Advertisement

கடந்திருக்கும் பத்து மணிநேரத்தில், மூவரும் நிரபராதிகள் என்பதை எப்படி நிரூபிக்க போகிறோம் என்பது புரியாமல் தான் இருந்தனர் அவ்விடம் இருந்த அனைவருமே.

சொந்தக்கார பெண் என்று நினைத்த அஞ்சலி, ஓடி ஓடி சாட்சியைச் சேகரிப்பதும், இவர்கள் மூவரையும் காப்பாற்ற அவள் தவிப்பதையும் கண்ட ரகுநாத்திற்கே கொஞ்சம் பொறி தட்ட தான் செய்தது

“சூர்யாவோட சொந்த கார பொண்ணுன்னு தானே சொன்னாங்க? ஆனா இவ என்ன மூணு பெருக்காகவும் இவ்வளவு முயற்சி பண்ணுறா!!! அதுவும் இவ ஆதி கிட்ட பேசுறதே சரி இல்லையே” யோசித்தவருக்கு பதிலளிக்கவே அவ்விடம் வந்து சேர்ந்தார் அந்த பாழாய் போன நாட்டாமை.

காவல் நிலையம் வெளியே அமர்ந்து இருக்கும் அனைவர் முன்பும் காவல் வாகனம் ஒன்று வந்து நிற்க, அதில் இருந்து நான்கு காவலர்கள் சூழ கையில் விலங்குடன் இழுத்து வரப்பட்டான் அந்த நாட்டாமை.

இவர்களை நெருங்குகையில்,

“என்ன அஞ்சலி. உன் புருஷனக் காப்பாத்த ரொம்ப கஷ்ட படுற போல.. நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் அது நடக்காது” என்றான் உதட்டில் ஏளன சிரிப்புடன்.

இவன் இப்டி, அதுவும் இந்த நேரத்தில் அவர்களின் ரகசிய திருமணத்தைப் போட்டு உடைப்பான் என்பதை எதிர்ப்பாரா அஞ்சலி அவ்விடம் அதிர்ச்சியில் உறைய,

சந்தேகத்துடன் யோசித்துக் கொண்டு இருந்த ரகுநாத் மூளைக்கு இது தீனியாகவே அமைந்து போனது,

“என்ன புருஷனா? யார் அது.. நீ கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு தானே எங்க கிட்ட சொன்ன.. இப்போ என்ன புருஷனுக்கு சொல்லுறன் அவன்?” கேட்டார் ரகுநாத்.

“உங்களுக்கு இன்னமும் தெரியாதா.. உங்க புள்ள அதியோட பொண்டாட்டி தான் இவ.. ஊரையே எதிர்த்து கட்டிக்கிட்டு வந்தான் ஆதி, அஞ்சலியை” இத்துணை நாள் கட்டி காத்த ரகசியம் இன்று ரகுநாத் முன்னரே வெளி வரவும் செய்து இருந்தது.

அதற்குள் நாட்டாமை அஞ்சலியிடம் பேசுவதை ஆதியிடம் கூறி அம்மூவரையும் அழைத்து வந்து இருந்தாள் வெண்பா.

“வாங்கடா காதல் மன்னன்களா!!! ஜெயில கலி சாப்பிட ரெடியா? நானும் கூட சர்ரெண்டெர் ஆகிட்டேன்.. வாங்க ஒரே ஜெயில் வாங்கிட்டு ஒன்னா இருக்கலாம்” என்றவனின் பேச்சில் எத்துணை நக்கலும் நய்யாண்டியும்.

“ஜெயிலுக்கு போக போறது நீ மட்டும் தான்டா.. நாங்க இல்லை” என்றான் ஆதி எகிறிய படி.

“யாரு நீங்க ரிலீஸ் ஆக போறீங்களா? அதுவும் இந்த அஞ்சலி உதவியாலயா? இந்த பட்டிக்காட்டு பொண்ணு உங்களைக் காப்பாத்த போறாளா?” நகைத்தான் நாட்டாமை.

“டேய் பாத்து பேசு.. நேத்து அவ உங்க ஊர் பொண்ணா இருக்கலாம்.. ஆனா இப்போ அவ எங்க ஊர் பொண்ணு.. என் தங்கச்சி.. அவளைப் பத்தி தப்பா ஏதாவது பேசுன உன்னை அவ்வளவு தான்” மிரட்டினான் வெற்றி.

“என்னடா ஓவரா ஏகுருர.. இப்போ வந்த தங்கச்சிக்கு இவ்வளவு கோவப் படுறியே.. உன் கூட பொறந்த தங்கச்சியை உன் நண்பனே காதலிக்குறானே அது தெரிஞ்சா எப்போ என்ன பண்ணுவ.. உன் நண்பனை கொல்லுவியா? இல்லை அவனுக்கு உன் தங்கச்சியைக் கட்டி குடுப்பியா?” இம்முறையும் நக்கல் குறைய வில்லை அவன் பேச்சில்.

“அட நாதாரி நாயே.. போற போக்குல என்னையும் வெண்பாவையும் எதுக்குடா கோர்த்து விட்டுட்டு போற.. இப்போ வெற்றி என்ன நினைக்க போறான்னு தெரியலையே” எண்ணிய சூர்யாவுக்கு, ஒரு வேலை கூட இருக்கும் நண்பனே தனக்கு துரோகம் இழைத்து விட்டான் என்று எண்ணி விடுவானோ என்ற பயமும் உள்ளூர இருக்கவே செய்தது.

வெண்பாவைப் பற்றி நாட்டாமை அப்படி பேச கேட்டவன், கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நாட்டாமையைத் தாக்க முயற்சிக்க அதற்குள் ஸ்வாதி முன் வந்து வெற்றியைத் தடுக்க முயற்சிக்க,

“இதோ வந்துட்டா பாரு உன்னோட காதல் தேவதை.. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா.. மூணு பிரின்ட்ஸ்ஸும் உங்க காதல் விஷயத்தை வீட்டுல இருந்து நல்லாவே மறச்சி வெச்சி இருக்கீங்க.. கில்லாடிடா நீங்க”என்றவனைத் தாக்க சூர்யா எத்தனித்த நேரம் அவ்விடம் வந்த சரவணன்,

“சூர்யா கண்ட்ரோல் யுவர்செல்ப்.. உங்களை வெறுப்பேத்தி உங்க மேல இன்னும் குற்றங்களைக் கூட்ட தான் அவன் முயற்சி பண்ணுறான்.. அவன் வலையில் விழுந்துடாதீங்க.. அமைதியாய் இருங்க” என்றவர் மூவரையும் காவல் நிலையம் உள்ளே கூட்டி சென்று தனி அறையில் அமரவும் வைத்தார்.

“இருக்க பிரச்சனை போதாதுன்னு இந்த நாட்டாமை வேற கல்யாண விஷயத்தை இப்டி போட்டு உடைச்சிட்டாரே.. வெற்றி அண்ணா கிட்ட வேற வெண்பா, சூர்யா அண்ணாவை பத்தி அரைகுறையா சொல்லி வெச்சிட்டான்.. இதனால வெற்றி சூர்யாவுக்கு நடுவுல ஏதாவது பிரச்சனை வந்துடுமோ” யோசித்தவளுக்கு லேசான பயம் எட்டி பார்க்கவே செய்தது.

ரகுநாத் வேறு, அஞ்சலியை எரிப்பது போல் முறைத்து கொண்டு நிற்க, அதை உணர்ந்த மருதநாயகம்,

“நீங்க வேற ஏதாவது ஆதாரம் ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க.. மத்ததை எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்று மூவரையும் அனுப்பி வைத்து விட, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவ்விடம் விட்டு வெளி ஏறினார் மூவருமே.

காவல்நிலையம் உள்ளே, வெண்பா சூர்யா காதல் தெரிந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தான் வெற்றி.. இதுவரை அவனிடத்தில் கண்டிராதா ஒரு பேரமைதியை காணவே கொஞ்சம் பயமாக தான் இருந்தது ஆதி, சூர்யாவிற்கு .

“வெண்பாவை நீ எப்போல இருந்துடா காதலிக்க ஆரம்பிச்ச.. என் கிட்ட கூட சொல்வே இல்லை..நானும் இங்க தானே இருக்கேன்.. பிராடு பயலே” செல்லமாக அவனை வம்பிழுத்த ஆதிக்கு, சூர்யாவின் காதல் ஏனோ மன நிறைவையும், மகிழ்ச்சியையுமே தந்தது.

“டேய் நீவேற சும்மா இருடா.. அங்க பாரு வெற்றி அமைதியா இருக்குறது பாக்கவே பயமா இருக்குடா.. அவன் எப்படி எடுத்துக்கிட்டானே தெரியலையே” பயந்தவன் வெற்றி அருகில் செல்ல,

“இதெல்லாம் இப்டி நடக்குனு எனக்கு தெரியாது வெற்றி.. இதனால் தான் உன் வெண்பா அவளோட காதலை சொன்ன அப்பறம் கூட நான் ஒதுங்கியே இருந்தேன்.. இந்த சமுதாயத்துல ஒரு கவுரவமான வாழ்க்கையை என்னால தர முடியாதுனு எனக்கு தெரியும்..

எங்க அம்மா பட்ட கஷ்டம் எல்லாம் வெண்பாவும் பட வேணாம்னு தான் நான் ஒதுங்கி ஒதுங்கி போனேன்.. ஆனா இந்த பாழாய் போன காதல் எனக்குள்ள எப்போ வந்ததுன்னு எனக்கே தெரிலடா.. அதுக்காக உன்னை எதிர்த்து வெண்பாவைக் கல்யாணம் பண்ணிக்குற எண்ணம் எனக்கு இல்லை.

இப்போ வந்த இந்த காதலை விட நம்ப நட்பு தான்டா எனக்கு முக்கியம்.. இப்டி மௌனமா இருக்காதாடா.. ஏதாவது பேசுடா” திடமாய் ஆரம்பித்தவனின் வாதம், இறுதியில் நிர்கதியாய் முடிய, அதை பொறுக்க முடியாத வெற்றி,

“நீ வெண்பாவை விரும்புரியா? உனக்கு அவளை பிடிச்சி இருக்கா?” என்றான் நேரடியாக.

அவனின் கேள்வியில் திடுக்கித்தவன், என்ன கூறுவது என்பது புரியாமல் ஆதியின் முகம் பார்க்க,

“உண்மையயை சொல்லு” என்ற படி அவனின் தோல் தொட்டு ஆதி கூற,

“ஆமாம்டா.. பிடிச்சி இருக்கு.. அவளை நான் விரும்புறேன்” என்றான் சூர்யா இதுவரை வெண்பாவுடம் கூட கூறாத அந்த உண்மையை.

அதற்கு பதிலாய் கன்னத்தில் ஒரு அறையை பரிசாக தந்தவன்,

“இதை எதுக்குடா மறச்ச.. உன்னை விட ஒரு நல்ல பையனை நானே நெனச்சி இருந்தாலும் வெண்பாக்கு தேடி இருக்க முடியாது.. அப்புறம் என்ன சொன்ன?

இந்த சமூகத்துல கவுரவமான வாழ்க்கையை அவளுக்கு உன்னால தர முடியாத, அட தூக்கி போடுடா இந்த சமூகத்தை.. இந்த சமூகம் என்ன சொல்லும்னு யோசிச்சா நாம பழகுறோம்..

இன்னைக்கு வரைக்கும் உன்னை எங்க வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டேங்குறாங்க.. அதுக்காக எத்தனை நாள் என் வீட்டுல நான் சண்டைப் போட்டு இருக்கேன் தெரியுமா? எப்படியாவது உன்னை என் குடும்பத்துல ஒருத்தனா மாத்தணும்னு ரொம்பவே ட்ரை பண்ணி இருக்கேன்டா..

“ஆனா என்னால முடியல.. என்னால முடியாததை என்னோட தங்கச்சி பண்ணி காமிச்சிட்டா.. ஆனா அதுக்காக உங்க காதலை என் கிட்ட மறச்ச உங்க ரெண்டு பேரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்டா” என்ற வெற்றி முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு புறம் நின்று கொள்ள,

எப்போதும் தங்கள் நட்பை எண்ணி பெருமை கொள்ளும் சூர்யாவிற்கு, இப்டி பட்ட நண்பர்கள் கிடைத்ததை நினைத்து கர்வம் கொள்ளவே செய்தது அவனின் மனம்.

இன்று வரை அனைத்தும் இருந்தும், எதோ ஒரு குறை இருப்பதாகவே மற்றவர் தன்னை எண்ணுகிறார்கள் என்று எண்ணி கொண்டு இருந்த சூர்யாவிற்கு, வெற்றியின் வார்த்தைகள் சட்டையடியாய் விழ, இத்தனை நாள் அவனுள் இருந்த அந்த தாழ்வு மனப்பான்மையை நொடியில் போக்கி இருந்தது அவர்களின் அந்த நட்பும், அந்த நட்பை ஒளிர வைத்த அவனின் காதலும்.

அதில் உள்ளம் மகிழ்தவன், வெற்றியை ஆர தழுவி தன் மன துயர் எல்லாம் அழுதே தீர்த்து கொண்டு இருந்தவனை,

“அடேய்.. என்ன பீலிங்கா? உங்க காதல் கதையை ஒழுங்கா முதல்ல இருந்து சொல்லு.. கூடவே இருந்த எனக்கு தெரியாம எப்படி இதெல்லாம் நடந்ததுன்னு எனக்கு தெரியணும்” என்றான் வெற்றி, அண்ணனாக இல்லாமல், நண்பனாய் மாறி.

மெசேஜ் வந்தது, ஹாஸ்பிடலில் அழுது அவள் தன் காதலை சொன்னது முதல், இப்போது பார்வையாலேயே ஆயிரம் காதல் மொழிகள் பேசி இருந்தது வரை அனைத்தயும் கூறினான் சூர்யா.

அதில் அசந்த வெற்றி,

“பரவால்லயே.. என்னோட தங்கச்சி என்ன விட கெட்டி காரியா இருக்காளே.. இவ்வளவு செஞ்சி இருக்கா அந்த குட்டி பிசாசு.. இருக்கட்டும் இருக்கட்டும்.. வீட்டுக்கு போய் அவளைப் பாத்துக்குறேன்” என்றவனின் பேச்சில் சிரிப்பு தான் வந்தது மூவருக்கும்.

மூவரும் பயமே இல்லாமல் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்து இருப்பதை கண்ட சரவணன்,

“போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்கா உங்களுக்கு.. அதுவும் நீங்க மாட்டிகிட்டு இருக்குறது நாற்காட்டிக்ஸ் கேஸ்ல.. இங்க இருந்து தப்பிக்க ஆதாரம் ரெடி பண்ணுவீங்கன்னு பாத்த, இப்டி விளையாடி சிரிச்சிகிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் கூட பயம் இல்லையா உங்களுக்கு” என்றவரின் பேச்சிலோ எத்தனைப் பதற்றம்.

“பாஸ், நீங்க அதுக்கெல்லாம் பயப்படாதீங்க.. இன்னும் நாளு மணி நேரம் இருக்குல்ல.. அதுக்குள்ள எங்களோட சிங்க பெண்கள் எங்களைக் காப்பாத்த ஆதாரத்தோட எப்படி வரங்கனு மட்டும் பாருங்க” என்ற வெற்றியின் பேச்சில் நம்பிக்கை மிதம் மிஞ்சியே இருந்தது.

இரண்டு மணி நேரம் கழித்து வந்த மூவரின் முகத்திலுமே எதையோ சந்தித்த பிரகாசம் தென் பட, அதுவே ஒரு புது தெம்பை தந்தது மூவருக்கும்.

“சிங்க பெண்கள் என்ன பண்ணி இருக்காங்கன்னு தெரியலையேடா.. பேசாம கேட்டு பார்ப்போமா?” என்று தோன்ற,

அஞ்சலியை நெருங்கிய ஆதி, “என்னடி ஆச்சு? ஏதாவது வழி கிடைச்சுதா? ஆதாரம் ஏதாவது தேடுனீங்களா?” என்றான் கொஞ்சம் தயக்கமாக,

“அதெல்லாம் கண்டு பிடிச்சிட்டோம்.. நீங்க போய் அப்படி நிம்மதியா உக்காருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போகணும்” என்றவள் பேச்சிலோ எத்துணை நம்பிக்கை.

“ஒழுங்கா விஷயத்தை சொல்லுங்கமா.. ஏதாவது சொதப்பிட போகுது” என்றான் வெற்றி, எச்சரிக்கும் விதமாக.

“சொதப்புரது எல்லாம் உங்களோட வேலை.. நீங்க ஒழுங்கா இருந்து இருந்தா இப்டி போலீஸ் ஸ்டேஷன் வாசல் வந்து நாங்க நின்னு இருக்க தேவை வந்து இருக்காது” என்றாள் கொஞ்சம் காட்டமாக.

“சரி தான்” என்று எண்ணியவன்,

“ரொம்ப கோவமா தான் இருக்காளோ? நமக்கு எதுக்கு வம்பு.. எல்லார் முன்னாடியும் அடிச்சிட போறா” எண்ணியவன் ஆதி பின் சென்று பம்மி கொள்ள, அதில் சிரித்த சூர்யாவை முறைக்கவே செய்தான் வெற்றி.

இந்த சூழலை காரணம் காட்டி, வெண்பாவிடம் பேச முயற்சித்த சூர்யாவிற்கு, ஏமாற்றமே பதிலாய் கிடைக்க, இப்போது சிரிப்பது வெற்றியின் முறையாகி போனது.

அடுத்த ஒரு மணி நேரத்தில், காவல் உடையில் சில அதிகாரிகள் உள்ளே வரவும், அவர்கள் அனைவருமே அந்த சாப்பாடு கடையில் தான் நியமித்த காவல் ஆட்கள் என்பதை உடனே புரிந்து கொண்டான் சூர்யா.

வந்தவர்கள் சூர்யாவிடம் செல்லாமல், நேரே அஞ்சலியிடம் சென்று எதையோ பேச, அவளும் சரி என்றபடி தலையசைக்க, அடுத்து ஈடேறியதை இம்மூவரை காப்பாற்றும் சாட்சிகள் அரங்கேறும் தருணம்.

கையில் ஒரு பென்டிரைவ் ஒன்றை வைத்து இருந்தவள், சரவணனைப் பார்க்க செல்ல, வெற்றி, ஆதி, சூர்யாவும் கூட நடப்பதை பார்க்க அவளின் உடன் செல்லவே செய்தனர்.

“சார் இந்த பென்டிரைவ்ல இருக்குறத பாருங்க.. இதுக்கு மேல இவங்க மூணு பேரும் நிரபராதிகள்ன்னு ப்ரோவ் பண்ண வேற எதுவும் தேவை இருக்காதுன்னு நினைக்குறேன்” என்றாள் அஞ்சலி.

“அப்படி என்ன இருக்கு அதுல” கேள்வியுடன் அவள் தந்த ஆதாரத்தைப் பார்க்க, ஒளிக்க துவங்கியது ஒரு வீடியோ.

அதில் ஒருவன், சூர்யா வீட்டின் பின் சுவற்றை ஏறி குதித்து, அங்கிருக்கும் மரத்தின் உதவியுடன் அஞ்சலி தங்கும் அந்த அறையை அடைந்தவன் கையிலோ நிலவொளியில் அதே போதை பொருள் பாக்கெட் ஒளிரவே செய்தது.

மறைவாக சென்றவன், அடுத்த சில வினாடிகளில் வெளிவர, அவன் கையில் இல்லாமல் போன அந்த பாக்கெட்டே அவன் அதை அந்த அறையில் வைத்து விட்டு தான் வந்தான் என்பதை தெளிவாக விளக்கி இருந்தது.

அடுத்து அடுத்து, இருந்த இரண்டு வீடியோக்களை பிலே செய்ய, அதிலும் யாரோ ஒருவன் வெற்றி வீட்டிலும், ஆதி வீட்டிலும் இதையே செய்து வெளியேறுவது தெளிவாக தெரிய, அவையே இம்மூவரின் உண்மையைத் தெளிவாக விளக்க செய்த்து.

“தட்ஸ் இட்.. இதை தான் நான் எதிர் பார்த்தேன்.. உண்மையிலேயே நீங்க மூணு பேரும் சிங்க பெண்கள் தான்.. இருபத்தி நாளு மணி நேரத்துல இவ்ளோ முக்கியமான ஆதாரத்தைக் கண்டு பிடிச்சிடீங்களே..இது போதும் இனி அந்த நாட்டாமையை நான் பாத்துக்குறேன்” பெருமையாய் பேசினான் சரவணன்.

“இது எதுக்குமே நாங்க காரணம் இல்லை சார்.. இது முழுக்க முழுக்க சூர்யா அண்ணா, வெண்பாவோட காதலால தான் சத்தியம் ஆச்சு.. என்ன பண்ணுறதுனு, இதுக்கு மேல இவங்களைக் காப்பாத்த முடியாதுனு நாங்க துவண்டு போன அப்போ, வெண்பா தான்,

சூர்யா இந்த சின்ன விஷயத்தை கூட யோசிக்காம, இப்டி மாடிக்குற ஆள் இல்லை.. அவரே எதாவது ஒரு ஆதாரத்தை விட்டுட்டு தான் போயிருப்பாரு.. வாங்க தேடலாம்னு” வெண்பா சொன்ன அந்த வார்த்தை தான் இன்னைக்கு வீடியோவா வந்து நிக்குது.

இப்டி எல்லாம் நடக்கும்னு சூர்யா அண்ணா முன்னாடியே யூகிச்சி இருப்பாரு போல.. அதனால தான் இந்த மூணு பேர் வீட்ட சுத்தி கேமரா செட் பண்ணி இருந்தாரு.. எதிர்ச்சிய நேத்து தேடும் போது தான் அந்த கேமரா கெடச்சுது.. அதுல தான் இந்த ஆதாரம் கிடைச்சுது” என்றாள் அஞ்சலி அனைத்தையும் விளக்கிய படி.

நாட்டாமை தப்பி விட்டான் என்ற செய்தி வந்ததும், சூர்யா தான் யாருக்கும் தெரியாமல் இந்த கேமராக்களை மூவர் வீட்டிலும் பொறுத்த சொல்லி இருந்தான்.. அதற்கு பின்னர் நடந்த விபத்து..

பின் வெண்பா மேல் தான் கொண்ட காதல் என்ற அனைத்திலும் இந்த கேமராவை அவன் மறந்தே போயிருந்தான் சூர்யா. இன்று அதே காதல் தான் தன்னையும், தன்னுடைய இத்தனை நாள் உழைப்பையும் காப்பாற்றி உள்ளது என்பதை அறிந்தவனுக்கு சந்தோசம் தாளவில்லை.

சூர்யா வெண்பாவை விரும்புகிறான்.. சூர்யாவை விட வேறு நல்ல மாப்பிளை வெண்பாவிற்கு அமைய போவதில்லை என்பதை வெற்றி உணர்ந்தாலும், இவை அனைத்திலும் வெண்பாவின் எண்ணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உறுத்தல் அவனுக்கு மிகுதியாகவே இருந்தது.

இன்று அவர்களின் காதலின் சாட்சியாய், வெண்பாவின் செயல் அமைந்திருக்க, மன திருப்பிதியில் நெகிழ்ந்து போனான் வெற்றி.

Advertisement