமாக இழந்தே போயினர் அனைவருமே.

“எங்க நாட்டாமை மனைவி மேலயே கையை வெக்குறே” என்று நாட்டாமை அருகில் இருந்த இருவர் ஆதியை தாக்க, அதில் பதைபதைத்த வெற்றி ஆதிக்காக முன்னே வர,

இந்த இருவரை தாக்க நான்கு பேர் மேலும் அவ்விடம் வந்து சேர, கிட்டத்தட்ட ஆறு பேர் இருவரையும் தாக்கி, அங்கு இருக்கும் கம்பத்தில் கட்டி போட்டு வைத்தனர்.

“யார்டா நீங்க எல்லாம். எங்க ஊர் மானத்தை வாங்கவே வந்து இருக்கீங்களா?” கீச்சு குரலில் கர்ஜனையோடு கேட்டான் நாட்டாமை.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு,

“ஊர் சுத்தி பாக்க தான் வந்தோம்” என்றனர் தடுமாறிய படி.

“இல்லையே உங்க கண்ணுல வேற எதோ ஒரு விபரீதம் தெரியுதே. சரி இல்லையே” என்று அவர் யோசித்து,

“டேய் இவனுங்க தங்கி இருக்க வீட்ட சோதனை பண்ணிட்டு வாங்கடா. எதாவது கிடைச்சா சொல்லுங்க” என்று இருவரை அனுப்பி வைத்தார் நாட்டாமை.

சென்ற வேகத்திலேயே அந்த அடியாட்கள் வர,

“என்னடா எதாவது கிடைச்சுதா?” என்றார் நாட்டாமை

“அவனுங்க சொன்ன மாதிரி இவனுங்க ஊர் சுத்தி பார்க்க வரலங்க ஐயா. இதோ பாருங்க” ஒரு பர்ஸ் ஒன்றை அவரிடம் நீட்ட

அதை பார்த்தவர் கண்கள் ரத்தம் போல் சிவந்து நின்ற, இருவரையும் எரிக்கும் பார்வை பார்த்தவர்,

“போலீஸ் கைக்கூலிகளா நீங்க. எதை தேடிடா இங்க வந்து இருக்கீங்க. எங்கடா உங்க கூட்டாளி? யார் உங்களை இங்க அனுப்பினது” என்றார் வெற்றியை தன் காலால் உதைத்த படி.

வலி தாங்க முடியாத வெற்றி, “நாங்க போலீஸ் இல்ல. சூர்யா மட்டும் தான் போலீஸ். நாங்க ரெண்டு பேருமே எங்க ஊர்ல பணக்கார குடும்பத்தை சேர்ந்தவங்க தான். இதோ இவன் எங்க ஊர் ஜமீன்தார் மகன்” என்றான் அவர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் அளித்தவனாய்.

அதற்கு அவனை எரித்து விடுவதை போல் ஆதி முறைக்கவும் தான், தன்னுடைய அனத்தம் புரிந்தது வெற்றிக்கு. அத்துடன் வாயை மூடிகொண்டவன், அடுத்து யார் எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கூற வில்லை, ஆதி தான் முடிந்த வரை சமாளித்து கொண்டு இருந்தான்.

“எங்கடா அவன். எத வேவு பாக்க போயிருக்கான்?” என்றார் நாட்டாமை.

“அவன் அதோ ஊர சுத்தி ஜாகிங் பண்ண போயிருக்கான் வந்துடுவான்” என்று ஆதி பதில் அளிக்கவும், கூட்டத்தை உடைத்து கொண்டு வந்து நின்றான் சூர்யா.

தன் நண்பர்கள் இருவரும் காயங்களுடன் கட்டி வைக்க பட்டு இருக்க, அஞ்சலியும் தரையில் அமர்ந்து அழுது கொண்டு இருக்க.

என்ன என்று புரியாமல் பார்வையை சுழற்றியவனுக்கு நாட்டாமை கையில் இருக்கும் தன்னுடைய ஐடி கார்டு புல பட. ஒரு அளவிற்கு விஷயம் புரியவே செய்தது சூர்யாவிற்கு.

ஆனாலும் தன் நண்பர்கள் என்ன சொல்லி சமாளித்து உள்ளனர் என்றும், சம்மந்தம் இல்லாமல் அஞ்சலி அழுவதுவும் தான் அவனுக்கு புரியாமலே இருந்தது.

அவனின் குழம்பும் முகத்தை பார்த்த ஆதி, “நீ ஜாகிங் போய்ட்டு வரதுக்குள்ள இவங்க எங்களை அடிச்சி இங்க கட்டி போட்டுட்டாங்கடா. நீ போலீஸ்னு தெரிஞ்சிக்கிட்டாங்க” என்றான் அப்போதைக்கு தேவையான தகவலை மட்டும் கொடுத்த படி.

“அடப்பாவி, நீ ராத்திரி பூரா அந்த பொண்ணு கூட இருந்ததால தானேடா இந்த பிரச்சனையே வந்துது. அத சொல்லாம எதோ இந்த தடி மாட்டு பசங்க அவுங்களே கண்டு பிடிச்ச மாதிரி சொல்லுறே” முணுமுணுத்தான் வெற்றி.

“இவ்ளோ நேரம் வாங்குன அடி மறுபடியும் வேணுமா. வேணாம்னா மூடிக்கிட்டு இரு. சூர்யா மீதியை பார்த்துப்பான்” உறுதியாய் சொன்னான் ஆதி.

ஆதியின் இரண்டு வரி பதிலில் அவ்விடத்தின் சூழலை ஒரு அளவிற்கு புரிந்து கொண்டான் சூர்யா. தன் பாக்கெட்டில் இருக்கும் அந்த பென்டிரைவ் இருக்கிறதா என்று தொட்டு பார்த்து உறுதி படுத்தி கொண்டவன்,

எப்டியோ இந்த நிலைமையை சமாளித்து இன்றே மூவரும் இந்த இடத்தை விட்டு தப்பிக்க வேண்டும் என்ற முடிவுடன் திடமாக நின்றான் சூர்யா.

“இப்போ சொல்லுடா. எதுக்கு இங்க வந்த? யார் உன்ன இங்க அனுப்புனது? என்ன திட்டத்துல வந்து இருக்க?” என்று அவர்கள் கேட்க.

“அதான் எங்க சாமான் எல்லாம் தேடி பார்த்து என்னோட ஐடி கார்டு வரைக்கும் எடுத்துடீங்களே. இன்னும் என்னையவே கேள்வி கேக்குறீங்க. லூசாடா நீங்க” என்றான் கொஞ்சம் திமிராகவே.

“டேய் டேய். அடி வாங்கி இப்டி தரையில கிடக்குற எங்களை பார்த்துமா அடங்காம இப்டி திமிரா வாய் பேசுறே. நாசமா போறவனே. உன் மேல இருக்க கோவத்துல எங்களை போட்டுதள்ளிட போறாங்கடா” புலம்பினான் வெற்றி, ஆனால் அது யார் காதையும் அடையாமல் காற்றில் தான் கரைந்தது.

“உன் பையை மொத்தம் ஆராய்ஞ்சிட்டோம். அதுல இந்த பர்ஸ் தவிர வேற ஒன்னுமே இல்லை. இப்போ சொல்லு உன் நோக்கம் என்ன?” என்றான் நாட்டாமை பக்கத்தில் இருந்த அவனின் அல்லக்கை திமிராக.

“அட தடி மாட்டு பசங்களா. முக்கியமானதா விட்டுட்டு ஐடி கார்டு மட்டும் மாட்டுனதால தான் இவ்ளோ சீன் போடுறீங்களா? ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளரலேயே ராஜா” என்றவனின் நினைவு.

நேற்று மாலை, கிளம்பும் முன், எதற்கும் பாதுகாப்பிற்காக கமிஸ்னர் கொடுத்த அந்த பைலை எடுத்து வெற்றியின் பையில் வைத்து விட்டு, அதை அவனிடம் சொல்லாமல் அவசரத்தில் சென்றும் விட்டான் சூர்யா.

அந்த பைல் மட்டும் இவர்கள் கையில் மாட்டி இருந்தால், அவன் இங்கு வந்ததின் மொத்த ஜாதகமும் தெரிந்து போய் இருக்கும். அதோடு அவர்கள் உயிர் தப்புவதும் கேள்விக்குறியாகவே மாறி இருக்கும்.

அதை நினைத்து பார்த்தவன், “ஹப்பாடா, எப்டியோ மொத்தமா மாட்டாம தப்பிச்சோம்” என்று ஆசுவாச பட்ட நேரத்தில்,

அவனின் கழுத்தில் ஒரு அடி அடித்து, அவனையும் மண்டி இட வைத்து, கைகளை கட்டியும் விட்டனர், கண் இமைக்கும் நேரத்தில்.

“என்னடா உங்க திட்டம்” என்ற படி நாட்டாமை சூர்யாவின் கால் முட்டியில் இரும்பு கம்பி கொண்டு ஓங்கி அடிக்க போக, அதை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் இருந்த வெற்றி பதட்டத்தில்,

“நாங்க அஞ்சலியை பார்க்க தான் வந்தோம்” என்றான் கண்ணை மூடி கொண்டு பட படவென.

“என்னாது அஞ்சலியை பார்க்க வந்தீங்களா? இதை நான் நம்பணுமா? மாட்டிக்கிட்ட உடனே எதாவது கதை சொல்லாதீங்கடா” என்றார் நாட்டாமை ஏளன சிரிப்புடன்.

ஒரு முறை ஆதியும், அஞ்சலியின் முகத்தையும் பார்த்த வெற்றி, அதில் தெரிந்த அதிர்ச்சியை பொருட்படுத்தாமல்,

“இதோ ஆதி தான் அஞ்சலியை விரும்புறான். அஞ்சலியை காலேஜ்ல வெச்சி பார்த்து ஆதிக்கு பிடிச்சி போச்சு. அதான் அவளை சந்திச்சி அவனோட காதலை சொல்ல இங்க டூர்னு சொல்லி நாங்க வந்தோம்” என்றான் ஏதோ உண்மையை சொல்வது போல.

அதை கேட்ட ஆதியே, “டேய் என்னடா உளறுற. நான் எப்போடா அப்டி எல்லாம் சொன்னேன்” என்றான் பதறி கொண்டு.

“உண்மைய சொல்லு. நீ அஞ்சலியை விரும்பவே இல்லையா? அவ மேல உனக்கு காதல் வந்தது உண்மையா இல்லையா?” என்றான் வெற்றி என்றும் இல்லாத திடத்துடன்.

வெற்றி கூறுவதை பொய் என்று கூற முடியாது ஆதியால். அந்த மாய திருடி அவன் மனதை ஆட்கொண்டது உண்மை தானே. ஆனால் இப்டி இந்த சமயத்தில் அதை சொல்வது தான் அவனுக்கு ஏற்று கொள்ளும் விதமாக இல்லை.

இவர்களின் வார்த்தைகளை கேட்ட பின்னர், மூவரையும் அவிழ்த்து விடும் படி நாட்டாமை கூற,

அந்த நாட்டாமை மனைவியோ அஞ்சலியை நெருங்கி, அவளின் கன்னத்தில் மீண்டும் தன் கை விரல்களை பதித்தவர், அவளை ஏதேதோ பேச, அத்துடன் ஊர் மக்களும் எதை எதையோ பேசி அவளை கூனி குறுக வைக்க.

அவர்களின் வார்த்தையின் தாக்கம் அவளுள் அதிகமாக இருக்க,

முகத்தை தன் கைகளால் மூடி கொண்டு அவள் அழுது கொண்டு கிடக்க, தாயம்மாளும் கூட அவ்விடம் என்ன செய்வது என்று புரியாமல்,

யாரும் எதிர் பாரா அந்த நேரத்தில், அஞ்சலி கழுத்தை சுற்றிய மெல்லிய கயிறு போல் ஒன்றை இன்னதென்று அவள் உணரும் முன்பே, அவள் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி, அவளை தன் மனைவியாக்கி இருந்தான் ஆதி.

Advertisement