“மடக்கான்பட்டி” கிராமத்திற்குள் சீறி பாய்ந்து சென்றது இந்த மூவரும் சென்ற கார்.
செல்லும் வழியிலேயே, “ஆதி நாம தங்குற இடம் எங்கடா இருக்கு. நாம வரோம்னு சொல்லிட்டல” ஆதியைக் கேட்ட படி வண்டியைச் செலுத்தினான் சூர்யா.
“அதெலாம் சொல்லிட்டேன்டா. இதோ இதான் லொகேஷன்” என்ற படி கூகிள் மாப்பை எடுத்து அவனிடம் நீட்டினான் ஆதி.
அது காட்டிய வழியில் அவர்கள் பயணிக்க, மடக்கான்பட்டி உள்ளே சென்ற ஐந்தாவது நிமிடத்தில் வந்தது அவர்களின் இருப்பிடம்.
அது ஒரு பெரிய பழைய அரண்மனைப் போல. பராமரிப்பு எதுவும் இல்லாமலும் கூட. கம்பீரமாகவே காட்சி அளித்தது.
மாளிகையின் மேல் கவனத்தை வைத்த படி ஆதியும், சூர்யாவும் இறங்க. ஆதிக்கு மட்டும் கவனம் மொத்தம் சூர்யா மேல் தான் இருந்தது.
இதுவரை தன்னிடம் இருந்து எதையும் மறைத்தோ, ஒளித்தோ பழகாத தன் நண்பன் இன்று இங்கு டூர் என்று கூறி வந்தாலும், அவனின் நோக்கம் வேறு தான் என்பதை புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்து கொள்ளவில்லை ஆதி.
“டேய் வெற்றி நம்ப லகேஜ் எல்லாம் எடுத்துட்டு உள்ள போடா. நாங்க இதோ வரோம்” என்று வெற்றியை அனுப்பி விட,
தன் நண்பனின் பேச்சிற்கு எதிர் பேச்சின்றி ஆட்களுடன் சாமான்களை உள்ளே கொண்டு சென்றுவிட்டான் வெற்றி.
பின் சூர்யா புறம் திரும்பிய ஆதி, “என்ன சூர்யா நடக்குது இங்க?, எதுக்கு இங்க வந்து இருக்க?” என்றான் கூர் பார்வையில்.
ஆதி என்ன தான் சாதுவாக, பாசமாக, அனைவரையும் புரிந்து கொள்ளும் குணம் உடையவனாக இருந்தாலும், அவனின் கூர் விழிக்கு இன்றும் அனைவரும் நடுங்க தான் செய்கிறார்கள்.
எதிலும் உண்மையையும், நேர்மையையும் எதிர் பார்க்கும் அவன். பிறரிடமும் அதையே கொடுத்தும் பழகி இருக்கிறான். தவறு என்று வந்து விட்டால் மட்டும்,
“நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று உரக்க சொல்லும் குணம் உடையவன் அவன். அனைவரிடமும் அன்பு பாராட்ட நினைக்கும் அவனுக்கு கோவம் வந்து விட்டால் மட்டும் அதற்கு எல்லையே இருக்காது.
அது அறிந்த சூர்யா, “இப்போதைக்கு எதுவும் கேட்காத ஆதி. கொஞ்சம் ஆஃபிஸியல். அன்ட் நான் போலீஸ்னு இங்க யாருக்கும் தெரிய வேணாம். இந்த ஊர்ல போலீஸ் வரதுக்கு அனுமதி இல்லை. இந்த ஊர் விசயத்துல போலீஸ் தலையிடுறதும் இவங்க ஊர் நாட்டாமை அனுமதிக்குறது இல்லை. அதனால தான் இப்டி மப்ட்டில வந்து இருக்கேன்” என்றான் போதுமான தகவலை மட்டும் ஆதிக்கு அளித்த படி.
அதிலேயே சூர்யா எதோ பெரிய விஷயத்திற்கு தான் இங்கு வந்து இருக்கிறான் என்பது நன்கு விளங்கி விட,
“சரிடா பார்த்துக்கலாம். கவலையை விடு” சூர்யா தோள் தொட்டு அவனுக்கு உறுதி அளித்தவனின் பேச்சில் நட்பு போய் மாமன் மச்சான் என்ற பாசமே அதிகம் தெரிந்தது.
சாமான் அனைத்தையும் உள்ளே கொண்டு வைத்த வெற்றி, இருவரையும் தேடி வர,
“என்னடா என்னை உள்ள போக சொல்லிட்டு, நீங்க இங்க நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்கீங்க. உள்ள வரலியா?” என்றான் வெற்றி.
“வரோம்டா” என்ற ஆதி,
“டேய் இவன் போலீஸ்னு இங்க யாருக்கும் தெரிய வேணாம்டா. தெரிஞ்சா நம்மளையும் சேர்த்து எரிச்சிடுவாங்கலாம்” என்றான் ஆதி எதோ எரிப்பது சாதாரணம் என்பது போல
“என்னாது. ஏரிபாங்களா? டேய் இங்க டூர்க்கு கூட்டிட்டு வந்தீங்களா. இல்ல என்னை மொத்தமா சமாதி பண்ண கூட்டிட்டு வந்தீங்களா? ஹையோ நான் வேற வாழ்க்கைல எதுவுமே அனுபவிக்கலையே!!!” என்றவன் புலம்பலில் இருவருக்குமே சிரிப்பு வர, இதுவரை இருந்த இறுக்கம் குறையவே செய்தது.
“அது ஒன்னும் இல்ல தம்பி. நீங்க வாரீங்கனு வீட்ட சுத்தம் பண்ண சொல்லி சொன்னேன். காலைல தான் ஆளுங்க வந்தாக” என்ற படி வாசல் வழியே உள்ளே வந்தார் தாயம்மாள்.
வந்தவர், “சண்முகம் சொன்ன தம்பி நீங்க தானே?” என்றார் ஆதியைப் பார்த்த படி.
“ஆமாங்க. நான் தான் தங்குறதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லி அவர் கிட்ட சொல்லி இருந்தேன்” என்றான் ஆதி.
“வேலை ஆளுங்க வர நேரம் ஆகிடுச்சு தம்பி. அதான் இன்னும் ரெடி ஆகல. இங்க சுத்தம் முடியுற வரைக்கும் நம்ப வீட்டுல வந்து தங்கிக்கோங்க” என்றார் தாயம்மாள்.
அதுவும் சரி தான் என்று நினைத்த மூவரும், தாயம்மாள் வீடு நோக்கி புறப்பட்டனர்.
அது ஒரு சாதாரண ஓட்டு வீடு தான். வீட்டின் திண்ணை அவர்களை வரவேற்க, நான்கு பேர் சேர்ந்து அமர கூட சரியான நாற்காலி இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு தான் அது.
சூர்யாவும், வெற்றியும் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, ஆதி மட்டும் தரையில் அமர்ந்து கொண்டான்.
“வீட்ல யாரும் இல்லையா பாட்டி. நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்றான் ஆதி சகஜமாக.
“யாரும் இல்லனு சொன்னா பாட்டியையும் தத்தெடுத்து அவனோட ஆஸ்ரமத்துல சேர்த்துக்க பாக்குறான் பாருடா. வர வர இவனோட சமூக உணர்வுக்கு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு” புலம்பினான் வெற்றி.
அவனின் புலம்பல் ஆதி காதுகளை அடையாமல் இருந்தாலும், அவனின் மன போக்கை அறிந்தே இருந்தான் ஆதி.
தான் நடத்தும் முதியோர் இல்லத்தை கலாய்க்காமல் வெற்றியால் இருக்கவே முடியாது.
“அதுவும் வயது பெண்கள் இருக்கும் விடுதி கட்டினால் கூட பரவா இல்லை. எனக்காவது யூஸ் ஆகும். நான் என் திறமையைக் காட்டி எதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்” என்று பல முறை புலம்பியே இருக்கிறான் வெற்றி.
அதனால் இம்முறை அவனின் மன போக்கு புரிந்தவன் அவனை முறைக்க,
“இருகாங்க தம்பி. என் வூட்டுகராறு வயலுக்கு போய் இருக்காரு. என் பேத்தி இதோ இங்கன தான் இருக்கு” என்றவர்.
“அஞ்சலி, தம்பிகளுக்கு தண்ணி, காபி கொண்டு வந்து குடுத்தா” என்ற குரலுக்கு.
“இதோ, ரெண்டு நிமிஷம் ஆச்சி. வந்திட்டேன்” என்ற குரல் உள் இருந்து வர, வெற்றி தான் படு ஆர்வமாக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான்.
ஆதிக்கு கூட அந்த குரலிற்கு சொந்தக் காரியை பார்க்க ஆர்வம் தான். எங்கோ கேட்டது போல் அவனுக்கு தோன்றினாலும்…
“நம்மளே ஊருக்கு புதுசு. இந்த குரலை நம்ப எங்க கேட்டு இருக்க போகிறோம்” என்றவன் நினைவில் மூழ்க,
தரையில் அவளின் பாதம் பட, தரையின் சிணுங்கலும், கொலுசின் சிணுங்கலும் ஒன்று சேர்த்து இசைக்க அன்ன நடையில் முற்றம் வந்து சேர்ந்தாள் அஞ்சலி. சிவப்பு, பச்சை தாவணியில் அழகாய் சீவி இடை தாண்டி ஆடும் கேசமும், காதில் கதைப்பேசும் ஜிம்மிக்கி கம்பலும் கொண்டு மங்கை அவள் நடந்து வர,
அவளின் முகம் பார்த்த ஆதியோ சப்தமும் ஒடுங்கி போய், இதயம் துடிக்கிறதா, இல்லையா என்பதும் கூட மறந்து, கவனிக்க தவறி, தன்னை மொத்தமாக திருடிய அந்த திருடியைப் பார்த்த படி இருந்தான் ஆதி.
முதலில் அவனுக்கு தான் காண்பது கனவா நிஜமா என்ற சந்தேகம் வந்தாலும், அஞ்சலி காபி மற்றும் பலகாரம் கொண்ட அந்த தட்டை முதலில் ஆதி முன் நீட்டி, அவன் முகம் பார்க்க, பார்த்த மாத்திரத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்டவள், விழி விரித்து, அதில் பயம் கலக்க, ஆதியை பார்க்க.
அந்த நொடி, தான் பார்க்கும் காட்சி அனைத்தும் உண்மை தான் என்பதை உறுதி படுத்தினான் அவன்.
முடிந்த வரை அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பி கொண்டு, வெற்றி, சூர்யாவிடம் சென்றவள்,
சூர்யாவை பார்த்து “அண்ணா எடுத்துக்கோங்க” என்றாள் எதிர்ச்சியாக.
அவனும் எடுத்து கொள்ள. அடுத்து தன் முறைக்காக படு ஆவளாக காத்திருந்த வெற்றியை அவள் நெருங்கும் போது,
“வெற்றியும் உனக்கு அண்ணன் தான்மா. அவனையும் அண்ணனே கூப்பிடு” என்றான் ஆதி வெற்றியின் அந்த சின்ன காதல் கோட்டையைக் கலைத்த படி.
அதில் முகம் சுருங்கி, கடுப்பில் கடுகடுத்தவன்,
“எனக்கு பசி இல்லமா. அங்க வெச்சிட்டு போ” என்றவன் பேச்சில் இருக்கும் வெறுப்பை உணர்ந்தாலும் கண்டு கொள்ளவில்லை ஆதி.
அஞ்சலியையே தொடரும் ஆதியின் விழியை வெற்றி கண்டு கொண்டு,
“சூர்யா, இந்த ஆதி சரியே இல்லை. அந்த பொண்ணை பார்க்குற பார்வையே சரி இல்லை. இதுல என்னை அண்ணானு வேற கூப்பிட வெச்சிட்டான்” என்றான் குற்றம் சாட்ட வந்த குரலில் இப்போது வருத்தம் பொங்க.
“உன்ன அந்த பொண்ணு கிட்ட பேச விடாம பண்ணிட்டான்னு காண்டு உனக்கு. அதனால தானே இப்டி பேசுற” என்றான் சூரியா அவனைக் கலாய்த்த படி.
“பேசுவடா பேசுவ ஒரு நாள் இவன் நம்மளை மரத்தடியில் கட்டி வெச்சி உதை வாங்க வைக்க போறான். அப்போ புரியும் இந்த வெற்றியோட அறிவைப் பத்தி” என்றான் இல்லாத காலரைத் தூக்கி விட்ட படி.
அதற்கும் சூர்யா அவனைப் பார்த்து,
“லூசு” என்றே கூற, ஒரே ஆசிங்கமாக போனது வெற்றிக்கு.
“ஆனால் இது எல்லாம் அவனுக்கு சகஜம் தானே” என்று அவனும் காபியில் கவனம் செலுத்த, ஆதிக்கு இடையூறு என்பதே இல்லாமல் அவனின் கவனம் மொத்தம் அஞ்சலி மேல் தான் இருந்தது.
சிறிது நேரம் அதை, இதை என்று பேசி விட்டு, போர் அடிக்கவே, தன் ஐபோனுடன் வெளியே சென்றான் வெற்றி.
எதையோ தீவிரமாக தன் கைபேசியில் அவன் செய்து கொண்டு இருப்பதை பார்த்து,
“இங்க என்ன அண்ணா பண்ணுறீங்க?ரொம்ப தீவிரமா எதையோ தேடுறீங்க போல” என்றாள் அஞ்சலி அவன் அருகே வந்த படி.
“ஒன்னும் இல்லாமா, இந்த ஊர்க்கு வந்ததுல இருந்து டவரே கிடைக்க மாட்டேங்குது” என்றான் வெற்றி அப்போதும் கைபேசியில் கவனமாய்.
“இதை வெச்சிக்கிட்டு நான் என்னமா பண்ணுறது. எனக்கு நெட் எடுக்க மாட்டேங்குதே” என்றான் வருத்தமாய்.
“நெட் தானே, இதோ இதுல பிரீ வைபை இருக்கு. ஆனா ஒரு நாளைக்கு ஒரு ஜிபி தான் பிரீ கிடைக்கும்” என்றாள் அஞ்சலி.
“எது வைபையா. எந்த பேர்ல இருக்கு. சொல்லு”
“இந்த ஊர் பேரு தான், “மடக்கான்பட்டினு” இருக்கும் பாருங்க” என்றாள் அஞ்சலி.
“என்னமா பட்டி, தொட்டினு பேர் வெச்சிக்கிட்டு. யார் தான் இப்டி பேர் வெக்குறாங்களோ. அதுக்கு பதிலா அர்த்தம் இருக்க ஏதாச்சும் பேர் வெக்கலாம்ல” என்றான் வெற்றி சலிப்புடன்.
“பட்டிகும் அர்த்தம் இருக்குண்ணா. அது வந்து முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதி தானே. அங்க வாழ்ந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டி வாழ ஆரம்பிச்ச போது, தொழிலுக்காக காட்டுல இருக்க ஆபத்து இல்லாத ஆடு, கோழி, மாடு இப்டி பட்ட விலங்க வளக்க ஆரம்பிச்சாங்க.
அப்டி வளக்க படுற மிருகத்திற்கு தங்க இடம் இல்லாமல் போய்டும்னு அதுக்காக தங்கள் வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு குடிசை மாதிரி அமைச்சு குடுத்தாங்க. அந்த இடத்துக்கு அவுங்க வெச்ச பேரு தான் ‘பட்டி’.
இப்போ கூட மலைக்கு பக்கத்துல, காட்டுக்கு பக்கத்துல, இல்ல ஆடு மாடு எல்லாம் அதிகம் இருக்க ஊருக்கு பட்டினு தான் பேரு” படு சாதாரணமாக கூறி முடித்தாள் அஞ்சலி.
“இந்த புள்ளைக்குள்ள இம்புட்டு அறிவா. என்றே தோன்றியது வெற்றிக்கு.
இவர்கள் பேச்சைக் கேட்ட படி இவர்களுக்கு பின்னால் வந்த ஆதிக்கும்,
“கிராமத்து பெண்ணிற்கு இவ்வளவு தெளிவா” என்று தோன்ற.
“பாட்டி, யார் இந்த பொண்ணு, இவ்ளோ விவரமா பேசுது. உங்க பேத்தியா?” என்றான்.
“ஹ்ம்ம்ம்” என்ற பெருமூச்சு விட்டவர்,
“அத ஏன்பா கேக்குறே. பாவம் அந்த புள்ள. பிறந்ததுல இருந்து எல்லா கஷ்டத்தையும் பார்த்துடுச்சி. அதும் இந்த சின்ன வயசுலயே. ஆனாலும் ரொம்ப தைரியசாலிப்பா. பொறந்த பிறப்பு அப்படி” என்றவர் அஞ்சலியைப் பற்றி கூற துவங்கினர்.