Advertisement

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரமே தன்னால் சூர்யாவைக் காப்பற்ற முடியும் என்பதை உணர்ந்த அஞ்சலிக்கு, சூர்யா கூறிய படி ஆதியும், வெற்றியும் கூட கைதாகி இருக்க கூடும் என்ற நினைவு தோன்றவே இல்லை.

“அடுத்து என்ன செய்வது? எப்படி சூர்யாவைக் காப்பாற்றுவது” என்று யோசித்தவள்.

“பேசாம நாம நம்ப ஊருக்கே போய் நாட்டாமைக்கு எதிரா ஆதாரம் ஏதாவது கிடைக்குதான்னு பாப்போமா?” என்றெண்ணியவள்,

“தாயம்மாளுக்கு கால் பண்ணி அங்க என்ன நிலவரம்னு கேப்போமா?” யோசித்து கொண்டு இருந்தவளின் கவனத்தை ஈர்த்தது வாசலில் வந்து நின்ற கார் தான்.

“என்னடா மறுபடியும் காரா? இதுல என்ன பிரச்சனை வர போகுதுனு தெரியலையே” என கொஞ்சம் பதறியவளுக்கு, அந்த காரில் இருந்து வெண்பாவும், ஸ்வாதியும் இறங்குவதைக் கண்டு கொஞ்சம் நிம்மதியாக தான் இருந்தது.

அந்த நிம்மதியும் கூட அவர்களின் முகத்தை உற்று நோக்கியத்தில் மறையவே செய்தது. முகம் முழுக்க பதட்டமும், பயமும் நிறைந்து நடக்க மறந்து காரை விட்டு இறங்கி ஓடி வந்தனர் இருவருமே வீட்டிற்குள்.

“ஆண்ட்டி, சூர்யா எங்க? அவரைக் கூப்பிடுங்க” என்றாள் ஸ்வாதி பதறி கொண்டு,

“அண்ணனை எதுக்கு தேடுறீங்க? மொதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லுங்க” என்றாள் அஞ்சலி.

அப்போது தான் வெற்றி இல்லத்தில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் ஸ்வாதி.

சூர்யா இல்லத்தில் நடந்தது போலவே, திடீரென சாதாரண உடையில் வந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர், வீட்டை சோதனை போட, அப்போது வெற்றி அறையில் இருந்து ஒரு பாக்கெட் கிடைக்க, அது இறுதியாய் போதை பொருள் என்பது உறுதியாகி, கடைசியில் வெற்றியைக் கைது செய்தனர் அந்த துறையினர்.

அப்போது தான் சூர்யா கூறியது அஞ்சலிக்கு நினைவு வர, உடனே மருதநாயகத்திற்கு அழைத்தவள், விவரம் விசாரிக்க, அங்கும் கூட இதே தான் நடந்து ஆதியைக் காவல் துறை அழைத்து சென்று உள்ளதாக கூறினார் அவர்.

“இப்போ என்ன பண்றது? அவுங்கள எப்படி காப்பாத்துறது?” கேட்டாள் ஸ்வாதி.

“மொதல்ல எனக்கு ஒரு சந்தேகம்.. சோதனை போட வந்த யாருமே யூனிபோர்ம் போடவே இல்ல.. நார்மல் டிரஸ்ல தான் வந்து இருந்தாக.. அவுங்க போலீஸ் தானா இல்லையானு எனக்கு டவுட்டா இருக்கு” என்றாள் வெண்பா யோசனையுடன்.

“போதைப்பொருள் தடுப்பு பிரிவுல இருக்கவங்களுக்கு யூனிபோர்ம் இல்ல.. அது இல்லாம அவுங்க யார் வீட்டை வேணாலும் சோதனை போடலாம்.. வாரண்ட் எதுவும் தேவை இல்லை..

சப்போஸ் அவுங்க போன இடத்துல ஏதாவது கண்டு பிடிச்சிட்டா, அந்த இடத்துலயே யாரை வேணாலும் கைது பண்ற அதிகாரம் அவுங்களுக்கு இருக்கு..

அதோட இவங்க அர்ரெஸ்ட் பண்ணா பெயில் கிடையாது, ஸ்ட்ரெயிட்டா ஜெயில் தான்.. அதுவும் குறைஞ்சது நாலு வருஷம்” என கூறி முடித்தாள் அஞ்சலி.

“ஹையோ இப்போ எப்படி இந்த மூணு பேரையும் காப்பாத்த போறோம்.. இனி நாலு வருஷத்துக்கு ஜெயில் தானா” பதறினாள் ஸ்வாதி.

“இல்லை ஸ்வாதி, சூர்யா அண்ணா எப்படியாவது பேசி இருபத்திநாலு மணி நேரம் டைம் வாங்குறேன்னு சொல்லி இருக்கு.. அதுக்குள்ள நாம அவுங்கள காப்பாத்த எதாவது ஆதாரத்தைக் கண்டு பிடிச்சி கொண்டு போய்ட்டா, அவுங்கள காப்பாத்திடலாம்” என உறுதியாய் கூறினாள் அஞ்சலி.

“அது எப்படி அண்ணி முடியும்.. நாம பொண்ணுங்க என்ன பண்ணிட முடியும்.. அதுவும் இருபத்தி நாலு மணிநேரத்துல எப்படி கண்டு பிடிக்க முடியும்” என சந்தேகமாகவே கேட்டாள் வெண்பா.

“ஏன் பொண்ணுங்க நெனச்சா முடியாதா.. அவுங்க மூணு பேரும் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்கன்ற நம்பிக்கை உனக்கு இருக்குல.. அப்போ எதுக்கு பயப்படுற.. கொஞ்சம் யோசிச்சா போதும்.. நாம இதை நிச்சயம் செய்து முடிக்க முடியும்” என உறுதியாய் பேசினாள் அஞ்சலி.

“சரி, இப்போ அடுத்து என்ன பண்ண போறோம்.. ஏதாவது ஆதாரத்தை கலெக்ட் பண்ணனும்ல.. அது எப்படின்னு சொல்லுங்க” என்றாள் ஸ்வாதி.

“அத தான் எப்படி பண்ணுறதுனு யோசிச்சிகிட்டு இருக்கேன்” என்றவளுக்கு சூர்யா பேசும் போது இறுதியாய் எதையோ கூற வந்து, அதை முடிக்கமலே போனது நினைவிற்கு வர, அதை மற்ற இருவரிடமும் கூறினாள் அஞ்சலி.

“அப்படி என்னவா இருக்கும்.. நாம அவரோட ரூம் மொத்தமும் தேடுவோம்.. ஏதாவது கிடைக்கும்” என்றவர்கள்,

சூர்யா அறையின் அத்தனை மூலையும், எல்லா இடமும் தேடி ஓய்ந்து கூட தங்களுக்கு சாதகமாக எதுவுமே கிடைக்க வில்லை.. சுமார் இரண்டு மணி நேரமாக தங்கள் தேடலை முடித்தவர்கள் பார்வைக்கு,

சாவி அற்று கிடக்கும் அலமாரியின் அறை ஒன்று கண்ணில் பட, அதை எப்படி திறப்பது என்று யோசிக்கும் போது தான் அதனுடைய சாவி ஒன்றுடன் வந்தார் சிவகாமி.

“இந்த லாக்கர் டிஜிட்டல் லாக்கர்.. சூர்யா போலீஸ் வேலைக்கு சேருறதுக்கு அப்புறம் தான் இதை செய்ய சொன்னான்.. முதல்ல இது சாவியால திறந்த அப்புறம், உள்ள டிஜிட்டல் லாக் இருக்கும்.. ஆனா அதோட பஸ்வர்ட் என்னனு எனக்கு தெரியல” என்றவர் சாவியைக் கொடுக்க,

திறந்தால், சிவகாமி கூறிய படியே டிஜிட்டல் லாக் போட பட்டு இருந்தது.

“இதுக்கு என்ன பாஸ்வர்ட்டா இருக்கும்.. உங்க கிட்ட இதோட பாஸ்வர்ட் பத்தி அண்ணா ஏதாவது சொல்லி இருக்காரா அம்மா?” கேட்டாள் அஞ்சலி.

“இத பத்தி எனக்கு எதுவும் தெரியாதுமா.. ஆனா ஒரு முறை சிவாஜி படம் பாக்கும் போது, அதுல கம்ப்யூட்டர் லாக் ஒன்னு இருக்கும், அதுல ஒரு பூனை கூட வந்து பேசும்ல.. அத போல தன்னோட லாக்கும்.. மூணு தடவைக்கு மேல ட்ரை பண்ணா மொத்தமா அதுவே அழிஞ்சி போய்டும், அது இல்லாம ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை பாஸ்வர்ட் மாத்தணும்னு ஒரு தடவைச் சொல்லி இருக்கான் அஞ்சலி.

அப்போ நானும் அது என்ன பாஸ்வர்ட்ன்னு கேக்கல.. அவனும் சொல்லல” என்றவர் வாசலில் வந்த ரகுநாத்தைப் பார்க்க சென்று விட,

பெண்கள் மூவருமே படு மும்முரமாக அந்த லாக்கைத் திறப்பதில் ஈடுபட்டு இருந்தனர்.

“இப்டியே நாம வேடிக்கைப் பார்த்து கிட்டு இருந்தா, இருபத்தி நாலு மணி மணிநேரமும் இங்கேயே முடிஞ்சி போய்டும்.. ஏதாச்சும் ஒன்னு போட்டு நாமளே ட்ரை பண்ணலாம்” என்றாள் ஸ்வாதி.

“ஏதாச்சும் ஒன்னு எப்படி போடுறது.. தப்பாய்ட்டா என்ன பண்ணுறது” யோசனையில் பேசினாள் அஞ்சலி.

“நகருங்க.. நான் போய் ஏதாச்சும் ட்ரை பண்றேன்.. அங்க வெற்றி மாட்டிகிட்டான்னு நானே டென்ஷன்ல இருக்கேன்.. இங்க நீங்க என்னடானா விளையாடிகிட்டு இருக்கீங்க?” என்றவள் அந்த லாக்கரை நெருங்க,

“உன் ஆள் மட்டும் இல்லமா, மூணு பேரும் சேர்ந்து தான் மாட்டிகிட்டாங்க.. அவுங்களையும் சேர்த்து தான் காப்பாத்தணும்” எதையோ ஆராய்ந்த படி அஞ்சலி பேச, அவளின் பேச்சில் திடுக்கித்த வெண்பா,

“என்னாது ஆளா? யார சொல்றீங்க? எப்போல இருந்து இதெல்லாம்” என்றாள் கேள்வியாய்.

அதில் தடுமாறிய ஸ்வாதியைக் கண்டு சிரித்தவள்,

“நாத்தனாருக்கே விஷயம் தெரியாம அவ்ளோ சீக்கிரெட்டா மைண்டைன் பண்ணுறீங்களா? பலே பலே” என்றாள் குறும்பாய் சிரித்த படி,

“என்னாது நாத்தனாரா!!! வெற்றி அண்ணா என் கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே.. இதெல்லாம் எப்போல இருந்து நடக்குது” என்றாள் குரலில் மிரட்சியுடன்,

“ஏன் வெண்பா, உனக்கு என்னை பிடிக்கலையா? உன் அண்ணன் கிட்ட கூட இன்னும் சொல்லல.. அதுக்குள்ள இந்த அஞ்சலிக்கு எப்படி தான் தெரிஞ்சிதோ தெரியல” வருந்தி ஸ்வாதி பேச,

“எனக்கு உங்க கிட்ட எந்த பிரெச்சனையும் இல்ல அண்ணி.. கழுத வெற்றிக்கும் உங்களை விட்டா நல்ல பொண்ணு கிடைக்காதுனு வெச்சுக்கோங்க.. நானும் இங்க தானே இருக்கேன்.. எனக்கு தெரியாம போச்சேன்னு ஒரு ஷாக் அவ்ளோதான்” என்றாள் உளம் மகிழ்ந்து.

“நீ இங்க இருந்தாலும், உன் மனசு இங்க இல்லையேமா.. அப்புறம் எப்படி இதெல்லாம் உனக்கு தெரியும்..

“ஸ்வாதி ஆதியை கல்யாணம் பணிக்க மாட்டேன்னு சொன்னதே வெற்றிக்காக தான்.. அது தெரியாம அவரு தான் ட்ராமா பண்ணிக்கிட்டு இருக்காரு” என்றாள் அஞ்சலி.

“சரி சரி பேசிட்டு இருக்காம வாங்க பாஸ்வர்ட் என்னனு தேடலாம்” என்றவள், விஷயம் தன் புறம் திரும்பாமல் தெளிவாக பார்த்து கொண்டாள்.

‘ஒரு வேலை அவரோட அம்மா பேரை வெச்சி இருப்பாரோ’ என்ற எண்ணம் தோன்ற,

“சிவகாமி” என்று டைப் செய்ய,

“தல, இது பழைய பஸ்வர்ட்.. புது பஸ்வர்ட் போடுங்க தல” என்றது ஒரு பூனை குரல்.

“ஹையோ.. ஒரு வாய்ப்பு வேஸ்ட் ஆயிடுச்சே.. அஞ்சலி, சூர்யா உன் கிட்ட ஏதாவது சொன்னாரா? கொஞ்சம் யோசிச்சி பாரு”

“நாம எப்படியும் இந்த லாக்கர் கிட்ட வருவோம்னு அவருக்கு தெரியும்.. அப்போ அதோட பஸ்வர்ட்டும் சொல்லி இருப்பாருல.. கொஞ்சம் யோசிச்சி பாரு” என்றாள் ஸ்வாதி.

யோசனையில் மூழ்கியவள், “அண்ணா போற அப்போ ஹார்ட் மாதிரி கையை வெச்சி காமிச்சிட்டு போனாரு.. அதுக்கான அர்த்தம் தான் புரியல” என்றவள் குழம்பி போய் இருக்க,

“ஒரு வேலை உங்க மனசுல இருக்க ஆதின்ற பேர் தான் பஸ்வர்ட்டா இருக்குமோ” டக்கென கேட்டாள் வெண்பா, கேட்ட பின்னர் தான் தான் பேசியது புரிய நாக்கை கடித்தவள்,

“சாரி அண்ணி.. ஒரு ப்லொவ்ல வந்துடுச்சி” என்றவள் பம்மி நிற்க, அதற்குள் அஞ்சலியைப் பிடித்து கொண்டாள் ஸ்வாதி.

“ஆதி உன் மனசுல இருக்கானா? இது என்ன புது கதை.. நீ சூர்யா வீட்டுக்கு வந்து இருக்க சொந்தகார பொண்ணு தானே?” சந்தேகமாய் கேட்டாள் ஸ்வாதி.

அதில் முகம் எங்கும் வெட்கம் பூத்தவள், இல்லை என்பதை போல தலையசைக்க,

“அடிப்பாவி வெட்கம் எல்லாம் படுற.. ஆதியை லவ் பண்றியா?” என்றாள் குறும்பாக,

“அவுங்க புருஷன அவுங்க லவ் பண்றதுல அவுங்களுக்கு என்ன வெட்கம்” என்றாள் வெண்பா, குறும்பாக இடை புகுந்து.

“புருஷனா, என்னம்மா ஷாக் மேல ஷாக் தரீங்க? இது என்ன கதை.. முழுசா சொல்லுங்க” என்றாள் இதயத்தில் கை வைத்து கொண்டு, வலிப்பது போல.

அதில் சிரிப்பு வர, சிரித்து கொண்டே ஆதி அஞ்சலியின் திருமணம், மற்றும் இங்கு வந்ததில் இருந்து அவர்கள் இருக்கும் நிலை என்று அனைத்தையும் கூறி முடித்தாள் வெண்பா.

“இவ்ளோ விஷயம் நடந்து இருக்கு, பூனை மாதிரி இருந்து இருக்கீங்க ரெண்டு பேரும்.. இதுல எனக்கும் ஆதிக்கும் கல்யாணம்னு வேற சொன்னாங்க.. ரொம்ப பயந்து போய் இருப்பல பேபி” என்றவள் ஆதரவாய் அணைத்துக் கொள்ள, ஏனோ ஸ்வாதி ரூபத்தில் ஒரு தங்கையைப் பார்த்தாள் அஞ்சலி.

“சரி சரி, உங்க பாச மலர் எல்லாம் அப்பறம் வெச்சிக்கோங்க.. இப்போ ஆதின்னு போட்டு லாக்கரை ஓபன் பண்ணுங்க” என்றாள் வெண்பா.

வெண்பாவே முன் சென்று, ஆதி என்று டைப்பே செய்ய,

“தல இதுவும் தப்பு.. தண்ணி கிண்ணி அடிச்சி இருக்கியா தல.. அடுத்த தடவை ஒழுங்கா டைப் பண்ணு.. இல்ல மண்டையை ஒடச்சிபுடுவேன்” மிரட்டியது அந்த பூனை.

அதில் சிரித்த அஞ்சலி, “தட் கரடியே காரித்துப்புன மொமெண்ட்” என்று கூறி விட்டு வயிற்றைப் பிடித்து கொண்டு சிரிக்க,

“போதும் போதும், என்னை அப்புறம் கலாய்க்கலாம்.. லாஸ்ட் ட்ரை.. இப்போவும் விட்டோம், அவ்ளோ தான்.. இதுல இருக்க டேட்டா எல்லாம் அழிச்சிடும்.. ஒழுங்கா யோசிங்க” என்றாள் வெண்பா.

“ஹையோ.. ஆமாம் இந்த டைம் விட்டுட்டா அவ்வளவு தான்” ஸ்வாதி கூறும் போதே, தீவிர யோசனையில் இருந்த அஞ்சலி,

“வெண்பா, நான் சொல்லுறத டைப் பண்ணு” என்றவள்

“வெ”.. “ண்”..”பா..” அவள் கூற கூற அதை அப்படியே டைப் செய்ய,

“ஜெயிச்சிட்ட தல.. கடைசியா போட்டாலும் கரெக்ட்டா போட்டுட்ட” என்று குதூகலித்த அந்த பூனைக் குரலை கேட்டு அவ்விடம் இருந்த இருவர் அதிர்ச்சியில் தான் உறைந்தனர்.

“வெண்பான்ற பேரை தான் பாஸ்வர்ட்டா வெச்சி இருக்கரா.. அப்போ சூர்யா இதயத்துல… ” குழப்பமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள் ஸ்வாதி.

“இப்போவாவது சூர்யா அண்ணனோட மனசு உனக்கு புரியுதா வெண்பா.. அண்ணன் மனசுல நீ தான் இருக்க.. ஆனா எங்க தன்னோட காதலை சொன்னா, சிவகாமி அம்மா வாழ்க்கைல பட்ட கஷ்டங்கள் உனக்கும் வந்துடுமோனு தான் அண்ணன் அமைதியா இருந்துது.

அது இல்லாம, கூட பழகுற நண்பனோட தங்கச்சிய காதலிக்குறேனு சொன்னா எங்க அவுங்க நட்பு விட்டு போய்ட போகுதுனு தான் அவரு பயந்தாரு.. இத உன் கிட்ட சொல்ல தான் அவரும் பல முறை முயற்சி பண்ணாரு.. ஆனா நீ தான் எதையுமே கேக்கல” என்றாள் அஞ்சலி, அனைத்தையும் விளக்கிய படி,

அனைத்தையும் கேட்டவள், சூர்யாவின் அன்பை நினைத்து மனம் உருக,

“இப்போ அழுது எல்லாம் வெக்காதம்மா.. அவரை விடுதலை பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகு உன்னோட அழுகை, காதல் எல்லாத்தையும் வெச்சிக்கோ” என்றவள் வெண்பாவை ஆதரவாய் தோளோடு அணைத்து ஆறுதல் கூற,

அதே சமயம் அந்த லாக்கருக்குள் இருக்கும் அந்த பென்டிரைவை கையில் எடுத்தவர்கள், அதனுள் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்து விட்டு, ஒரு நம்பிக்கை சிரிப்போடு சென்றனர் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி,

மூவரும் காவல் நிலையம் அடையும் முன்பே, மூவரின் வீட்டாரும் அவ்விடம் குழுமி இருக்க, அவசரமாக அவ்விடம் சென்றவர்கள்,

தங்கள் கையில் இருக்கும் பென்டிரைவை சரவணனிடம் கொடுத்தவர்கள்,

“சார் இதோ பாருங்க.. இது மொத்தமா அந்த நாட்டாமை செய்யுற சட்ட விரோத செயல்கள் எல்லாமே இதுல வீடியோவா இருக்கு..

அதுலயும் இந்த இடத்துல பாருங்க.. அவுங்க பதுக்கி வெக்குற போதை பொருள்கள்ல தனியா ஒரு அடையாள குறியும் சேர்ந்தே இருக்கு.. அதோ அந்த பச்சை நிறத்துல பாம்புகள் இரண்டு இருக்குறது தான் அந்த நாட்டாமையுடைய அடையாளம்.. அதே அடையாளம் இருக்க அந்த பாக்கெட் தான் இவங்க மூணு பேர் வீட்டுல இருந்தும் கெடச்சி இருக்கு,

சோ இத பண்ணது எல்லாம் அந்த நாட்டாமை தான்றத்துக்கு இந்த ஆதாரம் போதும் தானே.. இவங்கள விட்டுடுங்க சார்” இடைவிடாது பேசி முடித்தாள் அஞ்சலி.

“நீங்க சொல்லுறது எல்லாமே சரி தன்.. ஆனா இந்த பாக்கெட் எல்லாம் அந்த நாட்டாமை தான் வெச்சான்றத்துக்கு ஆதாரம் வேணும் இல்லையா.. அது இல்லாம நாம கோர்ட்ல எதுவும் பேச முடியாது.. இந்த ஆதாரம் போதாது” என்றார் சரவணன்.

“ஆமாம் அஞ்சலி, இந்த ஆதாரம் மட்டும் போதாது.. இதை வெச்சி எதையும் நிரூபிக்க முடியாது” என்றான் சூர்யா, கொஞ்சம் கலக்கமாகவே,

“ஹையோ இப்போ என்ன பண்ணுறது.. எப்படி உங்களை வெளிய எடுக்க போறோம்” என்று யோசித்த படி மூவரும் இருக்க,

வந்ததில் இருந்து தன் மேல் அக்கறையை பொழியும் ஸ்வாதியையும் வெற்றி கவனிக்க தவறவில்லை.

இத்தனை கலவரம் நடக்கும் போதும், எப்போதும் தன்னை விட்டு விலகவே நினைக்கும் வெண்பாவின் விழிகள், இன்று தன்னிடமே நிலை பெற்று, அதில் காதலும், தவிப்பும் ஒருசேர வாறி வழங்க அவள் ஆவலாய் காத்திருப்பதைக் கவனிக்க தவறவில்லை சூர்யா.

Advertisement