Advertisement

மூன்றும் காதல் புறாக்களும் காதல் வானில் சிறகடித்து கிடந்த நேரம் அது.. எதிர் காத்திருக்கும் துயரம் எதையுமே கவனிக்காமல் காதல் கண்ணை மறைக்க, சூர்யாவும் கூட அந்த மாயத்தில் விழுந்தே விட்டான்

“வெண்பா தான் தன்னை காதலிக்கும் பெண்ணா இல்லையா” என்பதில் இன்னும் கூட தெளிவு பிறக்கவில்லை சூர்யாவிற்கு.. அவனின் காதல் மனம் அதை உடனே நம்பிவிட தயாராய் இருந்தும், அவனின் போலீஸ் மூளையோ ஆதாரத்தை கேட்டது

அன்று கூட, அஞ்சலி ஆதியுடன் எங்கோ சென்று விட, மதியம் சிறிது நேரம் உறங்கியவனுக்கு அதிக சலங்கை இல்லாமல், காற்றில் கன்னத்தோடு இசைந்தாடும் கொலுசின் சத்தம் உறக்கத்திலும் அவனை எழுப்பி விட அதில் எழுந்தவன்,

“இன்னைக்கு எப்படியாவது உண்மையை கண்டு பிடிச்சே ஆகணும்.. இதுக்கு மேலயும் இதே குழப்பத்தில் என்னால இருக்க முடியாது” என்று எண்ணியவனுக்கு

அந்த பெண் வெண்பாவாக இருக்க வேண்டும் என்றே மனதும் கூட ஆசை கொண்டது..

மறுபுறம் வெண்பாவோ, அவன் தூங்கும் போது ரசிப்பது, விழிக்கும் போது விலகி செல்வது என்றே நடித்து கொண்டு இருந்தாள்

அவளின் கொலுசின் ஓசையிலேயே முழித்தவன், “இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை” முடிவெடுத்தவன், அடுத்த சில நிமிடங்கள் உறங்குவதை போல் பாவனை செய்ய,

அவன் எதிர் பார்த்த படியே அவனின் அறையை நோக்கி அந்த கொலுசொலி கால்கள் வந்து கொண்டு இருக்க, உதட்டில் நமட்டு புன்னகையுடன் தூங்குவதை போல் நடித்து கொண்டு இருந்தான் சூர்யா

கையில் துவைத்து மடித்த துணிகளை கொண்டு வந்தவள், அறைக்குள் வந்தவுடன் முதலில் கவனித்தது சூர்யா உருங்குகிரான இல்லையா என்பதை தான்

அவன் உறங்கி கொண்டு தான் இருக்கிறான் என்பதை உறுதி படுத்தியவள், சத்தமே இன்றி அலமாரியின் கதவை திறந்து துணிகளை அடுக்கி வைத்து விட்டு, உறங்கும் சூர்யாவிடம் வந்தவள், இரண்டு நிமிடம் அவன் முகத்தை மனதில் நிறைத்து கொண்டவள், மேலும் நெருங்க எத்தனித்த போது,

‘வேண்டாம், நான் உங்களை விட்டு தள்ளி நிக்குறது தான் உங்களுக்கு நல்லது.. உங்க பக்கத்துல நான் இருந்தா, உங்களுக்கு ஏதாவது ஒன்னு நடந்து கிட்டே இருக்கு” என்று எண்ணியவளுக்கு சிறு வயதில் நடந்த அந்த சம்பவத்தை நினைக்க மறக்கவில்லை அவள்

சூர்யாவிற்கு இருபது வயது இருக்கும் போது ஒரு முறை, கல்லூரி விடுமுறைக்கு திருவிழா காண வந்து இருந்தான் அவன்.. அடுத்த நாள் திருவிழா என்பதால் வெற்றி, வெண்பா, ஆதி என்று அனைவரும் அங்கு இரவு வரை தங்கி விளையாடுவது, வேடிக்கை பார்ப்பது என்று தங்களுக்குள் மகிழ்ந்து இருந்த நேரத்தில்,

கோவிலுக்குள் அனுமதி மறுக்க பட்ட சூர்யா மட்டும் அவ்விடம் இல்லாமல் இருந்தது ஆதியை ஏதோ செய்ய, அவனுடன் வெளியில் எங்காவது செல்லலாம் என்று எண்ணியவன் சூர்யாவை வரவழைக்க, அந்தநேரம் பார்த்து

“டேய் ஆதி, நாளைக்கு கோவில் திருவிழாக்கு ஐயர் வர சொல்லி இருந்தாகல.. அவர் ஊர் எல்லைக்கு வந்துட்டாராம் டா.. அவரை போய் கூட்டிட்டு வர சொல்லி இருகாங்க” என்றான் வெற்றி

அதற்குள் சூர்யா அங்கு வந்து விட, சூர்யாவை அழைத்து கொண்டு செல்ல முடியாது என்பதால்

“சூர்யா நீ வெண்பாவை வீட்டுல விட்டுடுடா..நாங்க அரை மணி நேரத்துல உன் வீட்டுக்கே வரோம்” என்ற படி இருவரும் கிளம்பி விட, வெண்பாவை அழைத்து கொண்டு கிளம்பினான் சூர்யா

வழி நெடுக்க சாலையில் மட்டுமே கவனமாக இருந்த சூர்யாவிடம் அப்போது தான் பேச்சு குடுக்க வெண்பா எத்தனித்த நேரம், சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல், வண்டியை அதில் விட, எதிர் பாரா நேரத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் வெண்பா நிலை தடுமாற, அவளை காப்பாற்ற நினைத்த சூர்யா கீழே விழுந்த அடுத்த நொடி அவன் கால் மேல் வண்டி விழுந்து கிடந்தது

அடுத்த ஒரு மாதம் காலில் கட்டுகள் போட்டு அவன் குணமாக எடுத்து கொள்ள, அது ஏனோ தன்னால் தான் அவனுக்கு அப்படி நேர்ந்தது என்ற எண்ணம் அன்றே வெண்பா மனதில் ஆழ பதியவே செய்தது

இன்றும் கூட தன் காதல் சொன்ன பிறகு தானே இப்டி நேர்ந்தது.. அதனால் நான் மொத்தமாகவே சூர்யாவிற்கு ராசி இல்லாதவள் என்ற எண்ணம் முழுமையாய் மனதில் உறைய பெற்ற வெண்பா, அதிக நேரம் அவ்விடம் நில்லாமல், முடிந்த வரை அவ்விடத்தை விட்டு சீக்கிரமே சென்றும் விட்டாள்

அன்று நேர்ந்த விபத்தால் தான், எப்படியும் வாழ்வில் ஏதாவது ஒரு உயர் பதவியை அடைந்து, தன்னை ஒதுக்கி, துரத்தும் மக்கள் இடையே பெரிதாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணமே முதல் முறை மனதில் ஆழ பதிந்தது சூர்யாவிற்கு.. அப்படி பார்த்தால் வெண்பாவின் ராசி என்று கூட கூறலாம்.. இது அனைத்துமே அறியாதவள் தானாக ஒரு எண்ணத்தில் சூர்யாவை விட்டு விலகுவத்திலேயே குறியாக இருந்தாள்

தூங்கும் தன்னை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு, பின் எதோ ஒரு நீண்ட யோசனைக்கு பின் எதுவும் பேசாமல் செல்லும் வெண்பாவை கவனிக்க தவறவில்லை சூர்யா

“என்ன தான் இவளுக்கு பிரச்சனை? எதுக்கு இப்டி நடந்துக்குறா? திடீர்னு எதுக்கு இந்த மாற்றம் எல்லாம்?” யோசித்தவன் ஒரு முடிவோடு தான் கீழே சென்றான்

இவன் கீழே வந்ததை அறிந்த வெண்பா,

“ஆண்ட்டி, நான் வீட்டுக்கு போகணும் ஆண்ட்டி.. வெற்றி சில திங்ஸ் வாங்கிட்டு வர சொன்னான்.. அதை வாங்கிட்டு போகணும்” என்றாள் அவசரமாக

“என்னமா இப்போ தான் வந்தே, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுறியே.. கொஞ்ச நேரம் இரு.. அஞ்சலியும் ஆதியும் வந்துடுவாங்க.. அப்டியே ஆதியையே உன்ன விட சொல்லி சொல்றேன்” என்றார் வெண்பாவின் மன திட்டத்திற்கு எதிராய்

“ஆமா வெற்றி உன்னை என்ன வாங்கிட்டு வர சொன்னான்..அவ்ளோ அவசரமா என்ன தேவையாம் உன் அண்ணனுக்கு” திடீரென ஒலித்த அந்த கம்பீர குரலில் நடுங்கியே போனால் வெண்பா

குரல் வந்த திசை திரும்பி பார்த்தவளுக்கு, கைகளை தன் மார்புக்கு இடையில் கட்டிய படி, சமையல் அறை வாசலில் கதவில் சாய்ந்த படி வெண்பாவையே பார்த்த படி நின்று இருந்தான் சூர்யா

“ஹையோ.. இவன் எப்படி கீழ வரைக்கும் வந்தான்.. எப்பவும் முழிச்சாலும் மேல தானே இருப்பான்.. இப்போ என்ன இப்டி வந்து நிக்குறான்?” மனதுக்குள் புலம்பியவளின் பீதி வெளியில் அப்பட்டமாய் தெரியவே செய்தது

“அப்படி என்ன வெற்றி கேட்டான்னு நீ இவ்வளவு நேரம் யோசிக்குறே? பதில் சொல்லு” என்றான் கண்களை சுருக்கி, ஒற்றை புருவத்தை உயர்த்திய படி

“ஹையோ கேக்குறானே இப்போ என்ன சொல்லி சமளிக்குறது.. இவன் வேற நேரம் கேட்ட நேரத்துல மொறைக்குறேனு இவ்ளோ அழகா பார்த்தா நான் என்னத்த பண்ணுவேன்..சோதிக்கிறானே என்னைய” புலம்பி தவித்தவள், என்ன கூறுவது என்று யோசித்த நேரம் அவளை மேலும் நெருங்கி இருந்தான் சூர்யா

சமையல் அறையில் வேலையாய் இருக்கும் தன் தாயின் அருகே சென்று நின்றவன், அம்மி கள் அருகே அமர்ந்த படி இருந்தவளை நின்ற வாக்கிலே ரசித்தவனின் பார்வை அவளின் கழுத்து வளைவை அடைய, அப்போது தான் இத்தனை நாள் தான் காண தவறி இருந்த காட்சியை கண்டான் சூர்யா

வெண்பா கழுத்து வளைவில், தெரிந்தும் தெரியாமலும் அந்த தங்க சங்கிலி கீழே ஒளிந்து கொண்டு இருக்கும் அந்த காயத்தின் வடுவை கண்டவனுக்கு தூக்கி வாரியே போட்டது

இதே காட்சியை தான் எங்கோ கண்டது போன்ற நினைவு அவனுக்கு வர, தன்னுடைய மூளையை எல்லா கோணலிலும் ஓட விட்டவன் இறுதியாய் கண்டு பிடித்தே விட்டான் அந்த காட்சியின் நினைவை

சில தினங்களுக்கு முன்னர், கனவில் தான் கண்ட அந்த வெள்ளை பட்டுடுத்தியவளின் நினைவு அவனுக்கு வர, அவளின் கழுத்தில் கூட இதே போல் தங்க சங்கிலியின் கீழே அதே வடுவை கண்டவனுக்கு பூமியே சுற்றுவதை போல் தான் இருந்தது

“அப்போ கனவுல பாத்த பொண்ணு.. ஒரு வேலை.. இவளா இருப்பாளோ” எண்ணியவனுக்கு குழப்பம் மேலும் அதிகரிக்க அமைதியாய் எதுவும் பேசாமல் தன் அறை சென்றான் சூர்யா.

சென்றவன் முதல் வேலையாக பிளாக் செய்து வைத்திருந்த அந்த பெண்ணின் எண்ணை, அன்பிளாக் செய்தவன், “இருக்கியா?” என்று தகவலும் அனுப்பியே வைத்தான்

அந்த பெண் வெண்பா தான் என்று மனம் நாளுக்கு பத்து முறை உரைக்க, மூலையில் அதற்கு ஆதாரத்தை கேட்டு மறியல் செய்த படி இருக்க, இவர்களுக்கிடையே சூர்யாவின் படு தான் பாவமாக போனது

மறுபுறம், ஸ்வாதியிடம் தன் காதலை கூற உறுதியாய் முடிவெடுத்தவன்,

“ஸ்வாதி என் கூட வாயேன்.. ஒரு மோதிரம் ஒன்னு எடுக்கணும்.. நீ தான் உதவி பண்ணனும்” என்றவன் வரவே மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் ஒரு நகை கடைக்கு

“இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா என்னை இங்க இழுத்துட்டு வந்து இருக்க? அவ்ளோ அவசரமா யாருக்கு மோதிரம் எடுக்க போறே?” வழி நெடுக்க இதே கேள்விகள் தான் ஸ்வாதியிடம் இருந்து வந்தது

எந்த பதிலுமே தரமறுத்தவன், நகை கடைக்குள் சென்று,

“இதோ இதுல இருக்க டிசைன் பாத்து ஒரு மோதிரம் செலெக்ட் பண்ணு.. அதை உன் கைல போட்டு பார்த்து அளவு சரியா இருக்கான்னு பாரு” என்றான் மறைமுகமாக தன் காதலை கூறுவதாக நினைத்து

“ஆமா இந்த மோதிரம் யாருக்கு.. உன் ஜெர்ரிக்கா” என்றாள் ஸ்வாதி நக்கலாய்

அவளை மேலும் வெறுப்பேற்ற எண்ணிய வெற்றி,

“ஆமாம் அவளுக்கு தான்..எப்படி சரியா கண்டு பிடிச்ச.. உன்னோட கை சைஸ்ஸும் அவளோடதும் ஒன்னா இருக்கும்.. அதன் உன்னை கூட்டிட்டு வந்தேன்” என்றான் வெற்றி

அவனின் பதிலில் உச்சி முதல் பாதம் வரை தீயாய் எரிந்தவள்,

“இப்போ எதுக்கு திடீர்னு அவளுக்கு மோதிரம் எல்லாம் எடுக்குறே..வீண் செலவு தானே இதெல்லாம்” என்றாள் ஏதோ அக்கரையில் கூறுவதை போல்

பொறாமையில் கொதிக்கும் அவளை பார்க்கவே சிரிப்பாக தான் இருந்தது வெற்றிக்கு, அதிலும் அந்த பொறாமையை மறைக்க அவள் முகம் போகும் கோணல்களை எல்லாம் கண்டவன் அதை ரசித்து நிற்க, கடமைக்கே என்று ஒரு மோதிரத்தை எடுத்தவள்

“இந்தா, இது நல்லா இருக்கு பாரு” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நடக்க எத்தனிக்கை, அவளின் கையை பிடித்து அவளை தடுத்தவன்,

“என்ன கேட்ட? இந்த எதுக்கு இப்போ வாங்குறேன்னு தானே.. என்னோட ஜெரிக்கு என்னோட காதலை இன்னைக்கு சொல்ல போறேன்.. அதுக்கு தான் இந்த பரிசு” என்றான் கண்கள் மொத்தமும் காதல் மின்ன

அதில் மேலும் கடுப்பானவள், “நீ பொறுமையா உன்னோட ஜெர்ரிக்கு கிபிட் வாங்கிட்டுவா.. நான் போறேன்.. எனக்கு வேலை இருக்கு” என்றவள் வெற்றி கட்டுக்குள் இருக்கும் தன் கையை உருவியவள், வேகமாய் செல்ல எத்தனிக்கை, அந்த சமயம் பார்த்து ஸ்வாதியை அழைத்தார் அவளின் தந்தை

ஏதோ அவசரம், உடனே சூர்யா இல்லத்திற்கு வரும் படி கூறியவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவரை வைத்து விட,

“என்ன இவ்வளவு அவசரமா கூப்பிடுறாங்க.. அதுவும் சூர்யா வீட்டுக்கு எதுக்கு?” என்று எண்ணியவள் விஷயத்தை வெற்றியிடம் கூற,

“ஹயோ சூர்யாவுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ.. நேத்து கூட போய் பாத்துட்டு வந்தேனே.. நல்லா தானே இருந்தான்” பதறிய வெற்றியுடன் சூர்யா இல்லம் நோக்கி விரைந்தாள் ஸ்வாதி

சூர்யா வீட்டின் வாசலிலேயே இரண்டு கார்கள் நிற்க, பார்த்த உடனே அதில் ஒன்று ஆதி இல்லத்து காரும், மற்றொன்று வெற்றியுடையது என்பதையும் புரிந்தே கொண்டான் வெற்றி

வீட்டின் வாசலில் சிதறி கிடக்கும் செருப்புகளே, எதோ சரி இல்லை என்பதை உரைத்து இருந்தது வெற்றிக்கு.. பதறும் மனதுடன் உள்ளே சென்ற வெற்றி முதலில் தேடியது என்னவோ சூர்யாவை தான்

அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்து இருந்தவனை மேலிருந்து கீழ் வரை அலசியவன், அவனுக்கு ஏதும் இல்லை என்பதை உறுதி படுத்திய பின்னரே தன் பார்வையை அவ்விடத்தில் பரவ விட்டவன் கண்ணிற்கு தெரிந்த கட்சிகள் அவனை உலுக்கிய விட்டது

ஒரு புறம் தலையை தொங்க விட்ட படி, சோகமாய் அமர்ந்து இருந்தான் ஆதி.. அவனுக்கு சற்றே தொலைவில் அதே சோகத்தை முகத்தில் காட்டாமல் மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் அஞ்சலி

வெள்ளை வேட்டியில் மருதநாயகம் அமர்ந்து இருக்க, முகம் எங்கும் புன்னகையாய் ரகுநாத் அமர்ந்து இருக்க, அவருக்கு நேரெதிரே அமர்ந்து இருந்தார் ஸ்வாதியின் தந்தை தேவராஜ்

“எதுக்குடா இப்போ இப்டி கூட்டமா உக்காந்து இருகாங்க? அதுவும் ஆதி அப்பா சூர்யா வீட்டுக்கு எல்லாம் வர மாட்டாரே.. என்ன அதிசயம்.. சிரிச்சிகிட்டே உக்காந்து இருக்காரு” யோசித்தவன் பார்வை எதிர்ச்சியாக சூர்யா பக்கம் திரும்ப,

“இங்க வாடா” என்று சைகையில் வெற்றியை அழைத்தான் சூர்யா

அவனின் அருகே சென்றவன்,

“என்னடா நடக்குது இங்க? எதுக்கு இவ்வளவு கூட்டம்? என்ன பண்ண போறாங்க?” என்றான் குழப்பமாக, சூர்யாவிற்கு மட்டும் கேட்கும் குரலில்

“இங்க எது நடந்தாலும் நீ அமைதியா இருடா.. எதுவும் ரியாக்ட் பண்ணாத.. எல்லாம் சரி ஆகிடும்.. நீ அவசர பட்டு காரியத்தை கெடுத்துடாத” எச்சரித்தான் சூர்யா

“அப்படி என்னடா நடக்க போகுது?” இவர்கள் பேசும் போதே, பேச்சை தொடர்ந்தார் ரகுநாத்

“ஸ்வாதியும் வந்தாச்சு, இப்போ விஷயத்தை பேசுவோமா?நாம ஏற்கனவே பேசுன மாதிரி ஆதி, ஸ்வாதியோட நிச்சயத்துக்கு தான் நாம இங்க கூடி இருக்கோம்

இத பெருசா ஒரு விழா மாதிரி பண்ண தான் எனக்கும் ஆசை.. ஆனா கடந்த ஒரு மாசமா நமக்குள்ள இருந்த மனநிலையை மாத்துறதுக்கு தான் இந்த திடீர் நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம்” என்றவர் முகத்திலோ எத்தனை ஆனந்தம்

தம்பி ஆதி, வாப்பா இங்க வந்து நில்லு.. ஸ்வாதி நீ ஆதிக்கு பக்கத்துல வந்து நில்லு” என்றார் அவர்

வேறு வழி இன்றி ஆதியும், ஸ்வாதியும் அங்கு வந்து நிற்க, ஸ்வாதி அருகே ஆதியை காண முடியாத வெற்றியோ, கோவத்தில் கொதித்து கிடக்க, எரிக்கும் பார்வையில் சூர்யாவை முறைத்தவன்

“இத பாக்கத்தான் என்னை இங்க வர சொன்னியா? என்னென்னவோ சொன்னியேடா.. இப்போ பாரு அவ ஆதி பக்கத்துல நின்னுகிட்டு இருக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவுங்களுக்கு நிச்சயம் ஆக போகுது.. அந்த கருமத்தை எல்லாம் பார்த்துட்டு என்னால உயிரோட இருக்க முடியாது” வெறுப்பில் சூர்யாவிற்கு மட்டும் கேட்கும் வகையில் கதியவன்,

சூர்யாவின் பதிலையும் கூட கேட்காமல் கோவமாக அவ்விடம் விட்டு சென்றும் விட்டான் வெற்றி

“அட அவசரத்துக்கு பொறந்த எருமையே.. கொஞ்சம் பொறுமையா இருந்தா தான் என்ன.. எனக்கு ஸ்வாதி பத்தி தெரிஞ்சது கூட இந்த நாய்க்கு தெரியாம இருக்கே” மனதுக்குள் புலம்பியவன், ஸ்வாதி மேல் கொண்ட நம்பிக்கையில் அடுத்து அவளின் செயல் காண ஆவலாய் காத்து கிடந்தான் சூர்யா

ஆதி அருகே வந்து நின்ற ஸ்வாதிக்கு, இந்த திருமணத்தில் எந்த ஈடு படும் இல்லை என்பது அவளுக்கும் தெரிந்த ஒன்று தான்

ஆனால், இப்போது இந்த சபை முன்னிலையில் ஆதி அருகே நிற்கும் அவளுக்கு அவளுக்கு ஏனோ எண்ணமும், மனமும் வெற்றியின் பாலே சாய்ந்து கிடந்தது

ஆதியுடன் இணைந்து நிற்கும் இந்த தருணம் கூட, ஏனோ வெற்றியுடன் நிற்பதை போல் மனம் கற்பனை செய்து கொண்டு அதன் போக்கில் நிம்மதில் களித்து கிடக்க, ஏனோ அப்போது தான் தன் மனதின் நிலையை முதல் முறை முழுதாய் உணர செய்தாள் ஸ்வாதி

அதற்குள், “தம்பி ஆதி.. இந்த மாலையை ஸ்வாதி கழுத்துல போடுப்பா” என்று வேறு மருதநாயகம் கூறி விட, கையில் மாலையை வாங்கியவன், பார்வை ஏனோ அஞ்சலியின் முகத்தில் பதிந்து இருக்க, தன் கைகளை ஸ்வாதி அருகே கொண்டு சென்றவனுக்குமே அடுத்தடுத்து நடந்த அனைத்துமே அதிர்ச்சி தான்

“ஒரு நிமிஷம்.. எனக்கு கொஞ்சம் பேசணும்.. எனக்கு ஆதியை கல்யாணம் பண்ணிக்குறதுல விருப்பம் இல்லை.. நான் வேறு ஒருத்தரை காதலிக்குறேன்.. அவரை தான் திருமணமும் செய்து கொள்வேன்” என்றவளுக்கு ஏனோ கண்ணில் நீர் வெள்ளமாய் ஓடவே செய்தது

அவளின் கூற்று அவ்விடம் இருக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்க, அடுத்து பேசினான் ஆதி

“எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.. அன்றைக்கு கோவில்ல அத்தனை பேருக்கு முன்னாடி நீங்க இப்டி சொன்னதால என்னால மறுத்து பேச முடியல.. பொறுமையா அப்புறம் பேசி புரிய வெச்சிக்கலாம்னு தான் அன்றைக்கு அமைதியா இருந்தேன்.. அதுக்குள்ள வெற்றி, சூர்யாவுக்கு அக்சிடென்ட் ஆகி அந்த பிரச்சனைல நான் இதை பத்தி மறந்தே போய்ட்டேன்.. இவ்ளோ லேட்டா சொல்லுறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்றான் இரு கை கூப்பி

ஆதியின் பேச்சுமே இடியாக தான் இறங்கியது அவ்விடம் இருக்கும் அனைவர் மனதிலும்… என்ன இது என்று அனைவரும் யோசிக்கும் போதே அழுத படி ஸ்வாதி அங்கிருந்து சென்று விட, தேவராஜும் என்ன கூறுவது என்பது புரியாமல் ஸ்வாதியை பின் தொடர்ந்த படி அவ்விடம் விட்டு சென்று விட்டார்

அடுத்து ரகுநாத் என்ன செய்வது என்று புரியாமல், வீட்டிற்கு கிளம்பி விட, மருதநாயகமும், பார்வதியிம் கூட அவருடனே வீட்டிற்கு சென்றும் விட்டனர்

செல்லும் இவர்களை மனதில் வன்மத்துடனும், பார்வையில் தீயாய் எரியும் கோவத்துடனும், அழுதே விடும் வெறியுடன் பார்த்து கொண்டு இருந்தது இரண்டு ஜோடி கண்கள்

Advertisement